Otrai Roja Kalki | Kalki Times
ஐந்தாம் அத்தியாயம்
மறுநாள் ஸர்தார்பவன் ஹோட்டலுக்குப் போனேன். மனோகரி மட்டும் அறையில் தனியாக இருந்தாள். அவள் தகப்பனார் என்னைப் பார்ப்பதற்காகத்தான் போயிருப்பதாகச் சொன்னாள். அன்றிரவு தன்னால் எனக்கு நேர்ந்த கஷ்டத்தைப் பற்றி வருத்தம் தெரிவித்தாள்.
“இது என்ன பிரமாதம்? சில நிமிஷ நேரம் உன் காதலனாக நடிக்கும் பேறு பெற்றேன் அல்லவா? அதற்கும் சில மணி நேரச் சிறை வாசத்துக்கும் சரியாய்ப் போயிற்று” என்றேன்.
பிறகு அந்த ஒற்றை ரோஜாப் பூவை எடுத்து அவளிடம் கொடுத்தேன். அவள் அளவிலா அதிசயத்துடன் அதை வாங்கிக் கொண்டாள். தன் அழகிய கர மலரில் அந்தச் செயற்கை மலரை வைத்துக்கொண்டு அதை உற்றுப் பார்த்தாள்.
“உள்ளே வைரம் பத்திரமாயிருக்கிறது!” என்றேன்.
“வைரம் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று மேலும் வியப்புடன் கேட்டாள்.
“பிரித்துப் பார்த்தேன்; தெரிந்தது?” என்றேன்.
“எப்படி இது உங்கள் கைக்கு வந்தது?”
“தூண் நிழலில் நின்று ‘இந்தக் காகிதப்பூ எதற்கு? நிஜ ரோஜாப் பூ மாலை வாங்கித் தருகிறேன்’ என்றாயே, அந்த இடத்திலேயே கிடந்தது. இதைக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னது நியாயந்தான், ஒன்றரை லட்ச ரூபாய் வைரத்தை யார்தான், ஒரு அந்நியனுக்குக் கொடுப்பார்கள்?”
“விலை மதிப்பை முன்னிட்டுக் கொடுக்க மறுக்கவில்லை. அவ்வளவு பெறுமானமுள்ளது என்பது அப்போது எனக்குத் தெரியவே தெரியாது. இதற்கு ஒரு உபயோகம் இருந்தது; அதனால் தான் கொடுக்க மாட்டேன் என்றேன். அந்த உபயோகம் இனி இல்லாமற் போய்விட்டது!”
“எனக்கு விளங்கவில்லை. உபயோகமில்லாமல் ஏன் போக வேண்டும்? இதில் உள்ள வைரம் உன் கழுத்தில் அழகாகத்தான் ஜொலிக்கும். ஆனால், சுங்க வரி மட்டும் கட்டிவிடவேண்டும்!” என்றேன். அவள் என்னை ஏறிட்டுப் பார்த்து, “எதற்காகச் சுங்க வரி கொடுக்கவேண்டும்? எனக்கும் கொஞ்சம் சட்டம் தெரியும். பெண்கள் அணிந்திருக்கும் நகைக்குச் சுங்க வரி கிடையாது!” என்றாள்.
“அப்படியானால், ஏன் அதை ஒளித்துக் கொண்டு வரவேண்டும்?” என்று முணுமுணுத்தேன்.
“என் தந்தை வைர வியாபாரி. என்னை வைர நகை போட்டுக்கொள்ளும்படி எத்தனையோ தடவை நிர்ப்பந்தித்திருக்கிறார். நான் மறுத்துவிட்டேன். இந்த ஒற்றை வைரத்தை மட்டும் எடுத்து வந்தேன். இவ்வளவு பெறுமானமுள்ளது என்று தெரியாது. நூறு ரூபாய் வைரமே என் காரியத்துக்குப் போதுமானதாயிருந்திருக்கும்!”
“அது என்ன அபூர்வமான காரியம்? இன்னும் அந்த மர்மம் எனக்கு விளங்கவில்லையே!” என்று கேட்டேன்.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மனோகரி என்னுடைய நிலைமையைப் பற்றி விசாரிக்கலானாள்.
“நான் கதாநாயகனாகத் தகுதியுள்ளவன் அல்ல; பி ஏ பரீட்சையில் ‘கோட்’ அடித்தவன்!” என்றேன்.
“நிஜமாகவா? நீங்கள் பி ஏ பரீட்சை எழுதித் தோல்வி அடைந்தீர்களா?” என்று கேட்டாள்.
“ஒரு தடவை மட்டுமல்ல; மூன்று தடவை பரீட்சைக்குப் போய்த் தோல்வியடைந்தவன். “
“மூன்று தடவையா தோல்வியடைந்தீர்கள்?” என்று கேட்டுவிட்டு, மனோகரி விழுந்து விழுந்து சிரித்தாள். அதில் என்ன அவளுக்கு அவ்வளவு சந்தோஷம் என்பது எனக்கு விளங்கவில்லை.
“சரி! சரி! நீ சிரித்து முடி. இன்னொரு நாள் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
அவள், போகவேண்டாம் என்று தடுத்தும் நான் நிற்கவில்லை. ஆண்பிள்ளை அல்லவா ரோசமாயிராதா? திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்விட்டேன்.