Kanaiyazhiyin Kanavu Kalki | Kalki Times
அத்தியாயம் 8
புயல்
சகுந்தலை கணையாழிக்கு வந்து சுமார் மூன்று மாதமாயிற்று. அப்போது கணையாழி வாலிபர்களில் மனோ நிலைமையை, பெரிய புயற் காற்றினால் அலைப்புண்ட தோப்பின் நிலைமைக்கே ஒப்பிடக்கூடும்.
வாலிபர்களைச் சொல்லப் போவானேன்? வயது நாற்பது ஆனவரின் விஷயம் என்ன? ஸ்ரீமான் இராமசுப்பிரமண்யம் என்பவரின் மனைவி இரண்டு வருஷங்களுக்கு முன்னர் காலஞ் சென்றபோது அவர், ‘கிருகஸ்தாசிரமம் இனி நமக்கு வேண்டாம்’ என்று தீர்மானம் செய்து, வந்த இடங்களையெல்லாம் தட்டிக் கொண்டிருந்தார். அவரே இப்போது சகுந்தலையை முன்னிட்டுத் தமது சங்கல்பத்தை மாற்றிக் கொள்ளத் தயாராயிருந்தாரென்றால், அதிகம் சொல்வானேன்? அவர் என்ணியதாவது; “சகுந்தலையைப் போல் கல்வியறிவும், புத்திசாலித்தனமும் உள்ள பெண்ணுக்கு வாழ்க்கைத் துணையாகத் தகுதியுள்ள இளைஞன் இந்தத் தேசத்தில் எங்கே இருக்கிறான்? அதற்கென்ன? சின்னப் பயல்கள் ‘கக்கேபிக்கே’ என்று பல்லை இளித்துக் கொண்டு வேண்டுமானால் நிற்பார்கள். அதைத் தவிர அவளுடைய அறிவு முதிர்ச்சிக்குத் தகுந்தபடி, மனமொத்து வாழக்கூடிய கணவன் அவர்களுக்குள் இருக்க முடியாது. ஆகையால் சகுந்தலை சின்னப் பையன் யாரையாவது மணந்து கொண்டால் நிச்சயமாக அவளுடைய வாழ்க்கை பாழாகிவிடும். அவளுக்குத் தக்க வாழ்க்கைத் துணையாகக் கூடியவன் நான் ஒருவன் தான்.”
நாற்பது வயதுக்காரருடைய மனோநிலை இதுவானால் இருபது, இருபத்தைந்து வயதுப் பிள்ளைகளைப் பற்றிக் கேட்க வேண்டுமா? நாளாக ஆக, அவர்களுடைய உள்ளத்தில் அடித்துக் கொண்டிருந்த புயலின் வேகம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
ஸ்ரீதரன் தனக்கு நிச்சயமாகியிருந்த கலியாணத்தைத் தட்டிக் கழித்துவிட்டான். பி.எல். படிக்கும் உத்தேசம் தனக்கு இருப்பதாகவும், நியாயவாதியாகப் போகிற தான் சட்ட விரோதமாய் 12 வயதுப் பெண்ணை மணக்கச் சம்மதிக்க முடியாதென்றும், அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளலாமென்றும் அவன் கூறினான். இதைப் பற்றி சகுந்தலை அவனைப் பாராட்டியபோது, வயது வந்த பெண்ணாயிருந்தால் இவ்வருஷமே கலியாணம் செய்து கொள்வதில் தனக்கு ஆக்ஷேபமில்லையென்று குறிப்பாகத் தெரிவித்தான்.
குப்புசாமி கலியாணமாகி இரண்டு வருஷமாய் இல்வாழ்க்கையில் இருப்பவன். அவனுக்குத் திடீரென்று இப்போது விவாகப் பிரிவினை உரிமையில் விசேஷ சிரத்தை உண்டாயிற்று. “ஆனாலும் நமது சமூக ஏற்பாடுகள் மகா அநீதியானவை. மனிதன் தவறு செய்வது சகஜம். ஒரு தடவை தவறு செய்துவிட்டால் அப்புறம் பரிகாரமே கிடையாதா? ஏதோ நல்ல நோக்கத்துடன் தான் கலியாணம் செய்து கொள்கிறோம். அது தவறு என்று தெரிந்தபின் இரு தரப்பிலும் கலந்து தவறை நிவர்த்தி செய்தல் ஏன் கூடாது? இதை நான் புருஷனுடைய சௌகரியத்துக்காகச் சொல்லவில்லை. புருஷன் தான் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் கலியாணம் செய்து கொள்ளலாமே? ஸ்திரீகளுடைய நன்மையை உத்தேசித்துத்தான் விவாகப் பிரிவினை முக்கியமாக வேண்டும். இஷ்டமில்லாத பந்தத்தில் அகப்பட்டுக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவதைவிட ஒரேயடியாக உயிரை விட்டுவிடலாம்” என்று அவன் உபந்நியாசம் செய்த வண்ணமிருந்தான்.
கலியாணமாகாத கணையாழிப் பிள்ளைகளுக்கெல்லாம் இரவு பகல் ஒரே சிந்தனைதான். சகுந்தலையைத் தனிமையாக எப்படிச் சந்திப்பது, அவளிடம் தங்கள் மனோரதத்தை எப்படி வெளியிடுவது? இதற்குச் சந்தர்ப்பம் வாய்த்தல் நாளுக்கு நாள் கஷ்டமாகி வந்தது.
ஸ்ரீமான் ரங்கநாதம் அவர்களின் தோட்ட வீட்டிற்கு இதுவரை கணையாழி இளைஞர்கள் வந்து கொண்டிருந்தது போதாதென்று யுவதிகளும் அடிக்கடி வரத் தொடங்கினார்கள். அவர்கள் வருவதைப் பார்த்ததும் இளைஞர்கள் மெதுவாக நழுவி விடுதல் வழக்கமாயிருந்தது. இதைக் குறித்துச் சகுந்தலை அவர்களைப் பரிகஸித்தாள். “இது என்ன, என்னிடம் உங்களுக்கில்லாத ப்யம் உங்களூர்ப் பெண்களைக் கண்டதும் உண்டாகிறது?” என்று கேட்டாள். அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திகைத்தபோது, “இருந்தாலும் ரொம்ப அநியாயம் செய்கிறீர்கள். இந்த ஊரில் காலேஜில் படித்த நீங்கள் இவ்வளவு பேர் இருந்துகொண்டு ஸ்திரீகளை இவ்வளவு உலகமறியாதவர்களாய் வைத்திருக்கக் கூடாது. நீங்கள் உங்கள் பாட்டனார்களைப் போலவே இருந்திருந்தால், உங்கள் மனைவிகளையும் பாட்டிகளாக வைத்திருக்கலாம்” என்றாள்.
தங்களுக்கு வரப்போகும் மனைவிகளைப் பாட்டிகளாக எண்ணிப் பார்த்தபோது அவர்களுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. ரகுராமன் ஒரு நிமிஷம் யோசித்துவிட்ட்டு “எனக்கு வரப்போகும் மனைவிக்கு நான் எல்லா விஷயங்களிலும் பூரண சம உரிமை கொடுக்கத் தயார்” என்றான். ஆனால் சகுந்தலை அவனுடைய குறிப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இவ்விஷயத்தில் கல்யாணசுந்தரத்தின் அநுபவமும் அப்படியேதான் இருந்தது. சகுந்தலை ஒரு நாள் அடுத்த கிராமத்துப் பெண் பாடசாலையைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று விருப்பம் தெரிவித்தாள். கல்யாணசுந்தரம் அவளை அழைத்துப் போக முன் வந்தான். எதிர்பாராமல் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தில் தன் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த காதலை வெளியிட்டு விடுவதென்று தீர்மானித்தான். ஆனால் பேச்சு இலகுவில் வரவில்லை.
ரொம்ப நேரம் தயங்கிய பிறகு, தட்டுத் தடுமாறிக் கொண்டு “சகுந்தலை! நாம் இரண்டு பேரும் எங்கேயோ அதிவேகமாகப் போய்க் கொண்டிருக்கிறோம் இல்லையா?” என்றான் கல்யாணசுந்தரம்.
“நாமா? ரொம்ப மெதுவாகவல்லவோ நடக்கிறோம்? மணிக்கு இரண்டரை மைல் வேகங்கூட இராதே?” என்றாள் சகுந்தலை.
இதற்குப் பிறகு கொஞ்ச நேரம் அவனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. வழியில் ஒரு மரக்கிளையில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு பட்சிகள் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் ஒரு யோசனை தோன்றிற்று.
“நாம் இருவரும் இரண்டு பறவைகளாக மாறிவிடக் கூடாதா என்று தோன்றுகிறது. அப்போது உலகக் கவலையென்பதேயின்றி ஆகாயத்தில் என்றும் ஆனந்தமாய் உலாவித் திரிந்து கொண்டிருக்கலாமல்லவா?” என்றான்.
அதற்கு சகுந்தலை, “இப்போதுதான் ஆகாய விமானம் வந்து, பறவைகளைப் போல் மனிதனும் பறக்க முடியுமென்று ஏற்பட்டுவிட்டதே. இன்னும் பத்து வருஷத்தில் ஆகாய விமானம் சர்வ சாதாரணமாகிவிடும். அப்போது நீங்கள், நான் எல்லோரும் தாராளமாய்ப் பறக்கலாம்” என்றாள்.
கல்யாணசுந்தரம் மௌனக் கடலில் ஆழ்ந்தான்.