Kalki Short StoriesKalki TimesStory

Amara Vazhvu Kalki அமர வாழ்வு கல்கியின் சிறு கதைகள்

அத்தியாயம் 6: நேதாஜி விஜயம்

நிர்மலமான நீல வானத்திலிருந்து திடீரென்று இடி விழுந்தது போல், ஒரு நாள் ஜப்பான் அமெரிக்காவைத் தாக்கி யுத்தம் தொடங்கிய செய்தி வந்தது. அதன் பலனாகப் பிரிட்டன் ஜப்பான் மீது போர் தொடங்கியது. சிங்கப்பூரில் இரண்டு பிரமாண்டமான பிரிட்டிஷ் யுத்தக் கப்பல்கள் ஜப்பான் ஆகாச விமானிகளால் தாக்குண்டு கடலுக்கடியில் சென்றன. சில நாளைக்கெல்லாம் மலாய் நாட்டின் மீது ஜப்பானின் படையெடுப்புத் தொடர்ந்தது. சரித்திரத்திலேயே இல்லாத மிகவும் சொற்ப காலத்தில் மலாய் நாடு ஜப்பானுடைய வசமாயிற்று. அப்போதெல்லாம் ராகவனும் ரேவதியும் ஒரே பீதியிலும், கவலையிலும் ஆழ்ந்திருந்தார்கள். ஜப்பானியக் கொலைகாரர்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் பயங்கர விபரீதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தலைவெட்டி ராஜாங்கத்தில் எந்த நிமிஷம் யாருடைய தலைக்கு ஆபத்துவருமோ, யார் கண்டது? சாக நேர்ந்தால் இருவரும் கை கோர்த்துக் கொண்டு சாக வேண்டுமென்று அவர்கள் திட சங்கல்பம் செய்து கொண்டிருந்தார்கள். இப்படிச் சில மாத காலம் சென்றது. பிறகு அந்த மகத்தான சம்பவம் உலக சரித்திரத்தையே மாற்றியமைக்கக் கூடிய சம்பவம் ஏற்பட்டது. ஸ்ரி சுபாஷ் சந்திரபோஸ் மலாய் நாட்டுக்கு வந்து சுதந்திர இந்திய அரசாங்கத்தை ஸ்தாபித்தார். அவருடைய அரசாங்கம் ஆட்சி புரிவதற்கு அப்போது ஒரு சாண் அகல பூமி இல்லாவிட்டாலும், மலாய் நாட்டிலுள்ள இந்தியர்கள் எல்லோரும் தாங்கள் சுதந்திர இந்திய அரசாங்கத்தின் கீழ் வாழ்கிறோம் என்ற உணர்ச்சி பெற்றார்கள். அவர்களுடைய தோள்கள் பூரித்து உயர்ந்தன. அவர்கள் மார்புகள் விசாலித்து நிமிர்ந்தன. இதற்கு முன் எக்காலத்திலும் அறிந்திராத பெருமித உற்சாகமும் குதூகலமும் அவர்களுடைய உள்ளத்தில் பொங்கித் ததும்பின.

நேதாஜியின் சுதந்திர இந்திய அரசாங்கத்தைப் பல தேசத்து அரசாங்கங்கள் அங்கீகரித்தன. அதற்கு முன்னால் இந்தியர்களைப் புழுக்களைப் போல் மதித்து நடத்திய ஜப்பானியர், நேதாஜியின் வருகைக்குப் பிறகு இந்தியரிடம் மிக்க மரியாதை காட்டத் தொடங்கினார்கள். இந்தியரின் உயிருக்கும், சொத்து சுதந்திரங்களுக்கும் தக்க பாதுகாப்பு ஏற்பட்டது.

நேதாஜியின் நோக்கம் என்னவென்பது சீக்கிரத்திலேயே தெரிய வந்தது. இந்திய சுதந்திர சைன்யம் ஒன்றை அமைத்துக் கொண்டு இந்தியாவுக்குப் படையெடுத்துச் சென்று பிரிட்டிஷாரைத் துரத்தி விட்டு புது தில்லியில் பூரண சுதந்திரக் கொடியை உயர்த்துவது தான் அவருடைய உத்தேசம் என்று தெரிந்தது. இந்த எண்ணத்துடன் நேதாஜி இந்திய சுதந்திரப் படை திரட்டத் தொடங்கினார். அதுவரையில் எச்சிற் கையினால் காக்கை ஓட்டாத லோபிகளாயிருந்தவர்கள் உள்பட மலாயிலும் பர்மாவிலும் வாழ்ந்த இந்தியர்கள் பதினாயிரம், லட்சம் என்ற கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள். கனவிலே கூடப் போர்க்களம் செல்வது பற்றி எண்ணி அறியாதவர்கள் நேதாஜியின் சுதந்திரப் படையில் சேரத் தொடங்கினார்கள். அப்படி சுதந்திரப் படையில் முதன் முதலில் சேர்ந்தவர்களில் டாக்டர் ராகவனும், டாக்டர் ரேவதியும் இருந்தனர். தங்கள் மூலமாகப் பாரதத் தாயின் விடுதலை நடைபெற வேண்டியிருக்கிறதென்றும், அதனாலேதான் தங்களைக் கடவுள் மலாய் நாட்டில் கொண்டு வந்து சேர்த்தார் என்றும் இப்போது அந்தத் தம்பதிகள் பூரணமாக நம்பினார்கள். மலாயிலிருந்து பர்மாவுக்குப் போன முதல் கோஷ்டியோடு புறப்பட்டுச் சென்றார்கள்.

சில தினங்களுக்கெல்லாம் ரங்கூனிலிருந்து இந்திய சுதந்திரப் படையானது ‘ஜே ஹிந்த்!’ ‘டில்லி சலோ!’ என்று வானளாவக் கோஷமிட்டுக் கொண்டும்,

“கதம் கதம் படாயே ஜா குஷீகே கீத காயே ஜா”

என்னும் சுதந்திரப் போர் கீதத்துடனும் அஸ்ஸாம் எல்லைப் புறத்தை நோக்கிக் கிளம்பியது. கிளம்பிய போது அந்தப் படையைச் சேர்ந்தவர்களின் உற்சாகத்துக்கு அளவே கிடையாது. நேதாஜி நேரில் வந்திருந்து அவர்கள் புறப்படும் போது பேசிய பேச்சு மரக்கட்டைக்குக் கூடச் சுதந்திர வீர உணர்ச்சியை ஊட்டக் கூடியதாயிருந்தது. அப்படியிருக்க, ஏற்கனவே தாய் நாட்டின் விடுதலைக்காக உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்யச் சித்தமாயிருந்தவர்களைப் பற்றிக் கேட்பானேன்? புது டில்லியில் சுதந்திரக் கொடியை உயர்த்தி நேதாஜியை இந்தியக் குடியரசின் முதல் அக்கிராசனராகச் செய்யும் வகையில் முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லையென்று பிரக்ஞை செய்து கொண்டு அவ்வீரர்கள் கிளம்பினார்கள். அத்தகைய சுதந்திர ஆவேச வெறி டாக்டர் ராகவனையும் கொள்ளை கொண்டிருந்தது. ஆயினும் அவனுடைய உற்சாகத்தை ஓரளவு குறைப்பதற்குரிய இரு காரணங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று ரேவதியைப் பிரிந்து போக வேண்டியிருக்கிறதே என்பது. ஏனெனில் ரேவதி சேர்ந்திருந்த பெண்கள் படை போர் முனைக்கு உடனே அனுப்பப்படவில்லை. இவ்விதம் ஒருவரையொருவர் பிரிய நேர்ந்தது அவர்கள் இருவருக்குமே மனவேதனையை அளித்தது. என்றாலும், அவர்கள் ஈடுபட்டிருந்த மகத்தான இலட்சியத்தை முன்னிட்டு ஒருவாறு மனதைத் திடப்படுத்திக் கொண்டு பிரியத் தயார் ஆனார்கள். மறுபடியும் சந்தித்தால் சுதந்திரப் பாரத தேசத்தில் சந்திப்பது, இல்லாவிடில் வீர சொர்க்கத்தில் சந்திப்பது என்று ஒருவருக்கொருவர் வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பிரிந்தார்கள்.

ரேவதியின் பிரிவினால் ஏற்பட்ட மனச் சோர்வை ஒருவாறு ராகவன் சமாளித்துக் கொண்டான். ஆனால் வேறொரு காரணத்தினால் மனதில் ஏற்பட்ட சங்கடம் அவ்வளவு சுலபமாக சமாளிக்கக் கூடியதாயில்லை. அந்தக் காரணம் ராகவன் சேர்ந்திருந்த சுதந்திரப் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் குமரப்பா என்பதுதான்!

முதலில் இந்த உண்மை தெரிந்ததும் ராகவன் ஆச்சரியத்தினால் திகைத்துப் போனான். விசாரித்து அவர் எப்படி இந்திய சுதந்திரப் படையில் மேஜர் ஜெனரல் ஆனார் என்பதைத் தெரிந்து கொண்டான். பர்மாவை ஜப்பானியரிடமிருந்து பாதுகாப்பதற்காக முதன் முதலில் ரங்கூனுக்கு வந்த மதராஸிப் படையில் ஐ எம் எஸ் டாக்டர் என்ற முறையில் அவர் வந்து சேர்ந்த சில நாளைக்குள்ளே ஜப்பானியரால் நாற்புறமும் சூழப்பட்டு சரணாகதி அடைய நேர்ந்தது. சரணாகதி அடைந்தவர்கள் எல்லோரும் முதலில் சிறையில் வைக்கப் பட்டிருந்தார்கள். பிறகு, அவர்களிலே நேதாஜியின் சுதந்திரப் படையில் சேர இசைந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அப்படி விடுதலையானவர்களில் கர்னல் குமரப்பாவும் ஒருவர். நேதாஜியின், விசேஷ அபிமானத்துக்கு அவர் சீக்கிரத்தில் பாத்திரராகி சைன்யத்தின் டாக்டராக இருப்பதற்குப் பதிலாக மேஜர் ஜெனரல் என்ற பட்டத்துடனே ஒரு பெரிய சைன்யப் பகுதிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையெல்லாம் அறிந்த பிறகு ராகவனுடைய ஆச்சரியம் நீங்கிற்று. ஆனால் மனதில் ஒருவித திகில் மட்டும் இருந்து கொண்டிருந்தது. மேலும் ஜெனரல் குமரப்பா நமது கதாநாயகன் ராகவனை ஏற்கனவே தெரிந்தவர் என்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை. இது ராகவனுடைய மன அமைதி குலைவதற்கு பெரிதும் காரணமாயிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *