Bhavani B.A.B.L Kalki | Kalki Times
அத்தியாயம் 5: பவானியின் கலவரம்
“உலகத்திலேயே நீலகிரியைப் போன்ற சுகமான இடம் கிடையாது; நானும் எவ்வளவோ நாடுகளில் எத்தனையோ இடங்கள் பார்த்திருக்கிறேன்” என்றார் சேஷாத்ரி.
“நீலகிரியிலும் கூனூருக்கு அப்புறந்தான் மற்ற இடங்கள் எல்லாம்” என்றார் புரொபஸர்.
“கூனூரிலும் எங்கள் சித்தப்பாவின் பங்களாவைப் போன்ற சுகமான இடம் வேறில்லை; ஸ்வர்க்கத்தில் கூட இராது” என்றாள் பவானி.
அந்த மூன்று பேரும் இப்படிச் சொன்ன வார்த்தைகளில் அவர்களுடைய அப்போதைய மனநிலை பிரதிபளித்தது. தங்களுடைய வாழ்க்கையில் இதற்கு முன் எப்போதும் இவ்வளவு சந்தோஷமாயிருந்ததில்லையென்று அவர்கள் ஒவ்வொருவரும் எண்ணினார்கள்.
அவர்கள் மூவரும் அங்கு வந்து ஒன்றரை மாதத்துக்கு மேலாகிவிட்டது. மலைப் பிரதேசத்தில் சுற்றி அலைவதிலும், பேசுவதிலும், படிப்பதிலும், சூடான தேத் தண்ணீர் அருந்துவதிலுமாகப் பொழுது சென்று வந்தது.
ஆயினும் சேஷாத்ரி தம்முடைய மனோரதத்தை வெளியிடுவதற்கு இன்னும் தைரியம் பெறவில்லை. நாளைக்கு, நாளைக்கு என்று தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தார். கடைசியாக, இன்னும் இரண்டு வாரந்தான் கூனூர் வாசம் பாக்கியிருந்தபோது, இனிமேல் தாமதிப்பதில் பிரயோஜனமில்லை யென்று தீர்மானித்து முதலில் பிரணதார்த்தியிடம் கலந்து கொள்ள எண்ணினார்.
“உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டுமென்றிருக்கிறேன்…” என்று சேஷாத்ரி ஆரம்பித்தபோது, “இன்றைக்கு மட்டும் நீங்கள் அந்த முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசாவிட்டால் நானே ஆரம்பித்துவிடுவதென்று இருந்தேன்” என்றார் பிரணதார்த்தி.
அப்போது மாலை நாலு மணி. தினசரி வழக்கம் போல் பவானி, உயர்ந்த காஷ்மீர் கம்பளிச் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு, வெளியே உலாவச் செல்வதற்குத் தயாராக வந்தாள்.
“ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்? வெளியில் வரவில்லையா, என்ன?” என்று கேட்டாள்.
“ஆமாம்! நாங்கள் இன்றைக்கு வரவில்லை. ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறோம்.”
“ரொம்ப முக்கியமான விஷயந்தான். இராத்திரிக்குச் சமையல் திட்டம் போடப் போகிறீர்களாக்கும்; வாருங்கள் சித்தப்பா; போகலாம்.”
“இல்லை, அம்மா! உண்மையாகவே முக்கியமான விஷயம்; ரொம்ப அழகான விஷயங்கூட” என்று சொல்லி, பிறகு மெதுவான குரலில், “அது, மேலே காஷ்மீர் கம்பளிச் சட்டை போட்டுக் கொண்டு மலைப் பிரதேசத்தில் உலாவச் செல்லும்” என்றார். இப்படிக் கூறிப் புன்னகையுடன் சேஷாத்ரியைப் பார்த்தார்.
பவானி, பங்களாவின் முகப்பில் கொழுகொழுவென்று வளர்ந்திருந்த ரோஜாச் செடியிலிருந்து அப்போதுதான் இதழ் விரியத் தொடங்கியிருந்த ஒரு ரோஜா மொட்டைப் பறித்துத் தலையில் செருகிக் கொண்டாள். பிறகு, அவர்களைக் கடைக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து, “மலைவாசத்திற்கு வந்தால் இந்த மாதிரி இரண்டு கிழங்களைக் கூட்டிக் கொண்டு தான் வரவேணும்” என்று மெதுவான குரலில் கூறிவிட்டு ஒயிலாக நடந்து சென்றாள்.
அவள் கூறியது அவர்களுடைய காதில் அரைகுறையாய் விழுந்தது. பிரணதார்த்தி அப்போது பவானி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாராதலால், சேஷாத்ரியின் முகத்தைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அந்த முகத்தில் ஒரு கணம் தோன்றி மறைந்த வேதனையைக் கண்டு பயந்தே போயிருப்பார்.
சேஷாத்ரியின் மனச் சோர்வும் தயக்கமும் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாயிருந்தன. உண்மையில், அவர் இந்தச் சமயம் தம்முடைய சொந்தக் ‘கேஸை’ எடுத்துச் சொல்வதில் பட்ட சிரமம், வேறு எந்தக் கேஸ் விஷயத்திலும் பட்டதில்லை. பிரணதார்த்தி மட்டும் ரொம்பவும் குறுக்குக் கேள்விகள் போட்டிராவிட்டால் அன்றைய தினமும் அவருடைய கேஸ் தள்ளிப் போடப்பட்டிருக்கலாம். எப்படியோ அவர் கடைசியாக மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, பவானியைக் கலியாணம் செய்து கொள்ளத் தமக்கு விருப்பமென்றும், அதைப் பற்றிப் பிரணதார்த்தியின் அபிப்பிராயம் என்னவென்றும் கேட்டுவிட்டார்! அதற்குப் பிரணதார்த்தி அதைவிடத் தமக்குச் சந்தோஷம் அளிக்கக் கூடியது உலகத்திலே வேறொன்றுமிராது என்று பதில் சொன்னார். பவானிக்கு அது விருப்பமாயிருக்குமா என்று சேஷாத்ரி கேட்டதற்கு, “நல்ல கேள்வி கேட்டீர்கள்! உங்களை விட நல்ல கணவன் அவளுக்கு எங்கே கிடைக்கப் போகிறான்? பூர்வ ஜன்ம புண்ணியம் என்று எண்ணி அவள் சந்தோஷப்பட வேண்டாமா?” என்றார் பிரணதார்த்தி.
அப்புறம் அவர்கள் மேல் நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பேச ஆரம்பித்துச் சுமார் ஒரு மணி நேரம் இருக்கும். திடீரென்று, “சித்தப்பா! சித்தப்பா! இங்கே உடனே வாருங்கள்!” என்று பவானியின் குரல் கேட்டது. அந்தக் குரலில் தொனித்த கலவரமும், இரக்கமும் அவர்களை மயிர்க் கூச்செறியச் செய்தன. பவானிக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டது என்று எண்ணி அவர்கள் பதறிப் போய் விரைந்து வாசலில் ஓடி வந்தார்கள். தவறி விழுந்து விட்டாளோ அல்லது ஏதாவது காட்டு மிருகம் வந்து விட்டதோ என்று ஒரு கணத்தில் நூறு எண்ணம் எண்ணினார்கள். பங்களா வாசற் புறத்தின் முகப்பில் நின்று குரல் வந்த திசையை நோக்கிக் கீழே பார்த்தார்கள். கிழே பங்களாவுக்கு வரும் பாதையில் பவானி நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் அவர்களுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.
பவானி அவர்களைப் பார்த்ததும், “சீக்கிரம் வாருங்கள்! என்று சொல்லிக் கையாலும் சமிக்ஞை செய்தாள். மலைப்பாதையில் அவர்கள் விரைந்து இறங்கிச் சென்றார்கள்.
சிரிப்பும் நெருப்பும்
பவானி அன்று வெகு குதூகலத்துடனே வெளியே கிளம்பினாள். பிரணதார்த்தியும் சேஷாத்ரியும் வரவில்லை யாதலால், தான் இன்று வழக்கத்தைவிட அதிக தூரம் நடந்துவிட்டு வரலாமென அவள் எண்ணினாள். மலைப் பிரதேசங்களுக்குச் சென்றிருப்பவர்களுக்கு மலைப் பாதைகளில் நடப்பதன் சுகமும் கஷ்டமும் தெரிந்திருக்கும். அநேகமாய் இரு புறமும் புதர்கள் அடர்ந்த ஒற்றையடிப் பாதைகளிலேயே நடக்க வேண்டும். அந்தப் பாதைகளும் ஓயாமல் ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருக்கும். சம தரை என்பது அநேகமாய் கிடையாது. உஷ்ணப் பிரதேசங்களில் என்றால் அம்மாதிரி ஏறி இறங்கும் பாதைகளில் ஐந்து நிமிஷம் நடந்தாலும் களைத்துப் போய் விடுவோம். ஆனால் குளிர்ந்த மலைப் பிரதேசங்களில் எவ்வளவு நேரம் நடந்தாலும் சிரமம் தோன்றுவதில்லை.
பவானி சுமார் பத்து நிமிஷம் நடந்திருப்பாள். பக்கத்திலேயே எங்கேயோ இருந்து, “ஓ தெய்வமே!” என்று ஒரு துயரம் நிறைந்த தீனமான குரல் கேட்டது போல் இருந்தது. பவானியின் இருதயம் ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து விட்டது. உடம்பெல்லாம் வியர்த்தது. அங்கேயே நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒன்றையும் காணவில்லை. உண்மையில், அங்கே ஒன்றையுங் காணவும் முடியாது. பாதையின் இருபுறமும் அடர்த்தியான புதர்கள் மண்டியிருந்தன. எங்கே என்னத்தைப் பார்க்கிறது? தான் அந்தக் குரலை உண்மையில் கேட்கவில்லை. ஏதோ சித்தப்பிரமை என்ற முடிவுக்கு வந்தாள். அந்தப் பிரமையைப் போக்கிக் கொள்வதற்காகத் தலையை விரைவாக நாலு தடவை குலுக்கிவிட்டு மேலே நடக்கலானாள்.
ஆனாலும் அவளுடைய குதூகலம் போய்விட்டது. என்னவோ சொல்ல முடியாத பாரம் ஒன்று அவளுடைய இருதயத்தை அமுக்குவது போல் இருந்தது. ஏதேதோ பழைய ஞாபகங்கள், சோகத்துடன் கலந்து, தெளிவில்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தன. இத்தனை நாளும் தோன்றாத எண்னங்களெல்லாம் தோன்றின. “இந்த வாழ்க்கையின் பொருள்தான் என்ன? எதற்காக பிறக்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்?” என்று இப்படியெல்லாம் சிந்தனை சென்றது.
ரொம்ப நேரம் சுற்ற வேண்டும் என்ற நினைப்புடன் கிளம்பிய பவானி, வழக்கத்தை விட முன்னதாக வீடு திரும்பலானாள். திரும்பி வருகையில், மேற் சொன்ன குரல் கேட்ட இடத்தில் சற்று நின்று கவனித்தாள். ஒன்றும் தெரியவில்லை. அந்த இடத்தைத் தாண்டி வந்தாள். கிட்டத்தட்டப் பங்களாவுக்குச் சமீபம் வந்ததும் அங்கே கிடந்த ஒரு பாறையின் மேல் உட்கார்ந்தாள். அங்கிருந்து அண்ணாந்து பார்த்தால், அவர்களுடைய பங்களாவின் முகப்பும், அதன் முன் வாசல் பூந்தோட்டமும் தெரிந்தன.
பவானிக்குச் சங்கீத ஞானமும் சங்கீதத்தில் அபிமானமும் உண்டு. பாறையின் மேல் உட்கார்ந்தவள், ஊமைக் குரலில் பாடத் தொடங்கினாள். “சித்தமிரங்கவில்லையோ?” என்ற பாட்டு அவளையறியாமல் வந்தது. “தீவினையின் பயனோ, தெய்வக் குற்றமோ இது?” என்ற அடியைப் பாடியபோது, என்றுமில்லாதபடி அவளுடைய இருதயம் உருகிற்று. அதையே பலமுறை திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டிருந்தாள்.
ஆ! அது என்ன சப்தம்! சிரிப்பா அது? ஐயா! சிரிப்பிலே அவ்வளவு துயரமும் இருக்க முடியுமா? – பவானி தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தாள். சத்தம் வந்த திசையை நோக்கினாள். அவளுக்குப் பத்து அடி தூரத்தில் புதர்களுக்கு மத்தியில் கொஞ்சம் இடைவெளியிருந்தது. அங்கிருந்த பாறையில் ஒரு மனிதன் உட்கார்ந்திருந்தான். பவானி அந்தப் பக்கம் திரும்பியதும் அவளை அவன் ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார்வை அவளுடைய நெஞ்சைப் பிளந்தது.
“ஆமாம் அம்மா! நீ கேட்டாயே, ஒரு கேள்வி. தீவினையின் பயனா தெய்வ குற்றமா என்று, அதைத் தான் நானும் மூன்று வருஷமாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பதில் சொல்பவரைத்தான் காணோம்” என்றான்.
அவன் வாலிபப் பிராயம் உடையவன். வயது சுமார் இருபத்தைந்து இருக்கும். நீலகிரித் தோடர்களைப் போல் ஒரு பெரிய துப்பட்டியைப் போர்த்திக் கொண்டிருந்தான். ரொம்பவும் சோர்ந்து களைத்துப் போய்க் காணப்பட்டான். அவன் க்ஷவரம் செய்து கொண்டு பத்துப் பதினைந்து தினங்கள் ஆகியிருக்க வேண்டும். ஆனாலும் அவன் முகத்தில் ஒரு வசீகரம். அவன் கண்கள் பிரகாசம் பொருந்தி இருந்தன. அவன் முகத்தின் பளபளப்பைப் பார்த்த பவானி, “ஆகா! என்ன தேஜஸ்!” என்று எண்ணமிட்டாள். ஒரு வேளை பக்தர்களுடைய சரிதங்களில் வருவது போல், பகவான் தான் இந்த உருவத்தில் வந்துவிட்டாரோ என்று கூட ஒரு கணம் நினைத்தாள். அந்த முக தேஜஸ் சுரத்தின் வேகத்தினால் ஏற்பட்டது என்பதை அச்சமயம் அவள் அறியவில்லை.
“உன்னை எப்போதோ நான் பார்த்திருக்கிறேன். இல்லையா?” என்று அவன் கேட்டான்.
பவானிக்கும் அவனை எங்கேயோ எப்போதோ பார்த்தது போன்ற ஞாபகம் இருந்தது. ஆனால் எங்கே எந்தச் சந்தர்ப்பத்தில் என்று நினைவுக்கு வரவில்லை.
“நீங்கள் ரொம்பக் களைத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது” என்றாள் பவானி.
“ஆமாம்; காலையிலிருந்து சாப்பிடாமல் மலை ஏறினால் களைப்பாயிராதா? பசிகூட இல்லை; தாகந்தான் நாக்கை உலர்த்துகிறது.”
“இதோ எங்கள் பங்களா ரொம்ப சமீபத்தில் தான் இருக்கிறது. வருகிறீர்களா?”
அந்த வாலிபன் எழுந்திருக்கத் தயங்கினான். அதற்குக் காரணம், அவனுடைய பலவீனம் என்பதை அறியாத பவானி “ஏன் தயக்கம்? என்னைப் பார்த்தால் தாகத்துக்குத் தண்ணீர் கொடாதவள் என்று தோன்றுகிறதா?” என்றாள்.
அதைக் கேட்டதும் அந்த வாலிபன் மெதுவாகத் தள்ளாடிக் கொண்டு எழுந்திருந்தான். ஓர் அடி எடுத்து வைக்க முயன்றான்; திடீரென்று கீழே விழுந்தான்.
அப்போது பவானி பதறிக் கூவியதைக் கேட்டுத்தான், பிரணதார்த்தியும் சேஷாத்ரியும் ஓடி வந்தார்கள்.
பவானி இருந்த இடத்துக்கு அவர்கள் வந்ததும் சற்றும் எதிர்பாராத காட்சி ஒன்றைக் கண்டார்கள். பாறையின் மேல் ஒரு வாலிபன் ஸ்மரணையற்றுக் கிடந்தான். அவனுடைய தலையின் அடியில், பவானியின் கம்பளிச் சட்டை மடித்து வைக்கப்பட்டிருந்தது. பவானி தன்னுடைய புடவையின் தலைப்பினால் அவன் முகத்தின் மேல் விசிறிக் கொண்டிருந்தாள்.
பிரணதார்த்தி அவனுடைய மார்பையும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தார். “உயிர் இருக்கிறது; ஆனால் 105 டிகிரிக்கு குறையாத சுரம்” என்றார். பவானி சுருக்கமாக அவனைத் தான் சந்தித்த விதத்தைச் சொன்னாள்.
“சரிதான்! விஷயம் என்னவென்று அப்புறம் யோசித்துக் கொள்ளலாம். இப்போது இவனைப் பங்களாவுக்குத் தூக்கிக் கொண்டு போவோம்” என்றார் பிரணதார்த்தி. இப்படிச் சொல்லி அவர் அவனுடைய தலைப்புறத்தைப் பிடித்துத் தூக்கினார். சேஷாத்ரி கால்புறத்தண்டை சென்று, கால்களின் கீழாகக் கையைக் கொடுத்தார். கொடுத்தவர், நெருப்பைத் தொட்டவர் போல், சட்டென்று கையை எடுத்தார். அதனால் அந்த மனிதனின் கால் சடக்கென்று பாறையில் விழவும், ‘டங்’ என்று இரும்பின் சப்தம் கேட்டது. வேஷ்டி சிறிது விலக, அவன் காலில் இருந்த இரும்புக் காப்பு தெரிய வந்தது. ஏககாலத்தில் மூன்று பேருடைய கண்களும் அந்த இரும்புக் காப்பின் மேல் சென்றன.
“அது என்ன?” என்று கலவரத்துடன் கேட்டார் பிரணதார்த்தி.
சேஷாத்ரி வியப்பும் வேதனையும் பொருந்திய குரலில் “இவன் கைதி. கைதிகளுக்குத் தான் காலில் இந்த மாதிரி இரும்புக் காப்பு இருக்கும். கோயமுத்தூர் சிறையிலிருந்து சமீபத்தில் தப்பியோடிய கைதிகளில் இவன் ஒருவனாயிருக்க வேண்டும்” என்றார்.
சில நிமிஷ நேரம் அவ்விடத்தில் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு, பிரணதார்த்தி பவானியின் முகத்தை நோக்கினார். அவளுடைய முகத்தில் அவர் என்ன கண்டாரோ தெரியாது.
“எது எப்படியாவது இருக்கட்டும். பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். இவனை இப்படி அனாதையாய்ச் சாகவிடுதல் மகாபாவம். பிடியுங்கள், சேஷாத்ரி!” என்றார்.
இரண்டு பேருமாக அவனைத் தூக்கிக் கொண்டு போனார்கள். பவானியும் பின்னோடு சென்றாள்.