Kalki Short StoriesKalki TimesStory

Bhavani B.A.B.L Kalki | Kalki Times

அத்தியாயம் 11: அமுதவாக்கு

பிரணதார்த்தி கதையை மேற்கண்ட இடத்தில் முடித்து விட்டார்.

சற்று நேரம் பொறுத்து நான், “அப்புறம் என்ன ஆயிற்று? போலீஸாரின் தவறு எப்போது வெளிப்பட்டது?” என்று கேட்டேன்.

“அது வெளிப்படவெயில்லை.”

“என்ன? அது எப்படி வெளிப்படாதிருக்க முடியும்? ஜெயிலுக்குக் கொண்டு போனதுமே கைரேகை அடையாளங்களிலிருந்து கண்டுபிடித்திருப்பார்களே!”

இந்தக் கேள்வியினால் எனக்குச் சிறையநுபவம் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொண்டேன்.

பிரணதார்த்தி சொன்னார்: “வாஸ்தவந்தான். ஜெயிலுக்குக் கொண்டு போயிருந்தால் உடனே கண்டு பிடித்திருப்பார்கள். ஆனால் சேஷாத்ரி ஜெயிலுக்குப் போகவேயில்லை. நீங்களே உண்மையை ஊகித்திருப்பீர்களென்று நினைத்தேன். ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும்? பத்திரிகையில் எங்கேயோ மூலையில் வந்த செய்தியை எங்கே படித்திருக்கப் போகிறீர்கள்? படித்திருந்தாலும் ஞாபகம் இருக்காது. ஆனால் அந்த வருஷத்தில் பிரமாதமான மழையும் புயலும் நீலகிரியில் அடித்து ரொம்பவும் சேதமான விவரம் உங்களுக்குக் கட்டாயம் ஞாபகமிருக்குமே. நாங்கள் புறப்பட்ட அன்று இரவிலே தான் அப்படி ஊழிகாலத்து மழை போல் பெய்யத் தொடங்கியது. மறுநாள் கூனூரிலிருந்து மேட்டுப் பாளையத்திற்குப் புறப்பட்டுச் சென்ற ரயில், வழியில் பாதையை விட்டு விலகி விழுந்து விட்டது. ரயிலில் போனவர்களில் ஒருவனைத் தவிர மற்றவர்களெல்லாம் உயிர் தப்பினார்கள். ஒரே ஒருவன் தான் மரணம் அடைந்தான். அவன் தப்பியோடிப் பிடிபட்ட கைதி…”

“ஆஹா!” என்று என்னையறியாமல் ஒரு பலமான கூச்சல் போட்டேன். சேஷாத்ரியைப் பார்த்துப் பவானி சொன்ன கொடும் மொழிகள் அப்போது எனக்கு ஞாபகம் வரவே, என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. அவள் சாபம் பலித்துவிட்டது! ஆனால் எப்பேர்ப்பட்ட தப்பெண்ணத்தின் பேரில் அவள் அவரைச் சபித்தாள்? அந்தச் சாபம் இப்படிப் பலித்து விட்டதை அறிந்தால் அவள் உள்ளம் என்ன பாடுபடும்?

சற்றுப் பொறுத்து, “மரணம் தற்செயலாக நேர்ந்ததா? அல்லது தற்கொலையா? எப்படியென்று தீர்மானித்தார்கள்?” என்று கேட்டேன்.

“யாருக்குத் தெரியும்? ரயில் விழுந்த இடத்துக்குப் பக்கத்திலே அதல பாதாளமான கிடுகிடு பள்ளம் ஒன்றிருந்தது. அதில் அவன் விழுந்துவிட்டான். உருத் தெரியாமல் போன அவனது தேகத்தைப் போலீஸார் கண்டெடுத்துத் தகனம் செய்தார்கள். “தப்பியோடிய கைதி கூனூரில் பிடிபட்டுக் கொண்டுவரப்படுகையில் தெய்வாதீனமாக ரயில் விபத்தில் மரணமடைந்தான்” என்று பத்திரிகைகளில் ஒரு சிறு செய்தி வெளியாயிற்று. அத்துடன் கதை முடிந்தது,” என்று கூறிப் பிரணதார்த்தி பெருமூச்சு விட்டார்.

சேஷாத்ரி இறந்த காரணத்தைப் பற்றி ஆசிரியர் பிரணதார்த்தி தம்முடைய அபிப்பிராயம் என்னவென்று சொல்ல மறுத்து விட்டார். என் வரையில், சேஷாத்ரியின் மரணம் தெய்வாதீனமென்று நான் நினைக்கவில்லை. அவர் ஆத்மத் தியாகம் செய்து கொண்டார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் ஒரு விதத்தில் தற்கொலையும் தெய்வாதீனந்தான் அல்லவா?

“இந்த உலகம் பொய், வாழ்வு பொய்” என்று நம் பெரியோர்கள் சொன்னது அமுத வாக்கு என்பதில் சந்தேகமில்லை. உலகத்தைப் பொய்யென்று கொண்டால்தான் ஏதோ ஒரு மாதிரிச் சகித்துக் கொண்டு ஜீவ யாத்திரையை நடத்திக் கொண்டு போக முடியும். இந்த உலகம் நிஜமாக மட்டுமிருந்தால் இவ்வளவு தவறுகளுக்கும் துயரங்களுக்குமிடையில் உயிர் வாழ்வது சாத்தியமா?

இத்துடன்

அமரர் கல்கியின் பவானி, பிஏ பிஎல்

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Bhavani B.A.B.L Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,bhavani ba bl Audiboook,bhavani ba bl,bhavani ba bl Kalki,Kalki bhavani ba bl,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *