Engal Oor Sangeetha Potty Kalki | Kalki Times
Engal Oor Sangeetha Potty Kalki
Engal Oor Sangeetha Potty Kalki
Mr and Mrs Tamilan Presents Kalki Times
அமரர் கல்கியின் சிறு கதைகள்
எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
கல்கி
Engal Oor Sangeetha Potty Kalki
“கேட்டீரா சங்கதியை” என்று கேட்டுக் கொண்டே, கபாலி சுந்தரமய்யர் விஜயம் செய்தார்.
அவர் விஜயமாகும் விஷயத்தை ஜவ்வாது ‘நெடி’ அரை நாழிகைக்கு முன்னமே தெரிவித்து விட்டது. அந்த நெடியினால் நான் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் போது, “கேட்டீரா சங்கதியை” என்றார் மறுபடியும்.
“போட்டால் தானே கேட்கலாம்!” என்றேன் எரிச்சலுடன்.
“என்னத்தைப் போட்டால் கேட்கலாம்?” என்று சுந்தரமய்யர் முகத்தைச் சுளுக்கினார்.
“சங்கதியைப் போட்டால் கேட்கலாம். நம் ஊர் சங்கீத சபையில் கச்சேரி நடந்துதான் ஒரு யுகம் ஆகிறதே! பாட்டு என்கிற நாமதேயத்தையே காணோம்; சங்கதிக்கு எங்கே போகிறது?” என்றேன்.
“அதைத்தானே சொல்ல வந்தேன்!” என்றார் சுந்தரமய்யர்.
“சொல்லிவிட்டுப் போங்களேன்!” என்றேன்.
“நம் சங்கீத சபைக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது ஸார்! அனந்தராமன், ஐ சி எஸ் நம் ஊருக்கு மாற்றலாகி வரப் போகிறாராம்!” என்றார்.
நான் உட்கார்ந்தபடியே ஒரு குதி குதித்து, “எந்த அனந்தராமன்! ஆபோஹி அனந்தராமனா?” என்று கேட்டேன்.
“ஆமாம்; ஆபோஹி அனந்தராமனேதான்?”
“சபாஷ்! அப்படியானால் என் ஆறுமாதத்துச் சந்தா பாக்கியையும் எடுத்துக் கொள்ளும்!” என்றேன்.
சுந்தரமய்யர் போய்விட்டார். அவர் போன பிறகு ஒரு புட்டி மண்ணெண்ணெய் கொண்டுவரச் சொல்லித் தெளித்த பிறகு தான் ஜவ்வாது வாசனை போயிற்று. எனக்கும் வேலையில் மனத்தை செலுத்த முடிந்தது!
கபாலி சுந்தரமய்யருக்கு சங்கீத வித்வான்களுடைய பழக்கத்தினால் தான் ஜவ்வாது பழக்கமும் ஏற்பட்டது. சென்ற முப்பது வருஷ காலமாக அவர் எங்களூர் சங்கீத சபையின் காரியதரிசி. பொறாமை கொண்ட சிலர் அவ்வப்போது அவரை அந்தப் பதவியிலிருந்து விரட்டி விட முயற்சி செய்ததுண்டு. ஆனால், மூன்று மாதத்துக்கெல்லாம் அவர்களே சுந்தரமய்யரிடம் சென்று காரியதரிசிப் பதவியை ஒப்புக் கொள்ளும்படி கெஞ்சுவார்கள்.
சுந்தரமய்யரை சங்கீத உலகின் ஜாம்பவான் என்றே சொல்ல வேண்டும். “கோனேரி ராஜபுரம் வைத்தாவுக்கு இந்தக் கையால் பதினேழரை ரூபாய் எண்ணிக் கொடுத்தேன். திருக்கோடி காவல் கிருஷ்ணய்யருக்கு இருபத்தாறேகால் ரூபாய் எண்ணிக் கொடுத்தேன். இப்போது என்னடா என்றால் தம்பூராச் சுருதி கூட்டத் தெரியாதவன்களெல்லாம் வித்வான்கள் என்று வந்து ‘நூறு வேணும், நூற்றைம்பது வேணும்’ என்று கேட்கிறான்கள்” என்று சுந்தரமய்யர் அடிக்கடி புகார் சொல்வார். ஆனால் அந்த ‘தம்பூரா’ சுருதி கூட்டத் தெரியாத வித்வான்கள் வந்து விட்டால், அவர் படுத்துகிற பாடும், செய்கிற உபசாரமும், பக்கத்திலிருப்பவர்களை மிரட்டும் மிரட்டலும் அசாத்தியமாயிருக்கும். “காலத்துக்கேற்ற கோலம் போட வேண்டியிருக்கு ஸார்; நாய் வேஷம் போட்டால் குலைக்காமல் முடியுமா!” என்று சமாதானம் சொல்வார்.
எப்போதும் சுந்தரமய்யருடைய சங்கீத ஊக்கம் ஒரே மாதிரியாயிருந்தாலும் எங்களூர் சங்கீத சபை சில சமயம் ரொம்ப ஜோராய் நடக்கும். சில சமயம் படுத்துத் தூங்கிப் போய்விடும். சபை ஜோராய் நடப்பதும், தூங்கி வழிவதும் அவ்வப்போது எங்கள் ஊருக்கு வரும் பெரிய உத்தியோகஸ்தர்களைப் பொறுத்தது என்று சொல்லலாம். ஜில்லா கலெக்டரோ, ஸெஷன்ஸ் ஜட்ஜோ, சங்கீத அபிமானமுள்ளவர்களாய் வந்து விட்டால், அப்போது சபை நடக்கிறவிதமே ஒரு தனிதான். மற்ற உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள் எல்லாரும் சபையில் சேர்வார்கள்; சந்தாவும் கொடுப்பார்கள். பெரிய பெரிய வித்வான்களின் கச்சேரிகள் நடக்கும் சபைக்கு ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமென்று யோசனை கூடக் கிளம்பும்.
ஆகவே, ஆபோஹி அனந்தராமன் எங்களூருக்கு வரப் போகிறார் என்று தெரிந்ததில் சுந்தரமய்யருக்குப் பிரமாதமான குதூகலம் உண்டானதில் ஆச்சரியமல்லவா?
ஸ்ரிஅனந்தராமன் ஐ சி எஸ் ஸுக்கு ‘ஆபோஹி’ ராகம், என்றால் பிராணன். ஒரு கச்சேரியில் வித்வான் ‘ஆபோஹி’ ராகம் பாடவில்லையென்றால், அன்றைக்கு கச்சேரிக்கு முக்கால் பங்கு மார்க்குத்தான் கொடுப்பார். ஆபோஹியில் அப்படி என்ன விசேஷமென்று எனக்குத் தெரியாது. ‘ஆ’ எழுத்தில் ஆரம்பிப்பது விசேஷமென்றால் ‘ஆரபி’, ‘ஆஹிரி’, ‘ஆனந்த பைரவி’ முதலிய ராகங்கள் இருக்கின்றன. என்னைப் பொருத்தவரையில், பாடுகிறவர்கள் பாடினால் எந்த ராகம் பாடினாலும் நன்றாய்த் தானிருக்கிறது. ஆனால் அனந்தராமன் அபிப்பிராயம் அப்படியில்லை. அவர் ஒரு சமயம் ஒரு கச்சேரியில் பாராட்டுச் சொல்லும்படி நேர்ந்தது. அப்போது அவர் கூறியதாவது: “என்னமோ இந்தக் காலத்தில் சிலர் சுயராஜ்யம் வேண்டும் சுதந்திரம் வேண்டும் என்றெல்லாம் கூத்தாடுகிறார்கள். இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு ஆபோஹி ராகத்தில் தான் நம்பிக்கை. ‘இந்திய தேசம் வேண்டுமா, ஆபோஹி ராகம் வேண்டுமா?’ என்று என்னை யாராவது கேட்டால், சிறிதும் தயக்கமின்றி ‘எனக்கு ஆபோஹியைக் கொடுங்கள்; இந்தியாவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என்பேன். என்னவோ ஸோஷலிஸம் என்கிறார்கள். கம்யூனிஸம் என்கிறார்கள், பொதுவுடைமை அபேதவாதம் என்றெல்லாம் பிரமாதமாய்ப் பேசுகிறார்கள். ஆபோஹியை நானும் அனுபவிக்கிறேன்; நீங்களும் அனுபவிக்கிறீர்கள்; நடுத்தெரு நாராயணனும் அனுபவிக்கிறான்! இதைவிட மேலான ஸோஷலிஸம் வேறெங்கே இருக்கிறது என்று கேட்கிறேன். அரசியல்வாதிகள் பதில் சொல்லட்டும்!” (சபையில் பிரமாதமான கரகோஷம்)
இந்தப் பிரசங்கம் செய்தபிறகுதான். அவருக்கு ‘ஆபோஹி அனந்தராமன்’ என்று பெயர் வந்தது. இதெல்லாம் எனக்கு முன்னமேயே தெரியும். ஆகவே சுந்தரமய்யரைப் போலவே நானும் எங்களூர் சங்கீத சபைக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று நம்பினேன். எங்களுடைய நம்பிக்கை பொய்யாகப் போகவில்லை. அனந்தராமன் ஐ சி எஸ் வந்த உடனேயே எங்களூர் சங்கீத சபை எழுந்து உட்கார்ந்து “என்ன சேதி?” என்று கேட்கத் தொடங்கியது.
சங்கீத அபிமானமுள்ள உத்யோகஸ்தர்கள் இதற்கு முன்னாலுந்தான் எங்களூருக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், அனந்தராமன் விஷயத்தில் விசேஷம் என்னவென்றால், அவருடைய மனைவியும், சங்கீதத்தில் அபிமானம் உள்ளவராயிருந்தது தான்.
ஒருவேளை ஏதாவது தலை போகிற காரியம் இருந்தால் அனந்தராமனாவது கச்சேரிக்கு வராமலிருப்பார்; மிஸ்ஸஸ் அனந்தராமன் ஒரு கச்சேரிக்காவது வரத் தவறுவதில்லை. கலெக்டர் சம்சாரம் சங்கீதத்தில் எப்போது சிரத்தை கொண்டாரோ, அப்போது ஜட்ஜின் மனைவி, முனிசீப்பின் பத்தினி எல்லோருக்குமே அந்தத் தொத்து வியாதி பிடித்துக் கொண்டது. வக்கீல்களின் மனைவிமார் இவர்களுக்குப் பின் வாங்கிவிடுவார்களா? கொஞ்ச நாளில் சபையில் ஸ்திரீகளுக்கென்று ஒதுக்கியிருந்த இடத்தை இரண்டு பங்கு விஸ்தரிக்க வேண்டியதாகி விட்டது. அப்படியும் இடம் போதவில்லை.
சில ஸ்திரிகள் தைரியமாகப் புருஷர்களுக்கு மத்தியில் வந்து உட்கார ஆரம்பித்தனர். இதைக் கேள்விப்பட்டதும், சில வயதான ஸநாதனிகள், “கலிமுற்றி விட்டது; ஆகையால் நாமும் இனிமேல் சங்கீதக் கச்சேரிக்குப் போக வேண்டியதுதான்” என்று தீர்மானித்து வரத் தொடங்கினர்.
சுந்தரமய்யர் வீடு வீடாய்ப் போய்ச் சந்தாவுக்காக கெஞ்சிக் கூத்தாடிய காலம் மாறி, சுந்தரமய்யரிடம் நாங்கள் போய் ‘ஸீட் ரிசர்வ்’ செய்வதற்காகக் கெஞ்ச வேண்டிய காலம் வந்தது.
மிஸ்ஸஸ் அனந்தராமன் கலை வளர்ச்சியில் ரொம்பவும் ஆர்வமுடையவர். வெறுமே கச்சேரிக்கு வந்து கேட்டதுடன் அவர் இருந்துவிடவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைக்குச் சங்கீதம் கற்றுக் கொடுக்க வேண்டும். பரதநாட்டியம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பிரசாரம் செய்துவந்தார். இதன் பயனாக வீட்டுக்கு வீடு தம்புரா சுருதி, பிடிலை ‘கர்புர்’ என்று இழுக்கும் சப்தம், ‘தா தை’ சப்தம் எல்லாம் கேட்க ஆரம்பித்தன.
இவ்வளவு தூரம் கலை வளர்ச்சிக்குக் காரணமாயிருந்த மிஸ்ஸஸ் அனந்தராமன் அவ்வளவுக்கும் சிகரம் வைத்தது போல் ஒரு காரியம் செய்யத் தீர்மானித்தார். சபை அங்கத்தினர்களின் வீட்டுக் குழந்தைகளுக்காக சங்கீத நாட்டியப் போட்டிகள் ஏற்படுத்திப் பரிசுகள் வழங்க வேண்டுமென்று சொன்னார். ஊரில் உற்சாகம் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. கலெக்டர் அனந்தராமன் சிறந்த பாட்டுப் பாடும் குழந்தைக்கு ஒரு வெள்ளிக் கோப்பை தருவதாகச் சொன்னார். இன்னொருவர் பரத நாட்டியத்துக்குப் பரிசு கொடுப்பதாக முன் வந்தார். ஒருவர் வீணைக்கு, ஒருவர் பிடிலுக்கு, இம்மாதிரி ஏகப்பட்ட பரிசுகள் ஏற்பட்டு விட்டன. சங்கீதப் போட்டிப் பரீட்சையில் கலெக்டர் அனந்தராமன் கட்டாயம் ஒரு ஜட்ஜாயிருப்பார் என்று எல்லாரும் எதிர் பார்த்தார்கள். ஆகவே, ஒவ்வொரு வீட்டிலும் ‘மனஸு நில்ப… மதுரகண்ட’ என்று ஆபோஹி அலறல் கேட்கத் தொடங்கியது.
நவராத்திரிக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருந்தபோது ஒருவரும் எதிர்பாராத ஒரு துர்ச்சம்பவம் நேர்ந்தது.
எங்கள் நகருக்கு முப்பது மைல் தூரத்தில் ஒரு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உற்சவம் சம்பந்தமாக ஹிந்து முஸ்லீம் சச்சரவு ஆரம்பித்தது. அது வெகு சீக்கிரமாகப் பரவிற்று. அடிதடி, வெட்டுக் குத்து, வீட்டில் நெருப்பு வைத்தல், வைக்கோல் போரில் நெருப்பு வைத்தல் இப்படியெல்லாம் செய்திகள் வரத் தொடங்கின. இது என்னமாய் முடியுமோ என்று எல்லோரும் கதி கலங்கினோம். நகரில் பரபரப்பு அதிகமாகக் கடைகள் எல்லாம் மூடப்பட்டன.
‘நவராத்திரி வரைக்கும் இப்படியே இருந்து விடுமோ, என்னமோ? இவ்வளவு ஏற்பாடுகள் செய்து சங்கீதப் போட்டி நடக்காமல் போய் விடுமோ?’ என்று மிஸ்ஸஸ் அனந்தராமன் கவலைப்பட்டார். “நீ சும்மா இரு!” என்றார் அனந்தராமன். கலகம் நடக்கும் இடத்துக்கும் நேரில் கிளம்பிப் போனார்.
அனந்தராமன் போய் இருபத்து நாலு மணி நேரத்துக்குள், கிராமங்களில் பூரண அமைதி நிலவியது. அவர் விரட்டிய விரட்டலில் போலீஸார் அதி தீவிரமாக வேலை நடத்தவே, ‘கப்சிப்’ என்று கலகம் அடங்கி விட்டது. தடைப்பட்ட மாரியம்மன் உற்சவத்தைக் கிட்ட இருந்து அனந்தராமன் நடத்தி விட்டு வந்தார்.
கலெக்டர் அனந்தராமன் கலகம் அடக்கிய மகிமையைக் குறித்துத் தேசமெல்லாம் புகழ்ந்தது. அனந்தராமனும் வெகு குதூகலமாயிருந்தார். நாலு நாளைக்கெல்லாம் அவருக்கு மாற்றல் உத்தரவு வந்தது! வடக்கே, மழை மாரி, ஆறு குளம், சங்கீத சபை ஒன்றுமில்லாத ஒரு வறட்டு ஜில்லாவுக்கு அவர் அனுப்பப்பட்டார். இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ளே போய் ‘சார்ஜ்’ ஒப்புக் கொள்ளவேண்டுமென்று உத்தரவு!
இந்த மாற்றல் அநேகருக்கு ரொம்பவும் ஆச்சரியமாயிருந்தது. ஆனால் எனக்கு அவ்வளவு ஆச்சரியம் தரவில்லை. அனந்தராமன் செய்தது பிரிட்டிஷ் அரசியல் தர்மத்துக்கு முற்றும் விரோதமான காரியம் அல்லவா? ஓரிடத்தில் ஹிந்து முஸ்லீம் சச்சரவு வந்தால், அதை உடனே அடக்கிப் போடுவது யாருக்குப் ப்ரீதி? நாலு நாள் பத்து நாள் கலகம் நடந்து, ஆடி ஓடி ஓய்ந்தால் சிரங்கைக் கீறி ஆற்றியது போலாகும். சட்டென்று ஒரே நாளில் அடக்கி விட்டால் கலகம் உள்ளடங்கிப் போகிறது. துவேஷம் உள்ளே கிடந்து குமுறுகிறது. இதனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்யமே அல்லவா ஆடிப் போய்விடும்?
மிஸ்ஸஸ் அனந்தராமன் அழாக் குறையாக எங்கள் ஊரை விட்டுப் போனார். ஆனால் போகும் போது கடைசி வார்த்தையாகச் சுந்தரமய்யரிடம், “நான் எங்கே போனாலும் உங்கள் சபையை மறக்க மாட்டேன்; நவராத்திரியில் சங்கீதப் போட்டியை மட்டும் சிறப்பாக நடத்தி விடுங்கள்” என்று சொன்னார். ஆபோஹி அனந்தராமனும், தாம் எப்போதும் எங்கள் சபையின் போஷகராயிருந்து வருவதாக வாக்களித்தார்.
நவராத்திரியில் குழந்தைகளின் சங்கீத நாட்டியப் போட்டி நடத்துவதற்குப் பலமான ஏற்பாடுகள் சுந்தரமய்யர் செய்து வந்தார். ஜட்ஜுகளாக யாரை ஏற்படுத்துவது என்பதில் தான் சிரமம் ஏற்பட்டது. சங்கீத வித்வான்கள் எல்லோருக்கும் தனித்தனியே எழுதிப் பார்த்ததில், அவர்கள் எல்லோரும் சாக்குப் போக்குச் சொல்லி மறுத்து விட்டார்கள்.
சுந்தரமய்யர் எங்களோடெல்லாம் கலந்தாலோசித்தார். கடைசியில் சென்னைப் பட்டணத்திலிருந்து இரண்டு பிரமுகர்களை ஜட்ஜுகளாக வரவழைக்கத் தீர்மானித்தோம். ஒருவர் பெயர் கைலாச சாஸ்திரி, இன்னொருவர் வைகுண்டாச்சாரியார். ஒருவர் பிரசித்தமான மாஜி சப் ஜட்ஜு. இன்னொருவர் ஒரு காலத்தில் பிரசித்தமாயிருந்த வக்கீல். இரண்டு பேரும் ‘சங்கீத நிபுணர்கள்’ என்று பேர் பெற்றவர்கள். சங்கீதத்தைப் பற்றி ஏதாவது விவாதம் கிளம்பினால், உடனே இவர்கள் தினசரிப் பத்திரிகையில் தங்களுடைய அபிப்பிராயத்தை எழுதாமலிருக்க மாட்டார்கள். முடிவாக, இந்த இரண்டு பேரில் ஒருவருடைய கடிதத்துக்குக் கீழேதான், ‘இந்த விவாதம் சம்பந்தமான கடிதங்கள் இனிமேல் பிரசுரிக்கப்பட மாட்டா’ என்று போட்டுப் பத்திரிகாசிரியர்கள் விவாதத்தை முடிவு கட்டுவது வழக்கம்.
அந்த இரண்டு பேரையும் ஜட்ஜுகளாக வரவழைத்து விடுவதென்று தீர்மானமாயிற்று. அவர்களும் நல்ல வேளையாகச் சம்மதித்தார்கள். எல்லா ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வந்தன.
கடைசியில் எல்லோராலும் வெகு ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்ட தினம் வந்தது. அன்று காலையில் கைலாச சாஸ்திரிகளும், வைகுண்டாச்சாரியாரும் ரயிலில் வந்திறங்கினார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்பட்டன. மத்தியானம் மூன்று மணியிலிருந்து மாலை ஏழு மணி வரையில் போட்டி நடத்திப் பிறகு பரிசளிப்பது என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சரியாக இரண்டரை மணிக்கு என் மருமகள் ஸொஜ்ஜியையும் அழைத்துக் கொண்டு நான் சபா மண்டபத்துக்குப் போய் விட்டேன். (‘ஸொஜ்ஜி’யின் முழுப் பெயர் சுலோசனா) அவளுக்கு அவள் தாயார், பரத நாட்டியம் கற்பித்திருந்தாள். எல்லாம் மிஸ்ஸஸ் அனந்தராமனின் வேலைதான் என்று சொல்ல வேண்டியதில்லை.
மூன்று மணிக்கு சபா மண்டபத்தில் ஜே ஜே என்று கூட்டம் நிறைந்து விட்டது. ஆனால், ஜட்ஜுகள் வந்தபாடில்லை. மூன்றரை மணிக்கு கைலாச சாஸ்திரிகள் மட்டும் வந்து சேர்ந்தார். வைகுண்டாச்சாரியின் மூக்குக் கண்ணாடி கெட்டுப் போய் விட்டதாகவும் தெரிந்தது. போட்டிக்கு ரொம்பப் பேர் வந்திருந்தபடியால், அவர் வரும் வரையில் காத்திராமல் கைலாச சாஸ்திரியின் தலைமையில் சங்கீதப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
சங்கீதப் போட்டி ஏறக்குறைய முடியும் சமயத்தில் வைகுண்டாச்சாரியார் வந்தார். அவர் பரத நாட்டியப் போட்டிக்கு ஜட்ஜாக இருந்து நடத்தினார். எல்லாம் முடிந்ததும், இரண்டு ஜட்ஜுகளும் சபைக் காரியதரிசி சுந்தரமய்யரை அழைத்துக் கொண்டு தனி ஆலோசனைக்குப் போனார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வந்து பரிசு பெற்ற குழந்தைகளின் பெயர்களைச் சொன்னார்கள். பரிசு பெற்ற குழந்தைகளின் வீட்டுக்காரர்களுக்கெல்லாம் பரம சந்தோஷம்; மற்றவர்களுக்கெல்லாம் ரொம்பவும் உற்சாகக் குறைவு. “இந்த ஜட்ஜுகளைப் போல் பொறுக்கி எடுத்த முட்டாள்கள் உலகத்தில் இருக்க முடியாது” என்பது அவர்களுடைய அபிப்பிராயம். இந்தப் பெரும்பான்மை அபிப்ராயத்தை நான் ஒத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் பரத நாட்டியத்துக்கு என் மருமகளுக்குப் பரிசு கிடைத்து விட்டபடியால், எனக்கு ரொம்ப உற்சாகமாயிருந்தது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் சிந்தனையைத் தூண்டிற்று. அதாவது பரிசு பெற்ற குழந்தைகளெல்லாம் பெரும்பாலும் சங்கீத சபைக்குச் சரியாகச் சந்தா செலுத்துவோர் வீட்டுக் குழந்தைகளாகவே இருந்தன.
வைபவத்தின் முடிவில் கபாலி சுந்தரமய்யர் என்னைச் சென்னைப் பிரமுகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வைகுண்டாச்சாரியார், “உங்கள் மருமகளுக்குத்தான் பரத நாட்டியத்தில் முதல் பரிசு என்று மிஸ்ஸஸ் அனந்தராமன் அப்போதே சொல்லி விட்டாளாமே? அந்த அம்மாளுக்குத் தெரியாதது உண்டோ ? மகா புத்திசாலி!” என்றார். எனக்கு ஆச்சர்யம் அதிகமாயிற்று; மிஸ்ஸஸ் அனந்தராமன் அப்படி ஒன்றும் சொன்னதே கிடையாது!
அன்று ராத்திரி எனக்கு அவசரக் காரியமாகச் சென்னைக்குப் போக வேண்டி இருந்தது. ரயிலில் வேறு இடம் கிடைக்காதபடியால் கைலாச சாஸ்திரிகளும் வைகுண்டாச்சாரியாரும் இருந்த வண்டியிலே நானும் ஏற வேண்டியதாயிற்று.
வண்டி ஏறினதும் வைகுண்டாச்சாரியைப் பார்த்து “நமஸ்காரம்” என்றேன். அவர் கண்ணைச் சுளித்துக் கொண்டு, “யாரையா நீர்?” என்றார். அரைமணி நேரத்துக்குள்ளேயே என்னை மறந்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு கைலாச சாஸ்திரிகளைப் பார்த்தேன். அவர் ஒரு காதைக் கையால் மடித்துக் கொண்டு “என்ன சொல்கிறீர்?” என்றார்.
விஷயம் இன்னதென்று புரிவதற்கு எனக்கு ஐந்து நிமிஷம் ஆயிற்று. விஷயம் புரிந்த பின் அதை ஜீரணம் செய்து கொள்வதற்கு இன்னும் ஐந்து நிமிஷம் ஆயிற்று.
அதாவது அன்று சங்கீத நாட்டியப் போட்டிகளில் ஜட்ஜுகளாயிருந்தவர்களில் ஒருவருக்குக் கண் தெரியாது. இன்னொரு ஆசாமிக்குக் காது கேட்காது. குருடரும் செவிடருமாகச் சேர்ந்து சங்கீத நாட்டியப் போட்டியில் தீர்ப்பளித்து விட்டார்கள்.
கபாலி சுந்தரமய்யருக்கு இதெல்லாம் தெரிந்து தானிருக்க வேண்டும். எமகாதகர்! எப்படியோ காரியத்தை ஒப்பேற்றிவிட்டார்.
இதையெல்லாம் நினைக்க நினைக்க, என்னை அறியாமல் எனக்குச் சிரிப்புப் பீறிக் கொண்டு வந்தது.
விஷயம் எனக்குத் தெரிந்து விட்டதென்று அவர்களுக்கும் தெரிந்து போயிற்று; உடனே அவர்களும் சிரிக்கத் தொடங்கினார்கள்.
சென்னை போய்ச் சேரும் வரையில் நினைத்து நினைத்துச் சிரித்துக் கொண்டே போனோம்.
ரயிலும் எங்களுடன் சேர்ந்து சிரித்தது!
இத்துடன்
அமரர் கல்கியின் எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.
kalki novels,kalki novels in tamil,kalki novels pdf download,kalki novels in tamil pdf download,kalki novels in english,kalki novels app,kalki novels in tamil free download,
kalki story,kalki story books,kalki story books list,kalki story in kannada,kalki story books free download,kalki storyline,kalki story novel,kalki story download,kalki avatar story in hindi,kalki avatar story in tamil,kalki bhagwan story,kalki avatar story in telugu,kalki avatar story in gujarati,kalki avatar story in malayalam
kalki books,kalki books in tamil,kalki books in english,kalki books online,kalki books in tamil pdf free download,kalki books buy online,kalki books order to read,kalki books online reading,kalki books pdf download,order of kalki books,who will kalki marry,is kalki indian
kalki audiobook,parthiban kanavu kalki audiobook
kalki krishnamurthy kalki krishnamurthy novels in tamil kalki krishnamurthy in tamil kalki krishnamurthy books in english kalki krishnamurthy best novels kalki krishnamurthy ponniyin selvan kalki krishnamurthy memorial trust kalki krishnamurthy road thiruvanmiyur kalki krishnamurthy biography in hindi kalki krishnamurthy quotes kalki krishnamurthy social novels kalki krishnamurthy alai osai kalki krishnamurthy songs kalki krishnamurthy movies
kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,engal oor sangeethap potty Audiboook,engal oor sangeethap potty,engal oor sangeethap potty Kalki,Kalki engal oor sangeethap potty,