Kalki Short StoriesKalki TimesStory

Bhavani B.A.B.L Kalki | Kalki Times

அத்தியாயம் 10: பிராயச்சித்தம்

பவானி வாசலில் போய்ப் பார்த்ததும், கீழே சேஷாத்ரி போய்க் கொண்டிருந்தது தெரிந்தது. அவரை அவள் தொடர்ந்து சென்றாள். சுமார் அரை மைல் நடந்த பிறகு, சேஷாத்ரி ஒரு பாறையின் மீது உட்கார்ந்தார். மலைப்பாதைகள் வளைந்து வளைந்து செல்லுமல்லவா? சேஷாத்ரி உட்கார்ந்த இடம் ஒரு வளைவின் முனை. அங்கிருந்து பார்த்தால் மேலே பங்களாவுக்குப் போகும் பாதையும் கீழே கூனூர் ரயில் ஸ்டேஷனுக்குப் போகும் பாதையும் வெகு தூரத்துக்கு தெரிந்தன.

சேஷாத்ரி கீழே நோக்கிக் கொண்டிருந்தவர். காலடிச் சத்தம் கேட்டு மேலே நிமிர்ந்து பார்த்தார். பவானி வருவதைக் கண்டார். அவர் முகத்திலே அப்போது தோன்றியது கலக்கமா அல்லது மகிழ்ச்சியா? கலக்கம் என்றே பவானிக்குத் தோன்றியது.

“என்ன, தனியாய்ப் புறப்பட்டு வந்தீர்கள்?” என்று பவானி கேட்டாள்.

“அது உனக்கு வியப்பாயிருக்கிறதா, என்ன? நான் தான் இப்போது தனியாகிவிட்டேனே?” என்று கூறிச் சேஷாத்ரி புன்னகை புரிந்தார். அவருடைய கண்களிலே ஜலம் தளும்பிற்று.

பவானிக்கு அவர் மீது லவலேசமும் இரக்கம் ஏற்படவில்லை.

“சேஷாத்ரி! நீர் மகா வஞ்சகர். விஷப்பாம்பு. விஷப்பாம்பிலும் கொடிய வீரியன் பாம்பு…” என்று அவள் கூறி வந்த போது அவளே படமெடுத்தாடும் ஒரு நாக ஸர்ப்பத்தைப் போல் தோன்றினாள். அவள் கூறிய வார்த்தை ஒவ்வொன்றும் நஞ்சு தோய்ந்ததாயிருந்தது. சேஷாத்ரியின் முகம் கறுத்து அளவிலாத வேதனையைக் காட்டிற்று.

“உமது வேஷத்தை நான் கண்டறிந்தேன். நீர் மாத்ரு துரோகி, பித்ரு துரோகி, சகோதர துரோகி. உமாகாந்தனுடைய தமையன் நீர்தான். இல்லையென்று சாதிப்பீரா?” என்று கேட்டாள்.

சேஷாத்ரி ஒரு நிமிஷம் இடிவிழுந்தது போல் பிரமித்துப் போனார். “என்னுடைய கடிதத்தை…” என்று தடுமாறினார்.

“கடிதமா? என்ன கடிதம்?”

“வேலைக்காரனிடம் கொடுத்து வந்தேன்.”

“எனக்குத் தெரியாது. உம்முடைய கடிதத்தை நான் படிக்கவில்லை; படிக்க இஷ்டமுமில்லை. நீர் எனக்கு மட்டுந்தானா எழுதினீர்? சத்தியமாய்ச் சொல்லும்; போலீஸுக்கு எழுதவில்லையா? உம்முடைய தம்பியை இரண்டு தடவையும் கெடுத்தீர். இப்போது மூன்றாம் தடவையும் அவனை ஜெயிலுக்கு அனுப்புகிறீர். உம்மைப் போன்ற துரோகியை இந்த உலகத்திலே பார்க்க முடியாது.”

சேஷாத்ரி முகத்திலே ஒரு மாறுதல் உண்டாயிற்று. அவர் ஆத்திரம் ததும்பக் கூறினார்: “பவானி! நானா துரோகி? அவன் தான் துரோகி. என் வாழ்க்கையைப் பாழாக்குவதற்கே அவன் பிறந்தான். நான் ஐ.ஸி.எஸ். பரீட்சைக்குப் போகமுடியாமல் கெடுத்தான். அப்புறம் எப்படியோ நான் முன்னுக்கு வந்து ‘பப்ளிக் பிராஸிகியூடர்’ உத்தியோகத்தில் இருந்தபோது, அவன் கொலைக் கேஸில் வந்து சேர்ந்தான். தீர்ப்புக் கூறிய தினத்திலேதான் அவன் என்னைக் கெடுக்கப் பிறந்த என் தம்பி என்று எனக்குத் தெரிந்தது. அந்த வேதனையினாலேயே நான் ‘பப்ளிக் பிராஸிகியூடர்’ வேலையை விட்டுத் தொலைத்தேன். இப்போது மறுபடியும் அவன் என் வாழ்க்கையில் வந்து குறுக்கிட்டிருக்கிறான். பவானி! சத்தியமாய்ச் சொல்; அவன் வந்திருக்காவிட்டால் நீ என்னைக் கலியாணம் செய்து கொண்டிருக்க மாட்டாயா?” என்று கேட்டார்.

பவானி சிரித்தாள். அந்தச் சிரிப்பிலே இருந்த வெறுப்பும் ஏளனமும் அவருடைய கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டன. ஆனாலும் பவானி அத்துடன் நிறுத்தவில்லை. “உம்மைக் கலியாணம் செய்து கொள்வதைக் காட்டிலும் ஒரு பிசாசைக் கலியாணம் செய்து கொள்வேன்” என்றாள்.

சேஷாத்ரியின் முகத் தோற்றம் மறுபடியும் மாறியது. அதில் அளவில்லாத சோகம் குடிகொண்டது. “பவானி! ரொம்ப சந்தோஷம். போலீஸுக்குப் புலன் தெரிவித்தது நான் தான். நீ சீக்கிரம் போய் உன்னுடைய காதலனைக் காப்பாற்ற முடியுமானால் காப்பாற்று” என்றார்.

பவானி, அவர் காட்டிய திசையில் கீழே நோக்கினாள். பத்துப் பதினைந்து போலீஸ்காரர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருப்பதைக் கண்டாள்.

அவள் சேஷாத்ரியைப் பார்த்துப் பயங்கரமான குரலில் கூறினாள்: “சேஷாத்ரி! உம்முடைய பாபத்துக்குப் பிராயச் சித்தமே கிடையாது. இந்தப் பூமி எப்படி உம்மைச் சுமக்கிறது என்றே எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. இந்த மலை பிளந்து உம்மை விழுங்கி விடாதது எனக்கு வியப்பாயிருக்கிறது. நான் சொல்வதைக் கேளும். இந்த நீலகிரியில் எவ்வளவோ மலையுச்சிகள் இருக்கின்றன. எவ்வளவோ அதல பாதாளமான பள்ளத்தாக்குகள் இருக்கின்றன. அவற்றில் எதிலாவது ஒன்றில் நீர் விழுந்து செத்தீர் என்று கேள்விப்பட்டேனானால் என் மனம் குளிரும்.”

இப்படிச் சொல்லிவிட்டுப் பவானி விரைந்து பங்களாவை நோக்கிச் சென்றாள்.

பவானி அப்பால் சென்றதும் சேஷாத்ரி ஆச்சரியமான காரியம் ஒன்றைச் செய்தார். சட்டென்று தமது சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு முகம் பார்க்கும் கண்ணாடியையும் ஒரு ஷவரக் கத்தியையும் எடுத்தார். ஒரு விநாடிப் பொழுதில் தமது முகத்திலிருந்த அழகான மீசையை அகற்றினார். மீசையை எடுத்ததும் அவர் முகத்துக்கும் உமாகாந்தன் முகத்துக்கும் துளிக்கூட வித்தியாசம் இல்லாமல் போயிற்று, கண்ணாடியால் ஒரு தடவை முகத்தைப் பார்த்துக் கொண்டு கத்தி, கண்ணாடி எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்த ஒரு ஆழ்ந்த பள்ளத்தில் எறிந்தார்.

உடனே போலீஸ்காரர்கள் வந்த திசையை நோக்கி விரைந்து சென்றார். அவர்கள் அருகில் நெருங்கியதும், “நான் வந்துவிட்டேன். உங்களுக்கு அதிகச் சிரமம் வைக்கவில்லை” என்று சொல்லி விலங்கு மாட்டுவதற்குக் கையை நீட்டினார்.

பங்களாவுக்கு விரைந்து சென்ற பவானி, “சித்தப்பா சித்தப்பா!” என்று கூவிக்கொண்டே உள்ளே சென்றாள். பிரணதார்த்தியின் முகத் தோற்றத்தைப் பார்த்ததும், தான் சொல்ல வந்ததைச் சொல்லாமல், “என்ன விசேஷம்?” என்று கேட்டாள்.

பிரணதார்த்தி ஒரு கடிதத்தை நீட்டினார். அது, சேஷாத்ரி உமாகாந்தனுக்கு எழுதிய கடிதம். “தயவு செய்து சாயங்காலம் ஐந்து மணிக்கு முன்னால் இதைத் திறக்க வேண்டாம். சரியாக ஐந்து மணிக்குப் பிரித்துப் பார்க்கவும்” என்று அதன் மேல் உறையில் எழுதியிருந்தது.

பவானி வியப்புடனும் பரபரப்புடனும் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.

‘தம்பி! உனக்கு நான் செய்திருக்கும் அபகாரங்களுக்கெல்லாம் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். கட்டாயம் நான் சொல்கிறபடி நீ கேட்கவேண்டும்’ என்று அக்கடிதம் ஆரம்பமாயிற்று.

உமாகாந்தனுக்குப் பதில் தான் கைதியாகப் போவதாகவும் அவன் தப்புவதற்கு இது ஒன்றுதான் வழியென்றும், அன்றிரவே அவர்கள் பிரணதார்த்தியின் மோட்டாரில் சென்னைக்குக் கிளம்பிச் செல்லவேண்டுமென்றும், மறுநாள் தமக்குப் பதிலாக உமாகாந்தன் கப்பல் ஏறிவிட வேண்டு மென்றும் அதில் கண்டிருந்தது. தமக்கு ஒன்றும் ஆபத்து விளையாதென்றும், பத்து நாளைக்குள் போலீஸாருக்கு அசட்டுப் பட்டம் கட்டிவிட்டுத் தாம் வெளியேறிவிட முடியுமென்றும் எழுதியிருந்தது.

“கப்பலுக்கு இரண்டு டிக்கட் வாங்கியிருக்கிறேன்; இன்னும் யாராவது உன்னோடு போவதாயிருந்தால் போகலாம்” என்று குறிப்பிட்டு, “இந்தக் கடிதம் வேறு யார் கண்ணிலும் படாதபடி நெருப்பில் போட்டுக் கொளுத்தி விடவும்” என்ற வேண்டுகோளுடன் கடிதம் முடிந்தது.

மூன்று பேரும் கலந்து யோசித்து, அந்தக் கடிதத்தில் கண்டபடி செய்வதே உசிதமென்று தீர்மானித்தார்கள். அஸ்தமிக்கும் சமயம் அவர்கள் மோட்டாரில் கிளம்பினார்கள். பிரணதார்த்திதான் வண்டி ஓட்டினார். மறுநாள் கப்பல் புறப்படும் சமயம் அவர்கள் சரியாகச் சென்னைத் துறைமுகம் சேர்ந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *