BooksKalki Short StoriesKalki TimesStory

Kanaiyazhiyin Kanavu Kalki | Kalki Times

அத்தியாயம் 4
அல்லோல கல்லோலம்

கணையாழியில் பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அதன் உபாத்தியாயரின் பெயர் கனகசபை வாத்தியார். கொஞ்சம் பழைய காலத்து மனிதர். ஐயோ! சாமி! அன்று அவர் அடைந்த காப்ராவைப் போல் அதற்கு முன் அவருடைய வாழ்நாளில் என்றும் அடைந்ததில்லை.

“ஸார்! ஸார்! யாரோ வரா, ஸார்?” என்று ஒரு பெண் கூவினாள். உடனே எல்லாப் பெண்களும் ஜன்னலண்டை குவிந்து வேடிக்கை பார்க்கலானார்கள். வாத்தியாரும் அந்தப் பக்கம் நோக்கினார். உடனே பள்ளிக்கூடம், பெஞ்சு, நாற்காலி, மேஜை, மைக்கூடு எல்லாம் அவரைச் சுற்றிச் சுழலத் தொடங்கின. சட்டென்று ‘பிளாக் போர்டு’ துடைக்கும் குட்டையை எடுத்துத் தலைப்பாகையாகச் சுற்றிக் கொண்டார். மேஜை மீதிருந்த தலைப்பாகையை உதறி அங்கவஸ்திரமாகப் போட்டுக் கொண்டார். பிறகு, நாற்காலி முதுகின் மேல் கிடந்த மேல் வேஷ்டியை எடுத்து, அதை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். இதற்குள், சமீபத்தில் காலடிச் சத்தம் கேட்கவே அதை மேஜை அறையில் செருகிவிட்டுப் பெண்களைப் பார்த்து, “சனியன்களே! உட்காருங்கள். அவரவர்கள் இடங்களில் உட்காருங்கள்!” என்று பாம்பு சீறுவது போன்ற குரலில் அதட்டினார்.

அடுத்த நிமிஷத்தில் ஸ்ரீமதி சகுந்தலா தேவியும், அவளுடைய தகப்பனாரும் பள்ளிக்கூட அறைக்குள் வந்தார்கள். “வாத்தியாரே! இவள் என்னுடைய பெண், கல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறாள். பள்ளிக்கூடத்தைப் பார்க்க வேண்டுமென்றாள். அழைத்து வந்திருக்கிறேன்” என்று ரங்கநாதம் கூறினார். வாத்தியாருக்கு இந்த விஷயம் விளங்கச் சற்று நேரம் பிடித்தது. அவர் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டரெஸ் அம்மாள்தான், தீடீரென்று வந்துவிட்டாள் என்று எண்ணியே அவ்வளவு குழப்பத்துக்குள்ளாகியிருந்தார். இந்தக் காலத்தில் தான் சின்னச் சின்னப் பெண்களுக்கெல்லாம் இன்ஸ்பெக்டரெஸ் உத்தியோகம் கொடுத்து தலை நரைத்த கிழவர்களை மிரட்டுவதற்கென்று அனுப்பி விடுகிறார்களே!

வாத்தியாருடைய கோலத்தைப் பார்த்துச் சகுந்தலை புன்னகை செய்து கொண்டு, “உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லையே?” என்று கேட்டாள்.

“எதற்கு?” என்றார் வாத்தியார்.

“தினம் நான் இங்கு வந்து குழந்தைகளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன். செய்யலாமல்லவா?” என்றாள்.

கனகசபை வாத்தியாருக்கு திடீரென்று பேசும் சக்தி வந்தது. “அடடா! இப்படி ஒருவரும் இல்லையே என்று தானே காத்துக் கொண்டிருக்கிறேன்? இந்த ஊரில் இவ்வளவு பேர் இருக்கிறார்களே? ஒருவராவது இங்கு வந்து எட்டிப் பார்த்தது கிடையாது. குழந்தைகள் வீட்டில் இருந்தால் தொல்லையென்று பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விடுகிறார்கள். அதுவும் பாதி நாளைக்கு அனுப்புவதில்லை. ‘கணக்கு வரவில்லை’, ‘பாட்டு வரவில்லை’ என்று மட்டும் அடிக்கடி புகார் செய்கிறார்கள்…” என்று இவ்வாறு வாத்தியார் தம் முறையீட்டை ஆரம்பித்தார்.

சகுந்தலை கால்மணி நேரத்திற்குள் பள்ளிக்கூடத்திலுள்ள குழந்தைகளிடத்திலெல்லாம் பேசிப் பெயர், வகுப்பு எல்லாம் விசாரித்து சிநேகம் செய்து கொண்டாள். பிறகு, ‘ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா’ என்னும் ஹிந்தி தேசியக் கொடிப் பாட்டில் இரண்டடி சொல்லிக் கொடுத்தாள். பின்னர், “நாளைக்கு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளிக் கிளம்பினாள்.

சகுந்தலையும் அவள் தகப்பனாரும் திரும்பி வீட்டுக்குப் போகையில் கணையாழியின் வீதியில் ஓர் அதிசயமான காட்சியைக் கண்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லாருக்கும் ஏக காலத்தில் வாசல் பக்கத்தில் என்ன தான் வேலை இருந்ததோ, தெரியவில்லை. புருஷர்களும் கொஞ்சம் வயதான ஸ்திரீகளும் வாசலிலும் திண்ணையிலும் காணப்பட்டனர். இளம் பெண்களோ வீட்டு நடைகளின் கதவிடுக்குகளிலும், காமரா உள்ளின் ஜன்னல் ஓரங்களிலும் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஷயம் என்னவென்றால், சகுந்தலையும் அவள் தந்தையும் அந்த ஊர்ப் பெண்கள் பள்ளிக்கூடத்தைப் பார்க்கப் போயிருக்கிறார்கள் என்ற செய்தி பரவவே, கல்கத்தா பெண்ணைப் பார்ப்பதற்கென்று அவர்கள் திரும்பி வருவதை எதிர்பார்த்து அவ்வளவு பேரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு கணையாழி முழுவதும் ஒரே அல்லோல கல்லோலமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *