Bhavani B.A.B.L Kalki | Kalki Times
அத்தியாயம் 7: உமாகாந்தன் கொலை கேஸ்
பவானி இப்போது ஒரு தனி உலகத்தில் வசித்து வந்தாள். அவ்வுலகில் அளவிலாத ஆனந்தமும், சொல்ல முடியாத துக்கமும், பிரிக்க முடியாதபடி கலந்திருந்தன.
ஆகாயத்தை அளாவி வளர்ந்திருந்த கற்பூர மரங்களின் மீது மலைக்காற்று அடிக்கையில் ஏற்பட்ட சப்தம் ஒரு சமயம் குதூகலமான சிரிப்பைப் போல் அவள் காதில் பட்டது. இன்னொரு சமயம் யாரோ விம்மி விம்மி அழுவது போல் காதில் விழுந்தது. காலை நேரத்தில் மரம் செடிகளிலிருந்து பனித்துளிகள் கலகலவென்று உதிரும் போது, ஒரு சமயம் அவை ஆனந்த பாஷ்பமாகவும் இன்னொரு சமயம் துக்கக் கண்ணீராகவும் தோன்றின. பட்சிகளின் கானம் ஒரு சமயம் அவளுக்குச் சங்கராபரண ராகத்தைப் போல் உற்சாகத்தை உண்டாக்கித் துள்ளிக் குதிக்கலாமா என்று தோன்றச் செய்தது; மற்றொரு சமயம் அதே பறவைகளின் கீதம் சோகரசம் பொருந்திய யதுகுல காம்போதியாக மாறி, அவளுடைய கண்களில் கண்ணீர் துளிர்க்கச் செய்தது.
சேஷாத்ரியின் விஷயத்தில் ஏற்பட்ட மனமாறுதல் அவளுக்கே ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. அவரைப் பார்ப்பதற்கோ பேசுவதற்கோ அவளுக்கு திடீரென்று பிடிக்காமல் போயிற்று.
சேஷாத்ரியின் நடத்தையிலும் ஒரு மாறுதல் காணப்பட்டது. அவருடைய உற்சாகமும் சந்தோஷமும் எங்கேயோ போய்விட்டன. சதா கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கலானார். அந்த நோயாளியைக் குணப்படுத்துவதற்குப் பிரணதார்த்தியும் பவானியும் எடுத்துக் கொண்ட முயற்சி ஒன்றும் அவருக்குப் பிடிக்கவில்லையென்பதைத் தெளிவாய்க் காட்டிக் கொண்டார். உண்மையில் அவன் படுத்துக் கொண்டிருந்த அறைக்கு அவர் அதிகம் வருவது கூட இல்லை. எப்போதாவது அருமையாக வந்தால், அவன் தூங்கும்போது வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போய்விடுவார். அவருடைய இந்த நடத்தை பிரணதார்த்திக்குக் கூட அவர்மேல் வெறுப்பு உண்டு பண்ணிற்று.
நாலாம் நாள் நோயாளி படுத்திருந்த அறைக்குள் சேஷாத்ரி வந்திருந்த சமயம் தூங்கிக் கொண்டிருந்தவன் தற்செயலாகக் கண்ணை விழித்தான். எதிரே நின்ற சேஷாத்ரியைக் கண்டதும், ‘நிஜந்தானா’ என்று சந்தேகப்படுபவன் போல் கண்ணை மூடிமூடித் திறந்து பார்த்தான்.
கடைசியாக, “நீங்கள் தானா? நிஜமாகப் பாரிஸ்டர் சேஷாத்ரியா?” என்று கேட்டான்.
“ஆமாம்; மிஸ்டர் உமாகாந்தன்! நிஜமாக நான் தான்” என்றார் சேஷாத்ரி.
உமாகாந்தன் பலமிழந்திருந்த தன்னுடைய கைகளினால் தலையிலே இரண்டு மூன்று தடவை அடித்துக் கொண்டான். “விதிவசம் என்பதில் இப்போதுதான் எனக்கு நம்பிக்கை வருகிறது. இந்த இடத்தில், எல்லாரையும் விட்டு, நீங்களா வந்திருக்கவேண்டும்?” என்றான்.
அப்போது பவானியின் உடம்பில் ஒவ்வோர் அணுவும் துடிதுடித்தது. பிரணதார்த்திக்கோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.
“முன்னாலேயே உங்களுக்கு இவரைத் தெரியுமா, சேஷாத்ரி? எப்படித் தெரியும்?” என்று பிரணதார்த்தி கேட்டார்.
“ஹைகோர்ட்டுக்கு இவனுடைய கொலைக் கேஸ் அப்பீல் வந்த போது தெரியும். அப்போது நான் பப்ளிக் பிராசிகியூடர்; சர்க்கார் தரப்பிலே அப்பீல் நடந்தது” என்றார் சேஷாத்ரி.
கொலைக்கேஸ் என்றதும் பவானி தலையிலே பெரிய பாறாங்கல் விழுந்தது போல் திடுக்கிட்டாள்; இதுவரை அவள் மனத்தில் இவன் ஏதோ ராஜீயக் குற்றத்துக்காகத் தான் கைதியாயிருக்க வேண்டுமென்று ஓர் எண்ணம் இருந்து வந்தது.
பிரணதார்த்திக்கோ திக்குத் திசை ஒன்றும் புரியவில்லை. ஸுகுமாரனான இந்த இளைஞன் கொலைக் குற்றத்துக்குத் தண்டனையடைந்த கைதி என்பதை அவரால் நம்பமுடியவேயில்லை. சேஷாத்ரியை விவரமாய்ச் சொல்லும்படி கேட்டார். “கேஸ் கட்டில் படித்தது மட்டுந்தானே எனக்குத் தெரியும்? அவனே பூரா விவரமும் சொல்லட்டுமே” என்றார் சேஷாத்ரி.
உமாகாந்தன் முதலில் தன் கேஸைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். ஆனால் அதில் சில சம்பவங்கள் கேட்பவர்களுக்கு விளங்காமல் போகவே, அடியிலிருந்து தன்னுடைய வாழ்க்கைச் சம்பவங்கள் முழுவதையுமே சுருக்கமாகக் கூறினான். அவன் கூறிய வரலாறு பின் வருமாறு:
கைதி சொன்ன கதை
உமாகாந்தனுடைய தாயாருக்குப் பாக்கியக்ஷ்மி என்று பெயர். ஆனால், பெயரில் உள்ள பாக்கியத்தைத் தவிர அவள் வாழ்க்கையில் எவ்விதப் பாக்கியத்தையும் அடையவில்லை. உமாகாந்தனுடைய தந்தைக்கு அவள் இரண்டாவது தாரமாக வாழ்க்கைப்பட்டாள். இல்வாழ்க்கையின் இன்பத்தை அவள் ஆறு வருஷத்துக்கு மேல் அநுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை.
உமாவினுடைய தந்தைக்கு அவருடைய மூத்த தாரத்தின் மூலம் ஒரு பிள்ளை இருந்தான். அவர் மரணமடைந்த போது அவன் பி.ஏ. பாஸ் செய்துவிட்டு, சீமைக்கு ஐ.ஸி.எஸ். படிக்கப் போக வேணுமென்று தந்தையிடம் உத்தரவு கேட்டுக் கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில் திடீரென்று ஏற்பட்ட நோய் காரணமாகத் தந்தையின் மரணம் சமீபிக்கவே, அவர் தம் மூத்த புதல்வனை அருகில் அழைத்து, “குழந்தாய்! உனக்கு என்னால் ஆனதையெல்லாம் செய்து விட்டேன். பி.ஏ. படிக்க வைத்திருக்கிறேன். இனிமேல் நீ சம்பாதித்து உன் வாழ்க்கையை நடத்த வேண்டியதுதான். உன் சிறிய தாயாரையும் உன் தம்பியையுந்தான் அநாதையாக விட்டுப் போகிறேன். அவர்களுக்காக இதுவரையில் நான் ஒரு பைசா கூடச் சேர்த்து வைக்கவில்லை. என்னுடைய உயிரை நாலாயிரம் ரூபாய்க்கு இன்ஷியூர் செய்திருக்கிறேன். உன் சிறிய தாயாரைக் கலியாணம் செய்து கொண்டதற்கு முன்பே இன்ஷியூர் செய்ததாகையால் என் மரணத்திற்குப் பின் உனக்குத் தொகை சேரவேண்டுமென்று அதில் கண்டிருக்கிறது. நீ அந்தத் தொகையை வாங்கி உன் சிறிய தாயாருக்குக் கொடுத்துவிடு” என்று கூறி விட்டு இறந்து போனார்.
உமாவின் தமையனுக்கு, அவனுடைய சிறிய தாயாரை எப்போதுமே பிடிப்பதில்லை; தனக்கு விரோதியாகத் தன் தகப்பனாரின் அன்பைக் கவர வந்தவள் என்று அவளை வெறுத்து வந்தான். ஆனாலும், அவன் இப்படி மோசம் செய்வான், தகப்பனார் சாகும்போது சொன்ன வார்த்தைக்கு இப்படித் துரோகம் பண்ணுவான் என்று பாக்கியலக்ஷ்மி எதிர்ப்பார்க்கவில்லை.
உத்தரக் கிரியைகள் ஆனதும், இன்ஷியூரன்ஸ் பாலிஸியை எடுத்துக் கொண்டு பணம் வாங்கி வருவதாகச் சென்னைக்குப் போனவன் போனவன் தான். திரும்பி வரவும் இல்லை; எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை.
ஐந்து வயதுக் குழந்தையுடன் நிர்க்கதியாய் விடப்பட்ட பாக்கியலக்ஷ்மி எத்தனையோ கஷ்டங்களுக்கு உள்ளானாள். முதலில் கொஞ்சநாள் ஒரு பணக்கார வீட்டில் சமையல் செய்து போட்டுக் கொண்டிருந்தாள். பிறகு, ஒரு புண்ணியவானின் சிபார்சினால் சென்னையில் தர்மப் பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்ந்து படித்து உபாத்தியாயினி வேலைக்கு பயிற்சி பெற்றாள். பிறகு ஜில்லா போர்டு பெண்கள் பள்ளிக்கூடங்களில் உபாத்தியாயினியாக வேலை பார்க்கலானாள். அதில் கிடைத்த சொற்பச் சம்பளத்தில் செட்டாக ஜீவனம் செய்து, மிகுந்த பணத்தைக் கொண்டு உமாகாந்தனைப் படிக்க வைத்தாள். உமாவும் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்கி, உபகாரச் சம்பளங்கள் பெற்று, தாயார் அனுப்பும் சொற்பப் பணத்தில் மற்றச் செலவுகளை நடத்திக் கொண்டு படித்து வந்தான்.
அவன் சென்னையில் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த போது, மகாத்மாவின் உப்புச் சத்தியாக்கிரஹ இயக்கம் தீவிரமாக நடந்துவந்தது. உமாவின் மனம் அந்த இயக்கத்தில் ஈடுபட்டது. தேசத்திலே ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பேரியக்கத்தில் சிறை சென்றும் அடிபட்டும் வரும் செய்திகளைப் படிக்கப் படிக்க அவன் ஹிருதயத்தில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. படிப்பிலே புத்தி செல்லவில்லை. கடைசியாகச் சென்னைக் கடை வீதிகளில் தொண்டர்கள் மறியல் செய்வதையும், அவர்கள் அடிக்கப் படுவதையும் நேருக்கு நேர் பார்த்த போது அவன் மனம் பூராவும் மாறிவிட்டது. அப்படிப்பட்ட மகத்தான இயக்கத்தில் ஈடுபடாத வாழ்க்கையினால் என்னதான் பிரயோஜனம்? எனவே, அந்நியத்துணி பகிஷ்கரிப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு மறியலுக்குச் சென்றான்.
பல தினங்கள் அவனை அடித்து இழுத்துச் சென்று எங்கேயாவது தூரமான இடத்தில் கொண்டு போய் விட்டு வந்த போதிலும் அவன் மறுபடியும் மறுபடியும் மறியலுக்கு வருவதைக் கண்ட போலீஸார் கடைசியில் அவனைக் கைது செய்துகொண்டு போனார்கள். விசாரணை நடந்தது. ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
உமா தன்னுடைய எண்ணத்தை முன்னமே தாயாருக்கு எழுதித் தெரிவித்திருந்தான். அவளுக்கு ஒரு பக்கத்தில் பெருமையாயிருந்தது. மற்றொரு பக்கம் அளவில்லாத துக்கமும் உண்டாயிற்று. ஆனால், அவள் அவனுக்கு எழுதிய பதிலில், “அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிட வேண்டாம்” என்று தான் எழுதினாள். அவள் விடுமுறை பெற்றுச் சென்னைக்கு வருவதற்குள் உமா சிறைக்குப் போய் விட்டான். பிறகு பாக்கியலக்ஷ்மி மகனுக்கு எழுதிய கடிதத்தில் கொஞ்சங்கூடத் தன் துக்கத்தைக் காட்டாமல், சந்தோஷமாய் ஒரு வருஷமும் சிறைச்சாலையில் இருந்து விட்டு வரும்படி தைரியம் சொல்லி எழுதினாள்.
முதலில் இரண்டு மூன்று கடிதங்கள் இப்படி உற்சாகமூட்டுவனவாக இருந்தன. அப்புறம் வந்த கடிதங்களில் சோர்வு அதிகம் காணப்பட்டது. ‘தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே விடுதலை பெற்று வந்துவிட வழிகிடையாதா?’ என்று கூட ஒரு கடிதத்தில் கேட்டிருந்தாள். இதனால் உமாவின் இருதயமும் கலங்கிற்று; ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்.
உண்மையாகவே பாக்கியலக்ஷ்மிக்கு அப்போது பெரியதொரு துர்ப்பாக்கியம் நேர்ந்திருந்தது. அச்சமயம் அவள் எந்த ஜில்லா போர்டு பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தாளோ, அந்த ஜில்லா போர்டானது ‘ரங்க சமுத்திரம் ராவணன்’ என்று பெயர் பெற்ற ஒரு மகா பாபியிடம் அகப்பட்டுக் கொண்டிருந்தது. அவனிடம் இல்லாத துர்க்குணத்தை உலகத்தில் வேறெங்கும் காண இயலாது. லஞ்சத்தினாலும், தடியடி ஆட்கள் பலரைத் தன்கீழ் வைத்துக் கொண்டிருந்ததனாலும் அவன் அப்படிச் செல்வாக்குப் பெற்றான். அதே முறைகளினால் அந்தச் செல்வாக்கை நாட்டிக் கொண்டும் இருந்தான். அவனுடைய கோர கிருத்தியங்களில் ஒன்று ஜில்லா போர்டுகளுக்குட்பட்ட பெண் பள்ளிக்கூடங்களின் உபாத்தியாயினிகளை உபத்திரவிப்பதாகும். அவனுடைய பொல்லாத கொடுங்கண், பாக்கியலக்ஷ்மியின் மீதும் விழுந்தது. அவள் அவனுடைய துராசைக்கு இணங்க மறுக்கவே, பள்ளிக்கூடத்துக்குப் பள்ளிக்கூடம் அவளை மாற்றிக் கொண்டும் இன்னும் பலவிதங்களில் உபத்திரவித்துக் கொண்டும் இருந்தான். பாக்கியலக்ஷ்மி இதைப் பற்றிச் சென்னையிலுள்ள பத்திரிகைகளுக்கும், அப்போது அதிகாரத்தில் இருந்த சர்க்கார் மந்திரிகளுக்கும் கடிதம் எழுதினாள். மந்திரிகளில் ஒருவர் அந்தக் கடிதத்தை மேற்படி ஜில்லா போர்டு பிரஸிடெண்டுக்கே அனுப்பி, “இப்படிப்பட்ட பொல்லாத பெண்பிள்ளையை ஏன் வேலையில் வைத்திருக்கிறாய்” என்று கேட்டிருந்தார்.
அதற்கு ஐந்தாறு தினங்களுக்குப் பிறகு ஒருநாள், பாக்கியலக்ஷ்மியைத் துர்நடத்தை காரணமாக வேலையிலிருந்து நீக்கிவிட்டதாய் உத்தரவு வந்தது. அன்றிரவு அவள் குடியிருந்த வீட்டில் நாலைந்து தடியர்கள் புகுந்து அவளை அடித்து இம்ஸித்துக் குற்றுயிரும் குலை உயிருமாய் விட்டுச் சென்றார்கள்.
உமாகாந்தன் சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்தபோது தன் தாயாரை இத்தகைய கோலத்தில் கண்டான். அவனுடைய இரத்தம் கொதித்தது; நெஞ்சு தீய்ந்தது. விவரம் தெரிந்த போது, “அம்மா! அந்தப் பாவியைக் கொன்றுவிட்டுப் பிறகு உன்னை வந்து பார்க்கிறேன்” என்று அலறிக் கொண்டே பித்துப் பிடித்தவன் போல் ஓடினான்.
‘ரங்க சமுத்திரம் ராவணன்’ அப்போது தங்கியிருந்த இடத்தை அவன் விசாரித்துக் கொண்டு அங்கே போய்ச் சேர்ந்தான். பங்களாவில் அவன் நுழையும் போது துப்பாக்கியின் சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டான். சத்தம் வந்த அறையை நோக்கி ஓடினான். அங்கே தான் கொல்வதற்காக வந்த மனிதன் ஏற்கனவே சுடப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்த்தான்! உமாகாந்தனைப் போலவே பழி தீர்க்க வன்மங் கொண்ட வேறொருவன் இவனை முந்திக் கொண்டிருக்க வேண்டும். உமா அந்தக் கோரக் காட்சியைப் பார்த்துத் திகைத்து நிற்கையிலேயே ஜனங்கள் பலர் ஓடிவந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள்.
விசாரணையில் உமாகாந்தன் ஒன்றையும் ஒளிக்காமல் உள்ளது உள்ளபடி சொன்னான். ஜில்லா கோர்ட் ஜட்ஜு மகா நீதிமான். அத்துடன் அவர் ‘ரங்க சமுத்திரம் ராவண’னின் கோரக் கிருத்தியங்களையெல்லாம் நன்கறிந்தவர். ஆகவே, அவர் குற்றம் ருசுவாகவில்லையென்று சொல்லி எதிரியை விடுதலை செய்துவிட்டார்.
சர்க்கார் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. அப்போது சென்னை ஹைகோர்ட்டில் பாரிஸ்டர் சேஷாத்ரி பப்ளிக் பிராஸிக்யூடராயிருந்தார். உமாகாந்தன் தன்னுடைய கேஸைத் தானே நடத்துவதாகச் சொல்லி, கீழ்க்கோர்ட்டில் சொன்னதுபோலவே நடந்தது நடந்தபடி உண்மையே உரைத்தான். ஆனால் பாரிஸ்டர் சேஷாத்ரி தஸ்தாவேஜிகளையும் சாட்சியங்களையும் கொண்டு உமாகாந்தன் தான் கொலை செய்திருக்க வேண்டுமென்று திண்ணமாய் ருசுப்படுத்தினார். நீதிபதிகளும் அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்டு எதிரிதான் கொலை செய்தது என்று தீர்மானித்தனர். ஆனால் அதற்குத் தூண்டுதலாயிருந்த காரணத்தை உத்தேசித்துக் கைதிக்குத் தூக்குத்தண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை விதித்தனர்.
அப்போது, கோர்ட்டில் எதிரி நடந்துகொண்ட விதம் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிற்று. அவன் நீதிபதிகளுக்கும், முக்கியமாய் பப்ளிக் பிராஸிகியூடருக்கும், தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தான். “என் கையால் அந்தப் பாதகனைக் கொல்லவில்லையேயென்று எனக்கு ரொம்பவும் மனஸ்தாபமாயிருந்தது. இப்போது நான் தான் கொன்றேன் என்று சட்டம் தீர்த்துவிட்டதல்லவா? ரொம்ப சந்தோஷம்!” என்று அவன் கூவிக்கொண்டிருக்கையிலேயே போலீஸார் பிடித்து இழுத்துச் சென்றனர்.
நாலு வருஷம் சிறையிலிருந்த பிறகு உமாகாந்தனுக்கு இம்மாதிரி ஆயுள் முழுவதும் சிறையில் காலங்கழிப்பதால் என்ன பிரயோஜனம் என்று தோன்றிற்று. சமயம் நேர்ந்த போது தப்பிச் செல்ல முயல்வதென்றும், அம்முயற்சியிலே உயிர் போனால் ரொம்ப நல்லதாய்ப் போயிற்று என்றும் தீர்மானித்தான். சென்ற வாரத்தில் அது மாதிரி சந்தர்ப்பம் நேரவே அவனும் இன்னும் ஐந்து கைதிகளுமாகச் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்தனர். அவர்களில் இரண்டு பேர் பிடிபட்டார்கள்; மூன்று பேர் சுடப்பட்டு இறந்தார்கள். உமாகாந்தன் மட்டும் எப்படியோ தப்பித்துக் கொண்டு மலைப் பிரதேசத்தில் புகுந்து அலைந்து கடைசியாக இங்கு வந்து சேர்ந்தான்.
கைதி சொன்ன இந்தக் கதையை கேட்டு வருகையில் பிரணதார்த்தி பலமுறை கண்களைத் துடைத்துக் கொண்டார். பவானி அழுதே விட்டாள். ஆனால் சேஷாத்ரி மட்டும் துளிக்கூட மனங்கலங்காமல் உட்கார்ந்திருந்தார். அவருடைய கடின சித்தத்தைக் கண்டு பிரணதார்த்தியும் பவானியும் பெரிதும் அதிசயித்தார்கள்.