BooksKalki Times

Magudapathi Kalki

மூன்றாம் அத்தியாயம்
ஓடக்கரை

சென்ற அத்தியாயத்தின் இறுதியில், ‘தேனினும் இனிய பெண் குரல்’ என்று நாம் சொன்னபோது, மகுடபதியின் செவியில், அக்குரல் எவ்விதம் தொனித்தது என்பதைத்தான் குறிப்பிட்டோ ம். மற்றவர்களுக்கு அது சாதாரணப் பெண் குரலாகவே தோன்றியிருக்கலாம்.

அந்தத் தேனினும் இனிய குரல், மகுடபதிக்கு அளித்த வியப்பையும் கிளர்ச்சியையும் வர்ணிக்கத் தரமன்று. அந்தக் குரலைச் சுமார் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் ஒரு தடவை மகுடபதி கேட்டிருக்கின்றான். ஒரே ஒரு தடவைதான். ஆனால், அதைக் கேட்ட இடமும் சந்தர்ப்பமும் அந்தக் குரலில் கூறப்பட்ட விஷயங்களும், அவன் மனதில் என்றும் மறக்க முடியாதபடி பதிந்து கிடந்தன.

மீண்டும் இப்படிப்பட்ட எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்தில் அந்தக் குரலைக் கேட்டபோது, மகுடபதிக்கு உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டு விட்டது. குரல் கேட்ட அதே காலத்தில் மகுடபதி அண்ணாந்து பார்த்தான். அழுது வடிந்த அரிக்கன் லாந்தரின் மங்கிய வெளிச்சத்திலும், அந்தப் பெண்ணின் சிறிது குனிந்த முகம் அவனுக்குப் பளிச்சென்று புலப்பட்டது. ஆமாம்; அவள் தான் சந்தேகமில்லை. பார்த்தது பார்த்தபடியே நின்றான் மகுடபதி.

அந்தப் பெண்ணோ, மின்னல் வீச்சைப் போல் ஒரு தடவை அவனைப் பார்த்துவிட்டுக் கிழவனை நோக்கினாள். கிழவன் தடுமாறிய வண்ணம், “அம்மா, செந்திரு! இதோ ஒரு ‘நிமிட்டி’லே வந்து விடுகிறேன். தாயி! கொஞ்சம் பொறுத்துக் கொள்” என்றான். உடனே மகுடபதியைப் பார்த்து, “தம்பி! நான் ஏன் உன்னைப் போகச் சொன்னேன் என்று தெரிகிறதா? உடனே போய்விடு, அப்பா! உன்னை ஒரு களவாணிப் பயலும் ஒன்றும் செய்யமாட்டான். பழனியாண்டவர் காப்பாற்றுவார்” என்றான்.

மகுடபதிக்கோ கிழவன் சொன்னது ஒன்றும் காதில் விழவேயில்லை. செந்திருவின் முகத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு ஒரு விஷயம் மிகுந்த ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளித்தது. அந்தப் பெண் தன்னைத் தெரிந்து கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லையே, ஏன்? இருட்டினால் தெரியவில்லையா? ஒரு வேளை அடியோடு மறந்துவிட்டாளா? மறந்திருக்க முடியுமா? என்ன ஏமாற்றம்?

செந்திரு, அடுத்தாற்போல் பெரியண்ணனைக் கேட்ட கேள்வி அவனுடைய ஏமாற்றத்தை அதிகமாக்கிற்று. “இவர் யார், பாட்டா? உனக்கு ரொம்பப் பழக்கமானவர் போலிருக்கிறதே? இந்த ஊர்க்கார மனுஷராயிருந்தால் கொஞ்சம் இங்கே அழைத்துக் கொண்டுவா, சில விஷயங்கள் பேச வேண்டும்” என்றாள்.

தன்னை மேலே அழைத்து வரும்படி சொன்னது மகுடபதிக்குச் சிறிது திருப்தியளித்தாலும், அவள் தன்னைத் தெரிந்து கொள்ளவில்லையென்ற ஏமாற்றம் மனதை வருத்திற்று.

பெரியண்ணனோ, இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்தான். மேலே செந்திருவின் முகத்தை நோக்கினான். பிறகு மகுடபதியின் முகத்தைப் பார்த்தான். “தம்பி!… ” என்று இழுத்தான்.

“பாட்டா நீ கவலைப்பட வேண்டாம். நான் போகிறேன்” என்றான் மகுடபதி.

“இல்லை, தம்பி! குழந்தை உன்னிடம் என்னமோ கேட்கவேணுமென்கிறது… “

“பாட்டா! நான் உனக்குத்தான் குழந்தை; ஊருக்கெல்லாம் குழந்தையா?” என்று மேலிருந்தபடி செந்திரு கேட்டாள்.

மகுடபதி கிழவனிடம் “இல்லை பாட்டா! உனக்கு என்னத்திற்கு வீண் கஷ்டம்? நான் போய் வருகிறேன். நீ இங்கே தனியாய் இருக்கிறதாக நினைத்துக் கொண்டு அவ்வளவு பிடிவாதம் பிடித்தேன். வேறு யாரோ இருப்பதாக மட்டும் தெரிந்திருந்தால் இங்கே வந்திருக்கவே மாட்டேன். உனக்குத்தான் தெரியுமே. அப்படி ஒன்றும் நான் உயிருக்குப் பயப்படுகிறவன் அல்ல” என்றான்.

அச்சமயம் அவன் மேலே நோக்கிப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், செந்திருவின் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை தோன்றிக் கணத்தில் மறைந்ததைக் கவனித்திருக்கலாம்.

மச்சுப்படிகளில் இரண்டு படி செந்திரு பரபரப்புடன் இறங்கிச் சற்று மெதுவான குரலில், “பாட்டா! இங்கே கொஞ்சம் வா! சற்று முன்னால் இரண்டு தடியர்கள் இந்தத் தெருவோடு போனார்கள். அவர்கள் கையில் கத்தியும் தடியும் இருந்தது. எனக்கு ரொம்பவும் பயமாயிருந்தது. இப்போது அவர்கள் மறுபடியும் திரும்பி வருகிறார்கள். சட்டென்று இங்கே வந்து பார்!” என்றாள். உடனே மகுடபதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “பாட்டா! அவரைக் கூட இப்போது போகச் சொல்லாதே! கதவைத் திறந்தால் அந்தத் தடியர்கள் உள்ளே வந்தாலும் வந்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்தாலே எனக்குக் கதிகலங்குகிறது. உன் சினேகிதரை இங்கேயே கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகச் சொல்லு. அவருக்கு உயிருக்குப் பயமில்லாமற் போனாலும், எனக்குப் பயமாயிருக்கிறது” என்றாள்.
பெரியண்ணன் அப்போது மகுடபதியின் கையைப் பிடித்துக் கொண்டு, “வா, தம்பி! மச்சுக்குப் போய் அஞ்சு நிமிஷம் இருந்துவிட்டு அப்புறம் போகலாம். அப்படியொன்றும் ரொம்ப நேரமாகிவிடவில்லையே, ஏழரை மணிதான் இருக்கும்” என்றான். பிறகு அவன் ஒரு கையால் மகுடபதியின் கையைப் பிடித்து இழுத்த வண்ணம் மச்சுப்படியில் ஏறத் தொடங்கினான்.

மகுடபதிக்கோ மச்சுப்படியில் ஏறுகையில் ஒரே மனக்குழப்பமாயிருந்தது. அந்தப் பெண் யார்? பதினெட்டு மாதத்துக்கு முன்பு, அந்த அழகிய நீரோடைக் கரையில் தான் சந்தித்த பெண்தானா, இல்லையா? அந்தக் காட்சி நேற்றுத்தான் நடந்ததுபோல் அவன் மனக்கண்ணின் முன்னால் வந்தது.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பித்தபோது, மகுடபதி காலேஜ் படிப்பை நிறுத்திவிட்டு வந்து சத்தியாக்கிரக இயக்கத்தில் ஈடுபட்டான்.

அவனுக்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. அது பூர்த்தியாகி வெளியில் வந்தபோது, கோயமுத்தூர் ஜில்லாவில் மதுவிலக்கு இயக்கம் தீவிரமாக நடந்து வருவதை அறிந்தான். அவனும் அந்த இயக்கத்தில் ஈடுபட ஆவல் கொண்டான். நீலகிரி மலையின் அடிவாரத்திலுள்ள மேட்டுப் பாளையத்துக்கருகில் வேங்கைப்பட்டி என்பது அவனுடைய கிராமம். அந்தக் கிராமத்தில் போய்த் தங்கி, மேட்டுப்பாளையம் தாலுக்கா முழுவதும் சுற்றித் தீவிரமான மதுவிலக்குப் பிரசாரம் செய்யத் தொடங்கினான்.

இந்த வேலையில் ஈடுபட்டிருந்த காலத்தில்தான் ஒரு நாள் மகுடபதி மிதிவண்டியில் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது, அந்த மறக்க முடியாத சம்பவம் நடந்தது. காலை ஒன்பது மணி இருக்கும். சாலை ஓரத்தில் ஓர் அழகான ஓடை. இரண்டு மூன்று நாளைக்கு முன்னால் நன்றாக மழை பெய்திருந்தபடியால், ஓடையில் நிரம்பத் தண்ணீர் இருந்தது. தெளிவான பளிங்கு போன்ற தண்ணீர்; சுற்றிலும் பசுமையான மரங்கள்; ஓங்கி வளர்ந்த மரங்கள் அல்ல; குட்டையான மரங்கள் தான். சற்று தூரத்தில் மரங்களுக்கு மேலே ஒரு பெரிய வீட்டின் மேல் பாகம் மட்டும் தெரிந்தது. பசுமையான மரங்களுக்கு மேலே தூய வெள்ளைச் சுண்ணாம்பு அடித்த சுவரும், அதன் மேலே சில ஓட்டுக் கூரையும், மேலே ஆ காசமும் ஒரு வர்ணக் காட்சி போல் புலப்பட்டன. நீரோடையின் ஒரு புறத்தில் இரண்டு வெண்ணிறக் கொக்குகள் ஒற்றைக் காலால் நின்று தவம் செய்த காட்சி அதைவிட அருமையாயிருந்தது.

மகுடபதி அந்த ஓடைக் காட்சியைக் கண்டு சிறிது நேரம் இன்புற எண்ணி, மிதிவண்டியிலிருந்து இறங்கினான். மிதி வண்டியை ஒரு மரத்தடியில் சாத்திவிட்டு, ஓடையில் தண்ணீர்க் கரைக்குச் சமீபமாய்ச் சென்றான். அப்படிப் போகும் போது சுற்றுமுற்றும் பார்க்கையில் அவனுடைய நெஞ்சை ஒரு கணம் ஓடாமல் நிறுத்திய ஒரு காட்சி தென்பட்டது. ஒரு மரத்தடியில் ஓர் அழகிய இளம் பெண் படுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் மூடியிருந்தன. அந்த நிலையில் அவளைப் பார்க்கும்போது சாதாரண மனிதப் பெண்ணாகத் தோன்றவில்லை. நிசப்தமான அந்த ஏகாந்தமான பிரதேசத்தில் அந்த அழகிய ஓடைக்கரையில் இந்த நேரத்தில் படுத்துத் தூங்குவது மனிதப் பெண்ணாயிருக்க முடியாது; வனதேவதையாகத் தானிருக்க வேண்டும்! இப்படி எண்ணிய மகுடபதிக்குச் சட்டென்று இன்னொரு நினைவு உண்டாயிற்று. அவள் தூங்குகிறாளோ அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் மூர்ச்சையாகித்தான் கிடக்கிறாளோ? இவ்விதம் எண்ணியதும், அவன் விரைந்து சென்று அப்பெண்ணின் அருகில் நெருங்கினான். குனிந்து பார்த்தான். மூர்ச்சையாயிருக்கிறாளா, தூங்குகிறாளா என்று தெரிந்துகொள்ள வழி தெரியவில்லை. மூக்கின் அருகில் விரலை நீட்டியபோது, மிக மிக இலேசாக மூச்சு வருவது போல் தெரிந்தது. அதே சமயத்தில் அந்த முகத்தின் அழகும் அவன் கண்ணுக்குத் தெரியாமல் போகவில்லை. மூடியிருந்த கண்கள் கூம்பிய நீலோற்பல மொட்டுக்களை அவனுக்கு ஞாபகப்படுத்தின. ஒரு கொசுத்தேனீ அம்முகத்தினருகில் வந்து அப்போது வட்டமிட்டது. “இந்த முகத்தைத் தாமரை மலர் என்று எண்ணித்தான் இந்தத் தேனீ வட்டமிடுகிறது” என்று நினைத்தான்.

வெறுமே இப்படிப்பட்ட வர்ணனைக் கற்பனைகளில் அவன் அதிக காலம் கடத்தி விடவில்லை. ‘தூங்குகிறவளாயிருந்தால் இவ்வளவு சமீபத்தில் நாம் வந்து நிற்கும் போது விழித்துக் கொள்ளாமல் இருப்பாளா? மூர்ச்சையாகத்தான் இருக்கவேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டு ஓடைக் கரைக்கு ஓடினான். கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து எடுத்துக் கொண்டு ஒரு நொடியில் ஓடி வந்தான். அந்தத் தண்ணீரைப் பிழிந்து முகத்தில் தெளித்தவுடனே, அவள் பளிச்சென்று எழுந்து உட்கார்ந்து முகத்தைத் துடைத்துக் கொண்டதோடல்லாமல், மகுடபதியைப் பார்த்துக் கலகல வென்று சிரிக்கவும் தொடங்கினாள். மகுடபதிக்கு முதலில் சிறிது வெட்கமாயும் கோபமாயும் இருந்தது. ஆனால் அவளுடைய கலகலப்பான இனிய சுபாவமும், சாதுரியமான பேச்சும் அதை மாற்றிவிட்டன. முகத்தின் மோகன சௌந்தரியத்தோடு, கவிகள் வர்ணிப்பது போல் காதளவு நீண்ட கண்களின் காந்த சக்தியும் சேர்ந்துவிட்டால், பிறகு கேட்பானேன்? அந்த மரத்தடியிலேயே நிம்மதியாக உட்கார்ந்து இருவரும் பேசத் தொடங்கினார்கள்.

மகுடபதி அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களையெல்லாம் அறிய விரும்பினான். அவளோ தன்னைப் பற்றி ஒன்றும் அதிகமாய்ச் சொல்லாமல் மகுடபதியைப் பற்றியும் அவன் அப்போது செய்த வேலையைப் பற்றியும் மூச்சுவிடாமல் கேள்வி கேட்டு அவனைத் திணற அடித்தாள். “ஆறு மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தேன்” என்று மகுடபதி சொன்னபோது, “இது ஒரு பிரமாதமா? நான் மூன்று வருஷமாக ஜெயிலில் இருக்கிறேனே? அதோ அந்த வீடுதான் என் ஜெயில்” என்று அவள் சொன்னாள். இதைக் கேட்ட மகுடபதிக்கு மனதை என்னமோ செய்தது. அதைப்பற்றி மேலும் விசாரிப்பதற்குள் அவள் பேச்சை மாற்றிவிட்டாள். மகுடபதி இன்னொரு சமயம் பேச்சினிடையே “பாரதத் தாயின் விடுதலைக்காகத் தான் நாங்கள் எல்லோரும் பாடுபடுகிறோம்” என்றான். அப்போது அந்தப் பெண் பெருமூச்சுடன், “என்னை யார் வந்து எப்போது விடுதலை செய்யப் போகிறார்களோ தெரியவில்லை!” என்றாள். “நான் செய்கிறேன்; தேசம் விடுதலையடைந்தவுடனே நானே வந்து உன்னை விடுதலை செய்கிறேன்” என்று மகுடபதி பளிச்சென்று பதில் சொன்னான். “இந்த வார்த்தை சத்தியமா?” என்று அவள் கேட்டாள். “சத்தியம்” என்று மகுடபதி உறுதி கூறி, “ஆனால், நீ உன்னைப் பற்றி ஒன்றுமே சொல்ல மாட்டேனென்கிறாயே?” என்று கேட்டான். இந்தச் சமயத்தில் சற்றுத் தூரத்தில் மோட்டார் வண்டியின் ஹாரன் சப்தம் கேட்டது. “ஐயோ! சித்தப்பா வருகிறார், உன்னையும் என்னையும் சேர்த்துக் கண்டால் இங்கேயே கொலை விழுந்துவிடும்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் எழுந்து விரைந்து போய் மரங்களுக்குப் பின்னால் மறைந்துவிட்டாள்.

‘அந்தப் பெண் தானா இவள்? அல்லது நமக்குத்தான் சித்தப்பிரமையா’ என்று மகுடபதி மச்சுப்படி ஏறும்போது சிந்தனை செய்தான். அடடா! தன்னுடைய பெயர் என்ன என்று கூடச் சொல்லாமற் போய்விட்டாள்? செந்திரு! என்ன அழகான, அபூர்வமான பெயர்! அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணுக்கு இவ்வளவு அழகான பெயர் யார் வைத்திருக்க முடியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *