Kanaiyazhiyin Kanavu Kalki | Kalki Times
அத்தியாயம் 5
புரட்சி
சகுந்தலை வந்தது முதல் கணையாழி இளைஞர்களுக்குக் கல்கத்தா ரங்கநாதம் வீட்டில் அடிக்கடி ஏதாவது வேலை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களுக்கு எந்த விஷயத்தில், என்ன சந்தேகம் ஏற்பட்டாலும் அதைத் தீர்த்து வைக்கக் கூடியவர் அவர் ஒருவரே என்று கருதுவது போல் காணப்பட்டது.
ஒரு நாள் எல்லாரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது சகுந்தலை, “இந்த ஊர் எனக்குப் பிடிக்கவேயில்லை. ஏன் வந்தோம் என்று இருக்கிறது” என்றாள். ரங்கநாதம் சற்றுத் தூக்கிவாரிப் போட்டவர் போல அவள் முகத்தைப் பார்த்தார்.
“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? இந்த ஊரில் என்ன பிடிக்கவில்லை? இந்த ஜில்லாவிலேயே அழகான கிராமம் என்று இதற்குப் பெயர் ஆயிற்றே?” என்று கல்யாணசுந்தரம் சொன்னான்.
“ஊர் அழகானதுதான். ஆனால், மனிதர்கள் மோசமானவர்கள். எப்பொழுது பார்த்தாலும் தெருவெல்லாம் அசிங்கம். பள்ளிக்கூடத்துக்குப் பக்கதில் குப்பை மேடு; கோவிலுக்குப் பக்கத்தில் மாட்டுக் கொட்டகை; குடியானவர்கள் தெருப் பக்கம் போகவே முடியவில்லை; அவ்வளவு குப்பையும், நாற்றமும். நேற்றுக் கொஞ்சம் தூரம் போய்ப் பார்த்தேன். முடியாமல், திரும்பி வந்து விட்டேன்” என்றாள்.
அப்போது அவள் தந்தை, “அதற்கு என்ன அம்மா செய்யலாம்? நம்முடைய ஜாதி வழக்கமே அப்படி. வீதிகளையும், வீட்டுச் சுற்றுப்புறங்களையும் சுத்தமாய் வைத்திருப்பதற்கு வெள்ளைக்காரர்கள் தான். நமக்கு எப்போதுதான் அந்த வழக்கம் வரப்போகிறதோ தெரியவில்லை” என்றார்.
“இந்த நண்பர்கள் எல்லாரும் மனம் வைத்தால் காரியம் ஒரு நிமிஷத்தில் நடந்து விடுகிறது. வேண்டுமானால், சாந்திநிகேதனத்துக்கு அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு இப்போது வந்து பாருங்கள்! எவ்வளவு சுத்தமாயிருக்கும், தெரியுமா? படித்தவர்களாய் உள்ளவர்கள் கொஞ்ச நாளைக்குச் செய்து காட்டினால் மற்றவர்கள் அப்புறம் கிராமத்தைச் சுத்தமாய் வைத்துக் கொண்டிருக்கத் தாங்களே கற்றுக் கொண்டு விடுவார்கள்” என்றாள் சகுந்தலை.
அது என்ன அதிசயமோ, தெரியாது. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குள் கணையாழியின் வீதிகளில் குவிந்து கிடந்த குப்பைகள் எல்லாம் எங்கேதான் போயினவோ? கணையாழி இளைஞர்களுக்குத் திடீரென்று கிராம சுகாதாரத்தில் அக்கறை உண்டாகிவிட்டது. வீட்டிற்குள்ளேயும், வெளியிலும் அவர்கள் சுத்தத்தைப் பற்றியே பேசலானார்கள். அவர்களுடைய முயற்சி ‘கீழ்’ ஜாதியினரின் தெருக்களில் கூடப் பலன் தர ஆரம்பித்து விட்டது. கோழிகளும், பன்றிகளும் பேசக்கூடுமானால் அவை தங்களைப் பட்டினிக்குள்ளாக்கிய கணையாழி இளைஞர்களின் மீது பெரிதும் புகார் கூறியிருக்குமென்பதில் சந்தேகமில்லை. உண்மையில் குடியானவர்கள் எல்லாரும் கூடப் புகார் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். “சின்ன எஜமான்கள் இப்படி மூன்று மாதம் வீதி துப்புரவு செய்தால் அடுத்த பஸலி சாகுபடிக்கு வயலுக்கு எருக்கூடக் கிடைக்காது” என்று முறையிடத் தொடங்கினார்கள். இவ்வாறு கணையாழியின் சமூக வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் புரட்சி ஏற்படலாயிற்று.