Magudapathi Kalki Ch 12 to Ch 20
பதினைந்தாம் அத்தியாயம்
மனித நிழல்
செந்திரு பெரியண்ணனைக் குத்தினாள் என்று அய்யாசாமி முதலியார் சொன்னதும், பங்கஜம் நெருப்பை மிதித்தவள் போல் துள்ளி எழுந்து, “ஐயையோ! என்ன அப்பா சொல்லுகிறீர்கள்?” என்றாள்.
“ஆமாம், அம்மா! நடந்ததைத்தான் சொல்கிறேன். “
“செந்திருவா கத்தியை எடுத்து ஒருவனைக் குத்தினாள்? சொல்கிறவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி எங்கே போச்சு என்பார்களே?… “
அய்யாசாமி முதலியார் புன்னகையுடன், “எங்கள் மதி எங்கேயும் போகவில்லை. சரியாகத்தான் இருக்கிறது. உன் தோழியின் மதிக்குத்தான் கேடு வந்துவிட்டது. எல்லாம் துரதிர்ஷ்டந்தான்” என்றார்.
“என்னதான் சித்தப் பிரமை என்றாலும், கத்தியால் குத்தத் தோன்றுமா அப்பா! அதிலும் செந்திரு, பாவம், ஒரு எறும்பு ஈயைக்கூட ஒன்றும் செய்யமாட்டாளே? ஜட்கா வண்டிக்காரன் குதிரையை அடித்தால், அதைப் பொறுக்காமல் கண்ணைப் பொத்திக் கொள்வாளே? அவள் கத்தியை எடுத்து ஒருவனைக் குத்தினாள் என்றால், எப்படி நம்புகிறது, அப்பா?”
“நம்புவது கஷ்டந்தான், குழந்தை! யார் இல்லை என்றார்கள்? உன் சிநேகிதிக்கு இப்படி வரவேண்டாந்தான். ஒரு வேளை அவள் அப்பா உயிரோடிருந்து, மயிலாப்பூரில் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு சந்தோஷமாக யிருந்திருந்தால், இப்படியெல்லாம் வந்திராது. தலையில் எழுதிய எழுத்தை யாராலாவது அழித்து விடமுடியுமா? ஆனால், உனக்கு ஒன்று சொல்கிறேன். பங்கஜம்! குத்து வெட்டு எல்லாம் நமக்குத்தான் பயங்கரமே தவிர, இந்த ஜில்லாவில் ரொம்ப சகஜம். நமது சென்னை ராஜதானியிலே வருகிற கொலைக் கேஸுகளிலே பாதி கோயமுத்தூர் ஜில்லாவில் தான். இந்தக் கொங்கு நாட்டின் காற்றிலேயே ஏதோ கேடு இருக்க வேண்டும். உன் சிநேகிதியைத்தான் எடுத்துக் கொள்ளேன். அவள் இப்படி மாறிப்போவாளென்று யார் கண்டார்கள்? அப்பா! என்ன பயங்கரமான கூச்சல்! ‘குத்து’ ‘வெட்டு’ ‘கொலை’ ‘இரத்தம்’ ‘பலி’ என்றெல்லாம் அவள் போட்ட பயங்கரமான கூச்சலைக் கேட்டிருந்தால், நீ நடுங்கிப் போயிருப்பாய்” என்றார் முதலியார்.
“ஐயோ! அப்படியா? நீங்களே பார்த்தீர்களா அப்பா?”
“அதுதான் சொன்னேனே. நீ இப்படிக் கேட்பாயென்று தெரிந்துதான் நேரே போய்ப் பார்த்துவிட்டு வந்து விடுவோம் என்று ராவ்பகதூரிடம் சொன்னேன். எல்லோருமாக மத்தியானம் கிளம்பினோம். “
“எங்கே கிளம்பினீர்கள்? அப்படியானால் செந்திரு இப்போது சிங்கமேட்டில் இல்லையா?” என்று பங்கஜம் கேட்டாள்.
“நீலகிரியில் கூனூருக்கு மேலே கொஞ்ச தூரத்தில் தேவகிரி எஸ்டேட் இருக்கிறது. அது கள்ளிப்பட்டிக் கவுண்டர் எஸ்டேட். அங்கே கவுண்டருடைய பங்களாவில்தான் இப்போது செந்திரு இருக்கிறாள். குளிர்ச்சியான இடத்தில் இருந்தால் சித்தப்பிரமைக்கு அனுகூலம் என்று டாக்டர் சொன்னதின் மேல் அங்கே அழைத்துப் போய் வைத்திருக்கிறார்களாம். இன்றைக்கு மத்தியானம் இரண்டு கவுண்டர்களும் போய்ப் பார்த்துவிட்டு வர எண்ணியிருந்தார்களாம். ஆ கவே, எல்லாருமாகக் கள்ளிப்பட்டிக் கவுண்டர் காரிலேயே கிளம்பினோம்; ஹட்ஸன் கார் மலையிலே என்ன ஜோராக ஏறிற்று தெரியுமா?… “
“காரில் போன பெருமை இருக்கட்டும், அப்பா! செந்திருவின் கதியை நினைத்தால் எனக்கு என்னமோ செய்கிறது. ரொம்ப வேதனையாயிருக்கிறது. அவளை நீங்கள் பார்த்தீர்களா? உங்களை அவள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா?” என்றாள் பங்கஜம்.
“அடையாளமாவது, கண்டு கொள்ளவாவது! கார் பங்களாவின் மேட்டில் ஏறும்போதே பயங்கரமான கூச்சல் சத்தம் கேட்டது. பங்களா வாசலில் கார் நின்றதும் ‘யாரடா தடிப்பசங்கள் காரிலே வந்து இறங்குகிறது?’ என்று ஒரு கோரமான குரல் கேட்டது. உன் தோழியின் குரல் எவ்வளவு கோரமாய்ப் போய் விட்டது தெரியுமா? பிறகு, கொண்டுவா, ‘நரபலி’ ‘கழுத்தை முறித்து, இரத்தத்தைக் குடிக்கிறேன்!’ ‘குத்து; வெட்டு!’ என்று கூச்சல் கிளம்பிற்று. அதையெல்லாம், விவரமாக உனக்குச் சொல்லக்கூடாது. சொன்னால் ராத்திரியில் உளறியடித்துக் கொள்வாய். கார்க்கோடக் கவுண்டர் எங்களைப் பார்த்து, ‘என்ன சொல்கிறீர்கள்? அழைத்துக் கொண்டு போகிறீர்களா?’ என்று கேட்டார்.
நாங்கள் என்னத்தைச் சொல்கிறது? ராவ்பகதூரும் நானும் ஒருவரையொருவர் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டோ ம். பங்களா வாசலிலிருந்தபடி காரிலிருந்து கீழே இறங்காமலேயே நாங்கள் திரும்பிப் போகத் தயாராயிருந்தோம். ஆனால், கார்க்கோடக் கவுண்டர் விடவில்லை. உள்ளே வந்து பார்க்கவேண்டும் என்றார். பங்களாவுக்குள் போனோம். பாவம், அங்கே ஒரு அறையில் செந்திருவைப் பூட்டி வைத்திருக்கிறது. புத்தி கொஞ்சம் தெளியும் போது வெளியே விடுகிறார்களாம். நாங்கள் போனபோது பைத்தியம் ரொம்பக் கடுமை. ஜ ன்னலண்டையில் கவுண்டர் எங்களை அழைத்துப் போனபோது அங்கிருந்த சமையற்காரி வந்து குறுக்கிட்டு, ‘அந்தப் பெண் துணையை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு உட்கார்ந்திருக்கிறது’ என்றாள். அந்தக் கண்றாவியை என்னால் பார்க்கமுடியாது என்று சொல்லிவிட்டேன். ராவ்பகதூரின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கவுண்டர் ஜ ன்னலண்டை போனார். உள்ளேயிருந்து ஒரு தண்ணீர்க் குவளை ஜ ன்னல் கம்பிகளின் மேல் வந்து படீரென்று விழுந்தது. ராவ்பகதூர் ஒரேயடியாக மிரண்டுவிட்டார். அப்புறம் என்னத்தைச் சொல்கிறது? பேசாமல் திரும்பி வந்தோம்” என்று கதையை ஒரு விதமாக முடித்தார், அய்யாசாமி முதலியார்.
பங்கஜம் சற்று மவுனமாயிருந்தாள்.
“படுத்துக்கொள்ளலாமா, குழந்தை! நான் போகட்டுமா?” என்றார் முதலியார்.
“ஆமாம் அப்பா! அவ்வளவு பைத்தியம் முற்றியிருந்தால், கடுதாசி அவ்வளவு நன்றாக எப்படி எழுதினாள்?” என்று பங்கஜம் கேட்டாள்.
“நான் தான் சொன்னேனே, அம்மா! கோயமுத்தூருக்கு ஓடி வந்த போது, அவளுக்கு உடம்பு அவ்வளவு மோசமாயில்லை என்று. “
“சரிதான்; ஆனால், கடிதம் நம் வீட்டுக்கு எப்படி வந்ததாம்? யாரிடம் அனுப்பினாளாம்?”
“சரியாய்ப் போச்சு! அதை இன்னும் உனக்குச் சொல்லவில்லையா? இந்த ஊரில் அனுமந்தராயன் தெரு வீட்டு மச்சில் செந்திருவும் பெரியண்ணனும் தனியாயிருந்தபோது இவள் கடிதம் எழுதி வைத்துக் கொண்டு ஜ ன்னல் வழியாய்த் தெருவீதியைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். இந்த மகுடபதி என்கிற பையன் தெருவோடு போயிருக்கிறான். செந்திரு கடிதத்தை வீதியில் போட்டிருக்கிறாள். இந்த மகுடபதி என்கிற பையன் சுத்தக் காலாடியாம். ஏற்கெனவே, சிங்கமேட்டுக் கவுண்டர் மேல் அவனுக்கு விரோதமாம். கடிதத்தை அவன் நம் வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க் கன்னாபின்னாவென்று ஏதோ சொல்லி வைத்தானாம். சிங்கமேட்டுக் கவுண்டர் பெயரைச் சிரிப்பாய் சிரிக்க அடிப்பதற்கு இதுதான் சமயம் என்று நினைத்தான் போல் இருக்கிறது. அவன் மேல் கள்ளிப்பட்டிக் கவுண்டருக்கு என்ன ‘காண்டு’ தெரியுமோ? ‘அந்தப் பயல் மட்டும் மறுபடி என்கையில் சிக்கட்டும், முதுகுத் தோலை உரித்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்’ என்றார். கள்ளிப்பட்டிக் கவுண்டர் என்றால் என்னவென்று நினைத்தாய், குழந்தாய்! இந்த ஜில்லாவிலேயே அவர் வைத்ததுதான் சட்டம். பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லாங்கூடப் பயப்படுவார்கள். ஜில்லாபோர்ட் பிரஸிடெண்ட் அன்று பேரூருக்கு வந்த போது தடபுடல் பட்டதே, அந்த பிரஸிடெண்ட்டுக்கு கள்ளிப்பட்டிக் கவுண்டர் என்ற பெயரைக் கேட்டால் தொடை வெடவெட வென்று நடுங்குமாம்! அப்படிப்பட்டவர் கிட்டப்போய் இந்த மகுடபதி என்கிற வெறும் பையன் விரோதித்துக் கொண்டிருக்கிறான். ‘காங்கிரஸ் பெயரையும், காந்தி பெயரையும் கெடுக்கத்தான் வந்திருக்கிறான்’ என்கிறார் கள்ளிப்பட்டிக் கவுண்டர். “
இவ்விதம் சொல்லிவிட்டு அய்யாசாமி முதலியார் கொட்டாவி விட்டார்.
மகுடபதியைப் பற்றிப் பங்கஜம் கட்டியிருந்த ஆ காசக் கோட்டையெல்லாம் பொலபொலவென்று இடிந்து விழுந்தது.
“என்னமோ கேட்கக் கேட்க விசனமாயிருக்கிறது. அப்பா! ஆனால் இன்னும் ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிபடவில்லை. எனக்குச் செந்திரு எழுதிய கடிதத்தை மருதக் கவுண்டன் ஏன் திருடினான்? அந்தக் கடிதம் உங்கள் அழகான கள்ளிப்பட்டிக் கவுண்டரிடம் எப்படிப் போயிற்று?” என்று பங்கஜம் கேட்டாள்.
“அது ஒரு விஷயம் பாக்கியிருக்கிறதா? சரி, கேட்டுக் கொள். செந்திரு உனக்குக் கடிதம் எழுதி வீதியில் போட்டாள் என்று பெரியண்ணன் கவுண்டர்களிடம் ஒளித்திருக்கிறான். சித்த ஸ்வாதீனமில்லாத சமயத்தில் அவள் என்ன எழுதியிருக்கிறாளோ, என்னமோ இந்த வெட்கக்கேடு வெளியில் நாலு பேருக்குத் தெரிவானேன் என்று அவர்களுக்கு எண்ணம். அதற்காகத்தான் நீயாவது நானாவது கடிதத்தைப் பிரித்துப் படிக்காவிட்டால் எடுத்துக் கொண்டு விடும்படி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த முட்டாள் நமக்கு விஷயம் தெரிந்த பிறகு எடுத்துப் போயிருக்கிறான். அதற்காக அவனுக்கு அங்கே நல்ல பூசை கிடைத்ததாம். கவுண்டர்களே நம்முடைய வீட்டுக்கு வந்து இதையெல்லாம் சொல்ல வேண்டுமென்றிருந்தார்களாம். அதற்குள்ளே நாங்கள் போய்… ” என்று முதலியார் சொன்னபோது, அவருடைய தலை ஆடிற்று.
“சரி, அப்பா, உங்களுக்குத் தூக்கம் கண்ணைச் சுற்றுகிறது. நீங்கள் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். நானும் விளக்கை அணைத்துவிட்டுப் போய்ப் படுத்துக் கொள்கிறேன்” என்றாள் பங்கஜம்.
“சரி, அதிக நேரம் கண் விழிக்காதே. நாவல் எழுதினதெல்லாம் போதும். உன் சிநேகிதியின் கதையே தான் பெரிய நாவலாய் இருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே அய்யாசாமி முதலியார் எழுந்து போனார்.
பங்கஜமும் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்திருந்து விளக்கை அணைப்பதற்காகப் போனாள். அப்போது அவள் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டது. ஒரு நிமிஷம் அவள் மார்பு அடித்துக் கொள்வது நின்றுவிட்டது. ஏனெனில், விளக்கை அணைப்பதற்காக அவள் எழுந்து போனபோது, ஜ ன்னலுக்கு எதிர்ப் பக்கத்துச் சுவரில் ஒரு மனிதனுடைய நிழலை அவள் பார்த்தாள்.