Velpari Audiobook 09 வீரயுக நாயகன் வேள் பாரி
Velpari Audiobook வீரயுக நாயகன் வேள் பாரி 09 Mr and Mrs Tamilan
Velpari Audiobook இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…
Buy Book: https://velparibook.com/
Credits -:
Book : வீரயுக நாயகன் வேள் பாரி
Author of book -: Su. Venkatesan
Image Credits -: மா.செ (மணியம் செல்வன்)
Copyright © Su. Venkatesan, All rights reserved.
அத்தியாயம் 9:
கபிலர் எவ்வியூர் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு இது…
சித்தாற்றின் வடபுலத்தைச் சேர்ந்த பாணர் கூட்டம் ஒன்று, எவ்வியூருக்கு வந்திருந்தது. அவர்கள், வேட்டைச் சமூகப் பின்புலத்தில் இருந்து பாணர்களாக மாறியவர்கள்; யாழ் தெய்வமான மதங்கனையும் மதங்கியையும் வணங்குபவர்கள். இந்தக் குழுத் தலைவன் மதங்கன்' என்றும், தலைவி
மதங்கி’ என்றும் அழைக்கப்படுவர். தாங்களே வேட்டையாடி, அந்த விலங்கில் இருந்து யாழுக்கு நரம்பு எடுத்துக் கட்டுவர்; அந்த விலங்கின் தோல்கொண்டு பறை செய்வர்.
இவர்களின் கூத்து, நள்ளிரவுக்குப் பிறகுதான் தொடங்கும். அரிசியின் அளவு பருமன்கொண்ட யாழ் நரம்புகள் மீட்டப்பட்டு பறை ஒலிக்கத் தொடங்கும்போது, வேட்டை விலங்கின் சீற்றம் ஆரம்பம் ஆ கும். சிறுபறையின் ஒலியில் தொடங்கும் கூத்து, நேரம் ஆ க ஆ க உக்கிரம்கொண்டு காட்டை மிரட்டும். குகை விலங்கு வெளியில் வந்து எட்டிப்பார்க்கும். அதன் கண்களுக்குள் இருக்கும் நீல ஒளி, இருளுக்குள் ஊர்ந்து இறங்கும். இந்தக் குழுவினரின் அடையாளமே தோல் கருவியான தடாரிதான். தடாரிகளைத் துணியால் கட்டி, கூடையில் வைத்து, காவடியைப்போல இருபுறமும் தூக்கி வருவார்கள். பயணத்தின்போது அவற்றைக் கீழ் இறக்கி மண்ணில் வைக்க மாட்டார்கள். தடாரி மண்ணைத் தொட்டால், அங்கு கூத்து நிகழ்த்தப்பட்டுத்தான் அவற்றைத் தூக்கவேண்டும். எனவே, கூத்து நடக்கும் இடத்தில் மட்டுமே அதைக் கீழே இறக்குவார்கள். மற்ற நேரங்களில் எல்லாம் காவடியைப்போல தோளிலும் கைக்குழந்தையைப்போல இடுப்பிலும் சுமந்தபடியே இருப்பர். தங்களின் முன்னோர்கள் வேட்டையாடிய யானையின் காலடியின் அளவுகொண்டே தடாரியை வடிவமைப்பர்.
கூத்து நிகழ்ந்துகொண்டிருக்கும் எந்தக் கணத்தில் தடாரிகளை எடுத்து, பெரும் மதங்கன் களம் இறங்குவான் எனத் தெரியாது. யாழ்தேவதை உருகி அழைக்க, ஏதோ ஒரு கணத்தில் சினம்கொண்டு இறங்குவான். தடாரிகள் எழுப்பும் ஒலி கேட்டு மலைதெய்வம் உள்ளொடுங்கும். மதங்கன், மலை நடுங்க ஆடுவான். தடாரிகளின் பேரொலி, காட்டைக் கிட்டித்து இடிக்கும். காட்டின் ஆதி மைந்தர்கள் ஆடிய ஆட்டம் அது. மதங்கனின் ஆட்டத்தைக் கதையாகக் கேட்கும்போதே பலரும் நடுங்குவர்.
மதங்கன் கூட்டம் வந்திருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட பாரி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாரி, இதுவரை மதங்கனின் கூத்தைப் பார்த்தது இல்லை. பாரியின் மனைவி ஆதினி. அவள் பொதினிமலையின் (பழநி) குலமகள். அவள் சிறுவயதில் பொதினிமலையில் தந்தையோடு சேர்ந்து மதங்கனின் நிகழ்வைப் பார்த்து, பயந்து அழுததைப் பற்றி பாரியிடம் பல நாள் சொல்லியிருக்கிறாள். ஏனோ பறம்பு நாட்டுக்கு மதங்கனின் கூட்டம் எதுவும் வந்தது இல்லை. நீண்ட காலத்துக்குப் பிறகுதான் பாரி கேள்விப்பட்டான், சித்தாற்றங் கரையில் இருந்த நெட்டூர் மலையை சோழன் கைப்பற்றிவிட்டான்' என்று. அந்த மண்ணின் மகா கலைஞர்களான மதங்கர்கள், இப்போது அவனது கடல் பணிகளுக்கு ஏவல் வேலை செய்துகொண்டிருக்கின்றனர். யாழிசையின் பெருந்தேவிகளான அந்தக் குலப்பெண்கள், சோழ அரண்மனையில் விறலிகளாக மாறிக்கிடக்கின்றனர். பேரரசை உருவாக்கும் கனவுக்கு எண்ணற்ற இனக் குழுக்கள் இரையாக்கப்பட்டுவிட்டன.
மதங்கர் இனமே முற்றிலும் அழிந்துபோய்விட்டது!’ என நினைத்துக்கொண்டிருந்த பாரிக்கு, தப்பிப் பிழைத்த அந்தப் பாணர் குழுவைப் பார்த்ததில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பாரிக்கு இரு மகள்கள். மூத்தவள் அங்கவை; இளையவள் சங்கவை. சிறுமியின் விளையாட்டை இன்னும் தொலைக்காமல் இருக்கும் சங்கவையைவிட ஆறு ஆண்டுகள் மூத்தவள் அங்கவை. பாரியின் குலக்கொடி. தந்தையின் எண்ணத்தை அவரது கண்களில் இருந்தே கண்டறிந்துவிடுவாள். தாய் ஆதினிக்கு அங்கவையின் மீதான ஆச்சர்யம் எப்போதும் நீங்கியது இல்லை. தான் அறியாத பாரியை இவள் எப்படிக் கண்டறிகிறாள் என எத்தனையோ முறை நினைத்திருக்கிறாள்.
உனது சொல்லைத்தான் தந்தை கேட்பார்' என, ஒருமுறைகூட சொல்லியது இல்லை. ஆனால்,
தந்தையைப்போலவே நீயும் சொல்கிறாயே!’ எனச் சொல்லாத நாள் இல்லை. எது ஒன்றையும் அவளின் கண்கொண்டு பாரி பார்ப்பதும், பாரியின் எண்ணம்கொண்டு அங்கவை யோசிப்பதும் எப்போதும் நடக்கும் நிகழ்வுகள் ஆ கிவிட்டன.
ஒருநாள் நண்பகலில் அருவிக் குளியல் முடித்து, உணவுக்குக் காத்திருந்தனர். சமையல் தயாராகிக்கொண்டிருந்தது. அருகில் இருந்த பாறையின் மீது ஏறி முடிகள் காய, சுடுவெயில் தாங்கி நின்றான் பாரி. சிறு துணியால் தலை துவட்டியபடியே ஆதினியும் அங்கவையும் பாறை ஏறி வந்தனர்.
“என்ன பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் தந்தையே?” எனக் கேட்டாள் அங்கவை.
குரல் கேட்டுத் திரும்பாமல், “கண்டுபிடி!” என்றான் பாரி.
எதிரில் விரிந்து பறந்த காடு. பின்புறம் கேட்கும் அருவியின் ஓசை, எங்கும் சிறகடித்துத் திரியும் பறவைகள், அவ்வப்போது வீசிச் செல்லும் காற்றின் சலசலப்பு என, அனைத்தையும் பார்த்தனர் ஆதினியும் அங்கவையும்.
பதிலுக்காகக் காத்திருந்தான் பாரி. ஆதினி சொன்னாள்… “எங்கும் பறவைகளின் குரல் கேட்கிறது. ஏதாவது ஒரு பறவையின் குரலில் துயரத்தின் சாயல் வெளிப்பட்டிருக்கும், அதைத்தான் நீங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்றாள்.
அங்கவையோ, “இல்லை… தந்தை வேறு ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதை நான் கண்டுபிடித்துவிட்டேன்” என்றாள்.
சொல்லும்போதே அவளது முகத்தில் வெட்கம் பூத்து நின்றது. பாரி அவளை உச்சி முகர்ந்தான். ஆதினிக்குக் கோபம் வந்தது.
“அவள் எதைச் சொல்கிறாள். நீங்கள் எதைப் பார்த்தீர்கள்… சொல்லுங்கள்?” என்றாள் சற்றே பொறாமையுடன்.
அங்கவை சொன்னாள்… “அம்மா, அதோ அந்த மூலையில் சந்தனவேங்கை மரம் நிற்கிறது பாருங்கள். தந்தை அதைத்தான் பார்த்துக்கொண்டி ருந்தார்” என்றாள்.
இப்போது ஆதினி முகத்தில் வெட்கம் ஓடியது.
“இவ்வளவு நேரம் அந்தத் திசையைப் பார்த்துக்கொண்டு நின்றது அதனால்தானா?” என்றாள் ஆதினி.
“ஆம்… நம் மகளையும் காதல் அழைத்துச் செல்லும். அதற்குள் நாம் அவளுக்குச் செய்ய வேண்டியவற்றைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்” என்றான் பாரி.
“என்ன அது?” என ஆர்வத்தோடு கேட்டாள் ஆதினி.
“நிலம் எங்கும் அறியப்பட்ட பெரும் புலவர்கள் பரணரும் கபிலரும். அவர்களில் ஒருவரேனும் பறம்பு நாட்டுக்கு வர மாட்டார்களா என, பல நாட்கள் விரும்பியிருக்கிறேன். அந்த விருப்பம் இன்று வரை நிறைவேறவில்லை. என் மகள் மணமுடித்துச் செல்வதற்குள், அவர்கள் வர வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. அவர்கள் எழுத்து கற்றவர்கள். அவர்களிடம் இருந்து என் மகளும் என் மக்கள் சிலரேனும் எழுத்து கற்றால், எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றான் பாரி.
“அது எனக்கான உங்களின் விருப்பம் தந்தையே! அதைவிட ஆழமான ஆசைகள் உங்களிடம் உண்டு. அவை நிறைவேற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன்” என அங்கவை சொன்னாள்.
பாரியே சற்று வியந்து, “எதைச் சொல்கிறாய்?” எனக் கேட்டான்.
அங்கவை சொன்னாள், “பறம்பு நாட்டில் முழங்காத பறை இல்லை; ஆடாத கூத்து இல்லை; மீட்டாத யாழ் இல்லை. ஆனால், மதங்கர் கூட்டம் இந்த மண்ணை மிதிக்கவில்லை என்ற ஏக்கம் நீண்ட நாள் உங்களின் ஆழ்மனதில் உண்டு.
உங்களோடு அமர்ந்து அந்த விசையையும் கூத்தையும் நான் காண வேண்டும். அதுதான் எனது ஆசை” என்றாள்.
சமையல் தயாராகிவிட்டதால், கீழ் இருந்து அழைக்கும் குரல் கேட்டது.
“நீ போய் முதலில் சாப்பிடு. நாங்கள் வருகிறோம்” என்று மகளை அனுப்பிவைத்தான் பாரி. அவனது கண்கள் கலங்கியிருந்தன. கவனித்த ஆதினி என்ன என்று கேட்டாள்.
“மதங்கர் நாட்டை, சோழன் அடிமையாக்கிக்கொண்டான். அந்த மகத்தான இசைவாணர்கள் வர இனி வாய்ப்பே இல்லை” எனச் சொல்லும்போது பாரியின் குரல் உடைந்தது.
செய்வது அறியாது நின்ற ஆதினி, அவன் தோளைத் தொட்டாள். சற்றே ஆசுவாசம் அடைந்து நிதானித்தான் பாரி.
“சரி, வாருங்கள். அந்தச் சந்தனவேங்கை மரம் வரை போய் வருவோம்” என்றாள்.
சிறிய நகைப்போடு பாரி சொன்னான், “மகள் இருக்கும்போதே நீ அழைத்திருக்க வேண்டும். அந்தத் துணிவை ஏன் இழந்தாய்?”
ஆதினி சொன்னாள்… “எனது கண்களை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள்தான் அவற்றை நேர்கொண்டு பார்ப்பதே இல்லையே”
இந்தத் தாக்குதலை பாரி எதிர்பார்க்கவில்லை. ஆதினியின் கண்கொண்டு பார்க்கத் தவறிய நாட்கள் எத்தனையோ! `காலம் எவ்வளவு வேகமாக அழைத்துக்கொண்டு போகிறது. கணவனின் இடத்தை தந்தை எந்தக் கணம் விழுங்குகிறான் என்பதை நிதானிக்கவே முடியவில்லையே!’ என யோசித்துக் கொண்டிருக்கும்போது பாரி சொன்னான்…
“நீதான் எனது கண்கொண்டு பார்த்தவள்”
புரியாமல் விழித்தாள் ஆதினி.
“உண்மையில், நான் அந்தப் பச்சைப்புறாவின் சற்றே மாறுபட்ட குரல் ஒலியைத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். அங்கவை, காதல் பருவத்தில் நிற்கிறாள். அவளின் கண்களின் வழியே அவள் பார்க்கத் தொடங்கிவிட்டாள். அவளின் கண்களுக்கு சந்தனவேங்கைதானே முதலில் படும். அதைத்தான் தந்தை பார்த்திருப்பார் என நம்பிச் சொன்னாள்” என்றான்.
“நீங்கள் ஏன் அதை ஒப்புக்கொண்டீர்கள்?” எனக் கேட்டாள்.
மெல்லியச் சிரிப்போடு பாரி சொன்னான்… “குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும்போதும்தான் ஓர் ஆண், தாய்மையை அனுபவிக்கிறான்”
இதை ஆதினி எதிர்பார்க்கவில்லை. சற்றே கலங்கிய அவள், பாரியின் நெஞ்சில் சாய்ந்து சுடுவெயில் மறைய இதழ் பதித்தாள்.
நள்ளிரவு சிறுநிலவு, காடு எங்கும் சாம்பல் தூவிக்கொண்டிருந்தது. ஊர்மன்றலில் பந்தங்கள் ஏற்றப்பட்டு, எவ்வியூர் முழுக்கத் திரண்டிருந்தது. செய்தி கேள்விப்பட்டு, பலரும் இரவோடு இரவாக வந்துகொண்டிருந்தனர். மதங்கி, யாழ் மீட்டத் தொடங்கியதில் இருந்து, பார்வையாளர்கள் இமை சிமிட்டுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது. இசைக்கருவிகள் ஒவ்வொன்றாக இணைந்தன. சிறுபறையும் அரிப்பறையும் முழங்கும் போது இருள், நடுக்கம்கொள்ளத் தொடங்கியது. சலங்கை அணிந்த பெண்கள் இருவர், நெடுநிழல் நகர ஆவேசம்கொண்டு ஆடினர். பாரியின் இடதுபக்கம் அங்கவை அமர்ந்திருந்தாள். வலதுபக்கம் அமர்ந்திருந்த ஆதினியின் அருகில் சங்கவை இருந்தாள். வழக்கம்போல் பாரியின் பின்புறமாக நின்றிருந்தான் முடியன்.
`பாட்டாப் பிறை’ எனச் சொல்லப்படும் பாட்டன்மார்களுக்கான மேடையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் தேக்கன். அவர்களோடு தேக்கனின் வயதுடைய பெருசுகளும் உட்கார்ந்திருந்தனர்.
கூத்தின் பாங்கில் துயரத்தின் நெடுங்குரல் மேலே எழும்பியது. அழிந்த இனத்தின் கடைசிப் பாடகன், தனது குரல்நாளங்கள் வெடிப்பதைப்போல் பாடத் தொடங்கினான். இன்றோடு குரல் வெடித்துச் சாக வேண்டும் என்பதே அவன் விழைவாக இருந்தது. ஆறாத் துயரைக் கலையாக்கும்போது கலைஞன் படும் வேதனைக்கு இணைகூற சொல் இல்லை.
குரலும் சலங்கையும் யாழும் பறையும் ஒன்றை ஒன்று விலகியும் விழுங்கியும் நகர்ந்தன. போர்க் குதிரைகளின் விரட்டுதலில் இருந்து தப்பியோடும் ஓர் இசைக்கலைஞனின் காலடி ஓசை, தனித்து கேட்டுக்கொண்டிருப்பதைப்போல பாரி உணர்ந்தான். `அந்த ஓசை எந்தக் கருவியில் இருந்து வருகிறது?’ என்பதை அவனது கண்கள் தேடிக்கொண்டிருந்தன. எல்லோரும் மெய்ச்சிலிர்த்துப் பார்த்துக் கொண்டிருந்த கணத்தில், இரு தடாரிகளோடு குதித்து உள்ளே இறங்கினான் மதங்கன். அதுவரை முழங்காமல் இருந்த அனைத்துத் தடாரிகளும் ஏக காலத்தில் ஒலி எழுப்பின. சற்றும் எதிர்பாராத பேரிசை. பாரியே குலுங்கி உட்கார்ந்தான். பயந்த சங்கவை, “அம்மா..” எனக் கத்திய ஓசை பக்கத்தில் இருப்பவருக்கு மட்டுமே கேட்டது. ஆதினி அவளை அணைத்து மடியில் இறுக்கிக்கொண்டாள். அதைக் கவனித்த பாரியின் கண்களுக்கு, சிறுவயதில் பயந்து கத்திய ஆதினியும் சேர்ந்து தெரிந்தாள்.
மதங்கன், தாவி உள்ளிறங்கிய இடத்தில் மண் பெயர்ந்து மேலே எழுந்தது. வேட்டையாடிய யானையின் காலடி நிலத்தை அதிரச் செய்வதைப்போல அது இருந்தது. ஓர் ஆட்டம் தொடங்கும் கணத்தில் இவ்வளவு ஆவேசம்கொண்டு நிகழுமா என்ற வியப்பு எல்லோருக்கும் இருந்தது. இருமுகப் பறையான தடாரியைக் கையால் அடித்து முழங்க வேண்டும். அவன் இரண்டு நடை முன்னும் பின்னுமாகத் தவ்வித் தவ்வி தடாரிகளில் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தான். மதங்கனின் குடுமி கழன்று, சிகை சுழன்று எழும்பியது. ஆவேசம்கொண்ட மதங்கன், கால்களை முன்னும் பின்னுமாக மாற்றி, குதிக்காலால் குத்திக் குத்தி ஆடினான். மதயானை தனது நிழலைக் கொல்ல, மீண்டும் மீண்டும் தந்தத்தால் மண்ணைக் குத்துவதுபோல அது இருந்தது. எல்லா கருவிகளும் முழங்கிக்கொண்டிருந்தன. பாரி உறைந்த நிலையில் மதங்கனைப் பார்த்துக்கொண்டிருந்தான். மூதாதையர்களின் ஆதிக்கூத்து, மதங்கன் மயங்கிச் சரிந்ததோடு முடிந்தது.
பின்னிரவில் கூத்து முடிந்ததும் எல்லோரும் கலைந்தனர். கலைஞர்கள், இசைக்கருவிகளை துணிகளில் எடுத்துக் கட்டினர். மதங்கனை அருகில் அழைத்து அமரச்செய்த பாரி, அவன் உள்ளங்கையைத் தொட்டும் தடவியும் பார்த்தபடி நீண்ட நேரம் எதுவும் பேசாமல் இருந்தான். உள்ளங்கை சிவந்து இறுகிப்போய் இருந்தது.
“நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்களேன்” என்றாள் ஆதினி.
“இல்லை… நிலைகொள்ளக் கூடாது என்பது தெய்வவாக்கு” என்றான் மதங்கன்.
நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தான் பாரி.
“நாங்கள் தப்பி ஓடுகிறோம். மீளாத் துயர் எங்களை விரட்டுகிறது. ஓர் இடத்தில் நின்றுவிட்டால் துயர் முழுமையும் கவிந்துவிடும். அதனால்தான் மறுபகல் காணாமல் இரவோடு இரவாக ஆடிய நிலம்விட்டு அகல்கிறோம். விளக்கிச் சொல்ல மனதில் துணிவு இல்லை. எனவேதான் தெய்வவாக்கு என்கிறோம்” என்றான் மதங்கன்.
பாரிக்குச் சொல்ல எதுவும் இல்லை.
“உனக்கு என்ன வேண்டும்? எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்” என்றான்.
மதங்கன் கேட்க, சற்றே தயங்கினான்.
“தயங்காமல் கேளுங்கள்” என்றார் பெரியவர் தேக்கன்.
மதங்கன், மெல்லியக் குரலில் கேட்டான்…
“வேறு எதுவும் வேண்டாம். கொல்லிக்காட்டு விதை கொடுங்கள்”
பாரி அதிர்ந்து பார்த்தான். யாரும் எதிர்பாராத ஒன்று. என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. `இப்படி ஒரு பொருள் இருப்பதே வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியாது. இதை எப்படிக் கேட்டான் மதங்கன்?’ நீடித்த மெளனம் கலைத்து தேக்கன் சொன்னான்…
“பறம்பின் ஆதிப்பொருட்கள், குலம் தாண்டக் கூடாது என்பது குலநாகினி வாக்கு. வேறு எது வேண்டுமானாலும் கேளுங்கள்”
“குலநாகினியின் வாக்கு, காப்பாற்றப்படட்டும். நாங்கள் புறப்படுகிறோம்” எனச் சொல்லி, வேறு எதுவும் கேட்காமல் மதங்கன் எழுந்தான்.
அவன் உள்ளங்கை பாரியிடம் இருந்தது. தடாரியை அடித்து அடித்து வடுவேறிய கை. அதைத் தொட்டு அழுத்தியபடியே தலை நிமிராமல் பாரி சொன்னான்…
“எடுத்து வாருங்கள்”
அரண்மனையை நோக்கி வீரர்கள் ஓடினர்.
மூன்று நாட்களுக்கு முன்னர்…
மதங்கன் கூட்டம், மேற்கு எல்லையின் வழியே பறம்பு நாட்டுக்குள் நுழைந்தனர். பன்றிக் காட்டின் அடிவாரம் இருக்கும் காட்டாலம்தான் முதல் கிராமம். அந்தத் திசை வழியே நுழையும் எந்தப் பாணர் கூட்டமும், அந்தக் கிராமத்தை வந்து அடையும். அதன் பிறகு வீரன் ஒருவன் அந்தக் கூட்டத்தை அழைத்துக்கொண்டு மூன்று நாட்கள் பயணித்து, எவ்வியூர் கொண்டுவந்து சேர்ப்பான். அப்படித்தான் இவர்களும் வந்தார்கள். வரும் வழியில் கூட்டத்தில் இருந்த பெண் ஒருத்தி மயங்கிச் சரிந்தாள். என்ன?' என, அழைத்துவந்த வீரன் விசாரித்தபோதுதான் தெரிந்தது, ஆ காரம் இன்றி தொடரும் நான்காம் நாள் பயணம் இது என்பது. குடுவையில் இருந்த நீரைத் தெளித்து அவளை எழுப்பினர்.
பக்கத்தில் கிராமம் எதுவும் இல்லை. உணவுக்கு என்ன செய்யலாம்?’ என யோசித்த வீரன், சிறிது தொலைவில் இருந்த குளத்துக்கு அழைத்துச் சென்றான். மதங்கன் கூட்டமும் ஆவலோடு போனது.
குளக்கரையை அடைந்ததும், “நீங்கள் உட்காருங்கள், நான் மீன்பிடித்து வருகிறேன்” என்றான்.
“கையில் வலை இல்லை, குத்தீட்டி இல்லை. எதைவைத்து மீன் பிடிப்பாய்?” என மதங்கன் கேட்டான்.
இடுப்புத் துணியில் முடிந்துவைத்திருந்த சிறிய காய் ஒன்றை எடுத்துக்காட்டினான் வீரன்.
“இதைவைத்து எப்படி மீன் பிடிப்பாய்?” எனக் கேட்டான் மதங்கன்.
“பாருங்கள்” என்று சொன்ன வீரன். அந்தக் காயை அருகில் உள்ள கல்மீது வைத்துத் தட்டினான். அது இரண்டாக உடைந்தது. ஒரு துண்டை எடுத்து இடிப்புத் துணியில் முடிந்துகொண்டான். மறுதுண்டை கல்லால் தட்டி பொடிப்பொடியாக ஆ க்கினான். அதைத் துளியும் மிஞ்சாமல் எடுத்து குளத்தில் தூவிவிட்டான்.
அவன் தூவிய இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் மதங்கன். நீர் சிறிது கலங்க ஆரம்பித்தது. சிற்றலைகள் தோன்றின. வீரன் சொன்னான்… “இது கொல்லிக்காட்டு விதை. காக்காய்க் கொல்லி விதை என்றும் சொல்வோம். அதை மீன்களும் பறவைகளும் விரும்பித் தின்னும். பிறகு சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்துவிடும்” என்றான்.
மதங்கன் ஆச்சர்யத்தோடு கேட்டான்…
“மீன் எப்படி மயக்கம் அடையும்?”
“அதோ பாருங்கள்” என்றான் வீரன்.
மதங்கன் அந்த இடத்தைப் பார்க்க, மீன்கள் மேலும் கீழுமாகச் சுழன்றும் பிறண்டும் நீந்திக்கொண்டிருந்தன. பெருமீன் ஒன்று வாலை மட்டும் மெள்ள அசைத்தபடி மிதக்க ஆரம்பித்தது. வீரன் உள்ளே இறங்கி ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தான். வாய் பிளந்து நின்ற மதங்கன் அதை வாங்கினான். எட்டு பேருக்குத் தேவையான மீன்களை எடுத்த பிறகு, வீரன் கரை ஏறினான். இன்னும் சில மீன்கள் மிதந்து கொண்டிருந்தன.
“நமக்கு இவை போதும்; அவை சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து நீருக்குள் சென்றுவிடும். அது வரை பறவைகள் எதுவும் கொத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, நெருப்புமூட்ட தீக்கல் எடுக்கச் சென்றான் வீரன்.
மதங்கன் பார்த்துக்கொண்டே இருந்தான். அரண்மனைக்குச் சென்ற வீரர்கள், பெரும் தாழிப்பானையைத் தூக்கிவந்து பாரியின் முன்னால் வைத்தனர். மதங்கனின் கண்கள் ஆச்சர்யம் நீங்காமல் பானைக்குள் பார்த்தன. அதே காய்கள். பாரி சொன்னான்… “எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்”
தேக்கனின் மனம் பதறியது. ஆதினிக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. குல வழக்கங்களை மீறும் இடங்களுக்குச் சாட்சியாக நிற்பவர் யாராக இருந்தாலும் உள்நடுக்கம்கொள்வர். எல்லோருக்குள்ளும் ஒருவித அச்சம் உண்டானது. இறுக்கமான அந்தச் சூழலில் மதங்கனின் இரு கைகளும் தாழிக்குள் இருந்து கொல்லிக்காட்டு விதையை கைநிறைய அள்ளின. தடாரி பேரொலி எழுப்பியபோது உணர்ந்ததைப்போல, பல மடங்கு நடுக்கத்தை இப்போது உணர்ந்தனர்.
Popular Tags
velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari ananda vikatan,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,vel pari in tamil,vel pari vikatan,
vell paari story,vell paari,velpari vikatan,veerayuga nayagan velpari audiobook,veerayuga nayagan velpari,paari vallal story,paari vallal,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,
வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari ananda vikatan,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,
vel pari in tamil,vel pari vikatan,vell paari story,vell paari,velpari vikatan,veerayuga nayagan velpari audiobook,veerayuga nayagan velpari,paari vallal story,paari vallal,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,
வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,Paari,Paari Vallal,vallal pari,paari vallal story,angavai sangavai story,angavai sangavai story in tamil,mullaiku ther kodutha pari,vel pari,parivallal in tamil,Great King Paari,velpari audiobook free download,வேள்பாரி நாவல்,வேள்பாரி புத்தகம்,வேள்பாரி வரலாறு,
velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,vel pari in tamil,vell paari story,vell paari,veerayuga nayagan velpari audiobook,
veerayuga nayagan velpari,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,Paari,vel pari,velpari audiobook free download,velpari audio book,vel pari audio book