Bhavani B.A.B.L Kalki | Kalki Times
அத்தியாயம் 3: சேஷாத்ரியின் வீழ்ச்சி
இந்தப் பிரமையெல்லாம் கொஞ்ச காலந்தான் நீடித்திருந்தது. பவானிக்கும் சேஷாத்ரிக்கும் சிநேகம் முற்றி வருகிறதென்றும் அவர்கள் கலியாணம் செய்து கொள்ளக் கூடுமென்றும் பிரஸ்தாபம் ஏற்பட்டபோது பவானியை பற்றிய வியப்புப் பேச்செல்லாம் வம்புப் பேச்சாக மாறியது; புகழ்ச்சியெல்லாம் இகழ்ச்சியாயிற்று.
பாரிஸ்டர் சேஷாத்ரியின் வாழ்க்கை அத்தகைய வம்புப் பேச்சுக்கு இடங் கொடுக்கக்கூடியதாகவே இருந்தது.
சேஷாத்ரி நாற்பத்தைந்து வயதுக்கு மேலானவர். ஆனாலும் அவர் ‘பிரம்மச்சாரி’. அவர் பிரம்மச்சாரியோ இல்லையோ அவருக்கு மனைவி கிடையாது. மனைவி உண்டோ என்னவோ, சென்னையில் அவருடைய பங்களாவில் அவள் இல்லையென்பது நிச்சயம்.
நாற்பத்தைந்து வயதுக்கு மேலாயிற்று என்று சொன்னேனல்லவா? ஆனால் அவரைப் பார்த்தால் அவ்வளவு தோன்றாது. பத்து வயது குறைவாகத்தான் தோன்றும். ‘அவருக்கு ஸ்திரீ முகம்; அதனால் தான் வயதானது தெரியவில்லை’ என்று சிலர் சொல்லுவார்கள். இது எப்போதாவது அவர் காதில் பட்டதனால் தானோ என்னவோ, சேஷாத்ரி மீசை வளர்க்க ஆரம்பித்தார். ஆனாலும் அவர் முகம் வசீகரமான ஸ்திரீ முகமாய்த்தான் காணப்பட்டது. அதிக இளமைத் தோற்றமே குடிகொண்டிருந்தது.
அவருடைய பிரம்மச்சரியத்தைப் பற்றியும் பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவருடைய வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருப்பதாக அநேகர் நம்பினார்கள். அவருக்கு இளம் வயதிலேயே கலியாணமாகியிருந்ததாகவும், மனைவியைக் கொலை செய்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அயல்நாட்டுக்கு ஓடிப் போய் வெகுநாள் இருந்துவிட்டு வந்ததாகவும் சிலர் சொன்னார்கள். வேறு சிலர் அது சுத்தத் தப்பென்றும், அவருக்கு ஜப்பானில் ஒரு மனைவி இருப்பதாகவும் இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை ஜப்பானுக்கு அவர் போய்ச் சில மாதம் இருந்து விட்டு வருவதாகவும் கூறினார்கள். இன்னும் சிலர் ‘கிடையவே கிடையாது! அவருடைய தர்மபத்தினி இங்கிலாந்தில் தான் இருக்கிறாள். வாரத்துக்கொரு தடவை அவருக்குச் சீமைத் தபால் வருகிறதே, தெரியாதா?’ என்றார்கள்.
இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் அடிக்கடி அவர் கப்பல் பிரயாணம் செய்வதை ஆதாரமாக எடுத்துக் காட்டினார்கள். “இல்லாவிட்டால் பப்ளிக் பிராஸிகியூடர் வேலையை ஒருவன் விடுவானோ, ஸார்! ஒவ்வொருத்தன் அந்த வேலை கிடைக்காதா என்று தபஸ் செய்து கொண்டிருக்கிறான். இந்த மனுஷர் இரண்டு வருஷம் வேலை பார்த்துவிட்டு, ‘எனக்கு வெளிதேசப் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது’ என்று விட்டுவிட்டாரே! சம்சாரம் சீமையிலிருந்து சவுக்கடி கொடுக்கக் கொண்டுதானே வேலையை விட்டார்? இல்லாவிட்டால் விட்டிருக்க முடியுமா?” என்றார்கள்.
இதெல்லாம் சுத்த அபத்தம் என்று நன்றாய்த் தெரிந்திருந்த ஒருவர் இருந்தார். அவர் பாரிஸ்டர் சேஷாத்ரி தான்.
பாரிஸ்டர் சேஷாத்ரி உண்மையிலேயே பிரம்மசாரி. அவர் இதுகாறும் கலியாணம் செய்து கொள்ளாததற்குத் தகுந்த காரணங்கள் இருந்தன.
சேஷாத்ரியின் இருபதாவது வயதில் அவருடைய தந்தை காலமானார். அப்போது தான் பி.ஏ. பாஸ் செய்திருந்த சேஷாத்ரி தம்முடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி என்னவெல்லாமோ கனவு கண்டுகொண்டிருந்தார். அவருடைய தந்தையின் எதிர்பாராத மரணத்தினால் அந்தக் கனவுகள் நிறைவேறுவது அசாத்தியமாயிற்று. இதனால் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டவர், மனத்தை வேறு விஷயங்களில் செலுத்தும் நோக்கத்துடன் வெளிநாட்டுப் பிரயாணம் செய்யப் புறப்பட்டார்.
ஜப்பான், அமெரிக்காவெல்லாம் சுற்றிவிட்டுக் கடைசியில் இங்கிலாந்துக்கு வந்தார். அங்கே பாரிஸ்டர் பரீட்சை கொடுத்துவிட்டு, சென்னைக்குத் திரும்பி வந்து ‘பிராக்டிஸ்’ செய்யத் தொடங்கினார்.
சேஷாத்ரிக்குப் பெற்றோர்கள் இல்லாதபடியால் கலியாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவோர் யாருமில்லை. சிநேகிதர்கள் யாராவது அந்தப் பேச்சை எடுத்தால் வாலிழந்த நரியின் கதையைச் சொல்லிப் பரிகாசம் செய்வார். கலியாணம் செய்து கொண்ட தம்முடைய சிநேகிதர்கள் படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது “மனிதர்கள் ஏன் இவ்வளவு மூடர்களாயிருக்கிறார்கள்!” என்று ஆச்சரியப்படுவார். “இப்படி யாராவது வலிந்து சென்று நுகத்தடியில் கழுத்தைக் கொடுப்பார்களா? ஒரு ஸ்திரீயைக் கட்டிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் எதற்காக மாரடிக்க வேண்டும்?” என்பார்.
சேஷாத்ரி நிறையப் பணம் சம்பாதித்தார்; நிறையச் செலவும் செய்தார். சம்சார பந்தங்கள் எதுவுமில்லாமல் கவலையின்றிக் காலம் கழித்தார். வாழ்க்கையில் அவருக்கு மிகவும் சந்தோஷம் அளித்தது பிரயாணந்தான். குறைந்து இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வெளிநாட்டு யாத்திரை செய்யாமல் இருக்கமாட்டார். இப்படி இருபது வருஷம் சுதந்திரமாகவும் சுகமாகவும் காலம் கழித்த பிறகு, அவருடைய வாழ்க்கைத் தத்துவத்தை அடியோடு மாற்றும்படியான இந்தச் சம்பவம் நேரிட்டது.
அவருடைய சிநேகிதர் புரொபஸர் பிரணதார்த்தி ஒரு நாள் பவானியை அழைத்துக் கொண்டு சேஷாத்ரியின் வீட்டுக்கு வந்தார். அவளை அறிமுகப்படுத்தி வைத்து, அவள் பி.எல். பரீட்சை கொடுத்திருக்கிறாளென்றும், சேஷாத்ரியின் ஆபீஸில் ஜுனியராக வைத்துக் கொண்டு வேலை பழக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இவ்வளவையும் கேட்ட பின்னர், சேஷாத்ரி தலை நிமிர்ந்து பவானியை பார்த்தார். அந்த க்ஷணத்திலேயே அவளுடைய சௌந்தரியமாகிற மதுவில் தலை குப்புற விழுந்துவிட்டார். இத்தனை நாளும் எவ்வளவுக்கெவ்வளவு வைராக்கிய புருஷராக இருந்தாரோ, அவ்வளவுக்கு இப்போது அவருடைய வீழ்ச்சியின் வேகமும் அதிகமாயிருந்தது.
பவானி, சேஷாத்ரியிடம் ஜுனியராக அமர்ந்தாள். நாளாக ஆக, சேஷாத்ரியின் பிரேமையும் வளர்ந்து வந்தது. பவானி இல்லாத உலகம் பாலைவனமாகவும் அவள் இல்லாத வாழ்க்கை வெறும் சூனியமாகவும் அவருக்குத் தோன்றத் தொடங்கியது. என்றாவது ஒரு நாள் அவள் நேரங் கழித்து வந்தால் அவருடைய மனம் அமைதியை இழந்து தவிக்கும். அவள், வேறு இளம் வக்கீல் யாருடனாவது பேசக் கண்டால் அவருக்கு எரிச்சல் உண்டாகும்.
சமூக விஷயங்களில் அவருடைய கொள்கைகள் வெகு விரைவாகப் பிற்போக்கு அடைந்து வந்தன. ஸ்திரீகளும் புருஷர்களும் சமமாகப் பழக வேண்டுமென்னும் கொள்கைகளெல்லாம் சுத்த அபத்தமென்றும், அதிலும் பவானியைப் போன்ற பெண்கள் புருஷர்கள் மத்தியில் பழகுவது ரொம்ப அபாயகரமென்றும் அவர் கருதினார்.
இப்படி இரண்டு வருஷங்கள் சென்றன. சேஷாத்ரிக்குத் தமது இருதயத்தின் நிலைமையைப் பற்றி இப்போது எவ்விதச் சந்தேகமும் இருக்கவில்லை. பவானி இல்லாமல் ஒரு கணமேனும் தாம் உயிர் வாழ்வது முடியாத காரியம் என்று அவர் நிச்சயம் செய்து கொண்டார். முடிவாக, தம்மைக் கலியாணம் செய்து கொள்ளும்படி அவளைக் கூடிய சீக்கிரம் கேட்பது என்று தீர்மானித்தார்.
ஆனாலும் அந்தக் ‘கூடிய சீக்கிரம்’ சீக்கிரத்தில் வருவதாக இல்லை. நாட்கள் சென்று கொண்டே யிருந்தன. பவானியை இது விஷயமாகக் கேட்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் இன்னதென்று சொல்ல முடியாத மானஸீகத் தடையொன்று குறுக்கிட்டுக் கொண்டேயிருந்தது. ‘நாளைக்குக் கேட்கலாம்’ ‘இன்னொரு நாள் சொல்லலாம்’ என்பதாகத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார் சேஷாத்ரி.
கடைசியாக, இந்த வருஷம் கோடைக்காலத்தில் கூனூருக்குப் போகும்போது, புரொபஸர் பிரணதார்த்தியின் முன்னிலையிலேயே இது விஷயமாகப் பேசித் தீர்மானித்து விடுவதென்று அவர் உறுதி கொண்டார். கூனூரிலேயே கலியாணத்தை நடத்திவிட்டு, உடனே பவானியுடன் ஐரோப்பாவுக்குச் சென்று வருவதென்றும் தீர்மானித்தார். இதற்காக, பாஸ்போர்ட், கப்பல் டிக்கெட் எல்லாங்கூட வாங்கித் தயார் செய்துவிட்டார். தாம் பவானியைக் கேட்காமல் இருப்பது ஒன்றுதான் தடையேதவிர, தமது மனோரதம் நிறைவேறுவதற்கு வேறு இடையூறு எதுவும் ஏற்படக் கூடுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை.