Amara Vazhvu Kalki அமர வாழ்வு கல்கியின் சிறு கதைகள்
Mr and Mrs Tamilan Presents Kalki Times
அமரர் கல்கியின் சிறு கதைகள்
Amara Vazhvu Kalki அமர வாழ்வு
Amara Vazhvu Kalki
அத்தியாயம் 1: முன்னுரை
பர்மாவிலிருந்து தாய்நாட்டிற்குத் திரும்பி வந்த பிறகு என் உள்ளம் அமைதி இழந்து அலைப்புண்டிருந்தது. ஓரிடத்தில் நிலையாக இருப்பது சாத்திய்மில்லாமல் போயிற்று. என் மனோநிலையை வியாஜ்யமாகக் கொண்டு தேச யாத்திரை செய்யத் தொடங்கினேன். அந்த தேச யாத்திரையைப் பெரும்பாலும் வட இந்தியாவிலேயே செய்யும்படி தூண்டிய காரணம் ஒன்று இருந்தது.
வீர ராஜபுத்திரர்களின் நாட்டில் அதிசயமான வீரச் செயல்கள் நிகழ்ந்த புராதனமான கோட்டை கொத்தளங்களையும், பாழடைந்த பழைய ஊர்களையும் அழகு குடி கொண்ட புதிய பட்டணங்களையும் அந்தப் பட்டணங்களிலே லீலா விநோதங்களுக்குப் பெயர் போன சிருங்கார அரண்மனைகளையும் சுற்றிப் பார்த்துச் சலித்த பிறகு, கடைசியாக, அஜ்மீர் ஸ்டேஷனிலிருந்து பம்பாய்க்குப் போவதற்கு டிக்கட் வாங்கினேன். ஆஜ்மீரில் டிக்கட் கொடுத்த ஸ்டேஷன் குமாஸ்தா ஒரு எச்சரிக்கை செய்தார். “வழியில் ரட்லம் சமஸ்தானத்தில் ஏதோ கலாட்டா நடப்பதாகத் தெரிகிறது. கால திட்டப்படி ரயில் போய்ச் சேர்வது நிச்சயமில்லை. நீங்கள் வேறு மார்க்கமாய்ப் போவது நல்லது!” என்று அவர் சொன்னார்.
அதற்கு நான், “எத்தனையோ கலாட்டாக்களை நான் பார்த்திருக்கிறேன் ஐயா! பரவாயில்லை. டிக்கட் கொடுங்கள்” என்றேன்.
ஆஜ்மீர் ஸ்டேஷனில் ஜனங்கள் அங்கங்கே கும்பல் கூடிப் பரபரப்புடன் பேசிக் கொண்டிருந்த விஷயம் என்னவென்பது மேற்படி டிக்கட் குமாஸ்தாவின் எச்சரிக்கையின் மூலம் எனக்குத் தெரிய வந்தது.
ரயில் புறப்பட்டபோது அதில் வழக்கத்துக்கு மாறாகக் கூட்டம் ரொம்பக் குறைவாக இருந்தது. ஏறியிருந்தவர்களில் போலீஸ்காரர்கள், இந்திய சிப்பாய்கள், இங்கிலீஷ் டாம்மிகள் ஆகியவர்கள் தான் அதிகமிருந்தார்கள்.
இத்தனை நாளும் ரயில் பிரயாணத்தில் கூட்டத்திலேயே கிடந்து அவஸ்தைப்பட்ட எனக்கு இது பெரிதும் உற்சாகத்திற்குக் காரணமாயிருந்தது. ஒருவருமே ஏறியிராத ஒரு இரண்டாம் வகுப்பு வண்டியைக் கண்டுபிடித்து அதில் ஏறிக் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டேன். பிரயாணத்துக்கான உடையைக் களைந்து விட்டுக் கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஹாய்யாகக் காலை நீட்டிக் கொண்டு படுத்தேன். ரயிலும் கிளம்பிற்று.