Magudapathi Kalki Ch 12 to Ch 20
Magudapathi Kalki
Mr and Mrs Tamilan Presents Kalki Times
மகுடபதி
கல்கி
All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u
Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/
Magudapathi Kalki
பன்னிரண்டாம் அத்தியாயம்
மறைந்த கடிதம்
மாஜி ஸப் ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் ஐம்பத்தைந்து பிராயம் வரையில் பொருட்செல்வம் தேடிய பிறகு இப்போது அருட்செல்வம் ஈட்டுவதில் முனைந்திருந்தார். சைவத்தொண்டர் மகாநாடுகளிலும், மற்றும் சிவனடியார் திருக்கூட்டங்களிலும் அவரைத் தவறாமல் முன்னணியில் பார்ப்பது சாத்தியமாயிருந்தது. “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்னும் விந்தை மனிதர்” கூட்டத்தை அவர் சேர்ந்தவர் அல்ல. சைவத் திருக்கூட்டங்களுக்கு அவர் தமது இல்லக் கிழத்தியையும் குழந்தைகளையும் அழைத்துப் போவதுண்டு.
பேரூரில் நடந்த சைவத்தொண்டர் மகாநாட்டுக்கு அவர் தமது குடும்பத்துடன் சென்று, ஞானியார் சுவாமிகளின் அமுதமொழிகளையும், இன்னும் பல சைவத்திருவாளர்களின் அரிய சொற்பொழிவுகளையும் செவிகளால் பருகிவிட்டுக் கோயமுத்தூருக்குத் திரும்பி வந்துசேர்ந்தார்.
கோயமுத்தூரில் அய்யாசாமி முதலியாரின் பங்களா அமைதியான சுகவாசத்துக்கென்றே அமைந்ததென்று சொல்லலாம். தென்னிந்தியாவில் பல இடங்களிலும் உத்தியோகம் பார்த்த அய்யாசாமி முதலியார், மயிலாப்பூரில் அவருக்குச் சொந்த வீடு இருந்தும், கோயமுத்தூரின் சீதோஷ்ண ஸ்திதியை முன்னிட்டு, அந்நகரைத் தமது வாசத்துக்குத் தேர்ந்தெடுத்தார். அப்படிப்பட்டவர், நல்ல பங்களாவாகத் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை அல்லவா?
அந்த விஸ்தாரமான அழகிய பங்களாவில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அறை இருந்தது. அவற்றில், பங்களாவின் முகப்பு அறைகள் இரண்டில் ஒன்று பங்கஜத்தினுடையது. அய்யாசாமி முதலியாரின் அறைக்கு அடுத்தபடியாகப் பங்கஜத்தின் அறையில்தான் புத்தகங்கள் அதிகமாயிருக்கும். ஐந்தாவது பாரத்தில் பங்கஜத்தின் படிப்பை முதலியார் நிறுத்திவிட்டார். அதற்குப் பிறகு அவளுடைய அறிவை விசாலிக்கச் செய்யும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டிருந்தார்.
ஒரு பக்கத்தில் முதலியார் பங்கஜத்துக்குச் சைவ சமய அறிவையும், தமிழ் இலக்கியத்தின் சுவையையும் ஊட்டிக் கொண்டிருக்கையில், மற்றொரு பக்கம், அச்செல்வி சர்க்குலேடிங் லைப்ரெரியிலிருந்து நாவல்கள் வாசித்துத் தள்ளிக் கொண்டிருந்தாள். இதுவரையில் சுமார் முந்நூறு நாவல்கள் வாசித்திருந்தபடியால் தானே ஒரு நாவல் எழுதவும் ஆரம்பித்திருந்தாள். அதில் முக்கால் பங்கு எழுதி, கதாநாயகனையும் கதாநாயகியையும் மிகவும் ரசமான ஒரு கட்டத்தில் கொண்டு விட்டிருந்தாளாதலால், பேரூரில் அவள் செவிகள் ஒரு பக்கம் சைவச் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டே இருக்கையில் இன்னொரு பக்கம் அவளுடைய மனம் வீட்டில் விட்டு வந்த நாவல் கையெழுத்துப் பிரதிக்குத் திரும்பத் திரும்பப் போய்க் கொண்டிருந்தது ரசமான விஷயமாகும்.
எனவே, அன்று காலையில் பேரூரிலிருந்து திரும்பி பங்களாவுக்கு வந்து சேர்ந்ததும், பங்கஜம் அவசர அவசரமாகத் தன்னுடைய அறையைத் திறப்பதற்குப் போனாள். பங்களாவில், தோட்ட வேலை, மேஜை நாற்காலிகளைத் துடைக்கும் வேலை எல்லாவற்றிற்கும் மருதக் கவுண்டர் என்று ஒருவன் இருந்தான். அவன் கையில் மேஜை துடைக்கும் துணியுடன் பங்கஜத்தின் பின்னோடு வந்து “சாவியை இங்கே கொடு, அம்மா! நான் திறக்கிறேன்” என்றான்.
“எல்லாம் நானே திறந்து கொள்கிறேன்” என்று பங்கஜம் பூட்டைத் திறந்தாள். வழக்கம் போல சுலபமாய்த் திறக்காமல், சாவி சுழல்வதற்குக் கஷ்டப்பட்டது.
“இது என்ன, யாராவது பூட்டை மறுசாவி போட்டுத் திறந்தார்களா?” என்று கேட்டுக் கொண்டே, பங்கஜம் அழுத்தித் திறந்தாள். பூட்டும் திறந்து கொண்டது.
மருதன், “அதென்ன அம்மா, அப்படிச் சொல்றே? இங்கே எவன் மறுசாவி போட்டுத் திறக்கிறவன்?” என்று கேட்டுக் கொண்டே பங்கஜத்தின் பின்னோடு அறைக்குள் நுழைந்து மேஜை நாற்காலிகளையும் புத்தகங்களையும் மளமளவென்று தட்டத் தொடங்கினான்.
“ஒரே தூசாயிருக்கிறதே? தட்டின அப்புறம் வந்தா நல்லாயிருக்குமே?” என்றான் மருதன். அப்போது அவனுடைய கண்கள் அறையின் நாலாபக்கமும் சுழன்று சுழன்று பார்த்தன.
பங்கஜம் அவன் சொன்னதையும் கவனிக்காமல் தூசையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய நாவல் கையெழுத்துப் பிரதியை ஆவலாகப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினாள்.
மருதன், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வந்தவன், வாசல் ஜ ன்னலண்டை திடீரென்று குனிந்து எதையோ எடுத்தான்.
அது பங்கஜத்துக்குத் தெரிந்துவிட்டது. அவன் எடுத்தது வெள்ளையாய் ஏதொ ஒரு கடுதாசி மாதிரி இருந்தது.
“அது என்ன மருதா, இங்கே கொண்டு வா!” என்றாள்.
“ஒன்றுமில்லை, அம்மா, குப்பை கடுதாசி” என்று சொல்லிக் கொண்டே மருதக் கவுண்டன் கடுதாசியைக் கையில் கசக்கினான்.
“கொண்டு வா என்றால் கொண்டு வா!” என்று பங்கஜம் வீடு இடியும் படி கத்தினாள். அவள் கண்களின் தீப்பொறி பொறிந்தது.
முன்னொரு தடவை பங்கஜம் கதை எழுதியிருந்த காகிதம் ஒன்று பறந்து போய்த் தரையில் விழுந்தது. அதை வீடு கூட்டுகிறவள் குப்பைத் தொட்டியில் கொண்டு போய்ப் போட்டுவிட்டாள். அதுமுதல் எந்தக் காகிதமானாலும் அதை வேலைக்காரர்கள் தொட்டால், பங்கஜத்துக்குப் பிரமாதமான கோபம் வந்துவிடும்.
மருதன் “ஏன் அம்மா கோவிச்சுக்கிறே? இந்தா!” என்று கொடுத்தான்.
பங்கஜம், அதை வாங்கிப் பிரித்துப் படித்தாள். படிக்கும் போதே அவளுடைய முகத்தில் எல்லையற்ற ஆச்சரியத்தின் அறிகுறி உண்டாயிற்று.
“முட்டாள்! இதைப் போய்க் கசக்கி எறியப் பார்த்தாயே?” என்று சொல்லிக்கொண்டே அவள் மருதன் இருந்த இடத்தை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அவனைக் காணவில்லை. பங்கஜம் கடிதம் படிக்கும்போதே அவன் நழுவி விட்டான்.
“மருதா! மருதா!” என்று கூப்பிட்டுவிட்டு, மறுபடியும் ஒரு தடவை கடிதத்தைப் படித்தாள். உடனே அந்த அறையிலிருந்து வெளிக்கிளம்பி, தகப்பனாரின் அறையை நோக்கிச் சென்றாள். வழியில் தாழ்வாரத்தில் மருதன் எதிர்ப்பட்டான்.
“இந்தக் காகிதம் எப்படியடா வந்தது? யார் என் அறையில் போட்டார்கள்?” என்று கோபமாக அவனைக் கேட்டாள்.
“எனக்குத் தெரியாது. அம்மா! நான் போட்டிருந்தால் அதை எடுத்துக் கசக்குவேனா? எந்த நாய் போட்டதோ?” என்றான்.
பங்கஜம் விரைந்து அப்பாவின் அறைக்குள் சென்றாள். அங்கே அப்பாவைக் காணவில்லை.
“மருதா! அப்பா எங்கே?” என்று கத்தினாள்.
“ஸ்நானம் செய்யறாங்க!” என்றான் மருதன்
இதற்குள், சமையர் கட்டிலிருந்து, “பங்கஜம்! காப்பி சாப்பிட்டுப் போ!” என்று தாயாரின் குரல் கேட்டது.
பங்கஜம் கடிதத்தை முதலியாரின் மேஜை மேலிருந்த பெரிய புராணத்துக்குள் வெளியில் கொஞ்சம் தெரியும்படி நீட்டி வைத்துவிட்டு, சமையலறைக்குச் சென்றாள். அந்தக் கடிதத்தைப் பற்றித் தாயாரிடம் சொல்ல அவள் விரும்பவில்லை.
சற்று நேரத்துக்கெல்லாம், பங்கஜம் காப்பி சாப்பிட்டுவிட்டு முதலியாரின் அறைக்கு வந்தபோது அங்கே அவர் இருந்தார். பங்கஜம் பெரிய புராணத்தைப் புரட்டினாள்; மறுபடியும் புரட்டினாள்; மறுபடியும் புரட்டினாள்.
தகப்பனாரைப் பார்த்து, “அப்பா! இந்தப் புத்தகத்துக்குள் ஒரு கடிதம் வைத்தேனே, எடுத்தீர்களா?” என்றாள்.
“நான் எடுக்கவில்லையே? என்ன கடிதம்?”
“இது என்ன அதிசயமா யிருக்கே!” என்று சொல்லிக் கொண்டே பங்கஜம் மேஜை மேலிருந்த திருமந்திரம், திருவாசகம், திருக்குறள், கலித்தொகை, கம்பராமாயணம் முதலிய புத்தகங்களையும் புரட்டத் தொடங்கினாள். ஒன்றிலும் அகப்படவில்லை.
“இதென்ன மாயமாயிருக்கே? அதற்குள் எப்படிப் போயிருக்கும்?” என்றாள் பங்கஜம்.
“நீ எழுதுகிற நாவலில் யாராவது துப்பறிகிறவன் வருகிறானோ இல்லையோ? அவனை அழைத்துக் கொண்டு வந்து கண்டுபிடிக்கச் சொல்லு. என்ன கடிதம், என்ன விஷயம் என்று எனக்குத் தெரியப்படுத்துவது உசிதமாயிருந்தால், அவ்விதமே செய். இல்லாவிட்டால் உன்னுடைய அறைக்குப் போய் நாவலின் அடுத்த அத்தியாயத்தை எழுது!” என்று முதலியார் தமாஷ் செய்தார்.
“நாலாவது, ஒன்றாவது, அப்பா! நாவலில் நடப்பதையெல்லாம் காட்டிலும் அதிசயமான சம்பவம் நடந்திருக்கிறது. செந்திருவை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ, இல்லையோ?”
“ஞாபகம் இல்லாமல் என்ன? அதுகிட்டேயிருந்து கடிதம் வரவில்லை என்று தான் நீ உருகிக்கொண்டிருந்தாயே! கடிதம் அதனிடமிருந்து வந்ததுதானா?”
“ஆமாம், அப்பா! ஆனால், கடிதத்தில் எழுதியிருந்த விஷயம் ரொம்ப ஆச்சரியம். “
“ரொம்ப ரொம்ப ரொம்ப ஆச்சரியமா?”
“விளையாட்டுக்குச் சொல்லவில்லை, அப்பா! இரண்டு மூன்று தடவை நான் வாசித்தேன்; அதனால் அப்படியே ஞாபகம் இருக்கிறது. அதில் எழுதியிருந்தபடியே உங்களுக்கு எழுதிக் காட்டி விடுகிறேன்” என்று கூறி மளமளவென்று காகிதமும் பேனாமும் எடுத்துப் பின்வருமாறு எழுதினாள்:
“என் உயிரினுமினிய அருமைத் தோழி பங்கஜத்துக்குச் செந்திரு அன்புடன் எழுதிக் கொண்டது. இரண்டு மாதத்துக்கு முன்பு நீ போட்ட கடிதம் கிடைத்தது. அதற்கு நான் பதில் போடாததற்கு காரணம் நான் ஜெயிலிலே இருந்தது தான். மூன்று வருஷமாய் நான் ஜெயிலிலேதான் இருந்து வருகிறேன். எனக்கு ஒரு பெரிய ஆபத்து வருவதற்கு இருக்கிறது. அதனால் இன்று காலையில் ஜெயிலிலிருந்து தப்பித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். இந்தக் கடிதம் கொண்டு வருகிற பாட்டனுக்கு என்னிடம் ரொம்பவும் அபிமானம். அது மற்ற விவரம் எல்லாம் சொல்லும். நீ உடனே புறப்பட்டு வந்து என்னை அழைத்துப் போகவும். உன்னிடமும் மாமாவிடமும் யோசனை கேட்க வேண்டியிருக்கிறது. உங்களைத் தவிர எனக்கு வேறு கதி கிடையாது. உங்கள் வீடு தெரியாதபடியால் பாட்டனை அனுப்பியிருக்கிறேன். ஊரில் கலாட்டாவாக யிருப்பதால், உடனே நீயாவது மாமாவாவது வந்து என்னை அழைத்துப் போகவும். ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படிக்கு, உன் அன்புள்ள தோழி, செந்திரு”
மேற்கண்டவாறு பங்கஜம் எழுதி, முதலியாரிடம் கொடுத்தாள். முதலியார் அதைப் படித்துவிட்டு, “இது என்ன வேடிக்கை, குழந்தை! நீ எழுதும் நாவலில் யாராவது கதாநாயகி இப்படிக் கடிதம் எழுதுகிறாளா” என்று கேட்டார்.
பங்கஜம் சிறிது ஆத்திரத்துடன், “இல்லவே இல்லை அப்பா! சத்தியமாய்ச் சொல்கிறேன். நிஜமாகவே வந்த கடிதந்தான்” என்றாள்.
“அதைச் செந்திருதான் எழுதினாள் என்று உனக்கு எப்படித் தெரியும்?”
“என் தோழியின் கையெழுத்து எனக்குத் தெரியாதா, அப்பா?”
முதலியார் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தார். “மேலே விலாசம், தேதி போட்டிருந்ததா?” என்று கேட்டார்.
“கோயமுத்தூர் என்று போட்டிருந்தது. தேதி போட்டிருந்ததாக ஞாபகம் இல்லை. “
“கடிதம் எங்கேதான் போயிருக்கும்? ஆனால் உன்னிடம் அது எப்படிக் கிடைத்தது? அதைச் சொல்லவில்லையே?” என்றார் முதலியார்.
பங்கஜம் விவரமாகச் சொன்னாள்.
“மருதா! மருதா!” என்று முதலியார் கூப்பிட்டார். மருதன் வரவில்லை. மருதன் வீட்டிலேயே இல்லையென்று தெரிந்தது.
அப்போது மருதன், அந்தப் பங்களா இருந்த சாலை முனைக்கு அப்பால் ஒதுங்கி நின்ற மோட்டார் வண்டியின் டிரைவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். டிரைவர் அதை வாங்கிக் கொண்டு அவனிடம் ரூபாய் ஐம்பது நோட்டாகக் கொடுத்தான்.
“இந்த ஐம்பது ரூபாய் என்னத்துக்கு ஆச்சு? எனக்கு வேலை போய்விடும் போலிருக்கு” என்றான் மருதன்.
“வேலை போனால் நேரே கள்ளிப்பட்டிக் கவுண்டர் வீட்டுக்கு வந்துவிடு. வேலை கொடுப்பாரு!” என்றான் டிரைவர்.