Magudapathi Kalki
பதினோராம் அத்தியாயம்
மலைச் சிறை
மகுடபதியைப் போலீஸ் ‘லாக் அப்பிற்குள் தள்ளி அடைத்தபோது இரவு சுமார் இரண்டு மணி இருக்கும். கிட்டத்தட்ட அதே சமயத்தில், கோயமுத்தூர் நகரின் எல்லையைத் தாண்டி மேட்டுப்பாளையம் போகும் ரஸ்தாவில் ஒரு மோட்டார் வண்டி போய்க் கொண்டிருந்தது. அந்த வண்டியில் பின் ஸீட்டில் தங்கசாமிக் கவுண்டரும் செந்திருவும் இருந்தார்கள். டிரைவருடைய ஆசனத்தில் கார்க்கோடக் கவுண்டர் உட்கார்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டு போனார்.
செந்திருவுக்கு முன்னமே சுயப் பிரக்ஞை உண்டாகிவிட்டது. ஆனாலும், இன்னும் அவள் உள்ளத்தின் பிரமை நீங்கவில்லை. மகுடபதி சோபாவின் காலில் கட்டுண்டு கிடப்பதும், கார்க்கோடக் கவுண்டர் கத்தியை ஓங்குவதும், பெரியண்ணன் குறுக்கே பாய்வதும், கத்தி அவன் மார்பில் பதிவதும், பெரியண்ணன் கீழே விழுவதுமான காட்சிகள் திரும்பத் திரும்ப அவள் மனக்கண் முன் வந்து கொண்டிருந்தன. வேறு விஷயங்களில் அவள் மனது செல்ல மறுத்தது. கத்திக்குத்து, அரிவாள் வெட்டு முதலியவைகளைக் குறித்துப் பேசுவதை அவள் சர்வ சாதாரணமாய்க் கேட்டிருக்கிறாள். ஆனால் இம்மாதிரிச் சம்பவம் எதையும் அவள் இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. ஆ கையால்தான் அந்தப் பயங்கரக் காட்சி அவள் மனதில் அவ்வளவு ஆழமாய்ப் பதிந்துவிட்டது. கார்க்கோடக் கவுண்டர் கத்தியை ஓங்குவது நினைவில் வரும்போது, அவள் கண்களை இறுக்கி மூடிக் கொள்வாள். உடம்பு வெடவெடவென்று நடுங்கும். பெரியண்ணன் மார்பில் குத்திய கத்தி, உண்மையில் தன்னுடைய மார்பில் பாய்ந்து விட்டதாக அவளுக்குச் சில சமயம் தோன்றும். கத்தி பாய்ந்த இடத்தில் வலிப்பது போலவும் இருக்கும்.
காரில் வேகமாய் சென்றபோது, இரவு நேரத்தின் குளிர்ந்த காற்று விர்ரென்று அவளுடைய முகத்தில் அடிக்கத் தொடங்கியது. இதனால் சிறிது சிறிதாக அவளுக்கு சிந்திக்கும் சக்தி ஏற்பட்டது. தான் காரில் போவதும், தன் பக்கத்தில் தங்கசாமிக் கவுண்டர் உட்கார்ந்திருப்பதும் மெதுவாக மனதில் வந்தன. கார் எங்கே போகிறது என்ற கேள்வி எழுந்தது. சுற்றுமுற்றும் சாலையைப் பார்த்தாள். இருட்டாயிருந்தாலும், அது மேட்டுப்பாளையம் போகிற சாலையென்று ஒருவாறு தெரிந்தது. தன்னைச் சிங்கமேட்டுக்குத்தான் கொண்டு போகிறார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.
அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாக அன்று காலையிலிருந்து நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. அவையெல்லாம் உண்மையாக நடந்தவைதானா என்று அடிக்கடி சந்தேகம் உண்டாயிற்று. அந்த வீட்டில், தான் மூர்ச்சையடைந்து விழுந்த பிறகு என்ன நடந்திருக்கும்? பெரியண்ணன் செத்துப் போனவன் தானா? ஒருவேளை பிழைத்திருப்பானா? ஐயோ! பாவிகள் அந்த அழகிய வாலிபரையும்…
இச்சமயத்தில் ஏதோ மங்கிய கனவில் கேட்டது போல், பின்வரும் பேச்சுவார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன.
“பையனை என்ன செய்திருக்கிறீர்கள்?”
“செய்கிறது என்ன? சோபாவின் காலோடுதான் கட்டியிருக்கிறதே? பத்திரமாயிருக்கிறான். பையனை ஒரு மாதத்திற்குள் தூக்கு மேடைக்கு அனுப்பாமற் போனால் நான் கள்ளிப்பட்டி சென்னிமுத்துக் கவுண்டன் மகன் அல்ல… “
“பையன் நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டால்?”
“நாம் சொல்வதை நம்புவார்களா, அவன் சொல்வதை நம்புவார்களா?”
“இந்தப் பெண் சாட்சி சொன்னால்?… “
“சீ! பைத்தியமே? இவளுக்குக் கூடப் பயப்படுகிறாயா? இனிமேல் இவளை யார் வெளியில் விடப் போகிறார்கள்? நம்மை மீறிச் சாட்சி சொல்லி விடுவாளா?”
“போலீஸ் உளவு விசாரித்தால்… “
“போலீஸ், போலீஸ் என்று அடித்துக் கொள்ளாதே, போலீஸெல்லாம் என் கைக்குள் என்று தெரியாதா? நீ பேசாமலிரு. நான் எல்லாம் பார்த்துக் கொள்கிறேன். “
இவ்விதம் தன் சித்தப்பாவின் குரலும் கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய குரலும் பேசிக் கொண்டது அவளுக்கு இலேசாக நினைவு வந்தது. அவர்கள் எங்கே இவ்விதம் பேசினார்கள்? தான் எங்கே இருந்து அந்தப் பேச்சைக் கேட்டது? செந்திரு கண்களை இறுக்கி மூடிக் கொண்டு யோசனை செய்தாள். அனுமந்தராயன் தெரு வீட்டிலிருந்து தன்னை வேறொரு வீட்டில் கொண்டு போய்ப் போட்டதும், அங்கே ஒரு கட்டிலில் தான் கொஞ்ச நேரம் கிடந்ததும் பூர்வ ஜ ன்மத்து ஞாபகம் போல் நினைவுக்கு வந்தன. அந்த வீட்டில், தான் கட்டிலில் படுத்துக் கிடந்த போதுதான், தனக்கு உணர்வு வந்துவிட்டது என்பதை அறியாமல் அவர்கள் அவ்விதம் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
அந்தச் சம்பாஷணையை துண்டு துண்டாகவும் விட்டு விட்டும் நினைவு வந்த அந்தச் சம்பாஷணையை செந்திரு அடிக்கடி சிந்தனை செய்தாள். அதனுடைய கருத்து இன்னதென்பதை அவள் அறிந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது. விஷயம் இன்னதென்று தெரிந்த போது அவளுக்கு உண்டான பயத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை.
பெரியண்ணனைக் கொன்றதாக அந்தக் காந்திக் குல்லாக்காரர்மேல் கொலைக் குற்றம் சாட்டப் போகிறார்கள்! அந்தக் குற்றத்துக்காக அவரைத் தூக்கில் போடப் போகிறார்கள்! ஆ கா, எப்பேர்ப்பட்ட பாதகம்! என்ன பயங்கரமான அக்கிரமம்!
இதை நினைக்க நினைக்க, செந்திருவின் அறிவு விரைவாகத் தெளிந்து வந்தது. அந்த அக்கிரமத்தைத் தவிர்க்கக் கூடியவள் தான் ஒருத்திதான் என்பதை அவள் உணர்ந்தாள். பெரியண்ணன் இன்னொருவர் கையினால் குத்துப்பட்டதை அவள் கண்ணால் பார்த்திருக்கிறாள். கோர்ட்டில் அவள் போய்ச் சொன்னால், நிச்சயமாக அந்தக் காந்தி மனுஷருக்குத் தண்டனை விதிக்க மாட்டார்கள். இதை எப்படியாவது தான் நிறைவேற்ற வேண்டும் என்று அவள் பல்லைக் கடித்துக் கொண்டு தீர்மானித்தாள். அதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. பெரியண்ணன் தன் பேரில் அன்பு வைத்த காரணத்தினால் குத்திக் கொல்லப்பட்டான்; அவனுக்காகப் பழிக்குப் பழி வாங்க வேண்டும். அந்த வாலிபர் தன்னால் இந்தப் பெரிய அபாயத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு எறும்பைக் கூடக் கொல்லத் தயங்கக்கூடிய அந்த காந்தி மனுஷர், தன்னால் இப்போது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். அவரை எப்படியாவது விடுவிக்க வேண்டும். கார்க்கோடக் கவுண்டரை தான் மணந்து கொள்வதென்பது அதுவும் அன்று இராத்திரிக்குப் பிறகு ஒரு நாளும் இயலாத காரியம். அந்தப் பாவி கொலைகாரன் இன்னும் இந்த உலகத்தில் இருந்தால் என்னென்ன துர்க்கிருத்தியங்கள் செய்வானோ! அந்த அழகிய வாலிபரையல்லவா இவன் தூக்குமேடையில் பார்ப்பதாகச் சொன்னான்? அதற்குப் பதிலாக இவனைத் தூக்கு மேடைக்கு அனுப்புவது தன்னுடைய காரியம்.
கார்க்கோடக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி, கடைசியில் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், தன் காதில் இருந்த வைரத் தோட்டை உடைத்துப் பொடி பண்ணிச் சாப்பிட்டு உயிரை விட்டுவிடுவதென்று ஏற்கெனவே செந்திரு தீர்மானித்திருந்தாள். இப்போது அந்த எண்ணத்தை அவள் கைவிட்டாள். தன் உயிரை எப்படியாவது கெட்டியாகக் காப்பாற்றிக் கொள்வது அவசியம்; அப்போதுதான் பெரியண்ணனுடைய அநியாயக் கொலைக்குப் பழி வாங்க முடியும்; அந்த வாலிபரின் உயிரையும் காப்பாற்ற முடியும்.
இப்படி அவள் எண்ணிக் கொண்டிருக்கும்போது, சாலையின் ஒரு புறத்தில் சிங்கமேட்டு ஓடையும், வீடும் தெரிந்தன. வெண்ணிலாவில் ஓடை நீர் வெள்ளிமயமாய்ப் பிரகாசித்தது. அந்த ஓடைக்கரையில், முதன் முதலில் மகுடபதியைத் தான் சந்தித்ததை நினைத்தபோது, அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. மூன்று வருஷமாகத் தன்னைச் சிறை வைத்திருந்த வீட்டுக்கே மறுபடி போகிறோம் என்ற எண்ணம் அவளை என்னமோ செய்தது. முதல் நாள் காலையில் அங்கிருந்து ஒருவரும் அறியாமல் கிழவனுடன் கிளம்பியபோது எவ்வளவு பிசகாய்ப் போயிற்று? தான் நினைத்ததென்ன? மறுபடியும், அன்று இராத்திரியே அந்த ஜெயிலுக்குத் திரும்பி வருவோமென்று…
ஆனால், இதென்ன? வண்டி சிங்கமேட்டுக் குறுக்குப்பாதையில் திரும்பாமல் நேரே போகிறதே? டிரைவர் ஒரு வேளை தெரியாமல் விட்டுக் கொண்டு போகிறனோ? சித்தப்பாவைக் கேட்கலாமென்று செந்திரு வாய் எடுத்தாள். அதே சமயத்தில், தங்கசாமிக் கவுண்டர் “அண்ணே! நன்றாக யோசனை செய்துவிட்டீர்களா? நேரே போக வேண்டியதுதானே?” என்றார்.
“தம்பி! நீ என்னத்திற்கு வீணாகக் கவலைப்படுகிறாய்? யோசனை செய்கிற விஷயத்தையெல்லாம் என்னிடம் விட்டுவிடு” என்ற கார்க்கோடக் கவுண்டரின் குரலைக் கேட்டதும், செந்திரு தேள் கொட்டியவளைப் போல் துடித்தாள். வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தது கள்ளிப்பட்டிக் கவுண்டர்தான் என்பதை இதுவரைக்கும் அவள் கவனிக்கவில்லை. அந்தக் கொலைகார மனுஷருடன் ஒரே வண்டியில் போகிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு எவ்வளவோ துன்பத்தை உண்டாக்கிற்று. ஓடும் வண்டியிலிருந்து கீழே குதித்து விடலாமா என்று ஒரு கணம் எண்ணினாள். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்னும் பழைய உறுதியை எண்ணிப் பல்லைக் கடித்துக் கொண்டாள். கள்ளிப்பட்டிக் கவுண்டரும் கூட இருப்பதால், ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொண்டாள்.
மோட்டார் வண்டி மேட்டுப்பாளையத்தைத் தாண்டி மேலே சென்றது. நீலகிரி மலையின் அடிவாரத்தை அடைந்தது. மலைப்பாதையில் ஏறிப்போகத் தொடங்கியது.
அப்போது செந்திரு, “ஓகோ! கூனூர் பங்களாவில் நம்மை விடப்போகிறார்கள்” என்று நினைத்தாள். இதனால் ஒரு குதூகலம் உண்டாயிற்று. அவளுடைய தகப்பனார் இருந்த காலத்தில் அவர்கள் கோடைக்குக் கூனூருக்கு வருவது உண்டு. கூனூரில் அவர்களுக்குச் சொந்த பங்களா இருந்தது. பங்களாவுக்குப் பக்கத்தில் தபாலாபீஸ் உண்டு என்பது அவளுக்கு நினைவு வந்தது. பங்களாவில் இருந்த வேலைக்காரன் கூட அவளுடைய மனக்கண் முன் வந்தான். பங்கஜத்துக்கும் அவளுடைய தகப்பனாருக்கும் எம்மாதிரி கடிதம் எழுதுவது, வேலைக்காரனைச் சரிப்படுத்தி எப்படித் தபாலாபீஸில் போடச் சொல்லுவது என்றெல்லாம் யோசனை செய்யத் தொடங்கினாள். இந்த யோசனையிலேயே கண்ணயர்ந்துவிட்டாள்.
தூக்கத்தில் என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள் கண்டு பதறிச் செந்திரு கண் விழித்த போது, பலபலவென்று பொழுது விடிந்திருப்பதையும், வண்டி மலையின் மேலே ஒரு மேட்டு பங்களாவின் வாசலில் நிற்பதையும் கண்டாள். அது அவர்களுடைய கூனூர் பங்களா இல்லை. சுற்றிலும் வெகு தூரத்துக்கு மனித வாசஸ்தலமே காணப்படவில்லை. நாலாபுறமும் செங்குத்தாக வளர்ந்த யுகலிப்டஸ் மரங்கள் தான் காணப்பட்டன.
தங்கசாமி கவுண்டர் கீழே இறங்கிச் செந்திருவைப் பார்த்து, “இறங்கு கீழே!” என்றார். செந்திரு இறங்கினாள்.
“போ, உள்ளே!” என்று உத்தரவு பிறந்தது.
செந்திருவுக்கு அந்தச் சூனியமான பங்களாவில் புகுவதற்கு தைரியம் வரவில்லை. குளிரினாலும் பீதியினாலும் நடுங்கிக் கொண்டே, “சித்தப்பா! என்னை எங்கே அழைத்து வந்திருக்கிறாய்? நான் இந்த வீட்டிற்குள் போகமாட்டேன். சிங்கமேட்டுக்கு என்னை அழைத்துக் கொண்டு போ! இல்லாவிட்டால்… “
“தங்கசாமி! அந்தத் தறிதலையைப் பேசவிட்டுவிட்டுப் பேசாமல் நிற்கிறாயே? இழுத்துக் கொண்டு போய் உள்ளே விடு!” என்று கள்ளிப்பட்டியார் கர்ச்சித்தார்.
தங்கசாமிக் கவுண்டர் செந்திருவின் கையைப் பற்றிய போது அவள் திமிறினாள். அப்போது கள்ளிப்பட்டிக் கவுண்டர் அங்கு வந்து, தன் இரும்புக் கைகளினால் செந்திருவைப் பற்றினார். கரகரவென்று இழுத்துக் கொண்டு போய், பங்களாவுக்குள் புகுந்து ஒரு அறையில் அவளைத் தள்ளி வெளியே கதவை இழுத்துச் சாத்திக் கதவில் நாதாங்கியை மாட்டினார். கீழே விழுந்த செந்திரு பரபரப்புடன் எழுந்து வந்து, கதவைப் படீர் படீர் என்று அடித்தாள்.
Magudapathi Kalki Tags
magudapathi,magudapathi novel, magudapthi free book,magudapathi pdf,magudapathi read online,magudapathi free download