Kalki Short StoriesKalki TimesStory

Master Medhuvadai Kalki | Kalki Times

Master Medhuvadai Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

மாஸ்டர் மெதுவடை

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Master Medhuvadai Kalki

அவருடைய உண்மைப் பெயர் அப்பாஸாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம்,

“மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி…”

என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது ஷுட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின் பூர்வாங்க விளம்பரங்களிலும் அதே பெயர் தான் காணப்பட்டது. ஒரு விளம்பரம் “மெதுவடை சுடப்படுகிறது!” என்று மணிபிரவாள சிலேடையில் ஆரம்பமாயிற்று. இந்த சிலேடைக்கு வியாக்யானம் தேவை என்று தோன்றுகிறது. சாதாரணமாய், இங்கிலீஷில் டாக்கி படம் பிடிப்பதைக் குறிப்பிடும்போது, ‘ஷுட் ஆகிறது’, ‘ஷாட் எடுக்கிறார்கள்’ என்று குறிப்பிடுவது உண்டு. ‘ஷுட்’ என்பதற்கு ‘சுடு’ என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறதல்லவா? அந்தத் துப்பாக்கி சுடுகையை வடைசுடுவதற்கு உபயோகப்படுத்தி மேற்படி சிலேடையைப் போட்டவர், அந்த டாக்கி கம்பெனியார் மாதம் 371/2 ரூபாய் சம்பளத்தில் அமர்த்தியிருந்த கலியுகக் காளமேகக் கவிச் சக்கரவர்த்தி, பழனி பிரஸாதராவ். (அந்தப் பழைய காளமேகன் திரேதாயுகத்தைச் சேர்ந்தவனென்பது அவர் எண்ணம்.)

மாஸ்டர் மெதுவடை நெடுங்காலமாகத் தென்னிந்திய நாடக மேடைகளில் தமது விகட சக்ராதிபத்தியத்தை நிலைநிறுத்தி வந்தவர். பச்சை சிருங்காரப் பேச்சினால்தான் அவர் அவ்வளவு பிரசித்தியடைந்தது. மேடையில் வந்து நிற்பார்; இரண்டு தடவை கண்ணைச் சிமிட்டுவார். சபையில் கிளுகிளு வென்று சிரிப்பு அலை பரவும்.

“மாடி மேல் மாடி!” என்பார். பின்னால் வரப் போவதை அறிந்து சபையோர், ‘கலீர்’ என்று சிரிக்கத் தொடங்குவார்கள்.

“அதன் மேலே ஒரு லேடி!” என்பார். பிறகு, சபையோரின் குதூகலத்தை யாரால் கட்டிப் பிடிக்க முடியும்? “அவளும் நானும் ஜோடி!” என்றாரோ இல்லையோ, கொட்டகைச் சொந்தக்காரன் வயிற்றில் நெருப்புத்தான். கொட்டகை இடிந்து விழும் படியான சிரிப்பும் ஆரவாரமும் ஏற்படும்.

அவருடைய ஹாஸ்யத்தில் நான் ஒரு கோடிதான் காண்பித்திருக்கிறேன். இன்னும் வாடி, மோடி, கூடி என்று மேலே மேலே போய்க் கொண்டிருப்பார். அவருடன் தொடர்ந்து போவது என்னால் முடியாத காரியமாகையால், அவருக்கு “மெதுவடை” என்று பெயர்வந்த காரணத்தைப் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். ஒரு தடவை அவர் நாடக மேடையில், முழுசு முழுசாக இருபத்தெட்டு மெதுவடைகளை வாயசைக்காமல் விழுங்கினாராம்! அப்புறம் ஆறு மாத காலம் அவர் ஒவ்வொரு நாடகத்திலும் இருபத்தேழுவடைகள் தின்னவேண்டியிருந்ததாம். அந்தக் காட்சியை நடத்திக் காட்டினாலொழிய, ஜனங்கள் கலவரம் செய்யவும், டிக்கெட் பணத்தை வாபஸ் கேட்கவும் ஆரம்பித்து விட்டார்களாம். இதிலிருந்து அவருக்கு “மாஸ்டர் மெதுவடை” என்ற பெயர் ஏற்பட்டு நிலைத்து விட்டது.

இப்பேர்ப்பட்ட ஹாஸ்ய நடிக சக்கரவர்த்தி இந்தியாவின் சார்லி சாப்ளின் – தமிழ் நாட்டு ஹாரல்ட்லாயிட் தமிழ் டாக்கி முதலாளிகளின் வலையில் விழாமல் வெகு காலம் தப்ப முடியுமா? ஒரு நாள் தலை குப்புற விழுந்தார்; விழுந்ததோடில்லாமல் கழுத்தையும் முறித்துக் கொள்ளும்படியான நிலைமை ஏற்பட்டது.

சென்னைப் பட்டணத்திலுள்ள ஜாலிவுட் ஸ்டூடியோவைப் பற்றித் தெரியாதவர்கள் டாக்கி உலகத்தில் யாரும் இருக்க முடியாது. அந்த ஜாலிவுட் ஸ்டூடியோவில் பிடிக்கும் படங்களுக்கு ஹாலிவுட் டிம்பன் என்பவர் பிரபல டைரக்டராக இருந்தார். ஹாலிவுட்டைப் பற்றியும் அங்குள்ள நடிகர்கள் டைரக்டர்கள் பற்றியும் மிஸ்டர் டிம்பன் அநேக அபூர்வமான விவரங்களைச் சொல்வார். இந்த விவரங்கள் எல்லாம் மேற்படி நடிகர்களுக்கும் டைரக்டர்களுக்குமே தெரியாதன வென்றால், அவை எவ்வளவு அபூர்வமாயிருக்க வேண்டுமென்று நான் சொல்ல வேண்டியதில்லை.

மிஸ்டர் டிம்பனுக்குத் தமிழ் டாக்கி உலகத்தில் ரொம்பவும் பிரசித்தி ஏற்பட்டிருந்தது. அவருக்குத் தமிழ் தெரியாது; சங்கீதம் தெரியாது; கண்பார்வை கொஞ்சம் கம்மி; காது சிறிது மந்தம் – ஆகவே, தமிழ் டாக்கி டைரக்டராவதற்கு வேண்டிய எல்லா அம்சங்களும் அவரிடம் பொருந்தியிருந்தன வென்று சொல்ல வேண்டாமல்லவா? அப்பேர்ப்பட்டவரின் மேற்பார்வையில் இப்போது ஜாலிவுட் ஸ்டூடியோவில் இரண்டு படங்கள் ‘ஷுட்’ செய்யப்பட்டு வந்தன. அவற்றில் ஒன்று சமூகப் படம். இன்னொன்று புராணப் படம்.

இந்த இரண்டு படங்களிலும் நடிக்கும் பாக்கியம் வாய்ந்த ஒரு ‘நட்சத்திரம்’ அங்கே பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் பெயர் மிஸ் டி.கே.ஹம்ஸா. புராணக் கதையில் ஹம்ஸாவுக்கு அருந்ததி வேஷம்; சமூகக் கதையில் தாஸி வேஷம்.

தாஸி வேஷத்தில் மிஸ் ஹம்ஸா நடிக்கும் அதே காட்சியில் அப்பாஸாமியும் நடித்தான். சந்தர்ப்பம் என்ன வென்பதை நேயர்கள் ஊகித்து அறிந்திருக்கலாம். வேறென்ன தான் இருக்கப் போகிறது? ஹம்ஸாவின் வீட்டுக்கு வழக்கமாக வருகிற கிழ ஜமீந்தார் ஒருவன் இருக்கிறான். அவளுக்குக் கள்ளக் காதலன் ஒருவனும் இருக்கிறான். ஒரு சமயம் இரண்டு பேரும் சேர்ந்தார்ப்போல் வந்து விடுகிறார்கள். கள்ளக் காதலனை ஒளித்து வைக்க ஹம்ஸா முயல்கிறாள். முடியவில்லை. இருவரும் சந்திக்கிறார்கள்; குஸ்தி போடுகிறார்கள். இவன் ஒரு தடவையும் அவன் ஒரு தடவையுமாக ஹம்ஸாவின் மேல் விழுகிறார்கள்…

திரும்பித் திரும்பி இந்த ஆபாஸந்தானா என்று நீங்கள் நினைக்கக் கூடாது. இதெல்லாம் ஜனங்களுக்கு நீதி கற்பிக்கத்தானே யன்றி வேறில்லை. “தாஸிகளை நம்பக் கூடாது” என்பது நீதி.

இந்த நீதியை ஜனங்களுடைய மனத்தில் நன்கு பதியச் செய்வதற்காக நடிகர்கள் மூவர், டைரக்டர் ஒருவர், போட்டோ பிடிப்பவர் ஒருவர், சில்லறைச் சிப்பந்திகள் ஐந்து பேர், பட முதலாளிகள் மூன்று பேர், அவர்களுடைய சிநேகிதர்கள் பதினைந்து பேர் – ஆக இவ்வளவு பேரும் வெகு பாடுபட்டார்கள். பாமரஜனங்களிடமிருந்து பணம் வருவதற்கு இந்தக் காட்சியைத்தான் நம்பியிருந்தார்களாதலால் அவ்வளவு விசேஷ கவனம் செலுத்தப்பட்டது. இதே காட்சி ஐந்தாறு நாள் திருப்பித் திருப்பி எடுக்கப்பட்டது.

இப்படி இந்த ‘ஷுட்டிங்’ வளர்த்தப்படுவதை விரும்பாத பிராணி ஒருவன் இருந்தான். அவன் தான் அந்தக் காட்சியில் கிழ ஜமீந்தாராக நடித்தவன். அவனுக்கு அதில் அவ்வளவு வெறுப்பு ஏற்படக் காரணமாக இருந்தவன் அப்பாஸாமி தான். அந்த ஹாஸ்ய நடிகனுக்கு அவனுடைய வாழ்நாளில் இதுவரையில் கனவிலும் அறியாத அனுபவம் ஏற்பட்டிருந்தது. அவன் உண்மையிலேயே ஹம்ஸாவுக்குத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டான். சென்ற ஒரு மாதமாக அவன் மாறி மாறி சொர்க்கத்திலும் நரகத்திலுமாக வாழ்ந்து வந்தான். ஹம்ஸா தன்னைப் பார்த்துப் புன்னகை புரியும் போதெல்லாம் அவன் ஏழாவது சொர்க்கத்துக்கே போய் விடுவான்; அவள் வேறு யாரையாவது பார்த்துப் புன்னகை புரியும் போது கொதிக்கும் எண்ணெயில் போட்டது போல் துடிதுடித்தான். கடைசி காதல் காட்சியின் ‘ஷுட்டிங்’ நடக்கும் போது முதலில் அவனுக்கு இன்பக் கடலில் மிதப்பது போலிருந்தது; பிறகு வரவரச் சுற்றி நின்று பார்ப்பவர்கள் மேல் கோபம் கோபமாய் வந்தது. “இந்தச் சனியன்கள் எல்லாம் ஏன் இங்கே சுற்றி நிற்கின்றன?” என்று எண்ணிக் கொதித்தான். தன்னுடைய கோபத்தை யெல்லாம் பாவம், அந்தக் கிழஜமீந்தார் வேஷம் போட்டவன் மேல் காட்டினான். அவன் மேல் விழுந்த அடி உதைகளெல்லாம் வெறும் போலியாயிராமல் நிஜமான அடி உதைகளாகவே விழுந்தன; இந்தக் காட்சி வளர்த்தப்படுவதை அவன் விரும்பாததில் ஆச்சரியமில்லை யல்லவா?

“இன்றோடு முடியா விட்டால், நாளை தினம் நான் நிச்சயமாய் வரமாட்டேன்; ஓடியே போய்விடுவேன்” என்று அந்த ஜமீந்தார் வேஷக்காரன் அன்று காலையே டைரக்டரிடம் சொல்லியிருந்தான். ‘ஷுட்டிங்’ முடிந்ததும், “தீர்ந்ததா, இல்லையா?” என்று கேட்டான். “டன்” என்றார் டைரக்டர் டிம்பன். ஜமீந்தார் வேஷக்காரன் அப்பாஸாமியைப் பார்த்து “ஒருநாள் உன் முதுகுத் தோலை உரிக்கிறேனா, இல்லையா, பார்” என்று சொல்லி விட்டு விரைவாக நகர்ந்தான். அப்பாஸாமி “தூ” என்று காரித்துப்பினான்.

மாஸ்டர் மெதுவடை சொப்பன லோகத்திலிருந்து பூமியில் இறங்கினான். “டன்!” எல்லாம் முடிந்தது. மிஸ் ஹம்ஸா நாளை முதல் அருந்ததியாகி விடுகிறாள்; அவளருகில் இனிமேல் நெருங்க முடியாது. ‘ஸ்டூடியோ’வுக்குள் இது விஷயமாக வெகு கண்டிப்பான சட்டம் இருந்தது! காட்சிகள் நடிக்கப் படுகையில் தவிர மற்ற வேளைகளில் ஸ்திரீபுருஷர்கள் நெருங்கிப் பேசக்கூடாது. இத்தகைய சட்டம் இருந்தால் தான், அந்தந்த நட்சத்திரங்களுக்குரிய முதலாளி செட்டியார்கள், அவர்கள் டாக்கியில் நடிப்பதற்குச் சம்மதிப்பார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்னால் ‘ஸ்டூடியோ’வில் ஒரு சம்பவம் நடந்தது. ராமனும் சூர்ப்பனகையும் காமராவுக்கு முன் ஒரு தினுசாகக் காதல் ஸீனை நடித்த பிறகு, தூண்மறைவில் அதை மாற்றி நடித்து ‘பிராக்டீஸ்’ செய்து கொண்டார்கள். அதாவது, ராமபிரான் சூர்ப்பனகை மேல் காதல் செய்யத் தொடங்கவே அவள் “சீ! போ!” என்று புறக்கணித்தாள். இந்தத் தூண் மறைவுக் காட்சியை வேறு சிலர் பார்த்து விடவே, அவர்கள் இரண்டு பேருக்கும் தலைக்கு ஐம்பது ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் போர்டிலும் போட்டு விட்டார்கள்.

அப்பாசாமிக்கு இது தெரிந்ததுதான். ஸ்டூடியோவுக்கு வெளியில் ஹம்ஸாவைச் சந்திக்கலா மென்றாலோ, அதற்கும் ஒரு இடையூறு இருந்தது. மிஸ் ஹம்ஸா மற்ற நடிகைகளைப் போல், ஸ்டூடியோவிலேயே ஏற்படுத்தப் பட்டிருக்கும் ஜாகையில் வசிப்பவள் அல்ல; தினம் வேலை முடிந்ததும் அவள் தன் வீட்டுக்குப் போய்விடுவாள். அவளுடைய புருஷனைப் பற்றிச் சிலர் ஒரு விதமாய்ச் சொன்னார்கள். ஆனால் எல்லாரும் ‘புருஷன்’ ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொண்டார்கள். அவன் எப்படிப்பட்டவனோ, என்னமோ?

மேலும் அவளை அப்படிப் பின் தொடர்வதற்கும் அவள் சம்மதிக்க வேண்டாமா? அவளுடைய மனோபாவத்தையோ சிறிதும் கண்டறிய முடியவில்லை. சில சமயம் அப்பாசாமியுடன் காதல் காட்சியில் நடிக்கும் பொழுது ‘இது நடிப்பன்று, உண்மைக்காதல்’ என்றே தோன்றும். அவள் ஒரு மோகனச் சிரிப்பு சிரித்துக் கொண்டு இவனுடைய கன்னங்களைப் பரிகாசமாகக் கிள்ளும் போது ‘ஒரு நாளும் இது பொய்க் காதலாக – வேஷக்காதலாக – இருக்க முடியாது’ என்று நமது விதூஷக சக்ரவர்த்தி நினைத்ததுண்டு. ஆனால் அந்தக் கிழ ஜமீந்தாருடன் அவள் காதல் செய்யும் போதும் அவ்வளவு உண்மையாகத் தானே தோன்றுகிறது!

அப்பாசாமி ‘ஷுட்டிங்’ நடந்த இடத்திலிருந்து, வேஷத்தைக் கலைக்கும் இடத்துக்கு மிக்க மனச் சோர்வுடன் போய்க் கொண்டிருந்தான். வழியில் ராமர், லக்ஷ்மணர், விசுவாமித்திரர், ஜனகர், சீதை முதலியவர்களை அவன் பார்த்தான். இராமர் சிகரெட் புகை விட்டுக் கொண்டிருந்தார்; சீதை பீங்கான் கிண்ணத்தில் டீ குடித்துக் கொண்டிருந்தாள்; லக்ஷ்மணன் ஒரு பெரிய கொட்டாவி விட்டு தன்னை மீறி வந்த தூக்கத்தைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு சிமிட்டா பொடி உறிஞ்சினான். விசுவாமித்திரர் காதிலே பூணூலை மாட்டிக் கொண்டு அவசரமாய் எங்கேயோ போனார். இதையெல்லாம் பார்த்த அப்பாசாமிக்கு “இந்த வேஷமெல்லாம் எப்படிப் பொய்யோ, அதுபோல் உலக வாழ்க்கையே பொய்” என்ற எண்ணம் உதித்தது. இந்த உயிர் வாழ்விலே தான் என்ன ரஸம் இருக்கிறது? எதற்காக இந்த ஜீவனை வைத்துக் கொண்டு வாழவேண்டும்?…

சாயங்காலம் ஆறரை மணிக்கு ஜார்ஜ் டவுன் துங்கப்ப நாய்க்கன் வீதியில் அப்பாசாமி போய்க் கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு துணியிலே சுற்றப்பெற்ற ஒரு சிறு மூட்டை இருந்தது. அதற்குள் ஒரு டார்ச் லைட்டும், சுமார் பத்து அடி நீளம் மணிக்கயிறும் இருந்தனவென்பதை உங்களுக்கு நான் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது – மேலே கதையில் சுவாரஸ்யம் உண்டு பண்ணும் பொருட்டு.

மேற்படி துங்கப்ப நாய்க்கன் வீதியிலிருந்து கேவல்தாஸ் சந்து பிரியும் இடத்தில் ‘ஐரீஸ் மாளிகை’ என்று ஒரு பிரம்மாண்டமான கட்டடம் கட்டப் பெற்று வந்தது. இரண்டு மச்சு ஏற்கெனவே கட்டியாகிவிட்டது. இன்னும் நாலைந்து மச்சுக்களாவது கட்டுவார்களென்று அங்கே வானுறவோங்கி நின்ற விட்டங்கள், சாரங்களிலிருந்து தெரிய வந்தது.

இந்தக் கட்டடத்திற்குள், அப்புறம் இப்புறம் தன்னை ஒருவரும் கவனிக்கவில்லையா என்று பார்த்துக் கொண்டு அப்பாசாமி சரேலென்று நுழைந்தான். சில அடி தூரம் சென்றதும், நல்ல இருள் சூழ்ந்திருந்தது. காலால் தடவித் தடவி நடந்து நாலைந்து வாசற்படியைத் தாண்டி வெகு தூரம் உள்ளே சென்ற பிறகு மூட்டையை அவிழ்த்து உள்ளேயிருந்த டார்ச்லைட்டை எடுத்துப் பொத்தானை அமுக்கினான். வெளிச்சம் எதிரே பளிச்சென்று அடித்தது. அந்த வெளிச்சத்தில், அவன் என்ன பார்த்தான் என்று நினைக்கிறீர்கள்? பயங்கரம்! பயங்கரம்!! கயிற்றிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு மனித தேகம் தெரிந்தது.

எந்தக் கணத்தில் வெளிச்சம் அந்தத் தேகத்தின் மேல்பட்டதோ, அதே கணத்தில் அதன் தொண்டையிலிருந்து ஒரு உறுமல் சத்தம் வந்தது. இத்தகைய நிலைமையில் நீங்களும் நானுமாயிருந்தால், விழுந்தடித்து ஓடி, இருட்டில் எங்கேயாவது முட்டிக்கொண்டு திண்டாடுவோம்.

ஆனால் அப்பாசாமி சாமான்ய மனிதன் அல்ல; நாடக மேடையில் இது மாதிரி சந்தர்ப்பங்களை எத்தனைமுறை பார்த்திருப்பவன்! அவன் ஒரு நொடியில் சட்டைப்பையிலிருந்த கத்தியை எடுத்துத் திறந்து கொண்டு அந்த மனிதன் உபயோகித்த அதே ஏணியில் ஏறி சட்டென்று கயிற்றை அறுத்து எறிந்தான்.

கீழே விழுந்த தேகம் சிறிது நேரம் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தது. டார்ச் லைட்டை முகத்துக்கு நேரே பிடித்துப் பதை பதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் நமது ஹாஸ்ய நடிகன்! மெதுவாக மூச்சு வரத் தொடங்கியது. பிதுங்கிய விழிகள் உள் அமுங்கின. இன்னும் சில நிமிஷத்துக்கெல்லாம் அந்தத் தேகம் எழுந்து உட்கார்ந்து கம்மிய குரலுடன் “மாச்சுப் பெட்டி இருக்கிறதா?” என்று கேட்டது.

“மாச்சுப் பெட்டி எதற்கு? டார்ச்லைட் இருக்கிறதே?”

“டார்ச் லைட் என்ன பிரயோசனம் பீடி பத்தவைப்பதற்கு?”

அப்பாசாமிக்கு வெகு கோபம் வந்தது, “அடே முட்டாள், இத்தனை பெரிய காரியம் செய்து விட்டு, சாவதானமாய் பீடி பத்த வைக்க வேண்டுமென்கிறாயே, என்ன துணிச்சல் உனக்கு” என்றான்.

“அதற்காக என்ன பண்ணவேண்டுமென்கிறாய்?”

“என்ன பண்ணுகிறதா! என் காலிலே விழுந்து கெஞ்சு, மன்னிப்புக் கேட்டுக் கொள். இல்லாவிடில் போலீஸ்காரனிடம் ஒப்புவித்து விடுவேன்.”

“அப்படியா? உன் சமாசாரம் என்ன? நீ எதற்காக இங்கே வந்தாய்? கையிலே வைத்திருக்கும் கயிறு எதற்காகவோ?”

அப்பாசாமிக்குச் சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டு “இதோ பார். நாம் இருவரும் ஒரே இடத்திற்கு, ஒரே காரியத்திற்காக வந்தது நல்லதுதான். நீ, எதற்காக இந்தக் காரியம் செய்யத் துணிந்தாய் என்று சொல்லு. அது சரியான காரியமாக இருந்தால், இந்தப் புதுக் கயிற்றை உனக்கே கொடுத்து விடுகிறேன். நான் வேறு கயிறு வாங்கிக் கொள்கிறேன்” என்றான்.

“அதெல்லாம் முடியாது”

“என்ன முடியாது?”

“இன்னொரு தடவை நான் தூக்குப் போட்டுக் கொள்வது முடியாத காரியம். நீ போட்டு விட்டுப் போவதாயிருந்தால் சொல்கிறேன்.”

“அந்தப் பாவத்தையும் நான் சுமக்க வேண்டுமா? சரி சொல்லித் தொலை!”

கயிற்றில் தொங்கிய மனிதன் சொல்லுகிறான்:-

“ஐந்து வருஷத்துக்கு முன்னால் வரையில் நான் சந்தோஷமாயிருந்தேன். வன்னியத் தேனாம்பேட்டையில் எனக்குச் சொந்த வீடு இருக்கிறது. மௌண்ட் ரோடில் பழக்கடை வைத்திருந்தேன். மாதம் 30, 40 ரூபாய் வரும். வீட்டில் ஒரு பாதியை வாடகைக்கு விட்டிருந்ததிலும் பத்து ரூபாய் வந்தது. கவலை, கஷ்டம் இன்னதென்றே தெரியாமல் குஷியாக இருந்தேன்.”

“ஒரு நாள் இரவு நான் கடையை மூடிக்கொண்டு வீடு நோக்கிப் போன போது, எங்கள் வீதி மூலையில் ஓர் இளம் பெண் நின்று அழுது கொண்டிருந்தாள். அவளிடம் நெருங்கி, ‘ஏனம்மா அழுகிறாய்?’ என்று கேட்டேன். அவள், தானும் இன்னும் நாலைந்து ஸ்திரீகளும் ஒரு தனி வீட்டில் குடியிருந்ததாகவும் போலீஸ்காரர்கள் எல்லோரையும் அன்று விரட்டி விட்டதாகவும், அந்த ஸ்திரீகளைத் தனக்குப் பிடிக்காதபடியால் அவர்களோடு போகாமல் பின் தங்கியதாகவும் சொன்னாள். பத்திரிகையில் இது சம்பந்தமான சில விவரங்களை நான் படித்திருந்தேன். புதிய போலீஸ் சட்டம் அமுலுக்கு வந்திருப்பதாயும், அதன்படி சென்னைப் பட்டணத்தில் துன்மார்க்கத்தைத் தொழிலாகக் கொண்ட ஸ்திரீகள் எல்லோரும் அந்தந்த விடுதிகளிலிருந்து விரட்டி விடப்படுவதாகவும் பத்திரிகையில் போட்டிருந்தார்கள். இந்தச் சட்டத்தினால் எத்தனையோ பெண்கள் அநாதைகளாகத் தெருவில் நிற்க நேரிடுமென்றும், அவர்களை ஆதரிக்கப் பண உதவி செய்ய வேண்டுமென்றும், சில புண்யவதிகளும், புண்யவான்களும் பத்திரிகையில் விண்ணப்பம் செய்திருந்ததையும் படித்திருந்தேன். இதனாலெல்லாம் ஏற்கனவே கலக்க முற்றிருந்த எனக்குத் திக்கற்றுத் தெருவில் நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்ததும் ‘இவளை ஏன் நாம் ஆதரிக்கக்கூடாது?’ என்று தோன்றிற்று. அதன் பலன் தான் இப்போது என்னை இந்தக் காரியம் செய்யத் தூண்டிற்று…”

“சரி, வீட்டுக்கு அழைத்துப் போனாய்; அப்புறம் என்ன நடந்தது.”

“அப்புறம் என்ன? இரண்டு நாளைக்குள் வீட்டில் குடியிருந்தவர்கள் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள். பிறகு யாரும் குடி வரவேயில்லை. பழக்கடையும் நஷ்டமாகி வந்தது. தினம் ஒரு ரூபாய் பழம் – ஆரஞ்சும் ஆப்பிளும் அவளே தின்று விடுவாள்! வியாபாரத்தில் லாபம் எப்படி வரும்? இருந்த போதிலும் ஒரு மாதிரி சந்தோஷமாய்த் தானே இரண்டு மூன்று வருஷம் வாழ்க்கை நடத்தி வந்தோம். அவள் டாக்கியில் சேரும் வரையில்…”

“என்ன, டாக்கியில் சேர்ந்தாளா?”

“ஆமாம், டாக்கியில் சேர்ந்த பிறகு…”

“பெயர் என்ன? அவள் பெயர் என்ன?”

“குப்பம்மாள்…”

“நல்ல வேளை. மேலே சொல்லு.”

“டாக்கியில் அவள் சேர்ந்த பிறகு என்னுடைய வாழ்க்கை நரகமாயிற்று. அவளை தினம் நான் ஸ்டூடியோவுக்குக் கொண்டு போய் விடவேண்டும்; திருப்பி சாயங்காலம் அழைத்து வரவேண்டும். வீட்டில் சமையல் செய்து தயாராய் வைத்திருக்க வேண்டும். வெந்நீர் போட்டுக் கூட வைக்க வேண்டும். இதெல்லாமாவது போகட்டும். டாக்கி நடிப்புக்கு வீட்டில் ஒத்திகை பார்க்கத் தொடங்கி விடுவாள். நான் கோபித்துக் கொண்டால் இடி, இடியென்று சிரிப்பாள். இதெல்லாமிருக்கட்டும். நேற்றைக்கு என்ன செய்தாள் தெரியுமா? ஸ்டூடியோவில் ஒரு காட்சியில் தேள்கள் வரவேண்டியிருந்ததாம். இவள் அந்தத் தேள்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு வந்து என் படுக்கையில் வேண்டு மென்றுவிட்டு விட்டாள். நான் உளறி அடித்துக் கொண்டு எழுந்தோடியதைப் பார்த்துச் சிரிக்கிறாள்…”

“அடி பாவி!” என்றான் அப்பா சாமி. அவனுக்கு அந்த மனிதன் மேல் உண்மையாகவே இரக்கம் உண்டாயிற்று. “நீ உயிரை விடத் துணிந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் எங்கேயாவது ஓடிப் போய் விடுவதுதானே, பினாங்கு, சிங்கப்பூரைப் பார்க்க?” என்றான்.

“பணமிருந்தால் அப்படிச் செய்யலாம். என் கையில் தம்படி இல்லை. அவள் சம்பாதிப்பதையெல்லாம் தன் பேரிலேயே பாங்கியில் போட்டிருக்கிறாள். பணமில்லாமல் எப்படிக் கப்பல் ஏறுவது? நீ வாக்குக் கொடுத்தபடி என்னை மாட்டுவிட்டுத் தான் போக வேண்டும். இருக்கட்டும்; ஆனால் நீ எதற்காக வந்தாய்? என் மாதிரி காரணந்தானோ?”

“இல்லவே, இல்லை!” என்று அப்பாசாமி அழுத்தமாய்ச் சொன்னான். “அதற்கு நேர் விரோதமான காரணம். ஒரு பெண்ணின் மீது நான் காதல் கொண்டேன். அவளைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. அவள் இணங்கமாட்டாள் என்றுதான் உயிர் மேல் வெறுப்பு வந்தது.”

“அந்தப் பெண் யாரோ?”

“அவளும் ஒரு டாக்கி ஸ்டார்தான், ஆனால்…”

“அவள் பெயர் என்னவோ?”

“நாம் தான் இருவரும் சாகப் போகிறோமே? சொன்னால் மோசம் என்ன? அவள் பெயர் மிஸ் ஹம்ஸா”

உட்கார்ந்திருந்த மனிதன் எழுந்து ஒரு குதி குதித்தான். “பேஷ்! பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அவள்தான் நம்பபேர்வழி” என்றான்.

“என்ன உளறுகிறாய்?”

“உளறல் இல்லை; அவளே அவள்தான்.”

“வேறு பெயரல்லவா சொன்னாய்?”

“ஆமாம், குப்பம்மாள் என்று சொன்னேன். அந்தப் பெயர் டாக்கிக்கு சுகப்படாது என்று மிஸ் ஹம்ஸா என்று வைத்துக் கொண்டாள்.”

“என்ன” என்று சத்தம் போட்டுக் கொண்டு அப்பாஸாமி எழுந்திருந்தான். டார்ச் லைட்டையும் கயிற்றையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

மற்றவன் “ஆமாம்; ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. அவளுடன் வாழ முடியாமல் நான் தூக்குப் போட்டுக் கொள்ள வந்தேன். அவள் கிட்டவில்லையே என்று நீ சாக நினைத்தாய். இரண்டு பேரும் சாக வேண்டாம். எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விடு. நாளையே நான் கப்பலேறிக் கண் காணாத சீமைக்குப் போய் விடுகிறேன்.”

“எவ்வளவு? ஆயிரம் ரூபாயா?”

“ஆமாம்; ஆயிரம் ரூபாய்தான். பிரமாதமில்லை. இருக்கட்டும், உன் பெயர் என்ன? ஒரு வேளை மாஸ்டர் மெதுவடை என்பது நீதானோ?”

“ஆமாம், நான் தான். உனக்கு எப்படித் தெரிந்தது?”

“அடாடா! நான் என்னத்தைச் சொல்ல? உன் பேரில் அவளுக்கு இருக்கும் அபிமானத்துக்கு அளவில்லை. இதோ பார்! (கன்னத்தைக் காட்டி) கிள்ளுக் காயம் தெரிகிறதா? நேற்று அவள் கிள்ளியதுதான். நான் அழுதேன். அப்போது அவள் ‘சீ! இந்த ஒரு கிள்ளுக்கு அழுகிறாயே? மெதுவடையை மொத்தம் 27 தடவை கிள்ளியிருக்கிறேன். இன்னும் அவருக்கு அலுக்கவில்லை. உனக்குப் பதில் அவர் இந்த வீட்டில் இருந்தால் எவ்வளவு சௌகரியமாயிருக்கும்?’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். ஐயையோ! அட பாவி! துரோகி! எங்கே ஓடுகிறாய்? ஐயோ கயிற்றைக் கூடக் கொடுக்காமல் போகிறாயே? என் கயிற்றையும் அறுத்து விட்டாயே! என்ன செய்வேன்! ஏ, மெதுவடை! நில்லு! நில்லு!…”

இதற்குள் ஒரே ஓட்டமாய் ஓடி வெளி வாசற்படி வரையில் சென்று விட்ட மாஸ்டர் மெதுவடை அங்கே நின்று திரும்பிப் பார்த்து, “அதெல்லாம் பலிக்காது அப்பனே! நேரே வீட்டுக்குப் போய்ச் சேர். இதோ போலீஸ் ஸ்டேஷனில் உன்னைப்பற்றி எழுதி வைக்கப் போகிறேன். நீ பாட்டுக்குச் செத்துப் போய் விட்டால், அப்புறம் என் கதி என்ன ஆவது? மெதுவாக அவளை என் கழுத்தில் கட்டிவிடலாமென்று பார்க்கிறாயோ?” என்று சொல்லிவிட்டு இரண்டே தாண்டலில் வீதியை அடைந்து ஓடினான்.

கதை முடிந்தது. இந்தக் கதையை படமெடுத்து விடலாமென்று நினைக்கும் டாக்கி முதலாளிகளுக்கு மட்டும் ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறேன். என்னுடைய அனுமதியில்லாமல் இதைப் படம் பிடிப்பவர்கள் கட்டாயம் கஷ்டத்திற்குள்ளாவார்கள். அவர்களில் யாராவது “மாஸ்டர் மெதுவடை” என்ற சமூகப் படம் பிடிக்கத் தொடங்குவார்களானால், அவர்கள் அதை முடிப்பதற்குள் “மிஸ்டர் ஆமைவடை” என்ற படம் வெளிவந்து விடுவது நிச்சயம்.

இத்துடன்

அமரர் கல்கியின் மாஸ்டர் மெதுவடை

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Master Medhuvadai Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,master medhuvadai Audiboook,master medhuvadai,master medhuvadai Kalki,Kalki master medhuvadai,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *