Mohini Theevu Kalki
Mohini Theevu Kalki கல்கியின் மோகினித் தீவு கல்கி
Mohini Theevu Kalki
முன்னுரை
அந்த இங்கிலீஷ் சினிமா கொஞ்சங்கூட நன்றாயில்லை. “ஏண்டா அப்பா, இங்கே வந்தோம்? காசைக் கொடுத்துத் தேளைக் கொட்டிக் கொண்ட கதையாயிருக்கிறதே!” என்ற எண்ணம் உண்டாயிற்று.
அந்த படத்தில் குதிரைகள் குடல் தெறிக்க ஓடிக் கொண்டிருந்தன.
ஒரு மனிதனும் இன்னொரு மனிதனும் கத்திச் சண்டை போட்டார்கள்.
ஒரு யுவனும் ஒரு யுவதியும் காதல் புரிந்தார்கள்.
மறுபடியும் குதிரைகள் ஓடின.
இரண்டு மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்கள்.
ஒரு யுவதியும் ஒரு யுவனும் காதல் புரிந்தார்கள்.
குதிரைகள் எவ்வளவு வேகமாய் ஓடினாலும் படம் மட்டும் மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது.
கத்திச் சண்டை பொய், துப்பாக்கிக் குண்டு பொய், காதலும் பொய்.
இந்த அபத்தத்தை எத்தனை நேரம் சகித்துக் கொண்டிருப்பது? எழுந்து போய் விடலாமா என்று தோன்றியது.
இந்த சமயத்தில் இடைவேளைக்காக விளக்குப் போட்டார்கள். சாதாரணமாக ஸினிமாக் கொட்டகைகளில் இடைவேளை வெளிச்சம் போட்டதும் பெரும்பாலான ரசிகர்கள் சுற்று முற்றும் திரும்பிப் பார்ப்பது வழக்கம். அதன் காரணம் என்னவென்பது அன்று எனக்கு விளங்கியது. ஸினிமாத் திரையில் உயிரற்ற பொம்மை முகங்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன கண்கள் உயிருள்ள உண்மை மனிதர்களின் முகங்களைப் பார்க்க விரும்புவது இயல்புதானே? தெரிந்த முகம் ஏதேனும் தென்படுகிறதா என்று நானும் அன்றைக்குத் திரும்பிப் பார்த்தேன். இந்த உபயோகமற்ற ஸினிமாவைப் பார்க்க வந்த அசட்டுத்தனத்தை இன்னும் யாரேனும் ஓர் அறிமுகமான மனிதருடன் பகிர்ந்து கொள்வதில் சற்று நிம்மதி உண்டாகலாம் அல்லவா?
அவ்வாறு சுற்று முற்றும் பார்த்த போது தெரிந்த முகம் ஒன்று உண்மையிலேயே தெரிந்தது. யார் என்பது உடனே புலப்படவில்லை. அந்த மனிதரும் என்னைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்தார். நான் பட்ட அவதியை அவரும் பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.
சமிக்ஞையினால் நாங்கள் முகமன் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு ரஸிகர், “சுத்தப் பாடாவதிப் படம்! ஒன்றே கால் ரூபாய் தண்டம்!” என்று இரைச்சல் போட்டுக் கொண்டு எழுந்து போனார்.
சற்றுத் தூரத்திலிருந்து புன்னகை புரிந்த மனிதர் அந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று பரபரப்புடன் எழுந்துவந்து என் பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்தார்.
“என்ன சேதி?” “என்ன சமாசாரம்?” “வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?” “படம் சுத்த மோசமாயிருக்கிறதே!” என்று க்ஷேமலாபங்களை விசாரித்துக் கொண்டே, அந்த மனிதர் யாராயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில், “இப்போது எங்கே ஜாகை?” என்று கேட்டேன்.
“ஜாகையாவது, மண்ணாங் கட்டியாவது? ஜாகை கிடைக்காதபடியினால் தான் சினிமாக் கொட்டகையிலாவது பொழுதைப் போக்கலாம் என்று வந்தேன். இங்கேயும் இந்த லட்சணமாயிருக்கிறது. மறுபடியும் பர்மாவுக்கே திரும்பிப் போய் விடலாமா என்று கூட ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது” என்றார்.
பர்மா என்ற வார்த்தையைக் கேட்டதும் அந்த மனிதரைப் பற்றி எனக்கு நினைவு வந்து விட்டது.
அந்த மனிதர் என் பழைய சிநேகிதர். கற்பனையும் ரசனையும் படைத்தவர். கவிதையிலும் காவியத்திலும் முழுகியவர். அப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது அபூர்வந்தானே? பாரத நாட்டில் பிழைக்க வழியில்லையென்று கண்டு பர்மாவுக்குப் போனார். இவருடைய அதிர்ஷ்டம் அங்கேயும் தொடர்ந்து சென்றது. இவர் போய்ச் சேர்ந்த சில நாளைக்கெல்லாம் ஜப்பான் யுத்தம் மூண்டது. ஜப்பானிய சைன்யங்கள் மலாய் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு பர்மாவின் மீது படையெடுத்து வந்தன. ஜீவனோபாயம் தேடிப் பர்மாவுக்குச் சென்ற சிநேகிதர் ஜீவன் பிழைத்தால் போதும் என்று தாய்நாட்டுக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. தப்பிப் பிழைத்தவர் சென்னை வந்து சேர்ந்த புதிதில் ஒரு தடவை அவரைப் பார்த்தேன். அந்தச் சமயம் சென்னை நகரைக் காலி செய்துவிட்டுச் சென்னைவாசிகள் ஓடிக் கொண்டிருந்த சமயம். ஆகையால் அப்போது அவரிடம் அதிகம் பேசுவதற்கு முடியவில்லை. அன்று பிரிந்தவரை இன்றைக்கு சினிமாக் கொட்டகையில் பார்த்தேன். “வாழ்க சினிமா!” என்று வாழ்த்தினேன். ஏனெனில் ‘பாஸ்கரக் கவிராய’ரிடம் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கு மிக்க பிரியம் உண்டு. கவிதாலோகத்தில் அடிக்கடி சஞ்சரித்துக் கொண்டிருந்தவராதலால் அவருக்குக் ‘கவிராயர்’ என்ற பட்டம் நண்பர் குழாத்தில் அளிக்கப்பட்டிருந்தது.
“நீங்கள் அதிர்ஷ்டசாலி! மகா யுத்தத்தின் மிக முக்கியமான அரங்கம் ஒன்றில் தாங்கள் யுத்தம் நடந்த காலத்தில் இருந்தீர்கள் அல்லவா? ஜப்பானிய விமானங்கள், வெடிகுண்டுகள், பீரங்கி வேட்டுகள் இவற்றின் சத்தத்தையெல்லாம் உண்மையாகவே கேட்டிருப்பீர்கள் அல்லவா? நாங்கள் அதையெல்லாம் சினிமாவில் பார்த்துக் கேட்பதுடன் திருப்தியடைய வேண்டியிருக்கிறது. உங்கள் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்!” என்றேன் நான்.
“தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு; தூரத்து வெடிச் சத்தம் காதுக்கு இனிமை!” என்றார் நண்பர்.
“அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
“இவ்வளவு தூரத்தில் நீங்கள் பத்திரமாயிருந்தபடியால் என்னை அதிர்ஷ்டக்காரன் என்கிறீர்கள். நீங்களும் என்னுடன் இருந்திருந்தால் அதை அதிர்ஷ்டம் என்று சொல்வீர்களா என்பது சந்தேகந்தான்.”
“சந்தேகமே இல்லை. நிச்சயமாக அது உங்கள் அதிர்ஷ்டந்தான். அந்த நெருக்கடியான சமயத்தில் ஜப்பானிய சைன்யம் ரங்கூனை நோக்கி வந்து கொண்டிருந்த போது, பர்மாவில் உங்களுக்கு எத்தனையோ ரசமான அநுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அவற்றையெல்லாம் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். ஒரு நாள் சொல்ல வேண்டும்.”
“ஒரு நாள் என்ன? இன்றைக்கே வேண்டுமானாலும் சொல்லுகிறேன். ஆனால், பர்மாவில் இருந்த சமயத்தில் எனக்கு அவ்வளவு ரஸமான அனுபவங்கள் ஏற்பட்டன என்று சொல்ல முடியாது. பர்மாவிலிருந்து இந்தியாவுக்குக் கப்பலில் திரும்பி வந்த போதுதான் மிக அதிசயமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதைக் கேட்டால் நீங்கள் ரொம்பவும் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்,” என்றார் பாஸ்கரர்.
“பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று, கட்டாயம் அந்த அனுபவத்தைச் சொல்ல வேண்டும். அப்படியானால், நீங்கள் கப்பலிலோ திரும்பி வந்தீர்கள்? கப்பலில் உங்களுக்கு இடங்கிடைத்ததே, அதுவே ஓர் அதிர்ஷ்டம்தானே?” என்றேன் நான்.
இந்தச் சமயத்தில் “சுத்தப் பாடாவதிப் படம்!” என்று சொல்லிவிட்டுப் போன மனிதர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடைய இடத்தில் உட்கார்ந்திருந்த என் சிநேகிதரைக் குத்துச் சண்டைக்காரனைப் போல் உற்றுப் பார்த்தார். நண்பரும் அஞ்சா நெஞ்சங் கொண்ட வீரனைப் போல் அவரைத் திரும்ப உற்றுப் பார்த்தார்.
நெருக்கடியைத் தீர்க்க எண்ணங் கொண்ட நான், “இந்தப் பாடாவதிப் படத்தைப் பார்த்த வரையில் போதும்; வாருங்கள் போகலாம்!” என்று சொல்லி நண்பரின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனேன்.
கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்தோம். பூரண சந்திரனின் பால் நிலவில் கடற்கரையின் வெண்மணல் பரப்பு வெள்ளி முலாம் பூசி விளங்கியது. கடற்கரைச் சாலையில் வைரச் சுடர் விளக்குகள் வரிசையாக ஜொலித்தன. காசு செலவின்றிக் கடல் காற்று வாங்க வந்த பெரிய மனிதர்களின் மோட்டார் வண்டிகள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தன. பௌர்ணமியானாலும் கடல் அலைகள் அன்றைக்கு அடங்கி ஒலித்துத் தம்புராவின் சுருதியைப் போல் இனிய நாதத்தை எழுப்பிக் கொண்டிருந்தன.
“பர்மாவிலிருந்து வருவதற்குத் தங்களுக்குக் கப்பலில் இடம் கிடைத்ததாக்கும்! அது ஓர் அதிர்ஷ்டந்தானே? தரைமார்க்கமாக வந்தவர்கள் பட்ட கஷ்டங்களைக் கேட்டால், அப்பப்பா! பயங்கரம்!” என்றேன்.
“ஆம்; தரை மார்க்கமாகக் கிளம்பி வந்தவர்கள் எத்தனையோ கஷ்டப்பட்டார்கள். பலர் வந்து சேராமல் வழியிலேயே மாண்டு போனார்கள். தரை மார்க்கம் கஷ்டமாயிருக்கும் என்று தெரிந்துதான் நான் கால்நடைப் பிரயாணிகளுடன் கிளம்பவில்லை. கப்பலில் இடம் பெறுவதற்குப் பெரும் பிரயத்தனம் செய்தேன். கடைசியில், தூரத்தில் ஜப்பான் பீரங்கிக் குண்டுகளின் சத்தம் கேட்கத் தொடங்கிய நேரத்தில், இரங்கூன் துறைமுகத்திலிருந்து கிளம்பிய கப்பல் ஒன்றில் எனக்கு இடம் கிடைத்தது. அந்த வரைக்கும் நான் அதிர்ஷ்டசாலிதான்!” என்றார் நண்பர்.
மேலும் நான் தூண்டிக் கேட்டதின்பேரில் பாஸ்கரக் கவிராயர் அந்தக் கப்பல் பிரயாணக் கதையை விவரமாகக் கூறத் தொடங்கினார்: