Magudapathi Kalki Ch 21 to Ch 27
இருபத்தி நான்காம் அத்தியாயம்
“அண்ணா வந்தார்!”
அன்று காலையில் செந்திரு அளவில்லாத துயரத்தில் ஆழ்ந்தவளாய் உள்ளமும் உடலும் குன்றி உட்கார்ந்திருந்தாள். “இந்த உலகில் ஏன் பிறந்தேன் நான்” என்பதாக அவள் கேட்டிருந்த ஒரு பாட்டின் அடி திரும்பத் திரும்ப அவளுடைய ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது. நாலு வருஷத்துக்கு முன்பு வரையில் அவளுடைய வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்தது என்பதையும், திடீரென்று எப்படித் துன்ப மயமாக மாறிவிட்டதென்பதையும் நினைத்து நினைத்துப் பொருமினாள். “கடவுள் எதற்காக எனக்கு இவ்வளவு கஷ்டத்தையும் கொடுத்தார்? நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்?” என்று அடிக்கடி எண்ணினாள். இவ்வளவு சொந்தத் துயரங்களுக்கிடையேதான் கடிதத்துடன் கட்டிப் போட்ட கல் சுவாமியாரின் தலையில் விழுந்து காயப்படுத்திய விபரீதத்தை நினைத்து நினைத்து வேதனையடைந்தாள். சுவாமியாருக்குப் பெரிய காயம் ஏற்பட்டிருக்குமோ? ஒரு வேளை சாபம் கொடுத்து விடுவாரோ? ஐயோ! தான் ஏற்கெனவே படும் கஷ்டம் எல்லாம் போதாதா? என்ன பைத்தியக்காரத்தனம்? பைத்தியம் மாதிரி நான் நடித்ததல்லவா உண்மையில் பைத்தியக்காரத்தனமாய்ப் போய்விட்டது? இனிமேல் இந்தப் பைத்திய வேஷம் வேண்டாம் என்று அவள் முடிவாகத் தீர்மானித்துக் கொண்டாள். அடுத்த தடவை சித்தப்பா வரும்போது அவரைக் கேட்டுப் பார்க்க வேண்டியது தனக்கு விடுதலை யளிக்கும்படி; அதற்கு அவர் சம்மதிக்காவிட்டால் உயிரை விட்டு விடுவதுதான் சரி. நல்ல வேளையாக இந்த மலைப் பிராந்தியத்தில் உயிரை விடுவது அவ்வளவு கஷ்டமான காரியமல்ல. கிராதி மேல் ஏறி கீழே குதித்தாலும் தீர்ந்தது. இப்படி எண்ணிய போதெல்லாம் காலஞ்சென்ற தந்தையின் நினைவும் அவளுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. “அப்பா! நீ எங்கேயாவது இருக்கிறாயா? உன் அருமை மகள் படும் கஷ்டங்களெல்லாம் உனக்குத் தெரியுமா? இந்தப் பாவிகள் செய்யும் கொடுமைகளையெல்லாம் நீ பார்த்துக் கொண்டு தானிருக்கிறாயா?” என்று அவளுடைய மனம் கதறிற்று.
ஒரு தடவை இன்னொரு எண்ணமும் அவளுக்குத் தோன்றியது: “இந்தக் கஷ்டங்கள் எல்லாம் நாமாக விலைக்கு வாங்கிக் கொண்டதுதானே? எத்தனையோ பெண்கள் வயதானவர்களைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா? கள்ளிப்பட்டிக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தால் இதே பங்களாவில் கைதியாக இருப்பதற்குப் பதிலாக எஜமானியாக இருக்கலாமல்லவா?” என்று நினைத்தாள். அவளுக்குத் தெரிந்த குடும்பங்களுக்குள்ளே வயதானவர்களை கள்ளிப்பட்டிக் கவுண்டரைவிடக் கிழவர்களை கல்யாணம் செய்து கொண்டவர்களின் ஞாபகமெல்லாம் அவளுக்கு வந்தது. ஆனால், அதே சமயத்தில், மூன்று வருஷத்துக்கு முன் ஒரு நாள் ஓடைக் கரையில் நடந்த சம்பவமும் அவளுடைய நினைவுக்கு வந்தது. மூர்ச்சை யடைந்தது போல் தான் பாசாங்கு செய்ததும், காந்திக் குல்லா அணிந்த அந்த வாலிபன் ஜலம் கொண்டு வந்து தன் முகத்தில் தெளித்ததும், மூக்கின் அருகில் கையை வைத்து மூச்சு இருக்கிறதா என்று பார்த்ததும், தான் எழுந்து உட்கார்ந்து கலகல வென்று சிரித்ததும், நேற்றுத்தான் நடந்தது போல் அவள் மனதில் தோன்றி, தேகம் சிலிர்க்கச் செய்தது. பின்னர், அந்தக் கோயமுத்தூர் வீட்டில் அன்றிரவு தன்னைச் சித்தப்பா பிரம்பினால் அடித்தபோது, மகுடபதி கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்து தடுத்ததும், அவனைக் கவுண்டர்கள் கட்டிப் போட்டதும், சோபாவின் காலில் கட்டிப் போட்டிருந்தபோது அவ்வாலிபனுடைய முகத்தில் தோன்றிய தீரமும், தன்னை அடிக்கடி ‘பயப்படாதே!’ என்று சொல்கிறவன் போல் பார்த்ததும் இவையெல்லாம் அவள் மனக்கண்ணின் முன் மீண்டும் தோன்றின. தான் மணம் செய்துகொள்வதாயிருந்தால் மகுடபதியை மணம் செய்துகொண்டு வாழ்வது, இல்லாவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்று உறுதி செய்து கொண்டாள்.
இப்படிப் பலவிதச் சிந்தனைகளில் அவள் ஆழ்ந்திருந்த சமயத்தில் வாசலில் கார் வரும் சத்தம் கேட்டது. ஜ ன்னல் வழியாகப் பார்த்த போது, கள்ளிப்பட்டிக் கார்தான் என்று தெரிந்து கொண்டாள். உடனே, அவள் அலமாரிக்குச் சென்று, கறிகாய் நறுக்குவதற்காக உபயோகிக்கப்பட்ட ஒரு சிறு கத்தியைத் தேடி எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, கவுண்டர்களைச் சந்திப்பதற்கு ஆயத்தமானாள். அவளுடைய அறைக்கு வெளியே காலடிச்சத்தம் கேட்ட போது, ஒரு கையை இடுப்பில் கத்திப் பிடியின் மேல் வைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
உள்ளே தங்கசாமிக் கவுண்டர் மட்டுந்தான் வந்தார். சாவதானமான குரலில் “செந்திரு! உடம்பு எப்படியிருக்கிறது?” என்று கேட்டுக் கொண்டே வந்தவர், செந்திரு ஆவேசங் கொண்டவள் போல் நிற்பதைப் பார்த்துச் சிறிது திடுக்கிட்டார்.
“எனக்கு உடம்பு ஒன்றுமில்லை” என்றாள் செந்திரு.
“ரொம்ப நல்லது; அப்படியானால் உட்கார். ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறாய்? உன்னை யார் என்ன செய்கிறார்கள்?” என்றார்.
கவுண்டர் நாற்காலியிலும், செந்திரு அவளுடைய கட்டிலிலும் உட்கார்ந்தார்கள்.
“அநாவசியமாகப் பதட்டப்பட்டுத்தானே அந்த சுவாமியாரின் மொட்டை மண்டையில் கல்லைப் போட்டாய்? பாவம்! சாகக் கிடக்கிறார்!” என்றார்.
“ஐயோ?” என்று அலறினாள் செந்திரு.
“பிழைத்தால் புனர்ஜ ன்மந்தான். செத்துப் போனால் உன் மேல் கேஸ் வந்தாலும் வரும். நீ பைத்தியம் என்று வேஷம் போட்டது போக, நிஜமாகவே உனக்குப் பைத்தியம் என்று ருசுச் செய்யும்படி வரலாம்” என்றார்.
செந்திரு திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள். விஷயம் அவளுக்கு நன்றாக விளங்கக் கூட இல்லை. சுவாமியார் சாகக் கிடக்கிறார் தான் எறிந்த கல்லினால் என்பது மட்டுந்தான் மனதில் நின்றது.
“குழந்தை! இதையெல்லாம் நீயாகவே பண்ணிக் கொண்டாய் என்பதை நினைத்தால் ரொம்ப வருத்தமாகயிருக்கிறது” என்றார் தங்கசாமிக் கவுண்டர்.
“சித்தப்பா! சத்தியமாகச் சொல்லுங்கள். இதெல்லாம் நானாகச் செய்துகொண்டதா? இந்தக் கதிக்கு என்னைக் கொண்டு வந்தது நீங்கள் இல்லையா?” என்று செந்திரு கதறினாள்.
“இருக்கலாம், அம்மா! என் பேரிலும் கொஞ்சம் தப்புத்தான். ஒப்புக் கொள்கிறேன். கள்ளிப்பட்டிக் கவுண்டரின் அந்தஸ்தை உத்தேசித்து உன்னை அவருக்குக் கட்டிக் கொடுக்க எண்ணினேன். அந்த மனுஷருக்கும் ஆண் குழந்தை இல்லையே, உன் வயிற்றில் ஒரு ஆண் குழந்தை பிறந்தாள் அவ்வளவு சொத்தும் வருமே என்ற ஆசைப் பட்டேன். ஆனால், உனக்கு இஷ்டமில்லை என்றால் அதைச் சொன்னால் போதாதா? சொல்லாமல் கொள்ளாமல், ஊரை விட்டு ஓடி வரலாமா? அதுவும் நான் இல்லாத சமயத்தில்! இதனால் நம்மெல்லோருக்குமே எவ்வளவு அவமானம் பார்! உன்னுடைய இஷ்டமில்லாமல் பலவந்தப்படுத்திக் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவோமா? இதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்கக் கூடிய காரியமா?… படித்த பெண்ணாகிய உனக்கு இது தெரியாமல் போய் விட்டதே!… ஆனால், உன் பேரில் தவறு இல்லை. ‘கரைக்கிறவர்கள் கரைத்தால் கல்லுங்கரையும்’ என்பதுபோல், யாருடைய துர்ப்போதனையையோ கேட்டு நீ இந்த மாதிரி செய்து விட்டாய்…!”
கவுண்டர் இவ்வாறு பேசி வந்தபோது முதலிலெல்லாம் செந்திருவுக்குத் தன் பேரிலே தான் ஒருவேளை பிசகோ என்று தோன்றியது. ஆனால், கடைசியில் ‘துர்ப்போதனை’ என்றதும், அவர் மகுடபதியைத்தான் குறிப்பிடுகிறார் என்று அறிந்து கொண்டாள். அடங்கியிருந்த கோபமெல்லாம் பொங்கியது. “நான் யாருடைய துர்ப்போதனையையும் கேட்கவில்லை. அப்படிச் சொன்னால் பாவம். நீங்கள் தான்… ” என்று ஆரம்பித்தாள்.
கவுண்டர் குறுக்கிட்டு, “போனதைப் பற்றி இனிமேல் என்ன செந்திரு! இரண்டு பேரும் அதையெல்லாம் மறந்துவிடுவோம். நேற்று இரவு கனவில் அண்ணன் வந்தார். ‘உன்னை நம்பி என் குழந்தையை ஒப்புவித்தேனே! எங்கேயடா என் குழந்தை?’ என்று கேட்பது போலிருந்தது. தூக்கத்தில் ஓவென்று அழுதுவிட்டேன். எல்லோரும் என்ன என்று கேட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள்… ” என்று சொல்லி, வேறு பக்கம் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
செந்திருவுக்கு மனம் இளகி விட்டது. அவளும் சேலைத் தலைப்பினால் முகத்தை மூடிக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
தங்கசாமிக் கவுண்டர் அவளுடைய தலை மீது தடவிக் கொடுத்து, “வேண்டாம் அம்மா! போனதெல்லாம் போகட்டும். என் அண்ணனுக்கு நான் கொடுத்த வாக்கைக் கட்டாயம் நிறைவேற்றுவேன். நீ ஊருக்கே திரும்பி வந்து விடு. கல்யாணத்தைப் பற்றி உன்னை இனிமேல் வற்புறுத்த மாட்டேன். நீ மேஜர் ஆவதற்கு இன்னும் ஒன்றரை வருஷம் தான் இருக்கிறது. அதுவரையில் பொறுத்திரு. அப்புறம் உன் இஷ்டம் போல் செய். இப்போது கிளம்பு, போகலாம்” என்றார்.
மறுபடியும் ஏதாவது சூழ்ச்சி செய்கிறார்களோ என்று ஒரு நிமிஷம் செந்திருவுக்குச் சந்தேகம் தோன்றிற்று. ஆனாலும் இந்த மலைச் சிறையில் இருப்பதைக் காட்டிலும், ஊருக்குப் போனாலும் பாதகமில்லை என்று கருதினாள். எனவே சித்தப்பாவுடன் புறப்படச் சம்மதித்தாள்.
பங்களாவின் வாசலுக்கு வந்த போது, அங்கே கள்ளிப்பட்டிக் கவுண்டரைக் கண்டதும் அவளுக்கு நெஞ்சு திடுக்கிட்டது. ஆனால், கள்ளிப்பட்டிக் கவுண்டர் அவர்களைத் தொடர்ந்து வந்த காரில் ஏறவில்லை. இது அவளுக்குத் தைரியத்தை உண்டாக்கிற்று. அவர் இல்லாமலே கார் கிளம்பிய போது அவளுக்கு உற்சாகமே உண்டாகிவிட்டது. “இவர்களுக்குள் ஏதோ சண்டை போலிருக்கிறது; ரொம்ப நல்ல காரியம். அந்தப் பாவியின் சிநேகம் இல்லாவிட்டால் சித்தப்பா நல்லவராகவே ஆ கிவிடுவார்” என்று நினைத்தாள்.
கார் போன பிறகு, கள்ளிப்பட்டிக் கவுண்டர் நடையில் வாசற்படியுள்ள முன் அறையில் போய் உட்கார்ந்து கொண்டார். அங்கிருந்து ஜ ன்னல் வழியாகப் பார்த்தார். அந்தப் பங்களாவுக்கு வரும் பாதை நன்றாகத் தெரிந்தது. அடிக்கடி அந்தப் பாதையைக் கவுண்டர் ஆவலுடன் உற்று நோக்கிய வண்ணமிருந்தார். வலையை விரித்து விட்டு, பட்சி எப்போது வந்து சிக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேடனுடைய முகபாவம் கவுண்டரின் முகத்தில் அப்போது தோன்றிற்று. சாப்பாடு, சிற்றுண்டி முதலியவையும் அந்த அறையிலேயே நடந்தது. மேஜை டிராயரிலிருந்து அடிக்கடி கைத்துப்பாக்கியை எடுப்பதும், அதன் விசையில் விரலை வைப்பதும், மறுபடியும் மேஜைக்குள் வைத்து மூடுவதுமாக இருந்தார். தோட்டக்காரனையும் அடிக்கடி கூப்பிட்டு, பாதையைப் பார்த்துக் கொண்டிருக்கும்படியும், யாராவது வருவது தெரிந்தால் உடனே தெரிவிக்கும்படியும் கட்டளையிட்டார். நேரம் ஆ க ஆ க, அவருடைய பொறுமை குறைந்து வந்தது. அறையில் அங்குமிங்கும் வேகமாக உலாவினார். கடைசியில், தூரத்தில் மகுடபதி வருவது தெரிந்ததும், அவருடைய முகத்திலும் கண்களிலும் பயங்கரமான குரோதத்தின் விகாரம் தோன்றியதுடன், உற்சாகத்தின் அறிகுறியும் காணப்பட்டது. வேலைக்காரனை மறுபடியும் கூப்பிட்டு வருகிற ஆளை உள்ளே விட்டு வெளிக் கதவை சாத்தி விடும்படிக் கட்டளையிட்டார். பிறகு கைத்துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டு மேஜைக்கு முன்புறமாக வந்து நின்றார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் சென்ற அத்தியாயத்தில் இறுதியில் கூறியபடி, மகுடபதி உள்ளே நுழைந்தான். “வா அப்பா, வா! உனக்காகத்தான் காத்திருக்கிறேன்!” என்று அவனை வரவேற்றார் கவுண்டர்.
மகுடபதி சொல்ல முடியாத ஏமாற்றத்துடனும் பயங்கரத்துடனும் கார்க்கோடக் கவுண்டரையும் அவர் கையிலிருந்த துப்பாக்கியையும் மாறி மாறிப் பார்த்தான். இதைக் கவனித்த கவுண்டர், “ஓகோ! இங்கே என்னை எதிர்பார்க்கவில்லையாக்கும். வேறு யாரையோ எதிர்பார்த்தாயாக்கும்! பாதகமில்லை வா! முன் இரண்டு தடவை என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டாய்; இந்தத் தடவை தப்பிக்க முடியாது!” என்றார்.