Kalki Short StoriesKalki TimesStory

Bhavani B.A.B.L Kalki | Kalki Times

அத்தியாயம் 2: புன்னகையும் புது நிலவும்

ஸ்ரீமதி பவானி, பி.ஏ.,பி.எல். என்றைய தினம் ஹைகோர்ட்டில் அட்வகேட்டாகப் பதிவு செய்யப்பட்டாளோ, அன்றுமுதல் ஹைகோர்ட்டு கட்டிடமே ஒரு புதிய களையுடன் விளங்கிற்று. பிரம்மஹத்தி கூத்தாடிய வேலையற்ற வக்கீல்களின் முகத்திலே கூட ஒரு புதிய தேஜஸ் பிறந்தது. ஊமைக் கோட்டான் போல் இருந்த ஜட்ஜுகள் எல்லாம் கொஞ்சம் கலகலப்பாய்ப் பேச ஆரம்பித்தார்கள். தஸ்தாவேஜிக் கட்டுகளைப் பார்த்துப் பார்த்துப் பூத்துப் போன கோர்ட் குமாஸ்தாக்களின் கண்கள் ஒரு புதிய பிரகாசம் பெற்று அங்குமிங்கும் நோக்கி விழித்தன. அந்தக் கண்கள், குறுக்கே நெடுக்கே எங்கேயாவது ஸ்ரீமதி பவானி போகிறாளா என்றுதான் அப்படித் திருதிருவென்று விழித்தன என்று சொல்ல வேண்டியதில்லை.

இதற்கு முன்னாலும், ஐந்தாறு ஸ்திரீகள் ஹைகோர்ட்டில் அட்வகேட்டுகளாகப் பதிவானதுண்டு. அவர்களால் எல்லாம் இத்தகைய கிளர்ச்சி ஏற்பட்டதில்லை. அவர்கள் தங்களுடைய மேனியின் சௌந்தரியத்தையும், முகவசீகரத்தையும் பரீட்சையென்னும் பலிபீடத்தில் பலி கொடுத்துவிட்டு வந்தார்கள். அவர்களில் சிலரை பார்க்கும்போது, சோளக் கொல்லைகளிலே காக்காய்களைப் பயமுறுத்துவதற்காக வைத்திருப்பார்களே, அந்த உருவங்கள் ஞாபகத்திற்கு வரும். ஆனால், பவானியோ இந்தச் சம்பிரதாயத்துக்கு முற்றும் மாறுபட்டவளாயிருந்தாள். அவள் ஹைகோர்ட் தாழ்வாரத்தில் நடந்து வருவதைப் பார்த்தால், யாரோ, தேவ கன்னிகை தேவேந்திரனுடைய சபைக்குப் போக வேண்டியவள் வழி தவறி இங்கே வந்து விட்டதாகவே தோன்றும். அஸ்தமன சூரியனது பொன்னிறக் கிரணங்களின் நிறம் அவளுடைய மேனி நிறம் தேவலோகச் சிற்பியினால் ஆக்கபட்ட ஸ்வர்ண விக்கிரகம் உயிர் பெற்று நடமாடுகிறதோ என்று ஒரு நிமிஷம் பிரமித்துப் போவார்கள். பவானியைத் திடீரென்று சந்திப்பவர்கள். அவள் தன்னுடைய முத்தான அழகிய பற்கள் சிறிது தோன்றும்படி புன்னகை புரிந்தால், அந்த இருளடைந்த ஹைகோர்ட்டு அறைகளில் பளிச்சென்று நிலவு வீசுவதுபோல் இருக்கும். அவளுடைய கண்களில் கூரிய வாள்கள் ஒளி வீசும்; வயிர நெஞ்சு பெற்ற பெரிய பெரிய ஸீனியர் வக்கில்களின் இருதயங்களைக் கூட அந்த வாள் வீச்சுப் பிளந்துவிடும்.

ஸ்ரீமதி பவானி கோர்ட்டுக்கு வர ஆரம்பித்ததிலிருந்து, பிரபல அட்வகேட்டுகளின் நடை உடை பாவனைகளில் எல்லாம் வித்தியாசம் ஏற்படத் தொடங்கியது. அட்வகேட் நீலமேகமய்யங்கார் தம்முடைய தலைப்பாகையின் சரிகைக் கரையை அரை அங்குலத்திலிருந்து முக்கால் அங்குலமாக மாற்றத் தீர்மானித்து விட்டார். வக்கீல் மதனகோபால சாஸ்திரி இதற்கு முன்னால் அரை மணி நேரம் நிலைக் கண்ணாடியின் முன் நின்று நெற்றியில் கடுகளவு சாந்துப் பொட்டு இட்டுக் கொள்வது வழக்கம். இப்போது அவர் முக்கால் மணி நேரம் செலவழித்து அரையேயரைக்கால் கடுகளவு சாந்துப் பொட்டு வைத்துக் கொண்டு வரத் தொடங்கினார்.

மொத்தத்தில் ஹைகோர்ட் வக்கீல்களில் பாதிப் பேர் பவானியினால் அரைப் பைத்தியமானார்கள்; பாக்கிப் பாதிப் பேரோ முழுப் பைத்தியமாயினர். அவள் கோர்ட்டுக்கு வரும் வரையில் வக்கீல்கள் அநேகர் கோர்ட் தாழ்வாரத்தில் ஏதோ பிரமாதமான காரியம் உள்ளவர்களைப் போல் குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருப்பார்கள். அவள் வந்துவிட்ட பிறகோ, அவள் எந்தக் கோர்ட்டில் ஆஜராகிறாளோ, அங்கே போய்க் கூட்டம் போடுவார்கள்.

இது விஷயமாக ஒருவரையொருவர் அவர்கள் பரிகாசம் செய்து கொள்வதுமுண்டு. “ஸீனியர் வக்கீல் நரசிம்மாச்சாரி ஜுனியர் வக்கீல் வராகாச்சாரியாரைப் பார்த்து, “ஏண்டா, வராகம்! எதற்காகடா இங்கே நிற்கிறாய்?” என்பார். “உங்களுக்காகத்தான் ஸார் நிற்கிறேன்” என்பார் வராகாச்சாரி. “அடே போக்கிரி! எனக்குத் தெரியாதா? இருக்கட்டும், இதைக் கேளு. சாகுந்தலத்தில் காளிதாஸன் சகுந்தலையின் கண்களை வர்ணிக்கும் போது, ‘இளம் மாந்தளிரின் நிறத்தை ஒத்திருந்தது அவளுடைய கண்ணின் நிறம்’ என்கிறான்; இத்தனை நாளாய் எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. பவானியின் கண்களைப் பார்த்த பிறகுதான் புரிந்தது” என்பார் நரசிம்மாச்சாரி.

இப்படியெல்லாம் நான் சொல்லும் போது சென்னையிலுள்ள ஹைகோர்ட்டு வக்கீல்கள் எல்லாருமே ‘விடபுருஷர்கள்’ என்று தோஷாரோபணம் செய்வதாய் யாரும் எண்ணக்கூடாது. உண்மையில் சென்னையில் வக்கீல்களில் முக்கால்வாசிப்பேர் பரம யோக்யர்கள்; பாக்கிப் பேரோ தங்கள் சம்சாரங்களுக்குப் பயந்தவர்கள். அப்படியிருந்தும், அவர்கள் எல்லாரும் ஸ்ரீமதி பவானியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள் என்றால், நமது தற்போதைய சமூக வாழ்க்கையின் நிலைமையில் இது சகஜமாக எதிர்பார்க்கக் கூடியதேயாகும். நம் நாட்டில் ஸ்திரீகளின் வாழ்க்கைக்கும் புருஷர்களுடைய வாழ்க்கைக்கும் ஒரு பெரிய பிளவு வெகு காலமாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது. இந்நிலைமையில் யாராவது ஒரு ஸ்திரீ அந்தப் பிளவைத் தைரியமாகக் கடந்து வந்து புருஷர்களுக்கு மத்தியில் சரிசமானமாக நடந்து கொள்ள ஆரம்பித்தால், புருஷர்கள் பிரமித்துவிடுவது சகஜமேயல்லவா? புருஷர்களின் மத்தியில் ஒரு ஸ்திரீ பேசி விட்டாலே அவர்களுக்கு ஆச்சரியம்; அவள் புத்திசாலித்தனமாகவும் பேசிவிட்டால் மகா ஆச்சரியம்; அப்படிப் புத்திசாலித்தனமாகப் பேசக்கூடிய ஒரு ஸ்திரீ சௌந்தரியவதியாயும் இருந்துவிட்டால் எந்தப் புருஷன் தான் கொஞ்சம் அரைகுறையாகவாவது புத்தியை இழக்காமல் இருக்க முடியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *