Kalki Short StoriesKalki TimesStory

Bhavani B.A.B.L Kalki | Kalki Times

அத்தியாயம் 9: சண்டமாருதம்

ஒரு நாள் சேஷாத்ரி பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவர், சட்டென்று கலவரமடைந்த குரலில், “இதைப் படித்தீர்களா?” என்று பிரணதார்த்தியைப் பார்த்துக் கேட்டார். பிரணதார்த்தி, பத்திரிகையை அவரிடமிருந்து வாங்கிக் குறிப்பிட்ட செய்தியைப் படித்தார்.

அதில், கோயமுத்தூர் சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் ஒருவன் இன்னும் பிடிபடவில்லையென்றும், அவன் நீலகிரி மலையில் எங்கேயோ ஒளிந்து திரிவதாகப் போலீஸார் ஊகித்துச் சுறுசுறுப்பாகத் தேடி வருகிறார்களென்றும், இது சம்பந்தமாகச் சில தடையங்கள் அவர்களுக்கு அகப்பட்டிருக்கின்றனவென்றும் கண்டிருந்தது.

இதைப் படித்துப் பிரணதார்த்தியும் அதிக கலவரமடைந்தார்.

“நாம் மூன்று பேரும் இப்போது சட்டப்படி பெரிய குற்றம் செய்து கொண்டிருக்கிறோம். சிறைக் கைதிக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கிறோம். இதற்குத் தண்டனை என்னவென்று உங்களுக்குத் தெரியுமல்லவா?” என்று சேஷாத்ரி கேட்டார்.

“என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்; எனக்குக் கவலையில்லை. உமாகாந்தனை நான் கைவிடப் போவதில்லையென்பது நிச்சயம்.”

“கைவிடாமல் நீங்கள் என்னதான் செய்யமுடியும்? எத்தனை நாள் தெரியாமலிருக்கும்? கட்டாயம் ஒரு நாள் பிடித்துவிடுவார்கள். அப்போது என்ன செய்வீர்கள்?”

“மிஸ்டர் சேஷாத்ரி! உங்களுக்கு இருக்கும் ஆத்திரத்தைப் பார்த்தால், நீங்களே போலீஸுக்கு எழுதிப் போட்டு விடுவீர்கள் போல் இருக்கிறதே?” என்றார் பிரணதார்த்தி.

சேஷாத்ரி சட்டென்று குனிந்து பத்திரிகையை படிக்கத் தொடங்கினார். அதனால் அவர் முகம் அப்போது விகாரமாய்க் கறுத்ததைப் பிரணதார்த்தி கவனிக்கவில்லை.

அன்றைய தினம் பவானியும் உமாகாந்தனும் மட்டும் உலாவுவதற்கு வெளியே சென்றிருந்தார்கள். வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிக தூரம் இவர்கள் போனார்கள்.

கூனூரில் பிரணதார்த்தியின் பங்களா மிகவும் தனிமையான ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருந்தது. அதற்குச் சமீபத்தில் அரை மைலுக்கு வேறு பங்களா கிடையாது. ஆகையால், அந்தப் பங்களாவைச் சுற்றியுள்ள மலை வழிகளில் சாதாரணமாய் யாரும் எதிர்ப்படுவது வழக்கமில்லை.

ஆனால், இன்று தாங்கள் செல்லும் வழியில் எதிர்முகமாய் இருவர் வருவதைக் கண்டதும் பவானியின் மனம் தயக்கமுற்றது. வேறு வழி திரும்புவதற்கும் அங்கு இடம் இல்லை. எதிரே வந்தவர்கள் சமீபித்தபோது, அவர்களில் ஒருவர் பவானிக்குத் தெரிந்த மனிதராயிருந்தார். அவர் சென்னையின் பிரபல வக்கீல்களில் ஒருவர். பக்கத்துப் பங்களாவுக்கு அவர் வந்திருப்பதாகப் பவானி கேள்விப் பட்டிருந்தாள். பவானியைத் தூரத்தில் பார்த்தவுடனேயே அவர் புன்னகை புரிந்து ஒரு கும்பிடு போட்டார். அருகில் நெருங்கியதும், உமாகாந்தனை அவர் ஒரு கணம் உற்று நோக்கிவிட்டு, “என்ன மிஸ்டர் சேஷாத்ரி! இது என்ன தமாஷ்! எப்போது நீங்கள் மீசையை எடுத்தீர்கள்?” என்று கேட்டார்.

உமாகாந்தன் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தான். பவானிக்கும் அவருடைய கேள்வி மிகுந்த ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. ஆயினும் அவள் சமாளித்துக் கொண்டு, “இவர் சேஷாத்ரியல்ல; சென்னையிலிருந்து வந்திருக்கும் என்னுடைய சிநேகிதர்” என்றாள்.

அதற்கு அந்த மனிதர், “நிஜமாகவா? என்ன ஆச்சரியம்! இப்படிப்பட்ட தவறு நான் எப்போதும் பண்ணியதில்லை. மன்னிக்கவேண்டும். ஒருவேளை சேஷாத்ரிக்கு ஏதாவது உறவோ?” என்று கேட்டார்.

“அதுவும் இல்லை” என்றாள் பவானி.

அதற்குள் வக்கீலுடன் வந்த இன்னொரு மனிதர், “இவரை நான் கூட எங்கேயோ பார்த்திருக்கிறேன் போல் இருக்கிறது. உங்கள் பேர் என்ன ஸார்” என்று கேட்டார்.

உமாகாந்தன் குழப்பத்துடன், “உங்களைப் பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லையே?” என்றான்.

“சரி, போய் வருகிறோம்” என்று பவானி விரைந்து கூறிவிட்டு மேலே நடக்கலானாள். பிறகு அவர்கள் சற்றுத் துரிதமாகவே நடந்து சீக்கிரத்தில் பங்களாவை அடைந்தார்கள். நடக்கும்போதெல்லாம் பவானியின் உள்ளம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. உமாகாந்தன் பேசிக் கொண்டு வந்ததொன்றும் அவள் காதில் ஏறவேயில்லை.

அன்றிரவு மலையில் பிரமாதமான காற்று அடித்தது. மரங்கள் தடார் படார் என்று முறிந்து விழுந்தன. பங்களாவின் மீது காற்று வேகமாய் மோதியபோது அது அஸ்திவாரத்திலிருந்து ஆடுவதுபோல் தோன்றியது. அந்தப் பங்களாவில் வசித்த ஒவ்வொருவர் உள்ளத்திலும் அதைவிடப் பெரிய சண்டமாருதம் அடித்துக் கொண்டிருந்தது.

மறுநாள் பொழுது விடிய, காற்றின் வேகம் சற்று அடங்கிற்று. இன்றைக்கோ நாளைக்கோ மழை தொடங்கிவிடும். “இனிமேல் தாமதிக்காது” என்றார் மலை அநுபவமுள்ள பிரணதார்த்தி.

காலையில் வீட்டு வேலைக்காரன் மார்க்கெட்டுக்குப் போயிருந்தான். அங்கே யாரோ ஒருவன் அவனிடம் பேச்சுக் கொடுத்து, பிரணதார்த்தியின் பங்களாவில் புது ஆள் யாராவது வந்திருக்கிறார்களா என்று கேட்டதாகவும், தனக்குத் தெரியாது என்று பதில் சொன்னதாகவும் அவன் திரும்பி வந்து தெரிவித்தான். அன்று பங்களாவுக்கு வ்ந்த தபால்காரன், “ஏன் ஸார்! யாரோ புதுசா இந்தப் பங்களாவுக்கு வந்திருக்கிறார்களாமே? அவர் பெயரென்ன? ஏதோ ரிஜிஸ்டர் தபால் வந்திருக்காம். போஸ்ட் மாஸ்டர் விசாரிச்சுண்டு வரச் சொன்னார்” என்றான்.

“இங்கே ஒருத்தரும் புதுசா வரவில்லை. எல்லாரும் பழைய மனிதர்கள் தான்” என்று பிரணதார்த்தி கோபமாய்ப் பதில் சொன்னார்.

சேஷாத்ரி அன்றெல்லாம் தம் அறையிலேயே உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். சாப்பிடும்போது கூட அவர் அதிகமாய் ஒன்றும் பேசவில்லை. தபால்காரன் விசாரித்ததைப் பற்றிப் பிரணதார்த்தி சொன்னார். “ஆமாம்; என் காதிலும் விழுந்தது” என்றார் சேஷாத்ரி. அதற்குமேல் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அவருடைய நடத்தை பிரணதார்த்திக்கு அர்த்தமாகவேயில்லை. அவர் மேல் அளவில்லாத கோபம் பொங்கி வந்தது. ஆனால் அவரை என்ன செய்வதென்றும் தெரியவில்லை.

அன்று மத்தியானம் இவர்கள் மூன்று பேரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, எல்லோருடைய மனத்திலும் குமுறிக் கொண்டிருந்த விஷயத்தை உமாகாந்தனே பிரஸ்தாபித்தான்.

“உங்களுடைய மனம் எனக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் பிரயோஜனமில்லை. என்னை உங்களால் காப்பாற்ற முடியாது. நான் போகிறேன்; விடை கொடுங்கள்” என்றான்.

“போகிறாயா? எங்கே போவாய்? இன்றிரவோ, நாளையோ மழை பிடித்துக் கொள்ளப் போகிறது. மழை வந்துவிட்டால், மலைப்பிரதேசத்தில் திறந்த வெளியில் அரை மணி கூட ஜீவித்திருக்க முடியாது” என்றார் பிரணதார்த்தி.

“ஜீவித்திருப்பதற்குப் போனால் அல்லவா அந்தக் கவலை…”

“என்ன, என்ன சொன்னாய்?” என்று பிரணதார்த்தி பதறிக் கொண்டு கேட்டார்.

“இன்னொரு தடவை சிறைக்குப் போய் என்னால் வாழ முடியாது. எப்படியும் ஒரு நாள் உயிரை விடுவேன். இங்கே போலீஸ் வந்து என்னைக் கைது செய்து உங்களுக்கெல்லாம் மனக்கஷ்டமும் அவமானமும் ஏற்பட நான் ஏன் காரணமாயிருக்கவேண்டும்? நீங்கள் எனக்குச் செய்த உபகாரத்துக்கு அப்படியா கைம்மாறு செய்வது?” என்றான் உமா.

“எங்களிடம் உனக்கு நன்றியிருப்பது உண்மையானால், இப்போது நான் சொல்வதைக் கேட்க வேண்டும். உயிர்விடும் பேச்சை மறந்துவிடு. போலீஸார் வந்தால் பேசாமல் அவர்களுடன் போ. நான் ஆயிற்று உன்னை விடுதலை செய்வதற்கு” என்று பிரணதார்த்தி ஆவேசத்துடன் கூறினார்.

“முடியாத காரியத்தைத் தாங்கள் சொல்கிறீர்கள். தலைவிதியை மாற்ற முடியுமா? விதியில் முன்னெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. இப்போது அப்படியில்லை. இந்தப் பங்களாவில் எப்போது சேஷாத்ரியைப் பார்த்தேனோ அப்போதே விதியின் பலத்தை நான் உணர்ந்து கொண்டேன்.”

“அதெல்லாம் சுத்தத் தப்பு ஆயிரம் விதிகளிலிருந்தும், நூறாயிரம் சேஷாத்ரிகளிடமிருந்தும் நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். நேரே ஹைகோர்ட் ஜட்ஜுகளிடம் போகிறேன். கவர்னரைப் பார்க்கிறேன். இந்தியா மந்திரி வரையில் போய்ப் பார்த்தேனும் உன்னை விடுதலை செய்கிறேன். நீ மட்டும் பொறுமையாய் இருக்கவேண்டும். இத்தனை நாள் கஷ்டப்பட்டு விட்டாய்; இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்.”

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது மணி நாலு இருக்கும். சேஷாத்ரி வாசற் பக்கம் போவதைப் பவானி பார்த்தாள். அவள் எழுந்து, “சித்தப்பா! நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். நான் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன்” என்று கூறிவிட்டுப் போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *