Kadithamum Kanneerum Kalki | Kalki Times
Kadithamum Kanneerum Kalki Short Story Kalki Times
Mr and Mrs Tamilan Presents Kalki Times
அமரர் கல்கியின் சிறு கதைகள்
கடிதமும் கண்ணீரும்
கல்கி
All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u
Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/
Kadithamum Kanneerum Kalki
பிரசித்தி பெற்ற தேவி வித்யாலயத்தின் ஸ்தாபகரும் தலைவியுமான சகோதரி அன்னபூரணி தேவி ஒரு நாள் மாலை வழக்கம் போல் வித்யாலயத்தைச் சுற்றியிருந்த பெரிய தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். வித்யாலயத்துக்குக் கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு பங்களாவிலிருந்து வந்த நாதஸ்வரத்தின் கீதம் அவருக்கு ஏதேதோ பழைய நினைவுகளை உண்டாக்கின. எப்போதும் சாந்தம் குடி கொண்டிருக்கும் அவருடைய முகத்திலே ஒரு நிமிஷம் கிளர்ச்சியின் அறிகுறி தோன்றி அடுத்த கணம் மறைந்தது. அக்காட்சி, அமைதியான சமுத்திரத்தில் திடீரென்று ஒரு பேரலை கிளம்பிக் கரையோரமிருந்த பாறைமீது மோதி அதை ஒரு நிமிஷம் மூழ்க அடித்து விட்டு, மறு நிமிஷம் திரும்பிச் செல்ல, மீண்டும் அக் கடலில் அமைதி குடி கொள்வது போலிருந்தது. அலை அடித்தது என்பதற்கு ஞாபகார்த்தமாய் அந்தப் பாறையிலே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தங்கியிருப்பது போல, அன்னபூரணியின் கண்களிலும் ஜலம் ததும்பி நின்றது.
அப்போது அந்தத் தோட்டப் பாதையில் எதிர்ப்புறமாக வித்யாலயத்தின் உதவி ஆசிரியை ஸ்ரிமதி சாவித்ரி, எம்.ஏ., எல்.டி. வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், அன்னபூரணி தேவி கண்ணீரைச் சட்டென்று துடைத்துக் கொண்டு, புன்னகையுடன் சாவித்ரியை வரவேற்றார். இருவரும் சமீபத்தில் ஒரு வேப்ப மரத்தின் அடியில் இருந்த சிமெண்ட் மேடை மீது உட்கார்ந்தார்கள்.
பெண் குலத்தின் சேவையில் தலை நரைத்துப் போனவர் என்றால் அது சகோதரி அன்னபூரணிக்கு முற்றும் பொருத்தமாயிருக்கும். அவருடைய நெற்றியைக் கவிந்து கொண்டு அடர்த்தியாய் வளர்ந்திருந்த வெள்ளிய கேசத்தைப் பார்க்கும்போது, மலைச் சிகரங்களின் மேல் அடுக்கடுக்காகத் தங்கி நிற்கும் வெண்ணிற மேகங்களின் காட்சி ஞாபகத்துக்கு வரும். இவ்வாறு தலை நரைத்துப் போயிருந்தாலும், அவர் முகத்தைப் பார்க்கும்போது, அவர் ஐம்பது வயதை தாண்டியவர் என்று யாராலும் சொல்ல முடியாது. மாறாத இளமையின் இரகசியத்தைக் கண்டுபிடித்தவரோ அவர் என்று கூடத் தோன்றும். வெள்ளைக் கலையுடனும், வெண்மயிர் அடர்ந்த தலையுடனும், சாந்தம் குடிகொண்ட முகத்துடனும் தோன்றிய சகோதரி அன்னபூரணியைப் பார்ப்பவர்கள், அவரைச் சரஸ்வதி தேவியின் அவதாரமென்றே நினைப்பார்கள்.
அன்னபூரணியின் வாழ்க்கை வரலாறோ, எல்லாரும் பிரசித்தமாக அறிந்த விஷயம். ஒன்பதாவது வயதில் நினைவு தெரியுமுன்பே வைதவ்யக் கொடுமைக்கு ஆளாகும் துர்ப்பாக்கியத்தைப் பெற்றவர் அவர். அவருடைய அந்தத் துர்ப்பாக்கியமே பெண் குலத்தின் நற்பாக்கியம் ஆயிற்று. பிற்காலத்தில் அவர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து, முயற்சியுடன் படித்து, கடைசியாக பிஏ, எல்டி பட்டமும் பெற்றார். அதுமுதல், இளம்பிராயத்தில் கணவனை இழந்தவர்கள், கணவன்மார்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், அநாதைப் பெண்கள் முதலியோருக்குத் தொண்டு செய்வதிலேயே தமது வாணாளைச் செலவிட்டு வந்தார். அவருடைய இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு சாதனமாக இந்தத் தேவி வித்யாலயத்தை ஸ்தாபித்துத் தமது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் அதற்கே அர்ப்பணம் செய்திருந்தார்.
உதவி ஆசிரியை ஸ்ரிமதி சாவித்ரி இளம் பிராயத்தவள். வயது சுமார் இருபத்தைந்து இருக்கும். இன்னும் கலியாணம் ஆகவில்லை. மூன்று வருஷத்துக்கு முன் அவள் எம்ஏ,எல்டி பரீஷை தேறி, இந்த வித்யாலயத்தில் உதவி ஆசிரியையாக வந்தபோது, சம்பாத்யத்துக்காகவே வந்தாளென்றாலும், பின்னால் சகோதரி அன்னபூரணியின் சகவாசத்தினால் அவளுடைய மனோபாவமே மாறிப் போயிருந்தது. அன்னபூரணியைப் போல் தானும் பெண் குலத்தின் தொண்டுக்காகவே வாணாளை அர்ப்பணம் செய்தாலென்ன என்று கூடச் சில சமயம் அவள் எண்ண மிடுவதுண்டு.
சிமெண்ட் மேடையின் மீது உட்கார்ந்ததும், சாவித்ரி, “அம்மா! இன்று கவிதைப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது எனக்கு ரொம்பக் கஷ்டமாய்ப் போய்விட்டது. ‘அன்பினால் தான் உலகம் இயங்குகின்றது’ என்பதாக அதில் ஒரு வரி வருகிறது. ‘எந்த அன்பைச் சொல்கிறார் கவி?’ என்று பத்மா கேட்டாள். ரொம்பப் பொல்லாத பெண் பத்மா!…அதோ அவள் சிரிக்கிற சப்தத்தைக் கேளுங்கள்!” என்றாள் சாவித்ரி.
தோட்டத்தின் இன்னொரு பகுதியில் சில பெண்கள் கையால் எறிந்து விளையாடும் பந்தாட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து கிளம்பிய கலகலவென்ற சிரிப்பின் ஒலி தென்றல் காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.
“பத்மாவின் கேள்விக்குப் பதில் என்ன சொன்னாய்?” என்று அன்னபூரணி கேட்டாள்.
“பதில் சொல்லத் திணறிப் போய் விட்டேன். கவி இங்கே ‘அன்பு’ என்று சொல்லும்போது காதலைத்தான் குறிப்பிடுகிறார். ஆனால் இதை அந்தப் பெண்களுக்கு நான் எப்படிச் சொல்வது? சாதாரணப் பெண்களுக்கு முன்னால் சொல்வதே கஷ்டம். நான் ‘குவீன் மேரீஸ்’ காலேஜில் படித்தபோது, எங்கள் ஆசிரியைகள் பட்ட அவஸ்தை நன்றாய் ஞாபகமிருக்கிறது. இங்கே, விதவைப் பெண்கள், புருஷர்களால் தள்ளி வைக்கப்பட்டவர்கள் – இப்படிப் பட்டவர்கள் முன்னால் காதலைப் பற்றி என்னமாய்ப் பேசுவது?”
இப்படிச் சொல்லி வந்த சாவித்ரி சட்டென்று நிறுத்தினாள். சகோதரி அன்னபூரணியும் பால்யத்தில் கணவனை இழந்தவர் என்பது சாவித்ரிக்கு அச்சமயம் ஞாபகம் வரவே, தான் விரஸமாய்ப் பேசிவிட்டதாக அவளுக்குப் பயம் உண்டாயிற்று. அந்தத் தவறை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவள் மறுபடியும் கூறினாள்: “உண்மையாகப் பார்த்தால், அம்மா, இதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்றுதான் தோன்றுகிறது. காதல், கீதல் என்று சொல்வதெல்லாம் வெறும் பிரமையேயல்லவா? வேலையில்லாத கவிகளின் வீண் மனோராஜ்யத்தைத் தவிர வேறொன்றுமில்லை… “
அப்போது, அன்னபூரணி, “அப்படியா சமாசாரம்? எல்லாம் பிரமைதானா? ரொம்ப சரி, அந்தப்படி டாக்டர் சீனிவாசனுக்கு நான் கடிதம் எழுதுகிறேன்,” என்றார்.
சாவித்ரி டாக்டர் சீனிவாசனைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிற விஷயத்தையே அன்னபூரணி அவ்வாறு குறிப்பிட்டார். சாவித்ரி ஒரு மழுப்பல் சிரிப்புச் சிரித்துவிட்டு, “ஆமாம்; யார் கண்டார்கள்? இப்போது நிஜம் போல் இருக்கிறது, இரண்டு வருஷம் போனால் எப்படி இருக்குமோ? யாருக்குத் தெரியும்? அது போனால் போகட்டும் அம்மா! ‘உலகத்தில் சிறந்த காரியங்கள் எல்லாம் காதலினால்தான் நடக்கிறது’ என்று இந்தக் கவி சொல்வது அபத்தந்தானே? அது எப்படிச் சரியாகும்? இருபத்தைந்து வருஷ காலமாக நடந்து வரும் இந்தத் தேவி வித்யாலத்தையே எடுத்துக் கொள்ளலாம். கன்யாகுமரியிலிருந்து ஹிமாலயம் வரையில் இந்த ஸ்தாபனத்தைப் புகழாதவர்கள் இல்லை. தங்களுடைய சேவையைப் பாராட்டாதவர்களும் இல்லை. இந்த ஸேவாலயத்தின் விஷயத்தில் கவி சொல்வது எப்படிப் பொருந்தும்?” என்றாள்.
“சாவித்ரி! உலகத்திலே நடக்கும் மற்றச் சிறந்த காரியங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. கவி சொல்வது அவற்றுக்கெல்லாம் பொருந்துமோ, என்னவோ, அறியேன். ஆனால், என்னுடைய சேவையை ஒரு பெரிய காரியமாய்க் கருதும் பட்சத்தில், கவி சொல்வது அதற்கு முற்றிலும் பொருந்தும். என்னுடைய முயற்சிகளுக்கெல்லாம் மூலகாரணம் அன்புதான். “
“இல்லையென்று யார் சொன்னார்கள்? அநாதைகளிடத்திலும் தீனர்களிடத்திலும் தங்களுடைய அன்பு பிரசித்தமானதல்லவா?”
“அந்த அன்பைச் சொல்லவில்லை நான். கவி சொல்லும் காதலைத் தான் சொல்கிறேன். நான் ஏதாவது சேவை செய்திருந்தால், அது அவ்வளவும் காதல் என்னும் விதையிலிருந்து முளைத்து எழுந்ததுதான்”
சாவித்ரி இதைக் கேட்டு அளவிலா வியப்பு அடைந்தாள். “அம்மா! நிஜமாகவா, அம்மா? ஐயோ! எனக்கு எல்லாம் சொல்லுங்கள்!” என்று பரபரப்புடன் கேட்டாள்.
அன்னபூரணி சொல்கிறார்:
“அதோ அந்தக் கலியாண வீட்டிலிருந்து மேளச் சத்தம் காற்றில் மிதந்து வருகிறதே, கேட்கிறாயல்லவா? நாயனக்காரன் நாட்டைக்குறிஞ்சி ராகத்தை அற்புதமாய் வாசிக்கிறான். உன்னைப் பார்ப்பதற்கு ஒரு நிமிஷம் முன்னால் அது என் காதில் விழுந்தபோது பழைய காலத்து ஞாபகம் எனக்கு உண்டாயிற்று. ஒரு நாளும் இல்லாதபடி கண்ணில் ஜலம் கூட வந்துவிட்டது. பல வருஷங்களுக்கு முன்னால் ஒரு கல்யாணத்தின் போது இதே ராகத்தைச் செம்பொன்னார் கோவில் ராமசாமி வாசித்தான். அப்போதெல்லாம் நாயனக்காரர்களில் அவன் தான் பிரசித்தம்… “
“அதெல்லாம் உங்களுக்கு இன்னுமா ஞாபகம் இருக்கிறது, அம்மா! ரொம்பவும் பால்யத்தில் உங்களுக்குக் கலியாணம் ஆயிற்று என்று கேள்விப்பட்டிருக்கிறேனே?”
“என்னுடைய கலியாணத்தை நான் சொல்லவில்லை. ஆறு வயதிலே எனக்குக் கலியாணம் பண்ணினார்களாம். ஒன்பது வயதிலே கைம்பெண் ஆனேன். அதெல்லாம் எனக்குக் கனவு மாதிரி கூட ஞாபகத்தில் இல்லை. அவ்வளவு இளம் வயதில் விதவையானதில் ஒரு சௌகரியம் இருந்தது. உனக்குச் சிரிப்பு வருகிறதல்லவா? ஆனாலும் உண்மை அப்படித்தான். நாலைந்து வருஷத்துக்குப் பிறகு அப்படி நேர்ந்திருந்தால், எல்லாரையும் போல் என்னையும் அலங்கோலம் செய்திருப்பார்கள். ரொம்பச் சிறு வயதானபடியால் அப்படி ஒன்றும் செய்யாமல் விட்டிருந்தார்கள். “
அன்னபூரணி சற்று நேரம் சிந்தையில் ஆழ்ந்த வண்ணம் சும்மா இருந்துவிட்டு, மறுபடியும் கதையைத் தொடர்ந்தார்:
“நான் குறிப்பிட்டது என்னுடைய சித்தி பெண்ணின் கலியாணத்தை. அம்புஜம் எனக்கு இரண்டு வயது சின்னவள். அவளுக்குக் கலியாணம் ஆனபோது எனக்குப் பதினாறு வயதிருக்கும் அம்புஜம் என்னிடம் உயிராயிருந்தாள். நான் கைம்பெண் ஆனதிலிருந்து என் சித்தியின் வீட்டிலேயே வளர்ந்து வந்தேன். என்னுடைய துர்க்கதியை எண்ணி அந்த வீட்டில் எல்லாரும் என்னிடம் மிகவும் பிரியமாயிருந்தார்கள். நான் வைத்ததே சட்டமாய் எல்லாம் நடந்து வந்தது. “
“அம்புஜத்துக்குக் கல்யாணம் நிச்சயமானபோது, என் இஷ்டப்படிதான் எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. மாப்பிள்ளைக்கு என்ன வேஷ்டி வாங்குவது, மேளக்காரன் யாரை அமர்த்துவது, நாலாம் நாள் விருந்துக்கு என்ன பட்சணம் போடுவது என்பது முதல் எல்லாம் நான் தான் தீர்மானித்தேன். “
“கலியாணத்துக்கு முதல் நாள் இராத்திரி மாப்பிள்ளை அழைத்த பிறகு நிச்சயதார்த்தம் நடந்தது. பெண் வீட்டு ஸ்திரீகளுடன் நானும் கூடத்தில் நின்று கொண்டிருந்தேன். மணையில் உட்கார்ந்திருந்த அம்புஜத்தின் தலையிலிருந்து கல்லிழைத்த திருகுப்பூ கழன்று விழுந்து விடும்போல் இருந்தது. நான் அவளருகில் போய் அதைச் சரியாகத் திருகினேன். அப்படித் திருகிவிட்டுத் தலையை நிமிர்ந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் உட்கார்ந்திருந்த ஓர் இளைஞர் என்னை உற்று நோக்குவதைக் கண்டேன். அந்தக் கணத்தில் என் தேகமெல்லாம் பதறிற்று. தலை சுழன்றது; ஸ்மரணையிழந்து கீழே விழுந்து விடுவேனோ என்று பயந்து போனேன். பகவான் அருளால் அப்படி ஒன்றும் நேரவில்லை. “
“அவருடைய முகத்தை மறுபடி பார்க்க வேண்டுமென்ற ஆவல் என் மனத்தில் பொங்கி எழுந்தது. அப்படி ஓர் ஆசை இருக்கக் கூடுமென்றே நான் கனவிலும் கருதியதில்லை. எவ்வளவோ மனத்தை அடக்கி அடக்கிப் பார்த்தேன். பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தேன். ஒன்றும் சாத்தியமில்லை. கடைசியில் அவர் இருந்த பக்கம் திரும்பியபோது அவர் அப்போதுதான் என்னைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு முகத்தைத் திருப்புவதைக் கண்டேன். “
“அன்றிரவு நான் தூங்கவேயில்லை. “
“மறுநாள் அம்புஜத்தின் கலியாணம் சிறப்பாக நடந்தேறியது. வெளித்தோற்றத்திற்கு நான் எப்போதும் போல் காரியங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் என் மனம் என்னவோ வேறு தனி உலகம் ஒன்றில் சஞ்சரிக்கத் தொடங்கியது. “
“கொஞ்சநஞ்சமிருந்த சந்தேகமும் கலியாணத்தன்று தீர்ந்து போயிற்று. அவர் என்னைப் பார்த்தது எல்லாம் தற்செயலாக அல்ல; வேண்டுமென்றுதான். என் மன நிலையும் எனக்கு நிச்சயமாயிற்று. ஏதோ ஒரு காந்த சக்தி அவர் பக்கம் என்னைக் கவர்ந்து இழுக்கிறது என்பதை அறிந்தேன்… அதோ பூரனச் சந்திரன் கிளம்புகிறதே, பார்த்தாயா?” என்று அன்னபூரணிதேவி கேட்க, சாவித்ரி அந்தப் பக்கம் நோக்கினாள்.
“பூரணச் சந்திரனை அதற்கு முன்னால் எவ்வளவோ தடவை நான் பார்த்துத்தானிருந்தேன். ஆனால் அம்புஜத்தின் கலியாணத்தன்று இரவு பூரணச் சந்திரனில் நான் கண்ட அழகை அதற்கு முன் கண்டதில்லை. நாதச்வரத்தின் இனிய நாதம் அதற்கு முன்னால் என்னை அப்படிப் பரவசப்படுத்தியது கிடையாது. சந்தனத்தின் வாசனையும், மல்லிகைப் பூவின் மணமும் எனக்கு அவ்வளவு இன்பத்தை அதற்கு முன் எப்போதும் அளித்ததில்லை. “
“என் உள்ளத்தில் என்றைக்கும் தோன்றாத ஆசைகள் எல்லாம் தோன்றின. ‘எல்லாப் பெண்களையும் போல் நானும் ஏன் தலையை வாரிக்கொண்டு பூ வைத்துக் கொள்ளக் கூடாது? ஏன் குங்குமம் இட்டுக் கொள்ளக் கூடாது? ஏன் சந்தனம் பூசிக்கொள்ளக் கூடாது?’ என்றெல்லாம் எண்ணம் உண்டாயிற்று.
“கலியாணம் மூன்றாம் நாளன்று மத்தியானம் நான் அம்புஜத்தை அழைத்துக் கொண்டு சம்பந்திகளின் ஜாகைக்குப் போனேன். அம்புஜத்துக்கு அவளுடைய நாத்தனார் தலைவாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்னென்ன நகை இப்போதிருக்கிறது, இன்னும் என்னென்ன நகை பண்ணிப் போடப் போகிறார்கள் என்பது போன்ற அருமையான விஷயங்களைப் பற்றி அம்புஜத்தை அவளுடைய நாத்தனார் கேட்டுக் கொண்டிருந்தாள். எனக்கு ஞாபகம் அந்தப் பேச்சில் இல்லை. காமரா உள்ளில் யாரோ பேசிக் கொண்டிருந்தது இங்கொரு வார்த்தையும் அங்கொரு வார்த்தையுமாக என் காதில் விழுந்தது. இவருடைய குரல் போலத் தோன்றவே, கவனமாய்க் கேட்கத் தொடங்கினேன். அந்தக் குரலில் தான் என்ன இனிமை! என்ன உருக்கம்! பால்யத்தில் கைம்பெண் ஆகிறவர்களின் கதியைப் பற்றித்தான் அவர் பேசிக் கொண்டிருந்தார். அதன் கொடுமையைப் பற்றிச் சொல்லியிருக்கும் யாராரோ மகான்களுடைய வாக்கியங்களையெல்லாம் எடுத்துக் காட்டினார். பல புத்தகங்களின் பெயர்களையும் குறிப்பிட்டார். அவற்றில், ‘மாதவய்யா எழுதியிருக்கும் முத்துமீனாட்சி கதையை வாசியுங்கள்’ என்று அவன் சொன்னது மட்டும் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. ‘சரிதானப்பா, பிரமாதமாகப் பேசுகிறாயே? அப்படியானால் நீதான் அன்னபூரணியைக் கலியாணம் செய்து கொள்ளேன்’ என்று ஒருவன் சொன்னான். அதற்கு இவர், ‘சீச்சீ! சுத்த முட்டாள்கள் நீங்கள்! உங்களுடன் பேசுவதைக் காட்டிலும் குட்டிச் சுவரோடு பேசலாம்’ என்று பதில் சொன்னார். உடனே அந்த அறையினின்றும் ஒருவர் எழுந்து போனதுபோல் சப்தம் கேட்டது. அது இவராய்த்தான் இருக்கவேண்டும்.
“அந்த இரண்டு மூன்று நாளைக்குள் அவரைப் பற்றிய விவரங்கள் எல்லாம் சம்பந்திகளின் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டிருந்தேன். அந்த வருஷம் அவர் சென்னை இராஜதானியிலேயே பி.ஏ. பரீட்சையில் முதலாவதாகத் தேறியிருந்தாராம். ஐயாயிரம் ரூபாய் வரதட்சணையுடன் அவருக்கு வரன்கள் பல வந்து கொண்டிருந்ததாகவும் பேசிக் கொண்டார்கள். அப்படிப்பட்டவருடைய அன்புக்கா நான் பத்திரமானேன். என்னுடைய பாக்கியத்தை என்னால் நம்ப முடியவில்லை.
“நாலாம் நாள் கலியாணத்தன்று காலையில் சம்பந்தி அம்மாளுக்கு உடம்பு சரியில்லையென்று தகவல் வந்தது. நான் பார்த்துவிட்டு வருகிறேனென்று சொல்லி, சம்பந்தி ஜாகைக்குப் போனேன். அங்கே ஒருவேளை இவர் இருப்பாரோ என்று எண்ணமிட்டுக் கொண்டே சென்றேன். வாசற்படி தாண்டியதும் ரேழி ஹாலில் தனிமையாக உலாவிக் கொண்டிருந்த இவர், என்னைப் பார்த்ததும், ‘யார் வேண்டும்?’ என்று கேட்டுக் கொண்டே வந்தார். நான் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நிற்கையிலேயே சட்டென்று என் கையில் ஒரு கடிதத்தை வைத்து அது வெளியில் தெரியாதபடி என் விரல்களால் மூடினார். உடனே திரும்பிச் சென்றார்.
“புயற் காற்றிலே இலைகள் ஆடுவது போல் என் உடம்பு நடுங்கிற்று. ஆனாலும் நான் மிகுந்த மனோதிடத்துடன் அந்தக் கடிதத்தை என் இருதயத்தின் அருகில் பத்திரமாய் வைத்துக் கொண்டேன். பிறகு உள்ளே போனேன். சம்பந்தியம்மாளுடன் பேசும்போதெல்லாம் என் புத்தி என் வசம் இல்லை. அந்த அம்மாள் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, ‘எனக்கு என்ன உடம்பு என்று கேட்கிறாயேடி? உனக்கு என்னடியம்மா உடம்பு? கண்ணும் முகமும் நன்றாயில்லையே?’ என்று கேட்டாள். ‘ஆமாம்; எனக்குக்கூடத் திடீரென்று தலையை வலிக்கிறது’ என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன். உடனே உள் அறை ஒன்றில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டேன். கேட்பவர்களுக்கு உடம்பு சரியில்லை யென்று சொல்லிவிட்டு, விம்மி, விம்மி அழுது கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு அவரை – என் உள்ளத்தைக் கவர்ந்த தெய்வத்தை – நான் பார்க்கவேயில்லை… “
“ஐயோ! ஏன் அம்மா அப்படி? அந்தக் கடிதத்தில் என்னதான் எழுதியிருந்தது?”
“கடிதத்திலா? என்னிடத்தில் அவருக்கிருந்த ஆசை அவ்வளவையும் அதில் கொட்டியிருந்தார். எனக்காக எந்தவிதத் தியாகமும் செய்யத் தயாராயிருப்பதாயும், உலகம் முழுவதையும் எதிர்த்து நிற்கத் துணிந்திருப்பதாயும், எழுதியிருந்தார். ஆனால் என்னை வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ விரும்பவில்லையென்றும், அவரிடம் எனக்கும் அன்பிருந்து, சமூகத்தின் ஏளனத்துக்கெல்லாம் துணிவதற்குத் தைரியமிருந்தால், அன்று சாயங்காலம் நலங்கின் போதாவது ஊர்வலத்தின் போதாவது நான் கையில் ஒரு மல்லிகைப் பூவை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அந்த அடையாளத்தைக் கண்டதும் தாம் வேண்டிய ஏற்பாடு செய்வதாகவும் எழுதியிருந்தார்… “
“அப்படியானால் நீங்கள் ஏன் அழுது கொண்டிருந்தீர்கள், அம்மா? அவர் சொன்னபடி செய்தீர்கள் அல்லவா?”
“பாவி, நான் அப்படிச் செய்யவில்லை. போதாததற்கு, உள்ளே போய்ப் படுத்து அழுது கொண்டிருக்கவே, தம் பேரில் எனக்கு இஷ்டமில்லையென்றும், என்னுடைய மனத்தைத் தாம் புண்படுத்தி விட்டதாகவும் அவர் எண்ணியிருக்க வேண்டும். இவ்வாறு, என் வாழ்க்கையின் நாலு நாள் இன்பக் கனவு முடிவு பெற்றது… “
“ஆமாம், அம்மா! ஆனால் நீங்கள் ஏன் அவர் சொன்னபடி செய்யவில்லை? எனக்குப் புரியவில்லையே?”
“அந்தக் காரணத்தை இப்போது சொல்லவும் எனக்கு வெட்கமாயிருக்கிறது, சாவித்ரி! அவருடைய கடிதத்தை அன்றைய தினம் நான் படிக்கவில்லை. ஒரு வருஷத்திற்குப் பிற்பாடுதான் அதை நான் படித்தேன். அப்படிப் படிப்பதற்குள் எத்தனையோ நாள் அதைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினேன். கடைசியில், அதை நான் படித்தபோது அதில் பாதிக்கு மேல் கண்ணீரால் மறைந்து போயிருந்தது.
“அம்மா, என்ன சொல்கிறீர்கள்? தங்களுக்கு அப்போது… “
“ஆமாம், சாவித்ரி. அவர் கடிதத்தைப் பெற்ற அன்று எனக்கு ஏற்பட்ட அவமானமும் மனவேதனையுந்தான் என்னை மேலும் மேலும் படிக்கும்படி தூண்டி, பிஏ, எல்டி, பட்டமும் அளித்து, பெண் குலத்துக்கு நான் செய்யும் இவ்வளவு தொண்டுக்கும் காரணமாயிற்று. அவர் என் கரத்தைத் தொட்டுக் கடிதத்தைக் கொடுத்த அந்நாள், எனக்குப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை!”
சாவித்திரியின் கண்களிலிருந்து கலகலவென்று உதிர்ந்த கண்ணீர்த் துளிகள் வெண்ணிலவின் ஒளியில் முத்துக்கள் போல் பிரகாசித்தன.
அந்த நாதஸ்வரக்காரன் கேதாரகௌள ராகந்தான் வாசிக்கிறானா? அல்லது உலக மகா காவியங்களிலுள்ள சோக ரஸத்தையெல்லாம் பிழிந்து நாதஸ்வரக் குழாய் வழியாகப் பொழிகின்றானா?
இத்துடன்
அமரர் கல்கியின் கடிதமும் கண்ணீரும்
இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.
Kadithamum Kanneerum Kalki Tags
kalki novels,kalki novels in tamil,kalki novels pdf download,kalki novels in tamil pdf download,kalki novels in english,kalki novels app,kalki novels in tamil free download,
kalki story,kalki story books,kalki story books list,kalki story in kannada,kalki story books free download,kalki storyline,kalki story novel,kalki story download,kalki avatar story in hindi,kalki avatar story in tamil,kalki bhagwan story,kalki avatar story in telugu,kalki avatar story in gujarati,kalki avatar story in malayalam
kalki books,kalki books in tamil,kalki books in english,kalki books online,kalki books in tamil pdf free download,kalki books buy online,kalki books order to read,kalki books online reading,kalki books pdf download,order of kalki books,who will kalki marry,is kalki indian
kalki audiobook,parthiban kanavu kalki audiobook
kalki krishnamurthy kalki krishnamurthy novels in tamil kalki krishnamurthy in tamil kalki krishnamurthy books in english kalki krishnamurthy best novels kalki krishnamurthy ponniyin selvan kalki krishnamurthy memorial trust kalki krishnamurthy road thiruvanmiyur kalki krishnamurthy biography in hindi kalki krishnamurthy quotes kalki krishnamurthy social novels kalki krishnamurthy alai osai kalki krishnamurthy songs kalki krishnamurthy movies
kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,kadithamum kanneerum Audiboook,kadithamum kanneerum,kadithamum kanneerum Kalki,Kalki kadithamum kanneerum,