Kalki Short StoriesKalki TimesStory

Amara Vazhvu Kalki அமர வாழ்வு கல்கியின் சிறு கதைகள்

அத்தியாயம் 3: ஜே ஹிந்த்!

என்னுடைய கண்ணிமைகளும் லேசாக வளைந்து கொடுக்கத் தொடங்கின. படுக்கையைத் தரையில் விரித்துக் கொண்டு படுக்கலாமென்று எண்ணி நாற்காலியிலிருந்தபடியே குனிந்து படுக்கையைப் பிரித்தேன். அப்போது யாரோ ஒருவர் அந்த அறைக்குள்ளே வருவது தெரிந்தது. குனிந்தபடியே கடைக்கண்ணால் வருவது யார் என்று கவனித்தேன். அவ்வளவுதான்; என் கைகள் வெட வெட என்று நடுங்கத் தொடங்கின. படுக்கையைக் கட்டியிருந்த தோல் வாரைக் கழற்ற முடியவில்லை. வெளியே எங்கேயோ தூரத்தில் கேட்ட துப்பாக்கி வெடியின் சத்தம் இப்போது என் நெஞ்சுக்குள்ளே வெடிப்பது போல் கேட்டது. சட்டென்று ஒரு பெரு முயற்சி செய்து மனதை திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். உள்ளே வந்த மனிதர் சுவர் ஓரமாகப் பெட்டி படுக்கையை வைத்து விட்டு வந்து எனக்கெதிரே வட்ட மேஜைக் கருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

முதலில் அவர் என்னைப் பார்க்கவில்லை. வெயிட்டிங் ரூமில் வாசல் வழியாகப் பிளாட்பாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு, நான் அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததை உணர்ந்ததினால் தானோ என்னமோ, என் பக்கமாகப் பார்த்தார். முதலில் அசட்டையாகப் பார்த்தார்; பிறகு உற்றுப் பார்த்தார்.

“ஜே ஹிந்த்!” என்றார். அந்தக் குரலும் வார்த்தைகளும் என் உள்ளத்தில் அடங்கிக் கிடந்த எத்தனையோ உணர்ச்சிகளைப் பொங்கும்படிச் செய்தன. மிகவும் பிரயத்தனப்பட்டு உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சிகளையும் கண்களிலே துளிக்கப் பார்த்த கண்ணீரையும் அடக்கிக் கொண்டு கம்மிய குரலில் நானும் “ஜே ஹிந்த்!” என்று வாழ்த்தினேன்.

“தமிழர் போலிருக்கிறது” என்றார்.

“ஆமாம்!” என்றேன்.

“நாம் எங்கேயாவது சந்தித்திருக்கிறோமா? உமது முகம் பார்த்த முகமாய்த் தோன்றுகிறது; ஆனால் எங்கே பார்த்தோமென்று ஞாபகம் வரவில்லை” என்றார்.

அவருக்கு ஞாபகம் வராததற்கு மங்கலான வெளிச்சத்தைத் தவிர வேறு காரணமும் உண்டு என்பதை நான் அறிந்திருந்தேன். பேச்சைத் திருப்ப விரும்பினேன்.

“பர்மா அல்லது மலாயில் பார்த்திருக்கலாம். அந்த குழப்பமான காலத்தில் பார்த்த பதினாயிரம் முகங்களில் எதையென்று ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும்?” என்று சொல்லி, மேலே அவர் பேச இடங்கொடாமல், “இந்த இருளடைந்த ஸ்டேஷனிலிருந்து ரயில் எப்போது கிளம்பும், ஏதாவது தெரியுமா?” என்று கேட்டேன்.

“அதுதானே தெரியவில்லை. நீங்கள் எந்தப் பக்கம் போக வேண்டுமோ?”

“பம்பாய்ப் பக்கம் போகிறேன். “

“நான் டில்லிக்குப் போக வேண்டும். “

“டில்லிக்கா? நீங்கள் டில்லி செங்கோட்டையில் நடந்த விசாரணையில்… ” என்று தயங்கினேன்.

“இல்லை; நான் செங்கோட்டைக் கைதியில்லை. பர்மாவிலிருந்து நேரே வந்தவன், செங்கோட்டையிலிருந்து விடுதலையான ஒரு மனிதரைத் தேடிக் கொண்டு பம்பாய்க்குப் போனேன். அதற்குள்ளே அவர் பம்பாயிலிருந்து கிளம்பிப் போய்விட்டதாகத் தெரிந்தது… உங்களுக்கு மேஜர் ஜெனரல் குமரப்பாவைத் தெரியுமா!” என்று அவர் திடீரெனக் கேட்டார்.

“குமரப்பாவைத் தெரியாமலிருக்க முடியுமா? நேதாஜிக்கு அடுத்தபடியாக ஐ.என்.ஏ. வீரர்களின் பக்தியைக் கவர்ந்த மகாபுருஷர் அல்லவா?”

“ஆமாம்; அந்த மகா புருஷரைத் தேடிக் கொண்டுதான் போகிறேன். எதற்காகத் தெரியுமா?”

“தெரியவில்லையே?” என்று தயங்கிக் கூறினேன்.

அவர் தம்முடைய கால் சட்டையின் பைக்குள்ளே கையை விட்டு ஒரு ரிவால்வரை எடுத்து என் முகத்துக்கு நேரே அதைப் பிடித்தார்.

“இதிலே ஆறு குண்டுகள் இருக்கின்றன. ஆறில் ஐந்து குண்டுகளையாவது குமரப்பாவின் மார்பில் செலுத்துவதற்காகத்தான். ஒன்று, இரண்டு, மூன்று… “

என்னுடைய உள்ளத்தில் அப்போது குமுறி எழுந்த அலைகளை அடக்கிக் கொண்டு, “இது என்ன பேச்சு பேசுகிறீர்கள்? தயவுசெய்து ரிவால்வரைச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள்!” என்றேன்.

அவர் அப்படியே செய்தார். பிறகு இரண்டு கைகளாலும் சிறிது நேரம் முகத்தை மூடிக் கொண்டிருந்தார்.

“ஏதோ ரொம்பவும் மன வேதனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்!” என்றேன்.

அவர் தமது முகத்தை மூடியிருந்த கைகளை எடுத்துவிட்டு, “இந்தப் பிரயாணம் தடைப்பட்டதினால் ரொம்பவும் மனத்தளர்ச்சியடைந்து விட்டேன். தயவு செய்து மன்னியுங்கள்” என்றார்.

“ரயில் இன்று இரவு கிளம்பப் போவதில்லை. நம் இருவருக்கும் தூக்கம் வரவும் இல்லை. நீங்கள் உங்கள் அநுபவங்களைச் சொன்னால், நானும் பிற்பாடு என் கதையைச் சொல்கிறேன். இராத்திரி பொழுது போகும்” என்றேன்.

“நீரும் ஐ என் ஏ சகோதரர்; அதிலும் தமிழ் நாட்டாராயிருக்கிறீர். உம்மிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வது? ஆனால் கதையை எந்த இடத்தில் ஆரம்பிக்கிறது என்று தான் யோசிக்கிறேன்!”

“சுதந்திரப் படையில் தாங்கள் சேர்ந்ததிலிருந்து ஆரம்பிக்கலாமே?” என்றேன்.

“இல்லை, இல்லை; கதையைச் சொல்வதாயிருந்தால் முதலிலிருந்தே தொடங்குவதுதான் சரி!” என்று சொல்லிவிட்டு, சுவர் ஓரமாகக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த மனிதரைத் திரும்பிப் பார்த்தார்.

“அவர் அசந்து தூங்குகிறார். மேலும் யாரோ வடக்கத்தி மனுஷர் என்று தோன்றுகிறது. நாம் தமிழில் பேசினால் அவருக்கு என்ன தெரியப் போகிறது?” என்றேன்.

இன்னும் கொஞ்சம் தாஜா பண்ணிய பிறகு அவர் தமது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *