Kalki Short StoriesKalki TimesStory

Chiranjeevik Kathai Kalki | Kalki Times

Chiranjeevik Kathai Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

சிரஞ்சீவிக் கதை

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Chiranjeevik Kathai Kalki

தயவு செய்து தப்பாக எண்ணிக் கொள்ள வேண்டாம். நான் எழுதப் போகிற இந்தக் கதை “சிரஞ்சீவிக் கதை” என்பதாக நான் உரிமை கொண்டாடவில்லை. உண்மையில், இது தீர்க்காயுள் பெற்ற கதை கூட அன்று. இதனுடைய ஆயுள் மூன்று நிமிஷந்தான், வேகமாய்ப் படிப்பவர்களுக்கு. எழுத்துக் கூட்டிப் படித்தால் கூட ஐந்து நிமிஷந்தான் இக்கதையின் வாழ்வு.

இந்தக் கதைக்குத் தலைப்பாக அமைந்த “சிரஞ்சீவிக் கதை” ஒரு ஹாஸ்யப் பத்திரிகையிலே வெளியானது. அதில், ஒரு ஸ்திரீ எப்படித் தன் நாத்தனார் மீது வஞ்சம் தீர்க்கும் பொருட்டுத் தன் மூன்று குழந்தைகளைக் கொன்று, நான்கு பூனைக் குட்டிகளைக் கொன்று, தன்னையும் கொன்று கொண்டாள் என்பதும், இந்தச் சம்பவங்களினால் மனமுடைந்த அவளுடைய கணவன் வீதியோடு போகும்போது எப்படி ஒரு டிராம் வண்டி அவன் மீது ஏறி அவனை உடல் வேறு தலை வேறு ஆக்கிற்று என்பதும் ஆச்சரியகரமான முறையில் வியக்கத்தக்க நடையில் நகைச்சுவை ததும்ப விவரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கதையின் தலைப்பு “அமிர்தபானம்”. தலைப்புக்கு மேலே பத்திரிகாசிரியர் கட்டங்கட்டி விசேஷக் குறிப்பு ஒன்றும் வெளியிட்டிருந்தார்.

அந்த விசேஷக் குறிப்பின் முதல் வரியைப் படித்ததுதான் என்னுடைய கதாநாயகர் ஸ்ரி மான் மார்க்கண்ட முதலியார் செய்த தப்பிதம். பத்திரிகை படிக்கும் விஷயத்தில் அவர் தம் வாணாளில் செய்த முதல் தப்பிதம் அது தான். கடைசித் தப்பிதமும் அதுவேதான்.

மேற்படி தப்பிதம் கூட அவர் வேண்டுமென்று மனமாரச் செய்யவில்லை. பணம் கொடுத்துப் பத்திரிகை வாங்கி, ஊசியைப் பெயர்த்து எடுத்து, பக்கங்களைப் புரட்டி வாசிப்பதற்கு வேண்டிய உற்சாகம் அவரிடம் லவலேசமும் கிடையாது. சாயங்காலம் ஆபீஸ் விட்டதும் வழக்கம் போல் மயிலாப்பூர் டிராம் வண்டியில் ஏறி உட்கார்ந்தார். வழியில் மௌண்ட் ரோட்டில் அந்த வண்டியில் ஏறி அவர் பக்கத்தில் உட்கார்ந்த ஒரு மனுஷன் கையில் மேற்படி பத்திரிகை இருந்தது. அந்தச் சிரஞ்சீவிக் கதை பிரசுரமாயிருந்த பக்கத்தை அவன் பிரித்து வைத்துக் கொண்டிருந்தான். தற்செயலாக ஸ்ரி மான் மார்க்கண்ட முதலியாருடைய பார்வை அந்தப் பக்கத்தின் மேல் அந்தக் கட்டத்திற்குள் விழுந்தது.

இது ஒரு சிரஞ்சீவிக் கதை. இதன் ஆசிரியர் ஆயுள் காலத்தில் இந்தக் கதை சாகாது. எனெனில், அவர் நம் உடம்பில் உயிருள்ள வரையில் தினம் ஒரு தடவையாவது, ஒருவரிடமாவது, “என்னுடைய ‘அமிர்தபானம்’ என்னும் கதையை வாசித்தாயா?” என்று கேட்டுக் கொண்டு தானிருப்பார்!…

“இது ஒரு சிரஞ்சீவிக் கதை… ” என்று முதலியார் படித்தார். அவ்வளவு தான்; அதற்குமேல் அவருடைய பார்வை சொல்லவில்லை! ஆனால் மனம் என்னவோ வேலை செய்யத் தொடங்கிவிட்டது!

“சிரஞ்சீவி சிரஞ்சீவி இந்த உலகத்தில் சிரஞ்சீவியாயிருப்பது சாத்தியமா? ஏன் சாத்தியமில்லை? சித்த புருஷர்கள் எத்தனையோ பேர் இல்லையா? சிரஞ்சீவியாயில்லா விட்டாலும் நூறு வயது நிச்சயம் இருக்கலாம் ஏன் இருக்கக் கூடாது? ‘மனிதன் சாக வேண்டுமா’ என்னும் புத்தகத்தில் டாக்டர் வான் டிண்டார்மஸ் என்ன சொல்லியிருக்கிறார்?… “

ஸ்ரி மான் மார்க்கண்ட முதலியாருக்கு அன்று தான் ஐம்பது வயது பூர்த்தியாகி இருந்தது. மறுநாள் பொழுது விடிந்தால் ஐம்பத்தோராவது வயது பிறக்கும். அவர் மௌண்ட் ரோட்டுக்கும் ராயபேட்டைக்கும் மத்தியிலுள்ள புதுப்பேட்டைவாசி. அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே வாழ்ந்து வருபவர். அவருடைய வாழ்க்கைத் துணைவி ஒரே ஒரு புதல்வியை விட்டு விட்டுக் காலஞ் சென்று ஏழெட்டு வருஷங்களாயின. பெண்ணும் கலியாணமாகி ஜோலார்பேட்டையிலுள்ள புருஷன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். ஆகவே, முதலியார் இப்போது தன்னந்தனியாகவே இருந்து வந்தார். ஒரு வீட்டு மெத்தை அறையை மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் வசித்தார். அடுத்த வீதியில் அவருடைய தங்கை தன் புருஷன் குழந்தைகளுடன் சம்சாரம் நடத்தி வந்தாள். அவர்கள் வீட்டிலே தான் இவருக்கு இரண்டு வேளையும் சாப்பாடு. முதலியார் மேல் அவருடைய தங்கைக்கு அதிகப் பிரியம். ஏழைக் குடும்பம்; ஆகையால் முதலியார் அங்கே சாப்பிடுவதால் கொஞ்சம் சௌகரியம் ஏற்பட்டு வந்தது; அவருடைய காலத்துக்குப் பிறகு இன்னும் அதிக சௌகரியத்தை எதிர் பார்த்தார்கள்.

மார்க்கண்ட முதலியார் அன்று மாலை தமது அறைக்கு வந்து சேர்ந்ததும், சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு தமது வாழ்க்கையில் சென்ற காலத்தையும் வருங்காலத்தையும் பற்றித் தொடர்ந்து எண்ணமிடத் தொடங்கினார்: “ஐம்பது வயது ஒரு வயதா? மனிதனுடைய பூரண ஆயுளில் பாதிதான் ஆயிற்று. நியாயமாக இன்னும் ஐம்பது வருஷம் இருக்கலாம்; நாற்பது வருஷமாவது இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி வாழ்க்கையைச் செப்பனிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனம் உதவாது. இதற்கு முன் பல தடவை தேகப் பயிற்சிகளை ஆரம்பித்து ஆரம்பித்து இடையிடையே நிறுத்தியாகி விட்டது. இனிமேல் அப்படி நிறுத்தக் கூடாது. நாளை முதல் தொடர்ச்சியாய் இடைவிடாமல் எல்லாம் செய்து வரவேண்டும். சீமையிலே வெள்ளைக்காரர்கள் அறுபது வயதுக்கு மேல் கலியாணம் செய்து கொள்கிறார்களே!… ” இப்படி எண்ணியபோது முதலியாருக்குத் தம்மையறியாமல் புன்னகை வந்தது. கீழே வாசல்புறத்து அறையில் குடியிருந்த கார்ப்பரேஷன் நர்ஸு நவமணி அம்மாள் அவருடைய மனக் கண்ணின் முன் வந்தாள். தாம் குறுக்கே நெடுக்கே போகும் போது அவள் ஆவல் ததும்புகிற கண்களுடன் தம்மைப் பார்ப்பதும் பெருமூச்சு விடுவதும் எல்லாம் ஞாபகம் வந்தன. முதலில், “இதென்ன உபத்திரவம்? இந்த வீட்டைவிட்டுப் போய்விடலாமா?” என்று நினைத்தார். பிறகு, “ரொம்ப நன்றாயிருக்கிறது! இதற்குப் பயந்தா இத்தனை நாள் இருந்த விட்டைவிட்டுப் போவது? அவள் தான் போகட்டுமே?” என்று எண்ணினார். கொஞ்ச நாளைக்கெல்லாம், குறுக்கே நெடுக்கே போகும் போது அவருடைய கண்களே அந்த நர்ஸு இருக்கிறாளோ என்று தேடத் தொடங்கின. இன்னும் சில நாளைக்குப் பிறகு, நவமணி அம்மாள் பெருமூச்சு விடும் போது இவருக்கும் பெருமூச்சு வரத் தொடங்கியது.

“எதற்காக இப்படி நாம் தனிமை வாழ்க்கை நடத்த வேண்டும்? ஏன் கலியாணம் செய்து கொண்டு சந்தோஷமாய் வாழக் கூடாது?” என்று சில சமயம் தோன்றும். சில சமயம் இப்படியும் எண்ணமிடுவார்: “எல்லாரும் என்ன சொல்வார்கள்? சிரிக்கமாட்டார்களா? ஐம்பது வயதுக்கு மேல் கலியாணம்! அதிலும் இன்னும் சிலரைப்போல் தேக நிலைமையாவது சரியாயிருக்கிறதா? தலை நரைத்து எத்தனையோ வருஷமாயிற்று. கொஞ்ச நாளாகத் தொந்தி ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ வளர்ந்து வருகிறது. தள்ளாமை அதிகமாயிருக்கிறது. மாடிப்படி ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக ஏறினால் மூச்சு வாங்குகிறது. இந்த லட்சணத்தில் கலியாணமா? ஹும்! கலியாணம்? நல்ல தமாஷ்! கல்யாணம்! சீ!”

இவ்வாறு பல பல எண்ணங்களினால் சில காலமாக அலைக்கப் பெற்று வந்த ஸ்ரி மான் மார்க்கண்ட முதலியார் இன்று ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தார். “ஆறு மாதம் ஒழுங்கான வாழ்க்கை நடத்துவது; அதற்குப் பிறகு தேக நிலைமைக்குத் தகுந்தபடி யோசித்து முடிவு செய்வது” என்பது தான் அந்தத் தீர்மானம்.

இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் முதலியார் சட்டென்று எழுந்திருந்து, நிமிர்ந்து உட்கார்ந்து, ஒழுங்கான வாழ்க்கைக்குரிய திட்டங்களை காகிதத்தில் எழுதத் தொடங்கினார்:

  1. ஆ கார நியமம் விடமின் ஏ பி ஸி டி இ கீரை (ரொம்ப முக்கியம்) டொமாடோ (பச்சை) ராத்திரி கோதுமை ரொட்டி.
  2. தொட்டி ஸ்நானம் (தினம் அரைமணிக்குக் குறையாமல்)
  3. யோகாஸனம் பத்மாஸனம், சிரஸாஸனம், சர்வாங்காஸனம். (முதலில் எது ஆரம்பிக்கலாம்?)
  4. பிரணாயாமம் (பூரகம் எட்டு, கும்பகம் ஆறு, ரேசகம் பத்து)
  5. தேகாப்பியாசம் (பத்து தண்டால், பதினைந்து பஸ்கி. வாரத்துக்கு இரண்டு தண்டாலும் மூன்று பஸ்கியும் அதிகமாக்கலாம்.) மாலையில் கடற்கரை காற்று (மிக மிக அவசியம்)
  6. மருந்து மகரத்வஜம், சியவனப்ராஸம் (அவசியந்தானா?)

ஸ்ரி மான் மார்க்கண்ட முதலியார் புத்தகம் படித்து வீணாகக் கண்ணைக் கெடுத்துக் கொள்வது கிடையாது என்று சொல்லியிருக்கிறேன். தேகாரோக்கியத்தைப் பற்றி புத்தகங்கள் மட்டும் இதற்கு விலக்கு. அவருடைய பழைய அலமாரியில் இருந்த சுமார் நூறு புத்தகங்களும் தேகத்தைப் பற்றியவை தான். இயற்கை வைத்தியம் சம்பந்தமாக, டாக்டர் கூன் என்னும் ஜெர்மானியர் புத்தகம் முதல் புதுக்கோட்டை லக்ஷ்மண சர்மா புத்தகம் வரையில் அவர் அலமாரியில் இருந்தன. மருந்து வைத்தியம் சம்பந்தமாக மணிசங்கர் கோவிந்தஜியின் ‘காம சாஸ்திரம்’ முதல், வேங்கடரமணா டிஸ்பென்ஸரி மருந்து கேட்லாக் வரையில் அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இன்னும் யோகாஸனங்கள், தேகாப்பியாச முறைகள், மனோ சிகிச்சை முறைகள், மெஸ்மெரிஸ ஹிப்னாடிஸ வித்தைகள் ஆகியவற்றைப் பற்றிய புத்தகங்கங்களும் அவரிடம் இருந்தன.

முதலியாருக்கு முப்பதாவது வயதிலேயே இந்த மாதிரி பிரமை ஏற்பட்டது. அப்போதிருந்து ஏதாவது ஒரு புதிய புத்தகம் ஒரு புதிய சிகிச்சை முறையைப் பற்றித் தெரிய வந்ததும் அதை உடனே அனுஷ்டிக்கத் தொடங்குவார். ஆனால் எல்லாம் நாலைந்து நாளைக்குத்தான்; பிறகு ஏதாவது இடையூறு வரும். அசிரத்தை ஏற்பட்டுவிடும். இவ்வாறு வருஷத்திற்கு நாலைந்து தடவை அவர் ‘ஒழுங்குபட்ட வாழ்வு’ ஆரம்பித்து, சில தினங்களில் விட்டுவிடுவது வழக்கம்.

இந்தத் தடவை அப்படிச் செய்வதில்லையென்று மார்க்கண்ட முதலியார் திடமாக உறுதி செய்து கொண்டார். இன்றுடன் ஐம்பது வயது பூர்த்தியாகிறது; அதாவது, புருஷாயுஸில் சரிபாதிதான். நாளைய தினம் ஐம்பத்தோராவது வயது பிறக்கிறது. வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொண்டால் இன்னும் ஐம்பது வருஷம் உயிர் வாழலாம். நாளை முதல் எல்லாம் சரியாக நடத்தி வரவேண்டும்.

அப்போது முதலியாருக்கு ஓர் அருமையான யோசனை தோன்றிற்று. நாளை முதல் ஏன்? இன்றே ஏன் ஆரம்பிக்கக் கூடாது? நல்ல தீர்மானத்தை ஏன் தள்ளிப்போட வேண்டும்? பேஷ், அதுதான் சரி!

உடனே நாற்காலியிலிருந்து கீழே இறங்கித் தரையில் உட்கார்ந்தார். பத்மாஸனம் போடுவதற்காகக் கால்களை மடக்க முயன்றார். அதற்கு ஓர் இடையூறு ஏற்பட்டது. “அப்படியா சேதி, தம்பி! பொறு, பொறு! இன்னும் பத்து நாளில் உன்னை இருந்த இடம் தெரியாமல் செய்து விடுகிறேன், பார்!” என்றார். இது அவர் தமது தொந்தியைப் பார்த்துச் சொன்னது. கால்களை மடக்கிப் பத்மாஸனம் போட இடையூறாயிருந்தது அவருடைய தொந்திதான்.

பிறகு, எழுந்திருந்து சுவரோரம் சென்று, சிரஸாஸனம் போட முயன்றார். தலையைக் கீழே வைத்து வெகு பிரயாசையுடன் கால்களை மேலே தூக்கிச் சுவர் மீது நிறுத்தினார். ஒரு நிமிஷம் கால்களைச் சுவரண்டையிலிருந்து நகர்த்தி, பக்க ஆதாரமின்றி நிற்க முயன்றார். தொபுகடீர் என்று கீழே விழுந்தார். முதுகிலே பளீர் என்று அடிபட்டது. அப்பாடா! அம்மாடி! சிரஸாஸனம் என்றால் இலேசில்லை.

இன்றைக்கு இவ்வளவு போதும். இப்போது என்ன செய்யலாம்? மணி பார்த்தார். ஆறு அடிக்கப் பத்து நிமிஷம் இருந்தது. சரி, கடற்கரைக்குப் போய் உலாவிவிட்டு வரலாம். அதில், ஆஸனம் போடுவதிலுள்ள கஷ்டங்கள் ஒன்றும் இல்லை இப்படித் தீர்மானித்து, மேல் துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

ஸ்ரி மான் மார்க்கண்ட முதலியார் தமது தேகத்துக்குப் புத்துயிர் அளிப்பதற்காகத் தீவிர முயற்சி தொடங்கியிருந்த அதே காலத்தில் பாரத தேசத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடனே ஒரு பெரிய இயக்கம் ஆரம்பமாகியிருந்தது. அந்த இயக்கத்தை ‘உப்பு சத்தியாகிரஹம்’ என்றார்கள். அதை ஆரம்பித்த மகா புருஷரை ஒரு வாரத்திற்கு முன்பு தான் கைது செய்து சிறைக்கு அனுப்பியிருந்தார்கள். சென்ற இரண்டு மூன்று தினங்களாகச் சென்னையிலும் அப்பேரியக்கத்தின் எதிரொலி கேட்டுக் கொண்டிருந்தது.

முந்தாநாள், திருவல்லிக்கேணிக் கடற்கரையில் காந்தி குல்லா அணிந்த காங்கிரஸ் தொண்டர்கள் பத்துப் பேர் நாலு அடுப்பு மூட்டி, நாலு குடத்தில் கடல் நீரைக் கொண்டு வந்து அடுப்பு மீது வைத்துக் காய்ச்சினார்கள். இதை வேடிக்கை பார்க்க நூறு பேர் வந்து கூடினார்கள். குடங்களின் அடியில் அழுக்கும் குப்பையுமாகக் கன்னங்கரேலென்று கொஞ்சம் உப்பு தங்கியது. அதைத் தொண்டர்கள் அங்கே கூடியிருப்பவர்களுக்கு வினியோகித்தார்கள். அவர்கள் அதை ருசி பார்த்துவிட்டு, குடலைப் பிடுங்கிக் கொண்டு வந்த வாந்தியை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு வீடு நோக்கி விரைந்து சென்றார்கள். தொண்டர்களோ,

‘ஜெய பேரிகை கொட்டடா!’

என்று பாடிக்கொண்டு குதூகலத்துடன் விடுதிக்குச் சென்றார்கள்.

அன்றிரவு கவர்ன்மெண்ட் ஹவுஸில் ஓர் அந்தரங்கக் கூட்டம் நடந்தது. கவர்னர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், போலீஸ் கமிஷனர், லா மெம்பர், ஹோம் மெம்பர் இவர்கள் கூடி ஆலோசித்தார்கள். “முளையிலேயே கிள்ளி விடவேண்டும்” என்று போலீஸ் இலாகா சொல்லிற்று. ஹோம் மெம்பரும் லா மெம்பரும், “நம் ஊரில் ஒன்றும் நடக்கவில்லையென்று பெயர் வாங்குவது தான் நமக்குக் கௌரவம்; நாம் சும்மா இருந்தால் இரண்டு நாளைக்குப் பிறகு தானே அடங்கிவிடும்” என்றார்கள். கவர்னரும் இவர்களுடைய அபிப்பிராயத்தையே ஆதரித்தார்.

நேற்றுச் சாயங்காலம் ஐம்பது காந்தி குல்லாத் தொண்டர்கள் பஜனை பாடிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். பத்து அடுப்பு வைத்துப் பத்துக் குடங்களில் உப்புக் காய்ச்சினார்கள். பத்தாயிரம் ஜனங்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் மாதிரிக்குக் கொஞ்சம் உப்பு வாங்கிக் கொள்வதற்காகப் போட்டியிட்ட போது, பெரிய ரகளையாகிவிட்டது.

ராத்திரி கவர்ன்மெண்ட் ஹவுஸில் மறுபடியும் அந்தரங்கக் கூட்டம் நடந்தது. “நாளைக்குக் கூட்டத்தைக் கலைக்க உத்தரவு கொடுக்காவிட்டால் நகரின் அமைதிக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல” என்று போலீஸ் கமிஷனரும், இன்ஸ்பெக்டர் ஜெனரலும் சொன்னார்கள். அந்தப் பொறுப்பை ஏற்க மற்றவர்கள் சித்தமாயில்லை. மேலும், அன்றைய சாயங்காலம் வெளியான ஆங்கிலோ இந்தியப் பத்திரிகை, “சென்னையில் பிரிட்டிஷ் ராஜ்யம் நடக்கிறதா? இல்லையா?” என்று ஒரு கேள்வி கேட்டிருந்தது. எனவே, மறுநாள் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்குப் போலீஸ் இலாகாவுக்குச் சர்வாதிகாரம் அளிக்கப்பட்டது.

இந்த அந்தரங்கக் கூட்டத்தின் விஷயமும், முடிவும் சென்னைவாசிகளுக்கு எப்படித் தெரியும்? அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், இரண்டு நாளாய்க் காங்கிரஸ் தொண்டர்கள் உப்புக் காய்ச்சுகிறார்கள். அவர்களை போலீஸார் ஒன்றும் செய்யவில்லையென்பதே. ஆகவே அன்று சாயங்காலம் சென்னைவாசிகளில் முக்கால்வாசிப் பேர் கடற்கரையில் வந்து கூடிவிட்டார்கள். வடக்கே இரும்புப் பாலத்திலிருந்து தெற்கே குவின் மேரிஸ் காலேஜ் வரையில் கிழக்கே ஜலக்கரையிலிருந்து மேற்கே கோயமுத்தூர் கிருஷ்ணையர் ஹோட்டல் வரையில் ஒரே ஜனக்கூட்டந்தான்.

போலீஸ் வீரர்கள் அணிவகுத்துக் கடற்கரைச் சாலை வழியாக நாலைந்து தடவை குறுக்கும் நெடுக்கும் போய் வந்தனர். ஒன்றும் பிரயோஜனமில்லை; கூட்டம் கலையவில்லை.

அன்று உப்புக் காய்ச்சப்படவில்லை; தொண்டர்கள் கடற்கரைக்கு வரவேயில்லை! எனெனில் அவர்கள் விடுதியிலிருந்து கிளம்பும்போதே கைது செய்யப்பட்டனர். இந்த விவரம் ஜனங்களுக்குத் தெரியாது. அவர்கள் ஒருவரையொருவர், ‘என்ன நடக்கிறது? என்ன நடக்கப்போகிறது?’ என்று கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் பதில் மட்டும் கிடைக்கவில்லை. ‘என் என்றார்க்கு என் என் என்றார் எய்தியதரிந்திலாதார்!’

ஸ்ரி மான் மார்க்கண்ட முதலியார், பைகிராப்ட்ஸ் சாலை வழியாகக் கடற்கரைக்கு வந்து கொண்டிருந்தவர், இந்தக் கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டார். அநேகம் பேரை அவர், “என்ன விசேஷம்? எதற்காகக் கூட்டம்?” என்று கேட்டார். “காங்கிரஸ் கலாட்டா” என்றார்கள் சிலர். “காந்தி குல்லாக்காரர்கள் உப்புக் காச்சுகிறார்கள்” என்றார்கள் சிலர். ஆனால் இவ்வளவு பெரிய ஜனக் கூட்டத்திற்கு என்ன காரணம் என்பதற்கு மட்டும் யாரும் திருப்திகரமான பதில் சொல்லவில்லை.

எது எப்படியானாலும் தாம் அன்று கடற்காற்று வாங்காமல் போவதில்லையென்று மார்க்கண்ட முதலியார் தீர்மானித்திருந்தார். கூட்டத்தில் புகுந்து நெருக்கித் தள்ளிக் கொண்டு மேலே மேலே சென்று, கடைசியில் கடற்கரைக்கு வெகு சமீபமாக வந்துவிட்டார்.

அந்தச் சமயத்தில் போலீஸ் படை ஆறாவது தடவையாகக் கடற்கரைச் சாலையில் ‘மார்ச்’ செய்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் போலீஸ் படையின் மத்தியில் எங்கிருந்தோ மாயமாக ஒரு கல் வந்து விழுந்தது; அப்புறம் இன்னொரு கல் வந்து விழுந்தது. மூன்றாவது கல்லும் விழுந்தது.

அடுத்த கணத்தில் போலீஸ் படை நின்றது. ‘ஷுட்!’ என்று உத்தரவு பிறந்தது.

அந்தப் போலீஸ்காரர்களின் துப்பாக்கிகளிலிருந்து எந்தக் கணத்தில் குண்டுகள் கிளம்பினவோ, அதே கணத்தில், ஓர் இம்மியும் வித்தியாசம் இல்லாமல், மார்க்கண்ட முதலியார் கூட்டத்தை விலக்கித் தள்ளிக் கொண்டு தலையை வெளியே நீட்டினார். தக்ஷணம் அவருடைய கண்களுக்கெதிரில் ஆயிரம் மின்னலின் பிரகாசம் தோன்றிற்று. அவருடைய காதில் ஆயிரம் இடிகள் சேர்ந்தாற்போல் இடிக்கும் சப்தம் கேட்டது. அடுத்த கணத்தில் அவர் சுருண்டு கீழே விழுந்தார்.

அன்று இரவு துப்பாக்கிப் பிரயோகத்தினால் காயமடைந்தவர்களையெல்லாம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று பரிசோதித்தபோது, முதலியாருடைய ஜீவன் ஒரு விநாடி கூடத் தாமதிக்காமல் குண்டு பட்டதும் உடலை விட்டு சென்றிருக்க வேண்டும் என்று தெரிய வந்தது.

சத்தியாகிரஹ இயக்கமெல்லாம் ஒருவாறு அடங்கிய பின்னர், அன்றைய தினம் கடற்கரையில் போலீஸ் துப்பாக்கிக் குண்டினால் உயிர் நீத்த நிரபராதிகளின் ஞாபகார்த்தமாக ஏதாவது செய்ய வேண்டுமென்று சில பிரமுகர்கள் முயற்சி செய்தார்கள். கார்ப்பொரேஷன் கூட்டத்தில், ஒரு காங்கிரஸ் கௌன்ஸிலர் பின்வரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

“கடற்கரைத் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிர் துறந்த ஸ்ரி மான் மார்க்கண்ட முதலியாரின் ஞாபகார்த்தமாக, அவர் புதுப்பேட்டையில் வெகு காலமாக வசித்து வந்த சந்துக்கு, இப்போதுள்ள ‘ஜாம்பவந்த லாலா சந்து’ என்ற பெயரை நீக்கி விட்டு, ‘மார்க்கண்ட முதலியார் தெரு’ என்று பெயர் வைக்க வேண்டியது. “

தீர்மானம் ஏகமனதாக நிறைவேறி அமுலுக்கும் வந்தது.

அந்தப் பழைய மார்க்கண்டனைப் போலவே, என்னுடைய கதாநாயகர் ஸ்ரி மான் மார்க்கண்ட முதலியாரும் என்றும் ஐம்பது வயதுடையவராகச் சிரஞ்சீவிப் பட்டம் அடைந்த வரலாறு இதுதான்.

இத்துடன்

அமரர் கல்கியின் சிரஞ்சீவிக் கதை

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Chiranjeevik Kathai Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,chiranjeevik kathai Audiboook,chiranjeevik kathai,chiranjeevik kathai Kalki,Kalki chiranjeevik kathai,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *