BooksKalki Short StoriesKalki TimesStory

Kanaiyazhiyin Kanavu Kalki | Kalki Times

அத்தியாயம் 7
பூகம்பம்

கணையாழி கிராமத்து ஸ்திரீ சமூகத்தின் வாழ்க்கையில் ஒரு பெரிய மானஸீக பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட பெரும் பிளவுகளில், வெகு நாளைய நம்பிக்கைகள், மாமூல் வழக்கங்கள் எல்லாம் விழுந்து மறைந்து போய்க் கொண்டிருந்தன.

ஒரு நாள் இரவு, சந்திரசேகரன் வழக்கம்போல் படுக்கையறைக்குள் புகுந்தபோது பெரியதோர் அதிசயத்தைக் கண்டான். அவனுடைய தர்மபத்தினி ஸ்ரீமதி சாரதாம்பாள் ஹரிஹரய்யர் இங்கிலீஷ் பாலபாடத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, “பி-ஐ-ஜி=பிக்கு=பன்றி” என்று எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருந்தாள்.

“இது என்ன அதிசயம்? இங்கிலீஷ் படிப்பிலே திடீரென்று இவ்வளவு பிரேமை ஏற்பட்டதென்ன?” என்று சந்திரசேகரன் பரிகாசக் குரலில் கேட்டான்.

“ஆமாம்; பரிகாசம் பண்ணத்தான் உங்களுக்குத் தெரியும். இல்லாவிட்டால் உலகத்தில் நாலு பேரைப் போல் எனக்கு இரண்டு எழுத்துத் தெரிய வேண்டுமென்று உங்களுக்கு இருந்தால் தானே?” என்றாள் சாரதா. அவளுடைய நீலக் கருவிழிகள் கண்ணீர்ப் பிரவாகத்தைப் பெருக்குவதற்கு ஆயத்தம் செய்யத் தொடங்கின. ஆனால் சந்திரசேகரன் வெறும் ஆண் சடந்தானே? ஆகவே அவன் அதைக் கவனியாமல், “நான் வேண்டுமானால் காரணம் சொல்லட்டுமா? சகுந்தலை மாதிரி நாமும் ஆகவேண்டுமென்று ஆசை. நிஜமா, இல்லையா?” என்றான்.

உடனே ஒரு தேமல் சத்தம் – “எனக்குத் தெரியுமே, நீங்கள் அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று!” – அவ்வளவுதான். கண்ணீர் வெள்ளம் பெருகத் தொடங்கி விட்டது. அன்றிரவு வெகுநேரம் வரை அந்த வெள்ளத்தில் கரை காணாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான் சந்திரசேகரன்.

மறுநாள் மத்தியானம், (ஸ்ரீராஜமய்யர் அவர்களால் இலக்கியப் பிரசித்தி பெற்ற) வம்பர் மகாசபை கணையாழியில் கூடியபோது, “கல்கத்தாப் பெண்” என்னும் விஷயம் பற்றி விவாதம் நடந்தது. ஏற்கனவே இந்தக் கதையில் ஏராளமான பெயர்கள் வந்துவிட்டபடியாலும், இக்கதையில் பெயர்கள் அவ்வளவு முக்கியமல்ல வாகையாலும், மகாசபை அங்கத்தினரின் பெயர்களை விட்டுவிட்டு விவாகத்தின் சாராம்சத்தை மட்டும் தருகிறேன்:

“என் காலத்தில் எவ்வளவோ அதிசயத்தைப் பார்த்துவிட்டேன். இப்போது கல்கத்தாப் பெண் ஒரு அதிசயமாய் வந்திருக்கிறாள். இந்தக் கட்டை போவதற்குள் இன்னும் என்னென்ன அதிசயம் பார்க்கப் போகிறதோ?”

“அந்தக் கடன்காரி பார்வதி செத்துப் போனாளே அவள் மட்டும் இருந்திருந்தால் இந்தப் பெண்ணை இப்படி வளர்த்துவிட்டிருக்க மாட்டாள்.”

“அவளே இந்தப் புருஷனைக் கட்டிண்டு, எவ்வளவோ சிரமப்பட்டாளாமே? இழுத்த இழுப்புக்கெல்லாம் வரணுமென்று பிடிவாதம் பிடித்தானாம். அந்தக் கஷ்டம் தாங்காமலேயே அவள் கங்கையில் விழுந்து செத்துப் போனதாகக் கேள்வி.”

“போனவள் இந்தப் பெண்ணையும் கங்கையில் தள்ளிவிட்டுச் செத்துப் போயிருக்கலாம், ஒரு பாடாய்ப் போயிருக்கும்!”

“ஏன் அத்தை, அப்படி அநியாயமாகச் சொல்கிறாய்? சகுந்தலைக்கு என்ன வந்துவிட்டது? ராஜாத்தி மாதிரி இருக்கிறாள். எங்களையெல்லாம் போல் அடுப்பங்கரையே கதியாயிருக்க வேண்டுமா?” என்றது ஓர் இளங்குரல்.

“அடுப்பங்கரை வேண்டாம்; சந்திக்கரையிலேயே நிற்கட்டும். நாலு குழந்தை பெற்றெடுக்க வயதாச்சு. காளை மாதிரி திரிகிறது! அவளுக்கு என்ன வந்துடுத்தாம்?”

“நாலு குழந்தை பெற்றவர்களெல்லாம் என்ன சுகத்தைக் கண்டுவிட்டோ ம், அவள் அதைக் காணாமல் போய் விட்டாள்? கோடி வீட்டு அம்மணியைப் பார். பதினேழு வயது ஆகவில்லை; மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது. தினம் பொழுது விடிந்தால் குழந்தைகளை அடித்துக் கொல்கிறார்கள். என்னைக் கேட்டால், சகுந்தலைதான் பாக்கியசாலி என்பேன்”

“ஆமாண்டி, அம்மா! நீயும் வேண்டுமானால் அவளைப் போலச் செருப்புப் போட்டுக் கொண்டு குடை பிடித்துக் கொண்டு வீதியோடு உலாவி வாயேன்.”

“செருப்புப் போட்டுக் கொண்டு குடை பிடித்துக் கொண்டு வந்தால் சகுந்தலையைப் போல் ஆகிவிட முடியுமா? அதற்கு வேண்டிய படிப்பும் புத்திசாலித்தனமும் வேண்டாமா?”

“அவள் மட்டும் என்ன கொம்பிலிருந்து குதித்து வந்தாளா? என்னையும் படிக்க வைத்திருந்தால் நானுந்தான் அவளைப் போல் ஆகியிருப்பேன், என்ன ஒசத்தி?”

“ஆமாம், நீயும் அவளைப் போலவே படித்து, பாஸ் பண்ணி, புடவைத் தலைப்பை வீசிக் கொண்டு திரியணும்; ஊரிலிருக்கிற தடிப் பிரம்மச்சாரிகள் எல்லாம் உன்னைச் சுற்றிக் கொண்டு அலையணும் என்று ஆசைப்படுகிறாயாக்கும்!”

“சீ! என்ன அத்தை! வயதாயிற்றே தவிர உங்களுக்கு மானம், வெட்கம் ஒன்றும் கிடையாது. இப்படித்தானா பேசுவது?”

சீக்கிரத்தில் கணையாழி வம்பர் மகாசபை அங்கத்தினருக்குள் அபிப்பிராய பேதம் வலுபடலாயிற்று. இளங்கோஷ்டியென்றும் முதிய கோஷ்டியென்றும் பிரிவினை உண்டாயிற்று. இளங்கோஷ்டியைச் சேர்ந்த பெண்கள் சகுந்தலையிடம் அநுதாபமும், அபிமானமும் கொள்ளலானார்கள். சமயம் நேர்ந்தபோது அவளுக்குப் பரிந்து பேசினார்கள்.

இதற்கெல்லாம் காரணம் ஒரு நாள் ஜானகி துணிந்து சென்று சகுந்தலையைத் தன் வீட்டில் மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொண்டு போக அழைத்ததுதான். அப்போது ஜானகி வீட்டுக்கு வந்திருந்த இளம் பெண்களுடன் சகுந்தலை வெகு சீக்கிரம் சிநேகம் செய்து கொண்டாள்.

கணையாழி யுவதிகளுக்கெல்லாம் திடீரென்று படிப்பில் அபரிமிதமான ருசி உண்டாகிவிட்டது. லலிதா ஒரு நாள் ஒரு தமிழ் நாவலைக் கையில் வைத்துக் கொண்டிருந்தாள். சகுந்தலை, “அது என்ன புத்தகம்?” என்று கேட்டுக் கொண்டே புஸ்தகத்தை வாங்குவதற்குக் கையை நீட்டினாள். “இது, தமிழ்; உங்களுக்குத் தெரியாது” என்றாள் லலிதா.

சகுந்தலை சிரித்தாள். “அது என்ன? எனக்குத் தமிழ் தெரியாது என்று அடித்துவிட்டீர்களா? என் சொந்த பாஷை தமிழ்தானே?” என்றாள் அவள்.

“இல்லை; வெகுகாலம் வடக்கேயே இருந்தவளாச்சே; இங்கிலீஷ்தான் தெரியும், தமிழ் படிக்கத் தெரியாது என்று நினைத்தேன்” என்று லலிதா சொன்னான்.

“அதெல்லாம் இல்லை. வடக்கே இருந்தால்தான் தமிழிலே அபிமானம் அதிகமாக உண்டாகிறது. வங்காளிகளெல்லாம் தங்கள் சொந்த பாஷையில் தான் அதிகமாய்ப் படிப்பார்கள். தெற்கத்தியாரை இங்கிலீஷ் பைத்தியம் பிடித்தவர்கள் என்று பரிகாசம் செய்வார்கள்” என்று சகுந்தலை சொன்னாள்.

“என்ன இருந்தாலும் இங்கிலீஷ் தெரிந்திருந்தால் அது ஒரு ஒசத்திதானே?” என்றாள் தங்கம்மாள்.

“ஒரு ஒசத்தியுமில்லை. இங்கிலீஷ் வெள்ளைக்காரர்களுடைய பாஷை. தமிழ் நமது சொந்த பாஷை நம்முடைய பாஷையில் பேசுவதும் படிப்பதும்தான் நமக்கு மேன்மை” என்றாள் சகுந்தலை.

ஆண்டாளுவின் குழந்தைக்கு ஆண்டு நிறைவு வந்தபோது குழந்தையை மணையில் வைத்துப் பாடுவதற்குச் சகுந்தலையையும் அழைத்திருந்தார்கள். ஊர்ப் பெண்களெல்லாரும் அவரவர்களுக்கு தெரிந்திருந்த “மருகேலரா,” “சுஜன ஜீவனா,” “நகுமோமு,” “தினமணி வம்ச” முதலிய தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடினார்கள்.

“ஒருவருக்கும் தமிழ்ப் பாட்டுத் தெரியாதா?” என்று சகுந்தலை ஜானகியிடம் கேட்டாள்.

“தமிழில் நலங்குப் பாட்டுத்தான் தெரியும். அது நன்றாயிராது” என்றாள் ஜானகி.

“பாரதி பாட்டுக்கூடத் தெரியாதா?” என்று சகுந்தலை மறுபடியும் கேட்டது லலிதாவின் காதில் விழுந்தது. அவள், “ஆகா, நம்முடைய அலமேலுவுக்குப் பாரதி பாட்டுத் தெரியுமே. அலமேலு! சகுந்தலைக்குப் பாரதி பாட்டுக் கேட்கவேண்டுமாம். உனக்குத் தெரியுமே, சொல்லு” என்றாள். அலமேலு கொஞ்ச நேரம் கிராக்கி செய்த பிறகு,

‘இராஜ விசுவாச லாலா லஜபதியே!’

என்று பாடத் தொடங்கினாள். “இராஜத் துரோகக் குற்றத்திற்காகத் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்ட லஜபதிராய் இங்கே இராஜ விசுவாசியாகி விட்டாரே!” என்று எண்ணியபோது சகுந்தலைக்குத் தாங்க முடியாத சிரிப்பு வந்தது. ஆயினும் சிரிப்பை அடக்கிக் கொண்டாள். அலமேலுவை இன்னொரு பாட்டுப் பாடச் சொன்னார்கள். அவள்,

‘வந்தே மாதரமே! மனதிற்கோர் ஆதாரமே!’

என்று ஆரம்பித்து,

“காட்சி கண்காட்சியே! திருவனந்தபுரத்துக்

காட்சி, கண்காட்சியே!”

என்று முடிவு செய்தாள்.

எல்லாம் முடிந்த பிறகு சகுந்தலை தன் சிநேகிதிகளிடம் அலமேலு சொன்ன பாட்டுக்கள் பாரதி பாடியவையல்லவென்று தெரிவித்தாள்.

“உங்களுக்கு பாரதி பாட்டுத் தெரியுமா?” என்று ஜானகி கேட்டாள்.

“எனக்குத் தெரியாது. ஆனால் என்னிடம் பாரதி புத்தகம் இருக்கிறது. நீங்கள் என் வீட்டிற்கு வந்தால் நாமே மெட்டுப் போட்டுப் பாடக் கற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு ஹிந்துஸ்தானி, வங்காளிப் பாட்டுகளும் சொல்லிக் கொடுக்கிறேன்” என்றாள் சகுந்தலை.

“வருவதற்கு இஷ்டந்தான். ஆனால் உங்கள் வீட்டில் ஓயாமல் புருஷப்பிள்ளைகள் வருகிறார்களே?” என்று லலிதா கேட்டாள்.

“வந்தால் உங்களுக்கென்ன? நீங்கள் ஏன் அவர்களைக் கண்டு பயப்பட வேண்டும்? அவர்கள்தான் உங்களைக் கண்டு பயப்படட்டுமே?” என்றாள் சகுந்தலை.

பத்துப் பதினைந்து தினங்களுக்குள் கணையாழியில் இருந்த இளம்பெண்களில் ஒவ்வொருத்தியும் தனித்தனியே சகுந்தலையைத் தன்னுடைய பிராண சிநேகிதியாகக் கருதத் தொடங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *