BooksKalki Short StoriesKalki TimesStory

Kanaiyazhiyin Kanavu Kalki | Kalki Times

Kanaiyazhiyin Kanavu Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

கணையாழியின் கனவு

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Kanaiyazhiyin Kanavu Kalki

அத்தியாயம் 1
சகுந்தலை சுயம்வரம்

கனவுதான்; ஆனாலும், எவ்வளவு இன்பகரமான கனவு! அசோக வனத்திலிருந்த சீதையிடம் திரிஜடை தான் கண்ட கனவைக் கூறி வந்தாள். சீதை மிகவும் மகிழ்ச்சியுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கடைசியாகத் திரிஜடை, “….இராவணனுடைய மாளிகையிலிருந்து செந்தாமரையாள் ஆயிரம் முகமுடைய திருவிளக்கைக் கையில் ஏந்திக் கிளம்பி வந்து விபீஷணன் மனையில் புகக் கண்டேன். ஜானகி! இத் தருணத்தில் நீ என்னை எழுப்பவே கண் விழித்தேன்” என்று கூறி முடித்தாள். அப்போது சீதை, “அம்மா! மறுபடியும் தூங்கு, அந்தக் கனவின் குறையையும் கண்டுவிட்டு எனக்குச் சொல்லு” என்று வேண்டிக் கொண்டாள்.

(“இது என்ன? நீர் கூட இராமாயண ஆராய்ச்சியில் இறங்கிவிட்டீரா?”)

இல்லை, இல்லை உதாரணத்துக்காகவே மேற்படி சம்பவத்தைக் குறிப்பிட்டேன். ரகுராமன் கனவிலிருந்து கண் விழித்ததும் ஏறக்குறைய சீதையைப் போலவேதான் ஆதங்கப்பட்டான். “மறுபடியும் தூங்க மாட்டோ மா? அந்தக் கனவின் பாக்கியையும் காணமாட்டோ மா?” என்று ஏங்கினான்.

“ரகுராமனா? எந்த ரகுராமன்?”

ஓகோ! மன்னிக்க வேண்டும்.

இராமாயணத்தின் கதாநாயகனாகிய ரகுராமன் அல்ல; இவன் கணையாழி கே.பி. ரகுராமன், பி.ஏ.

(“கணையாழியா? எந்தக் கணையாழி?”)

அட உபத்திரவமே! கணையாழி என்றால், அநுமார் இராமரிடமிருந்து வாங்கிச் சீதையிடம் கொண்டுபோய்க் கொடுத்த கணையாழி அல்ல. இது, நான் சொல்லப் போகும் கதை நடந்த ஊர். அந்த ஊருக்கு ஏன் ‘கணையாழி’ என்ற பெயர் வந்ததென்பது வேறு கதை. அதை மற்றொரு சமயம் சொல்லலாம். இப்போது ரகுராமன் கண்ட ரஸமான கனவைக் கூறுகிறேன்.

சகுந்தலை – இது அவளுடைய உண்மையான பெயரல்ல; மற்றோர் இராமயணப் பெயர் வந்தால் வாசகர்களால் தாங்க முடியாது என்று பயந்து நான் மாற்றி இட்ட பெயர். சகுந்தலை ஆற்றங்கரை அரசமரத்தின் அடிக்கிளையில் ஏறி, உல்லாசமாய்ச் சாய்ந்து கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அவள் வலது கரத்தில் ஒரு பூமாலை தொங்குகிறது. கே.பி.ரகுராமனும், இன்னும் கணையாழி கிராமத்திலே கதாநாயகர்களாவதற்குத் தகுதி வாய்ந்தவர்களாயிருந்த இளைஞர்கள் அனைவரும் அந்த மரத்தடியில் நின்று – உட்கார்ந்து – நின்று – உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். தெளிவாய்ச் சொன்னால், தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள்!

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் ஒவ்வொருவராகக் களைத்துப் போய் உட்காரத் தொடங்கினார்கள். ஒருவர், இருவர், மூவர், நால்வர்… உட்கார்ந்து விட்டார்கள். ரகுராமனும், வைத்தியநாதனும் மட்டுந்தான் பாக்கி. கடைசியில், வைத்தியநாதனும் தோல்வியுற்று உட்கார்ந்தான், அப்போது மரத்தின் மீதிருந்த சகுந்தலை குயிலினும் யாழினும் இனிய குரலில், “ரகுராமனே ஜயித்தார். அவருக்கே நான் மாலையிடுவேன்” என்று சொல்லிக் கொண்டே மரத்திலிருந்து கீழிறங்கலானாள். அப்போது ரகுராமன் அவளுக்குக் கைகொடுத்து இறக்கிவிடுவதற்காகத் துள்ளிக் குதித்துச் சென்றான். இத்தகைய ரஸமான, ருசிகரமான, நாவிலே ஜலம் ஊறச் செய்யும்படியான இடத்திலேதான் ரகுராமன் கண் விழித்தது. நிதானித்துப் பார்த்தான். தான் படுக்கையிலிருந்து எழுந்து தாழ்வாரத்தின் தூணையும், கூரை விட்டத்தையும் பிடித்த வண்ணமாய் நிற்பதைக் கண்டான். மறுபடியும் படுத்துத் தூங்கி, அந்தக் கனவின் குறையையும் காணமாட்டோ மாவென்று அவன் உள்ளம் துடிதுடித்தது. ஆனால், பிறகு தூக்கம் வரவேயில்லை. மனம் எண்ணாததெல்லாம் எண்ணிற்று.

இந்தக் கனவு, முதல் நாள் சாயங்காலம் தானும் மற்றக் கணையாழி இளைஞர்களும் பேசிக் கொண்டிருந்ததன் பயனேயென்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.

“முன்னெல்லாம்போல் இக்காலத்திலும் சுயம்வரம் ஏன் நடத்தக் கூடாது? நமக்குள் தீரமான காரியம் செய்கிறவன் சகுந்தலையை மணம் புரிவதென்று ஏற்படுத்தி விட்டால்?…” என்றான் கல்யாணசுந்தரம்.

“அப்படி ஏற்படுத்தினால் நீதான் ஜயிப்பாய் என்று எண்ணமோ?” என்றான் இராமமூர்த்தி.

“எனக்கு ஒன்று தெரியும்; யார் அதிகமான தோப்புக் கரணம் போட முடியும் என்று பந்தயம் ஏற்படுத்தினால், ரகுராமன் தான் ஜெயிப்பான்” என்று வைத்தியநாதன் சொன்னான்.

எல்லாரும் சிரித்தார்கள். வைத்தியநாதன் கூறியதில் கொஞ்சம் உண்மையுண்டு. ரகுராமன் சிறு பையனாயிருந்த போதிலிருந்து பஸ்கி போட்டுப் பழகியவன். முன்னூறு, நானூறு பஸ்கி ஒரே மூச்சில் அவனால் போட முடியும்.

பிறகு, அவர்களில் ஒவ்வொருவனும் எந்தெந்தப் பந்தயத்தில் ஜயிப்பான் என்பதைப் பற்றிப் பேச்சு நடந்தது.

இவ்வாறு, தன்னைப் பரிகாசம் செய்வதற்காக, அவர்கள் சொன்னதையே தான் கனவில் செய்ததாகக் கண்டதை நினைக்க ரகுராமனுக்குச் சிறிது நாணமாயிருந்தது. ஆனாலும் என்ன? மற்றவர்களுக்கு அது தெரியப் போவதில்லை. தன் வரையில் மறுபடியும் கண்விழித்தே எழாமல் அந்தக் கனவு காண்பதிலேயே வாழ்நாள் முழுவதும் கழித்துவிட மாட்டோ மா என்று அவனுக்குத் தோன்றியது.

கணையாழியில் அன்றிரவு ரகுராமனைப் போல் பந்தயத்தில் மற்றவர்களைத் தோற்கடித்துச் சகுந்தலையை மணம் புரிவது சம்பந்தமான கனவு கண்டவர்கள் இன்னும் பலர் உண்டு. வைத்தியநாதன் என்ன கனவு கண்டான் தெரியுமா? அவனும், இராமமூர்த்தி, ரகுராமன் முதலியோரும் வரிசையாக இலைகளுக்கு முன்னால் உட்கார்ந்தார்கள். எதிரில் ஒரு பெரிய அண்டா நிறைய இட்டிலியும், ஒரு ஜாடி நிறைய எண்ணெயும், மிளகாய்ப் பொடி வகையராக்களும் வைத்திருந்தன. சகுந்தலை அந்த இட்டிலிகளை எடுத்துப் பரிமாற ஆரம்பித்தாள். அருகில் வைத்திருந்த கறுப்புப் பலகையில் அவர்கள் தின்ற இட்டிலிகளுக்குக் கணக்குப் போட்டு வந்தாள். மற்றவர்கள் எட்டு, பத்து, பதினைந்து, பதினெட்டாவது இட்டிலியில் நின்று விட்டார்கள். ஆனால் வைத்தியநாதனோ மேலே மேலே போய்க் கொண்டிருந்தான். இட்டிலி பரிமாறிக் கொண்டிருந்த – ஒரே ஒரு தந்த வளையல் மட்டும் அணிந்த – சகுந்தலையின் மலர்க் கரத்தை அவன் பார்ப்பான். “இத்தகைய அழகிய கையினால் இட்டிலி பரிமாறப் படுகையில், அந்த அண்டாவிலுள்ள இட்டிலிகளைச் சாப்பிடுவதுதானா ஒரு பிரமாதம்? முடிவென்பதே இல்லாமல் இட்டிலிகளைச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கலாமே!” என்று அவனுக்குத் தோன்றும். கடைசியாக, அவன் நாற்பத்தாறாவது இட்டிலி தின்று கொண்டிருக்கையில், சகுந்தலை பவழத்தை வென்ற தன் இதழ்களைத் திறந்து, “இதோ வைத்தியநாதனேதான் வெற்றி பெற்றார். அவருக்கே நான் மாலை சூட்டுவேன்!” என்று கூறி மாலையை எடுத்து வந்தாள். அந்த சமயத்தில் – நாற்பத்தாறாவது இட்டிலி வைத்தியநாதனுடைய தொண்டைக்குக் கீழே இறங்காமல் அங்கேயே நின்றுவிட்டது. திக்கு முக்காடிப் போய் வைத்தியநாதன் உளறிக் கொண்டே படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். பனிக்காக அவன் தலையில் கட்டிக் கொண்டிருந்த கம்பளித் துணியின் முடிச்சு கழுத்தில் இறுகியிருப்பதை உணர்ந்து அதைத் தளர்த்தி விட்டான்.

இம்மாதிரியே கல்யாணசுந்தரம், ராஜசேகரன், மாசிலாமணி, இராமமூர்த்தி முதலியவர்கள் எல்லோரும் அன்றிரவு வெவ்வேறு விதமான கனவுகள் கண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *