BooksKalki TimesStory

Magudapathi Kalki Ch 21 to Ch 27

இருபத்தைந்தாம் அத்தியாயம்
“கவுண்டா! சுடாதே!”

கார்க்கோடக் கவுண்டர் “இந்தத் தடவை தப்பிக்க முடியாது” என்று சொன்னபோது மகுடபதி அதனுடைய உண்மையைப் பூரணமாக உணர்ந்தான். ஒரு நிமிஷ நேரத்துக்குள் அவன் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன. ஆ கா! கடைசியில் இதுதானா முடிவு? இந்தக் கொலைகாரன் கையினால் சாவதற்குத்தானா இவ்வளவு பிரயாசமும்! சாமியாரின் பேச்சைத் தட்டி விட்டு வந்தேனே?… பெரியண்ணன் எப்படித் தவிப்பான்?… ஐயோ! செந்திரு… அவள் கதி என்ன? அடுத்த ஜ ன்மத்திலாவது அவளை அடைவோமா?

“என்னடா திருட்டு முழி முழிக்கிறாய்? இங்கே எதற்காக வந்தாய்? இது உன் அப்பன் வீடா… ” என்ற கவுண்டரின் கடுமையான குரலைக் கேட்ட மகுடபதி சுய நினைவை அடைந்தான். “உன் அப்பன் வீடா?” என்ற கேள்வி அவனுக்கு என்னவெல்லாமோ ஞாபகங்களை உண்டாக்கிற்று. தான் தாய் தந்தையில்லாத அனாதை என்பதும், திருவிழாக் கூட்டத்தில் கிடந்து அகப்பட்டவனென்பதும் நினைவுக்கு வந்தது. வளர்ப்புப் பெற்றோர்களில் தகப்பனார் காலமாகி விட்டார். தாயார் மட்டுந்தான் வேங்கைப்பட்டிக் கிராமத்தில் ஓர் இடிந்த வீட்டில் இருக்கிறாள். ஐயோ! தன்னை எத்தனையோ அன்பாய் வளர்த்த அந்த அம்மாள் இவ்விதம் தான் செத்ததை அறிந்தால் எவ்வளவு துக்கப்படுவாள்?

ஏற்கெனவே பலவிதத் துயரங்களினாலும் ஏமாற்றங்களினாலும் இளகியிருந்த மகுடபதியின் உள்ளம் இந்த நினைவினால் ரொம்பவும் உருகிவிட்டது. அவன் கண்களில் குபீரென்று நீர் ததும்பியது.

“அடே கோழை! அழுகிறாயா? உன் வீர தீரமெல்லாம் இவ்வளவுதானா? மீட்டிங்குகளிலே பிரமாதமய்ப் பேசினதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சுத்தானோ? கள்ளை ஒழிப்பதற்காக ‘உயிரைக் கொடுப்பேன்’ என்றெல்லாம் வீராப்புப் பேசினாயே? இப்போது பெண்பிள்ளை மாதிரி அழுகிறாயே?’ என்றார் கவுண்டர்.

மகுடபதியின் உள்ளத்தில் அமுங்கிக் கிடந்த கோபமெல்லாம் பொங்கி எழுந்தது.

“பாவி! துரோகி…!” என்று ஆரம்பித்தான். ஆனால் ஆத்திரமிகுதியினாலே ஒன்றும் பேச முடியவில்லை.

“அவ்வளவுதானா!” என்று கவுண்டர் கூறிப் பயங்கரமாய்ச் சிரித்தார்.

“கொலைகாரா!… ” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“அப்புறம்?”

“அப்புறம் நீ நரகத்துக்குப் போவாய். உன்னோடு பேச எனக்கு இஷ்டமில்லை. உன் எதிரில் நிற்பதே பாவம். துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஏன் நிற்கிறாய்? குண்டு இருக்கிறதா? வெறும் ஓட்டைத் துப்பாக்கியா?” என்றான் மகுடபதி.

“செத்துப் போவதற்கு அவ்வளவு அவசரமா?” என்றார் கவுண்டர்.

“அவசரந்தான். உன்னைப் போன்ற பாவிகள் உலகத்தில் இருக்கிறதை விட இறந்து போவது மேல்… “

“அப்படியானால், உயிரோடிருக்கவே உனக்கு இஷ்டமில்லையா?”

இதைக் கேட்டதும் மகுடபதிக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. ஒரு வேளைக் கார்க்கோடக் கவுண்டரின் மனது கூட இளகிவிட்டதோ? தன்னைக் கொல்வதற்கு அவருக்கு மனம் வரவில்லையோ? இல்லாவிட்டால் இத்தனை நேரம் ஏன் தயங்கிக் கொண்டு நிற்கிறார்? அவருடைய மனது உண்மையில் இளகியிருக்கும் பட்சத்தில் இந்தச் சமயத்தில் கொஞ்சம் போதனை செய்து அவருடைய மனதைத் திருப்ப முயல்வதே மேல் அல்லவா? மகாத்மா, அவருடைய அஹிம்சா தர்மம், அன்பு மதம் எல்லாம் மகுடபதியின் மனதில் தோன்றின. “பகைவனுக்கருள்வாய்” என்னும் பாரதியார் பாட்டின் வரிகளையும் நினைவு படுத்திக் கொண்டான். தன்னுடைய துவேஷம், கோபம், எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, முகத்தில் மலர்ச்சியை வருவித்துக் கொண்டு கவுண்டரைப் பார்த்துச் சொன்னான்:

“அப்படியொன்றும் நான் வாழ்வை வெறுத்து விடவில்லை. இந்த உலகத்தில் ஜீவித்திருக்கத்தான் விரும்புகிறேன். தேசத்துக்காக இன்னும் எவ்வளவோ தொண்டுகளைச் செய்ய விரும்புகிறேன். இந்தப் பாரத தேசம் சுதந்திரம் அடைந்து பார்க்க ஆசைப்படுகிறேன். இந்தியக் குடியரசின் முதலாவது பிரசிடெண்டாக பண்டித ஜவஹர்லால் நேரு வருவதைப் பார்க்க விரும்புகிறேன். நீங்களும் இந்தத் தேசத்தில் பிறந்தவர் தான்; பாரத மாதாவின் புதல்வர்தான். உங்கள் கையினால் சாவதைக் காட்டிலும், போலீஸ் துப்பாக்கியினால் சாக நேர்ந்தால் எவ்வளவோ சந்தோஷமாக உயிரை விடுவேன் ஐயா! உண்மையில், உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்? எதற்காக என்னை நீங்கள் கொன்று பாவத்துக்குள்ளாக வேண்டும்? உங்களுடைய இதயத்தில் கையை வைத்துச் சொல்லுங்கள்… “

மகுடபதியின் பேச்சினால் கவுண்டரின் மனம் எவ்வளவு தூரம் மாறியதோ, என்னமோ, தெரியாது. அவர், “இந்தப் பிரசங்கமெல்லாம் வேண்டியதில்லை. நீ உயிர் தப்ப வேண்டுமானால், அதற்கு வழியிருக்கிறது” என்றார்.

மகுடபதி மவுனமாயிருந்தான். அவன் உள்ளத்தில் மறுபடியும் சந்தேகங்கள் தோன்றின.

“இங்கே வா! இந்தக் காகிதத்தில் கையெழுத்துப் போட்டாயானால் இங்கிருந்து பிழைத்துப் போகலாம்” என்று கவுண்டர் சொல்லி, தம்முடைய சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தையும் பௌண்டன் பேனாவையும் எடுத்து மேஜை மேல் வைத்தார்.

மகுடபதி தயக்கதுடன் மேஜையண்டை நெருங்கினான். மேஜைமேல் விரித்து வைத்திருந்த காகிதத்தைப் படிக்கத் தொடங்கினான். பக்கத்தில் கவுண்டர் கையில் பிடித்த துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்.

காகிதத்தில் சில வரிகள் படித்ததுமே மகுடபதியின் இரத்தம் கொதிக்கத் தொடங்கியது. ஆத்திர மிகுதியினால் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. பக்கத்தில் நின்ற கவுண்டரை அவனுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவும் வெறுத்தது.

அந்தக் காகிதத்தில் எழுதியிருந்தது இதுதான்:

“கள்ளிப்பட்டி மகா ள ள ஸ்ரீ கார்க்கோடக் கவுண்டர் அவர்களுக்கு மகுடபதி தாழ்மையுடன் நமஸ்காரம் செய்து எழுதிக் கொண்ட விண்ணப்பம்.

நான் இத்தனை நாளும் செய்த குற்றங்களை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு தங்களுடைய மேலான மன்னிப்பைக் கோருகிறேன். காங்கிரஸ் தொண்டன் என்று நான் வேஷம் போட்டுக் கொண்டு பணம் வசூலித்துத் துன்மார்க்கமான காரியங்களுக்கு உபயோகப்படுத்தியது உண்மை. தங்களுடைய கண்டிராக்ட்டில் உள்ள கள்ளுக்கடைகளை மறியல் செய்யாமலிருப்பதற்காகத் தங்களிடம் பணம் கேட்டது நிஜம். தாங்கள் கொடுக்காதபடியினால் தங்களுடைய கள்ளுக்கடைகளில் கடுமையாக மறியல் நடத்தியதும் நிஜம். சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டர் தமையனார் பெண் செந்திரு சித்த சுவாதீனமில்லாமலிருப்பது தெரிந்ததும், அவளுடைய நகைகளை அபகரிக்கும் எண்ணத்துடன் அவளை ஊரை விட்டுக் கடத்திக் கொண்டு போனேன். பெரியண்ணன் வந்து என்னைக் கைப்பிடியாய்ப் பிடித்த போது, அவனைக் கத்தியால் குத்திவிட்டேன். இப்பேர்ப்பட்ட பாதகமான காரியங்களையெல்லாம் செய்ததன் பொருட்டு மிகவும் பச்சாதாபப் படுகிறேன். தாங்களும், மகா ள ள ஸ்ரீ தங்கசாமிக் கவுண்டரும் ரொம்பவும் பெரிய மனது செய்து என்னை இந்தத் தடவை மன்னித்து விட்டுவிட்டால், இனிமேல் இப்பேர்ப்பட்ட துர்க்காரியங்களில் இறங்குவதில்லை என்று கடவுள் சாட்சியாகப் பிரமாணம் செய்கிறேன். அதோடு, இந்தக் கோயமுத்தூர் ஜில்லாவில் அடி வைப்பதில்லையென்றும் பிரமாணம் செய்கிறேன். துராக்கிரமாக இன்றைக்கு உங்களுடைய பங்களாவில் நுழைந்ததற்காகவும் என்னை மன்னித்துவிடும்படி வேண்டிக் கொள்கிறேன். “

கடிதத்தை எப்படியோ முழுவதும் மகுடபதி படித்து முடித்தான். ஆனாலும், கடிதத்தை விட்டுக் கண்களை அகற்றாமல் தீவிரமாக யோசனை செய்யத் தொடங்கினான். இந்தக் காகிதத்தில் தன்னைக் கையெழுத்திடச் செய்யும் நோக்கம் இன்னதென்பது அவனுக்கு ஸ்பஷ்டமாக விளங்கிவிட்டது. செந்திருவிடம் இதைக் காட்டித் தன்னிடம் அளவில்லாத அருவருப்பு அவளுக்கு உண்டாகும்படி செய்வர்கள். இன்னும் பலருக்குப் பகிரங்கப்படுத்திக் கோயமுத்தூர் ஜில்லாவில் தான் தலைகாட்ட முடியாதபடி செய்வார்கள். காங்கிரஸின் பெயருக்கே அழியாத மாசு தன்னால் உண்டாகிவிடும்… இந்தக் காகிதத்தில் கையெழுத்துப் போட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்வதைக் காட்டிலும் உயிரை விட்டு விடுவதே மேல். சித்திரவதை செய்தாலும் இதில் கையெழுத்துப் போடக்கூடாது. ஆனால் தான் உயிரை ஏன் விட வேண்டும்? இப்பேர்ப்பட்ட பாதகன் உலகத்தில் ஏன் ஜீவித்திருக்க வேண்டும்? தான் சாக வேண்டியிருந்தாலும் இவனைக் கொன்று விட்டு ஏன் சாகக் கூடாது? ஆம்; மகுடபதி பல்லைக் கடித்துக் கொண்டு அவ்விதம் தீர்மானித்தான். எப்படியாவது இன்றைக்கு இந்தக் கொடும் பாதகனை யமலோகத்துக்கு அனுப்பிவிட வேண்டும். பிறகு தனக்கு என்ன கதி நேர்ந்தாலும் பாதகமில்லை. ஆனால், எப்படி?…எப்படி?… இவன் கையிலுள்ள துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு சுட்டால் என்ன? … அது சாத்தியமா? படீரென்று தட்டி விடலாமா? ஆளையே பலமாகப் பிடித்துத் தள்ளி விடலாமா?… மேஜையின் கீழ் புகுந்து அப்பால் சென்று நாற்காலியை எடுத்து எறியலாமா?…

“என்னப்பா கையெழுத்துப் போடப் போகிறாயா?” என்று கவுண்டரின் குரல் கேட்டது.

மகுடபதி நிதானமான குரலில், “கடவுள் சாட்சி போதுமா?” என்றான்.

“போதாது; நீ கடவுள் இல்லையென்று சாதித்து விடுவாய். மடத்துச் சாமியாரை இங்கே அழைத்துவரச் செய்கிறேன். அவர் சாட்சி போட வேணும்… ஆ!”

கவுண்டர் அடுத்த கணத்தில் சுவரில் போய்ப் படார் என்று மோதினார். அவர் கையிலிருந்த துப்பாக்கி இன்னொரு பக்கம் போய் விழுந்தது. அதிலிருந்து ‘டுடும்’ என்று ஒடு வெடி வெடித்தது. அறையில் புகை சூழ்ந்தது. மகுடபதி நாலாபுறமும் பார்த்துவிட்டு அந்தத் துப்பாக்கியை எடுத்துக் கொள்வதற்கு ஓடினான். அதற்குள் அறைக் கதவு திடீரென்று திறந்தது. யமகிங்கரன்போல் வேலைக்காரன் ஓடி வந்து மகுடபதியைக் கட்டிப் பிடித்தான். தட்டுத் தடுமாறி எழுந்திருந்த கவுண்டர், “கட்டு அவனை! மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டு!” என்றார். தோட்டக்காரன் அவ்வாறே மகுடபதியை இழுத்துச் சென்று, தான் மேலே போட்டிருந்த வேட்டியினால் மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டினான்.

கவுண்டர் துப்பாக்கியை மறுபடியும் எடுத்துக் கொண்டார். மகுடபதியை நோக்கிக் குறி பார்த்தார். “அடே! இந்த வேலை கூடத் தெரியுமா உனக்கு? காந்தியின் சீடன் என்றல்லவா பார்த்தேன்?” என்று கூறி ஹஹ்ஹஹ்ஹா என்று பேய் சிரிப்பது போல் சிரித்தார்.

“இதோ பார்! இந்த ரிவால்வரில் இன்னும் ஐந்து குண்டுகள் இருக்கின்றன. ஆனால், உன்னை அவ்வளவு சுலபமாய் விட்டுவிடுவேன் என்று நினைக்காதே! முனியா! கொண்டுவா, சவுக்கை!” என்று கர்ஜித்தார்.

முனியன் அறைக்கு வெளியே சென்றான். மறுகணத்தில் நடையில் ஏதோ தடபுடல் சத்தம் கேட்டது. “விடு விடு” என்று ஒரு குரல் அலறிற்று. பின்னால் இருந்து இழுத்த முனியனை மீறிக் கொண்டு பெரியண்ணன் உள்ளே வந்தான். அவனுடைய வெறிகொண்ட கண்களால் விழித்துப் பார்த்தான். மகுடபதி கட்டுப் பட்டிருப்பதையும், கார்க்கோடக் கவுண்டர் அவனைச் சுடும் பாவனையாகத் துப்பாக்கியைக் குறிவைத்து நிற்பதையும் கவனித்தான்.

“கவுண்டா! சுடாதே!” என்று அலறினான்.

“ஓகோ! நீயும் வந்துவிட்டாயா?” என்றார் கார்க்கோடக் கவுண்டர்.

“ஆமாம்; வந்து விட்டேன் கவுண்டா! நல்ல சமயத்தில் தான் வந்தேன். அவனைச் சுடாதே! உன் தலை மேல் ஆணை!” என்று பெரியண்ணன் கத்தினான்.

“சீ, நாயே! உன்னை யார் கேட்டது? முனியா! இழுத்துக் கட்டு அவனையும்!” என்றார் கவுண்டர்.

“என்னைக் கட்டு! என்னைச் சுடு! கொல்லு! அந்தப் பிள்ளையைச் சுடாதே!”

“ஓகோ! அப்படியா? உன் கண்ணெதிரிலேயே சுடுகிறேன் பார்!” என்று கார்க்கோடக் கவுண்டர் மகுடபதியை நோக்கிக் குறி பார்த்து விசையிலும் கையை வைத்தார்.

“ஐயோ வேண்டாம், கவுண்டா! அவன் உன் மகன்!” என்று பெரியண்ணன் அலறினான்.

“என்ன!” என்று கூவினார் கவுண்டர்.

“ஆமாம்; காணாமற்போன உன் மகன் தான். இடது காதுக்குப் பின்னால் அடையாளம் இருக்கிறது. வேணுமானால் பார்த்துக் கொள்” என்றான் பெரியண்ணன்.

கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய உடம்பு வெட வெடவென்று ஒரு நிமிஷம் நடுங்கியது. அவருடைய கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்தது. மறுகணம் அவரும் தள்ளாடி சுருண்டு கீழே விழுந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *