Mayilvizhi Maan Kalki | Kalki Times
Mayilvizhi Maan Kalki Short Story Kalki Times
Mr and Mrs Tamilan Presents Kalki Times
அமரர் கல்கியின் சிறு கதைகள்
மயில்விழி மான்
கல்கி
All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u
Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/
Mayilvizhi Maan Kalki
அன்றொரு நாள் விழுப்புரத்திலிருந்து சென்னைக்குச் சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தேன். புதுச்சேரி விடுதலை இயக்கத் தலைவர் ஒருவருடைய வண்டி. பிரெஞ்சுப் போலீஸாரிடம் அகப்படாமல் துரிதமாகச் சென்று அந்த வண்டிக்குப் பழக்கமாயிருந்தது. ஆகையால் வண்டி ஓட்டியவரிடம் எவ்வளவு சொல்லியும், அவரால் மணிக்கு அறுபது மைல் வேகத்துக்குக் குறைவாகப் போக முடியவில்லை.
திடீரென்று சாலையின் நட்ட நடுவில் ஒருவர் வழி மறித்து நின்று வண்டியை நிறுத்தும்படி கையைக் காட்டினார்.
“ஆள்மேலே ஓட்டட்டுமா? ஒதுக்கி ஓட்டட்டுமா?” என்று டிரைவர் கேட்டார்.
“வேண்டாம் வேண்டாம்! சற்று நிறுத்தித்தான் பார்க்கலாமே! ஏதாவது அவசரமாக ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டிய காரியமாயிருக்கலாம்!” என்றேன்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. வண்டியை நிறுத்தச் சொல்லி சிகரெட்டுப் பற்றவைக்க நெருப்புப் பெட்டி இருக்கிறதா என்று கேட்பார்கள். இந்தப் பக்கத்து வழக்கம் அது!” என்று சொல்லிக் கொண்டே டிரைவர் வண்டியை நிறுத்தினார்.
சாலையில் நின்றவர் என் பக்கம் வந்து, “ஐயா! மிக்க அவசரமான காரியம் ஒன்று தங்களிடம் சொல்ல வேண்டும். வண்டியில் ஏறிக்கொண்டால் தாம்பரம் போவதற்குள் சொல்லி முடித்துவிடுவேன்! ஏறிக் கொள்ளலாமா?” என்று கேட்டுக் கொண்டே என்னுடைய பதிலுக்காக காத்திராமல் கதவைத் திறந்து வண்டிக்குள் காலை வைத்துவிட்டார். அப்புறம், அவரைப் பிடித்து வெளியே தள்ளினால் தவிர இறங்கச் சொல்வதற்கு வேறுவழியில்லை. அதைக் காட்டிலும் தாம்பரத்தில் கொண்டு போய் இறங்கி விட்டு விடுவதே நல்லது என்று எண்ணி அவர் உட்காருவதற்கு இடங் கொடுத்தேன்.
டிரைவர் மறுபடி வண்டியை விட ஆரம்பித்த போது, அதன் மெல்லிய இயந்திரக் கருவிகளின் மீது தம் கோபத்தையெல்லாம் காட்டினார். வண்டி பூகம்பத்தினால் அசைவதுபோல் அசைந்துவிட்டுத் தடார், படார் என்று சத்தமிட்டுக் கொண்டு, கிளம்பும் போதே மணிக்கு அறுபது மைல் வேகத்தில் கிளம்பிற்று!
“என்ன அவ்வளவு அவசரமாக என்னிடம் சொல்ல விரும்பிய காரியம்?” என்று கேட்டேன்.
“உம்முடைய தலைமையில் ஒரு கூட்டம் போட்டு ‘பழந்தமிழர் நாகரிகம்’ என்னும் பொருள்பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வேண்டுமென்று சில நாளாக எனக்கு ஆவல்!”
இதைக் கேட்டதும் என்னை அறியாமல் வாய் விட்டுச் சிரித்து விட்டேன்.
“எதற்காகச் சிரிக்கிறீர்?” என்று கேட்டார்.
“எதற்காகவா? எல்லாம் வள்ளுவர் பெருமானுடைய வாக்கை நிறைவேற்றுவதற்காகத்தான். “
“‘இடுக்கண் வருங்கால் நகுக!’ என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார் அல்லவா?”
“எனக்குத் தெரிகிறது. சொற்பொழிவு ஆற்றுவதற்கு இவ்வளவு அவசரமா வண்டியைச் சாலையின் நடுவில் நிறுத்த வேண்டுமா என்று நினைத்துச் சிரிக்கிறீர். யக்ஷனுடைய கேள்விக்குத் தருமபுத்திரர் கூறிய பதிலை உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். இலக்கியத் துறையில் ஈடுபட்டவர்கள் திடீர் திடீரென்று ஒவ்வொருவராகக் காலமாகிக் கொண்டு வருகிறார்கள்!… “
அவர் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறாரா, அல்லது எனக்கு எச்சரிக்கை செய்கிறாரா என்று எண்ணி வியந்தேன்.
“ஆகையால், ஒவ்வொருவரும் ஏதாவது முக்கியமாகச் செய்ய வேண்டிய காரியமிருந்தால், ஒத்திப் போடாமல் உடனே செய்து விட வேண்டும். இந்த வண்டி போகிற வேகத்தைப் பார்த்தால்…?”
“எல்லாவற்றுக்கும், நீங்களும் ஒத்திப் போடாமல் உடனே ஆரம்பித்துவிடுவது நல்லது. “
“நான் இன்றைக்கு உயிரோடிருப்பதும், உம்முடன் இந்த வண்டியில் ஏறி வருவதும் மிக மிக அதிசயமான காரியங்கள். ஆறு மாதத்துக்கு முன்பே என் ஆயுள் முடிந்திருக்க வேண்டியது. என்னுடைய அதிசயமான அநுபவத்தைத் தமிழ் மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் என்னைக் காப்பாற்றி இவ்வளவு நாள் உயிரோடு வைத்திருக்கிறார் என்று நம்புகிறேன். இறைவனுடைய கருணையையும் ரொம்பச் சோதிக்கக் கூடாது அல்லவா? ஆகையால் இதோ என் கதையை ஆரம்பித்து விடுகிறேன். ஆமாம்; கதை போலத் தான் இருக்கும். உண்மையில் நடந்தது என்று சொன்னால், யாரும் நம்பப் போவதில்லை. ஆகையால் கதையென்று சொல்லிவிடுவதே நல்லது. நீரும் என் அநுபவத்தை எழுதுவதாயிருந்தால், ‘இந்தக் கதையில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் எல்லாம் கற்பனையே; யாரையும் குறிப்பிடவில்லை’ என்று திட்டமாக அறிவித்து விடுவது நல்லது!” என்று சொன்னார்.
சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னால் என் பெயரைப் பத்திரிகைகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வழியாக இந்தியாவுக்குப் பிரியாணமான ஓர் ஆ காச விமானம் காணாமற் போய்ப் பல நாள் வரை யாதொரு தகவலும் தெரியாமலிருந்ததல்லவா? அந்த விமானத்தில் பிரயாணம் செய்தவர்களின் ஜாபிதாவில் மதிவாணன் எம் ஏ என்ற பெயர் இருந்திருக்கும். அது தான் என் பெயர். அதற்கு ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு முக்கியமான ஆராய்ச்சிக் கோஷ்டியில் சேர்ந்து அமெரிக்காவுக்கு நான் சென்றேன். இந்தியாவிலிருந்து இப்போதெல்லாம் பல நிபுணர் கோஷ்டிகளும் கலைஞர் கோஷ்டிகளும் உலகிலுள்ள பற்பல நாடுகளுக்கும் போய்க் கொண்டிருக்கின்றனர் அல்லவா? அந்தந்த நாடுகளில் பற்பல அபிவிருத்தி மார்க்கங்களைத் தெரிந்து கொண்டு வந்து இந்தியாவில் வளங்கொழிக்கச் செய்வதற்காகத்தான் அவர்கள் போகிறார்கள். நான் போன காரியம் அமெரிக்காவில் டென்னஸி மாகாணத்தில் உள்ள வாத்துப் பண்ணைகளைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்வதற்காக. அங்கேயுள்ள வாத்து ஒவ்வொன்றும் தினம் எட்டு படி பால் கொடுக்கிறதாம்! நம் ஊரில் மட்டும் ஒரு வாத்து அரைப்படி பாலுக்கு மேல் கொடுக்க மறுப்பதேன்? டென்னஸி பண்ணையில் உள்ள வாத்துக்களுக்கு அப்படி என்ன ஆ காரம் கொடுத்துப் போஷிக்கிறார்கள்? அவை பிறக்கும் போது, எடை எவ்வளவு? பால் கறப்பதற்கு முன்னாலும் பின்னாலும் எடை எவ்வளவு? என்னென்ன விடமின் சத்துக்கள் உணவில் சேர்த்துக் கொடுப்பதால் அவை அவ்வளவு பால் கறக்கின்றன? அந்த விடமின்களை நாமும் அமெரிக்காவிலிருந்து வரவழைத்து நம்மூர் வாத்துகளுக்குக் கொடுக்கலாமா? அல்லது வாத்துக்களையே தருவித்து விடலாமா? இம்மாதிரிப் பிரச்சனைகளை நேரில் ஆராய்ந்து தெரிந்துகொண்டு வருவதற்காக இந்திய சர்க்கார் என்னையும் என் சகாக்களையும் அனுப்பி வைத்தார்கள்.
உலகெங்கும் ஆராய்ச்சி அறிவைப் பரப்புவதற்காக அமெரிக்கக் கோடீசுவரரான ராக்பெல்லர் பிரபு ஒரு பெரிய நிதியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த நிதியிலிருந்து எங்கள் ஒவ்வொருவருடைய பிரயாணச் செலவுக்காகவும் இருபத்தையாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அதற்குச் சமமான தொகை இந்திய சர்க்காரும் கொடுத்தார்கள்.
அடுத்த ஐந்து வருஷத் திட்டத்தில் இந்தியாவில் மொத்தம் இருபது கோடி வாத்துக்கள் வளர்த்து இரு நூறு லட்சம் படி வாத்துப் பால் உற்பத்தி செய்தே தீருவது என்று ஸ்ரி குல்ஜாரிலால் நந்தா தீர்மானித்திருக்கிறார் அல்லவா? இதை நீங்கள் மனத்தில் வைத்துக் கொண்டால், எங்களது ஆராய்ச்சிப் பிரயாணம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
துரதிர்ஷ்டவசமாக நாங்கள் அமெரிக்கா சென்ற சமயம் எங்கள் ஆராய்ச்சிக்கு உகந்த சமயமாக இல்லை. சென்ற சில வருஷங்களாக அமெரிக்க மார்க்கெட்டிலும் உலகமார்க்கெட்டிலும் வாத்துப்பால் ‘ஸப்ளை’ மிக அதிகமாகி விலை குறைந்து வந்ததாம். இதைச் சமாளிப்பதற்காக அமெரிக்கா வாத்துப் பண்ணை முதலாளிகள் இரண்டு வருஷங்களுக்கு வாத்துப் பால் உற்பத்தியை அடியோடு நிறுத்திவிடத் தீர்மானித்து விட்டார்கள். வாத்துகளையெல்லாம் பனிக்கட்டியில் வைத்துப் பதனிட்டுப் போர்மோஸாத் தீவில் உள்ள சீனத்துருப்புகளுக்கு உணவாக அனுப்பி வந்தார்கள். ஆகவே நாங்கள் போன காரியம் என்னவோ, கை கூடவில்லை.
ஆயினும், எங்களுக்காக இந்திய சர்க்கார் செலவு செய்த பணம் வீணாகப் போய் விடக் கூடாது என்று எங்கள் கோஷ்டியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு ஆராய்ச்சியில் ஈடுபடத் தீர்மானித்தார்கள். ஒருவர் மெக்ஸிகோவில் உள்ள முட்டையிடும் குதிரைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்குச் சென்றார். இன்னொருவர் பிரேஸில் தேசத்தில் பருத்திக் கொட்டைக்குப் பதிலாகக் காப்பிக் கொட்டை தின்று காப்பியாகவே கறக்கும் காளை மாடுகளைப் பற்றித் தெரிந்து வரச் சென்றார்.
நானும் பல யோசனைகள் செய்த பிறகு ஆஸ்திரேலியா தேசத்துக் கங்காருகளிடம் புதிதாகப் பரவி வரும் மர்ம நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தீர்மானித்து ஆ காய விமானத்தில் புறப்பட்டேன். ஆனால் கடவுளுடைய விருப்பம் வேறுவிதமாக இருந்தது. பழந்தமிழர் நாகரிகத்தைப் பற்றிய ஓர் அற்புதமான உண்மையை என் மூலமாக உலகத்துக்கு வெளிபடுத்த வேண்டுமென்பது இறைவனுடைய சித்தம். எனக்கு ஏதாவது திடீரென்று நேர்ந்து விட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். நான் நேரில் பார்த்த அத்தகைய அற்புதம் ஒன்று இருந்ததற்குச் சாட்சியே இல்லாமற் போயிருக்கும். ஆகையினாலே தான் உம்மிடம் அதைப்பற்றிச் சொல்வதற்கு இவ்வளவு அவசரப்படுகிறேன்.
ஆ காச விமானம் புறப்பட்டுப் பஸிபிக் சமுத்திரத்தின் மேல் பறந்து போய்க் கொண்டிருக்கிறது. அந்த மாபெரும் சமுத்திரத்தின் அகலம், நீளம், ஆழம் ஆகியவை குறித்தும், அதன் விஸ்தாரமான நீர்ப்பரப்பிலே எத்தனை கோடானுகோடி ஜீவராசிகள் வாழ்ந்திருக்கின்றன என்பது குறித்தும் யோசனை செய்து கொண்டிருந்தேன். அது மட்டுமா? ஆதிகாலத்திலிருந்து எத்தனை எத்தனை வியாபாரக் கப்பல்கள் அந்தச் சமுத்திரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன! எத்தனை ஸ்பானிஷ் கப்பல்கள் மெக்ஸிகோவின் தங்கத்துடன் அந்தக் கடலின் ஆழத்தை அடைந்திருக்கின்றன. எத்தனை பிரிட்டிஷ் கப்பல்கள்! எத்தனை பிரஞ்சுக் கப்பல்கள்! முன்னொரு காலத்தில் தமிழர்கள் பெரிய பெரிய நாவாய்களை செலுத்திக் கொண்டு ஏழு சமுத்திரங்களிலும் பிரயாணம் செய்திருக்கிறார்கள். தமிழர்களுடைய கப்பல்கள் கூட அந்தச் சமுத்திரத்தின் அடியில் கிடத்தல் கூடும். அவற்றில் உள்ள செல்வங்களையெல்லாம் மட்டும் திரட்டிச் சேர்த்து எடுக்க முடியுமானால்?…
இவ்வாறு நான் எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது, எங்கள் ஆ காச விமானம் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக ஆடத் தொடங்கியது. பெரியதொரு சுழற் காற்றில் அகப்பட்டுக் கொண்டதாகத் தெரிய வந்தது. பிரயாணிகளின் முகங்களில் கவலை குடி கொண்டது. அவர்கள் கவலை படுவதற்குக் காரணம் உண்டென்பதும் தெரியவந்தது. சுழற்காற்றின் மையத்தில் சிக்கிக் கொண்டால் விமானம் தப்புவது துர்லபம்; இந்த மையத்திலிருந்து தப்புவதற்காக விமான ஓட்டிகள் திசை மாறிச் செலுத்தினார்கள். வெகு நேரத்திற்குப் பிறகு சுழற்காற்றிலிருந்து விமானம் தப்பி விட்டதாகத் தெரிந்தது. ஆனால் போகும் திசையையும் அது அடியோடு தவறிவிட்டது. திசையறியும் கருவி வேலை செய்யவில்லை. ரேடியோக் கருவி பழுதாகி விட்டது. விமானம் பறந்து கொண்டேயிருந்தது. ஆனால் எங்கே போகிறது என்று கண்டு பிடிக்க முடியவில்லை. விமான ஓட்டிகளின் மூளைகளும் இதற்குள் குழம்பிப் போயிருக்க வேண்டும். பஸிபிக் சமுத்திரத்தின் ஒரு மூலை பகுதியில் நாங்கள் ஏறியிருந்த விமானம் வட்டமிட்டுச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. சீக்கிரத்தில் பெட்ரோலும் தீர்ந்து போய்விட்டது.
அவரவர்களுக்கு ‘பாராசூட்’ கருவியை எடுத்துக் கொண்டு கீழே குதிக்க வேண்டியது தான் என்று அறிவித்து விட்டார்கள்.
கீழே குதித்தால், பஸிபிக் சமுத்திரத்திலேதான் குதிக்க வேண்டும்? அதில் என்ன பயன்? எத்தனை நேரம் உயிரோடு இருக்க முடியும்? அதை விட விமானத்திலிருந்தபடியே விழுந்து உயிர் விடுவது மேல் அல்லவா?
இந்தக் கேள்விக்கும் பதில் கிடைத்தது.
பஸிபிக் சமுத்திரத்தில் லட்சக் கணக்கில் சிறிய சிறிய தீவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கண்டுபிடித்து இவ்வளவு தீவுகள், இங்கிங்கே இருக்கின்றன, என்று இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. கண்டு பிடிக்கப்படாத தீவுகள், அநாகரிகக் காட்டுமிராண்டி ஜாதியார் வசிக்கும் தீவுகள், பாதி நாகரிகமடைந்த மக்கள் வாழும் தீவுகள் இப்படி எவ்வளவோ இருக்கின்றன. அத்தகைய தீவுகளில் ஒன்றில் தற்செயலாக இறங்கினால், உயிர் தப்பிப் பிழைக்க ஏது உண்டு.
ஆனால் இந்த அற்ப நம்பிக்கையானது அநேகருக்கு விமானத்திலிருந்து வெளியில் குதிப்பதற்குரிய தைரியத்தை அளிக்கவில்லை.
சாதாரணமாக நான் அவ்வளவு தைரியசாலி என்று பெயர் பெற்றவன் அல்லவென்றாலும் அந்தச் சமயத்தில் எங்கிருந்தோ எனக்குத் தைரியம் பிறந்தது.
பாராசூட்டை எடுத்துக் கவனமாக மாட்டிக் கொண்டேன். கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டேன். விமானத்திலிருந்து வானவெளியில் குதித்தேன்.
‘உயிர் போவது’ என்று சொல்கிறார்களே, அது என்ன என்பது எனக்கு அப்போது தெரிந்தது. என் மண்டை வெடிப்பது போலவும், உடம்புக்குள்ளிருந்து உயிர் வெளிப்பட்டு மேலே போய்விட்டது போலவும், உடம்பு மட்டும் கீழே விழுவது போலவும் தோன்றியது. ‘ஆ கா! இந்தப் பாராசூட் ஏமாற்றிவிட்டது! துரோகம் செய்து விட்டது!” என்று எண்ணினேன். நல்ல வேளையாக, உடனே நினைவு இழந்துவிட்டேன். அப்புறம் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.
வாயிலும் மூக்கிலும் உப்பு ஜலம் ஏறி மூச்சுத் திணறுவது போன்ற உணர்ச்சியுடன் சுய நினைவு பெற்றேன். பொல்லாத உயிர் என் உடம்பை விட்டுப் போய் விடவில்லை. இந்திய சர்க்காரிடம் பெற்ற உதவி தொகைக்கு ஈடாக ஏதேனும் நான் ஆராய்ச்சி செய்து என் கடனைக் கழித்தே ஆகவேண்டும் அல்லவா? அதற்காகவே பிழைத்தேன் போலும்! வாயில் புகுந்திருந்த உப்பு ஜலத்தைத் துப்பிக் கொண்டு எழுந்து நின்றபோது கடலோரத்தில் இடுப்பளவு ஜலத்தில் நிற்கக் கண்டேன். பெரிய அலை ஒன்று என்னை மோதி அடித்துக் கொண்டு சென்றது. அலை போன பிறகு பார்த்தால் ஈர மண்ணில் தரையில் கிடந்தேன். சட்டென்று எழுந்து இன்னும் கொஞ்சம் கரையை நோக்கிச் சென்றேன். அங்கிருந்த ஒரு மலைப் பாறை மீது தாவி ஏறிக் கொண்டேன். பிறகு நாலா புறமும் பார்த்தேன். அதிர்ஷ்டம் என்று சொல்வதா, கடவுளின் கருணை என்று சொல்வதா என்று தெரியாமல் திகைத்தேன். பஸிபிக் சமுத்திரத்தின் மத்தியில் ஆங்காங்கு இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேனே, அந்தத் தீவுக்கூட்டங்களில் ஒன்றில் நான் இருப்பதாக அறிந்து கொண்டேன். ஒரு தீவின் கரையில் நான் ஒதுங்கியிருந்தேன். சுமார் ஒரு மைல் தூரத்துக்கு அப்பால் இன்னொரு தீவு தெரிந்தது. அதற்கு அப்பால் கொஞ்ச தூரத்தில் இன்னொரு தீவு காணப்பட்டது.
பஸிபிக் சமுத்திரத்திலுள்ள சில தீவுகள் சொர்க்கலோகத்துக்கு இணையான வனப்பும் வளமும் பொருந்தியவை என்று புத்தகங்களில் படித்திருந்தது நினைவு வந்தது. அமெரிக்காவில் நான் ஏறிய விமானம் என்னை நேரே சொர்க்கலோகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டதாகவே எண்ணிக் கொண்டேன்.
என்னுடைய அதிர்ஷ்டத்தை எண்ணி நானே சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கையில் என்னுடன் விமானத்தில் வந்தவர்களைப் பற்றிய நினைவு உண்டாயிற்று. கப்பல்களிலும் ஆ காச விமானங்களிலும் பிரயாணம் செய்கிறவர்கள் சாதாரணமாக ‘பைனாகுலர்’ என்னும் தூரதரிசினிக் கண்ணாடி கொண்டு போவது வழக்கம், ஆம்; கிரிக்கெட், புட்பால், விளையாட்டுக்கள் பார்க்கப் போகிறவர்களும் ‘பைனாகுலர்’ கொண்டு போவதுண்டு. நான் என் தோளில் மாட்டித் தொங்க விட்டுக் கொண்டிருந்த ‘பைனாகுலர்’ இத்தனை ஆபத்துகளுக்கும் தப்பிச் சேதமாகமாலிருந்தது. அதை எடுத்துக் கண்களில் வைத்துக் கொண்டு முதலில் எனக்கு எதிரே அகண்டமாக விரிந்து கிடந்த சமுத்திரத்தை நோக்கினேன்.
தெய்வமே! ஏன் பார்த்தோம் என்று கதி கலங்கும்படியான காட்சியைக் கண்டேன். நாங்கள் வந்த விமானம் கடல் நடுவில் விழுந்து கொஞ்சங் கொஞ்சமாக அமுங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்த பிரயாணிகள் சிலர் வெளியேறிக் கடலில் நீந்த முயற்சி செய்தார்கள். இது ஒரு கணம் தெரிந்தது. மறு கணத்தில், அம்மா! கூட்டம் பாய்ந்து வந்ததைக் கண்டேன். அந்த மீன்களின் கோரமானவாய்க்குள், நீத முயன்றவர்கள் சென்றதையும் கண்டேன். என் உடம்பு நடுங்கியது. எப்படிப்பட்ட விபத்திலிருந்து தப்பினோம் என்று எண்ணிக் கொண்டு எனக்கு வலது புறத்திலிருந்த தீவின் மீது பார்வையைச் செலுத்தினேன். அங்கே அதைவிடப் பன்மடங்கு பயங்கரமான காட்சி எனக்குக் காத்திருந்தது.
ஆப்பிரிக்காத் தேசத்து உட்பிரதேசங்களில் நர மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டி ராட்சஸர்கள் வசிப்பதாகக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? புத்தகங்களில் படித்திருப்பீர்கள்; சினிமாக்களிலும் பார்த்திருப்பீர்கள். அம்மாதிரி ராட்ஸசக் கூட்டம் ஒன்று அங்கே களிக் கூத்தாடிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தின் களிப்புக்குக் காரணம் என்ன வென்பது தெரிந்து போயிற்று. ஆ காச விமானத்தில் எனக்குப் பக்கத்து ஆசனத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சாபி நண்பர் அக்கூட்டத்தின் மத்தியில் நின்று கொண்டிருந்தார். அவர் முகத்தில் காணப்பட்ட பீதியையும் வேதனையையும் சொல்ல முடியாது என்னால் ஒரு கண நேரத்துக்கு மேல் அதைப் பார்க்க முடியவில்லை. நான் இறங்கியிருக்கும் தீவிலும் அத்தகைய காட்டுமிராண்டிகள் தான் இருக்கிறார்களோ, என்னமோ? இப்படி நினைத்ததும் என் உடம்பு நடுங்கியது. தீவுக்குள் போகலாமா, வேண்டாமா என்று யோசித்தேன். அதற்குள் ஏதோ கடலில் சலசலப்புச் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட திசையை நோக்கிப் பைனாகுலரை வைத்துப் பார்த்தேன். நூறு இருநூறு இல்லை, ஆயிரம் பதினாயிரம் சுறா மீன்கள் ஒரு பெரிய யானை மந்தையைப் போல் கடல் நீரைக் கிழித்துக் கொண்டு நான் இருந்த திசையை நோக்கி வெகுவேகமாக வந்து கொண்டிருந்தன. அப்போது நான் அடைந்த பயத்தைப் போல் என் வாழ்நாளில் எப்போதும் அடைந்ததில்லை.
என் நிலைமை இன்னதென்பதை என்னுடைய பயமே எனக்கு உணர்த்திவிட்டது. அது வரைக்கும் கடல் நீர் வடியும் நேரமாயிருந்தபடியால், நான் இருந்த தீவைச் சுற்றிக் கொஞ்சம் பூமிப் பிரதேசம் தெரிந்தது. கடல் பொங்க ஆரம்பித்து விட்டால் ஜலம் தரையெல்லாம் முழுக அடித்துக் கொண்டு மேலே வந்து விடும். நான் அப்போதிருந்த பாறை கூடத் தண்ணீரில் மூழ்கிவிடும். அப்படியென்றால், சுறாமீன்கள் அங்கேயும் வந்துவிடக்கூடும்.
நான் பார்த்துக் கொண்டிருந்தபோது கடல் பொங்க ஆரம்பித்து விட்டதைப் பார்த்தேன். உடனே குதித்து எழுந்து அந்தக் கற்பாறைகளின் மீது தத்தித் தாவி ஏறினேன். அங்கங்கே வழுக்கிய இடங்களில் கீழே விழுந்து மறுபடி எழுந்தேன். உயிர் மீதுள்ள ஆசை, முக்கியமாக அந்தச் சுறா மீன்களின் பற்களின், இடையில் அகப்பட்டுக் கொள்வதைப் பற்றிய பீதி என்னை அங்கு நிற்கவிடாமல் துரத்தி அடித்தது.
சுமார் அரை மணி நேரம் விழுந்து விழுந்து ஓடித்தாவி ஏறி மூச்சுத் திணறிய பிறகு, அவ்வளவு முயற்சியும் வீண் என்று கண்டேன்.
எனக்கு எதிரே செங்குத்தான ஒரு பெரிய மதில் சுவர் நின்றது. அண்ணாந்து பார்த்தால் உச்சித் தெரியாதபடி அவ்வளவு உயரமான சுவர், அந்தச் சுவர் ஓரமாகவே வழுக்கிய பாறைகளில் நிதானமாகக் கால் வைத்து நடந்து சிறிது தூரம் சென்றேன். சுவர் முடிவில்லாமல் சென்றது.
ஏற்கனவே களைத்துப் போயிருந்தேன். அத்துடன் ஏமாற்றமும் மனச்சோர்வும் சேர்ந்து கொண்டன. அந்த மதில் சுவரில் மண்டையை மோதிக் கொள்ளலாமா என்று தோன்றியது. அதில் ஒன்றும் பயனில்லை. அதைக் காட்டிலும் மலைப்பாறை உச்சியிலிருந்து கடலில் குதித்து உயிரை விடலாம் என்று தோன்றியது. ஆ காச விமானத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்து விட்டு இப்போது உயிர் விடுவதற்காகப் பாறையிலிருந்து குதிக்க வேண்டியிருப்பதை நினைத்தால் எனக்கே சிரிப்பு வந்தது.
கடலோரமாக உயரமான பாறையொன்றை அணுகி அதன் பேரில் உட்கார்ந்தேன். என்னுடைய நிலைமை பற்றி நிதானமாக யோசிக்கலுற்றேன். எதிரே யானைகளைக் கூட விழுங்கக் கூடிய சுறாமீன்கள் மந்தை மந்தையாக உலாவும் கடல். அப்பால் மனிதர்களைப் பலி கொடுத்து உண்ணும் ராட்சஸ மக்கள் வசிக்கும் தீவு. இந்தப் பக்கம் திரும்பினால், கண்ணுக்கெட்டிய தூரம் வானை நோக்கி உயர்ந்திருந்த மதில் சுவர். நான் இருந்த பாறைக்குச் சற்றுத் தூரத்தில், இன்னொரு பாறையின் பேரில் இரண்டு பெரிய கழுகுகள் வந்து உட்கார்ந்தன. அவை தான் எனக்குத் தோழர்கள். அவற்றின் நோக்கம் என்ன என்பது பற்றி அதிகமாகச் சந்தேகப்படுவதற்கில்லை. அடுத்தத் தீவிலுள்ள ராட்சஸ மக்களை விட இந்தக் கழுகுகள் நல்லவை தான். எனெனில் நான் இறந்து போகும் வரையில் காத்திருப்பதற்கு வேண்டிய பொறுமை இவற்றுக்கு இருக்கின்றன அல்லவா?
முடிவில் இந்தக் கழுகுகளுக்கு இரையாவதற்குத் தானா உயிர் பிழைத்தோம் என்று எண்ணினேன். இல்லை, இல்லை. வேறு வழி ஏதேனும் இருக்க வேண்டும். உயிர் உள்ள வரையில் நம்பிக்கைக்கு இடம் உண்டு அல்லவா? மீண்டும் பிரயத்தனம் செய்து பார்க்க வேண்டும். இந்தக் கோட்டை மதில் சுவர் மேல் ஏறுவதற்கு எங்கேயாவது வழி இல்லாமலா போகும்? எப்படியாவது இந்த மதிலைக் கடந்து உள்ளே போய்ப் பார்க்க வேண்டும். யாரோ நாகரிகத்தில் முன்னேற்றமடைந்த மனிதர்கள் இந்த மதிலைக் கட்டியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அடுத்தாற்போல், அந்த இன்னொரு தீவில் உள்ள ராட்ஸதர்கள் கோட்டைக் கட்டிக்கொள்ளவில்லையே? ஒரு வேளை அந்தக் காட்டுமிராண்டிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்தத் தீவில் உள்ளவர்கள் இவ்வளவு பெரிய மதில் சுவர் எழுப்பியிருக்கிறார்களோ என்னமோ? அப்படியும் இருக்கலாம் அல்லது கோட்டை கட்டியவர்கள் அனைவரும் மாண்டு மடிந்து போயிருக்கலாம். கோட்டைக்குள் இப்போது வசிப்பவர்கள் காட்டு மிராண்டி இனத்தவராகவே இருக்கலாம். அல்லது மனிதர்களே இல்லாத நிர்மானுஷ்யமான தீவாக இருந்தாலும் இருத்தல் கூடும். பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. மனிதர்கள் வசிப்பதாயிருந்தால், மதில் சுவரின் உச்சியில் யாராவது இருக்கலாம் அல்லவா? கோட்டையும் மதில் சுவரும் கட்டிக் கொண்டு வாழ்கிறவர்கள் மேலே காவல் வைக்காமலா இருப்பார்கள்?
அடுத்தகணம் பைனாகுலரை எடுத்துக் கண்ணில் பொருத்திக் கொண்டு மதில் சுவரின் உச்சியில் பார்வையைச் செலுத்தினேன். ஏதோ சில நிழல் வடிவங்கள் தெரிந்தன. அவை சித்திரமோ, சிற்பமா, உயிருள்ள வடிவங்களா என்று தெரியவில்லை. உயிர் உள்ளவர்களாயிருந்தால், அவர்களுடைய கவனத்தை எப்படிக் கவர்வது என்று சற்று நேரம் யோசித்தேன்.
தொண்டையின் பலம் முழுவதையும் உபயோகித்துச் சத்தம் போட்டுப் பார்த்தேன். கேள்விமுறை ஒன்றுமில்லை. தொண்டை வறண்டது தான் மிச்சமாயிற்று. அதிலிருந்து தாகமாயிருக்கிறது என்ற நினைவு வந்தது. வரவர, நாவறட்சியும் தாகமும் அதிகமாகிக் கொண்டிருக்கும். சமுத்திரம் நிறையத் தண்ணீர் இருக்கிறது; ஆனால் குடிப்பதற்கு ஒரு துளித் தண்ணீர் இல்லை. கழுகுகள் அதிக நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இராது!
ஏதோ ஒரு மெல்லிய சத்தம் தாழ்ப்பாள் திறப்பது போன்ற சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். மதில் சுவரின் அடிப்பக்கத்தில் ஒரு சிறிய துவாரம் தென்பட்டது போல் இருந்தது. அடுத்த நிமிஷம், அந்தத் துவாரத்தில் ஒரு முகம் காணப்பட்டது. ஆ கா! அது ஒரு பெண்ணின் முகம். பைனாகுலரை உடனே எடுத்துக் கண்ணில் வைத்துக் கொண்டு பார்த்தேன். பைனாகுலர் என்னை ஏமாற்றுகிறதா, அல்லது பசி தாகத்தினால் நான் சித்தப்பிரமை அடைந்துவிட்டேனா? பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்; பல சாதி பல இனங்களைச் சேர்ந்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். நேரிலும் பார்த்திருக்கிறேன். சினிமாக்கள், நாடகங்கள், டெலிவிஷன் காட்சிகள் ஆகியவற்றிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இம்மாதிரி அழகிய ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை. அழகு மட்டுமல்ல உலகில் எத்தனையோ அழகிகள் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்ணினுடைய முகத்தில் தோன்றிய வசீகரம் இதுவரை நான் பார்த்திராத தெய்வீக வசீகரமாயிருந்தது.
பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, வானத்தில் தோன்றிய மின்னல் மறைவது போல் அந்த முகம் மறைந்துவிட்டது. மறுகணம், துவாரத்தையும் காணவில்லை, மதில் சுவர் தான் இருந்தது.
நான் பார்த்தது வெறும் மனப் பிரமையாக இருந்தாலும் இருக்கலாம். பாலைவனத்தில் பிரயானம் செய்கிறவர்களின் கண்ணுக்கு வெறும் மணல் படர்ந்த இடத்தில் குளிர்ந்த நீர் நிலை தோன்றும் என்பார்கள். அது போன்ற ஒரு கானல் நீர்க் காட்சிதானோ என்னமோ, இது? ஆயினும் அங்கே சென்று பரிசோதனை செய்து பார்த்துவிட விரும்பினேன்.
செய்வதற்கு ஒரு காரியம் ஏற்பட்டபடியால், உடம்பிலும் சுறுசுறுப்பு உண்டாயிற்று.
நான் குதித்து எழுந்து மதில் சுவரை நோக்கி விழுந்து அடித்து ஓடத் தொடங்கியதைப் பார்த்து அந்தக் கழுகுகள் கூட மிரண்டு போய்ச் சிறகுகளை அடித்துப் பறக்கத் தொடங்கின.
துவாரம் தெரிந்த இடத்தை நெருங்கி உற்றுப் பார்த்தேன். முதல் பார்வைக்கு வெறும் சுவராகத் தெரிந்தது. மறுபடியும் கூர்ந்து கவனித்த போது ஓரிடத்தில் இரண்டு பெரிய கதவுகள் இருப்பதாகத் தோன்றியது. அவற்றின் அமைப்பும் மேலே பூசியிருந்த வர்ணப் பூச்சும் சுவரோடு சுவராகத் தென்படும்படி அமைந்திருந்தன. கதவு என்று தோன்றிய இடத்தில் அங்குமிங்கும் கையினால் அமுக்கிக் கொண்டே வந்தேன். ஓரிடத்தில் கொஞ்சம் அசைந்து கொடுத்தது. அங்கே பலங்கொண்ட மட்டும் அழுத்தித் தள்ளினேன். பெரிய கதவுக்குள் பொருத்தப்பட்டிருந்த ஒரு சிறிய கதவு, சுமார் இரண்டு அடி சதுரமுள்ள கதவு, உட்புறமாகத் திறந்து கொண்டது. அதற்கு ஒரு பலமான தாழ்ப்பாள் இருந்தது. சற்று முன் அதைத் திறந்து பார்த்த பெண் மறதியாகத் தாழிடாமல் சென்றிருக்க வேண்டும். துவாரத்தின் வழியாக உள்ளே பார்த்தபோது, ஓர் அழகிய சிறிய பட்டணம் காட்சி அளித்தது. விசாலமான வீதிகள், சாதாரண ஓட்டு வீடுகள் நடுநடுவே இரண்டொரு மாட மாளிகைகள், ஊருக்கு மத்தியில் அழகிய விஸ்தாரமான குளம், படித்துறை, ஒரு பெரிய அரசமரம், ஊருக்கு அப்பால் பசுமையான வயல்கள், கரும்புத் தோட்டங்கள், இவ்வளவையும் அந்தச் சிறு துவாரத்தின் வழியாக நன்றாகப் பார்க்க முடிந்தது.
அவ்வளவுதான். ஒரு கணமும் யோசனை செய்யாமல் கதவின் வழியாக உள்ளே குதித்தேன். அந்தப் பெண் செய்யத் தவறிய காரியத்தை நான் செய்தேன். கதவைச் சாத்தி உட்புறத்தில் பலமாகத் தாழிட்டேன்.
மறுபடியும் சுற்றுமுற்றும் பார்த்தேன். வெளியிலிருந்து பார்த்தபோது என் பார்வையின் கோணத்தில் அகப்பட்ட ஒன்றைக் கண்டேன். எனக்கு வலது புறத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு சிறிய குன்று இருந்தது திருநீர் மலையிலுள்ள குன்றை அதிலுள்ள கோயிலுடன் இங்கே யாரோ கொண்டு வந்து வைத்து விட்டதுபோல் இருந்தது. ஆனால் திருநீர் மலையில் உள்ளது பெருமாள் கோவில். இது முருகன் கோவில் என்று தெரிந்தது. கோவிலுக்கு எதிரே இருந்த ஸ்தம்பத்தில் கட்டிப் பறந்த சேவல் கொடியிலிருந்து அவ்விதம் ஊகித்துக் கொண்டேன்.
குன்றின் உச்சியிலிருந்த கோவிலுக்கு மூன்று புறத்திலும் மேடும் பள்ளமுமாகப் பாறைகள் இருந்தன. அவற்றில் ஒன்றில் ஒரு புள்ளிமான் துள்ளி ஓடிற்று. இன்னொரு பாறையில் ஒரு மயில் தோகையை விரிப்பதற்குப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது.
இவற்றின் மீதெல்லாம் என் கவனம் அதிகமாக நிற்கவில்லை. ஏனென்றால், இன்னொரு பாறையின் மீது, பூங்கொத்துக்கள் குலுங்கிக் கொண்டிருந்த ஒரு குட்டையான மரத்தின் அடியில், கதவைத் திறந்து பார்த்த அந்தப் பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் என் பக்கம் பார்க்கவில்லை. சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்த திசையை நோக்கிக் கொண்டிருந்தாள். அங்கே அப்போது இந்திரஜால மகேந்திர ஜாலங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நீல மேகங்களின் வரம்புகள் ஒரு நிமிஷம் பொன் வண்ணம் பெற்றுத் திகழ்ந்தன. அடுத்த நிமிஷம் நீலமேகங்கள் செந்தாமரை நிறமாக மாறின. பிறகு மேல் வானம் முழுவதும் தங்க நிறம் பெற்று ஒளிர்ந்தது. தங்க நிறம் உடனே ரத்தச் சிவப்பு நிறமாக மாறியது.
இந்த வர்ண ஜாலக் காட்சிகளில் சிந்தையைச் செலுத்தி உட்கார்ந்திருந்த பெண்ணை நோக்கி நான் மெள்ள மெள்ள நடந்து சென்றேன். பாதை நல்ல பாதையாக இல்லை. பள்ளத்திலிருந்து மேட்டிலேறி மேட்டிலிருந்து பள்ளத்திலிறங்கி, மறுபடியும் மேட்டிலேறி, சில இடங்களில் தாண்டிக் குதித்து, சில இடங்களில் காலாலும் கையாலும் தவழ்ந்து, இப்படியெல்லாம் போக வேண்டியிருந்தது. அது ஒன்றையும் நான் லட்சியம் செய்யவில்லை. இரும்பைக் காந்தம் இழுக்கும் என்பார்களே, அது மாதிரி ஏதோ ஒரு சக்தி என்னை இழுத்துக் கொண்டு சென்றது.
அந்தப் பெண்ணின் பின்புறமாக அவளுக்கு வெகு சமீபத்தில் போய்விட்டேன். அப்போது என் கால்கள் தாமாக நின்று விட்டன. ஏனெனில், அவள் பாடத் தொடங்கினாள். பாட்டை ஏதோ இயன்ற வரையில் ஞாபகப்படுத்திக் கொண்டு சொல்கிறேன். சிற்சில வார்த்தைகள் மாறுதலாகவும் இருக்கலாம். அதனால் பாதகமில்லை. கருத்து ஒன்றுதான்.
“இன்பக் கனவினிலே சகியே இன்னிசை பாடிவந்தான் எவனோ இன்னிசை பாடிவந்தான்
பொன் முகத்தில் நகைபூத்திட நோக்கினான் கன்னங்குழித்திடக் கண்மலர் சூட்டினான்
பொன்னி நதிக்கரையில் வெண்ணிலா பொங்கிப் பொழிகையிலே என்பும் உருகும் நல்கீதங்கள் பாடினான் என்னகந் தொட்டுபின் எங்கேயோ சென்றிட்டான்!”
ஊரில் எனக்குச் சங்கீதத்தில் மோகமுள்ளவன் என்று எப்போதும் ஒரு பெயர் உண்டு. என்னுடைய சங்கீதக் கிறுக்கு ஒரு நாள் என்னைச் சங்கடத்தில் மாட்டி வைக்கப் போகிறது என்று என் நண்பர்கள் எச்சரித்ததும் உண்டு. அது இச்சமயம் உண்மையாயிற்று. அந்தப் பெண் இரண்டாவது அடியைப் பாடி முடிப்பதற்குள் நான் என்னை மறந்து பலமாகத் தாளம் போட ஆரம்பித்து விட்டேன்.
அந்தப் பெண் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அதற்கு முன் அம்மாதிரி அதிசயத்தை என்றும் கண்டறியாதவள் போல் அத்தனை வியப்புடன் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
“மிச்சப் பாட்டையும் பாடு! ரொம்ப நன்றாயிருக்கிறது! எங்களூர்க் கலாமணி பாடிய பாடல் மாதிரியல்லவோ இருக்கிறது?” என்றேன்.
அந்தப் பெண் தட்டுத் தடுமாறி “நீர் யார், உமக்கு எந்த ஊர்?” என்று கேட்டாள்.
“எனக்கு இந்தியதேசம். இந்தியா தேசத்தில் எஞ்சியுள்ள மதராஸ் ராஜ்யத்தைச் சேர்ந்தவன். “
“அப்படியென்றால் என்ன? அது எங்கே இருக்கிறது?”
“ஓகோ! உனக்குப் பூகோள சாஸ்திரமே தெரியாது போல் இருக்கிறது. பிறகு விவரமாகச் சொல்கிறேன். அந்தப் பாட்டை பாடி முடி!”
“பாட்டு உமக்கு ரொம்பப் பிடிக்குமோ?”
“ஆமாம்; பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதைக் காட்டிலும் பாடுகிறவர்களைப் பிடிக்கும். முக்கியமாக இப்போது உன்னைப் பார்த்தால்… “
அந்தப் பெண்ணின் முகத்தில் திடீரென்று பயம் காணப்பட்டது. அதன் பொருளை நான் அறிந்து கொள்ளவில்லை.
“ஏன் என்னை இப்படிப் பார்க்கிறீர்?” என்று கேட்டாள்.
நான் சிரித்தேன். அவளை நோக்கி நடந்து கொண்டே, “நீ ஏன் இவ்வளவு அழகாய் இருக்கிறாய்? அதனால் தான் இப்படி பார்க்கிறேன்!” என்றேன்.
அந்தப் பெண் நடுங்கிய குரலில், “உமக்குப் பசியாயிருக்கிறதா?” என்று கேட்டாள்.
எனக்கு அப்போதும் அவளுடைய பயத்தின் காரணம் விளங்கவில்லை.
தமாஷாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு “ஆமாம்; ரொம்பப் பசியாயிருக்கிறது. உன்னை அப்படியே விழுங்கி விடலாமா என்று தோன்றுகிறது!” என்றேன்.
அவ்வளவுதான்; அந்தப் பெண் ‘வீல்’ என்று ஒரு சத்தமிட்டாள்.
அதற்குப் பதில் குரல் கொடுப்பது போல் என்னைச் சுற்றிப் பல திசைகளிலிருந்தும், “வேல்! வேல்!” என்ற முழக்கங்கள் கேட்டன.
முழக்கங்கள் வந்த திசைகளை நோக்கினேன். மதில் சுவர் மீதும் மலைப்பாறைகளின் மீதும் மரங்களின் உச்சியிலும் கையில் வில்லை வளைத்து அம்பு தொடுத்து என் பேரில் விடுவதற்கு ஆயத்தமாக வீரர் பலர் நின்றார்கள்.
எனக்கு அப்போது எவ்வளவு அதிசயமாக இருந்திருக்குமென்று நீங்களே ஊகித்துக் கொள்ள வேண்டியது தான். பல தடவை கண்ணை மூடித் திறந்து பார்த்தேன். அந்தக் காட்சி அதே மாதிரி தெரிந்தது. அந்த வீரர்கள் என் பேரில் அம்பை விடாததற்குக் காரணம், நான் அந்தப் பெண்ணுக்கு வெகு சமீபத்தில் இருந்தது தான் என்று தெரிந்து கொண்டேன்.
என் மூளை அந்த அபாயகரமான வேளையில் சரியான வேலை செய்தது. அடுத்த தீவில் உள்ள ராட்சத மக்களின் உணவு வழக்கம் நினைவுக்கு வந்தது. நான் விளையாட்டாகப் பேசிய பேச்சு அப்பெண்ணின் உள்ளத்தில் உண்டாக்கியிருக்கக்கூடிய கலக்கத்தை அறிந்து கொண்டேன்.
அதற்குள் அந்தப் பெண்ணுக்கும் கொஞ்சம் சந்தேகம் தோன்றியிருக்க வேண்டும்.
சட்டென்று நாலு அடி நடந்து வந்து அம்புகள் என் மேல் விழாமல் குறுக்கிட்டுத் தடுப்பவள் போல் நின்று கொண்டாள்.
“என்ன சொன்னீர்கள்? இன்னொரு தடவை சொல்லுங்கள்!” என்றாள்.
“உன்னைப் பார்த்தாலே போதும், பசி தாகம் பறந்துவிடும் என்று சொன்னேன்! நீ எதற்காகக் கூச்சல் போட்டாய்? இவர்கள் எல்லோரும் யார்? எதற்காக வில்லை வளைத்து அம்பு தொடுக்கிறார்கள்?” என்று கேட்டேன்.
அணுக்குண்டு ஹைட்ரஜன் குண்டுகளைப் பற்றி உலகம் பீதி அடைந்திருக்கும் காலத்தில் வில்லும் அம்பும் வைத்துக் கொண்டு சண்டையிடும் வீரர்களும் இத்தீவில் இருக்கிறார்களே என்னும் அதிசயம் என்மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.
நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் அந்தப் பெண், “நீர் என்ன சாப்பிடுவது வழக்கம்?” என்று கேட்டாள்.
“இட்டிலி, தோசை, சாதம், முறுக்கு, சீடை, இடியாப்பம், பொரி விளங்காய் உருண்டை இன்னும் எது கிடைத்தாலும் சாப்பிடுவேன்!” என்றேன்.
அந்தப்பெண் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுச் சுற்றிலும் நின்ற வில்லம்பு வீரர்களுக்கு ஏதோ சைகை காட்டினாள். அவர்களில் ஒருவன் அருகில் வந்தான். அவனிடம், “நலங்கிள்ளி! என் தந்தையை உடனே அழைத்து வா!” என்றாள்.
அந்த வீரனை அவள் அழைத்த பெயர் எனக்கு மிக்க வியப்பை உண்டாக்கியது. பழந்தமிழ் நாட்டுப் பெயராக அல்லவோ இருக்கிறது?
“உன் தந்தையின் பெயர் என்ன?” என்றேன்.
“இளஞ்சென்னி நெடுஞ்செழியன் சேரலாதன்!”
இதைக்கேட்டு நான் அடைந்த அதிசயத்தைக் காட்டிலும் அவளுடைய பெயரை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாயிற்று.
“உன் பெயர் என்னவோ?”
“மயில்விழி மான்!”
“என்ன என்ன? நீ இப்போது சொன்னது உன் பெயரா? அல்லது உன்னைப் பற்றிக் கவிஞரின் வர்ணனையா?”
“என் பெயர் தான்! இப்போது இங்கே கவிஞர்கள் யாரும் இல்லை. ஒரு வேளை தமிழ் நாட்டில் இருக்கிறார்களோ என்னமோ? நீங்கள் ஏதோ ஒரு தேசத்திலிருந்து வந்ததாகச் சொன்னீர்களே? அங்கே பக்கத்தில் செந்தமிழ் நாடு என்று எங்கேயாவது இருக்கிறதா?” என்று கேட்டாள்.
“மயில்விழி மானே! கேள். இந்தியா தேசத்தில் ஒரு பகுதிதான் செந்தமிழ் நாடு. நானே செந்தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் தான். மதுரைக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவன்!” என்றேன் நான்.
“எந்த மதுரை? தமிழ்ச்சங்கம் இருந்ததே அந்த மதுரையா?”
“அதே மதுரைமா நகரந்தான்!”
“இன்னும் அங்கே சங்கம் இருக்கிறதா?”
“ஒரு சங்கமல்ல; வீதிக்கு வீதி சங்கங்கள் இருக்கின்றன!”
“அப்படியா? செந்தமிழ் நாட்டில் இப்போது தமிழர்கள் வசிக்கிறார்களா?”
“சுமார் இரண்டரைக் கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ்க் கவிஞர்களும் இரண்டொருவர் இருக்கிறார்கள்!”
“அப்படியென்றால், இப்போது அங்கே ராட்சதர்களின் பயமே இல்லையா?”
“ராட்சதர்களா? எந்த ராட்சதர்கள்?”
“இலங்கையை ஆண்ட ராவணன் குலத்து ராட்சதர்கள்!”
“இலங்கையிலே இப்போது ராட்சதர்கள் இல்லையே!”
“பின்னே யார் இருக்கிறார்கள்?”
“இலங்கையிலே இப்போது சிங்களவர் என்ற சாதியார் ஆட்சி செய்கிறார்கள். தமிழர்கள் பலரும் அங்கே வசிக்கிறார்கள். “
“அந்தச் சிங்களவர்கள் நம் தமிழர்களைப் பிடித்துச் சாப்பிடுவதில்லையா?”
“இன்னும் அவ்வளவுக்கு வரவில்லை! தமிழர்களைத் தமிழ்நாட்டுக்குப் போகும்படி விரட்டியடிக்கத் தான் பார்க்கிறார்கள்! ஆனால் உங்கள் பக்கத்துத் தீவில் ராட்சதர்கள் இருக்கிறார்கள் போல் இருக்கிறதே!”
“ஆமாம்; தமிழ் நாட்டிலிருந்து எங்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்காகத் தான் இவ்வளவு பெரிய கோட்டை சுவர் கட்டியிருக்கிறோம். காவலும் வைத்திருக்கிறோம். “
“மயில்விழி மானே! என்னையும் அந்த ராட்சதக் கூட்டத்தைச் சேர்ந்தவனாகக் கருதிப் பயப்பட்டாய் அல்லவா?”
“இல்லை, இல்லை! நடுவில் உங்களுடைய ஒரு வார்த்தை அம்மாதிரி சந்தேகத்தை எனக்கு உண்டாக்கியது. அது தவறு என்று உடனே தெளிந்தேன். நீங்கள் தமிழராகத்தான் இருக்க வேண்டுமென்று உங்களைப் பார்த்தவுடனேயே எனக்குத் தெரிந்து போயிற்று. அதோ என் தகப்பனார் வருகிறார். நீங்கள் சொல்லுவதையெல்லாம் கேட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவார்!” என்று சொன்னதும், திரும்பிப் பார்த்தேன். சேர சோழ பாண்டிய மன்னர்களையொத்த கம்பீர தோற்றமுடைய ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
“உன் தந்தை இளஞ்சென்னி நெடுஞ்செழியன் பெருஞ்சேரலாதர் என் மீது கோபித்துக் கொள்வாரோ, என்னமோ?”
“எதற்காகக் கோபித்துக் கொள்ள வேண்டும்?”
“அநுமதியில்லாமல் கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு வந்ததற்காகத்தான். “
“உங்களைப் பார்த்துவிட்டு, வேண்டுமென்றே தான் கதவைத் தாழ் போடாமல் வந்தேன், செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வரவேண்டுமென்று நாங்கள் எவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாகத் தவங்கிடந்து வருகிறோம்?”
“மயில்விழி மானே! உன் வயது என்ன?” என்று கேட்டேன்.
“பதினெட்டு!”
“ஆயிரம் வருஷம் என்று சொன்னாயே?”
“என் பாட்டனாருக்குப் பாட்டனாருக்குப் பாட்டனார் அவருக்குப் பாட்டனாருக்குப் பாட்டனாருக்குப் பாட்டனார், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தார். “
“எதற்காக!”
“அதையெல்லாம் என் தந்தையிடம் கேளுங்கள்; விவரமாகச் சொல்வார். பசிக்கிறது என்று சொன்னீர்களே? நான் போய் ஏற்பாடு செய்கிறேன். இட்டிலி, தோசை, இடியாப்பம், இவற்றில் எது உங்களுக்கு அதிகமாகப் பிடிக்கும்?”
“அப்படியெல்லாம் எனக்குப் பாரபட்சம் கிடையாது. அறம், பொருள், இன்பம் இவற்றில் எது வேண்டும் என்று கேட்டால், என்ன பதில் சொல்கிறது? மூன்றும் வேண்டியதுதான்!”
மயில்விழி மான் என்னை விழித்துப் பார்த்துச் சிரித்துவிட்டு அவளுடைய தந்தைக்கு என்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்து வைத்தாள். பிறகு துள்ளிக் குதித்து ஓடினாள். அப்போது அவள் பெயரின் பொருத்தம் நன்கு வெளியாயிற்று.
“மானின் விழிபெற்று மயில் வந்ததென வந்தாள்” என்ற கம்பன் பாடலுக்கு மாறாக இருந்தாலும், மயிலின் பார்வையிலும் ஒரு தனி அழகு இருக்கத்தான் இருக்கிறது. மானின் துள்ளலில் உள்ள கவர்ச்சியைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை யல்லவா?
இளஞ்சென்னி நெடுஞ்செழியன் பெருஞ் சேரலாதர் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒருவாறு பதில் சொல்லிச் சமாளித்த பிறகு அவர்களுடைய வரலாற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அந்த வரலாறு இதுதான்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் குமரி முனையிலிருந்து விந்திய பர்வதம் வரையில் பரவிச் சீரும் சிறப்பும் பெற்று மேன்மையுற்று விளங்கி வந்தது. சேர சோழ பாண்டியர்கள் நட்புரிமை கொண்டு அவர்களுடைய ராஜ்யங்களை நீதி தவறாமல் ஆண்டு வந்தார்கள். குடிமக்கள் எல்லாத் துறைகளிலும் செழிப்படைந்து ஓங்கியிருந்தார்கள். இது போலவே தமிழிலக்கியமும் மேன்மையடைந்து வளர்ச்சியுற்று வந்தது. செந்தமிழ்க் கவிஞர்கள் பலர் இனிய எளிய செந்தமிழில் அழகிய கவிகளும் காவியங்களும் இயற்றி வந்தார்கள். மதுரையில் முதலாவது தமிழ்ச்சங்கம் சிறப்பாக நடைபெற்று வந்தது.
அந்தச் சந்தர்ப்பத்தில் மேலைக் கடல் பிரதேசத்து நாடுகளிலிருந்து காட்டுமிராண்டிகளான அநாகரிக ராட்சஸமக்கள் சிலர் கப்பலேறி வந்தார்கள். அவர்கள் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் அவர்களை வேறு நாடுகளைத் தேடிப் போகும்படி செய்தது. அவர்கள் முதலில் தமிழ்நாட்டில் இறங்கி அத்தீவைத் தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய அரச பரம்பரையில் ராவணன் என்னும் ஒரு ராட்சதன் தோன்றினான். அவன் அறிவும், ஆற்றலும் மிக்கவன். ஆனால் மிகமிகப் பொல்லாதவன்.
ராவண குலத்தைச் சேர்ந்த ராட்சதர்கள் நர மாமிச பட்சிணிகள். அவர்கள் நாட்டிலே பஞ்ச காலத்தில் அந்தப் பயங்கரமான வழக்கம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. இலங்கைக்கு வந்து குடியேறிய பிறகு, அடிக்கடி தமிழகத்துக்கு அவர்கள் கும்பல் கும்பலாக வருவதும், திடீரென்று தமிழர்களைத் தாக்கிக் கொல்வதும், கொன்றவர்களைத் தின்று விட்டுப் போவதும் வழக்கமாயிற்று. தமிழர்களைத் தின்று பார்த்த போது, அவர்கள் வேறு எந்தச் சாதியைக் காட்டிலும் தமிழ்ச் சாதியின் உடம்பு அதிகச் சுவையுடன் இருக்கிறது என்று கண்டார்கள். இழுமெனும் ஓசையுடைய மதுரத் தமிழ் மொழி இனிமைக்கும் பெயர் பெற்றதன்றோ? ‘அமுதம்’ என்ற சொல் மருவித் ‘தமிழ்’ என்று ஆயிற்று என்றும் சொல்கிறார்கள் அல்லவா? தமிழர்களின் உடல் தின்பதற்கு ருசியாயிருந்ததுடன், அவர்களைத் தின்றால் ஆயுள் வளரும், ஆயிரக்கணக்கான வருடங்கள் சாகாமல் இருக்கலாம் என்ற நம்பிக்கையும் ராவண குலத்து ராட்சஸர்களுக்கு ஏற்பட்டது. இதன் பலன் என்னவென்றால், ஒரு சில வருடங்களுக்குள் தமிழ் நாட்டில் தமிழ் மக்களின் ஜனத்தொகை மிகவும் குறைந்து விட்டது. போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று போர் செய்வதாயிருந்தால் தமிழர்களை அந்த ராட்சஸர்களால் கூட வென்றிருக்க முடியாது. ஆனால் எதிர்பாராத இரவு நேரங்களில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்து தாக்கிக் கொன்று தின்று விடும் ராட்சஸர்களை எதிர்த்துப் போராடுவது எப்படி? சேர சோழ பாண்டிய ராஜ்யங்களில் மிகச் சிறந்த பட்டணங்கள், கிராமங்கள் எல்லாம் பாழாய்ப் போய்க் கொண்டிருந்தன. ராட்சஸர்களிடமிருந்து தப்பிப் பிழைத்த சிலர் மலை உச்சிகளில் உள்ள குகைகளிலும் கடற் கரையோரங்களிலிருந்த காடுகளிலும் ஒளிந்து வாழத் தொடங்கினார்கள்.
தமிழின் பெருமையை உணர்ந்து உலகமறியச் செய்த மாமுனிவர் அகஸ்தியர், இந்த அபாயத்திலிருந்து தமிழர்களைத் தப்புவிப்பதற்கு ஓர் உபாயம் செய்து பார்த்தார். தமிழ் மிக்க இனிமையான மொழியாயிருப்பதால் அல்லவா அம்மொழியைப் பேசும் தமிழர்களுக்கு இந்தக் கதி நேருகிறது? தமிழைச் சற்றுக் கடினமான மொழி ஆக்குவதற்காக மிக்கப் பிரயத்தனப்பட்டுத் தமிழ் இலக்கணம் ஒன்று செய்து கொடுத்தார். மேலும் அவருடைய சீடர்களிடம், இனி எளிய இனிய நடையிலேயே பாடல்கள் எழுதாமல் கரடு முரடான கொடுந்தமிழில் கவிதைகள் எழுதச் சொன்னார். சீடர்கள் அப்படியே செய்து பார்த்தார்கள், அதிலும் பயனில்லை. தமிழை எவ்வளவு கரடு முரடு ஆக்கினாலும் அதன் சுவை என்னவோ குன்றவில்லை. ஆகவே, அகஸ்தியரும் தமது தோல்வியை உணர்ந்து பொதிகை மலையை விட்டுப் புறப்பட்டு வடக்கே வித்தியமலைக்குத் தென்புறத்தில் தண்டகாரண்யத்தில் வசிக்க வேண்டியதாயிற்று.
இந்தத் தீவில் இப்போது வசிக்கும் மக்களின் மூதாதைகள் ராட்சஸர்களுக்கு இரையாக விரும்பாமல் கொற்கையென்னும் துறைமுகத்துக்கு அருகில் ஒரு பெரிய காட்டில் ஒளிந்து வாழ்ந்தார்கள். அதே சமயத்தில் அவர்கள் தாங்களிருக்கும் இடத்தை எப்படியும் அரக்கர்கள் கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணி, ஒரு பெரிய மரக்கலம் கட்டி வந்தார்கள். ஏதாவது அபாயம் நேர்ந்தால் கப்பலில் ஏறிக் கடல் கடந்து வேறொரு நாட்டில் குடியேறிவிடலாம் என்று எண்ணியிருந்தார்கள்.
ராவணனுடைய ஒன்றுவிட்ட தம்பியாகிய கரன் என்னும் ராட்சஸன் தண்ட காரண்யத்தை யொட்டி ஜனஸ்தானம் என்னுமிடத்தில் தன் தோழர்களுடன் வசித்து வந்தான். கரனுக்கு முரன் என்றொரு மகன் இருந்தான். அவன் தமிழகத்தில் மிச்சம் மீதித் தமிழர்கள் இருக்கிறார்களா என்று தேடி வந்தான். கடைசியில் கொற்கைத் துறைமுகத்துக்கருகில் காட்டில் வசித்த தமிழர்களைக் கண்டு பிடித்தான். அவன் அவர்களைத் தாக்குவதற்கு முன்னால், அந்தத் தமிழர்கள் தயாராக வைத்திருந்த கப்பலில் ஏறிக் கொண்டு கிழக்குக் கடலில் கிளம்பினார்கள். முரன் உடனே தானும் ஒரு கப்பலை அவசரம் அவசரமாகக் கட்டிக் கொண்டு கிளம்பினான். இரண்டு கப்பல்களும் வெகுதூரம் கிழக்கு நோக்கிப் பிரயாணம் செய்த பிறகு ஒரு பெரிய சண்டமாருதத்தில் சிக்கிக் கொண்டன. கப்பல்கள் உடைந்தன. ஒரு கப்பல் ஒரு தீவின் அருகிலும் இன்னொரு கப்பல் இன்னொரு தீவின் அருகிலும் சென்று அடைந்தன. அதாவது ஒரு தீவில் இளஞ்சென்னி நெடுஞ்செழியன் பெருஞ் சேரலாதனும் அவனுடன் வந்தவர்களும் இறங்கினார்கள். இன்னொரு தீவில் முரனும் அவனுடைய சகாக்களும் இறங்கினார்கள். கப்பல்கள் இரண்டும் சிதைந்து சின்னாபின்னமுற்றுக் கடலில் மறைந்து மூழ்கி விட்டன.
தமிழர்கள் ஒரு தீவிலும், முரனாதி அசுரர்கள் இன்னொரு தீவிலும் குடியேறினார்கள். தலைமுறை தலை முறையாகப் பல்லாயிரம் ஆண்டுகளாக அங்கேயே வசித்து வருகிறார்கள். வெளி உலகத்துச் செய்திகள் ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு தீவுகளிலும் பெரிய மரங்கள் இல்லாதபடியால் கப்பல் கட்டிக் கொண்டு பிரயாணம் கிளம்ப முடியவில்லை. ராட்சஸர்கள் சில சமயம் பழைய ஞாபகத்தை வைத்துக் கொண்டு தமிழர்களைப் பிடித்துக் கொண்டு போய்க் கொன்று தின்பதற்காகச் சமயம் பார்த்து வருவார்கள். சில சமயம் சிறு படகுகளிலும் சில சமயம் நீந்தியும் வருவார்கள். வருஷத்தில் ஒரு மாத காலம் சுறா மீன்கள் எல்லாம் வேறு எங்கேயோ போய்விடும். அச்சமயம் பார்த்துதான் அநேகமாக வருவார்கள். அவர்கள் திடீரென்று வந்து தாக்க முடியாமலிருப்பதற்காகவே தமிழர்கள் அவ்வளவு பெரிய கோட்டைக் கொத்தளங்கள் கட்டிக் கொண்டு வசிக்கிறார்கள். அது மட்டுமின்றி, எப்போதுமே கோட்டைச் சுவர்கள் மீதும் பாறை உச்சிகளிலும் காவற்காரர்களை நிறுத்தி வைப்பது வழக்கம். இவ்வளவு பாதுகாப்புகளையும் சில சமயம் அந்த அரக்கர்கள் தாண்டிக் கொண்டு வந்து தமிழர்கள் சிலரைப் பிடித்துப் போய்விடுவது உண்டு. அப்போது எல்லாம் தமிழர்கள் வசித்த அமுதத் தீவில் அழுகைச் சத்தம் கிளம்பும்; அரக்கர் தீவிலே கோலாகலமாய் இருக்கும்.
இந்த விவரங்களையெல்லாம் சொல்லிவிட்டு இளஞ்சென்னி நெடுஞ்செழியன் சேரலாதர், “ஐயா மதிவாணரே! தமிழ் ஆனாலும் மிக ‘அபாயகர’ மான மொழி! அதன் இனிமையே அதற்கு இவ்வளவு அபாயத்தை அளித்திருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் இப்போது ராட்சஸர்களின் தொல்லை அடியோடு இல்லையென்றா சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“ஆமாம்; உண்மையாகவே கிடையாது. நீங்கள் புறப்பட்டு வந்த சில நாளைக்கெல்லாம் இராமர் என்பவர் வந்து ராவணாதி ராட்சஸர்களை அடியோடு ஒழித்து விட்டார்! ஆனால் இந்த நாளில் சிலர் ‘நாங்கள் ராவணனுடைய சந்ததிகள்’ என்று சொல்லிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்! அவர்கள் ராவண பூஜை செய்கிறார்கள்! தமிழைத் தாங்கள் காதலிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்” என்றேன்.
“அப்படி ஓர் அதிசயமும் செந்தமிழ் நாட்டில் இருக்கிறதா! நல்லது; அவ்வாறு சொல்லும் மனிதர்களை இந்த அரக்கர் தீவுக்கு அனுப்பி வைப்பதுதானே? அனுப்பி வைத்தால் அவர்களுடைய ராவண பக்தியைச் சோதித்துப் பார்க்கலாம்!” என்றார் இளஞ்சென்னி நெடுஞ்செழியன் சேரலாதர்.
மூன்று மாத காலம் அந்த அழகிய அமுதத் தீவில் வசித்தேன். சொர்க்க லோகத்தில் வசித்தேன் என்றே சொல்லலாம். வாழக்கை அவ்வளவு குதூகலமாகச் சென்று கொண்டிருந்தது. அகஸ்தியருக்குப் பிற்காலத்தில் தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட கவிதைகளைப் பற்றிக் கேட்டார்கள். நானும் திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், ராமலிங்க அடிகள், பாரதியார், கவிமணி முதலியவர்களின் கவிதைகளில் எனக்கு நினைவு இருந்தவற்றையெல்லாம் சொல்லிக் காட்டினேன். அவர்கள் அப்பாடல்களின் எளிமையையும் இனிமையையும் கவிதை அழகையும் சுவைத்துச் சுவைத்து மகிழ்ந்தார்கள்.
அகஸ்தியருக்கு முற்காலத்திய கவிஞர்களின் பாடல்களை அவர்கள் பாடிக் காட்டினார்கள். அவற்றில் முத்தொள்ளாயிரப் பாடல்கள் சில மட்டும் நாம் இப்போது அறிந்திருப்பவை. மற்றவைகளை நாம் கேட்டதே இல்லை. தமிழகத்தில் கடல் கொண்டு போய்விட்ட நூல்களில் அப்பாடல்கள் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
அகஸ்தியருக்குப் பின்னால் வந்த புலவர்கல் சிலர் தமிழ் மொழியைக் கரடு முரடாக்க முயன்றதைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.
“கால்பார் கோத்து ஞாலத்தியக்கும் காவற்சாகா டுகைப்போன் மாணின் ஊறின்றாகி யாறினிது படுமே உய்த்தறேற் றானாயின் வைகலும் பகைக் கூழள்ளற் பட்டு மிகப்பத றிநோய்த் தலைத்தலைத்தருமே. “
இது போன்ற பாடல்கள் சிலவற்றை நான் சொல்லக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
மயில்விழி மானுக்கும் எனக்கும் முதல் சந்திப்பிலேயே ஏற்பட்ட நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. ஒருவரையொருவர் பிரிந்து ஒரு நிமிடமும் உயிர் வாழ முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. அமுதத் தீவில் குழந்தைகள் பிறந்து சில நாளைக்குள்ளேயே இன்னாருக்கு இன்னார் என்று முடிவு செய்து விடுவது வழக்கமாம். மயில்விழி மானினாளுக்கு அவ்விதம் முடிவு செய்யப்பட்டிருந்த யுவனைச் சிறு பிராயத்திலேயே ராட்சதத் தீவினர் கொண்டு போய் விட்டார்கள். ஆகையால், மயில்விழி மானின் திருமணத்தைப் பற்றி அவள் பெற்றோர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் ஒருவன் போய்ச் சேர்ந்தது அவர்களுக்குச் சௌகரியமாய்ப் போயிற்று. தை பிறந்ததும் முதல் காரியமாக முருகன் கோவிலில் எங்களுக்கு மணம் முடித்து வைப்பது என்றும் தீர்மானித்திருந்தார்கள்.
ஆனால் கடவுளின் விருப்பம் வேறு விதமாக இருந்தது. நான் அமுதத் தீவை அடைந்த சில மாதங்களுக்கெல்லாம் அத்தீவின் மேலாக அடிக்கடி ஆ காச விமானங்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போகத் தொடங்கின. ஏதோ பூகோள ஆராய்ச்சி செய்கிறவர்களைப் போல் தோன்றியது. சில நாளைக்கெல்லாம், அத்தீவுக்குச் சில மைல் தூரத்தில் ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கப்பல் வந்து நின்றது. இவற்றையெல்லாம் பார்த்ததும் எனக்கு ஊருக்குப் போகும் சுரம் வந்துவிட்டது. மயில்விழி மானின் மீது எனக்கு எவ்வளவு ஆசையிருந்தாலும், அவளை அழைத்துக் கொண்டு ஊருக்குப் போவதுதான் நல்லது. தமிழ்நாட்டுக்குப் போன பின்னர்ப் பொதுமக்களுக்கும் பொதுஜன சர்க்காருக்கும் அமுதத் தீவையும் அரக்கத் தீவையும் பற்றி எடுத்துச் சொல்லவேண்டும். பழைய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு இது மிகவும் உபயோகமாயிருக்கும். சர்க்காரும் யூனிவர்ஸிடி நிர்வாகிகளும் கட்டாயம் உதவி செய்வார்கள். நாலாயிரம் வருஷத்துக்கு முந்திய தமிழர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், அவர்களுடைய நடை உடை பாவனைகள் எவ்வாறு இருந்தன என்பனவற்றை நேரிலேயே தெரிந்து கொள்ளலாம் அல்லவா?
இதையெல்லாம் இளஞ்சென்னிக்கும் மயில்விழி மானுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களையும் சம்மதிக்கும்படி செய்தேன்.
அதன் பிறகு கோட்டைச் சுவருக்கு வெளியில் உயரமான ஒரு பாறையில் போய் ஆ காசத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கத் தொடங்கினேன். ஆ காசத்தில் விமானத்தைப் பார்த்த போதெல்லாம் கையில் இருந்த தடியில் ஒரு துணியை முடிந்துவிட்டு ஆட்டு ஆட்டு என்று ஆட்டினேன். கடைசியாக, ஓர் ஆ காச விமானத்தில் உள்ளவர்கள் என்னைக் கவனிப்பதாகத் தோன்றியது. அந்த விமானம் கொஞ்ச தூரம் போய்விட்டு திரும்பி வந்தது. வரும்போது அதன் அடியில் ஏதோ ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கிட்ட வந்த பின் அது ஒரு வலை என்று தெரிந்தது. அந்த வலை என்னை அப்படியே பாறை மேலிருந்து தூக்கிக் கொண்டு போயிற்று. தூக்கிய அதிர்ச்சியிலேயே நான் நினைவு இழந்துவிட்டேன். பிறகு நினைவு வந்து பார்த்த போது, அமுதத் தீவிலிருந்து பார்த்த பிரம்மாண்டமான அமெரிக்கக் கப்பலில் இருந்தேன். எனக்குப் பிரமாதமான உபசாரங்கள் அக்கப்பலில் செய்யப்பட்டன. நான் அங்கு வந்து சேர்ந்ததுபற்றியும் நான் பார்த்தவற்றைப் பற்றியும் கேட்டார்கள். எல்லாம் சொன்னேன்.
ஆனால் கப்பல் நிர்வாகிகள் விமானத்திலிருந்து நான் விழுந்ததை மட்டும் ஒப்புக் கொண்டார்களே தவிர, மற்றது ஒன்றையும் ஒப்புக்கொள்ளவில்லை. நான் பார்த்ததெல்லாம் என் சித்த பிரமை என்றார்கள். அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டு போகட்டும். தாய் நாடு சேர்ந்ததும் நேரு சர்க்காரிடம் சொல்லிக் கப்பல்கள் அனுப்பி அமுதத் தீவிலுள்ளவர்களைத் தாய் நாட்டுக்கு அழைத்து வரச் செய்வது என்று தீர்மானித்தேன். அசுரத் தீவில் உள்ளவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. பஸிபிக் சமுத்திரத்தில் எத்தனையோ தீவுகளில் அம்மாதிரி காட்டுமிராண்டிகள் உளர் என்பதை நான் அறிந்திருந்தேன் அன்றோ?
எனவே கப்பல் புறப்படும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஏன் அங்கே கப்பல் நீடித்து நிற்கிறது. அதிலிருந்து புறப்பட்டுப் போய்த் திரும்பும் விமானங்கள் எதற்காக அப்படிப் போய் வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவரும் சொல்லவுமில்லை. கடைசியில் ஒரு நாள் கப்பல் அங்கிருந்து புறப்பட்டது. சுமார் முந்நூறு மைல் தூரத்துக்கு அப்பால் சென்று மறுபடியும் நின்றது. விமானங்கள் மீண்டும் கிளம்பிச் சென்றன.
சில நிமிஷ நேரத்துக்கெல்லாம் ஆயிரம் பதினாயிரம் இடிகள் சேர்ந்தாற் போல இடித்தது போன்ற ஒரு சத்தம் கேட்டது. அம்மாதிரி காது செவிடுபடும்படி ஒரு கோர பயங்கரச் சத்தத்தை அதுவரை நான் கேட்டது கிடையாது. சிறிது நேரத்துக்கெல்லாம் வெடித்த இடத்திலிருந்து புகைத் திரள் கிளம்பி வானை அளாவியதுடன் நாலு திசையும் பரவியது. கப்பலில் இருந்தவர்களையெல்லாம் உடம்பை மூடிக்கொள்வதற்காகக் கவசம் அணிந்து கொள்ளச் சொன்னார்கள்.
அப்போதுதான் என் மந்த மதிக்கு உண்மை புலனாயிற்று. ‘ஹைட்ரஜன் குண்டு’ பரிசோதனை நடத்தினார்கள் என்பதை அறிந்தேன். மனிதர்களே இல்லாத பிரதேசங்கள் என்று நினைத்து அங்கே ஹைட்ரஜன் குண்டைப் போட்டார்கள்.
சற்று நேரத்துக்கெல்லாம் புகை கலைந்தது நெஞ்சு பதைபதைக்க, வயிறு கலக்கம் அடைய அமுதத்தீவு இருந்த திசையை நோக்கினேன். அங்கே அமுதத்தீவையும் காணவில்லை; அருகிலிருந்த அசுரத்தீவையும் காணவில்லை! எல்லாம் ஹைட்ரஜன் குண்டில் பஸ்மீகரமாகிக் கடலில் கலந்து மறைந்து விட்டன.
கத்து கத்து என்று கத்தினேன். அழு அழு என்று அழுதேன். கப்பல் அதிகாரிகளிடம் முறையிட்டேன். யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நான் குறிப்பிட்ட இடங்களில் இருந்த தீவுகளில் ஜனங்களே இல்லையென்று அவர்கள் சாதித்து விட்டார்கள்.
சில நாளைக்கெல்லாம் வேறு கப்பலில் ஏற்றி என்னை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். இங்கே வந்த பிறகு சர்க்கார் இலாகாக்களைப் போய்ப் பார்த்தேன். ஒருவரும் என் பேச்சை நம்பவும் இல்லை. எனக்குத் தைரியம் கொடுக்கவும் இல்லை. ‘சித்தப் பிரமை சரித்திர ஆராய்ச்சியாகாது’ என்று சொல்லி விட்டார்கள்.
அவ்வளவுதான் என் வரலாறு. தூய பழந்தமிழர் நாகரிகத்தின் உறைவிடமாகப் பஸிபிக் சமுத்திரத்தில் ஒரு தீவு இருந்தது என்பதற்கு நான் தான் கடைசிச் சாட்சி. நீங்கள் எப்படியும் நம்புவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். இந்திய சர்க்காரிடம் நான் பெற்ற இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்குப் பிரதி செய்துவிட்டதாகவே கருதுகிறேன். நான் எதற்காகப் போனேனோ, அந்த ஆராய்ச்சி செய்யவில்லை தான்; அதனால் என்ன? அதைவிடப் பன்மடங்கு முக்கியமான சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படக்கூடிய செய்திகளைத் தெரிந்து கொண்டு வந்தேன். என்னுடைய கடன் தீர்ந்தது என்று கருதுகிறீர்களா இல்லையா? இதோ தாம்பரம் வந்து விட்டது. வண்டியைச் சிறிது நிறுத்தச் சொல்லுங்கள். இறங்கிக் கொள்கிறேன்.
தாம்பரத்தில் வண்டி நின்றது. மதிவாணர் எம் ஏ, வண்டியிலிருந்து இறங்குவதற்கு முன்பு அவர் அமெரிக்கர்களைத் திட்டியதற்கு ஓரளவே கிடையாது. “ராவணாதி ராட்சஸர்களை விட அமெரிக்கர்கள் பொல்லாத காட்டுமிராண்டிகள். அவர்களாவது வயிற்றுக்கு உணவுக்காக மனிதர்களைக் கொன்றார்கள். இவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில், ஒரு காரணமும் இல்லாமல் அல்லவா கொன்று விடுகிறார்கள்? ஐயாயிரம் வருஷத்துக்கு முந்தைய பழந்தமிழ் நாகரிகம் குடிகொண்டிருந்த ஒரு தீவையே அழித்து விட்டார்களே! பாவிகள். பழந்தமிழர்களும் அவர்களுடைய நாகரிகமும் எப்படியாவது போகட்டும்! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மயில்விழி மானை இனி நான் என்று காணப்போகிறேன்? காண முடியாமல் செய்து விட்டார்களே, பாவிகள்!…ஆம். சொர்க்கலோகத்தில் கட்டாயம் அவள் எனக்காகக் காத்திருப்பாள் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
இவ்வாறு சொல்லிக் கொண்டே மதிவாணர் எம் ஏ, இறங்கிச் சென்றார். அவர் கூறியதில் எவ்வளவு உண்மையாயிருக்கும்? எவ்வளவு அவரது கற்பனையாயிருக்கும் என்பதை நேயர்களே ஊகித்துக் கொள்ளக் கோருகிறேன்.
இத்துடன்
அமரர் கல்கியின் மயில்விழி மான்
இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.
Mayilvizhi Maan Kalki Tag
kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,mayilvizhi maanAudiboook,mayilvizhi maan,mayilvizhi maan Kalki,Kalki mayilvizhi maan,