Kalki Short StoriesKalki TimesStory

Amara Vazhvu Kalki அமர வாழ்வு கல்கியின் சிறு கதைகள்

அத்தியாயம் 5: காதல் யாத்திரை

எனினும் டாக்டர் ரேவதியின் மேல் கர்னல் குமரப்பாவின் விசேஷ அபிமானத்தைப் பற்றிக் கேட்ட பிறகு அவனுடைய கவனம் டாக்டர் ரேவதியின் மீது அதிகமாகச் செல்ல ஆரம்பித்தது. இது ரேவதியின் கவனத்தையும் கவர்ந்தது. முதல் தடவை பேசின உடனேயே ரேவதிக்கும் ராகவனுக்கும் சிநேகப் பான்மை ஏற்பட்டுவிட்டது. இதைக் ‘காதல்’ என்று யாராவது சொல்லியிருந்தால் சுத்த பைத்தியக்காரத்தனம் என்றுதான் டாக்டர் ராகவன் சொல்லியிருப்பான். ஆயினும் வரவர, காவியங்களிலே காதல் என்பதற்கு என்னென்ன இலட்சணங்கள் கூறப்பட்டிருக்கின்றனவோ, அவையெல்லாம் ராகவன் ரேவதியினுடைய நடவடிக்கைகளில் காணப்படலாயின. ஏதாவது ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு ஒருவரையொருவர் அடிக்கடி சந்திக்கப் பிரயத்தனப் பட்டார்கள். ஒருவருடைய பேச்சு இன்னொருவருடைய காதுக்கு மிகவும் இனிமையளித்தது. தங்களை அறியாமலேயே ஒருவருடைய கண்கள் இன்னொருவருடைய கண்களை நாடிச் சென்றன்.

அதோடு நின்றுவிடவில்லை. சில நாளைக்கெல்லாம் டாக்டர் ராகவனுடைய மனதில் பொறாமை என்னும் தீ பற்றி எரியத் தொடங்கியது. டாக்டர் ரேவதி வேறு எந்த ஆண் டாக்டரோடாவது நெருங்கிப் பேசுவதைப் பார்த்தால் ராகவனுக்குக் கோபம் வந்தது. எந்த ஆண் நோயாளியிடமாவது ரேவதி சிரத்தை எடுத்துக் கவனித்தாலும் கூட ராகவனுக்குப் பொறுக்க முடியவில்லை.

இந்த நிலையில் டாக்டர் குமரப்பாவையும், ரேவதியையும் பற்றிய வம்புகள் பேச்சுக்கள் ராகவனுடைய நினைவுக்கு அடிக்கடி வந்து உறுத்தத் தொடங்கின. அவற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கலாமென்று அவன் மனம் யோசனை செய்யத் தொடங்கியது. டாக்டர் குமரப்பாவைத் தனிமையாக அவருடைய அறையில் பார்த்துவிட்டு ரேவதி திரும்பும் போது, ராகவன் அவளைக் கவனமாகப் பார்க்கத் தொடங்கினான். அப்போதெல்லாம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக படபடப்புடன் அவள் வருவதையும் சில சமயம் அவளுடைய கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிர்த்திருப்பதையும் பார்த்த போது அவனுடைய உள்ளம் கொதித்தது. ரேவதியை இதைப் பற்றிக் கேட்டே விடுவது என்று அவன் முடிவாகத் தீர்மானித்திருந்த சமயத்தில் ஒரு நாள் அவனிடம் வந்து, “டாக்டர், நான் பெரிய அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தங்களுடைய யோசனையும் உதவியும் எனக்கு வேண்டும்” என்று பரபரப்புடன் கூறினாள். அன்று மாலை ஆஸ்பத்திரி வேலை முடிந்தவுடன் தன்னுடைய வீட்டுக்கு வந்து சந்திக்கும்படி சொன்னான் ராகவன். அப்படியே அன்றிரவு ரேவதி ராகவனுடைய வீட்டுக்குச் சென்று தன் வாழ்க்கை வரலாற்றைக் கூறினாள். வாழ்நாளெல்லாம் தேசத் தொண்டு செய்த தன் தந்தை எப்படி பூர்வீக பிதிரார்ஜித சொத்தையெல்லாம் செலவழித்து விட்டுக் குடும்பத்தை நிராதரவாய் விட்டு விட்டுக் காலமானார் என்பதையும், தன்னைத் தக்க இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்கத் தன் தாயார் செய்த பிரயத்தனங்கள் எப்படிப் பலனளிக்காமல் போயின என்பதையும், தன்னுடைய சொந்த முயற்சியால் அநாதைப் பெண்கள் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து தேறி மெடிகல் காலேஜிலும் சேர்ந்து படித்து டாக்டர் ஆனதையும் பற்றித் தெரிவித்தாள். கர்னல் குமரப்பா முதலில் தன்னிடம் காட்டிய அன்பைக் குறித்துப் பெருமையடைந்து வந்ததையும், மற்றவர்களின் அவதூறான ஜாடைமாடைப் பேச்சுக்களை அலட்சியம் செய்து வந்தது பற்றியும் குறிப்பிட்டாள். கடைசியாக ரேவதி சொன்னாள்: “டாக்டர் ராகவன்! கொஞ்ச நாளாக எனக்கே இது விஷயத்தில் சந்தேகம் உண்டாயிருந்தது. கர்னலின் நடை உடை பாவனைகள் அவ்வளவு நன்றாயில்லை. அவரை நான் தனியாக அவருடைய அறையில் சந்திக்க நேரும் போதெல்லாம் என் முதுகில் தட்டிக் கொடுத்தும் கன்னங்களைத் தொட்டும் முகவாய்க் கட்டையைப் பிடித்துக் கொண்டும் “ரேவதி! உன்னைத் தான் நான் முழுக்க முழுக்க நம்பியிருக்கிறேன். ஒரு சமயம் வரும்; அப்போது என்னை நீ நம்பி நான் சொன்னபடி கேட்க வேண்டும்; கேட்பாயல்லவா?” என்று இவ்விதமெல்லாம் சொல்கிறார். இன்றைக்கு அவர், ‘ரேவதி நான் மறுபடியும் வெளிநாட்டுப் பிரயாணம் செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன், என்னோடு நீ கிளம்பி வருகிறாயா?’ என்று கேட்டபோது எனக்கு ஆத்திரம் உண்டாகி என் கண்களில் கண்ணீரும் வந்துவிட்டது. அதைப் பார்த்த கர்னல், ‘ஆ! நீ ரொம்ப நல்ல பெண்ணாயிருந்தாய்! உன்னிடம் நான் எவ்வளவோ எதிர்பார்த்தேன். என்னுடைய காரியத்துக்குக் கைகொடுப்பாய் என்று நம்பியிருந்தேன்; அந்த மூடன் ராகவன் உன் மனதைக் கெடுத்து விட்டான்!’ என்றார். பிறகு அங்கே நிற்க முடியாமல் விரைந்து வந்துவிட்டேன்!”

இவ்விதம் ரேவதி கூறியதைக் கேட்டு கொண்டிருந்த ராகவன் சிறிதுநேரம் மௌனமாக ஆலோசனையில் இருந்தான். பிறகு, “என் அருமை ரேவதி! ஒரு விஷயம் கேட்கிறேன். அதற்குச் சங்கோசப்படாமல் பதில் சொல்ல வேண்டும். கர்னல் குமரப்பா மனைவியை இழந்தவர் என்பது உனக்குத் தெரியும். ஒரு வேளை உன்னை இரண்டாந்தாரமாக கல்யாணம் செய்துகொள்ள அவர் விரும்பலாம் அல்லவா?” என்றேன்.

“அந்தச் சந்தேகம் என் மனதிலும் சில சமயம் தோன்றியதுண்டு” என்று ரேவதி சொன்னாள்.

“அப்படியானால் அதைப்பற்றி உனக்கு என்ன ஆட்சேபம்? கர்னல் குமரப்பாவை மணந்து கொள்ளும் பாக்கியம் தள்ளக்கூடியதல்லவே?” என்ற கூறி, ரேவதியின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தான் ராகவன்.

“ஒருவேளை மூன்று மாதத்துக்கு முன்னால் அவர் கேட்டிருந்தால் அதில் எனக்கு ஆட்சேபமிருந்திராது. இப்போது ஆட்சேபமிருக்கிறது” என்றாள் ரேவதி.

“அது ஏன்? மூன்று மாதத்திற்குள் அதற்கு விரோதமாக என்ன காரணம் ஏற்பட்டிருக்கிறது?”

“தங்களுடன் சிநேகம் செய்து கொண்டது தான்!” என்று ரேவதி கூறியபோது, என்னதான் அவள் கல்வியும் நாகரிகமும் படைத்த நவயுகப் பெண் ஆனாலும் கொஞ்சம் தலை குனியத்தான் செய்தாள்.

ரேவதி இவ்விதம் தன் மனோநிலையை ஒருவாறு குறிப்பிட்ட பிறகு, பரஸ்பரம் இருவரும் தத்தம் இருதயத்தை நன்றாய்த் திறந்து காட்டுவதற்கு வழி ஏற்பட்டது. ராகவனுடையை வாழ்க்கையோடு தன்னுடைய வாழ்க்கையை என்றென்றைக்கும் பிணைத்துக் கொள்ளவும், அவனுக்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யவும் ரேவதி சித்தமாயிருந்தாள் என்று ஏற்பட்டது. ராகவனோ ரேவதியின் கடைக்கண் பார்வைக்காக, பாரதியார் வாக்கின் பிரகாரம் நூற்றிரண்டு மலைகளைப் பொடிப் பொடியாக்கவும் காற்றிலேறி விண்ணைப் பிளக்கவும் தயாராயிருந்தான்.

கடைசியில் ராகவன் சொன்னான்: “என் கண்ணே! பொறாமையும், பொய்யும், பித்தலாட்டமும் நிறைந்த இந்த தேசமே எனக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும் வழியில் நான் மலாய் நாட்டில் இறங்கிச் சில நாள் தங்கியிருந்தேன். பூலோகத்தில் சொர்க்கம் உண்டு என்று சொன்னால் அது மலாய் நாடுதான். அந்த நாட்டுக்கு நாம் போய் விடலாம், வருகிறாயா?”

மேற்படி யோசனையை மறு பேச்சின்றி ரேவதி ஒப்புக் கொண்டாள். தீர்மானம் செய்த ஒரு மாதத்துக்கெல்லாம் இருவரும் கப்பலேறி மலாய் நாட்டை அடைந்தார்கள். கோலாலம்பூரில் ஜாகை ஏற்படுத்திக் கொண்டு வைத்தியத் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். ஒன்றரை வருஷ காலம் அவர்களுடைய வாழ்க்கை உண்மையில் சொர்க்க வாழ்க்கையாகவே இருந்து வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *