Magudapathi Kalki Ch 12 to Ch 20
பத்தொன்பதாம் அத்தியாயம்
பைத்தியம் யாருக்கு?
கவுண்டருடன் வண்டியிலிருந்து இறங்கிய தடியர்கள் இருவரும் துப்பாக்கி வேட்டுத் தீர்த்த திசையை நோக்கி விரைந்து போனார்கள். அவர்கள் கோயமுத்தூரில் அன்று மாலை தன்னைத் தொடர்ந்து வந்தவர்கள்தான் என்பதை மகுடபதி கவனித்தான். கட்டைவண்டிகளில் தொங்கிய லாந்தர்களின் வெளிச்சத்தில் இதெல்லாம் ஓர் அதிசயமான சினிமாக் காட்சி போல் தெரிந்தது.
காட்டிற்குள் புகுந்த தடியர்கள் இருவரும் சற்று நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்தார்கள். ஒருவன் கையில் செத்த முயலைத் தூக்கிக் கொண்டு வந்தான். முயலின் வயிற்றிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இந்தக் கோரக் காட்சியைக் காணச் சகிக்காமல் மகுடபதி கண்ணை மூடிக் கொண்டான். முயலின் மேல் பாய்ந்த குண்டு உண்மையில் தன்னை உத்தேசித்து விடப்பட்டதுதான் என்பது அவன் உள்ளத்திற்குத் தெரிந்து போயிற்று.
‘ஆமாம்; பக்கத்துக் காட்டில் ஏதோ சலசலப்புச் சத்தம் கேட்டுதான் கவுண்டர் மோட்டரை நிறுத்தியிருக்கிறார். தாம் தேடி வந்த ஆசாமி அங்கே காட்டில் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்த்துத்தான் துப்பாக்கி வேட்டுத் தீர்த்திருக்கிறார். அர்த்த ராத்திரியில் முயல் வேட்டையாட அவர் வரவில்லை என்பது நிச்சயம். மனித வேட்டையாடத்தான் வந்திருக்கிறார்!’
இந்த நினைவினால் மகுடபதியின் தேகம் நடுங்கிற்று. அந்த ஜ னவரி மாதத்துக் குளிரில் அவனுடைய உடம்பு சொட்ட வியர்த்துவிட்டது.
கவுண்டரும் மற்றவர்களும் காரில் மறுபடியும் ஏறி உட்கார்ந்தார்கள். கார் கிளம்புவதற்குள்ளே கள்ளிப்பட்டிக் கவுண்டர் முன்னாடியிருந்த வண்டிக்காரனைப் பார்த்து, “ஏனப்பா! நீங்க வருகிற வழியிலே யாராவது ஒரு பையனைக் கண்டீங்களா?” என்று கேட்டார்.
அப்போது செங்கோடன், மகுடபதி இரண்டு பேருடைய நெஞ்சம் பட்பட் என்று அடித்துக் கொண்டன.
முன் வண்டிக்காரன் இல்லிங்களே! ஒரு ஈ காக்காய் வழிலே கிடையாது!” என்று பதில் சொன்னது காதில் விழுந்த பிறகுதான், அவர்களுடைய பதட்டம் அடங்கிற்று.
கார் உடனே கிளம்பி, கட்டைவண்டிகள் எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு, சாலைப் புழுதியை அமோகமாய்க் கிளப்பி விட்டுவிட்டு அதிவேகமாய்ச் சென்று மறைந்தது.
பிறகு செங்கோடக் கவுண்டன் மகுடபதியைப் பற்றி மேலும் விசாரித்தான். கடைசியில் “தம்பி! நான் சொல்கிறதைக் கேள். என் மாமியார் வீடு சேவல் பாளையத்தில்தான் இருக்கிறது. கோழி கூப்பிடுகிற நேரத்திற்கு அங்கே போய்ச் சேருவோம். உன்னை என் மாமியார் வீட்டில் விட்டுவிட்டுப் போகிறேன். நன்றாய்ப் பார்த்துக் கொள்வார்கள். பகலெல்லாம் படுத்துத் தூங்கு. திரும்ப நான் இராத்திரி வருகிறேன். பேசாமல் என்னோடு ஊருக்கு வந்துவிடு. காங்கிரஸும் காந்தியும் சுயராஜ்யம் கொண்டு வருகிற காரியம் நீ ஒருவன் இல்லாததனாலே கெட்டுப் போய்விடாது… ” என்றான்.
மகுடபதி உடம்பும் மனமும் சோர்ந்திருந்தான். அந்த நிலைமையில் செங்கோடக் கவுண்டன் சொன்னது அவனுக்குப் பக்குவமாகப் பட்டது. “ஆ கட்டும்!” என்றான் மகுடபதி. ஆனால் வண்டி கடகடவென்று ஆடிக்கொண்டு போய்க் கொண்டிருந்தபோது, அவன் மனமும் ஊசலாடிக் கொண்டிருந்தது. “வாஸ்தவந்தான்! காங்கிரஸும் காந்திமகானும் நான் ஒருவன் இல்லாமலே காரியத்தைப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் செந்திருவின் கதி என்ன? அவளும் எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிடுகிறதா?” என்ற கேள்வி அவன் மனதில் எழுந்து கொண்டேயிருந்தது. அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.
கோயமுத்தூருக்கு இப்பால் ஆறு மைல் தூரத்தில் சேவல்பாளையம் கிராமம் இருக்கிறது. பெரிய சாலையிலிலிருந்து பிரிந்து ஒரு மைல் தூரம் குறுக்குப் பாதையில் போகவேண்டும். செங்கோடன் அங்கே தன் வண்டியைப் பிரித்து ஓட்டிக் கொண்டு போய்ச் சேவல்பாளையம் சின்னசாமிக் கவுண்டர் வீட்டில் மகுடபதியை விட்டான். சின்னசாமிக் கவுண்டர் காலமாகிக் கொஞ்ச காலமாயிற்று. செங்கோடனுடைய மாமியாரும், கல்யாணமாகாத ஒரு மைத்துனியும் இரண்டு மைத்துனர்களுந்தான் இருந்தார்கள். மைத்துனர்கள் சிறுபிள்ளைகள். அவர்கள் காங்கிரஸ் தொண்டன் மகுடபதியைப் பற்றி ரொம்பவும் கேள்விப் பட்டிருந்தார்கள். மகுடபதிக்கு அந்த வீட்டில் ராஜோபசாரம் நடந்தது.
செங்கோடன் வண்டியுடன் கோயமுத்தூருக்குக் கிளம்பியபோது, மகுடபதி, அவனிடம் “அண்ணாச்சி! கோயமுத்தூரில் எனக்கு அவசியமாக ஒரு காரியம் ஆ க வேண்டும். உன்னால் முடியக்கூடிய காரியம்தான். செய்து வருவாயா?” என்று கேட்டான். “ஆ கட்டும்; என்ன காரியம்?” என்றான் செங்கோடன். “பிரமாதம் ஒன்றுமில்லை. பென்ஷன் ஸப் ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் வீடு எங்கே இருக்கிறதென்று விசாரித்து அடையாளம் தெரிந்து கொண்டு வரவேண்டும். அவரிடம் ஒரு முக்கியமான காரியம் எனக்கு இருக்கிறது. அதை முடித்துக் கொண்டு பிறகு ஊருக்கே வந்து விடுகிறேன்” என்றான் மகுடபதி. “சரி” என்று சொல்லிவிட்டுச் செங்கோடன் போனான்.
மகுடபதி அன்று முழுவதும் ஓய்வு எடுத்துக் கொண்டு இளைப்பாறினான். எப்படியோ அந்த வீட்டில் அவன் என்றும் அறியாத ஒரு மன அமைதியை அனுபவித்தான். வீட்டுப் பிள்ளைகள் இரண்டு பேரும் மகுடபதியிடம் கலகலவென்று பேசிக்கொண்டும், காங்கிரஸையும் காந்தியையும் சிறைவாசத்தையும் பற்றிக் கேட்டுக் கொண்டுமிருந்தார்கள். அடிக்கடி அவர்கள் ‘மகாத்மா காந்திக்கு ஜே!’, ‘பாரத மாதாவுக்கு ஜே!’, ‘மகுடபதிக்கு ஜே!’ என்று கோஷித்து விட்டு, புன்னகையுடன் மகுடபதியைக் கடைக்கண்ணால் பார்த்தார்கள். அவர்களுடைய அக்காவுக்குப் பதினேழு, பதினெட்டு வயதிருக்கும், படிப்பில்லாத பட்டிக்காட்டுப் பெண்தான். ஆனால் முகத்திலே நல்ல குறுகுறுப்பு இருந்தது. அவள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடியாடி வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள் இடையிடையே மகுடபதியின் பேரில் ஒரு கடைக்கண் பார்வையை மின்வெட்டைப் போல் வீசிவிட்டுப் போனாள். இந்த மாதிரி ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு சிவனேயென்று அமைதியான கிராம வாழ்கை என் நடத்தக் கூடாது என்று மகுடபதி எண்ணினான்.
செங்கோடனுடைய மாமியாருடன் அவன் பேசிக் கொண்டிருந்தபோது, இறந்துபோன பாவாயியைப் பற்றியும், அவளுக்குக் கள்ளிப்பட்டிக் கவுண்டருடன் நடந்த கல்யாணத்தைப் பற்றியும், அவர்களுடைய இல்வாழ்க்கையைப் பற்றியும் பல விவரங்கள் அறிந்தான். பாவாயிதான் அந்த வீட்டின் மூத்த பெண். கள்ளிப்பட்டிக் கவுண்டரின் முதல் மனைவிக்குக் குழந்தைகள் இல்லையாதலால் பாவாயியை இரண்டாந்தாரமாகக் கொடுத்தார்கள். பாவாயிக்கு ஆண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பட்டிக் கவுண்டரின் பெரிய சொத்து முழுவதும் அந்தக் குழந்தைக்கு வரும் என்று ஆசைப்பட்டுக் கொடுத்தார்கள். பாவாயிக்கு அவ்விதமே ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனாலும், அதற்குப் பிறகு கள்ளிப்பட்டிக் கவுண்டர் மூன்றாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டார்.
பாவாயியின் பிள்ளைக்கு நாலு வயதான போது பாவாயி இரண்டாவது பிரசவத்துக்காகப் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள். கள்ளிப்பட்டிக் கவுண்டருக்கு அவள் மேல் எப்படியோ வெறுப்பு உண்டாகி, அவளை அடித்து உபத்திரவப்படுத்த ஆரம்பித்தார். இதனால்தானோ என்னமோ, பாவாயிக்கு அகாலப் பிரசவமாகிக் குறைபிறந்து தாயாரும் இறந்துபோனாள். அதே சமயத்தில் அவளுடைய நாலு வயதுப் பிள்ளையும் காணாமல் போய்விட்டது.
கள்ளிப்பட்டிக் கவுண்டருக்குப் பாவாயி இறந்ததில் துக்கம் இல்லை. ஆனால், பிள்ளை காணாமல் போனது பற்றி அவருக்குத் துக்கமும் கோபமும் அசாத்தியமாயிருந்தன. பாவாயியுடன் அவர் துணைக்கு அனுப்பியிருந்த வேலைக்காரப் பெரியண்ணன் மேலும் அவருடைய சகலன் செங்கோடக் கவுண்டன் மேலும் அவருக்குச் சந்தேகம் உதித்திருந்தது. அவருடைய கோபத்துக்குப் பயந்து பெரியண்ணன் கண்டிக்கு ஓடிப் போய்விட்டான். செங்கோடக் கவுண்டன் அவரிடம் அகப்பட்டுக் கொண்டு உயிருடன் தப்பிய பாடு பெரும்பாடாகிவிட்டது.
மகுடபதி இன்னும் கொஞ்சம் விசாரித்து, அப்போது கண்டிக்குத் தப்பி ஓடிய பெரியண்ணன் தான் குடிப்பேயினிடமிருந்து தப்புவித்த பெரியண்ணன் என்பதைத் தெரிந்து கொண்டான். “ஐயோ! பெரியண்ணனை மறுபடியும் காண்போமா?” என்று அவனுடைய மனம் தத்தளித்தது.
அன்றிரவு செங்கோடன் கோயமுத்தூரிலிருந்து திரும்பி வந்தான். மாஜி ஸப் ஜட்ஜ் அய்யாசாமி முதலியாரின் விலாசத்தைத் திட்டமாக விசாரித்துக் கொண்டு வந்து மகுடபதியிடம் தெரிவித்தான். ஒரு அநியாயக் கேஸ் சம்பந்தமாக் யோசனை கேட்க வேண்டியிருக்கிறதென்றும், அவரைக் கண்டு பேசிவிட்டு உடனே வேங்கைப்பட்டிக்கு வந்து விடுவதாகவும் மகுடபதி செங்கோடனிடம் கூறி, வேங்கைப்பட்டியில் தன் தாயாரைப் பார்த்து அவ்விதம் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டான். மறுநாள் காலையில் செங்கோடன் தன்னுடைய கிராமமான காட்டுப்பாளையத்துக்கும், மகுடபதி கோயமுத்தூருக்கும் கிளம்பினார்கள்.
மகுடபதி கோயமுத்தூருக்குக் கிளம்பிய போதும், அன்று பிற்பகல் அய்யாசாமி முதலியார் வீட்டு வாசலை அடைந்தபோதுங்கூட, தான் இன்னான் என்பதைச் சொல்லிச் செந்திருவைப் பற்றி விசாரிக்கும் எண்ணத்துடன் தான் வந்தான். ஆனால் செவி மந்தமுள்ள முதலியாரின் மனைவி, “தவிசுப்பிள்ளையா?” என்று கேட்டபோது, அம்மாதிரி தவிசுப் பிள்ளையாய் நடித்தால் ஒரு வேளை சீக்கிரத்தில் உண்மை தெரியலாம் என்ற யோசனை மகுடபதிக்கு உண்டாயிற்று. காங்கிரஸ் விடுதிகளில் மகுடபதி சமையல் வேலையும் நன்றாய்க் கற்றுக் கொண்டிருந்தான். ஆ கவே பங்கஜத்தின் தாயாருக்குச் சந்தேகம் தோன்றாதபடி அவனால் சமையல் அறையில் வேலை செய்ய முடிந்தது.
நள்ளிரவில், அய்யாசாமி முதலியார் பங்களாவின் முன்புறத்துக் கொடி வீட்டில் உட்கார்ந்து கொண்டு, மகுடபதி மேற்கூறிய வரலாறுகளைச் சுருக்கமாகப் பங்கஜத்தினிடம் தெரிவித்தான். அவன் சொல்லாவிட்டால் பங்கஜம் விடுகிற வழியாயில்லை. நாவல் பைத்தியம் முற்றியவளான பங்கஜம், நிஜ வாழ்க்கையில் நடக்கும் இவ்வளவு அபூர்வ சம்பவங்களைத் தெரிந்து கொள்ளாமல் விடமுடியுமா? ஆ கவே மகுடபதி எதையாவது விட்டால்கூட, பங்கஜம் நோண்டிக் கேட்டு விஷயங்களைத் தெரிந்து கொண்டாள்.
கடைசியாக மகுடபதி, “இவ்வளவெல்லாம் நான் சிரமப்பட்டதில் என்ன பிரயோஜ னம்? ஒன்றுமில்லை. நாளைக்கே நான் மறுபடியும் பகிரங்கமாக மறியல் செய்து ஜெயிலுக்குப் போய்விடுகிறேன்” என்றான்.
உடனே அவன், “இல்லை, இல்லை, மறியலும் ஆச்சு மண்ணாங்கட்டியுமாச்சு! இந்தக் கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டுபோய் அந்தக் கார்க்கோடக் கவுண்டரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, போலீஸிடம் நேரே போய் ஒப்புக் கொண்டு விடுகிறேன்… ” என்றான்.
“பைத்தியந்தான்!” என்றாள் பங்கஜம்.
“யாரைச் சொல்லுகிறாய்?”
“ஆமாம்; பைத்தியம் உமக்குத்தான்; என் தோழிக்கு இல்லை. “
“அதெப்படிச் சொல்லுகிறாய்? உனக்கு என்னமாய்த் தெரியும்?”
“சொல்லுகிறேன், கேளும் மூன்று வருஷத்துக்கு முன்னால் நானும் செந்திருவும் மயிலாப்பூரில் அடுத்தடுத்த வீட்டில் இருந்தோம். அப்போது நான் ஒரு கதை எழுதினேன். அதில் கதாநாயகி ஒரு துஷ்டனிடம் அகப்பட்டுக் கொண்டு விடுகிறாள். ‘என்னைக் கல்யாணம் செய்து கொள்’ என்று அந்தத் துஷ்டன் வற்புறுத்துகிறான். மனோன்மணி கதாநாயகி மாட்டேன் என்றாள். அவனுடைய பலவந்தத்திலிருந்து அவள் எப்படித் தப்புவது. இதற்கு ஏதாவது யுக்தி கண்டுபிடிப்பதற்கு நான் யோசித்தேன். எவ்வளவோ யோசித்தும் யுக்தி ஒன்றும் தோன்றவில்லை. செந்திருவிடம் கேட்டேன். அவள் உடனே ‘மனோன்மணிக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக வையேன்’ என்றாள். ‘அடி சுட்டி! பேஷான யோசனையடி’ என்றேன். அன்று செந்திரு என் கதைக்குக் கூறிய யுக்தி இப்போது அவளுக்கு நிஜமாகவே உபயோகப் பட்டிருக்கிறது. அதை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் என் சமர்த்துத் தோழி இப்போது பைத்தியம் போல் நடித்திருக்கிறாள்… “
“இதுமட்டும் நிஜமாயிருந்தால்?… ” என்றான் மகுடபதி அளவற்ற ஆவலுடன்.
“சந்தேகமே இல்லை. என் மனது சொல்லுகிறது. என் தோழிக்கு நிஜப் பைத்தியம் இல்லையென்று அப்பா சொல்லும்போதே எனக்கு இது தோன்றிவிட்டது. ஆனால் அவரிடம் சொல்லிப் பிரயோசனமில்லையென்றுதான் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். செந்திருவின் சமர்த்தே சமர்த்து; ஆனானப்பட்ட கார்க்கோடக் கவுண்டரையும், போலீஸ் சூபரிண்டெண்டையும், என் அப்பாவையும் கூடத் தனக்குப் பைத்தியந்தான் என்று நம்பும்படி நடித்திருக்கிறாளே? அந்தக் கெட்டிக்காரியை எப்படியாவது விடுதலை செய்யவேண்டியது நம்முடைய பொறுப்பு” என்றாள் பங்கஜம்.
“உன்னையும் பொறுப்பில் சேர்த்துக் கொண்டதற்காக ரொம்ப சந்தோஷம்” என்றான் மகுடபடி.
“உம்மிடம் ஏதாவது பணம் இருக்கிறதா?” என்று பங்கஜம் கேட்டாள்.
“காலணாக்கூட இல்லை; வேங்கைப்பட்டிக்குப் போய் எடுத்துக்கொள்ள வேண்டும். “
“சற்றுப் பொறும்” என்று சொல்லிவிட்டுப் பங்கஜம் வீட்டுக்குள்ளே சென்றாள். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் திரும்பி வந்து மகுடபதியின் கையில் சில பத்து ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாள்.
உடனே, “இப்போது, கிளம்பும். பொழுது விடிந்து இங்கே இருந்தால், அப்பா பார்த்துவிடுவார். அம்மாவை ஏமாற்றியது போல் அவரை ஏமாற்ற முடியாது. அவர் தெரிந்து கொண்டால் ஏதாவது அனர்த்தமாய் முடிந்தாலும் முடியும். “
“போகிறேன், போய் என்னத்தைச் செய்வது?”
“என்னத்தைச் செய்வதா? போய் மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டுச் சௌக்கியமாய்ப் படுத்துத் தூங்குவது. ஒரு அனாதைப் பெண் எந்தக் கதி யடைந்தால் உமக்கு என்ன?”
“அவளுக்காக என் உயிரைக் கொடுக்கவும் தயாராயிருக்கிறேன். ஆனால் என்ன செய்கிறது என்று தான் தெரியவில்லை. “
“சரி, நான் சொல்லிக் கொடுக்கிறேன். இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு போய்த் தேவகிரி எஸ்டேட்டுக்குப் பக்கத்தில் ஓர் ஊரில் இருந்து கொள்கிறது; எஸ்டேட் பங்களாவிலுள்ள வேலைக்காரர்களை எப்படியாவது சிநேகம் செய்து கொள்கிறது; அவர்கள் மூலமாகச் சொல்லி அனுப்பியோ, கடிதம் அனுப்பியோ, செந்திருவிடமிருந்து ‘எனக்குப் பைத்தியம் இல்லை’ என்று ஒரு கடிதம் மட்டும் எப்படியாவது வாங்கிக் கொண்டு வந்துவிடும். அப்புறம் அவளை மீட்டுக் கொண்டு வருவதற்கு நானாயிற்று” என்றாள் பங்கஜம்.
மகுடபதி அவளுக்கு நன்றியும் வந்தனமும் கூறத் தொடங்கினான். “அதெல்லாம் வேண்டாம்; சீக்கிரம் போம். அப்பாவின் அறையில் ஏதோ சத்தம் கேட்டது. அவர் ஒரு வேளை விழித்துக் கொண்டு வந்துவிட்டால் ஆபத்து!” என்று சொல்லிப் பங்கஜம் விரைவாகப் பங்களாவுக்குள் சென்றாள். அடுத்த நிமிஷம் பங்களாவில் நிசப்தம் குடிகொண்டது.
மகுடபதி, “இதெல்லாம் கனவா? உண்மையில் நமது வாழ்க்கையில் நடப்பதுதானா?” என்ற திகைப்புடன் அங்கிருந்து எழுந்திருந்து வெளியே செல்லத் தொடங்கினான். இந்த அர்த்த ராத்திரியில் எங்கே போவது, என்ன செய்வது என்று யோசிக்கக்கூட அவன் மனம் அப்போது சக்தி இழந்திருந்தது. உணர்வில்லாத இயந்திரம்போல் நடந்து சத்தம் செய்யாமல் காம்பவுண்ட் கேட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். வெளியே வந்து திரும்பியதும், சுவரோரத்தில் அவனுக்கெதிரே தோன்றிய தோற்றத்தைக் கண்டு, அப்படியே வெட வெடத்து நின்றான். அந்தக் கணத்தில் அவனுடைய உடம்பில் ஓடிய இரத்தமெல்லாம் சுண்டி வறண்டுவிட்டது. அப்படி அவனை வெடவெடத்து நடுங்கச் செய்த தோற்றம் அங்கே சுவரோரமாக நின்ற பெரியண்ணனுடைய ஆவி வடிவந்தான்!