Bhavani B.A.B.L Kalki | Kalki Times
அத்தியாயம் 4: பிரணதார்த்தியின் சபதம்
பவானியின் தகப்பனார் தாசில்தார் உத்தியோகம் பார்த்தவர். ஆரம்ப நாட்களில் அவர், வைதிக ஆசாரத்தில் அதிகப் பற்று உள்ளவராயிருந்தார். ஏதாவது புறம்போக்கு ஆக்கிரமிப்புச் சம்பந்தமாய் ஒரு பட்டாதார் பத்து ரூபாய் நோட்டாகக் கொண்டு வந்து கொடுத்தால் அதை அவர் வாங்கிக் கொள்ள மாட்டார்; போ போ என்று திருப்பி அடிப்பார். அந்த மிராசுதார் போய் இன்னும் ஐந்து ரூபாய் போட்டு ஒரு தங்கப் பவுனாக வாங்கிக் கொண்டு வந்தால் தான், “ஸ்வர்ணம் பவித்திரமானது; அதற்குத் தோஷமில்லை” என்று சொல்லி வாங்கிக் கொள்வார்.
யாராவது ஒரு கிராம முன்சீப் அவருக்கு ஒரு கூடை ஒட்டு மாம்பழம் அனுப்பி, அதை அவருடைய சேவகன் அப்படியே வாங்கி வைத்துவிடும் பட்சத்தில், அவனைத் திட்டு திட்டு என்று திட்டுவார். “எந்தப் பறையன் தொட்டுப் பறித்ததோ அதை அப்படியே வாங்கி வைக்கிறாயேடா? கிணற்று ஜலத்தைவிட்டு அலம்பி எடுத்து வையடா!” என்பார்.
இவ்வளவு ஆசார சீலமுள்ளவர் தம்முடைய மூத்த பெண்ணுக்கு சாஸ்திர ரீதியாகப் பன்னிரண்டு வயதிலேயே கலியாணம் செய்து வைக்க விரும்பியதில் ஆச்சரியமில்லையல்லவா? அதிலும் அந்தச் சமயம் அவர் தஞ்சாவூர் ஜில்லாவில் தாசில்தாராய் இருந்தபடியால் கடப்பை முதலிய காட்டுப் பிரதேசங்களுக்கு மாற்றலாவதற்கு முன் கலியாணம் பண்ணிவிடத் தீர்மானித்தார். தஞ்சாவூர் ஜில்லாவில் கலியாணம் என்றால் வைதிகர்கள் ஏராளமாய் வருவார்கள்; தாராளமாய் தட்சிணை கொடுத்துச் சாஸ்திரோக்தமாய்க் கலியாணம் செய்யலாம். அதோடு, தட்சிணைச் செலவும் தம்முடைய சொந்தப் பொறுப்பில்லாமல் போய்விடும்! யாராவது ஒரு பெரிய மனுஷன் அந்தச் செலவை ஒப்புக் கொள்வான். உண்மையில் கலியாணச் செலவு எதுவுமே அவர் கைப் பொறுப்பாகாது. கடப்பை ஜில்லாவில் காலணா யார் கொடுக்கிறார்கள்?
இவ்வாறு தீர்மானித்து, அவர் பவானியின் தமக்கைக்குப் பன்னிரண்டு வயதிலேயே கலியாணம் பண்ணினார்.
ஆனால் சாஸ்திரத்தின் தலையெழுத்து சரியாயில்லை! அவருக்குச் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையில்லாமல் போவதற்கு அந்தக் கலியாணமே காரணமாயிற்று. பவானியின் தமக்கை புக்ககத்தில் படாதபாடு பட்டாள். பதினேழு வயதுக்குள் இரண்டு பிரசவமும், மூன்று கர்ப்பச் சிதைவும் ஏற்பட்டு, இதனாலெல்லாம் நாளுக்கு நாள் பலவீனமடைந்து கடைசியில் இறந்தே போனாள்.
அந்தப் பெண்ணின் அகால மரணத்தினால் பவானியின் தகப்பனாரின் வாழ்க்கை எல்லாவிதத்திலும் அடியோடு மாறி விட்டது. சாஸ்திரத்தில் நம்பிக்கை போனதுபோல், பணங் காசிலும் அவருக்கு நம்பிக்கை போயிற்று. அதற்குப் பிறகு, புத்தம் புதிய பவுனைக் காவேரி ஜலத்தைவிட்டு அலம்பி யாராவது கொண்டு வந்தால் கூட அவர் வாங்கிக் கொள்வதில்லை. “அடே! எனக்கு லஞ்சம் கொடுக்க வருகிறாயாடா! உன்னை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்” என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிட்டார்.
இத்தகைய மூர்க்க குணம் உத்தியோக விஷயத்துடன் நில்லாமல் சமூக ஆசார விஷயங்களிலும் வெளிப்பட்டது. சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் அவர் அடியோடு நிராகரிக்கலானார். முன்னர் எவ்வளவுக்கெவ்வளவு வைதிகப் பற்றுள்ளவராயிருந்தாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு இப்போது நவநாகரிகப் பற்று உடையவரானார். அவருடைய இரண்டாவது பெண் பவானியின் தலையிலே அதன் பலன் விடிந்தது. அவளை அவர் இளம் வயதில் விவாகம் செய்து கொடுப்பதில்லையென்றும், இங்கிலீஷ் படிக்க வைப்பதென்றும் தீர்மானித்தார். இந்தச் சாஸ்திர விரோதமான காரியம் தாம் தலைசாய்வதுடன் நின்று போவதுகூட அவருக்கு விருப்பமில்லை. அவருக்கு அந்திய காலம் நெருங்கியிருந்தபோது, புரொபஸர் பிரணதார்த்தியை அருகில் அழைத்து, “தம்பி! பவானிக்கு உன்னைத்தான் கார்டியனாக நியமித்திருக்கிறேன். எனக்கு நீ ஒரு சபதம் செய்து கொடுக்க வேண்டும். அவளுடைய படிப்பை நிறுத்தக் கூடாது. கலியாணம் என்ற பேச்சையே எடுக்கக்கூடாது. அவளுக்குத் தக்க வயது ஆன பிறகு அவளாக இஷ்டப்பட்டு யாரையாவது கலியாணம் செய்து கொண்டால் கொள்ளட்டும்” என்றார். பிரணதார்த்தி அவருக்கு அவ்வாறே பிரதிக்ஞை செய்து கொடுத்தார்.
மரணத்தறுவாயில் தம் தமையனுடைய விருப்பத்தை மறுக்க மனோதிடமின்றிப் பிரணதார்த்தி பிரதிக்ஞை செய்து கொடுத்தாரே தவிர, அவருடைய மனம் அது விஷயத்தில் நிம்மதி அடையவில்லை. நாளாக ஆக, அவருடைய கவலை அதிகமாயிற்று. பவானியைத் தம் தலையில் கட்டிவிட்டுத் தமையனார் போய்விட்டாரே என்ற கவலையன்று அது; பிரணதார்த்திக்கு புதல்வர்கள் பலர் உண்டு; ஆனால் பெண் கிடையாது. ஆகவே, பவானியிடம் தம் சொந்தப் பெண்ணுக்கு மேலாகவே அதிகப் பிரியம் வைத்திருந்தார். அவளுடைய பிற்கால வாழ்க்கை சந்தோஷமாயிருக்க வேண்டுமே என்ற கவலைதான் அவரை வாட்டிற்று.
படித்துப் பட்டம் பெற்றுச் சுதந்திர வாழ்க்கை நடத்தத் தொடங்கிய பெண்கள் சிலரைப் பற்றி அவருக்குத் தெரியும். பரீட்சை முடியும் வரையில் அவர்களுடைய கவனமெல்லாம் படிப்பிலேயே இருக்கிறது. ஆண்பிள்ளைகளை விட அதிக ஊக்கத்துடனும் ரோஸத்துடனும் படிக்கிறார்கள். முதலில் கொஞ்ச காலம் உத்தியோகமும் உற்சாகமாய்த்தான் பார்க்கிறார்கள். பிறகு அவர்களுக்கு அதிலெல்லாம் ரஸம் குறைந்து, கலியாணம் செய்து கொள்ளலாமென்று தோன்றும்போது, அது சாத்தியமில்லை யென்பதைக் காண்கிறார்கள். அவர்களுக்குத் தக்க பிராயமுடைய புருஷர்கள் எல்லாரும் ஏற்கனவே கலியாணமானவர்களாயிருக்கின்றனர். அப்படி யாராவது தப்பித் தவறி இருந்தால், அவர்களுக்கு இந்தப் பெண்களை மணம் செய்து கொள்ளத் தக்க படிப்போ, அந்தஸ்தோ, வேறு யோக்கியதையோ இருப்பதில்லை. எனவே, அத்தகைய பெண்களின் வாழ்க்கை பெரும்பாலும் துக்ககரமாய் முடிகிறது.
இதையெல்லாம் அறிந்துதான் ஆசிரியர் பிரணதார்த்தி பெரிதும் கவலைக்குள்ளாகியிருந்தார். பவானி பி.எல். பாஸ் செய்ததும், இனி நாள் கடத்தினால் அவளுக்குக் கலியாணமே ஆகாமல் போய்விடலாமென்று அவர் பயந்தார். இப்போது கூட அவளுக்குத் தக்க கணவனாகக் கூடியவர் ரொம்பப் பேரில்லை. பிரணதார்த்திக்குத் தெரிந்தவரையில் பாரிஸ்டர் சேஷாத்ரி ஒருவர்தான் அத்தகைய யோக்கியதையுடையவராயிருந்தார். எனவே, பவானியை சேஷாத்ரியிடம் ஜுனியராக வேலை செய்ய அமர்த்தியபோது, பிரணதார்த்தியின் நோக்கம் என்னவாயிருக்கக் கூடுமென்று நாம் எளிதில் ஊகிக்கலாம் அல்லவா?
ஆரம்பத்தில், ஸ்ரீமான் பிரணதார்த்தி தம்முடைய நோக்கம் விரைவில் நிறைவேறிவிடும் என்பதற்கு அறிகுறிகளைக் கண்டு சந்தோஷமடைந்தார். பவானி பாரிஸ்டர் சேஷாத்ரியின் உயர்குணங்களைப் புகழ்ந்து பேசப் பேச, அவருடைய நம்பிக்கை உறுதிப்பட்டு வந்தது. ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் சீக்கிரமாகக் கலியாணப் பிரஸ்தாபம் ஏற்படவில்லை. வருஷம் இரண்டு சென்ற போது அவருடைய கவலை முன்போல் அதிகமாயிற்று. “சுத்த அசடுகளாயிருக்கிறார்களே! இதில் நாம் தலையிட்டுத்தான் காரியத்தை ஒப்பேற்ற வேண்டும்போல் இருக்கிறதே!” என்று கருதலானார்.
இத்தகைய நிலைமையிலேதான், சேஷாத்ரி தாமும் இவ்வருஷம் கோடைக்குக் கூனூர் வர உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால்தான் கொண்டது என்று தீர்மானித்த புரொபஸர், தம்முடைய பங்களாவிலேயே அவர் வந்து இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார். இதை முன்னிட்டே வழக்கமாகக் கூனூருக்கு வரும் தமது குடும்பத்தினரையெல்லாம் அவர் பங்களூருக்குப் போகச் சொல்லிவிட்டு, பவானியை மட்டும் கூனூருக்கு வரும்படி ஏற்பாடு செய்திருந்தார். “இந்த வருஷம் மட்டும் இந்தக் கலியாணத்தை நான் பண்ணிவைக்காவிட்டால் என் பெயர் பிரணதார்த்தி அல்ல” என்று அவர் தமக்குள் சபதம் செய்து கொண்டார்.