Kalki Short StoriesKalki TimesStory

Banker Vinayaga Rao Kalki | Kalki Times

Banker Vinayaga Rao Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

பாங்கர் விநாயகராவ்

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Banker Vinayaga Rao Kalki

முதற் காட்சி

நேரம் : காலை ஒன்பது மணி.

இடம் : மயிலாப்பூர், “பத்ம விலாசம்” பங்களாவில் முன்புறத்து ஹால்.

பாத்திரங்கள் : விநாயகராவ், எம்எல்சி , அவருடைய மகன் கங்காதரன்; யுவர் சங்கத் தொண்டர்கள்.

தொண்டர்கள் : நமஸ்காரம், நமஸ்காரம்.

விநாயகராவ் : வாருங்கள்; உட்காருங்கள். [உட்காருகிறார்கள். ]

விநாயகராவ் : நீங்கள் யார், எதற்காக வந்தீர்கள், தெரியவில்லையே?

முதல் தொண்டர் : நாங்கள் யுவர் சங்கத் தொண்டர்கள். அடுத்த வாரம் சட்டசபையில் பூரண மதுவிலக்குப் பிரேரேபணை வரப்போகிறதல்லவா? அதைத் தாங்கள் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள வந்தோம்.

இரண்டாம் தொண்டர் : வேறொரு வேண்டுகோளும் இருக்கிறது. தயவு செய்து தாங்கள் தங்களுடைய தென்னை மரங்களைக் கள்ளுக்கு விடக்கூடாது.

முதல் தொண்டர் : சட்டசபையில் தாங்கள் நியமன அங்கத்தினர் என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் தங்களுடைய வாக்களிக்கும் சுதந்திரத்தை யாரும் மறுக்க முடியாது.

விநாயகராவ் : ஏழைகள் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரமப்படுவது குறித்துச் சந்தோஷம். நானும் என் கடமையைச் செய்வேனென்று நீங்கள் நம்பியிருக்கலாம்.

தொண்டர்கள் : நமஸ்காரம், போய் வருகிறோம். [போகிறார்கள்]

விநாயகராவ் : முன்னுக்கு வரக்கூடிய பிள்ளைகள் இப்படிக் கெட்டுப் போகிறார்கள்… ஓஹோ! மணி பத்தாகி விட்டது. [எழுந்து உள்ளே செல்கிறார். ]


இரண்டாம் காட்சி

நேரம் : மாலை மூன்று மணி

இடம் : “மஹாராஜா ஹொடே”லில் ஓர் அறை.

பாத்திரங்கள் : விசுவநாதன், அப்பாசாமி, பத்பநாபன், அனந்தகிருஷ்ணன், ராமநாதன், கங்காதரன்

பத்மநாபன் (மோட்டார் சப்தம் கேட்டு) : அடே விசுவம்! பேபி வருகிறது.

விசுவநாதன் : பொஸொட்டோ வுக்குப் போய் அங்கிருந்து சினிமா போகலாம்.

[வாசலில் மோட்டார் வந்து நிற்கிறது. கங்காதரனும் ராமநாதனும் இறங்கி உள்ளே வருகிறார்கள். ]

அனந்தகிருஷ்ணன் : அடே, ராமநாதன் கூடவா? இவனை எங்கே பிடித்தாய்?

கங்காதரன் : வழியில் அகப்பட்டான்; அழைத்து வந்தேன்.

ராமநாதன் : உளறாதே! நானல்லவா உன்னைப் பிடித்தேன்?

பத்ம (கையைத் தட்டி) : அடே பையா! இரண்டு பேருக்கு டிபன் கொண்டு வா! அனந்த : ஏன்? எல்லோருக்கும் கொண்டு வரச் சொல்லேன்? இன்னொரு முறைதான் சாப்பிடுவோமே?

விசுவ : சை! சை! பொஸொட்டோ வுக்குப் போக வேண்டும். மறந்துவிடாதே.

ராம : பாவிப் பசங்களே! புதுச்சேரிக்குப் போனீர்களாமே?

அனந்த : பாவியாவது? நீதான் கொடுத்து வைக்காத பாவி!

[இதற்குள் சிற்றுண்டி வருகிறது. சாப்பிடத் தொடங்குகிறார்கள். ]

அப்பா : பட்டணத்தில் ஒன்பது ரூபாய்க்கு விற்கும் ‘சாம்பேன்’ அங்கே மூன்று ரூபாய். எவ்வளவு வித்தியாசம் பார்!

ராம : உண்மையாகவே நீங்கள் குடித்ததாகவா சொல்கிறீர்கள்? என்ன துணிச்சல் உங்களுக்கு?

அனந்த : சுகமனுபவிக்கப் பிறந்தவர்கள் வெள்ளைக்காரர்கள்தானப்பா!

ராம : கங்காதரன் துணிந்த தல்லவா எல்லாவற்றையும்விட ஆச்சரியம்?

கங்கா : எனக்கென்னவோ இன்னும் சந்தேகமாய்த் தானிருக்கிறது. நாம் அவ்வளவு தூரத்துக்குப் போவது சரியல்ல என்ன நினைக்கிறேன்.

விசுவ : நீ இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பாய். காரியத்தில் ஒன்றும் குறைவில்லை.

கங்கா : ஒரு சமாசாரம்; இன்று எங்கள் வீட்டுக்கு ‘யூத் லீக்’ தொண்டர் இருவர் வந்தார்கள். சட்டசபையில் வரப்போகும் மதுவிலக்குப் பிரேரேபணைக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களை லா காலேஜில் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

பதும : எனக்குத் தெரியும் அவர்களை, கதர்ப்பித்தர்கள்.

ராம : ரொம்ப சரி; ஒரு சிகரெட் கொடு.

பதும : அதுதான் கிடையாது. வாங்க வேண்டும்.

விசுவ : வழியில் வாங்கிக் கொள்ளலாம். கிளம்புங்கள்.

கங்கா : எங்கே போவதாக உத்தேசம்?

விசுவ : முன்னமே சொன்னேனே? சினிமாவுக்கு – வழியில் பொஸொட்டோ வில் இறங்கிவிட்டு.

கங்கா : எனக்குப் பிடிக்கவில்லை.

ராம : எனக்கும் பிடிக்கவில்லை.

பதும : சை! சை! ராமு! உனக்காகத்தானே முக்கியமாய்ப் போகவேண்டுமென்பது?

கங்கா : வோட்டு எடுத்துவிடலாம்.

விசுவம் : நல்ல யோசனை. பொஸொட்டோ வுக்குச் சாதகமானவர்களெல்லாம் கை தூக்குங்கள்.

[கங்காதரனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் கை தூக்குகிறார்கள்]

கங்கா : பெரும்பான்மையோர் வாக்கின்படி நடக்க நான் கடமைப்பட்டவன்.

அப்பா : மாட்டேனென்றால் யார் விடுகிறார்கள்?

[எழுந்து வெளியே போகின்றனர். ]


மூன்றாம் காட்சி

நேரம் : காலை ஏழு மணி.

இடம் : “பத்ம விலாஸம்” கொல்லைப்புறம்.

பாத்திரங்கள் : விநாயகராவின் மனைவி சிவகாமியம்மாள், வேலைக்காரி தாயி.

சிவகாமி : ஏண்டி, தாயி! நேற்று ஏன் வரவில்லை? உன் மகளை அனுப்பினாயே? அவளால் என்ன வேலை செய்ய முடிந்தது? இப்படிப் பண்ணினால் உன்னைத் தள்ளிவிடுவேன்.

தாயி (கண்ணில் நீர் ததும்ப) : அப்படிச் செய்யக் கூடாது, அம்மா! காப்பாற்றவேண்டும். புருஷன் சண்டைபோட்டு அடித்துவிட்டார். நேற்றெல்லாம் எழுந்திருக்கவே முடியவில்லை.

சிவகாமி : ஐயோ! உன் புருஷன் அவ்வளவு பொல்லாதவனா? ஐயாகிட்டச் சொல்லிப் போலீஸில் எழுதிவைக்கச் சொல்லட்டுமா?

தாயி : அவர் நல்லவரம்மா! பாழுங்கள்ளு அப்படிப் பண்ணுகிறது. முந்தாநாள் சம்பளங் கொடுத்தாங்க. குடித்துவிட்டு வந்துவிட்டார்.

சிவகாமி : சம்பளம் எவ்வளவு?

தாயி : பஞ்சுஸ்கூலில் மாதம் 22 ரூபாய் சம்பளம். சௌக்கியமாய் இருக்கலாம். ஆனால் சம்பளத்தில் முக்கால்வாசி குடிக்குப் போகிறது. ஆறு ஏழு ரூபாய் கூட இட்டேறுவதில்லை.

சிவகாமி : நல்லவரென்று சொல்கிறாயே? நீ சொல்லிக் குடிக்காமல் செய்யக்கூடாதா?

தாயி : எவ்வளவோ செய்து பார்த்துவிட்டேன். நல்ல புத்தியா யிருக்கும்போது குடிப்பதே இல்லை என்று சொல்லுவார். சாமியை வைத்துக்கூட சத்தியம் செய்திருக்கிறார். ஆனால் ஆலையிலிருந்து எந்தப் பாதையாக வந்தாலும் வழியில் பாழும் கடை ஒன்று…

சிவகாமி : இந்தக் கடைகளை ஏன் தான் வைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை.

தாயி : காந்தி மகாத்மா வந்து கள்ளு சாராயக் கடைகளை மூடப்போகிறார் என்று முன்னே சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒன்றையுங் காணோம்.

சிவகாமி : சரி, காப்பிக்கு நேரமாகிவிட்டது. சீக்கிரம் காரியத்தைப் பார்.

[உள்ளே போகிறாள். ]


நான்காம் காட்சி

நேரம் : இரவு ஒன்பது மணி.

இடம் : “பத்ம விலாஸம்” தோட்டத்தில் சலவைக் கல் மேடை.

பாத்திரங்கள் : விநாயகராவ்; சிவகாமி அம்மாள்; கங்காதரன்; மாப்பிள்ளை பரமேஸ்வரன்.

பரமேஸ்வரன் : நாளை சட்டசபையில் பிரேரேபணை வரப்போகிறதல்லவா? நீங்கள் எப்படி வாக்களிக்கப் போகிறீர்கள்?

விநாயக : நான் தான் அரசாங்கக் கட்சியாயிற்றே?

பரமே : அதற்காக மனச்சாட்சியை அடியோடு விற்றுவிடலாமா?

விநாயக : ரொம்பத் தெரிந்தவன் போல் பேசுகிறாயே? உண்மையில், இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் கொள்கைதான் சரி என்பது என் கருத்து. நீங்கள் யோசனையே செய்யாமல் பிறர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு குதிக்கிறீர்கள்.

சிவகாமி : என்ன சண்டை? எனக்கும் சொல்லுங்களேன்.

கங்கா : கள்ளு, சாராயக் கடைகளை எல்லாம் எடுத்துவிட வேண்டுமென்று நாளை சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப் போகிறார்களாம். அப்பா அதற்கு விரோதமாக ஓட்டுக் கொடுக்கிறாராம். இதற்காக மாப்பிள்ளை சண்டை பிடிக்கிறார்.

சிவகாமி : அந்த இழவு கடைகள் என்னத்திற்காக? நான் மாப்பிள்ளை கட்சிதான்.

விநாயக : நீ கலால் மந்திரியாகும்பொழுது அப்படியே செய்யலாம்.

பரமே : சந்தேகமென்ன? சட்டசபையில் ஸ்திரீகள் மட்டும் பெரும்பான்மையோரா யிருந்தால் இன்னும் எவ்வளவோ நல்ல காரியங்கள் எல்லாம் செய்திருப்பார்கள்.

சிவகாமி : இன்று காலையில் வேலைக்காரி சொன்னாள். எனக்குப் பரிதாபமாயிருந்தது. அவள் புருஷனுக்கு ஆலையில் இருபத்தைந்து ரூபாய் சம்பளமாம். முக்கால்வாசிக்குமேல் குடியில் தொலைத்து விடுகிறானாம். ஏழைகள் ஏன் இப்படி அவதிப்பட வேண்டும்?

விநாயக : ஏனா? நீ சுகமாகக் கைகால் அசக்காமல் உட்கார்ந்து சாப்பிடுவதற்கும், உன் மாப்பிள்ளை எஞ்ஜினியருக்குப் படித்து உத்யோகம் பெறுவதற்கும், கங்காதான் மோட்டாரில் சவாரி செய்வதற்கும் தான்.

சிவகாமி : ஏதாவது தத்துப் பித்தென்று பேசாதீர்கள். அதற்கும் இதற்கும் என்ன வந்தது?

விநாயக : கள்ளுக்கடைக்குச் சென்று குடிக்கத்தான் வேண்டுமென்று சர்க்கார் ஜனங்களைக் கட்டாயப்படுத்துகிறார்களா?

கங்கா : கள்ளுக்கடையை வைத்துக் கொண்டு குடிக்காதே என்றால் என்ன பிரயோஜனம்?

பரமே : விளக்கில் வந்து விழுந்து சாகும்படி விட்டில் பூச்சிகளை யாராவது கட்டாயப்படுத்துகிறார்களா?

விநாயக : நீங்கள் உலகமறியாதவர்கள். ஆலையில் வேலை செய்வதும், மூட்டைகள் சுமப்பதும் எவ்வளவு கஷ்டமான வேலைகள் தெரியுமா? இத்தகைய வேலை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏதேனும் சந்தோஷம் வேண்டாமா? குடி ஒன்று தான் இருக்கிறது. அதையும் நீங்கள் ஒழித்துவிடச் சொல்கிறீர்கள்.

பரமே : குடியினால் உடம்புக்குக் கெடுதல் என்று எத்தனையோ வைத்தியர்கள் சொல்லியிருக்கிறார்களே?

விநாயக : வைத்தியர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்வார்கள். கள்ளு உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சி என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள்.

சிவகாமி : எப்படியிருந்தாலும் ஏழைகள் பணமெல்லாம் கள்ளுக்கடைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டாமா?

விநாயக : பத்துப் பாத்திரம் தேய்க்கவும், வீடு வாசல் பெருக்கி மெழுகவும் நீ தயாராய் இருக்கிறாயா, சொல்.

சிவகாமி : எனக்கேன் தலையிலெழுத்து? ஏதாவது கேட்டால் ஏதாவது சொல்கிறீர்களே?

விநாயக : அவசரப்படாதே! உன் பெண்ணாவாது நாட்டுப் பெண்ணாவது அந்த வேலைகளைச் செய்யத் தயாரா?

சிவகாமி : ஒரு நாளும் செய்யமாட்டார்கள்.

விநாயக : வேலைக்காரி உங்களுக்கு அவசியம் வேண்டுமல்லவா?

சிவகாமி : ஆமாம்.

விநாயக : சரி, உன் வேலைக்காரி புருஷன் வாங்கும் சம்பளம் ரூபாய் இருபத்தைந்தையும் வீட்டுக்குக் கொண்டு வந்தால், அவல் ஒன்றரை ரூபாய் சம்பளத்துக்கு உனக்கு வேலை செய்ய வருவாளா? யோசித்துப் பார்.

சிவகாமி : ஏன் வரமாட்டாள்?

விநாயக : ஏனா? அந்த இருபத்தைந்து ரூபாயைக் கொண்டு அவர்கள் சௌக்கியமாகக் காலட்சேபம் செய்வார்கள். புருஷன் அவளை வேலைக்கு அனுப்ப மாட்டான். அப்படி வந்தாலும் பணிந்து வேலை செய்ய மாட்டாள். ஒரு வார்த்தை அதட்டிப் பேசினால் “போ, அம்மா, போ” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள்.

பரமே : அது உண்மைதான். நமக்கு அவசியமானால் அதிகச் சம்பளம் கொடுத்துத்தான் வைத்துக் கொள்ள வேண்டும்.

விநாயக : இப்பொழுதே நமது கிராமத்தில் பண்ணை ஆட்கள் சொன்னபடி கேட்பதில்லை என்று காரியஸ்தர் எழுதுகிறார். கள்ளுக்கடையும் இல்லா விட்டால் என்ன ஆகும் தெரியுமா? இருக்கட்டும். நீ எஞ்ஜினியரிங் காலேஜுக்குச் சம்பளம் என்ன கொடுக்கிறாய்?

பரமே : 140 ரூபாய்.

விநாயக : கங்காதரன் காலேஜுக்கு 180 ரூபாய் சம்பளம் கொடுக்கிறான். ஆனால் உங்களுடைய படிப்புக்காக மொத்தம் எவ்வளவு செலவு ஆகிறது தெரியுமா? நீங்கள் கொடுக்கும் சம்பளத்தைப் போல் குறைந்தது ஐந்து மடங்கு செலவாகிறது. சமீபதத்தில் முத்துக்கருப்பஞ் செட்டியார் கலா சாலைக்காக கணக்குப் பார்த்தார்கள். மொத்தம் வருஷத்தில் ஐந்து லட்சம் ரூபாய் செலவாகுமென்றும், அதில் ஒரு லட்சம் ரூபாய்கூட மாணாக்கர் சம்பளத்தில் கிடைக்காதென்றும் ஏற்பட்டன. இதற்குத்தான் கள் வருமானம் வேண்டும்.

பரமே : இது அதர்மமல்லவா? ஒரு சிலர் படித்து ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம் வாங்குவதற்காக எத்தனையோ ஏழைகள் கண்ணீர் விட வேண்டுமா? இது என்ன நியாயம்?

விநாயக : அதற்கென்ன செய்வது? ஹிம்ஸை தான் இயற்கை தருமம். புழு, பூச்சிகளைத் தின்று பட்சிகள் உயிர்வாழுகின்றன. பட்சிகளைத் தின்று மிருகங்கள் பிழைக்கின்றன. மிருகங்களைக் கொன்று தின்றும், வேலை வாங்கியும் மனிதன் ஜீவிக்கிறான். மனிதர்களுக்குள்ளே ஏழைகளை வேலை வாங்கிப் பணக்காரர்கள் வாழ்கிறார்கள். எல்லாவற்றையும் துறந்து சன்னியாசியாய்ப் போவதாயிருந்தால் ஒன்றும் வேண்டியதில்லை. உலகத்தில் வாழ்வதாய் இருந்தால் பிறருக்குத் துன்பம் கொடுத்தே ஆக வேண்டும்.

சிவகாமி : எல்லாம் அவரவர் தலை எழுத்தின் படிதான் நடக்கும் போலிருக்கிறது.

பரமே : தலையாவது? எழுத்தாவது? எல்லாம் மனிதன் செய்வதுதான். கள்ளுக்கடைப் பணம்தான் கல்விக்கு என்பது ஏன்? மற்றும் எத்தனையோ செலவுகளைக் குறைக்கக்கூடாதா?

விநாயக : அதுதான் முடியாத காரியம். அரசாங்கத்தார் இராணுவச் செலவைக் குறைக்க மாட்டார்கள். உத்தியோகஸ்தர் சம்பளத்தையும் குறைக்க முடியாது. பாக்கி எல்லாம் போகட்டும். தென்னை மரங்களைக் கள்ளுக் குத்தகைக்கு விடுவதில் நமக்குச் சராசரி மாதம் எண்ணூறு ரூபாய் வருகிறது. ஒரு சிரமம் கிடையாது. இந்த வருமானத்தை நான் எப்படி விட முடியும்? வேறு யார்தான் விடுவார்கள்?

சிவகாமி : ஏழைகளின் பாவம் வீண் போகாது.

[எழுந்து போகிறார்கள். ]


ஐந்தாம் காட்சி

நேரம் : இரவு எட்டரை மணி.

இடம் : “பத்ம விலாஸம்” முன்புறத்து ஹால்.

பாத்திரம் : விநாயக ராவ், சிவகாமி, பரமேசுவரன்.

பரமேசுவரன் : சட்டசபையில் முடிவு என்ன ஆயிற்று?

விநாயகராவ் : சரியான முடிவுதான்.

பரமே : பிரேரேபணை தோல்வி யடைந்துவிட்டதல்லவா?

விநாயக : முதல்தரமான தோல்வி; மூன்றில் ஒரு பங்கு வோட்டுக் கூடக் கிடைக்கவில்லை.

பரமே : இந்த அநியாயத்திற்கு எப்போது விமோசனமோ தெரியவில்லை.

சிவகாமி : சாப்பிடப் போகலாமா? கங்கு இன்னும் வரக்காணோமே?

விநாயக : ஏன் இவ்வளவு தாமதம்? சினிமாவுக்குப் போயிருந்தாலும் இதற்குள் திரும்பியிருக்கலாமே?

பரமே : மோட்டார் சத்தம் கேட்கிறது. நான் போய்ப் பார்த்து வருகிறேன்

[வெளியே போகிறான்]

சிவகாமி (இரகசியமாக) : ஒரு சமாசாரம் அல்லவா? ரொம்பக் கவலையாய் இருக்கிறது. கொஞ்ச நாளாகக் கங்கு ஒரு மாதிரியாக இருக்கிறான்.

விநாயக : என்ன சொல்கிறாய்? கங்குவுக்கு என்ன?

சிவகாமி : நாட்டுப் பெண் இன்றுதான் சந்தேகப்பட்டுச் சொன்னாள். அதன் மேல் எனக்கும் சந்தேகமாயிருக்கிறது. இரவில் முன்போல் சீக்கிரம் வருவதில்லை. வாயில் துர்வாசனை வீசுகிறது என்று சொல்கிறாள்.

விநாயக : சீச்சி! என்ன உளறுகிறாய்? கங்காதரனா அப்படி எல்லாம் போகிறவன்?

சிவகாமி : ஒன்றுமில்லாமலிருக்க வேண்டுமென்றுதான் தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மனக்கலக்கமா யிருக்கிறது. வெள்ளைக்கார ஓட்டல்கள் இருக்காமே? அங்கே போகிறானோ என்று தோன்றுகிறது. சேர்வாரோடு சேர்ந்து எத்தனையோ பிள்ளைகள் கெட்டுப் போகிறார்களே?

[பரமேசுவரன் உள்ளே வருகிறான்]

பரமே : வேறு யாருடைய வண்டியோ போயிற்று. கங்காதரனைக் காணோம்.

[டெலிபோனில் மணி அடிக்கிறது. ]

விநாயக : அது யார், பாரப்பா.

பரமே (டெலிபோனில்) : யார்? போலீஸ் ஸ்டேஷனா? – ஆமாம். – துக்க சமாசாரமா? என்ன? என்ன? – (அரை நிமிஷங் கழித்துத் திரும்பி) ஐயோ விபத்தாம், கங்காதரனை ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்களாம். படுகாயமாம்.

சிவகாமி : அடபாவி! மோசம் செய்துவிட்டாயா ஐயோ! என்ன செய்வேன்?

விநாயக (பதைபதைப்புடன்) : ஓடு! டிரைவரைக் கூப்பிட்டு மோட்டார் கொண்டு வரச்சொல்லு. (டெலிபோன் அருகில் சென்று) ஹலோ! யார் அங்கே விபத்து எப்படி ஏற்பட்டது தெரியுமா?

டெலிபோன் குரல் : ராயரிடம் சொல்ல வேண்டாம். நன்றாய்க் குடித்திருந்தானென்று போலீஸ் சார்ஜெண்டு சொல்லுகிறார்.

விநாயக : என்ன? நம்முடைய டிரைவரா குடித்துவிட்டிருந்தான்?

டெலிபோன் குரல் : டிரைவர் அல்ல. ராயர் மகனே வண்டி ஓட்டினானாம். குடிவெறியில் எதிரே வந்த பஸ்ஸுடன் மோதிவிட்டான். நீங்கள் யார்?

விநாயக : ஐயோ!

[கீழே விழுந்து தரையில் தலையை மோதிக் கொண்டு அழுகிறார். ]

இத்துடன்

அமரர் கல்கியின் பாங்கர் விநாயகராவ்

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Banker Vinayaga Rao Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,banker vinayaga rao Audiboook,banker vinayaga rao,banker vinayaga rao Kalki,Kalki banker vinayaga rao,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *