Kalki Short StoriesKalki TimesStory

Amara Vazhvu Kalki அமர வாழ்வு கல்கியின் சிறு கதைகள்

அத்தியாயம் 9: வேஷம் கலைந்தது

லெப்டினென்ட் கர்னல் ராகவன் சொன்ன கதையை முழுதுமே கேட்டுக் கொண்டிருந்தபிறகு, “தாங்கள் கூறிய வரலாறு மிகவும் பரிதாபகரமாயிருக்கிறது; மேலே என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டேன்.

“தற்சமயம் என்னுடைய வாழ்க்கையின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். மேஜர் ஜெனரல் குமரப்பாவை நான் சந்தித்தாக வேண்டும். அதற்குப் பிற்பாடுதான் வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் என்னால் யோசிக்க முடியும்” என்றார் கர்னல் ராகவன்.

“குமரப்பாவை நீங்கள் சந்திக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. உங்கள் பிடிவாதத்தை விட்டு விடுவதே நல்லது” என்று சொன்னேன்.

“அது மட்டும் முடியாது. குமரப்பா யமனுலகத்துக்கே போயிருந்தாலும் அங்கேயும் போய் அவரைக் கண்டுபிடித்தே தீருவேன்!” என்றார் ராகவன்.

“கண்டுபிடித்து என்ன செய்வீர்கள்?” “கண்டுபிடித்து, ‘அட பாதகா! என் ரேவதி எங்கே? அவளை என்ன செய்தாய்?’ என்று கேட்பேன். சரியான பதில் சொன்னால் விட்டு விடுவேன். இல்லாவிடில் இதோ இந்தக் கைத்துப்பாக்கியிலுள்ள ஆறு குண்டுகளையும் ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து என்று எண்ணி அவர் மார்பில் செலுத்துவேன்!”

“கர்னல் இது என்ன பைத்தியக்காரத்தனம்!”

“ஆம்; இங்கே உட்கார்ந்து நான் உம்மிடம் பேசிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனந்தான். இத்தனை நேரம் உம்மிடம் பேசி வியர்த்தமாக்கினேனே?” என்று சொல்லிக் கொண்டே கர்னல் ராகவன் எழுந்தார்.

அவரை நான் “அவசரப்பட வேண்டாம்; உட்காருங்கள்” என்று சொல்ல வாயெடுத்தேன். ஆனால் நெஞ்சில் எண்ணியது வாயில் வரவில்லை; அப்படி என்னைப் பேச முடியாமல் செய்த சம்பவம் ஒன்று அப்போது நேர்ந்தது.

சுவர் ஓரத்தில் இத்தனை நேரமும் படுத்திருந்த மனிதர் சட்டென்று எழுந்தார். நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்து வந்தார். வெளியிலேயிருந்து வந்த மங்கிய விளக்கின் ஒளி அவர் முகத்தில் பட்ட போது, என்னைத் தூக்கிவாரிப் போட்டுத் திகைப்படையச் செய்தது.

ஏனெனில், அந்த மனிதரை எனக்கு நன்றாய்த் தெரியும்; அவர் மேஜர் ஜெனரல் குமரப்பாதான்!

‘என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை’ என்று சாதாரணமாய் கதைகளில் எழுதுகிறார்களே அது இப்போது என் விஷயத்தில் முற்றிலும் உண்மையாயிற்று. நிஜமாக அவர் குமரப்பாதானா? இத்தனை நேரமும் அந்த மூலையில் படுத்திருந்தவர் அவர்தானா?

குமரப்பாவின் குரல் எப்போதுமே கனமாகவும் கம்பீரமாகவும் இருக்கும். இப்போது வழக்கத்தை விட அதிக கனமும் கம்பீரமும் பொருந்திய குரலில் அவர் “கர்னல் ராகவன், உம்முடைய நண்பர் கூறியது தவறு, இதோ நானே, சாஷாத் மேஜர் ஜெனரல் குமரப்பாவே ஆஜராயிருக்கிறேன். உம்மை மிகக் கடுமையான சோதனைக்கு நான் உட்படுத்தியது வாஸ்தவம்தான். அதற்கு பரிகாரம் செய்யவே இதோ வந்திருக்கிறேன். உம்முடைய கைத்துப்பாக்கியிலுள்ள குண்டுகளை என் மார்பிலே செலுத்த நீர் விரும்பினால் அப்படியே செய்யலாம். அவை நிஜக்குண்டுகள்தானே? புகைக் குண்டுகள் அல்லவே?” என்று கூறிவிட்டு நகைத்தார். அந்த நகைப்பு ஏனோ எனக்குப் பயங்கரத்தை உண்டாக்கிற்று.

ராகவனுடைய முகத்தைப் பார்த்தேன். அந்த முகத்தில் குரோதமும், அசூயையும், ஆங்காரமும் கோர தாண்டவம் ஆடின. கண்கள் நெருப்புத் தணலைப் போல் ஜொலித்தன. ஏதோ பேசுவதற்கு முயன்றார். ஆனால் உதடுகள் துடித்தனவே தவிர வார்த்தைகள் வெளிவரவில்லை. துப்பாக்கியை எடுத்துக் குமரப்பாவின் மார்பிற்கு எதிரே நீட்டிய போது அவர் கைகள் சிறிது நடுங்கின.

சட்டென்று நான் குதித்து எழுந்து, “ராகவன்! ஒரு நிமிஷம் பொறுங்கள்!” என்று கூவிய வண்ணம் அவர் கையைப் பிடித்துக் கொண்டேன். என் கை பட்டதும் ராகவனுக்கு ரோமாஞ்சனம் உண்டானதை உணர்ந்தேன். எனக்கும் அதேவிதமான அநுபவம் ஏற்பட்டது.

குமரப்பா ராகவனைப் பார்த்து, “ரேவதி எங்கே என்று என்னைக் கேட்கிறீரே? உம்முடைய சிநேகிதரைக் கேட்பது தானே?” என்றார்.

நான் பதட்டத்துடன், “ஆம்! நான் சொல்கிறேன். கர்னல் ராகவன் ஒரு நிமிஷம் பொறுப்பதாக வாக்களித்தால் சொல்கிறேன்” என்றேன். பிறகு என் முகத்தை ஒரு நிமிஷம் வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு, (சொல்வதற்குக் கூச்சமாயிருக்கிறது) அது வரையில் என் மேலுதட்டில் மேற்புறத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த ‘ஹிட்லர்’ மீசையை எடுத்து எறிந்தேன். தலையை நன்றாக மூடியிருந்த ‘மப்ளரை’யும் கையில் எடுத்துக் கொண்டேன். (எங்கும் குழப்பமாயிருந்த அந்த நாட்களில் தொந்தரவுக்குள்ளாகாமல் பிரயாணம் செய்வதற்காகச் சில சமயம் நான் அப்படி வேஷம் தரிப்பது வழக்கம்)

வேஷம் நீங்கிய என் முகத்தைப் பார்த்ததும் “ஆஹா! ரேவதியா?” என்று ராகவன் கூச்சலிட்டார்.

“ஆம்! ரேவதிதான்!” என்றேன்.

“இத்தனை நேரம் என்னை ஏமாற்றி என் வாயைப் பிடுங்கி என் மனத்திலிருந்ததையெல்லாம் கொட்டும்படி செய்தாயல்லவா? உன்னை என்ன செய்கிறேன் பார்!”

“இருந்தாலும் இந்தப் புருஷர்களுக்குக் கொஞ்சமாவது கூச்சம், சங்கோசம் என்பது கிடையாது! எனக்குந்தான் மனதிற்குள் எவ்வளவோ ஆர்வம் இருந்தது. அதையெல்லாம் நான் கட்டுப்படுத்திக் கொண்டு இத்தனை நேரம் சும்மா இருக்கவில்லையா?”

ஆனால் புருஷர்கள் எல்லாரையும் நான் குறை சொல்லக்கூடாது. சமய சந்தர்ப்பத்தைப் பார்த்து ரஸக் குறைவு ஏற்படாமல் நடந்து கொள்கிறவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். மேஜர் ஜெனரல் குமரப்பா அப்படித்தான் நடந்து கொண்டார். ஒரு நிமிஷங்கூட அங்கே நிற்காமல் சுவர் அருகே சென்று சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு புறப்பட்டார். அவர் வாசற்படியைக் கடக்கும் போது தான் இவருக்குச் சுய அறிவு வந்தது! நானும் என்னை விடுவித்துக் கொண்டு அப்பால் நகர்ந்தேன்.

“ஜெனரல்! ஜெனரல்! எங்களை மன்னிக்க வேண்டும்!” என்று ராகவன் அலறினார்.

மேஜர் ஜெனரல் திரும்பிப் பார்த்து, “உங்களை நான் மன்னிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? நீங்கள்தான், என்னை மன்னிக்க வேண்டும்!” என்றார்.

“ஜெனரல்! ஒரு விஷயம் தயவு செய்து சொல்ல வேண்டும். நம் அருமைத் தலைவர் நேதாஜி மரணமடைந்தது உண்மையா?” என்று ராகவன் பரபரப்போடு கேட்டார்.

குமரப்பாவின் முகத்தில் அப்போது அதி விசித்திரமான ஒரு புன்னகை தவழ்ந்தது.

“ராகவன்! நீரா இப்படிப்பட்ட கேள்வி கேட்பது? இந்திய சுதந்திரப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு மரணம் என்பது உண்டா? அமர வாழ்வு பெற்றவர்கள் அல்லவா நாம்? அதிலும் நம் நேதாஜிக்கு மரணம் ஏது?”

இவ்விதம் சொல்லிவிட்டு மேஜர் ஜெனரல் குமரப்பா வெயிட்டிங் ரூமின் வாசற்படியைக் கடந்து சென்றார்.

அவரைப் பின் தொடர்வதற்காக அடி எடுத்து வைத்த ராகவனை நான் கையைப் பற்றி நிறுத்தினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *