Kaithiyin Pirarthanai Kalki | Kalki Times
Kaithiyin Pirarthanai Kalki Short Story Kalki Times
Mr and Mrs Tamilan Presents Kalki Times
அமரர் கல்கியின் சிறு கதைகள்
கைதியின் பிரார்த்தனை
கல்கி
All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u
Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/
Kaithiyin Pirarthanai Kalki
கைலாஸம் மணிக்கு முப்பத்தைந்து மைல் வேகத்தில் போய்க் கொண்டிருந்தான். (“போய்க் கொண்டிருந்தது” என்று முடித்து, உங்களைத் திகைக்கச் செய்யவேண்டுமென்று எனக்கு ஆசைதான். ஆனால் மலையைக் கதாபாத்திரமாக வைத்து எழுதும் திறமை இன்னும் எனக்கு வரவில்லை. மனிதர்களைத்தான் கட்டிக்கொண்டு அழ வேண்டியிருக்கிறது.)
அந்தப் பட்டிக்காட்டுச் சாலையில் அவ்வளவு துரிதப் பிரயாணத்தைச் சாத்தியமாகச் செய்தது கைலாஸம் ஏறியிருந்த புதுமாடல் மோட்டார் வண்டிதான். வழியிலே அவன் கடக்கும் படியாக நேர்ந்த கிராமங்களில் வாழ்ந்த தெரு நாய்கள் மோட்டாரைத் தொடர்ந்து துரத்திக் கிராமத்துக்கு வெளிப்புறம் வரையில் கொண்டு விட்டு விட்டுத் திரும்பின. தாங்கள் துரத்தியதால் தான் அந்தப் பயங்கர பூதம் பயந்து ஓடிப்போனதாக அவற்றின் மனத்திற்குள் எண்ணம்.
ஆனால் கைலாஸம் இது ஒன்றையும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவனுடைய முகத்தைப் பார்த்தால், மோட்டார் எவ்வளவு வேகமாய் ஓடிற்றோ அதை விடப் பதின்மடங்கு வேகமாக அவனுடைய உள்ளம் ஓடிக் கொண்டிருந்ததென்று தெரியவந்தது.
சட்டென்று வண்டி நின்றது. கைலாஸம் வண்டியிலிருந்து கீழே இறங்கி நாற்புறமும் நோக்கினான். கிழக்கே கொஞ்ச தூரத்தில் ஒரு கிராமத்தின் கோவில் ஸ்தூபி தெரிந்தது. அதைப் பார்த்துக் கைலாஸம் பெருமூச்சு விட்டான். மேற்கே பார்த்தான். சுமார் பத்து மைல் தூரத்தில் திருச்சி மலைக்கோவிலும், அதற்குச் சமீபத்தில் பொன்மலையும் தெரிந்தன. தெற்கேயெல்லாம் பசுமையான வயல்கள், வடக்கே மரம் அடர்ந்த ஒரு தோப்பு. அந்தத் தோப்புக்கு அப்புறத்தில் காவேரி ஆறு.
கைலாஸம் வண்டியைச் சாலையில் நிறுத்திவிட்டு அந்தத் தோப்பைக் கடந்து ஆற்றங்கரையை அடைந்தான். அங்கே மேல் துணியை விரித்து உட்கார்ந்து கொண்டான்.
அவன் உள்ளத்தில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. கிழக்கே கொஞ்ச தூரத்திலிருந்த கிராமத்துக்குப் பெருமாள்புதூர் என்று பெயர். அவ்வூருக்குப் போகலாமென்ற எண்ணத்துடனே தான் கைலாஸம் அந்தப் பக்கம் வந்தான். ஆனால் ஊர் கிட்டத்தட்ட நெருங்கிய போது சந்தேகம் தோன்றிவிட்டது; போகலாமா, அல்லது வந்த வழியே திரும்பிவிடலாமா?
பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் ஒரு முறை அதே சாலை வழியாக அதே ஊருக்குக் கைலாஸம் போனதுண்டு. அப்போது அவன் இருபது வயது வாலிபன். அந்தத் தடவை இரட்டை மாடு பூட்டிய பெட்டி வண்டியில் அவன் சென்றான். இன்னும் ஸ்திரீ புருஷர்கள் பலரும் வெவ்வேறு வண்டிகளில் வந்தார்கள். எல்லாரும் மறுநாள் பெருமாள் புதூரில் நடக்க இருந்த கைலாஸத்தின் திருக்கலியாண மகோத்ஸவத்துக்காகவே வந்தார்கள். அவர்களுடைய மாட்டு வண்டிகள் எல்லாம் இப்போது கைலாஸத்தின் மோட்டார் நின்ற அதே இடத்தில் தான் வந்து நின்றன. எல்லாரும் இறங்கிக் காவேரிக் கரைக்கு வந்தனர். பெண் வீட்டார் அனுப்பியிருந்த சிற்றுண்டிகளை அருந்தினர். சிரிப்பும் விளையாட்டும் பரிகாஸப் பேச்சுக்களும் ஏகக் குதூகலமாயிருந்தன.
சூரியாஸ்தமன சமயத்தில் கிராமத்தை அடைந்தார்கள். அதோ தெரிகிறதே, அந்தக் கோவிலில்தான் முதன் முதலில் இறங்கினார்கள். ஊராரெல்லாரும் வந்து சர்க்கரை, கற்கண்டு, வெற்றிலை பாக்கு வழங்கிய பிறகு, ‘ஜானவாஸ’ ஊர்வலம் ஆரம்பமாயிற்று. ஊர்வலத்தின் போது, அதற்கு ஐந்தாம் நாள் இரவு அதே குதிரை ஸாரட்டில் தன்னுடைய பிரியநாயகி சகிதமாக ஊர்வலம் போவோம் என்று எண்ணி உடல் பூரித்ததெல்லாம் கைலாஸத்துக்கு ஞாபகம் வந்தது. அடடா! என்னென்ன ஆகாசக்கோட்டைகள்!
ஊர்வலம், சம்பந்திகளுக்காக ஏற்படுத்தியிருந்த ஜாகையில் வந்து முடிந்தது. கைலாஸம் வீட்டினுள் சென்று ஊர்வல உடுப்புகளை விரைவாகக் களையத் தொடங்கினான். அவற்றை அவன் அணிந்திருந்த வரையில், “அப்பாடா! கலியாணம் என்றால் இலேசு இல்லை; ரொம்பக் கனமாய்த்தான் இருக்கிறது” என்று அடிக்கடி எண்ணம் உண்டாயிற்று. அவன் காலர், நெக் டை இவற்றை அவிழ்த்துவிட்டுக் கோட்டைக் கழற்றிக் கொண்டிருந்தபோது, விஷமத்தனமான பார்வையுடன் கூடிய ஒரு பெண் அங்கே வந்தாள். அவள் வேறு யாருமில்லை என்பதை அவள் தெரிந்து கொண்டு, “மாப்பிள்ளை! உமா உங்களிடம் இந்தக் கடுதாசை இரகசியமாய்க் கொடுக்கச் சொன்னாள்” என்று கூறி ஒரு கடிதத்தை அவன் சட்டைப் பையில் திணித்துவிட்டு ஓடினாள்.
கைலாஸத்துக்கு ஏற்பட்ட வியப்பும், ஆவலும், பரபரப்பும் சொல்ல முடியாது. மயிர்க்கூச்சல் எறிந்தது. நெஞ்சை என்னவோ செய்தது. விளக்கண்டை சென்று பார்த்தான். மேல் உறையில் “எம்.ஆர்.ஆர்.ஒய். டி.பி.கைலாஸம்” என்று பெண் கையெழுத்தில் இங்கிலீஷில் எழுதியிருந்தது. உள்ளே இருந்த கடிதத்தை எடுத்து படித்தான்:
“ஐயா,
தங்களை விவாகம் செய்து கொள்ள எனக்கு இஷ்டம் இல்லை. என்னுடைய மனம் இன்னொருவர் மேல் சென்று விட்டது. என்னை நீங்கள் மணந்து கொண்டால், நம் இருவருடைய வாழ்க்கையிலும் துன்பந்தான் குடி கொண்டிருக்கும்! காதல் இல்லாத கல்யாணத்தினால் என்ன பயன்!
இப்படிக்கு, உமா.”
படித்துக் கொண்டிருக்கும் போதே விளக்கு, வீடு எல்லாம் சுழல ஆரம்பித்தன. இரண்டு, மூன்று நிமிஷம் பிரமை கொண்டவன் போல் இருந்தான் கைலாஸம். அப்புறம் பல்லைக் கடித்துக் கொண்டு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல் விரைவாகச் சென்றான். கைலாஸத்துக்குத் தகப்பனார் இல்லை. இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தவரும், நடத்தி வைக்க வேண்டியவரும் அவனுடைய தாய் மாமன் தான். அவரிடம் சென்று, “மாமா! பெண்ணின் தகப்பனாரிடம் ஒரு முக்கியமான காரியம் பேச வேண்டும். அதற்குப் பிறகு தான் இந்தக் கலியாணம் நிச்சயம்” என்று சொல்லி அழைத்துச் சென்றான். பெண்ணின் தகப்பனாரிடம் போனதும், “ஐயா! தங்கள் மகளிடம் ஒரு நிமிஷம் நான் தனிமையில் பேச வேண்டும். அவளிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத் தான் நான் கலியாணத்துக்குச் சம்மதிப்பேன்” என்று கூறினான். அவர், “முன்னாலேயே இதைச் செய்திருக்க வேண்டியது. இன்று பெண்ணைப் பார்ப்பது சம்பிரதாய விரோதம். ஆனாலும் பாதகமில்லை. உங்கள் இஷ்டப்படியே ஆகட்டும்” என்று கூறி அவ்வாறே ஏற்பாடும் செய்தார். கைலாஸம் இருந்த அறைக்கு உமா வந்ததும் அவன் அவளை அப்படியே எடுத்து விழுங்கிவிடுபவன் போல் ஒரு பார்வை பார்த்தான். பிறகு கடிதத்தை நீட்டி, “இந்தக் கடிதம் நீ எழுதியதுதானா?” என்று கேட்டான். “ஆமாம்” என்று தழுதழுத்த குரலில் பதில் வந்தது.
“ரொம்ப சந்தோஷம். நீ உன் மனத்திற்கிசைந்த புருஷனையே மணந்து கொள், அம்மா! அதற்குக் குறுக்கே நிற்கும் பாவத்தை நான் கட்டிக் கொள்ளத் தயாராயில்லை” என்று கூறிவிட்டு மணப்பெண்ணை மறுமுறை பார்க்கவும் செய்யாமல் வெளியே வந்தான்.
நேரே பெண்ணின் தகப்பனாரிடம் போய், “ஐயா! தங்களுடைய பெண்ணை மணக்க எனக்கு விருப்பமில்லை. தயவு செய்து மன்னிக்க வேண்டும்” என்று கூறிவிட்டு உடனே வெளியே வந்து வண்டியைப் பூட்டச் சொன்னான். ஏக அல்லோல கல்லோலம். யாரோ என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தும் பயன்படவில்லை. கைலாஸம் ஒரே பிடிவாதமாயிருந்தான். தன்னுடைய பிடிவாதத்துக்குச் சமாதானம், காரணம் எதுவும் சொல்ல உறுதியாக மறுத்து விட்டான். “இஷ்டமில்லையென்றால் விட்டு விடுங்கள்! அவ்வளவுதான்!”
இவ்விஷயத்தில் பெண் வீட்டாருக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்குத் தான் சிறிதும் பொறுப்பாளியல்லவென்பதில் அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. கைலாஸம் திருச்சியில் படித்துக் கொண்டிருக்கையில் பெருமாள்புதூரிலிருந்த தன்னுடைய தாய்மாமன் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. அந்தக் காலங்களில் சில சமயம் எதிர் வீட்டிலிருந்த உமாவைப் பார்த்திருந்தான். ஆகவே, கலியாண பேச்சு வந்தபோது பெண் பிடித்திருப்பதாகச் சொல்லிவிட்டான். பெண்ணின் தகப்பனார் படித்த மனிதர். ரிடயர் ஆன உத்தியோகஸ்தர். அத்துடன் தியாஸாபிகல் ஸொஸைடியைச் சேர்ந்தவர். ஆகவே, அவர் கட்டாயம் தம்முடைய பெண்ணின் சம்மதத்தைக் கேட்டிருப்பாரென்று எதிர்பார்த்தான். அவர் அப்படிச் செய்யவில்லையென்றால், இவனா அதற்கு ஜவாப்தாரி?
இரவுக்கிரவே திரும்பி ஊருக்குப் போன கைலாஸம் அங்கே ஒரு நாள் கூடத் தங்கவில்லை. ஒருவரிடமும் விவரம் தெரிவிக்காமல் பம்பாய்க்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கே ஒரு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து, தன்னுடைய திறமை காரணமாக, கூடிய சீக்கிரம் மானேஜர் பதவிக்கு வந்தான். ஏராளமாகப் பணம் சம்பாதித்தான். இடையில் சத்தியாக்கிரஹ இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்து காங்கிரஸ் கூட்டங்களில் புகழடைந்தான். எல்லா வகையிலும் அவனுடைய வாழ்க்கை திருப்திகரமாயிருந்ததென்றே சொல்லவேண்டும். ஆயினும் மனச்சாந்தி மட்டும் ஏற்படவில்லை. மாப்பிள்ளை அழைத்த அன்று இரவில் நடந்த எதிர்பாராத நாடகம் மனத்தை விட்டு அகலவேயில்லை. தன்னுடைய கேள்விக்குப் பதிலாக, ‘ஆமாம்’ என்று தழுதழுத்த குரலில் கூறிய உமாவின் உருவம் அவன் மனக் கண்முன் அடிக்கடி தோன்றி வந்தது. வேறு விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி, இதை மறக்க எவ்வளவோ முயற்சி செய்தும் கைகூடவில்லை. ஞாபகம் வந்த போதெல்லாம், “ஐயோ! இதென்ன ஜன்மம்?” என்று வாழ்க்கையிலேயே வெறுப்புண்டாகும்.
பம்பாய் சென்று பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு, சொந்த நாட்டைப் போய்ப் பார்க்கவேண்டுமென்று ஆவல் உண்டாயிற்று. ஆறு மாதம் லீவு வாங்கிக் கொண்டு அங்கிருந்தே மோட்டாரில் யாத்திரை கிளம்பினான். திருச்சிக்கு வந்த போது, ஏனோ பெருமாள்புதூருக்குப் போகவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. எவ்வளவுதான் முயன்றும் அந்த ஆவலை அடக்குவதற்கு முடியவேயில்லை.
ஆனால் பெருமாள்புதூருக்குக் கிட்டத்தட்ட வந்த விட்ட போது மனக்குழப்பம் உண்டாயிற்று. அவள் இந்த ஊரில் இருக்கப் போவதில்லை. இருந்தாலும், யாரோ ஒருவனைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பாள். நாலைந்து குழந்தைகள் பிறப்பதற்குக் காலமாயிற்று. சீ! இந்த நினைவே சகிக்க முடியவில்லை! நேரில் பார்த்து எப்படி சகிப்பது?
மேலும், அங்கே போய் யாரையாவது விசாரிக்க வேண்டும்! தான் இன்னான் என்று சொல்ல வேண்டியிருக்குமல்லவா? பழைய கதையை உடனே எல்லாரும் சொல்ல ஆரம்பிப்பார்கள். காரணம் கேட்பார்கள். வேண்டாம், வேண்டாம்! பேசாமல் திரும்பிப் போவதுதான் சரி.
இவ்வாறு தீர்மானித்து மேல் துணியை உதறி எடுத்துக் கொண்டு எழுந்திருந்தான். தலையிலே “படார்!” என்று ஓர் அடி; கழுத்தில் “கும்” என்று ஒரு குத்து. கைலாஸம் தலைக்குப்புறக் கீழே விழுந்தான்.
“தெரியுமா? பேசாமல் உன்னுடைய உடுப்பைக் கழற்றிக் கொடுத்துவிடு. கொடுத்துவிட்டால் உன்னை ஒன்றும் செய்யவில்லை. ஏதாவது தகராறு பண்ணினாயோ, அப்படியே மென்னியைத் திருகி ஆற்றில் போட்டு விடுவேன்!” என்னும் சொற்கள் கைலாஸத்தின் செவியில் விழுந்தன. தலையில் விழுந்த அடியினால் கலக்கம் அடைந்திருந்த அவனது மூளை சிறிது சிறிதாக தெளிவு பெற்றது.
முன்னொரு தடவை இதேவிதமாக மண்டையில் அடிபட்டு அவன் புத்தி கலங்கியதுண்டு, அது சட்டம் மீறி உப்பு எடுக்கச் சென்றபோது போலீஸ் தடியினால் பட்ட அடி. அச்சமயம் அவனுக்கு ஸ்மரணை வந்தபோது, காதிலே, ‘வந்தே மாதரம்!’ ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ என்னும் கோஷங்கள் ஒலித்தன. இப்போது அதெல்லாம் ஒன்றுமில்லையென்றும், இது வேறு சங்கதியென்றும் உணர்ந்தான். கண்ணைத் திறந்து பார்த்தான். சிறை உடை தரித்த ஒருவன் தன் மார்பின் மேல் ஒரு காலை வைத்து அமுக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. அடுத்த நிமிஷம் கைலாஸமும் கைதியும் காவேரிக் கரையில் கட்டிப் புரண்டு கொண்டிருந்தார்கள்.
இப்படி எவ்வளவு நேரம் சென்றது என்பது கைலாஸத்துக்குத் தெரியாது. திடீரென்று போலீஸ் ஊதுகுழலின் சத்தம் கேட்டது. பிறகு பூட்ஸ் அணிந்த காலடிச் சத்தம். அடுத்த கணம், தன் மேல் உட்கார்ந்து அமுக்கிக் கொண்டிருந்த பூதம் எழுந்திருந்து விட்டதென்பதைக் கைலாஸம் உணர்ந்தான். அவனும் எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். போலீஸ்காரர்கள் இருவர் கைதிக்கு விலங்கு பூட்டத் தயாராயிருந்தார்கள். அதைவிட அவனுக்கு ஆச்சரியம் அளித்த மற்றொரு காட்சியையும் கண்டான். “மென்னியைத் திருகிக் காவேரியில் போடுவேன்!” என்று அவனைப் பயமுறுத்திய முரட்டுப் பூதம் இப்போது கண்ணிலே நீர் பெருக்கிக் கொண்டிருந்தது.
கைதி திடீரென்று கீழே விழுந்து கைலாஸத்தின் கால்களைப் பிடித்துக் கொண்டான். “ஸ்வாமி, நீங்கள் தான் எனக்கு ஒரு ஒத்தாசை செய்யவேணும்” என்று கூறி விம்மி விம்மி அழத் தொடங்கினான். அதைக் கண்டு போலீஸ்காரர்கள் கூடச் சிறிது தயங்கி நின்றார்கள்.
அந்த முரட்டுப் பேயினிடம் பட்ட அடிகளினால் கைலாஸத்துக்கு உடம்பு முழுவதும் இன்னும் வலித்துக் கொண்டிருந்தது. ஆயினும், அவன் இப்போது காட்டிய துக்கமானது கைலாஸத்தின் உள்ளத்தை இளக்கிவிட்டது கடைசியில் அவன், “என்ன ஒத்தாசை வேண்டும் என்று சொல்லு; முடியுமானால் செய்கிறேன்” என்றான்.
“ஸ்வாமி! உங்களுக்குக் கோடி புண்யம் உண்டாகும். உங்கள் குழந்தை குட்டிகளைப் பகவான் காப்பாற்றுவார். அதோ தெரிகிறதே கோவில், அதுதான் பெருமாள்புதூர். அங்கே கைக்கோளர் தெருவில் மருதமுத்து வீடு என்று கேட்டால் சொல்வார்கள். அந்த வீட்டில் தாயில்லாக் குழந்தைகள் மூன்று பேர் இருக்கிறார்கள். என் பெண்டாட்டி சாகும்போது, பாவி என்னிடம் குழந்தைகளை ஒப்படைத்து, அவற்றைக் காப்பாற்றுவதாகச் சத்தியம் வாங்கிக் கொண்டு போனாள்…” (இங்கே மருதமுத்து அழத் தொடங்கினான். பிறகு சமாதானம் அடைந்து மேலே சொன்னான்.) “ஐயோ! பாழும் குடியினால் கெட்டுப் போனேன் நான். போன வருஷம் தீபாவளியன்று ஊர்க் குழந்தைகள் எல்லாம் புதுத் துணி உடுத்தி, பட்டாஸ் கொளுத்திச் சந்தோஷமாயிருந்தார்கள். என் குழந்தைகள் மட்டும் அழுது கொண்டிருந்தன. ‘அடுத்த தீபாவளிக்கு உங்களை நான் இப்படி வைப்பதில்லை’ என்று சத்தியம் செய்து கொடுத்தேன். நாளைக்குத் தீபாவளி, அவர்களை நான் பார்க்கவே மாட்டேன்!” என்று மறுபடியும் விம்மினான்.
கைலாஸத்துக்கு இப்போது ஒருவாறு விஷயம் புரிந்தது. “அழாதே, நான் என்ன செய்ய வேண்டும் சொல்லு. பெருமாள்புதூருக்குப் போய் உன் குழந்தைகளைப் பார்க்க வேண்டுமா?” என்று கேட்டான்.
மருதமுத்து போலீஸ்காரர்களைத் திரும்பிப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தன்னுடைய மோவாய்க் கட்டையையும், கன்னத்தையும் இரண்டு தடவை தட்டினான். அவனுடைய வாயிலிருந்து மூன்று கால் ரூபாய்கள் கையில் விழுந்தன. அவற்றைக் கைலாஸத்தினிடம் கொடுத்து விட்டுச் சொன்னான்: “ஸ்வாமி! இந்தப் பணத்திற்குப் பட்டாஸ் கட்டும் மத்தாப்பும் வாங்கிக் குழந்தைகளிடம் கொடுங்கள். ‘உங்கள் அப்பன் அனுப்பினான்’ என்று சொல்லுங்கள். இன்னும் இரண்டு மாதத்திலே வந்துவிடுவான் என்று சொல்லுங்கள். சொல்வீர்களா ஸ்வாமி?”
கைலாஸத்தின் கண்களில் ஜலம் துளித்தது; அவனுக்குச் சிறையநுபவம் உண்டாதலால், சிறைச்சாலையில் மேற்படி மூன்று கால் ரூபாய்களைச் சேர்க்க மருதமுத்து எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டுமென்பதை அறிந்திருந்தான். சிறைக்குள்ளே ஒவ்வொரு கால் ரூபாயும் ஒரு பவுனுக்குச் சமானம். அவற்றை அவன் வாங்கிக் கொண்டு, “அப்பா கட்டாயம் அப்படியே செய்கிறேன். நீ கவலைப்படாதே” என்று உறுதி கூறினான்.
“ஸ்வாமி! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; நினைவாக ஒரு ஊசிக் கட்டு வாங்கிக் கொண்டு போங்கள்” என்றான் கைதி.
இதுவரை பொறுத்திருந்த போலீஸ்காரர்கள் இப்போது பொறுமையிழந்தவர்களாய், “போதும் நாடகம்; கிளம்பு!” என்று சொல்லிக் கையில் விலங்கைப் பூட்டி இழுத்துச் சென்றார்கள்.
போலீஸ்காரர்களும் கைதியும் மறைந்ததும், கைலாஸத்துக்கு இதெல்லாம் உண்மையா, கனவா என்று சந்தேகம் வந்துவிட்டது. கையிலிருந்த மூன்று கால் ரூபாய் நாணயங்கள், ‘கனவு அன்று; உண்மை!’ என்பதை வற்புறுத்தின. பெருமாள்புதூரைத் தேடித் தான் வந்த நோக்கம் என்ன, இப்போது போகும் காரியம் என்ன என்பதை எண்ணியபோது அவனை அறியாமல் சிரிப்பு வந்தது. ஆயினும் வாக்குறுதி கொடுத்தாய்விட்டது. போகத்தான் வேண்டும்.
பத்து நிமிஷத்துக்கெல்லாம் பெருமாள்புதூர்வாசிகள், தங்கள் ஊர்ச் சாலைப்புறத்தில் தீபாவளிக்கென்று வைத்திருந்த பட்டாஸ் கடையில் ஒரு மோட்டார் வண்டி வந்து நிற்கிறதென்பதை அறிந்து அதிசயம் அடைந்தார்கள். மோட்டாரில் வந்த பெரிய மனிதர் கேவலம் முக்கால் ரூபாய்க்கு மட்டும் பட்டாஸ்களும், மத்தாப்புகளும் வாங்குவதைப் பார்த்து அவர்களுடைய ஆச்சரியம் அதிகமாயிற்று. முதலிலே தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டு இன்னும் அதிகம் வாங்கலாமென்று கைலாஸம் நினைத்தான். ஆனால் அப்படிச் செய்வது ஏதோ தெய்வத்துக்கு அபகாரம் செய்வது போலாகுமென்று அவனுக்குத் தோன்றியது. தகப்பனுக்கும் மக்களுக்கும் இடையே தான் பிரவேசிப்பது பாவமென்று எண்ணினான். எனவே, அந்த முக்கால் ரூபாய்க்கும் வெடி வகையராக்கள் வாங்கிக் கொண்டு கைக்கோளர் தெருவுக்கு வழி விசாரித்துச் சென்றான். அங்கே மருதமுத்து வீட்டைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாயிருந்தது. ஏனெனில் மோட்டாரில் வந்திருக்கும் பிரபு, கேவலம் ‘கேடி’ மருதமுத்துவின் வீட்டைத் தேடி வந்திருப்பாரென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எவரெவர் வீட்டையோ காட்டினார்கள். கடைசியில் அந்தக் ‘கேடி’ மருதமுத்துவின் வீட்டை அடைந்தபோது, வீட்டுக்குள்ளே கைலாஸம் பார்த்த காட்சி வாசற்படியிலேயே அவனைத் திகைத்து நிற்கும்படி செய்தது.
ஏழ்மை நிலையிலிருந்த குழந்தைகள் நால்வர் உயர் குலத்து மங்கை ஒருத்தியைச் சுற்றி நின்றார்கள். அவள் ஒரு மூட்டையிலிருந்து துணிமணிகளை எடுத்து அக்குழந்தைகளுக்கு ஒவ்வொன்றாய்க் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த மங்கை யார்? பன்னிரண்டு வருஷத்திற்கு முன் பார்த்த உமாவின் உருவம் கைலாஸத்தின் மனக்கண்முன் நின்றது. இவள் அவள் தமக்கையா என்ன? இல்லை, இல்லை, அவளே தான்!
சில நிமிஷத்துக்கெல்லாம் உமா திரும்பிப் பார்த்தாள். ஒரு கணம் அவளுடைய கண்களில் ஆச்சரியம் தோன்றிற்று. பின்னர் அக்கண்களில் இயற்கை அமைதி குடிகொண்டது.
சற்று நேரம் இருவரும் சும்மா இருந்தார்கள். பிறகு உமாவின் முகத்தில் தோன்றிய கேள்விக்குப் பதில் கூறுவான் போல் கைலாஸம், “இந்தக் குழந்தைகளின் தகப்பன் இவர்களுக்குப் பரிசு அனுப்பினான். அவற்றைக் கொண்டு வந்தேன்” என்றான்.
தகப்பன் என்றதும் குழந்தைகள் கைலாஸத்தை வந்து சுற்றிக் கொண்டன. ஆச்சரியமும் பயமும் ததும்பிய கண்களுடன் அவனைக் கண் கொட்டாமல் பார்த்தன. கைலாஸம் திரும்ப மோட்டாருக்குச் சென்று, அங்கிருந்த சிறு மூட்டையை எடுத்து வந்து, பட்டாஸ் கட்டுகளையும், மத்தாப்புப் பெட்டிகளையும் அவர்களிடம் கொடுத்தான். உமா கொடுத்த துணிமணிகளை வாங்கிக் கொண்ட போதெல்லாம் சாதாரணமாயிருந்த குழந்தைகளின் முகத்தில் இப்பொழுது குதூகலம் ததும்பிற்று.
“ஐயா! நீங்க எங்க அப்பாவைப் பாத்தீங்களா?” என்று மூத்த பெண் தயக்கத்துடன் கேட்டாள்.
“ஆமாம், அம்மா! இதெல்லாம் அவர் தான் கொடுக்கச் சொன்னார்” என்றான் கைலாஸம்.
“அப்பா எப்ப வருவாங்க?” என்று மறுபடி அவள் கேட்டபோது, கண்களில் ஜலம் ததும்பிற்று.
“இன்னும் இரண்டு மாதத்தில் கட்டாயம் வந்துவிடுவார், அம்மா!”
அதற்குப் பின் அந்தப் பெண் ஒன்றும் கேட்கவில்லை. எல்லாக் குழந்தைகளும் பட்டாஸ், மத்தாப்புகளில் கவனம் செலுத்தின.
“நான் போய்வருகிறேன்!” என்று கைலாஸம் உமாவைப் பார்த்துச் சொன்னான்.
அவள் ஒரு நிமிஷம் தயங்கிப் பிறகு, “இந்தக் குழந்தைகள் விஷயத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டீர்களே! இவர்களுடைய தகப்பன் வரும் வரையில் இவர்களைக் காப்பாற்ற ஏதாவது வழி செய்துவிட்டுப் போங்கள்” என்றாள்.
“அவர்களை ரக்ஷிக்கத் தேவியேதான் இங்கே இருக்கிறாளே! அவர்களுக்கென்ன குறை?”
“அந்தத் தேவியின் ரக்ஷணை இனிமேல் அவர்களுக்கு இல்லை.”
“ஏன் அப்படி?”
“பன்னிரண்டு வருஷ காலமாக அவள் யாரைக் குறித்துத் தவம் செய்தாளோ, அந்தத் தேவன் இன்றுதான் பிரசந்நமாயிருக்கிறார். அவருக்கு மனமிருந்து அழைத்துப் போனால், அவருடன் போவேன். அவர் மறுபடியும் என்னை விட்டுச் சென்றால், மனிதர்கள் யாரும் முடிவாகச் செல்லுமிடம் செல்வேன்.”
கைலாஸத்துக்கு மயிர்க்கூச்சல் எடுத்தது. இவள் என்ன சொல்கிறாள்? யாரைக் குறித்துச் சொல்கிறாள்?
“கொஞ்சம் விளங்கும்படி சொன்னால் நன்றாயிருக்கும்” என்றான்.
“வீட்டுக்கு வந்தால் சொல்கிறேன். இந்தக் குழந்தைகள் இங்கே சந்தோஷமாயிருக்கட்டும்.”
“வீட்டிற்கா?” என்று கைலாஸம் இழுத்தான்.
“வீட்டில் என்னைத் தவிர என் தாயார்தான் இருக்கிறாள்! வேறு யாரும் இல்லை.”
பன்னிரண்டரை வருஷத்துக்கு முன்னால், தட்டிப் போன கலியாணத்துக்கு முதல் நாளிரவு, ஊர்வல உடையைக் கூட முழுதும் களையாமல் எந்த வீட்டிற்குள் கைலாஸம் பிரவேசித்தானோ, அதே வீட்டிற்குள் இன்று மாலை மறுபடியும் நுழைந்தான்.
“அம்மா! விருந்தாளி வந்திருக்கிறார்!” என்று உமா வாசற்படி நுழைந்ததும் கூறினாள். கொஞ்சம் வயதான ஸ்திரீ ஒருத்தி வந்து கைலாஸத்தை உற்றுப் பார்த்தாள். “பார்த்த ஞாபகமிருக்கிறது. நன்றாய் ஞாபகமில்லை…” என்று கூறி, அப்புறம் ஏதோ சொல்ல ஆரம்பித்து நிறுத்தி விட்டாள்.
“என் பெயர் கைலாஸம்!” என்றான்.
உடனே அந்த அம்மாளின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. “என் பெண்ணின் தவம் வீண் போகவில்லை. பகவானே! நீர் தான் துணை” என்று தழுதழுத்த குரலில் கூறினாள். பிறகு உமாவைப் பார்த்து, “சற்று நேரம் பேசிக் கொண்டிரு, அம்மா! ஒரு நிமிஷம் சமையல் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
கைலாஸத்தின் நெஞ்சு வெடித்து விடும்போல் இருந்தது. மனக்குழப்பமோ சொல்ல முடியாது.
“வீட்டுக்கு வந்தால் ஏதோ சொல்லுவதாகக் கூறியபடியால் வந்தேன்” என்றான்.
“ஞாபகம் இருக்கிறது, எப்படிச் சொல்வதென்று தான் தெரியவில்லை; கதை மாதிரிச் சொல்லலாமல்லவா?”
“எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்!”
“இந்த ஊரிலே துர்ப்பாக்கியசாலியான ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு அவள் பெற்றோர் தக்க வரனைத் தேடிக் கலியாணம் நிச்சயம் செய்திருந்தார்கள். கலியாணத்துக்கு முதல் நாள் இரவு மாப்பிள்ளையும் அவரைச் சேர்ந்தவர்களும் வந்து சேர்ந்தனர். அந்தப் பெண், தனக்குப் புருஷனாக வரப்போகிறவருக்கு ஒரு கடிதம் எழுதித் தன் தோழியிடம் கொடுத்தனுப்பினாள். அப்படி அவள் செய்தது தவறுதான்; ஆனால் அது அவ்வளவு பெரிய தவறு என்று அவள் அப்போது நினைக்கவில்லை. மாப்பிள்ளை அந்தக் கடிதத்தைப் பார்த்துக் கோபித்துக் கொண்டு அன்றிரவே புறப்பட்டுப் போய்விட்டார்.”
“அந்தப் பெண் தன்னுடைய செயலால் நேர்ந்த விபரீதத்தை அறிந்தபோது துயரக் கடலில் ஆழ்ந்தாள். தன்னைத் தானே நொந்து கொண்ட போதிலும், தான் செய்த தவறை வெளியே சொல்ல வெட்கிப் பேசாமல் இருந்தாள். ஆனால் வேறு கலியாணத்தைப் பற்றிப் பேச்சு வந்தபோது தகப்பனாரிடம் உண்மையை ஒப்புக் கொள்ள நேர்ந்தது. தன் மனத்திலே வரித்து ஒருமுறை நிச்சயமானவரைத் தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாள். அவள் தகப்பனார் அதே மாப்பிள்ளையைப் பற்றி மறுபடியும் விசாரித்தார். ஆனால் அவர் உடனே ஊரை விட்டுப் போய்விட்டாரென்றும், அவரைப் பற்றி யாருக்கும் ஒரு தகவலும் தெரியாதென்றும் செய்தி கிடைத்தது.”
“ஆனால் அந்தப் பெண் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. தன்னுடைய ஹிருதயத்தில் உண்மை அன்பு இருந்தபடியால், என்றைக்காவது ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்று நம்பியிருந்தாள். ஒரு வருஷமல்ல, இரண்டு வருஷமல்ல, பன்னிரண்டு வருஷங்கள் அந்த நம்பிக்கையுடன் கழித்தாள்…”
“அவள் அனுப்பிய கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்று சொல்லவில்லையே?” என்று கைலாஸம் கேட்டான்.
“அந்தக் கடிதமே இருக்கிறது. இதோ கொண்டு வருகிறேன்!” என்று உமா எழுந்திருந்து சென்று ஒரு மிகப் பழைய பழுப்படைந்த காகிதத்தைக் கொண்டு வந்து தந்தாள். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது.
“என் உயிருக்குயிரான பிராணநாதருக்கு,
நான் இதை எழுதுவது தவறாயிருந்தால் தயவு செய்து மன்னிக்கும்படி பிரார்த்திக்கிறேன். தாங்கள் கலியாணத்திற்குக் கதர் வேஷ்டிதான் வேண்டுமென்று சொல்லி அப்படியே வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதைப்பற்றி என் தோழிகள் எல்லாம் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள். ‘கோணிச்சாக்கு மாப்பிள்ளை’ என்று சொல்லுகிறார்கள். ஆகையால் தாங்கள் என் மேல் கருணை கூர்ந்து பட்டு வேஷ்டியே வாங்கிக் கொள்ளும்படி வணக்கமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு, அடியாள் உமா”
கைலாஸம், அதை இரண்டு தடவை, மூன்று தடவை படித்துவிட்டு, முகத்திலே திகைப்புடன், “இது என்ன? நான் படித்த கடிதம் இது அல்லவே?” என்றான்.
“நான் எழுதிய கடிதம் இதுதான். ஆனால் நீங்கள் படித்த கடிதம் வேறு. அதை நீங்கள் மேல் கவருடன் காட்டிக் கேட்டதால், மேல் விலாசத்தின் எழுத்தைப் பார்த்து விட்டு ‘நான் எழுதியது தான்’ என்று சொல்லி விட்டேன். நீங்கள் அப்பால் போனதும், உறையைப் பிரித்துப் பார்த்தபோது தான் விஷயம் தெரிந்தது. என் தோழி விஷமத்துக்காக ஒரு நாவலிலிருந்து அந்த மாதிரி எடுத்து எழுதி உங்களிடம் கொடுத்து விட்டாள். அதைப் படித்ததும் அப்போது எனக்கு ஏற்பட்ட திகைப்பில் இன்னது செய்வதென்று தோன்றவில்லை. நீங்களோ உடனே போய் விட்டீர்கள். பகவானே! அந்த நாட்களில் நான் அநுபவித்த வேதனையை நினைத்தால் இப்போதும் உடல் நடுங்குகிறது”
“அடடா! என்ன அநியாயம்! அந்த விஷமக்காரப் பெண் அப்படிப்பட்ட காரியம் ஏன் செய்தாள்?”
“பாவம்! அவள் பட்ட துன்பமும் கொஞ்சமில்லை. தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டு அழு அழு என்று அழுதாள். என்னுடைய அசல் கடிதத்தைத் திருப்பிக் கொடுத்தாள். ஆனால், அப்போதும் சரி, இப்போதும் சரி, அவள் பேரில் எனக்குக் கோபமே கிடையாது. நான் உங்களைக் ‘கதர் கட்டிக் கொள்ள வேண்டாம்’ என்று எழுதியதற்குத் தண்டனையாக ஏற்பட்டதுதான் என்னுடைய துன்பம் என்றே கருதி வந்தேன். அதற்குப் பிராயச்சித்தமாக, அந்த வருஷம் முதல் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஏழைகளுக்குக் கதர் வேஷ்டி இனாம் அளித்து வருகிறேன். இந்த வருஷம் வாங்கிய கதர் வேஷ்டியில் தற்செயலாக ஒரு ஜோடி மிகுந்திருக்கிறது…”
“மருதமுத்து மகாராஜனாயிருக்கவேண்டும். அவன் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்திராவிடில் இன்று உன்னை நான் சந்தித்திருக்க மாட்டேனல்லவா?” என்றான் கைலாஸம்.
“அவன் ஏழேழு ஜன்மத்துக்கும் மஹாராஜனாயிருக்கட்டும். அவன் போன வருஷத்தில் எங்கள் வீட்டில் கன்னம் வைத்துத் திருடிவிட்டு ஜெயிலுக்கும் போயிராவிட்டால், இன்று அவன் குழந்தைகளுக்குத் துணி வாங்கிக் கொண்டு நான் அங்கே வந்திருக்கமாட்டேன்” என்றாள் உமா.
பன்னிரண்டு வருஷ காலமாகத் தீபாவளிக் கொண்டாட்டம் இல்லாதிருந்த பெரிய வீட்டில் இந்த வருஷம் தடபுடலாகத் தீபாவளி உத்ஸவம் நடப்பதைப் பார்த்துப் பெருமாள்புதூர்வாசிகள் அளவிலாத ஆச்சரியம் அடைந்தார்கள்.
கைலாஸத்துக்கும் உமாவுக்கும் அந்தத் தீபாவளி எவ்வளவு சந்தோஷமாயிருந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? ஆனால் அவ்வளவு நெடுங்காலம் பிரிந்திருந்து எதிர்பாராத முறையில் ஒன்று சேர்ந்த அந்தக் காதலர்களின் ஆனந்தங்கூட அதே சமயத்தில் மருதமுத்துவின் மக்கள் ஒரு சீனவெடி சுட்டதில் அடைந்த இன்பத்துக்கு ஈடாகுமா என்பது சந்தேகம் தான்.
இத்துடன்
அமரர் கல்கியின் கைதியின் பிரார்த்தனை
இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.