Kanaiyazhiyin Kanavu Kalki | Kalki Times
அத்தியாயம் 2
கல்கத்தா ரங்கநாதம்
கணையாழி, அருணை நதி தீரத்திலுள்ள வளம் பொருந்திய கிராமம். அந்தக் கிராமத்தார் பரம்பரையான புத்திசாலிகள். அவர்கள் தானிய லக்ஷ்மியை இஷ்டதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தார்கள். இந்த வழிபாட்டில் வட்டி, வட்டிக்கு வட்டி, கூட்டு வட்டி ஆகிய மந்திரங்களை இடை விடாமல் உச்சரித்து வந்தார்கள். சக்திவாய்ந்த இந்த மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டு, தனலக்ஷ்மியும் அக்கிராமவாசிகளுக்கு அடிமை பூண்டு வாழ்ந்து வந்தாள்.
இத்தகைய கிராமத்தில் இளந்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் ஆங்கிலப் படிப்புள்ளவர்களாயிருந்ததில் ஆச்சரியமில்லையல்லவா? அந்த ஊரில் இருபது வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் எல்லாரும் அநேகமாக எம்.ஏ.க்கள்; எம்.ஏ. அல்லாதவர்கள் பி.ஏ.க்கள்; அதுவும் இல்லாதவர்கள் பாதி பி.ஏ.க்கள். எல்லோரும் பணக்காரர்கள் ஆதலால், உத்தியோகத்தைத் தேடி அலையாமல் வேண்டுமானால் உத்தியோகம் தங்களைத் தேடி வரட்டும் என்று ஊரில் தங்கி விட்டவர்கள்.
அப்படிப்பட்ட கணையாழி கிராமத்தில் இப்போது வசித்து வந்த முந்தின தலைமுறையைச் சேர்ந்தவர்களில் கல்கத்தா ரங்கநாதம் என்று ஒருவர் இருந்தார். கணையாழியில் பிறந்துங்கூட லேவாதேவி செய்யாத அபூர்வ மனிதர்களில் இவர் ஒருவர். அக்கவுண்டண்ட் ஜெனரல் உத்தியோகத்திலிருந்து பென்ஷன் பெற்றுச் சமீபத்தில் விலகியவர். வெகுகாலம் கல்கத்தாவில் வசித்தபடியால், இவருக்குக் கல்கத்தா ரங்கநாதம் என்று பெயர் வந்தது. இரண்டு வருஷத்துக்கு முன்பு இவருடைய அருமை மனைவியும், மூத்த புதல்வனும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் காலஞ்சென்ற பிறகு, தம் புதல்வி சகுந்தலையை ஸ்ரீ ரவீந்தரநாதரின் சாந்திநிகேதனத்தில் விட்டுவிட்டுத் தாம் கணையாழிக்கே வந்துவிட்டார். இங்கு ஒரு சமையற்காரனை வைத்துக் கொண்டு ஏகாங்கியாய் வாழ்ந்து வந்தார்.
ஐந்தாறு பீரோக்கள் நிரம்பிய அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள்தான் அவருக்குத் துணையாய் இருந்து வந்தனர்.
சில சமயம் கணையாழி இளைஞர்களில் சிலர், அவர் வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக் கொண்டிருப்பதுண்டு. அதாவது, பெரும்பாலும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்; அவர் கேட்டுக் கொண்டிருப்பார். ஆனால், சிற்சில சமயம் அவர் உண்மையில் தாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா, அல்லது கேட்டுக் கொண்டிருப்பது போல் பாசாங்கு செய்கிறாரா என்று அவர்களுக்குச் சந்தேகம் உண்டாவதுண்டு.
உதாரணமாக, அவர்கள் ஒரு நாள் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், ஸி.கே.நாயுடு எந்த ஊர்க்காரர் என்று கேள்வி பிறந்தது. அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர்தான் என்று ஒருவன் சொன்னான். “இல்லை, இல்லை! அவர் பங்களூர்க்காரர்” என்றான் மற்றொருவன். “என்ன, உங்களுக்குத் தெரியுமா ஸி.கே.நாயுடு எந்த ஊர்க்காரர் என்று?” என்பதாக ஒருவன் ரங்கநாதம் அவர்களைப் பார்த்துக் கேட்டான். அப்போது அவர் அரை நிமிஷம் திகைத்திருந்துவிட்டு, “ஸரோஜினி நாயுடு தானே? வங்காளி ஸ்திரீதான். சந்தேகமென்ன?” என்று கூறினார்.
இத்தகைய மெய்மறந்த பேர்வழி ஒரு நாள் கணையாழி இளைஞர்களிடம் மிகவும் உற்சாகமாகவும், பரபரப்புடனும் வார்த்தகளைக் கொட்டிப் பேசத் தொடங்கியபோது அவர்களுக்குப் பெரிதும் ஆச்சரியமாய்ப் போயிற்று. முதலில் அவர் கணையாழி ஸ்டேஷனில் எந்தெந்த ரயில் எவ்வெப்போது வருகிறதென்பதை மிக நுட்பமாய் விசாரித்தார். பிறகு கணையாழியைச் சுற்றி மோட்டார் போகக்கூடிய நல்ல சாலைகள் என்னென்ன இருக்கின்றனவென்று கேட்டார். அப்புறம், அந்த இளைஞர்களில் யாருக்காவது கலியாணம் ஆகியிருக்கிறதாவென்று வினவினார். ஒருவருக்கும் ஆகவில்லையென்றார்கள். ஸ்ரீதரன் என்பவனுக்கு மட்டும் சமீபத்தில் கலியாணம் நிச்சயமாகியிருக்கிறது. மணப்பெண்ணுக்கு வயது பதினொன்று என்று அறிந்த போது அவரால் சிரிப்பைத் தாங்கவே முடியவில்லை.
“இந்தக் காலத்திலே கூடவா இத்தகைய பொம்மைக் கலியாணங்கள் நடக்கின்றன?” என்று ஆச்சரியப்பட்டார். கலியாணத்தைப் பற்றிய பேச்சு வளர்ந்தது. “பெண்களுக்கு வயது வந்த பிறகு அவர்களே கணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி விட்டு விட வேண்டும்” என்னும் தமது கொள்கையைத் தாங்கி ஸ்ரீ ரங்கநாதம் விரிவாகப் பேசினார்.
பிறகு, அந்த ஊரில் படிப்புள்ள ஸ்திரீகள் யாராவது இருக்கிறார்களா என்றும், மாதர்கள் கூடிப் பொழுது போக்குவதற்குரிய சங்கம் ஏதாவது இருக்கிறதா என்றும், இன்னும் என்னவெல்லாமோ விசாரித்தார். ஒரு நாளும் இல்லாத புதுமையாக, கணையாழியின் சமூக வாழ்க்கையில் கிழவர் இவ்வளவு சிரத்தை காட்டியது ஏன் என்பது கடைசியாகத் தெரியவந்தது. அவருடைய புதல்வி சகுந்தலைக்கு விசுவ பாரதியில் கல்விப் பயிற்சி முடிந்து விட்டதென்றும், அவள் மறுநாள் காலை ரயிலில் கணையாழிக்கு வருகிறாளென்றும் இரண்டு முன்று மாதம் இங்கே தங்கியிருப்பாளென்றும் அறிவித்தார்.
தங்களுடைய வாழ்க்கையிலேயே புதுமையான அநுபவம் ஒன்று ஏற்படப் போகிறதென்ற உணர்ச்சியுடன், அன்றிரவு கணையாழி இளைஞர்கள் படுக்கச் சென்றார்கள்.