Mohini Theevu Kalki
நான்காம் அத்தியாயம்
பூரணச் சந்திரன் உச்சி வானத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தான். அந்தத் தீவுக்கு ‘மோகினித் தீவு’ என்று ஏன் பெயர் வந்தது என்பது தமக்குத் தெரியாது என்று கப்பல் காப்டன் சொன்னது எனக்கு நினைவு வந்தது. அதற்குக் காரணம் தேடவா வேண்டும்? நள்ளிரவில் வெள்ளி நிலவில் அந்தத் தீவை ஒரு தடவை பார்த்தவர்களுக்கு ‘மோகினித்தீவு’ என்னும் பெயர் எவ்வளவு பொருத்தமானது என்று உடனே தெரிந்து போய் விடும்.
சொர்க்க பூமியிலிருந்து, ஏதோ ஒரு காரணத்தினால் ஒரு சிறு பகுதி தனித்துண்டாகப் பிரிந்து வந்து கடலில் விழுந்து அங்கேயே மிதப்பது போல மோகினித்தீவு அச்சமயம் காட்சி அளித்தது. சொர்க்கத்திலிருந்து அந்தத் துண்டு பிரிந்து விழுந்த சமயத்தில் அத்துடன் விழுந்துவிட்ட தேவனும் தேவியுந்தான் இந்தத் தம்பதிகள் போலும்! ஆனால், தேவலோகத்துத் தம்பதிகளாயிருந்தாலும், பூலோகத்துத் தம்பதிகளைப் போலவேதான், இவர்கள் அடிக்கடி விவாதத்திலும் ஈடுபடுகிறார்கள்.
மோகினித் தீவின் அந்தச் சுந்தர புருஷன், “முகத்தில் இரு வாள்களுடன் கூடிய ‘கொல்லியம் பாவை’யை, மதுரையில் சுகுமார சோழன் சந்தித்தான்” என்று சொன்னதும், அவன் அருகில் வீற்றிருந்த வனிதாமணி குறுக்கிட்டாள்.
“பெண் குலத்தைப் பற்றி இவ்விதம் அடிக்கடி ஏதாவது நிந்தைமொழி கூறாவிட்டால், புருஷர்களுக்குத் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது!” என்றாள். பால் நிலவு பட்டு அவளுடைய பால் வடியும் முகம் தந்தத்தினால் செய்த பதுமையின் முகம் போலத் திகழ்ந்தது. ஆனால், அந்தப் பதுமையின் முகத்தில் ஜீவகளை ததும்பியது. அந்த முகத்திலிருந்த கரிய விழிகளில் சந்திர கிரணங்கள் பட்டு எழுந்த கதிரொளிக் கதிர்கள் வாள்களாகவும் வஜ்ராயுதத்தின் வீச்சுக்களாகவும் ஜொலித்தன.
பாவைமார்களின் வாளையொத்த விழிகளைப் பற்றி அந்த ஆடவன் கூறியது அப்படியொன்றும் தவறில்லையென்று எனக்குத் தோன்றியது.
அவன் தன் காதலியின் வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகை புரிந்தவண்ணம், அவள் முகத்தை உற்று நோக்கினான். “மன்னிக்க வேண்டும். புவன மோகினியைக் ‘கொல்லியம் பாவை’ என்று நான் கூறியது குற்றந்தான். அவளுடைய கண்கள் வாள்கள் என்றும், வேல்கள் என்றும் கூறியது அதை விடப் பெரிய குற்றம். ‘அமுத கிரணங்களை அள்ளி வீசும் ஜீவச் சுடர் ஒளிகள்’ என்று அவளுடைய கண்களைச் சொல்லியிருக்க வேண்டும்!” என்றான்.
புவனமோகினி என்ற பெயரை அவன் சொன்னவுடனே எனக்குக் கதையின் பேரில் நினைவு சென்றது. “என்ன? என்ன? சுகுமார சோழன் மதுரையில் சந்தித்த ‘கொல்லியம் பாவை’ பாண்டிய குமாரி தானா? பராக்கிரம பாண்டியரின் ஒரே புதல்வியா?” என்று வியப்புடன் கேட்டேன்.
“ஆம், ஐயா! சுகுமார சோழன் மதுரைமாநகருக்குச் சென்றபோது, அவனுடைய விதியும் அவனைப் பின் தொடர்ந்து சென்றது. விதியின் மகிமை மிகப் பெரியது என்று பெரியோர்கள் சொல்வார்கள். விதி வலிமையுடன் கூட ஒரு பெண்ணின் மன உறுதியும் சேர்ந்து விட்டால், அந்த இரண்டு சக்திகளுக்கு முன்னால் யாரால் எதிர்த்து நிற்க முடியும்? சுகுமாரனால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஆன மட்டும் அவன் போராடிப் பார்த்தும், கடைசியில் சரணாகதி அடைய நேரிட்டது…”
“நீங்கள் கதை சொல்கிறீர்களா? அல்லது புதிர் போடுகிறீர்களா? பாவம்! இவருக்கு நீங்கள் சொல்வது ஒன்றுமே புரியவில்லை. மதுரையில் நடந்ததை இனிமேல் நான் கொஞ்சம் சொல்லட்டுமா?” என்று கேட்டு விட்டு, அந்த இளமங்கை உடனே சொல்லத் தொடங்கினாள்:-
“மதுரையில் அப்போது தேவேந்திரச் சிற்பி என்பவர் பிரசித்தி பெற்றிருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். அவருக்கு மனைவி மக்கள் யாரும் இல்லை. அவர் கலியாணமே செய்து கொள்ளவில்லை. கலைத் தேவியைத் தாம் திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும், வேறொரு மனைவிக்குத் தமது அகத்தில் இடமில்லையென்றும் சில சமயம் அவர் சொல்லுவது உண்டு. பராக்கிரம பாண்டியருக்குத் தேவேந்திரச் சிற்பியிடம் அபிமானம் இருந்தது. தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்கு அவர் சில சமயம் செல்வதுண்டு. தம்முடன் தம் குமாரி புவனமோகினியையும் அழைத்துப் போவார். குடும்பமும் குழந்தைகளும் இல்லாத தேவேந்திரச் சிற்பிக்கு, ராஜகுமாரியிடம் மிகுந்த வாஞ்சை ஏற்பட்டது. ராஜகுமாரிக்கும் தேவேந்திரச் சிற்பியிடம் அன்பு உண்டாகி வளர்ந்தது. அந்த அன்பு காரணமாகச் சிற்பக் கலையிடத்திலும் அவளுக்குப் பற்று ஏற்பட்டது.
பராக்கிரம பாண்டியர் தம்முடைய ஆட்சிக் காலத்தில் மீனாக்ஷி அம்மன் கோயிலைப் புதுப்பித்துக் கட்ட விரும்பினார். அதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யும்படி தேவேந்திரச் சிற்பிக்குச் சொல்லியிருந்தார். தஞ்சை நகரில் ராஜராஜ சோழர் கட்டிய பிரகதீஸ்வர ஆலயத்தைப் பார்த்த பின்னர், மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலை அதை விடப் பெரிதாகக் கட்ட வேண்டும் என்ற ஆசை பராக்கிரம பாண்டியருக்கு ஏற்பட்டது. ஆகையால், வேலையைத் துரிதப்படுத்தும்படி கட்டளையிட்டார்.
தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்தில் பல மாணாக்கர்கள் சிற்பக் கலை கற்றுக் கொண்டிருந்தார்கள். வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். பராக்கிரம பாண்டியர் உத்தம சோழரைச் சிறைப்பிடித்து வந்த சில நாளைக்கெல்லாம் தேவேந்திரச் சிற்பியின் சிற்பக் கூடத்துக்கு ஓர் இளைஞன் வந்தான். தேவேந்திரச் சிற்பி இன்னார் என்பதைத் தெரிந்து கொண்டு அவரிடம் வந்து பணிவோடு நின்று ஒரு விண்ணப்பம் செய்து கொண்டான். “ஐயா! நான் சோழ நாட்டைச் சேர்ந்தவன்; சிற்பக் கலையில் பற்றுக் கொண்டு அக்கலையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்; ஆனால் சோழ நாட்டில் இப்போது ஆலயத் திருப்பணி எதுவும் நடைபெறவில்லை. ஆகையால் என்னுடைய வித்தையைப் பூர்த்தி செய்து கொள்ள விரும்பி யாத்திரை கிளம்பினேன். போகுமிடமெல்லாம் மதுரை தேவேந்திரச் சிற்பியாரின் புகழைக் கேட்டு என் செவிகள் குளிர்ந்தன. என் மனமும் மகிழ்ந்தது. அத்தகைய பிரசித்தமான ஆசிரியரை நான் குருவாகக் கொண்டு நான் கற்ற சிற்பக் கலையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக வந்தேன். கருணை கூர்ந்து என்னைத் தங்கள் சீடனாக அங்கீகரிக்க வேண்டும்!” என்று சொன்னான். அந்த வாலிபனின் அடக்க ஒடுக்கமும் பணிவான பேச்சும் களைபொருந்திய முகமும் தேவேந்திரச் சிற்பியின் மனத்தைக் கவர்ந்தன. அக்கணமே அவனைத் தம் சீடனாக ஏற்றுக் கொண்டு சிற்பக் கூடத்தில் வேலை செய்யப் பணித்தார். ஆனால், சில நாளைக்குள்ளேயே தமக்குச் சீடனாக வந்திருப்பவன் உண்மையில் தமக்குக் குருவாகியிருக்கத் தக்கவன் என்று தேவேந்திரச் சிற்பி தெரிந்து கொண்டார். தம்மைக் காட்டிலும் அந்த வாலிபனுக்குச் சிற்பவித்தையின் நுட்பங்கள் அதிகமாகத் தெரியும் என்று கண்டு கொண்டார். இவ்விதம் தெரிந்து கொண்டதனால் அவர் அதிருப்தியோ அசூயையோ கொள்ளவில்லை. அளவிலாத மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தார். இத்தகைய சிற்ப மேதாவி ஒருவன் தமக்குச் சீடனாக கிடைத்திருக்கிறபடியால், மீனாக்ஷி அம்மன் கோயில் திருப்பணியை விரைவாகவும் சிறப்பாகவும் நடத்தி முடிக்கலாம் என்ற நம்பிக்கை தேவேந்திரச் சிற்பிக்கு ஏற்பட்டது.
உத்தம சோழரைத் தேர்க்காலில் கட்டி இழுத்த கோரமான காட்சியைப் பார்த்த நாளிலிருந்து புவனமோகினிக்கு வாழ்க்கையில் உற்சாகமே இல்லாமல் போயிருந்தது. ஆகையினால், அரண்மனைக்குள்ளேயே இருந்து காலங்கழித்து வந்தாள். தன்னுடைய கலியாணப் பேச்சுக் காரணமாக அத்தகைய குரூர சம்பவம் நிகழ்ந்ததை எண்ணி எண்ணி அவள் வருந்தினாள். இது போதாதற்குச் சோழநாட்டு இளவரசர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டு வருவதற்குத் தன் தந்தை முயன்று வருகிறார் என்னும் செய்தி, அவளுக்கு இன்னும் அதிக மனச் சோர்வை உண்டாகியிருந்தது. இந்த நிலையில் அவள் தன்னுடைய தந்தைக்கு இணையாக மதித்து வந்த தேவேந்திரச் சிற்பியைக் கூட நெடுநாள் வரையில் போய்ப் பார்க்கவில்லை.
இப்படியிருக்கும்போது ஒரு நாள் தேவேந்திரச் சிற்பியிடம் புதிதாகச் சோழ நாட்டிலிருந்து ஒரு மாணாக்கன் வந்து சேர்ந்திருக்கிறான் என்றும், அவன் சிற்பக்கலையில் மேதாவி என்றும் கேள்விப் பட்டதாகப் புவனமோகினியிடம் அவளுடைய தோழி ஒருத்தி சொன்னாள். இதைக் கேட்டதும் புவனமோகினிக்குத் தேவேந்திரச் சிற்பியை வெகு நாளாகத் தான் போய் பார்க்கவில்லை யென்பது நினைவு வந்தது. அதற்குப் பரிகாரமாக, உடனே அவரைப் போய்ப் பார்க்கத் தீர்மானித்தாள். முடிந்தால் அவருடைய புதிய சீடனையும் பார்க்க அவள் விரும்பினாள். சோழ நாட்டிலிருந்து வந்தவனாகையால், ஒரு வேளை இளவரசர்களைப் பற்றி அவன் அறிந்திருக்கலாம் அல்லவா? தன் தந்தையின் படைவீரர்களிடம் சோழ இளவரசர்கள் சிக்காமல் இருக்கவேண்டுமே என்று அவளுக்கு மிகுந்த கவலை இருந்தது. உத்தம சோழர் அவருடைய அரண்மனைப் பணிப்பெண்ணாகத் தன்னை வரும்படி சொன்னதைப் பற்றி அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் இல்லாமலில்லை. ஆயினும் அந்த அவமானம் தனக்கு நேர்ந்ததின் பொறுப்பை அவள் தன் தந்தையின் பேரிலே சுமத்தினாள். இவர் எதற்காக வலியப் போய்த் தன்னைச் சோழ குமாரனுக்கு மணம் செய்து கொடுப்பதாகச் சொல்லவேண்டும்? அப்படிச் சொன்னதினால்தானே இந்த அவமானம் தனக்கு நேர்ந்தது? பாண்டிய நாட்டில் பிள்ளையைச் சேர்ந்தவர்கள் பெண்ணைத் தேடிக் கொண்டு போவதுதான் வழக்கம். சாக்ஷாத் பரமசிவனே கைலாயத்திலிருந்து மீனாக்ஷியம்மனைத் தேடிக் கொண்டு மதுரைக்கு வந்து, அம்பிகையை மணந்து கொண்டாரே? அதற்கு மாறாக; பராக்கிரம பாண்டியர் மகளுக்கு வரன் தேடிக் கொண்டு ஏன் தஞ்சாவூருக்குப் போனார்? அப்படி முறை தவறிய காரியத்தைச் செய்து விட்டுப் பிறகு ஆத்திரப்படுவதில் பயன் என்ன? உத்தம சோழரைத் தேர்க்காலில் கட்டி இழுப்பதனாலோ அவருடைய குமாரர்களைச் சிறைப்பிடித்து வந்து சித்திரவதை செய்வதனாலோ அவமானம் நீங்கி விடுமா?
பெண்ணாகப் பிறந்தவர்கள், கலியாணம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும் என்பது என்ன கட்டாயம்? தமிழ் மூதாட்டியான ஔவையாரைப் போல் ஏன் கன்னியாகவே இருந்து காலம் கழிக்கக் கூடாது. பராக்கிரம பாண்டியருடைய மகளாகப் பிறந்ததினாலே யல்லவா இவ்வளவு துன்பங்களும் தனக்கு நேர்ந்தன? பாண்டியர் மகளாகப் பிறக்காமல், தேவேந்திரச் சிற்பியின் புதல்வியாகத் தான் பிறந்திருக்கக் கூடாதா என்று, புவனமோகினி எண்ணி எண்ணிப் பெருமூச்சு விட்டாள். தன்னுடைய மனோநிலையை அறிந்து தன்னிடம் அனுதாபப்படக்கூடிய ஆத்மா இந்த உலகத்தில் தேவேந்திரச் சிற்பி ஒருவர்தான். அவரை இத்தனை நாளும் பார்க்கப் போகாமலிருந்தது தவறு. இவ்வாறெல்லாம் எண்ணிப் பாண்டிய குமாரி அன்று மத்தியானம் தேவேந்திரச் சிற்பியின் சிற்ப மண்டபத்துக்கு வருவதாக, அவருக்குச் செய்தி சொல்லி அனுப்பினாள்.
நெடு நாளைக்குப் பிறகு புவனமோகினி வரப்போவதை அறிந்து தேவேந்திரச் சிற்பியார் மிகுந்த குதூகலம் அடைந்தார். கொஞ்ச காலமாக ராஜகுமாரி தம்மை மறந்திருந்தது அவருக்கு வியப்பாயும் வருத்தமாயுமிருந்தது. ஒரு வேளை பாண்டிய மன்னர் அரண்மனையை விட்டு வெளியில் போகவேண்டாம் என்று அவளுக்குக் கட்டளையிட்டிருக்கலாம். பராக்கிரம பாண்டியர் ஏற்கெனவே கோபக்காரர். தஞ்சைக்குப் போய் வந்ததிலிருந்து அவருடைய ஆத்திர சுபாவம் இன்னும் மோசமாயிருந்தது என்பதை மதுரை வாசிகள் தெரிந்து கொண்டிருந்தார்கள். ஆகையால், பாண்டியர் புவனமோகினியை வெளியே புறப்படாமல் தடுத்திருந்தால், அதில் வியப்புறுவதற்கு ஒன்றுமிராது. பராக்கிரம பாண்டியரின் இயல்புக்கு ஒத்ததாகவே இருக்கும்.
இவ்விதம் எண்ணியிருந்த தேவேந்திரச் சிற்பி, அரசிளங்குமரி வரப்போகிறாள் என்னும் செய்தியினால் குதூகலம் அடைந்து, அந்தச் செய்தியை முதல் முதலில் மதிவாணனுக்குத் தெரியப்படுத்தினார். சோழ குமாரன், தன்னுடைய பெயர் மதிவாணன் என்று அவரிடம் சொல்லியிருந்தான். ஆச்சாரிய சிற்பியார் தம்முடைய புதிய மாணாக்கனைப் பார்த்து, “மதிவாணா! சமாசாரம் கேட்டாயா? இன்றைக்குப் பாண்டிய ராஜகுமாரி இங்கே வரப்போகிறாளாம். புவனமோகினிக்கு என்னிடம் மிக்க வாஞ்சை உண்டு. அதைவிடச் சிற்பக் கலையில் பற்று அதிகம். அவளுடைய தந்தையான பராக்கிரம பாண்டியரிடம் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறாளோ அவ்வளவு பக்தி என்னிடமும் அவளுக்கு உண்டு… உத்தமமான குணம் படைத்த பெண். அழகோடு அறிவும், அறிவோடு குணமும் படைத்த பெண். அப்படிப் பொருந்தியிருப்பது மிகவும் துர்லபம்!” என்றெல்லாம் வர்ணித்தார். ஆனால், அந்த வர்ணனையெல்லாம் மதிவாணன் காதில் ஏறவே இல்லை. புவனமோகினியை அந்த வாலிபன் பேய் பிசாசு என்று நினைத்தானோ, அல்லது வேறு என்ன நினைத்தானோ தெரியாது, அவள் வருகிறாள் என்ற செய்தி கேட்டதும், அவன் முகத்தில் பயப்பிராந்தியும் அருவருப்பும் திகைப்பும் விழிப்பும் தோன்றின. இதைப் பார்த்துத் தேவேந்திரச் சிற்பியும் திகைத்துப் போனார். “ஏன் அப்பா உனக்கு என்ன வந்து விட்டது, திடீரென்று? ஏதாவது உடம்பு சரியில்லையா?” என்று கேட்டார். மாணாக்கன் குருவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, “என்னைக் காப்பாற்றியருள வேண்டும்?” என்று பிரார்த்தித்தான். குரு மேலும் தூண்டிக் கேட்டதின் பேரில், தன்னுடைய விசித்திரமான விரதத்தைப் பற்றிச் சொன்னான். “குருநாதா! நான் சிலகாலத்துக்குப் பெண்களின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதில்லையென்றும், அவர்களுடன் பேசுவதில்லையென்றும் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தஞ்சையில் நான் முதலில் சிற்பம் கற்றுக் கொண்ட குருவுக்கு அவ்விதம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அதை மீறி நடந்தால் என்னுடைய சிற்பவித்தையை அடியோடு மறந்து விடுவேன் என்று என் குருநாதர் சொல்லியிருக்கிறார். ஆகையால் தாங்கள் இச்சமயம் என்னைக் காப்பாற்ற வேண்டும். ராஜகுமாரியை நான் பார்க்கவே விரும்பவில்லை. பார்த்த பிறகு, அவள் ஏதாவது கேட்டால் எப்படிப் பதில் சொல்லாதிருக்க முடியும்? இந்தச் சிற்பக் கூடத்தில் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றை எனக்குக் கொடுத்து விடுங்கள். நான் ஒருவர் கண்ணிலும் படாமல் என் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன்!” என்று சீடன் முறையிட்டதைக் கேட்ட தேவேந்திரச் சிற்பியாருக்குச் சிறிது வியப்பாகத் தானிருந்தது. ஆயினும், வேறு வழியின்றி அவனுடைய பிடிவாதமான கோரிக்கைக்கு அவர் இணங்க வேண்டியதாயிற்று.
அன்று மத்தியானம் பாண்டியகுமாரி சிற்பக் கூடத்துக்கு வந்தாள். தேவேந்திரச் சிற்பியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சோழ நாட்டிலிருந்து வந்திருந்த சீடனைப் பற்றிக் கேட்டாள். அவனைப் பற்றி எவ்வளவோ பெருமையுடன் சொல்ல வேண்டுமென்று தேவேந்திரச் சிற்பி எண்ணியிருந்தார். அதற்கு மாறாக இப்போது தயங்கி, பட்டும் படாமல் ஏதோ கூறினார். ஆனாலும் புவனமோகினி விடவில்லை. அந்தப் புதிய சீடனையும் அவன் செய்திருக்கும் சிற்ப வேலைகளையும் பார்க்கவேண்டும் என்று கோரினாள். “அவனுடைய சிற்பங்களைப் பார்க்கலாம்; ஆனால் அவனைப் பார்க்க முடியாது?” என்றார் தேவேந்திரர். அவனுடைய சிற்பங்களைக் காட்டியபோது தம்முடைய புதிய சீடனையும் பற்றி வானளாவப் புகழ்ந்து பேசாமலிருக்க முடியவில்லை. “இந்த ரதியின் சிலையைப் பார், தாயே! அந்தச் சிலையின் கையில் உள்ள கிளியைப் பார்! என்ன ஜீவகளை! எவ்வளவு தத்ரூபம்! உயிரற்ற கல்லுக்கு இந்தப் பையன் உயிரைக் கொடுத்திருக்கிறானே! இவன் பிரம்மதேவனைக் காட்டிலும் ஒரு படி மேலானவன் அல்லவா? நான் வேண்டுமானால் சொல்லுகிறேன். தஞ்சாவூரில் ராஜராஜேசுவரம் என்னும் பெரிய கோயிலைக் கட்டினானே ஒரு மகா சிற்பி, அவனுடைய சந்ததியில் இவன் தோன்றியவனாயிருக்க வேண்டும். தன் பரம்பரையைப்பற்றி இவன் எதுவும் சொல்ல மறுக்கிறான். ஆனாலும் என்னுடைய ஊகம் சரியென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என்றார்.
இதையெல்லாம் கேட்ட புவனமோகினிக்குக் கட்டாயம் அந்த வாலிபச் சிற்பியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாகிவிட்டது. ஆனால், இதற்குத் தேவேந்திரச் சிற்பி இடங் கொடுக்கவில்லை. புதிய சீடனிடம் அவர் அதற்குள் தன் மகனைப் போலவே அன்பு செலுத்தத் தொடங்கியிருந்தார். அவனைத் தம்முடைய தவறினால் இழந்துவிட அவர் விரும்பவில்லை. “இன்றைக்கு வேண்டாம். அந்தப் பிள்ளைக்கு நான் சொல்லி, அவனுடைய மனம் மாறும்படி செய்கிறேன். பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
ஏதாவது ஒரு பொருளை அடைவதற்குத் தடை ஏற்பட்டால் அந்த அளவுக்கு அதன் பேரில் ஆசை அதிகமாகிறது. இது மனித இயல்பல்லவா? புதிய இளம் சிற்பியைப் பார்ப்பதில் புவனமோகினியின் ஆர்வமும் அதிகமாயிற்று. மதிவாணனுடைய வீரத்தைப்பற்றி அவளுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை. ‘பெண் முகத்தைப் பார்த்தால் கற்ற வித்தை மறந்து போவதாவது? அவர்களுடைய ஊரில் சோழ தேசத்திலே பெண்களையே அவன் பாராமலிருந்திருக்க முடியுமா? எந்தக் காரணத்தினாலோ வீண் சால்ஜாப்புச் சொல்லுகிறான். பொருத்தமில்லாத காரணத்தைச் சொல்லுகிறான். ஏதோ சூட்சுமம் ஒன்று இருக்க வேண்டும். அதை நான் கண்டுபிடித்தேயாக வேண்டும்’ -இவ்விதம் புவனமோகினி தீர்மானித்து, அடிக்கடி சிற்ப மண்டபத்துக்குப் போனாள். புதிய சீடனைப் பார்க்கும் விஷயமாகத் தேவேந்திரச் சிற்பியைக் கேட்டாள். அவர் தம்முடைய பிரயத்தனம் இதுவரையில் பலிதமாகவில்லை என்றார். “மாமா! நீங்கள் அந்தப் பையன் சொல்வதை நம்புகிறீர்களா? அப்படி ஒரு குரு சாபம் இருக்க முடியுமா?” என்று கேட்டாள். “நான் என்னத்தைக் கண்டேன். தாயே! எனக்கென்னமோ, அவனுடைய விரதம் சுத்தப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது. சாக்ஷாத் மீனாக்ஷி அம்மனைப் போல் இருக்கிறாய். உன்னை அவன் ஒரு தடவை பார்த்தால் கூட அவனுடைய கலை மேம்படும் என்றே எனக்குத் தோன்றுகிறது, ஏன்? அவன் செய்துள்ள ரதியின் சிலை கூட இன்னும் சிறிது மேலாகவே இருந்திருக்கும். ஆனால், யாரோ என்னமோ சொன்னார்கள் என்று அவன் ஒரே குருட்டு நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கிறான்!” என்றார்.
அதற்கு மேல் பாண்டிய குமாரி புவனமோகினி ஒரு யுக்தி செய்தாள். தேவேந்திரச் சிற்பியின் மனத்தைக் கரைத்து அதற்கு அவரையும் சம்மதிக்கும்படி செய்தாள். அதாவது புவனமோகினி ஆண்வேடம் போட்டுக் கொண்டு வரவேண்டியது. காசியில், வசித்துத் திருப்பணி செய்யும் தேவேந்திரச் சிற்பியின் தமையனுடைய குமாரன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ள வேண்டியது. அப்போது மதிவாணன் ஆட்சேபம் ஒன்றும் சொல்ல முடியாதல்லவா? இந்த உபாயம் அவனை ஏமாற்றுகிற காரியமாயிருந்தாலும் அதனால் அவனுக்கு முடிவில் நன்மைதான் உண்டாகும் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.
அவ்விதமே புவனமோகினி வடதேசத்திலிருந்து வந்த வாலிபனைப்போல் வேடம் தரித்துக் கொண்டு வந்தாள். அவளுடைய உபாயம் பலித்தது. மதிவாணனை அவள் சந்திக்க முடிந்தது. ஆகா! மனித இதயத்தின் மர்மத்தைத் தான் என்னவென்று சொல்வது? மதிவாணனை முதன்முதலில் சந்தித்த அதே வினாடியில் புவனமோகினியின் இதயப் பூட்டுத் தளர்ந்து திறந்து கொண்டது. அது வரையில் அவள் கண்டறியாத உணர்ச்சி வெள்ளம் அவளை ஆட் கொண்டது. அவள் உள்ளக்கடலில் மலை போன்ற அலைகள் எழுந்து விழுந்தன. புயலும் தென்றலும் கலந்து அடித்தன. குதூகலமும் சோர்வும் இன்பமும் வேதனையும் அவள் மீது ஏககாலத்தில் மோதின. தன்னுடைய இருதயத்தில் என்ன நேர்ந்தது, எதனால் நேர்ந்தது, என்பதையெல்லாம் அச்சமயம் அவள் தெளிவாகத் தெரிந்து கொள்ளவில்லை போகப் போகத்தான் தெரிந்து கொண்டாள். தெரிந்து கொண்ட பிறகு ஏன் அந்த வாலிபனைச் சந்தித்தோம். அவனைச் சந்திப்பதற்காக ஏன் இவ்வளவு பிரயாசை எடுத்தோம் என்றெல்லாம் அவள் வருந்தும்படி நேர்ந்தது…”