Kalki Short StoriesKalki TimesStory

Kethaariyin Thaayaar Kalki Short Story Kalki Times

Kethaariyin Thaayaar Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

கேதாரியின் தாயார்

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Kethaariyin Thaayaar Kalki

சமீபத்தில் பத்திரிகைகளில் ‘அம்மாமி அப்பளாம்’ என்னும் விளம்பரத்தைப் பார்த்ததும், எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. உடனே பாகீரதி அம்மாமியின் ஞாபகம் வந்தது. அவளுடைய அருமைப் புதல்வனும் என்னுடைய பிராண சிநேகிதனுமான கேதாரியின் அகால மரணத்தை எண்ணிய போது உடம்பை என்னவோ செய்தது. கேதாரிக்கு இந்தக் கதி நேருமென்று யார் நினைத்தார்கள்? இது போன்ற சம்பவங்களை எண்ணும்போது தான் மனித யத்தனத்தில் நமக்கு நம்பிக்கை குன்றி, விதியின் வலிமையில் நம்பிக்கை பலப்படுகிறது.

கேதாரி நோய்ப்பட்டு கிடந்தபோது அவனை வந்து பரிசோதனை செய்யாத பெரிய டாக்டர்கள் சென்னையில் யாரும் இல்லை. ஆயினும் அவர்களில் யாரும் அவனுடைய நோயின் மூல காரணத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஏதேதோ வியாதியென்றும், காம்ளிகேஷன் என்றும் சொல்லி வைத்தியம் செய்தார்கள். கேதாரி பிழைக்கவுமில்லை. அவனுடைய சிநேகிதர்களையும் உறவினர்களையும் பரிதவிக்க விட்டு இறந்துதான் போனான். இதுபற்றி அச்சமயம் டாக்டர்களுக்கே ஒரு கெட்ட பெயர் ஏற்பட்டிருந்தது. “என்ன வைத்திய சாஸ்திரம்? என்ன டாக்டர்கள்? எல்லாம் வெறும் படாடோ பந்தான்” என்று ஜனங்கள் சொன்னார்கள்.

கேதாரியின் விஷயத்தில் டாக்டர்கள் பேரிலாவது வைத்திய சாஸ்திரத்தின் மேலாவது யாதொரு தவறுமில்லை யென்பதை வெளிப்படுத்துவதற்காகவே இதை நான் எழுதுகிறேன். அவனுடைய உடல் நோயின் வேர் அவனுடைய மனோ வியாதியில் இருந்தது என்பதும், அந்த மனோவியாதி நமது சமூகத்தைப் பிடித்திருக்கும் பல வியாதிகளில் ஒன்றைக் காரணமாகக் கொண்டதென்பதும் டாக்டர்களுக்கு எப்படித் தெரியும்? அவனுடைய அருமைத் தாயாருக்கும், இளம் மனைவிக்கும் கூட அது தெரியாத விஷயமே. அவனுடைய அத்தியந்த நண்பனான நான் ஒருவனே அந்த இரகசியத்தை அறிந்தவன். கேதாரி மரணமடைந்த புதிதில் அதைப்பற்றிப் பேசவோ எழுதவோ முடியாதபடி துக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். இப்போது ஒரு வருஷத்துக்குமேல் ஆகிவிட்டது. என்னுடைய ஆத்ம சிநேகிதனுக்கு நான் செய்யவேண்டிய கடமையாகக் கருதி அவனுடைய கதையை வெளியிடுகிறேன்.

ஆமாம்; ரொம்பவும் துயரமான கதைதான். நம்முன் சிலர் சோக ரசத்தை அநுபவிப்பதற்காக நாடகங்களுக்குப் போவோம்; ஆனால் வாழ்க்கையில் நம் கண் முன் நிகழும் சோக சம்பவங்களைப் பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடிக் கொள்வோம். அத்தகையவர்கள் கேதாரியின் கதையைப் படிக்காமல் விடுவதே நல்லது!

கேதாரிக்கு அவனுடைய தந்தையைப் பற்றிய ஞாபகமே கிடையாது. அவன் மூன்று வயதுக் குழந்தையாயிருந்த போது அவனுடைய தந்தை வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடிப் போய் விட்டார். ஒரு நாடகக்காரியின் மையலில் அகப்பட்டு அவர் தம்முடைய இளம் மனைவியையும், மூன்று வயதுப் பிள்ளையையும் அநாதையாக விட்டுவிட்டுப் போனார். இந்த விவரமெல்லாம் எங்களுக்கு வெகு நாள் வரையில் தெரியாது. கேதாரிக்குக் கலியாணப் பேச்சு நடந்த போதுதான் அவனுடைய தாயார் சொல்லித் தெரிந்து கொண்டோம்.

பெண்ணைப் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி பாகீரதி அம்மாமி சொன்னபோது, “நீ பார்த்து நிச்சயம் செய்தால் சரிதான், அம்மா! ஒரு மூளிப் பெண்ணைக் கலியாணம் பண்ணிக் கொள்ளச் சொன்னாலும் பண்ணிக் கொள்கிறேன்” என்றான் கேதாரி.

“பின், என்ன, அம்மாமி உங்களுக்கு? இந்தக் கலியுகத்தில் இந்த மாதிரி பிள்ளை இன்னொருவனைக் காணவே முடியாது. நீங்களே முடிவு செய்து விடுங்களேன்” என்றேன் நான்.

ஆனால் பாகீரதி அம்மாமி கேட்கவில்லை. “கேதாரி போய்ப் பெண்ணைப் பார்த்துப் பிடித்திருக்கிறது” என்று சொன்னால்தான் கலியாணம் நிச்சயம் பண்ணுவேன் என்று சொன்னாள். அப்போதுதான் கேதாரியின் தகப்பனாரின் பேச்சை அவள் எடுத்து நான் கேட்டது.

“இப்படியெல்லாம் பிள்ளையையும் பெண்ணையும் சம்மதம் கேட்காமல் கலியாணம் பண்ணிப் பண்ணித்தான் குடும்பங்களில் கஷ்டம் ஏற்படுகிறது. இவனுடைய (கேதாரியினுடைய) தகப்பனார் எங்களை விட்டுவிட்டுப் போனதற்காக ஊரெல்லாம் அவரைத் திட்டினார்கள். எனக்கும் அப்போது கோபமும் ஆத்திரமும் அடைத்துக் கொண்டு தான் வந்தது. நாற்பது நாள் படுத்த படுக்கையாய்க் கிடந்தேன். ஆனால், பின்னால் ஆற அமர யோசித்துப் பார்த்ததில் அவர் மேல் ஒரு குற்றமும் இல்லையென்று தோன்றிற்று. என்னைக் கலியாணம் செய்து கொள்வதில் அவருக்கு இஷ்டமே இல்லையாம். அப்படிச் சொல்லவும் சொன்னாராம். ஆனால் பெரியவர்கள் பலவந்தப்படுத்திக் கலியாணம் செய்து வைத்தார்களாம். ஏதோ ஐந்தாறு வருஷம் பல்லைக் கடித்துக் கொண்டு குடும்பம் நடத்தினோம். அப்புறம் அந்தக் கூத்தாடிச்சி வந்து சேர்ந்தாள்; போய்விட்டார்.”

இப்படி பாகீரதி அம்மாமியே அந்தப் பேச்சை எடுத்த போது, நானும் பக்குவமாகச் சிற்சில கேள்விகளைப் போட்டு மற்ற விவரங்களையும் அறிந்தேன். கேதாரியின் தகப்பனார் சுந்தரராமையர் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாய் ஆள் நன்றாயிருப்பாராம். ரொம்ப நன்றாய்ப் பாடுவாராம். அப்போது திருமங்கலத்தில் தபாலாபீஸில் அவருக்குக் குமாஸ்தா உத்தியோகம். ரங்கமணி என்னும் பெயர் பெற்ற நாடகக்காரி அவ்வூரில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அயன் ராஜபார்ட் போடுகிறவனுக்கு ரொம்ப உடம்பு சரிப்படவில்லையென்றும், அன்று அநேகமாய் நாடகம் நடைபெறாதென்றும் செய்தி வந்தது. கேதாரியின் தகப்பனாருக்கு நாடகம் என்றால் பித்து. நாடகம் பார்த்துப் பார்த்து எல்லா நாடகங்களும் நெட்டுரு; பாட்டுக்கள் தலைகீழ்ப் பாடம். ஆகவே இவர் போய் “நான் ராஜபார்ட் போட்டுக் கொள்கிறேன்” என்றார். சில பாட்டுக்களும் பாடிக் காட்டினார். ரங்கமணி சம்மதித்தாள். நாடகம் நடந்தது. எல்லாரும் அதிசயிக்கும்படி கேதாரியின் தகப்பனார் நடித்தார். அம்மாமிக்குக் கூட அது பெருமையாயிருந்தது. அப்புறம் திருமங்கலத்தில் அந்தக் கம்பெனி இருந்தவரையில் அவர்களுடனேயே இருந்தார். வேலையை ராஜீனாமாக் கொடுத்து விட்டாரென்றும், தன்னுடன் அழைத்துக் கொண்டு போகப் போகிறாளென்றும் ஊரிலே பேசிக் கொண்டார்கள். ஆனால் பாகீரதி அம்மாமி அதையெல்லாம் நம்பவில்லை. கடைசியில், நாடகக் கம்பெனி ஊரைவிட்டுப் போயிற்று. அதற்கு மறுநாள் சுந்தரராமையரையும் காணவில்லை. நாடகக் கம்பெனி இலங்கைக்குப் போயிற்றென்றும், அங்கே போய் இவரும் சேர்ந்து கொண்டாரென்றும் பின்னால் தகவல் தெரிய வந்தது.

அதற்குப் பிறகு அவரைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை. மேற்படி நாடகக் கம்பெனியார் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், பினாங்கு முதலிய வெளி நாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது. பல வருஷங்களுக்குப் பிறகு இரண்டொரு தடவை சென்னை நகருக்கும் வந்திருந்தனராம். ஆனால் பாகீரதி அம்மாமி அதற்குள் அவரைப் பற்றி எண்ணுவதையே விட்டு விட்டாள். இப்போது அவளுடைய ஆசை முழுவதையும் கேதாரியின் மேல் வைத்திருந்தாள்.

சுந்தரராமையர் ஓடிப் போன செய்தியறிந்து, பாகீரதி அம்மாமியின் தாய் தந்தையர்கள் திருமங்கலத்துக்கு வந்து அவளைத் தங்களுடன் கிராமத்துக்கு அழைத்துப் போனார்கள். அவர்கள் சொற்பக் குடித்தனக்காரர்கள். பாகீரதியைத் தவிர அவர்களுக்கு வேறு பிள்ளைக் குட்டி கிடையாது. கிராமத்தில் ஐந்தாறு வருஷம் இருந்தார்கள். அப்புறம் கேதாரியைப் படிக்க வைப்பதற்காகத் திருச்சிராப்பள்ளிக்குக் குடி வந்தார்கள்.

நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. அப்போது திருச்சிராப்பள்ளியில் மாத்ருபூதம் ஸ்டோ ரில் நானும் என் பெற்றோர்களும் குடியிருந்தோம். நான் முதலாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தேன். ஸ்டோ ரில் எங்களுக்கு எதிர் வீடு சில நாளாகப் பூட்டிக் கிடந்தது. அன்றைக்கு யாரோ புதிதாகக் குடி வரப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டு ஆவலுடன் அவர்களுடைய வரவை எதிர்பார்த்தேன். ஒரு தாத்தா, ஒரு பாட்டி, ஒரு அம்மாமி, ஒரு பையன் – இவர்கள் பழைய தகரப் பெட்டிகளுடனும் மூட்டை முடிச்சுகளுடனும் வந்து சேர்ந்தார்கள். அந்தப் பையன் கையில் தங்கக் காப்புப் போட்டுக் கொண்டும், தலை பின்னிக் கொண்டும், குல்லா வைத்துக் கொண்டும் இருந்ததை நான் வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றது நன்றாய் ஞாபகம் இருக்கிறது.

அந்தப் பையன் தான் கேதாரி. அவனுடன் முதல் தடவை பேசின உடனேயே எனக்குப் பிடித்துப் போயிற்று. பட்டிக்காட்டிலிருந்து வந்தவனாதலால் எதைப் பார்த்தாலும் அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுவதைக் கண்டு இடியிடியென்று சிரித்தான். காலையில் தாயுமான ஸ்வாமிக்குத் திருமஞ்சனம் கொண்டு வருவதற்காகப் போன யானையை அவன் பார்த்த பார்வையில் விழி பிதுங்கிவிடும் போல் இருந்தது. ஓயாமல் அது என்ன, இது என்ன என்று கேட்டுக் கொண்டேயிருப்பான். நானும் சலிக்காமல் பதில் சொல்லி வந்தேன்.

நான் படித்த அதே பள்ளிக்கூடத்தில் அதே வகுப்பில் கேதாரியைச் சேர்த்தார்கள். நாங்கள் இணைபிரியாத சிநேகிதர்கள் ஆனோம். நிஜத்தைச் சொல்லிவிடுகிறேனே; படிப்பிலே நான் கொஞ்சம் சுமார் தான். மற்றபடி விளையாட்டு, வம்பு முதலியவற்றில் நான் தான் முதல். அவனோ படிப்பில் முதல்; மற்றவற்றில் ரொம்ப சுமார். எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் இந்த மாதிரி படிப்பில் கெட்டிக்காரனாயுள்ள பையனைப் பரிகாசம் பண்ணி உபத்திரவப்படுத்துவதற்குச் சில போக்கிரிப் பையன்கள் இருப்பார்கள். ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்தில் எனக்குப் பயந்து கேதாரியின் வழிக்கு ஒருவரும் போவதில்லை.

அவர்கள் திருச்சிக்கு வந்து மூன்று வருஷத்துக்கெல்லாம், தாத்தா காலமானார். அதற்குள் அவர் கையிலிருந்த பணமும் அநேகமாகச் செலவழிந்து போயிற்று. கேதாரிக்கு உபகாரச் சம்பளம் கிடைத்திருந்தபடியால், பள்ளிக்கூடச் செலவு கிடையாது. ஊரில் விளைந்து வரும் நெல் சாப்பாட்டுக்குப் போதும். ஆனால் வீட்டு வாடகைக்கும் மேல் செலவுக்கும் என்ன செய்வது? அம்மாமியும் பாட்டியும் அப்பளம் இட்டு விற்க ஆரம்பித்தார்கள்.

அதென்னவோ, சில சமயம் முன்பின் தெரியாதவர்களிடம் கூட நமக்குப் பிரியம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களை முதன் முதல் நாம் பார்க்கும் வேளையைப் பொருத்ததோ என்னவோ தெரியவில்லை. பாகீரதி அம்மாமியிடம் என் சொந்தத் தாயாரைவிட அதிகப் பிரியம் எனக்கு ஏற்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தார்கள் அவளை ‘வாழா வெட்டி’ என்று அவமதிப்பாய்ப் பேசுவதுண்டு. இதெல்லாம் அவளிடம் எனக்கிருந்த அபிமானத்தை அதிகமேயாக்கிற்று. என் பள்ளிக்கூடத்துச் சிநேகிதர்களுக்கெல்லாம் சொல்லி, பாகீரதி அம்மாமியின் அப்பளங்களை நானே ஏராளமாய் விற்றுக் கொடுத்திருக்கிறேன்.

பாட்டியும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு இறந்து போய்விட்டாள். தாயும் பிள்ளையும் அதே வீட்டில் இருந்து வந்தார்கள். கேதாரி அவனுடைய தாயார் அவன் விஷயத்தில் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பாத்திரமாய் நடந்து கொண்டான். ஒவ்வொரு வகுப்பிலும் பரீட்சையில் முதன்மையாகத் தேறி வந்து கடைசியில் பி.ஏ. பரீட்சையில் சென்னை இராஜதானியிலேயே முதலாவதாகத் தேறினான். அந்தச் சந்தோஷத்தில், நான் அவ்வருஷம் ‘கோட்’ அடித்த வெட்கத்தைக் கூட அதிகமாய் உணரவில்லை.

கேதாரி காலேஜ் வகுப்புக்குப் போனதிலிருந்தே பெண்ணைப் பெற்றவர்கள் அவனுடைய தாயாரைப் பிய்த்து எடுத்த வண்ணமாயிருந்தார்கள். அந்த நிலைமையில் வேறு யாராயிருந்தாலும் “அப்பளம் இடும் தொல்லை ஒழிந்தது” என்று எண்ணி, ஏதாவது ஒரு பெண்ணைப் பிடித்துக் கேதாரியின் கழுத்தில் கட்டியிருப்பார்கள். ஆனால் பாகீரதி அம்மாமி, வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில் மிகவும் கடினமான பாடங்களைப் படித்து அறிவு பெற்றவள். “பி.ஏ. முடிகிற வரையில் கல்யாணப் பேச்சே கூடாது” என்று பிடிவாதமாய்ச் சொல்லி வந்தாள்.

ஆகவே, இப்போது கேதாரி, பி.ஏ. தேறியதும் கலியாணத்தைப் பற்றி யோசிக்க வேண்டியதாயிற்று. மணிபுரம் பண்ணையார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அவர் அப்போது எங்கள் காலேஜ் பழைய மாணாக்கர் சங்கத்தின் அக்கிராசனராயிருந்தார். ஒவ்வொரு வருஷமும், கேதாரி வகுப்பில் முதலாவதாகத் தேறி முதற்பரிசுகள் பெற்று வருவதைக் கவனித்திருந்தார். பையனுடைய முகவெட்டு, நடை உடை பாவனை எல்லாம் அவருக்குப் பிடித்திருந்தன. ஆகவே தம்முடைய பெண்ணை அவனுக்குக் கொடுப்பதென்று பேசத் தொடங்கினார். பையனைக் கேட்டதில் அம்மாவைக் கேட்க வேண்டுமென்று சொல்லிவிட்டான். பாகீரதி அம்மாமி இவ்வளவு பெரிய சம்பந்தம் கிடைக்கப் போகிறதை எண்ணியபோது பிரமித்துப் போய்விட்டாள். ஆனாலும் காரியத்தில் கண்ணாயிருந்தாள். இன்னொரு ஸ்திரீயாயிருந்தால், “ஐயாயிரம் வேணும்; பத்தாயிரம் வேணும்” என்று கேட்டிருப்பார்கள். பாகீரதி அம்மாமியோ, “பணங்காசு ஒன்றும் வேண்டாம்; கலியாணம் சீர்வகையரா எல்லாம் உங்கள் இஷ்டம். பையனைச் சீமைக்கு அனுப்பி ஐ.ஸி.எஸ். படிக்க வைப்பதற்கு மட்டும் ஒப்புக் கொண்டால் போதும்” என்றாள்.

இந்த மாதிரி எண்ணம் அம்மாமிக்கு உண்டென்று எனக்கு முன்னாலேயே தெரியும். ஏனென்றால், ஐ.ஸி.எஸ்.ஸுக்குப் போவது பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு நாள் என்னை அவள் கேட்டது உண்டு. அக்கம் பக்கத்தில் எல்லாரும் அதிசயப்பட்டார்கள்; சிலர் அம்மாமியை வையக்கூட வைதார்கள். “பார்! என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு? ஒரு பிள்ளை; அதைச் சீமைக்கு அனுப்புகிறாளே?” என்றார்கள்.

பண்ணையார் நரசிம்மய்யர் வைதிகப்பற்று உள்ளவர். ஆகையால் முதலில் தயங்கினார். கடைசியில், பெரிய சாஸ்திரிகள் தீக்ஷிதர்கள் எல்லாருடனும் யோசித்து, “சாஸ்திரங்களில் சமுத்திரப் பிரயாணத்துக்குப் பிராயச்சித்தம் இருக்கிறது” என்று உறுதிப்படுத்திக் கொண்டு சம்மதித்தார். எனக்கென்னவோ, “ஒரு ஸ்திரீக்குள்ள மனோதிடம் நமக்கு வேண்டாமா?” என்ற எண்ணத்தினாலேதான் அவர் சம்மதித்தார் என்று தோன்றிற்று.

இதற்குப் பிறகுதான் கேதாரியைப் போய்ப் பெண்ணைப் பார்த்துவிட்டு வரும்படி அம்மாமி சொன்னது. நானும் கூடப் போயிருந்தேன். கேதாரி தன் தாயிடம் வைத்திருந்த நம்பிக்கை எவ்வளவு நியாயமானது என்று விளங்கிற்று. கிளி என்றால் கிளி, பெண் அவ்வளவு அழகாயிருந்தாள். பதின்மூன்று, பதினாலு வயது இருக்கலாம்.

அந்தக் கதையையெல்லாம் இப்போது வளர்ப்பதில் பயன் என்ன? கல்யாணம் சிறப்பாக நடந்தது. அடுத்த வருஷம் கேதாரி இங்கிலாந்துக்குப் பிரயாணமானான். பம்பாய் வரையில் நான் சென்று கப்பல் ஏற்றிவிட்டு வந்தேன்.

பாகீரதி அம்மாமியைத் தங்கள் வீட்டிலேயே வந்திருக்க வேண்டும் என்று மணிபுரத்தார் எவ்வளவோ வருந்தி அழைத்தார்கள். அம்மாமி கேட்கவில்லை. அவளுடைய சித்தி ஒருத்தி இரண்டு குழந்தைகளை அநாதையாய் விட்டு விட்டு, இறந்து போய்விட்டாள். அவர்களைக் கிராமத்திலிருந்து தருவித்துத் தனியாக ஒரு வீட்டில் ஜாகை ஏற்படுத்திக் கொண்டு அவர்களைப் பராமரித்து வந்தாள். ஆனால் சம்பந்திகளின் கௌரவத்தையும் மற்ற விஷயங்களையும் உத்தேசித்து அப்பளம் இட்டு விற்பதை மட்டும் நிறுத்தி விட்டாள்.

கேதாரி சீமைக்குப் போய் எழெட்டு மாதங்களுக்குப் பிறகு, மணிபுரம் மிராசுதார் வீட்டிலிருந்து ஆள் வந்து என்னைக் கூப்பிட்டான். அவ்வாறே போயிருந்தேன். நரசிம்மய்யர் ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது இரங்கூனிலிருந்து சுந்தரராமய்யர் என்பவரால் எழுதப்பட்டது. தம்முடைய புதல்வனுக்கு இவர்கள் பெண்ணைக் கொடுத்திருப்பதாக அறிந்து சந்தோஷப்படுவதாகவும், திருச்சியிலிருந்து சமீபத்தில் இரங்கூனுக்கு வந்து ஒருவர் மூலம் சகல விவரமும் தெரிந்து கொண்டதாகவும், தாம் இப்போது திரும்பவும் ஜன்மதேசம் வந்து எல்லாரையும் பார்க்க விரும்புகிறபடியால் அதற்குப் பிரயாணச் செலவுக்காகப் பணம் அனுப்ப வேண்டுமென்றும் எழுதியிருந்தது.

“என்ன, சங்கரா! இது நிஜமாயிருக்குமா?” என்று நரசிம்மய்யர் கேட்டார்.

“நிஜமாயிருக்கலாமென்று தான் தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் அம்மாமியைக் கேட்டுக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்றேன்.

அம்மாமியிடம் கடிதத்தைக் கொடுத்தேன். அவள் ஒருவேளை அழுது கண்ணீர் விட்டுத் தடபுடல் செய்வாளோ என்று நான் பயந்ததெல்லாம் வீண் எண்ணம் என்று தெரிந்தது. தன்னுடைய ஏக புதல்வனைச் சீமைக்கு அனுப்பி வைக்கும்படி நெஞ்சைக் கல்லாகச் செய்து கொண்டவள் அல்லவா? கடிதத்தைப் படித்து விட்டு “இது அவருடைய கையெழுத்துத்தான்” என்றாள். பிறகு மௌனமாய் யோசனையில் ஆழ்ந்தவள் போல் இருந்தாள். இரண்டொரு தடவை பெருமூச்சு மட்டும் வந்தது. ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை.

“அம்மாமி! நரசிம்மய்யர் பணம் அனுப்புவதாகச் சொல்கிறார்” என்றேன்.

அம்மாமி அவசரமாய் உள்ளே எழுந்து போய் பெட்டியிலிருந்த பண நோட்டுகளை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள். எண்பது ரூபாய் இருந்தது.

“சங்கரா! நான் அப்பளம் இட்டுச் சேர்த்த பணத்தில் மீதி இது. அவருக்கு என் பேரால் இதை அனுப்பு. இந்த வீட்டு விலாசம் கொடுத்து இங்கேயே நேரே வந்து சேரும்படி எழுது” என்றாள்.

அம்மாமியின் குரல் கொஞ்சம் கம்மியிருந்தது; அவ்வளவுதான். எனக்கோ கண்ணில் ஜலம் வந்தது.

மேல் சம்பவங்களைப் பற்றி நினைத்தாலே எனக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்கிறது; கைகூட நடுங்குகிறது.

பத்து நாளைக்கெல்லாம் மணியார்டர் திரும்பி வந்துவிட்டது. மணியார்டரை எந்த விலாசத்துக்கு அனுப்பினோமோ, அந்த வீட்டிலிருந்து ஒருவர் மணியார்டர் வருவதற்கு முன் சுந்தரராமைய்யர் காலஞ்சென்று விட்டதாகவும், அநாதைப் பிரேத ஸம்ஸ்காரம் செய்யப் பட்டதாகவும் கடிதம் எழுதியிருந்தார்.

பதினெட்டு வருஷமாய்க் கண்ணால் பாராத புருஷனுக்காகப் பாகீரதி அம்மாள் துக்கம் காத்தாள். பத்தாம் நாள், பிராமண சாதியில் வழக்கமான அலங்கோலங்கள் அம்மாமிக்கும் செய்யப்பட்டது.

கேதாரிக்கு இதைப்பற்றி ஒன்றும் எழுதக்கூடாதென்றும், திரும்பி ஊருக்கு வந்த பிறகு தெரிவித்தால் போதுமென்றும், அம்மாமி கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

காலம் எப்படியோ சென்றது. நானும் மலையைக் கல்லி எலியைப் பிடித்தது போல பி.ஏ. பாஸ் செய்து, நான் படித்த பள்ளிக்கூடத்திலேயே உபாத்தியாயர் ஆனேன். கேதாரி சீமையிலிருந்து திரும்பி வரும் காலம் சமீபித்தது.

எதிர்பார்த்தது போலவே அவன் மிகச் சிறப்புடன் ஐ.ஸி.எஸ். தேறினான். அவனுடைய தகப்பனாருடைய மரணத்தைப் பற்றியும், மற்ற விவரங்களைப் பற்றியும் அவனைத் திடுக்கிடச் செய்யாத விதத்தில் கடிதம் எழுதி, அது பம்பாயில் அவன் கையில் கிடைக்கும்படி அனுப்பியிருந்தோம். ஆனால் அவனுக்கிருந்த அவசரத்தில், கப்பலிலிருந்து நேரே ரயிலுக்கு வந்து விட்டானாதலால், மேற்படி கடிதம் அவன் கையில் சேரவில்லையென்று பின்னால் தெரிய வந்தது.

அவன் வரும் விவரம் தந்தியில் தெரிவித்திருந்தானாதலால் வீட்டு வாசலில் தயாராய்க் காத்துக் கொண்டிருந்தேன். என் கழுத்தைக் கட்டியவண்ணமாய் இழுத்துக் கொண்டு அவசரமாய் உள்ளே போனான். தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்த அம்மாமியின் மேல் அவன் பார்வை விழவில்லையோ, அல்லது விழுந்தும் அடையாளம் தெரியவில்லையோ, நான் அறியேன். அவன் பாட்டுக்கு “அம்மா! அம்மா!’ என்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே சென்றான்.

அம்மாமியின் கண்களில் கண்ணீர் வந்ததை முதன் முதலாக அப்போதுதான் நான் பார்த்தேன்.

“அடே கேதாரி! என்னடா இது? அம்மா இதோ இருக்கிறாள்; எங்கேயோ தேடிக் கொண்டு போகிறாயே!” என்றேன்.

கேதாரி திரும்பி வந்தான். வெள்ளைப்புடவை அணிந்து மொட்டைத் தலையை முக்காடால் மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்த பாகீரதி அம்மாமியை உற்றுப் பார்த்தான்.

“ஐயோ! அம்மா!…” என்று பயங்கரமாக ஒரு கூச்சல் போட்டுவிட்டுத் தொப்பென்று கீழே உட்கார்ந்தான். தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டான்.

கேதாரிக்கு கடுமையான ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. திருச்சிராப்பள்ளியில் அவனை வந்து பார்க்காத டாக்டர் இல்லை; அவனுக்குச் செய்யாத சிகிச்சை பாக்கி கிடையாது. ஒன்றும் பயன்படவில்லை.

அவனுடைய உடம்பு கொதித்துக் கொண்டிருந்ததைப் போல் உள்ளமும் கொதித்துக் கொண்டிருந்தது. ஒரே நினைவு, ஒரே ஞாபகந்தான். நான் தனியாய் அவனுடன் இருக்க நேர்ந்து விட்டால் போதும்; உடனே ஆரம்பித்து விடுவான்.

“சங்கரா! அது என்ன சாஸ்திரமடா அது? அநாதையாய் விட்டுப் போய்ப் பதினெட்டு வருஷம் திரும்பிப் பாராமலிருந்த புருஷன் செத்ததற்காகத் தலையை மொட்டையடிக்கச் சொல்லும் சாஸ்திரம்! அதைக் கொண்டு வாடா, தீயில் போட்டுக் கொளுத்துவோம்!” என்பான்.

“இதோ பார், சங்கர்! என் தாயார் ரொம்ப புத்திசாலி, இந்த முட்டாள்தனத்திற்கு ஒரு நாளும் உட்பட்டிருக்க மாட்டாள். எல்லாம் என்னால் வந்ததுதான். நான் பெரிய இடத்தில் – வைதிகக் குடுக்கைகளின் வீட்டில் – கலியாணம் செய்து கொண்டேன் அல்லவா? அவர்களுடைய ஏச்சுக்குப் பயந்துதான் அம்மா இதர்குச் சம்மதித்திருக்க வேண்டும்” என்பான்.

ஒரு நாள் வாசலில் இரண்டு கூலி வேலைக்காரர்கள் பேசிக் கொண்டு போனார்கள். ஒருவன், “அண்ணே! இன்று காலை புறப்படும் போது ஒரு மொட்டைப் பாப்பாத்தி எதிரில் வந்தாள். அது தான் வேலை அகப்படவில்லை” என்று சொன்னது கேதாரியின் காதில் விழுந்துவிட்டது.

“சங்கர்! கேட்டாயா? என் தாயாரின் முகத்தில் விழித்தால் சகல பீடைகளும் நீங்குமென்று சொல்வார்களடா! இப்போது அவளும் அபசகுனந்தானே?” என்று புலம்பினான்.

எவ்வளவோ சமாதானம் சொல்லித் தேற்றினேன். ஆனாலும் அவன் அந்தப் பேச்சை மட்டும் விடுவதில்லை.

“இதைக் கேள், சங்கர்! உத்தியோகமும் ஆயிற்று. மண்ணும் ஆயிற்று. நான் மட்டும் பிழைத்து எழுந்தேனானால் ஒரே ஒரு காரியந்தான் செய்யப் போகிறேன். பிராமண ஸ்திரீகள், புருஷனை இழந்தால் தலையை மொட்டையடிக்கும் வழக்கத்தையொழிக்க ஒரு பெரிய கிளர்ச்சியை நடத்தப் போகிறேன். இந்தத் தனி கௌரவம் நம்முடைய சாதிக்கு மட்டும் வேண்டாம்” என்றான்.

ஆனால் ஐ.ஸி.எஸ். வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் இந்த மாதிரி அற்பமான காரியங்களில் இறங்குவது யமதர்மனுக்கே விருப்பமில்லை போலிருக்கிறது. கேதாரி உடல் குணமடையாமலே, சீமையிலிருந்து வந்த இருபத்தோராம் நாள் காலஞ் சென்றான்.

இந்த பரிதாப வரலாற்றில் சொல்ல வேண்டியது இன்னும் ஒன்றே ஒன்று தான் பாக்கியிருக்கிறது. கேதாரியின் மாமனார் அவனுடைய புகைப்படம் ஒன்று இருந்தால் கொண்டு தரும்படி எனக்குச் சொல்லியிருந்தார். நானும் அவனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் ஒன்று என்னிடம் இருந்தது. அதிலிருந்து அவனுடைய படத்தை மட்டும் தனியாக எடுக்கச் செய்து சட்டம் போட்டு எடுத்துக் கொண்டு போனேன். அப்போது அவர்களுடைய வீட்டில் தற்செயலாய்க் கேதாரியின் மனைவியைக் காண நேரிட்டது. அவளைப் பார்த்ததும் என் உடம்பு நடுங்கிற்று; மயிர் சிலிர்த்தது. அவளைக் “கிளி” என்று சொன்னேனல்லவா? அந்தக் கிளிக்கு இப்போது தலையை மொட்டையடித்து முக்காடும் போட்டிருந்தார்கள்!

இத்துடன்

அமரர் கல்கியின் கேதாரியின் தாயார்

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Kethaariyin Thaayaar Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,kethaariyin thaayaar Audiboook,kethaariyin thaayaar,kethaariyin thaayaar Kalki,Kalki kethaariyin thaayaar,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *