Kalki Short StoriesKalki TimesStory

Bhavani B.A.B.L Kalki | Kalki Times

அத்தியாயம் 8: ‘ஒட்டும் இரண்டு உளம்’

நீலகிரியில் அவ்வருஷம் வழக்கத்திற்கு முன்னதாகவே மேற்கத்தி மழை தொடங்கிவிடக் கூடுமென்று அநுபவமுள்ளவர்கள் சொன்னார்கள். காற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வந்தது. மரங்களும் செடிகொடிகளும் அசைந்தாடும்போது வரப்போகும் பெரு மழையை நினைத்து இவை நடுங்குவது போல காணப்பட்டது. மேற்குத் திக்கில் இருண்ட மேகங்கள் சூழத் தொடங்கின. திக்குத் திகந்தங்கள் எல்லாம் நடுங்கும்படி இடி முழக்கங்கள் கேட்டன. வேனிற் காலத்தில் இரை தேடி மலைக்கு வந்த பட்சிகள் கூட்டங் கூட்டமாகக் கீழ்த் திசையை நோக்கிச் செல்லலாயின. சுகவாசத்துக்காக மலைக்கு வந்திருந்த சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் அவசர அவசரமாக மூட்டை கட்டினார்கள்.

கூனூரில் புரொபஸர் பிரணதார்த்தியின் பங்களாவில் வசித்தவர்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பெரும் புயல் அடித்துக் கொண்டிருந்தது. புயலின் உத்வேகம் நாளுக்கு நாள் அதிகமாயிற்று.

“சட்டமாவது கோர்ட்டாவது, மண்ணாங்கட்டியாவது; எல்லாம் சுத்த மோசம்! உமாகாந்தனைப் போன்ற ஒரு நிரபராதியைச் சிறையிலிடும் சட்டம் என்ன சட்டம்? அதை அநுமதிக்கும் ராஜாங்கம் என்ன ராஜாங்கம்?…” என்று பிரணதார்த்தி பொங்கினார்.

“குற்றமற்றவன் என்கிறீர்களே? உங்களுக்கு எப்படித் தெரியும்? குற்றம் சாட்டப்பட்டவன் சொல்வதுதானே?” என்றார் சேஷாத்ரி.

“ஆமாம்; அவன் சொல்லுவதுதான். ஆனால் அவன் சொல்வதே எனக்குப் போதும். அதற்கு விரோதமாய் நூறு பேர் சொன்னாலும் நம்பமாட்டேன். அப்படியே அவன் கொலை செய்ததாக இருக்கட்டும்; அப்போதும் அவன் குற்றவாளியில்லை. ஒரு பெரிய ரண பாதகனை இந்த உலகை விட்டு நீக்கியதற்காக அவனுக்குச் சமூகம் நன்றி செலுத்த வேண்டும். நானாயிருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பேன். என்னுடைய தாயாரை ஒரு பாதகன் அப்படி துன்புறுத்தியிருந்தால் அவனைக் கட்டாயம் கொன்றிருப்பேன்” என்று ஆத்திரத்துடன் கூறினார் பிரணதார்த்தி.

“கட்டாயம் நீங்களும் தண்டனை அடைந்திருப்பீர்கள். சட்டத்திற்கு உயர்வு, தாழ்வு கிடையாது. குற்றம் செய்தவனைத் தண்டிக்கச் சட்டங்களும், கோர்ட்டுகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தானே தண்டனை விதிப்பதென்று கிளம்பினால், அதற்கு முடிவு எங்கே? அராஜகந்தான் ஏற்படும்” என்று சேஷாத்ரி வாதம் செய்தார்.

“மிஸ்டர் சேஷாத்ரி! நான் சொல்கிறேன்; இந்தச் சட்டத் தொழில் உங்களை அடியோடு கெடுத்து விட்டது. நீங்கள் இவ்வளவு மோசமான மனிதர் என்று எனக்கு இதுவரையில் தெரியாது” என்றார் பிரணதார்த்தி.

இம்மாதிரியாக இந்த அத்தியந்த சிநேகிதர்களுக்குள்ளே விரோத பாவம் மூண்டது. ஒவ்வொரு நாளும் அது அதிகமாகி வந்தது.

அந்த வீட்டில் சேஷாத்ரி இப்போது ஒரு தனி மனிதரானார். பவானி அவருடன் அதிகமாய்ப் பேசுவது கூடக் கிடையாது. அவருடைய குணம் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்பதை மறைத்து வைக்கப் பிரணதார்த்தியாவது பவானியாவது சிரமப்படவில்லை. அப்போது சேஷாத்ரி தாம் ஊருக்குப் போவதாகச் சொல்லியிருந்தால், அவர்கள் நிச்சயமாய் ஆட்சேபித்திருக்க மாட்டார்கள். ஆனாலும் சேஷாத்ரி போவதற்கு விருப்பமுள்ளவராய்க் காணப்படவில்லை.

பவானி இப்போது மெய்மறந்த பரவச நிலையிலிருந்தாள். தன்னை மறந்ததுடன் உலகத்தையே மறந்துவிட்டாள். அவளுடைய உள்ளத்தில் உமாகாந்தன் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் எதற்கும் இடமே இல்லாமல் போயிற்று. உமாகாந்தனுக்குக் கொஞ்சம் தேக திடம் ஏற்பட்டபோது, அவனுடன் பவானியும் பிரணதார்த்தியும் மலையில் உலாவச் செல்வார்கள். கொஞ்சம் தூரம் சென்றதும் உமாகாந்தன் மேலே நடக்க முடியாமல் உட்கார்ந்துவிடுவான். பவானியும் அவனுடன் நின்றுவிடுவாள். பிரணதார்த்தி மட்டும் அதிக தூரம் போய்விட்டு வருவார்.

பவானியும் உமாகாந்தனும் தனியாயிருக்கையில் பவானி அதிகம் பேசுவதாயில்லை; உமாவைப் பேசவிட்டுத் தான் மௌனமாய்க் கேட்டுக் கொண்டிருப்பாள். அவன் தன்னைப் பற்றியே தான் அதிகம் பேசுவான். தான் வருங்காலத்தைப் பற்றி என்னென்ன ஆசை வைத்திருந்தானென்றும், அவையெல்லாம் எப்படி நிராசையாயின என்றும் சொல்வான். தன்னை வளர்த்துப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வருவதற்காகத் தன் தாயார் பட்ட கஷ்டங்களைக் கண்ணில் ஜலம் ததும்பக் கூறுவான். தேச சேவையில் தன்னுடைய அநுபவங்களை எடுத்துரைப்பான். சுதந்திரப் போர் நடந்த காலத்தில், மேலும் மேலும் விழுந்த அடிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு அசையாமல் நிற்பதற்குத் தன்னையறியாமல் ஏற்பட்ட அபூர்வ தைரியத்தைப் பற்றி வியப்புடன் கூறுவான். தன்னுடைய தாயார் அடிபட்டுக் கிடந்த காட்சியை விவரிக்க முயன்று, முடியாமல் அழுதுவிடுவான். சிறைச் சாலையில் தான் பட்ட கஷ்டங்களை விவரிப்பான். ‘தூக்குத் தண்டனை விதித்திருக்கக் கூடாதா?’ என்று எண்ணி எண்ணித் தான் ஏங்கியதைச் சொல்வான்.

திரும்பத் திரும்ப எத்தனை தடவை சொன்னாலும் பவானி சலியாமல் கேட்பாள். இம்மாதிரி ஒரு வாரப் பழக்கத்தில், உமாகாந்தனுடன் பிறந்தது முதல் பழகி அவனுடைய சுகதுக்கங்களையெல்லாம் பகிர்ந்து அநுபவித்தவள் போல் அவ்வளவு இருதய ஒற்றுமை அடைந்தாள்.

உமாகாந்தனை எந்தச் சந்தர்ப்பத்தில் முன்னே பார்க்க நேர்ந்தது என்பது தனக்கு ஞாபகம் வந்தது போலவே, அவனுக்கும் அந்தச் சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது என்று பவானி தெரிந்து கொண்டாள். முதல் தடவை அவன் சத்யாக்கிரஹக் கைதியாகச் சிறைச்சாலையில் இருந்த போதெல்லாம், அவளை மறுபடியும் பார்க்கலாம் என்ற ஆசையும் நம்பிக்கையும் அவனுக்கு இருந்தன. இரண்டாந் தடவை கொலைக் குற்றத்துக்காகச் சிறைக்குப் போனபிறகு அந்த ஆசையை விட்டுவிட்டான். ஆனால், அவளுடைய எழில் முகத்தையும், துடுக்கான பேச்சையும், சீமை ஜவுளிக் கடையிலிருந்து அவள் அவசரமாகத் திரும்பிக் கருணை ததும்பும் கண்களால் தன்னைப் பார்த்த பார்வையையும் அவன் மறக்கவேயில்லை.

“கனவிலே நினைக்காத காரியம் நடந்துவிட்டது. எதிர்பாராத பேறு எனக்குக் கிடைத்து விட்டது. உன்னை மறுபடி பார்த்துவிட்டேன். நீ என்னை நினைவு வைத்திருக்கிறாய் என்பதையும் அறிந்து கொண்டேன். இனிமேல்…” என்று தயங்கி நின்றான் உமாகாந்தன்.

“இனிமேல் என்ன?” என்று பவானி கேட்க, “இனி மேல் இந்த உயிரின் மேல் எனக்கு இச்சை இல்லை, நிம்மதியாய்ப் பிராணத்தியாகம் செய்து கொள்வேன்” என்றான்.

பவானியை ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டது. கொஞ்ச நேரம் கழித்து அவள், “நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. என்னைப் பார்த்த பிறகு இந்த உயிர் வாழ்க்கை வேண்டாமென்று தோன்றுகிறதா? அவ்வளவு கசப்பு உண்டாக்க நான் என்ன செய்தேன்?” என்றாள்.

“பகவானே! அப்படியா அர்த்தம் செய்து கொள்கிறாய்? ஆனால் அது உண்மையல்லவென்று உன் மனமே சொல்லும்.”

“அப்படியானால் ஏன் உயிர் விடுவதைப் பற்றிப் பேசுகிறீர்கள்?”

உமாகாந்தன் சற்று மௌனமாயிருந்தான். “நான் இறப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. என் வாழ்க்கையில் இதற்குமுன் நான் இவ்வளவு சந்தோஷமாய் எப்போதும் இருந்ததில்லை. இந்த நிலைமையிலேயே என் வாழ்க்கை முடிவது நல்லதல்லவா? மறுபடி சிறைக்குப் போக என்னால் முடியாது; முடியவே முடியாது! அதுவும் இந்தப் பத்து நாள் உன்னுடன் இருந்து பழகிய பிறகு, இனிமேல் சிறைவாசத்தை என்னால் நினைக்கக் கூட முடியாது” என்றான்.

பவானியின் இருதய அந்தரங்கத்தில், தான் தற்சமயம் அநுபவிக்கும் சந்தோஷம் நீடித்திருப்பதற்குப் பெரிய இடையூறு ஒன்று காத்திருக்கிறது என்பது தெரிந்துதானிருந்தது. ஆனாலும் அந்த எண்ணத்துக்குத் தன் மனத்தில் இடங்கொடாமல் இருக்க முயன்றாள். வருங்காலத்தைப் பற்றி நினைக்கவே அவள் விரும்பவில்லை. நிகழ்காலத்தின் பேரின்பத்திலேயே முழுகியிருந்து, வருங்காலத்தை மறந்துவிட விரும்பினாள்.

ஆனால் இப்போது உமாவே அந்தப் பேச்சை எடுத்ததும், அவள் அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியிருந்தது.

“அந்த இரண்டு வழியைத் தவிர மூன்றாவது வழி எதுவும் இல்லையா?” என்று பவானி கேட்டாள்.

“என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை. ஏதாவது இருந்தாலும் பாரிஸ்டர் சேஷாத்ரியைப் போன்ற பப்ளிக் பிராஸிகியூடர்கள் இருக்கும் வரையில், அந்த வழி எனக்கில்லை. ஒன்று ஆயுள் பரியந்தம் சிறை; அல்லது மரணம், என் வரையில் நான் தீர்மானித்துவிட்டேன்.”

“எனக்கு அப்படித் தோன்றவில்லை. யோசனை செய்து ஏதாவது வழி கண்டுபிடிப்போம். இல்லை, மரணம் ஒன்றுதான் வழி என்றால், இருவரும் சேர்ந்தே உயிர்விடுவோம்” என்றாள் பவானி. பிறகு, உமாவுடன் வெகு நேரம் வாக்குவதம் செய்து, தன்னைக் கேளாமல் ஒன்றும் செய்வதில்லையென்று வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *