Magudapathi Kalki Ch 21 to Ch 27
இருபத்திரண்டாம் அத்தியாயம்
சுவாமி மகானந்தர்
மகுடபதியும் பெரியண்ணனும் மறுநாள் மத்தியானம் கூனூரில் உள்ள சச்சிதானந்த மடத்தை எவ்வித இடையூறுமில்லாமல் போய் அடைந்தார்கள். மடத்தின் தலைவர் சுவாமி மகானந்தர், தலையில் கட்டுடன் படுத்திருப்பதைக் கண்டதும் மகுடபதி திடுக்கிட்டான். அவரிடம் மகுடபதிக்கு விசேஷ பக்தி உண்டு. சுவாமியாருக்கும் மகுடபதியிடம் அதிகப் பிரேமை அவனை அரசியல் தொண்டை விட்டு விட்டுத் தம்முடன் சேர்ந்து பாரமார்த்திகத் தொண்டு செய்ய வரும்படி சுவாமியார் சில சமயம் அழைத்ததுண்டு. மகுடபதி அதற்கு இணங்காமலிருந்ததற்கு முக்கிய காரணம் அவனுடைய இருதய அந்தரங்கத்தில் குடிகொண்டிருந்த செந்திருவின் நினைவுதான் என்று சொல்லலாம். அரசியல் கிளர்ச்சியில் அவனுக்கிருந்த ஆர்வமும் ஒரு காரணந்தான். சமீபத்தில் ஒரு வருஷ காலமாக அவன் கூனூர் மடத்துக்கு வரவேயில்லை. தான் அரசியலில் ஈடுபட்டவனாதலால், மடத்துக்குத் தன் மூலமாய்ப் போலீஸ் தொந்தரவு ஏற்படக்கூடாதென்று அவன் கருதியிருந்தான்.
இப்போது மண்டையில் கட்டுடன் சுவாமியாரைப் பார்த்ததும் அவன் பரபரப்புடன், “சுவாமி! தங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? தங்களிடம் ஒரு உதவி கேட்கலாமென்று எண்ணியல்லவா வந்தேன்?” என்றான்.
“வீணாக ஒருவர் மேல் சந்தேகப்பட்டதால் வந்த விபத்து இது; ஆண்டவனுடைய தண்டனை!” என்றார் சுவாமியார்.
“தாங்களாவது ஒருவர் மேல் வீணாகச் சந்தேகப்படவாவது? ஆண்டவன் தண்டனையாவது? ஒன்றையும் நம்பமுடியவில்லை!” என்றான் மகுடபதி.
“கார்க்கோடக் கவுண்டரைப் பற்றிக் கேட்டிருக்கிறாயோ, இல்லையோ?” என்று சுவாமியார் சொன்னதும், மகுடபதிக்கு எவ்வளவு வியப்பாயிருந்திருக்குமென்று சொல்லவே வேண்டியதில்லை.
“ஆமாம்; அவருக்கு என்ன? சுவாமி! ஒருவேளை… ” என்று மகுடபதி திடுக்கிட்டுக் கேட்டான்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் என்னை அடித்துப் போட்டார் என்று பயப்படுகிறாயா? மனுஷன் செய்யக் கூடியவன் தான். ஆனால் அதற்கு முன்னாலேயே சுவாமி என்னைத் தண்டித்துவிட்டார். “
“என்ன சுவாமி! திருப்பித் திருப்பித் தண்டனை என்கிறீர்களே?”
“சொல்கிறேன். இந்த ஊருக்குக் கொஞ்ச தூரத்தில் கார்க்கோடக் கவுண்டருக்கு ஒரு எஸ்டேட் இருக்கிறது. தேவகிரி என்று பெயர். அங்கே ஒரு பங்களாவும் இருக்கிறது. அந்த பங்களாவைப் பற்றி என்னவெல்லாமோ கெட்ட பெயர் உண்டு. கவுண்டருடைய விரோதிகளை அங்கே கொண்டுவந்து தீர்த்து விடுகிறார் என்று வதந்தி. ஆறு மாதத்துக்கு முன்பு யாரோ ஒரு பணக்காரப் பையனை அங்கே கொண்டு வந்து ஜெயிலிலே வைக்கிறாப்போல் வைத்திருந்து பதினாயிரம் ரூபாய்க்கு நோட்டு எழுதி வைத்துக் கொண்டு தான் விட்டாராம். இன்னும் அங்கே அனாதைப் பெண்களைக் கொண்டு வந்து சிறைப்படுத்தி வைத்து அட்டூழியங்கள் செய்வது பற்றியும் கர்ணகடூரமான விவரங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்… இருக்கட்டும், தம்பி! உன்னைப் பார்த்தால் ஒரு மாதம் பட்டினி கிடந்தவன் மாதிரி இருக்கிறது. ஏன் இப்படி? முதலில் கொஞ்சம் பிரசாதம் எடுத்துக் கொண்டு இளைப்பாருங்கள். அப்புறம்… “
மகுடபதிக்கு உண்மையில் பசியாகத்தானிருந்தது. சச்சிதானந்த மடத்தில் பிரசாதங்கள் பிரம்மானந்தமாயிருக்குமென்றும் அவனுக்குத் தெரியும். ஏனெனில் மகானந்த சுவாமியார் பட்டினி போட்டு உடலை வருத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவரல்ல; நன்றாகச் சாப்பிட்டு, தேகாப்பியாசம் செய்து, திடசரீரம் பெற்றிருந்தால்தான் எந்த விதமான தொண்டும் சரியாகச் செய்யலாம் என்ற கொள்கையுடையவர். ஆ கவே, சாதாரண நிலைமையில் “ஆமாம், முதலில் பிரசாதத்தைக் கவனிக்கலாம். இன்றைக்கு என்ன பிரசாதம்? சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் ஏதாவது உண்டா?” என்று மகுடபதி கேட்டிருப்பான். ஆனால் இப்போது, சுவாமியார் சொல்ல ஆரம்பித்திருந்த விவரம் அவனுக்கு அசாத்தியமான ஆவலை உண்டாக்கியிருந்தது. அதுவும் பெண்களைப் பற்றிய அட்டூழியங்கள் என்று சுவாமியார் குறிப்பிட்டவுடன், மகுடபதியின் உடம்பில் உள்ள இரத்தம் கொதிக்க ஆரம்பித்துத் தேகமெல்லாம் தகதகவென்று எரிந்தது. இந்த நினைவில் அவனுடைய மனம் பிரசாதத்தில் செல்ல முடியாதல்லவா?
“சுவாமி! பிரசாதமெல்லாம் இருக்கட்டும். எங்களுக்குப் பசியேயில்லை. ஆரம்பித்த விஷயத்தைச் சொல்லுங்கள்” என்றான்.
அதன்மேல் சுவாமியார் சொன்னதாவது:
“தேவகிரியை அடுத்துள்ள கிராமத்தில் தினம் சாயங்கால வேளையில் வயதானவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தி வருகிறேன். ஒரு மாதமாக நடக்கிறது. அந்தக் கிராமத்துக்குக் குறுக்கு வழி, தேவகிரி பங்களாவின் ஓரமாகப் போகிறது. தினமும் அந்த வழியாக ஒரு மாதமாய் நான் போய்க் கொண்டு வருகிறேன். பங்களாவுக்குச் சமீபமாய் நான் போகும் போதெல்லாம் அதைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கும் விஷயங்கள் என் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. ஏழெட்டுத் தினங்களுக்கு முன்னால் ஒரு நாள் அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் பரிதாபமான அழுகுரலைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன். ஆனாலும் நமக்கேன் இந்தத் தொல்லை என்று எண்ணியவனாய் மடத்துக்குத் திரும்பி வந்துவிட்டேன். ஆனால் அன்று இராத்திரியெல்லாம், அந்தப் பெண்ணின் தீனமான அழுகுரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது; மனதை வேதனை செய்து கொண்டே இருந்தது. இம்மாதிரி விவகாரங்களில் தலையிட்டால் நான் இங்கே எடுத்துக்கொண்டிருக்கும் தொண்டுகள் எல்லாம் தடைப்பட்டு விடுமென்பதை நினைத்தும், ‘பரதர்மோ பயாநக!’ என்ற பகவத்கீதை வாக்கியத்தை நினைத்தும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, என் வேலைகளில் கவனம் செலுத்தினேன். மறுநாள் அந்தப் பக்கம் போனபோது, என்னையறியாமலே, அழுகுரல் இன்றைக்கும் கேட்கிறதா என்று செவிகள் கூர்மையாகக் கவனித்தன. ஒன்றும் கேட்கவில்லை. மனம் சற்று நிம்மதியடைந்தது.
இரண்டு நாளைக்குப் பிறகு, பங்களாவின் முன் தோட்டத்தில் ஒரு பெண் உலாவிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். மறுபடியும் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. இவள் இங்கே இஷ்டப்பட்டு வந்திருக்கிறாளா, பலாத்காரமாகக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்களோ, என்ன நோக்கத்துடன் சிறைப்படுத்தியிருக்கிறார்கள், முதல் நாள் ஏன் இவள் அழுதாள் என்றெல்லாம் மனதிற்குள் கேள்விகள் எழுந்து கொண்டேயிருந்தான். இதையெல்லாம் யாரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது? கார்க்கோடக் கவுண்டர் அங்கே இல்லை. இருந்தாலும் அவரை எனக்கு முன்பின் தெரியாது. ரொம்பப் பொல்லாத மனுஷன் அக்கிரமக்காரன் என்று கேள்விப்பட்டிருந்ததுதான்! மற்றபடி, பங்களாத் தோட்டக்காரன் ஒருவன் காணப்பட்டான். அவனைப் பார்க்கவே பயங்கரமாயிருந்தது. யமகிங்கரனைப் போல் இருந்தான். அவனிடம் எப்படி என்ன கேட்பது? கேட்டால், நிச்சயமாக அவன் சண்டைக்கு வருவானே தவிர, சரியான பதில் சொல்லப்போவதில்லை…
இப்படியே இன்னும் இரண்டு நாள் போயிற்று. முந்தாநாள் நான் அந்தப் பக்கமாகப் போன போது பங்களாவுக்குள்ளிருந்து வந்த அலறுங் குரல் மயிர்க்கூச்செறியச் செய்தது. “ஐயோ! பாவி! சண்டாளா! பழிவாங்குகிறேன், பார்!” என்று இப்படியென்னவெல்லாமோ பயங்கரக் கூக்குரல் அழுகையுடன் கலந்து கலந்து வந்தது. இதற்குப் பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. பங்களாத் தோட்டத்தின் வாசல் கேட்டுக்கு அருகில் சென்று தோட்டக்காரனைச் சமிக்ஞை செய்து கூப்பிட்டேன். நான் எதிர்பார்த்தது போலவே அவன் கண்ணில் தீப்பொறி பறக்க வந்தான். ‘என்ன?’ என்று வள்ளென்று விழுந்தான். ‘ஏனப்பா இப்படிக் கோபிக்கறே? யாரோ ஒரு பெண் அலறுதே, என்ன சமாசாரமென்று கேட்கத்தான் வந்தேன். வைத்தியர் கியித்தியர் வேணுமானால் அனுப்புகிறேன்’ என்றேன். தோட்டக்காரனும், சற்று சாந்தமடைந்து, ‘இதெல்லாம் உங்களுக்கு என்னாத்துக்கு, சாமி! உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க சாமி! அப்படி ஏதாவது கேட்க வேண்டுமானா நாளைக்கிக் கவுண்டர் வராரு. அவரை வந்து கேட்டுக்குங்க!’ என்றான். அவனிடம் மேலே பேசுவதில் பயனில்லை என்று என் வழியே போய்விட்டேன். மறுபடியும் அன்றிரவெல்லாம் என் மனம் அமைதி இல்லாமல் தவித்தது.
அடுத்த நாள் பிற்பகலில் நான் மடத்திலிருந்து கிராமத்துக்குக் கிளம்பிக் கொஞ்ச தூரம் போனதும் ஒரு பெரிய மோட்டார் எதிரே வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அதில் நாலைந்து பேர் பெரிய மனுஷர்கள் இருப்பது தெரிந்தது. என்னருகில் வந்து மெதுவாக நின்றபோது பெரும் வியப்பு உண்டாயிற்று. வண்டி ஓட்டியின் ஸ்தானத்தில் இருந்தவர் என்னைப் பார்த்து, ‘சுவாமி! சௌக்கியமா?’ என்று கேட்டார். அவர்தான் கார்க்கோடக் கவுண்டர் என்று என் மனதுக்குத் தெரிந்துவிட்டது. எந்தவிதமான் கொலை பாதகத்துக்கும் அஞ்சாத மனுஷன் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. மனதில் தோன்றிய வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல் ‘சௌக்கியந்தான்’ என்றேன். ‘பங்களாவில் இருக்கும் குழந்தையைப் பற்றி விசாரித்தீர்களாம்’ என்றார் கவுண்டர். அப்போது அவருடைய முகத்தில் விஷம் கக்கிய புன்னகை தாண்டவமாடியது.
ஏதோ சண்டைக்குத்தான் ஆரம்பிக்கிறார் என்ற எண்ணத்துடன், நானும் குரலைக் கடுமைப் படுத்திக் கொண்டு, ‘ஆமாம், விசாரித்தேன்’ என்றேன். ‘ரொம்ப சந்தோஷம், சாமி! தங்களைப் போன்ற பரோபகாரிகள் மகான்கள் இருப்பதனால்தான் இந்த நீலகிரி மலையிலே மழை பெய்கிறது. இல்லாவிட்டால் பெய்யுமா? பங்களாவிலே இருக்கிற பெண் குழந்தைக்குச் சித்தப் பிரமையாயிருக்கிறது ஆறு மாதமாய் இப்போது ரொம்பக் கடுமை. குத்து, வெட்டு என்கிற நிலைமைக்கு வந்திருக்கிறது. இவர்கள் யார் தெரியுமோ, இல்லையோ? டிபுடி சூபரிண்டெண்டு சங்கநாதம் பிள்ளைவாள்; ஸப் ஜட்ஜ் அய்யாசாமி முதலியார்வாள்; இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு வந்து காட்டினேன். பட்டணம் ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்கோ, இல்லாவிட்டால் குற்றாலத்துக்கு அனுப்புங்கோ என்கிறார்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது, சுவாமி? அல்லது ஏதாவது மந்திரம், தந்திரம் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?’ என்று கேட்டார். கடைசியில் கேட்டது கிருதக்காகச் சொன்ன வார்த்தை என்று தெரிந்துவிட்டது. பைத்திய சிகிச்சையில் எனக்கு அவ்வளவாக அனுபோகமில்லை; மன்னிக்கவேண்டும்’ என்று சொல்லிவிட்டு நடந்தேன். மோட்டாரும் கிளம்பிச் சென்றது.
பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது என் மனம் சரியான நிலைமையில் இல்லை. நாலு பேர் முன்னிலையில் அவமானப்பட்டதனால் ஆத்திரமாயிருந்தது. அந்த மனுஷன் சொன்னது முழு நிஜம் இல்லை. ஏதோ பித்தலாட்டம் இருக்கிறது என்று தோன்றியது. அவர் சொன்னதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும் என்றும், பாவம் யாரோ ஓர் ஏழைப் பெண்ணை இங்கே கொண்டு வந்து கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு, பைத்தியம் என்று சொல்லி உலகத்தை ஏமாற்றப் போகிறார் என்றும் நினைத்தேன். இதெல்லாம் எவ்வளவு அநியாயமான எண்ணங்கள் என்பதையும், கார்க்கோடக் கவுண்டருக்கு நான் எவ்வளவு அநீதி செய்து விட்டேனென்பதையும் நினைக்கும் போது ரொம்பவும் வருத்தமாயிருக்கிறது. அவரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலொழிய என் மனம் சாந்தி அடையாது… “
இதுவரையில் மிக்க ஆவலுடன் மவுனமாய்க் கேட்டு வந்த மகுடபதி இங்கே குறுக்கிட்டு, “ஐயோ! என்ன வார்த்தை சொல்கிறீர்கள்? கள்ளிப்பட்டிக் கவுண்டரிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதா? எதற்காக? நீங்கள் நினைத்தது தான், சுவாமி உண்மை! அந்தக் கொலை பாதகக் கள்ளுக்கடைக் கண்டிராக்டர்.. ” என்று உரத்த குரலில் பேசத் தொடங்கினான்.
“பொறு, தம்பி! பொறு! பாக்கிக் கதையையும் கேட்டு விட்டல்லவா பேச வேண்டும்? கார்க்கோடக் கவுண்டர் எவ்வளவோ பொல்லாத மனுஷராயிருக்கலாம். எத்தனையோ கொலை பாதகங்களைச் செய்திருக்கலாம். ஆனால், இந்த விஷய்த்தில் அவர் கூறியது உண்மை என்று அரைமணி நேரத்துக்குள் தெரிந்து போயிற்று. மேற்படி பங்களாவை நான் நெருங்கிய போது, அந்தப் பெண் தோட்டத்தில் உலாவிக் கொண்டு நிற்பதைக் கண்டேன். வேலைக்காரனைக் காணவில்லை. கேட்டண்டை போய் அவளைக் கூப்பிட்டுப் பேசி, உண்மையை அறிந்து கொண்டாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. பங்களா தோட்டத்தின் ஓரமாய்க் கீழே போகும் பாதையில் போய்க் கொண்டிருந்த போது, தற்செயலாய் மேலே பார்த்தேன். வேலி ஓரத்தில் சேலைத் தலைப்புத் தெரிந்தது. எதற்காக வேலி ஓரமாய் வந்து நின்றாள் என்று நான் எண்ணி முடிவதற்குள், என் பின்னோடு வந்த பையன் ‘சாமி! சாமி!’ என்று கத்தினான். அதே சமயத்தில் தலையில் ஒரு கல் விழுந்தது. விழுந்த அதிர்ச்சியில் கண் இருண்டு மயக்கமாய் வந்தது. கீழே உட்கார்ந்து விட்டேன். இரத்தம் பெருகி வழிந்து துணியையெல்லாம் நனைத்தது. அப்போதே கபாலம் திறந்து மோட்சமடையாமல் இன்னும் இந்த உடலில் உயிர் இருப்பது கடவுளுடைய செயல் தான். பாவம் அந்தப் பெண்ணுக்குப் பைத்தியந்தான் என்பது நிச்சயமாயிற்று. கவுண்டரைச் சந்தேகித்ததற்குத் தண்டனை கிடைத்தது!”
மகுடபதியின் ஆ காசக் கோட்டையெல்லாம் இவ்விதம் சிதைந்து போயிற்று. தொண்டை அடைக்க, நாத் தழுதழுக்க, அவன் “சுவாமி! உங்கள் மேல் வேண்டுமென்று அந்தப் பெண் கல்லை எறிந்தாளென்றா சொல்கிறீர்கள்? என்னத்திற்காக?” என்றான்.
“பைத்தியக்காரர்களின் செயலுக்குக் காரணம் இருக்குமோ? என் பின்னோடு ‘லைட்’ எடுத்துக் கொண்டு வந்த பையன், மேலே அண்ணாந்து பார்த்துக் கொண்டே வந்தானாம்! கல்லைக் குறி பார்த்து என் தலைக்கு நேரே எறிவதைக் கண்ணால் கண்டதாகச் சொல்கிறான். அவன் இப்போது கிராமத்துக்குப் போயிருக்கிறான். நேற்றுக் கிராமத்துக்குப் போகாமலே மடத்துக்குத் திரும்பிவிட்டேன். தலைக் காயம் குணமாகும் வரையில் ஒரு வாரத்துக்குப் பள்ளிக்கூடம் கிடையாது என்று சொல்லிவிட்டு வரும்படி அவனை அனுப்பியிருக்கிறேன்… அதோ அவனே வந்து விட்டான் போலிருக்கிறதே?” என்றார். ஒரு சிறு பையன் மடத்து வாசற்படியண்டை வந்து கொண்டிருந்தான்.
“ஏண்டா, கிருஷ்ணா! அதற்குள்ளே எப்படித் திரும்பினாய்?” என்று சுவாமியார் சிறிது வியப்புடனே கேட்டார்.
“நான் கிராமத்துக்குப் போகவில்லை, சாமி! வழியிலேயே திரும்பிவிட்டேன்” என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணன் சாமியார் அருகில் வந்து, சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தான்.
“சாமி! எஸ்டேட் பங்களாவுக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு செடியில் வெள்ளையாய்த் தெரிந்தது. கிட்டப் போய் பார்த்தேன். இந்தக் கடிதம் கிடந்தது. வாசித்துப் பார்த்ததும் முக்கியமான விஷயம் என்று எண்ணி, கிராமத்துக்குப் போகாமலே திரும்பிவிட்டேன்” என்று சொல்லிக் கடிதத்தையும் சுவாமியார் கையில் கொடுத்தான்.
சுவாமியார் கடிதத்தைப் படித்த போது, அளவுகடந்த ஆச்சரியத்தினால் அவருடைய புருவங்கள் நெரிந்து உயர்ந்தன.