Magudapathi Kalki
ஐந்தாம் அத்தியாயம்
“நான் அனாதை”
பெரியண்ணன் தன்னுடைய கதையைச் சொல்லி முடித்துக் கண்ணீர் பொழிந்த போது, சற்று நேரம் அந்த மேல் மாடியில் நிசப்தம் குடிகொண்டிருந்தது.
மகுடபதி தான் முதலில் பேசினான்.
“பாட்டா! நான் செய்தது ஒன்றும் பெரிய காரியமில்லை. நீ சபதத்தை நிறைவேற்றிக் குடியை விட்டிருக்கிறாயே, அதுதான் பெரிய காரியம்” என்றான்.
அப்போது கிழவன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “தம்பி, தம்பி! ‘பெரிய காரியம்’ என்று சொல்லாதே, ‘பெரிய காரியம்’ என்றால் நம் ஊரிலே ‘எழவு’க்குச் சொல்வார்கள். பிள்ளைகள் பட்டணத்துக்குப் படிக்கப் போய் நம்ம பேச்சைக் கூட மறந்து விடுகிறார்கள்” என்றான்.
“எனக்குப் பேச்சு சொல்லிக் கொடுக்கிறது அப்புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் பேச்சைச் சொல்லுங்கள். ஏதோ அபாயம், தலை போகிற விஷயம் என்று சொன்னீர்கள். வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறோமே?” என்றான் மகுடபதி.
கிழவன் செந்திருவின் முகத்தை நோக்கி, “நீ என்ன சொல்லுகிறாய், தாயே! இந்தத் தம்பியிடம் எனக்குப் பூரண நம்பிக்கை. உனக்கு இஷ்டமிருந்தால் இவரிடம் எல்லாவற்றையும் சொல்லி யோசனை கேட்கலாம்” என்றான்.
அப்போது செந்திரு, “உன் இஷ்டம், பாட்டா! நாமோ இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒத்தாசை வேண்டியிருக்கிறது. ஆனால், இந்தக் காந்திக் குல்லாக்காரர்கள் ஒத்தாசை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அவ்வளவாக இல்லை. ஒரு சமயம் இவர் மாதிரியேதான் ஒரு காந்திக் குல்லாக்காரர் என்னிடம் ரொம்ப ரொம்பக் கரிசனமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஜெயிலிலே இருந்ததாகச் சொன்னார். நானும் மூன்று வருஷமாக ஜெயிலிலேதான் இருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். சீக்கிரத்தில் வந்து விடுதலை செய்கிறதாகச் சொல்லிவிட்டுப் போனார். ஒன்றரை வருஷம் ஆச்சு; அப்புறம் எட்டியே பார்க்கவில்லை. அதனால் தான் காந்திக் குல்லாக்காரர்களிடம் எனக்குச் சந்தேகமாயிருக்கிறது” என்று செந்திரு சொல்லிவந்தபோது, மகுடபதியின் உடம்பில் மயிர்க்கூச்சல் உண்டாயிற்று. செந்திரு கடைசி வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே தன்னைக் கடைக்கண்ணால் நோக்கியதை அவன் பார்த்தான். அந்த அழகிய கரிய கண்களின் முனைகளில் நீர்த்துளிகள் துளித்து நிற்பதைக் கண்டான். தான் ஓடைக் கரையில் பார்த்த பெண் தான் இவள் என்பதையும், தன்னை அவளும் அறிந்து கொண்டாள் என்பதையும், அதற்குப் பிறகுதான் அவளைப் பார்க்க வரவில்லையென்ற கோபத்தினாலும் துக்கத்தினாலுந்தான் அப்படிப் பேசுகிறாள் என்பதையும் ஒரு நொடியில் அறிந்து கொண்டான்.
தழதழத்த குரலில், “நான் அப்போது சொன்னது என்ன? தேசம் விடுதலையான பிறகு உன்னை வந்து விடுதலை செய்வதாகத்தானே சொன்னேன்?” என்றான்.
“தேசம் இன்னும் விடுதலையாகவில்லையா?” என்றாள் செந்திரு.
மகுடபதிக்குச் சிரிப்பு வந்தது. அவன் கம்பராமாயணம் கேட்டிருந்தான். சீதை அயோத்தி நகரின் கேட்டை வாசலைத் தாண்டியதும், “காடு எங்கே?” என்று ராமனிடம் கேட்ட விஷயம் அவனுக்கு நினைவு வந்தது.
“தேச விடுதலை என்பது, அவ்வளவு சீக்கிரம் நடக்கக் கூடியதல்ல, போன வருஷம் தேச விடுதலை நெருங்கியிருந்ததாகத் தோன்றியது. இந்த வருஷம் அது வெகு தூரம் போய்விட்டது” என்றான்.
“அதனால்தான் அவ்வளவு தைரியமாக ‘வந்து விடுதலை செய்கிறேன்’ என்று சொன்னீர்கள் போலிருக்கிறது! ‘நாளைக்கு கடன்’ என்று பட்டிக்காட்டுக் கடைகளில் எழுதி வைக்கிறார்களே, அந்த மாதிரி!” என்று ஆத்திரத்துடன் பேசினாள்.
இந்தச் சம்பாஷணையின் விஷயம் பெரியண்ணனுக்குப் புரியவில்லை. இரண்டு பேர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.
“தம்பி! இதென்ன, குழந்தையை உனக்கு முன்னாலேயே தெரியுமா?” என்றான்.
செந்திரு, “ஆமாம், பாட்டா! ஒருநாள் நான் ஓடைக் கரையில் படுத்துக் கொண்டு, செத்துப் போவதற்கு என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்த மனுஷர் வந்து ‘நான் உன்னை விடுதலை செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார். அப்புறம் திரும்பியே பார்க்கவில்லை” என்று குரோதம் பொங்கிய குரலில் கூறினாள்.
அப்போது மகுடபதி, “என்பேரில் தப்பு ஒன்றும் இல்லை. நீ சரியாக விவரம் சொல்லாமல் ஓடிப்போய் விட்டாய். உன் பெயரைக் கூடச் சொல்லவில்லை. இருந்தாலும் நான் உன்னை மறந்துவிடவில்லை. ஓயாமல் உன் ஞாபகமாகவே இருந்தேன். நீ சுட்டிக் காட்டிய வீட்டைப் பற்றித் தகவல் விசாரித்தேன். அது சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டர் வீடு என்று தெரிந்தது. அவருடைய வீட்டில் அவருடைய சொந்தப் பெண்கள் மூன்று பேரும் அவருடைய தமையனார் பெண்ணும் இருப்பதாகவும், அவரே சமீபத்தில் இரண்டாந்தாரம் கலியாணம் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிந்தது. இத்தனை பேரில் நீ யார் என்று நான் எப்படிக் கண்டுபிடிப்பது? அப்புறம் பல தடவை அந்த ஓடைக்கரைப் பக்கம் நான் வந்தேன். எவ்வளவோ நேரம் காத்திருந்தேன். உன்னைப் பார்க்க முடியவில்லை. நீ என்னை மறந்துவிட்டாய் என்றும் அன்று என்னிடம் சொன்னதெல்லாம் விளையாட்டுப் பேச்சு என்றும் எண்ணிக் கொண்டேன்” என்றான்.
செந்திரு, “நான் உங்களை மறக்கவில்லை. நான் மறந்தாலும், உங்களால் எனக்கு ஏற்பட்ட அடையாளம் இருக்கிறது. அது எப்போதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும்” என்று சொல்லி தன் வலது காலை மறைத்துக் கொண்டிருந்த சேலையை சிறிது நகர்த்தினாள். முழங்காலுக்குக் கீழே ஒரு நீளமான நெருப்புச் சுட்ட வடு காணப்பட்டது.
“ஐயோ!” என்றான் மகுடபதி.
“நான் உங்களுடன் ஓடைக்கரையில் பேசிக் கொண்டிருந்தது எப்படியோ சித்தப்பாவுக்குத் தெரிந்து போய்விட்டது… “
“நீ அவருடைய தமையனார் பெண்தானா?”
“ஆமாம். “
“உனக்கு அப்பா இல்லையா?”
“எனக்கு அப்பாவுக்கு இல்லை, அம்மாவும் இல்லை. நான் அனாதை. “
பெரியண்ணன், “அப்படிச் சொல்லாதே, அம்மா! இந்தக் கிழவன் உடம்பில் உயிர் இருக்கிற வரையில் நீ அனாதையாய்ப் போய்விட மாட்டாய்” என்றான்.
மகுடபதி நெருப்புச் சுட்ட வடுவைச் சுட்டிக் காட்டி “இது எப்படி ஏற்பட்டது, சொல்லு” என்றான். கேட்கும் போதே அவன் உடம்பு நடுங்கிற்று.
“சித்தப்பாவுக்கு யாரோ சொல்லிவிட்டார்களோ அல்லது அவரேதான் பார்த்துவிட்டாரோ தெரியாது. ‘ஓடைக்கரையில் யாரோடு பேசிக் கொண்டிருந்தாய்?’ என்று கேட்டார். ‘தெரியாது’ என்று சொன்னேன். நீங்கள் யார் என்பது எனக்கு நிஜமாகவே தெரியாதல்லவா? ஆனால், சித்தப்பா நான் சொன்னதை நம்பவில்லை. வேண்டுமென்றே பொய் சொல்லுகிறேன் என்று நினைத்தார். எவ்வளவோ அமர்க்களம் நடந்தது. கடைசியில் ‘இனிமேல் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது’ என்பதற்கு ஞாபகம் இருப்பதற்காக இம்மாதிரி காலில் சூடு போட்டுவிட்டார். “
“கடவுளே! இம்மாதிரி அக்கிரமங்களும் உலகத்தில் உண்டா?” என்றான் மகுடபதி.
“நீ என்னத்தைக் கண்டாய், தம்பி! இதைவிடப் பெரிய அக்கிரமங்களும் உலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. கடவுளும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்” என்றான் பெரியண்ணன்.
செந்திரு, அப்போது “கடவுளைக் குறை சொல்லாதே, பாட்டா! கடவுள்தான் இந்த இக்கட்டான வேளையில் இவரை இங்கே அனுப்பியிருக்கிறார். நீங்கள் வந்ததனால் தான் கொஞ்சம் நான் தெம்பாயிருக்கிறேன். இல்லாவிட்டால், அய்யாசாமி முதலியார் வீட்டில் ஒருவரும் இல்லையென்று பாட்டன் திரும்பி வந்ததற்கு, நான் இப்போது பதைபதைத்துப் போயிருப்பேன். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருப்பேன். பாட்டன் வருவதற்குக் கொஞ்சம் நேரம் ஆனபோதே எனக்குத் தவிப்பாய்ப் போய்விட்டது. ‘ஏன் இன்னும் வரவில்லை?’ என்று இந்த மச்சு ஜ ன்னல் வழியாக வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் திரும்பிப் பார்த்துக் கொண்டு வீதி ஓரமாக வந்தீர்கள். நீங்கள் தான் என்று உடனே எனக்குத் தெரிந்து போய்விட்டது. பழனியாண்டவன் தான் இந்தச் சமயத்தில் உங்களை அனுப்பியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்” என்று செந்திரு சொன்னாள்.
“பழனியாண்டவர் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டரின் ஆட்கள் ரூபத்தில் வந்து என்னை அனுப்பினார் போலிருக்கிறது” என்றான் மகுடபதி.
“கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர்” என்ற பெயரைக் கேட்டதும், அவர்கள் இருவருடைய முகத்திலும் ஏற்பட்ட மாறுதலை மகுடபதி கவனித்தேன். அது என்ன பயங்கரமா? அருவருப்பா? கோபமா? அந்தப் பெயர் இவர்களை இப்படிப் பயமுறுத்துவானேன்? இதில் ஏதோ பெரிய விசேஷம் இருக்க வேண்டும். யாரால் தனக்கு அபாயம் ஏற்பட்டிருக்கிறதோ, அவருடைய பெயரைக் கேட்டல்லவா இவர்களும் இவ்வளவு பயங்கர மடைகிறார்கள்? விஷயம் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு மகுடபதியின் ஆவல் அளவில்லாமல் பொங்கிற்று.