Bhavani B.A.B.L Kalki | Kalki Times
அத்தியாயம் 6: தேவர்களின் பூமாரி
ஆசிரியர் பிரணதார்த்தி விசால மனம் படைத்தவர். அபிப்பிராய பேதங்களுக்கு, சாதாரணமாக மதிப்புக் கொடுக்ககூடியவர். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவர் பிடிவாதமான அபிப்ராயம் கொண்டிருந்தார்.
இங்கிலீஷ் டாக்டர்களாயிருந்தாலும் சரி, சுதேசி வைத்தியர்களாயிருந்தாலும் சரி, அவ்வளவு பேரும் அவ்வளவு எமதூதர்கள் என்பது அவருடைய கருத்து. வைத்தியங்களுக்குள்ளே இயற்கை வைத்தியம் ஒன்றிலே தான் அவருக்கு நம்பிக்கை. அந்த வைத்திய முறையைப் பரிசோதிப்பதிலே அளவில்லாத ஆர்வம். உண்மையில், இயற்கை வைத்தியத்தைக் கையாளுவதற்கு மட்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால், அதைவிட அவருக்கு மகிழ்ச்சியளிப்பது வேறொன்றுமேயில்லை. அதற்குச் சமமான சந்தோஷம் அவருக்கு அளிப்பது ஒன்றே ஒன்றுதான்; இங்கிலீஷ் டாக்டரிடம் வைத்தியம் செய்து கொண்டவன் பிழைக்காமல் செத்துப் போவது தான்!
அவருக்குத் தெரிந்தவர்களில் – அவருடைய யோசனையைக் கேட்கக்கூடியவர்களில் – யாருக்காவது உடம்பு சரிப்படவில்லையென்று கேட்டால், அவருக்கு வெகு உற்சாகம். அதிலும், தலைவலி கால்வலி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தால் அவருக்கு அவ்வளவு திருப்தி கிடையாது. குறைந்த பட்சம் ஒருவனுக்கு ‘டபிள் நிமோனியா’வாவது வரவேண்டும்; அப்போது பார்க்க வேண்டும் அவருடைய குதூகலத்தை.
ஆனால் அம்மாதிரி பெரிய பெரிய வியாதிகளை வரவழைத்துக் கொள்ளும் மனிதர்கள் சாதாரணமாய்ப் பரம முட்டாள்களாயிருக்கிறார்கள்; அவர்கள் பெரிய டாக்டர்களைத் தேடிச் சென்று நிறைய பணத்தையும் கொடுத்துவிட்டுச் சீரழிந்து சாகப் பிரியப்படுகிறார்களே தவிர, பிரணதார்த்தியிடம் போய் நல்லபடியாய்ப் பைசா செலவு இல்லாமல் சாவோமென்று ஒருவனுக்காவது புத்தி இருப்பதில்லை. இது விஷயத்தில் அவருக்குத் தம் இஷ்டமித்ரர்கள் எல்லாரிடத்திலும் மனம் கசந்து போயிருந்தது. “என்னிடம் எத்தனை பசங்கள் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் பெரிய பெரிய உத்தியோகங்களில் இருக்கிறார்கள்? எவ்வளவு பேர் எவ்வளவு விதமான உதவி என்னிடம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்? யாருக்காவது நன்றி விசுவாசம் இருக்கிறதா? ஏதோ ஒரு டைபாய்டு, ஒரு டயபிடீஸ், ஒரு அப்பெண்டிஸைடீஸ், ஒரு ட்யூபர்குலோஸிஸ் என்று என்னிடம் சிகிச்சைக்கு வருகிறானா?” என்பதாக அவர் யாரிடமும் வெளிப்படையாகச் சொன்னதில்லை யாயினும், அவருடைய இருதய அந்தரங்கத்தில் இத்தகைய குறை குடிகொண்டிருந்தது என்பதில் சந்தேகமில்லை.
இப்படிப்பட்டவருக்கு 105 டிகிரி சுரத்துடன் ஒருவன் வழியிலே கிடந்து கிடைத்தானென்றால் உற்சாகம் எப்படியிருக்குமென்று சொல்லவேண்டுமா? அதிலும் தமக்கே தமக்கல்லவா கிடைத்திருக்கிறான்! தாம் கொடுத்தால் உயிர்; இல்லாவிட்டால் இல்லை. எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம்! ஆகவே, அவனைப் பிழைக்கவைத்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு சிகிச்சை ஆரம்பித்தார் பிரணதார்த்தி.
இரவெல்லாம் கண்விழித்துச் சிகிச்சை செய்தார். தலையிலே ஈரக் களிமண்ணை வைத்துக் கட்டினார். முதலிலே குளுகோஸ், அப்புறம் பார்லிகஞ்சி, அப்புறம் பழரசம் – இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆகாரம் கொடுத்து வந்தார். பவானியும் கண்விழித்துக் கூட இருந்து அவருக்கு ஒத்தாசை செய்து வந்தாள்.
சிறிது சிறிதாக சுரம் இறங்கிற்று. இரண்டு மூன்று நாளில் நோயாளி நன்றாய்க் குணம் அடைந்தான். அவனுடைய உடம்பில் ஏற்பட்டிருந்த கோளாறு முக்கியமாகப் பசி, தாகம், களைப்பு இவற்றினால் உண்டானதே. ஆதலின் நல்ல உணவும், ஓய்வும் குளிரில் அடிபடாமல் தங்க இடமும் கிடைக்கவே, அவன் உடம்பு தானே குணமாகி வந்தது. ஆனால் புரொபஸர் பிரணதார்த்தி தம்முடைய இயற்கை வைத்திய முறையினாலேயே யமபாசத்திலிருந்து அவன் உயிரை மீட்டுவிட்டதாகக் கருதினார். ஸ்ரீமான் சேஷாத்ரி அப்படி நினைக்கவில்லை. “ஏதோ அவனுடைய ஆயுள் கெட்டியாயிருந்தபடியால், பிரணதார்த்தி வைத்தியம் செய்துகூடப் பிழைத்துக் கொண்டான்” என்று அபிப்பிராயப்பட்டதோடு, அதைச் சொல்லியும் விட்டார். இதனால், பிரணதார்த்தியின் சிநேகத்தை முக்கால்வாசியும் இழந்து விட்டாரென்றே கூறலாம். பவானியோ, வெளிப்படையாக, சித்தப்பாவின் வைத்தியத்தினாலேயே போன உயிர் திரும்பி வந்தது என்று சொல்லி அவரை மகிழ்வித்த போதிலும், தான் தன்னுடைய இருதய அந்தரங்கத்தில் பகவானைப் பிரார்த்தித்ததன் பயனாகவே அவன் பிழைத்தெழுந்ததாக மனதிற்குள் கருதினாள்.
அந்த இளைஞனுடைய முகம் எங்கேயோ பார்த்த முகம் போல் பவானிக்குத் தோன்றியதல்லவா? “எங்கே பார்த்திருக்கிறோம்?” என்று அவள் மனம் இடைவிடாமல் தேடிக் கொண்டே இருந்தது. முதல் நாள் இரவே அது அவளுக்குத் தெரிந்து போயிற்று. சுரவேகத்தில் அவன் பிதற்றியபோது கூறிய சில வார்த்தைகளினால், அது அவள் ஞாபகத்திற்கு வந்தது.
‘கத்தி யின்றி ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது!’
என்று அவன் பாடினான். பிறகு, “அடியுங்கள், ஐயா! அடியுங்கள்! வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே!” என்று கதறினான். உடனே பவானிக்கு அவனைத் தான் பார்த்தது எங்கே என்று பளீரென்று ஞாபகத்துக்கு வந்தது. அந்தச் சம்பவம் முழுவதும் நேற்றுத்தான் நடந்தது போல அவள் இருதயத்தில் பதிந்திருந்தது அன்றோ?
அப்போது, பவானி காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். பெண்கள் கலாசாலையின் ஹாஸ்டலில் வசிந்து வந்தாள். கலாசாலையின் ஆசிரியைகள் எல்லாரும் இங்கிலீஷ் நாகரிகத்தில் மூழ்கினவர்கள். நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். உலகத்தில் எந்தவிதமான குறையும் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆகவே தேசத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த சத்தியாக்கிரஹ இயக்கத்தைச் சுத்தப் பைத்தியக்காரத் தனமென்று கருதினார்கள்.
ஹாஸ்டலில் வசித்த மாணவிகளில் முக்கால்வாசிப் பேரைப் போல், பவானியும் அத்தகைய கொள்கையுடையவளாகவே யிருந்தாள். ஒருநாள் அவள் துணி வாங்குவதற்காக, தான் வழக்கமாய் வாங்கும் பெயர்பெற்ற கரம்சந்த் பயான்சந்த் சீமை ஜவுளிக் கடைக்குப் போனாள். அப்போது சீமை ஜவுளிக் கடைகளில் தொண்டர்கள் மறியல் செய்கிறார்களென்றும், போலீஸ்காரர்கள் வந்து தொண்டர்களை அடித்து இழுத்துச் செல்கிறார்களென்றும் அவள் அறிந்திருந்தாள். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் பயான்சந்த் கடைக்குச் சென்றாள்.
கடை வாசலில் காந்தி குல்லா அணிந்த தொண்டன் ஒருவன் கைகூப்பிக் கொண்டு நின்றான். ‘பால் வடியும் முகம்’ என்றால் அவன் முகத்தைத்தான் சொல்ல வேண்டும். அவன் இரக்கமும் கனிவுங் கொண்ட பார்வையுடன் பவானியைப் பார்த்தான். எத்தகைய கல் நெஞ்சையும் இளகச் செய்யும் சோகம் ததும்பிய புன்னகை ஒன்று புரிந்தான். “அம்மணி! கல்வியறிவு படைத்த தாங்கள் இப்படிச் செய்யலாமா? தயவு செய்து திரும்பிப் போங்கள்” என்றான்.
அவனுடைய குரல், பார்வை, பணிவான பேச்சு எல்லாம் சேர்ந்து பவானியின் இருதயத்தைக் கலங்க வைத்துவிட்டன. அதனால் அவளுடைய கோபம் அதிகரித்தது. காங்கிரஸ் தொண்டர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று அவள் தன்னுடைய இங்கிலீஷ் ஆசிரியை சொல்லிக் கேள்விப்பட்டிருந்தாள். எனவே, “இந்த வேலைக்கு உங்களுக்கெல்லாம் என்ன சம்பளம் கொடுக்கிறார்கள்?” என்று குரலை ரொம்பவும் கடுமைப்படுத்திக் கொண்டு கேட்டாள்.
“சம்பளமா? இன்னும் ஐந்து நிமிடத்தில் நீங்களே பார்ப்பீர்கள். கையில் குண்டாந் தடியுடன் சம்பளம் கொடுப்பதற்கு வருவார்கள்” என்றான் தொண்டன்.
“இம்மாதிரி முட்டாள் காரியம் செய்பவர்களை அடிக்காமல் என்ன செய்வது? எனக்குக் கூட இப்போது உம்மை இரண்டு அறை அறைய வேண்டுமென்று தோன்றுகிறது” என்றாள் பவானி.
“அப்படியெல்லாம் செய்யாதீர்கள், காரியம் விபரீதமாய்ப் போய்விடும். உங்கள் கையால் அடிபடலாமென்று தெரிந்தால் ஊரிலுள்ள வாலிபர்கள் எல்லாம் மறியல் செய்ய வந்துவிடுவார்கள்!”
இப்படிச் சொல்லிவிட்டு அவன் கலகலவென்று நகைத்தான். பவானியாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே அவள் “ஆமாம்; சீமைத்துணி வாங்கக் கூடாதென்று ஏன் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“நம் நாட்டில் ஏழைகள் எத்தனையோ பேர் தொழிலின்றிக் கஷ்டப்படுகிறார்கள்…”
“ஏழைகளில் நம் நாட்டு ஏழைகளாயிருந்தாலென்ன அயல் நாட்டு ஏழைகளாயிருந்தாலென்ன? என்னுடைய பணத்தைச் சீமையிலுள்ள ஏழைகளுக்கே அனுப்புகிறேன். உங்களைப்போல் குறுகிய மனோபாவம் எனக்குக் கிடையாது.”
இவ்வாறு சொல்லி பவானி மேலே நடக்கத் தொடங்கினாள். தொண்டன் அப்போது அவளைப் பார்த்த பார்வை அவளுடைய இருதயத்தை ஊடுருவிச் சென்றது. ஆனாலும், பின் வாங்கினால் அவனிடம் தொல்வியடைந்ததாகுமென்று அவள் கருதினாள். அம்மாதிரி தோல்வியை அவள் விரும்பவில்லை. ஆகவே அவனை இலட்சியம் செய்யாமல் நேரே பார்த்துக்கொண்டு விரைவாக நடந்தாள். கடையின் முன் வாசற்படியை அடைந்ததும், அவளுக்கு ஏனோ திரும்பிப் பார்க்க வேண்டுமென்று தோன்றிற்று. அவன் முகம் இப்போது எப்படி இருக்கும்? அதில் கோபம் அதிகமா இருக்குமா? ஏமாற்றம் அதிகமாயிருக்குமா?
திரும்பிப் பார்த்தாள். அதே சமயத்தில் கடைத்தெருவில் ஒரு மோட்டார் லாரி வந்து நின்றது; அதிலிருந்து திடுதிடுவென்று ஒரு கூட்டம் போலீஸ்காரர்கள் இறங்கினார்கள். அவர்களில் நாலுபேர் கையில் குண்டாந்தடியுடன் இவளுடன் பேசிய தொண்டனை நோக்கி வந்தார்கள். ஒரு நிமிஷம் பவானியின் இருதயம் ஸ்தம்பித்து நின்றது; அடுத்த நிமிஷமே கணத்துக்கு நூறு தடவை வீதம் அடித்துக் கொண்டது.
பட்! பட்! பட்!
பவானி கண்ணை மூடிக் கொண்டாள். ஆனால் மூடிக் கொண்டிருக்கவும் முடியவில்லை.
“வந்தே மாதரம்!” “வந்தே மாதரம்!” என்று அத்தொண்டன் கதறும் குரல் கேட்டது.
பட்! பட்! பட்!
அவள் கண்ணைத் திறந்த போது, தொண்டன் கீழே விழுந்து கொண்டிருந்தான். அவன் நெற்றியிலிருந்து இரத்தம் பீறிட்டது.
கீழே விழுந்த பிறகும் அவன் “வந்தே மாதரம்!” என்று கோஷித்தான். கரகரவென்று அவன் கால்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். போலீஸ் லாரியில் தூக்கிப் போட்டார்கள்.
பவானி கடைக்குள் நுழையவில்லை. கடை வாசற்படியில் நின்றவள் சட்டென்று நெருப்பை மிதித்து விட்டவளைப் போல் அங்கிருந்து விரைந்து சாலைப் பக்கம் வந்தாள். தன்னுடைய இருதய அந்தரங்கத்திலிருந்து அளவுக்கடங்காத தாபத்துடன் பகவானிடம் ஒரு பிரார்த்தனை செலுத்தினாள்; ‘போலீஸ் லாரி அங்கிருந்து கிளம்புவதற்குள் அந்த இளைஞன் தன் பக்கம் ஒரு தடவை திரும்பிப் பார்க்க வேண்டும்’ என்பது தான் அந்தப் பிரார்த்தனை. ‘அந்தப் பாழும் சீமை ஜவுளிக் கடைக்குள் தான் போகாமல் திரும்பி விட்டதை அவன் பார்க்க வேண்டுமே’ என்று அவள் பரிதபித்தாள். சாதாரணமாய் ஓர் ஆயுள் காலத்தில் அநுபவிக்கக் கூடிய வேதனை அவ்வளவையும் பவானி அந்தச் சில நிமிஷ நேரத்தில் அநுபவித்து விட்டாள்.
மோட்டார் கிளம்பிற்று. ஐயோ! அவன் தன்னைப் பார்க்காமலே போய்விடுவானோ? ஆகா! இதோ பார்க்கிறான்; பார்த்து, அவள் அந்தக் கடைக்குள் போகாமல் திரும்பியதைக் கவனித்ததற்கு அறிகுறியாகப் புன்னகையும் புரிகிறான்!
பவானியின் தலை ஒரு கணநேரம் கரகரவென்று சுழன்றது. அப்போது அவளுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று ஆகாய வெளியில் தேவர்களும் தேவிகளும் கூட்டங்கூடி நின்று,
‘வந்தே மாதரம் என்றுயிர் போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம்’
என்று பாடிக்கொண்டு, அந்தப் போலீஸ் லாரியின் மேல் புஷ்பமாரி சொரிவது போலும், அவர்கள் சொரிந்த புஷ்பங்கள் லாரியின் மேற்கூரையை எப்படியோ கடந்து உள்ளே வந்து அந்தத் தொண்டன் மேல் சொரிந்து கிடப்பது போலும் அவளுக்குத் தோன்றியது! அடுத்த நிமிஷம் பிரமை தெளிந்தது. கண்ணைத் திறந்து பார்த்த போது போலீஸ் லாரியைக் காணோம்.
அன்றைக்குப் பார்த்த அம்முகத்தை அப்புறம் வெகு காலம் பவானி ஓயாமல் தேடிக் கொண்டிருந்தாள். வீதியில் வண்டியில் போகும்போதும், கடற்கரையில் காற்று வாங்க உலாவும் போதும், ரயில் பிரயாணம் செய்யும் போதும், நாடகம் பார்க்கும்போதும், அவளுடைய கண்கள் சுழன்று சுழன்று அந்த முகத்தைத் தேடிக் கொண்டேயிருந்தன. நாளாக ஆக, பவானி நிராசையடைந்தாள். கனிவு ததும்பிய கண்களும், சோகம் பொருந்திய புன்னகையும் கொண்ட அத்தொண்டனின் திவ்ய முகத்தை இந்த ஜன்மத்தில் தான் இனி பார்க்கப் போவதில்லையென்றே தீர்மானித்தாள். வேறு காரியங்களில் கவனம் செலுத்தி அந்த முகத்தை மறப்பதற்குப் பெரிதும் முயன்றாள்.
ஏறக்குறைய அந்த முயற்சியில் அவள் வெற்றியடையும் தறுவாயில் இருந்தபோது இந்த ஆச்சரியமான சம்பவம் நேர்ந்தது. சற்றும் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அவளுடைய மனோரதம் கைக்கூடிற்று. அதனால் பவானி எத்தகைய உள்ளக் கிளர்ச்சி அடைந்திருப்பாள் என்று சொல்லவும் வேண்டுமோ?