Kalki Short StoriesKalki TimesStory

Amara Vazhvu Kalki அமர வாழ்வு கல்கியின் சிறு கதைகள்

Amara Vazhvu Kalki

அத்தியாயம் 2: ரட்லம் ஜங்ஷன்

நான் நிம்மதியான நினைவற்ற தூக்கம் தூங்கி எத்தனையோ காலம் ஆயிற்று. என்றாலும், ஓடும் ரயிலின் ஓசையும் சுழலும் சக்கரங்களின் சத்தமும் பெரும்பாலும் என்னைக் கண்ணயரச் செய்வது வழக்கம். எத்தனை நேரம் அன்று நான் தூங்கினேனோ தெரியாது. பழைய வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றிய கனவு கொண்டு திடீரென்று தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்தேன். ரயில் ஓடாமல் நிற்கிறது என்று தெரிந்தது. நிற்கிற இடம் ஸ்டேஷன் இல்லை என்று என் உள்ளுணர்வு சொல்லிற்று. ஸ்டேஷன் என்றால் அதற்கென்று தனி உரிமையுள்ள சில சப்தங்கள் கேட்கும். வண்டியில் இடம் பிடிக்க ஓடுகிறவர்களின் நடமாட்டம், ஏறி இறங்குகிறவர்களுடைய ஆர்ப்பாட்டம், ‘கரம் சா’ ‘கரம் தூத்’ கூப்பாடு, போர்ட்டர்களின் ஆரவாரம் இவற்றிலிருந்து ரயில் பெரிய ஜங்ஷனிலோ சிறிய ஸ்டேஷனிலோ நிற்கிறதென்பதைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், இங்கே அம்மாதிரி சப்தங்கள் இல்லை. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து இனந்தெரியாத சப்தங்கள் கேட்டன. வண்டியின் பலகணி ஒன்றைத் திறந்து உள்ளே குப் என்று புகுந்த குளிர்ந்த பனிக் காற்றைப் பொருட்படுத்தாமல் வெளியே தலையை நீட்டினேன். என்னைப் போலவே பல தலைகள் வண்டிக்கு வெளியே நீட்டப்பட்டிருந்தன. ஒரு சிலர் கீழே இறங்கி ரயிலோரமாக நடந்து கொண்டிருந்தார்கள். எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு பட்டணம் இருப்பது தெரிந்தது. எப்படித் தெரிந்தது என்றால், அந்தப் பட்டணத்தில் ஆங்காங்கே சில வீடுகள் தீப்பிடித்து எரிய, மேற்படி தீயின் வெளிச்சத்தில் பட்டணம் தெரிந்தது! பட்டணம் தெரிந்த திசையிலிருந்து படார், படார் என்று துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் சத்தம் வந்து கொண்டிருந்தது.

அடுத்த வண்டியிலிருந்து தலையை நீட்டியவரைப் பார்த்து, “என்ன ஸார், விசேஷம்! ரயில் எங்கே வந்திருக்கிறது?” என்று கேட்டேன். “ரட்லம் ஸ்டேஷனுக்கு அருகில் வந்திருக்கிறது; டவுனில் ஏதோ கலாட்டா நடப்பது போல் காண்கிறது!” என்றார்.

ஆஜ்மீர் ஸ்டேஷனில் டிக்கட் குமாஸ்தா சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டேன்.

சில நிமிஷத்துக்கெல்லாம் ரயில் கார்டின் விஸில் சப்தம் கேட்டது; ரயிலும் புறப்பட்டது. மெதுவாக நகர்ந்து சென்று கை காட்டி மரத்தைத் தாண்டி ரட்லம் ஸ்டேஷனுக்குள் போய் நின்றது. வண்டியிலிருந்த சிப்பாய்கள் முதலியோர் மளமளவென்று கீழே இறங்கினார்கள். பிளாட்பாரத்தில் அங்குமிங்கும் ஜனங்கள் கும்பல் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கம் போன ஸ்டேஷன் அதிகாரி ஒருவரை நிறுத்தி, “என்ன ஐயா விசேஷம்? வண்டி இதற்கு மேல் போகுமா? போகாதா?” என்று கேட்டேன். அவர் தமது வாயிலிருந்த சிகரெட்டை எனக்குப் பதில் சொல்வதற்காக எடுக்கலாமா, வேண்டாமா என்று சிறிது யோசனை செய்துவிட்டுப் பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய், “கொஞ்ச தூரத்துக்கப்பால் ரயில் பாதை சேதமாயிருக்கிறது. செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் பொழுது விடிந்தபிறகுதான் ரயில் புறப்படும்” என்றார்.

உடனே நான் படுக்கையை சுற்றிக் கட்டினேன். களைந்து வைத்த உடுப்பைப் போட்டுக் கொண்டேன். கஷ்டப்பட்டு ஒரு போர்ட்டரைக் கண்டுபிடித்துப் பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொள்ளச் செய்தேன். மேற்பாலத்தில் ஏறி இறங்கி முதல் நம்பர் பிளாட்பாரத்தில் இருந்த வெயிட்டிங் ரூமுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

வெயிட்டிங் ரூமில் விளக்கு எரியவில்லை. வெளியில் பிளாட்பாரத்து விளக்கிலேயிருந்து மங்கலான வெளிச்சம் வந்தது. அறை அடியோடு காலி என்று முதலில் தோன்றியது. அப்புறம் சுற்றும் முற்றும் நன்றாய்ப் பார்த்ததில் அந்த எண்ணம் தவறு என்று தெரிந்தது. சுவர் ஓரமாகக் கிடந்த தாழ்ந்த பிரம்புக் கட்டிலில் ஒரு மனிதர் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய முகம் சுவரின் பக்கமாகத் திரும்பியிருந்தபடியால் அவர் யார், இன்ன மாதிரி மனிதர் என்று இனம் தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு வட்ட மேஜையும், அதன் இரண்டு பக்கங்களில் இரண்டு நாற்காலிகளும் கிடந்தன. சாமான்களைக் கீழே வைக்கச் சொல்லிவிட்டு ஒரு நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். போர்ட்டரிடம் மறுபடியும் ரயில் கிளம்பும் போது வந்து கூப்பிடும்படி சொன்னேன்.

போர்ட்டர் போன பிறகு சிறிது நேரம் வட்ட மேஜை மீது கைகளை ஊன்றிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். என் பிறப்பு வளர்ப்பைப் பற்றியும், வாழ்க்கையில் நான் அடைந்த அனுபவங்களைப் பற்றியும் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இந்த மாதிரி முன் பின் தெரியாத ஒரு வடநாட்டு ரயில்வே ஸ்டேஷனில் ஒரு நாள் நள்ளிரவில், நான் தன்னந் தனியாக உட்கார்ந்திருப்பேன் என்று நாலைந்து வருஷங்களுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், சொல்லியவருக்குப் பைத்தியக்காரப் பட்டம் சூட்டியிருப்பேன்.

என்ன அர்த்தமற்ற காரியம் இது? என் வாழ்க்கையையே இப்படி அர்த்தமற்றதாகத்தான் போய் விடுமோ?

‘டப் டப் டப்பார்’ என்று துப்பாக்கி வெடிச் சத்தம் மறுபடியும் கேட்டது. சுவருக்கருகில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த மனிதர் ஒரு தடவை புரண்டு படுத்தார். மறுபடியும் ஒரு நொடிப் பொழுதில் அவருடைய முகம் சுவரின் பக்கமாகத் திரும்பி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *