Paladaindha Bangala Kalki | Kalki Times
Paladaindha Bangala Kalki | Kalki Times
Mr and Mrs Tamilan Presents Kalki Times
அமரர் கல்கியின் சிறு கதைகள்
பாழடைந்த பங்களா
கல்கி
All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u
Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/
Paladaindha Bangala Kalki
ரொம்பவும் தெரிந்த சிநேகிதர்கள் யாராவது என்னிடம் ஒரு கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து “இதைக் கட்டாயம் விகடனில் போடச் சொல்லுங்கள்” என்று கூறும்போதெல்லாம் நான் மனத்திற்குள், “நாளைக்குப் பல்லாவரத்திற்குப் போக வேண்டியதுதான்” என்று சொல்லிக்கொள்வது வழக்கம்.
இது ஏன் என்றால், ஒரு முறை ரொம்பவும் பிராண சிநேகிதர் ஒருவர் ஒரு நகைச்சுவைக் கட்டுரையை என்னிடம் கொடுத்து, அதை விகடனில் வெளியிடும்படி சொன்னார். அதில் நகைச்சுவையைவிட அழுகைச் சுவைதான் அதிகமாயிருந்தது. ஏனென்றால், சென்னை நகரின் வீதிகளில் ஒன்றுக்கு ‘ராடன் பஜார்’ (Rattan Bazaar) என்று பெயர் அமைந்த பொருத்தத்தைப் பற்றி அவர் அதில் எழுதியிருந்தார். ‘ராடன்’ என்றால், பிரம்பு. அச்சமயம் அந்த வீதியில் மறியல் செய்த தொண்டர்களுக்குப் பிரம்படி வைபவம் நடந்துகொண்டிருந்தது. அக்கட்டுரையை விகடனில் அப்போது போட்டிருந்தால், இன்று எனக்கு இதை எழுதும் சிரமமும், உங்களுக்கு இதைப் படிக்கும் சிரமமும் இல்லாமற் போயிருக்கும்.
அவ்வளவு முன்யோசனை அப்போது இல்லாமற் போகவே, அந்தக் கட்டுரையைப் பற்றி ரொம்பவும் தொல்லையடைந்தேன். ஆனால் அந்த நண்பரே அதைத் தீர்த்து வைத்தார். அன்று மத்தியானம் கொஞ்சம் பல்லாவரத்திற்குப் போய் வரவேண்டுமென்று நான் சொல்ல, நண்பர் தமது மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு போவதாகச் சொன்னார். அவ்வாறே சைக்கிளின் பின் பீடத்தில் நான் உட்கார்ந்து கொள்ள, அவர் சைக்கிளை விட்டுச் சென்றார். கிளம்பும்போது அவருடைய நகைச்சுவைக் கட்டுரை என்னிடம் இருந்தது. பல்லாவரம் போய்ச் சேர்ந்த போது பார்க்கையில் கட்டுரையைக் காணவில்லை! உடனே இதை அவரிடம் தெரிவித்தால், போன காரியம் ஆவதற்குள் திரும்பிவிடுவார் என்று பயந்து, காரியம் ஆன பிறகுதான் தெரிவித்தேன். அதுவும், அவருடைய மோட்டார் சைக்கிளின் குலுக்கிப் போடும் சக்தியைப் பற்றி ஓர் அத்தியாயம் புகழ்ந்துவிட்டு விஷயத்தைச் சொன்னேன். மனுஷ்யரின் முகத்தில் ஓர் ஈ கொசு கூட ஆடவில்லை. “போகிறது. உம்மை நீரே கெட்டுப் போக்கிப் கொள்ளாமல் இருக்கிறேரே; அதுவே பெரிய காரியந்தான்” என்றார். திரும்பி வரும் வழியில் ஏதாவது வெள்ளையாய்த் தெரிந்த இடத்தில் எல்லாம் சைக்கிளை நிறுத்தி நிறுத்திப் பார்த்துக் கொண்டு வந்தார். அப்படி நிறுத்திய இடத்திலெல்லாம், அது எங்கே அகப்பட்டு விடுகிறதோ என்று எனக்கும் திக்குத்திக்கு என்று அடித்துக் கொண்டிருந்தது. நல்ல வேளையாய் அகப்படவில்லை.
ஆனால், இப்போது நான் உங்களுக்குச் சொல்ல வந்த விஷயம் அதுவன்று. பல்லாவரத்துக்கு ஒரு காரியமாகப் போனேன் என்று கூறினேனல்லவா” அந்தக் காரியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று தான் இதை எழுத ஆரம்பித்தேன்.
தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள என் சிநேகிதர் ஒருவர் தேகசுகத்துக்காகப் பல்லாவரத்தில் வந்து சில காலம் வசிக்க விரும்பினார். அவ்வூரில் ஒரு வீடு வாடகைக்கு அமர்த்திக் கொடுக்கும்படி எழுதியிருந்தார். நான் பல்லாவரம் போனது இதற்காகத்தான்.
அங்கே விஸ்தாரமான சாலையின் இரு புறங்களிலும் உள்ள பங்களாக்களை ஒவ்வொன்றாய்ப் பார்வையிட்டு வந்தோம். அவற்றில் ஒரு பங்களா என் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது.
அது விசாலமான ஒரு தோட்டத்திற்கு நடுவில் அமைந்திருந்தது. பழைய காலத்து பங்களா. கட்டிடத்தின் அமைப்பும், சுவர்களின் நிலைமையும் அதனுடைய பழமையை நினைவூட்டின. எங்கே பார்த்தாலும் ஒட்டடையும் , தூசியும் படிந்திருந்தபடியால் வெகு காலமாக அதில் யாரும் குடியிருக்கவில்லையென்று தெரிய வந்தது. பளிச்சென்று பிரகாசமாயிருந்த இடமோ, வஸ்துவோ அந்தப் பங்களாவில் கிடையாது. அறைகளில் பூஞ்சக்காளம் பூத்திருந்தன. எப்படிப்பட்ட குதூகல புருஷனையும் அந்தப் பங்களாவிற்குள் கொண்டு விட்டால், அவன் உற்சாகம் குன்றிப் போய் மயான காண்டம் நடிப்பதற்குச் சித்தமாகி விடுவான். அவனை நல்லதங்காளாக நடிப்பதற்குத் தயார் செய்துவிடுவது கூடப் பிரமாதமாகாது.
இவ்விஷயத்தில் தோட்டமும் பங்களாவுடன் ஒற்றுமையுணர்ச்சி கொண்டிருந்தது. பூ என்ற நாமதேயம் அந்தத் தோட்டத்தில் கிடையாது. விசாலமாகப் படர்ந்த மாமரங்களும், உயரமாய் வளர்ந்த தென்னை, கமுகு மரங்களும் நிறைய இருந்தன. மாமரங்களின் அடியில் வெகுகாலமாக உதிர்ந்த இலைகள் அப்படியே கிடந்து மடிந்து நல்ல உரமாகியிருந்தன. தென்னை மரங்களிலும், கமுகு மரங்களிலும் பழைய காலத்துக் காய்ந்த கட்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு தென்னை மரத்தில் இடி விழுந்து மட்டைகள் எல்லாம் எரிந்து போய்விட, மரம் மட்டும் மொட்டையாய் நின்றது.
அடர்த்தியான மரநிழலில் ஒரு பெரிய கிணறு இருந்தது. அதில் ஜலம் இழுப்பதற்கு வசதி எதுவும் காணோம். பக்கத்திலிருந்த ஒரு தொட்டியில் கன்னங்கறேலென்று கொஞ்சம் ஜலம் தேங்கியிருந்தது. அது வெகு காலத்துத் தண்ணீராயிருக்க வேண்டுமென்பதில் சந்தேகமில்லை. எனவே, அதைப் புண்ணிய தீர்த்தம் என்று கூடச் சொல்லலாம்.
பொதுவாக, அந்தப் பங்களா நமது ஹிந்து சமூகத்துக்கும், ஸநாதன தர்மத்துக்கும் சிறந்த உதாரணமாயிருப்பதாக எனக்குத் தோன்றிற்று. பலமான அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டது; விசாலமானது; பழமையானது; அழகு பொருந்தியது. கொஞ்சம் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்; தரைக்குப் புதிய தளவரிசை போட வேண்டும். சுவர்களின் உளுத்துப் போன மேற்பூச்சைச் சுரண்டிவிட்டு சிமிண்டு பூசி வெள்ளை அடிக்கவேண்டும்; தோட்டத்தையும் சுத்தம் செய்து சில புதிய புஷ்பச் செடிகளை வைத்து விட வேண்டும். இதெல்லாம் செய்துவிட்டால் வீடு எவ்வளவு நன்றாய் ஆகிவிடும்!
இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில் அங்கே தோட்டக்காரன் வந்தான். அவனும் அந்த பங்களாவுக்குப் பொருத்தமானவன் தான். ரோமம் நரைத்து, முகம் சுருங்கி, உடம்பு தளர்ந்தவன்.
“இந்த வீட்டுக்கு என்னப்பா வாடகை?” என்று கேட்டேன்.
“அறுபது ரூபாயுங்க” என்றான்.
இவ்வளவு பெரிய மாளிகைக்கு 60 ரூபாய்தானா வாடகை என்று ஆச்சரியப்பட்டேன்.
“நீங்க குடித்தனம் வரப்போகிறீர்களா?” என்று கேட்டான்.
“ஆமாம்; வரலாமென்றுதான் பார்க்கிறேன்.”
“இப்படித்தான் ரொம்பப் பேர் சொல்லிவிட்டுப் போறாங்க” என்றான் கிழவன்.
அவன் சொன்னது வாஸ்தவம் என்பதற்குப் பங்களாவே சாட்சி சொல்லிற்று.
“ஏன் ஒருவரும் வருவதில்லை?” என்று கேட்டேன்.
“அதென்னவோ எனக்குத் தெரியாது. குடித்தனம் வருகிறதாயிருந்தால் சொல்லுங்க. இன்னும் அஞ்சு ரூபாய் குறைச்சுக்கூடக் கொடுப்பாங்க” என்றான்.
அந்த வீட்டைப் பற்றிய மர்மம் ஏதோ இருக்க வேண்டுமென்று உடனே எனக்குத் தோன்றிப் போயிற்று. பக்கத்தில் சாலை ஓரத்தில் ஒரு சோடா, வெற்றிலை பாக்குக் கடை இருந்தது. அங்கே சென்று நானும் என் கட்டுரை நண்பரும் இரண்டு சோடா சாப்பிட்டோ ம். கடைக்காரனுக்குச் சுமார் 30-35 வயதிருக்கலாம். நாங்கள் போனபோது அவன் ஆரணி குப்புசாமி முதலியாரின் ரெயினால்ட்ஸ் நாவல் மொழிபெயர்ப்பு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான். எங்களிடம் சில்லறை வாங்கிக் கொண்டதும் மறுபடியும் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினான்.
கொஞ்சம் விஷயம் தெரிந்த மனிதன் இவன் என்று, எண்ணி, வீட்டைப் பற்றி விசாரிக்கலாமென நினைத்தேன். “பக்கத்துப் பங்களாவுக்கு ஏன் ஒருவரும் குடித்தனம் வருவதில்லை. உனக்குத் தெரியுமா?” என்று கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டேன்.
கடைக்காரன் ஒரு நிமிஷம் யோசனை செய்வதுபோல் இருந்தான். பிறகு, “நமக்கென்னத்துக்குங்க அந்த வம்பெல்லாம்? இரண்டு பீடா வாங்கிக் கொள்ளுங்க, ஸார்!” என்றான். அப்படியே நாங்கள் வாங்கிப் போட்டுக் கொண்டோ ம். பின்னர், “இல்லையப்பா! இந்த வீட்டுக்குக் குடி வரலாமா என்று யோசிக்கிறோம். ஆனால் ரொம்ப நாளாய்ப் பூட்டிக் கிடக்கிறதே, ஏதாவது விசேஷமிருக்குமோ வென்று சந்தேகமாயிருக்கிறது. அதுதான் உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டது” என்றேன்.
“விசேஷமில்லாமல் நாற்பது வருஷமாய் ஒரு வீடு பூட்டிக் கிடக்குமா?” என்றான் கடைக்காரன்.
“அந்த விசேஷத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றுதான் உன்னைக் கேட்கிறது.”
“அப்படியானால் இந்த பெஞ்சில் உட்காருங்கள், சொல்கிறேன். பெரிய கதை” என்றான் கடைக்காரன்.
நாங்கள் உட்கார்ந்தோம். கடைக்காரன் கதை சொல்லி முடிப்பதற்குள் இரண்டு கலர், இரண்டணா பெப்பர்மிண்டு, முக்காலணா வெற்றிலை பாக்கு இவ்வளவும் தீர்த்துவிட்டோ ம். அவன் சொன்னதில் வீண் வளர்த்தல்களை விட்டுவிட்டு விஷயத்தை மட்டும் இங்கே சொல்கிறேன்:
துபாஷ் வரதராஜ முதலியார் என்று ஒருவர் இருந்தார். அவருக்குப் பிதிரார்ஜிதச் சொத்தோடு சுயார்ஜிதச் சொத்தும் ஏராளமாயிருந்தது. வெகுகாலம் அவருக்குச் சந்தானம் இல்லாமலிருந்து கடைசியாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அவருடைய மனைவிக்கு க்ஷயரோகத்தின் அறிகுறிகள் இருப்பதாகவும், பல்லாவரத்தில் குடியிருந்தால் நல்லதென்றும் வைத்தியர்கள் சொன்னதன்மேல் முதலியார் இங்கே குடி வந்தார். அச்சமயந்தான் இங்கேயே நிரந்தரமாய் வசிக்கலாமென்ற எண்ணத்துடன் இந்தப் பங்களாவை எண்பதினாயிரம் ரூபாய் செலவு செய்து கட்டினார். ஆனால் பங்களா கட்டி முடிவதற்குள் அவருடைய மனைவி காலமானார்.
பாவி மனிதர் அதற்குப் பிறகு இளைய தாரமாக ஒருத்தியை மணந்தார். அவளுடனும், மூத்த தாரத்தின் பெண் செங்கமலத்துடனும் புது வீட்டில் குடித்தனம் செய்யலானார். ஆனால் ஆரம்பத்திலிருந்தே அவருடைய இளைய தாரத்துக்குச் செங்கமலத்தின் மேல் அசூயையும் துவேஷமும் வளர்ந்து வரத் தொடங்கின. தான் இந்தக் கிழவனைக் கட்டிக் கொள்ள வேண்டி வந்ததில் ஏற்பட்ட கோபம், ஆத்திரம் எல்லாவற்றையும் அந்த ஏழைப் பெண்ணின் மேல் காட்டலானாள்.
முதலியாரோ, ஒரு பக்கத்தில் தம் இளம் மனைவியின் மோகாந்தகாரத்தில் மூழ்கியிருந்தார்; மற்றொரு பக்கம் செங்கமலத்தின் மீது தம்முடைய உயிரையே வைத்திருந்தார். இவர்கள் இரண்டு பேருக்கும் பரஸ்பர நேசம் உண்டுபண்ண அவர் செய்த முயற்சியெல்லாம் வீணாயிற்று.
கடைசியாக, செங்கமலத்துக்கு வயது பன்னிரண்டானபோது முதலியார் ஒருநாள் அவளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார். அச்சமயம் அவள் தன் சிற்றன்னையின் மேல் ஏதோ புகார் சொன்னாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கற்பகம் தன்னை மீறிக் கோபங் கொண்டவளாய் அச்சமயம் கறிகாய் நறுக்கிக் கொண்டிருந்த கத்தியை எடுத்துக் கொண்டு ஓடி வந்து செங்கமலத்தை ஒரே குத்தாய்க் குத்திவிட்டாள். பாவம்! அந்தப் பெண் உடனே செத்து விழுந்து விட்டது.
முதலியார் தவியாய்த் தவித்தார். கொல்லப்பட்டவளோ தம் அருமைப் பெண்; கொலைகாரியோ தம் ஆசை மனைவி. என்ன செய்வார், பாவம்! வெளியில் தெரிந்தால் கற்பகம் தூக்கு மேடைக்குப் போக நேரிடும். பயங்கரமும், துக்கமும் கொஞ்சம் ஆறினபிறகு, அவரும் அவர் மனைவியுமாகச் சேர்ந்து கொல்லையில் ஒரு பள்ளம் தோண்டி அதில் பிரேதத்தைப் புதைத்தார்கள்.
செங்கமலம் அவளுடைய மாமா வீட்டுக்குப் போயிருப்பதாக முதலியார் அக்கம் பக்கத்தாருக்குச் சொல்லிவிட்டார். ஏதோ சந்தேகப்பட்டு விசாரித்த போலீஸ்காரர்களுக்கு ஏராளமான பணங்கொடுத்து அமுக்கிவிட்டார். அப்புறம் முதலியார் அதிக காலம் உயிர் வாழவில்லை. “செங்கமலம்! செங்கமலம்!” என்று புலம்பிக் கொண்டேயிருந்து பிராணனை விட்டார். அவருடைய ஆவி அந்தப் பங்களாவின் தோட்டத்தில் உலாவிக் கொண்டேயிருக்கிறது. இரவு நேரங்களில், “செங்கமலம்! செங்கமலம்!” என்று பரிதாபமான குரலில் கூப்பிடும் சத்தம் அந்தத் தோட்டத்தில் அடிக்கடி கேட்பதுண்டு.
கடைக்காரன் கதையை முடித்ததும், “ஆமாம்! இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.
கடைக்காரன் புன்னகை புரிந்தான். “உங்களுக்கு நம்பிக்கையில்லையல்லவா? அதனால்தான் நான் ஒருவருக்கும் சொல்வதில்லை. நீங்கள் கேட்டபடியால் சொன்னேன். போகட்டும்; இன்னும் ஒரு கலர் சாப்பிடுகிறீர்களா?” என்றான்.
அவனைத் தூண்டித் துரு எடுத்து மறுபடியும் கேட்டதில், “நீங்கள் ஒரு தோட்டக்காரக் கிழவனைப் பார்த்தீர்கள் அல்லவா? அவன் தான் செங்கமலத்தின் பிரேதத்தை உடனிருந்து புதைத்தவன். அவன் சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது. இப்படியே அவன் இன்னும் இரண்டொருவரிடம் சொல்லியிருக்கிறான் போல் இருக்கிறது. எப்படியோ விஷயம் ஒருவாறு பரவிவிட்டது. அதனால் தான் ஒருவரும் அந்தப் பங்களாவுக்குக் குடிவருவதில்லை” என்றான்.
இது போன்ற கதைகள் இதற்கு முன் நான் எத்தனையோ கேட்டிருக்கிறேன். பட்டணங்களில் “கொலை நடந்த வீடு” என்றும், “பேய் வாழும் வீடு” என்றும் பல வீடுகளுக்கு எப்படியோ பெயர் வந்து விடுகிறது. அந்த வீடுகள் மலிவான வாடகைக்குக் கிடைப்பது வழக்கம். நான் கூட ஒரு முறை 50 ரூபாய் வாடகை வரக்கூடிய அத்தகைய வீடு ஒன்றில் 16 ரூபாய் வாடகை கொடுத்துவிட்டு இருந்திருக்கிறேன். அந்த வீட்டில் பேய் இருந்திருந்தால் அது சுத்தப் பயங்கொள்ளிப் பேயாயிருந்திருக்க வேண்டும்; என்னிடம் அது பேச்சு மூச்சுக் காட்டவில்லை.
ஆனால் இந்தச் சோடாக் கடைக்காரனின் கதை என்னவோ ஒரு மாதிரி என் மனதில் பதிந்து விட்டது. அது முழுதும் பொய் என்று நினைக்க முடியவில்லை. அந்தப் பங்களாவின் தோற்றம், கதை ஒரு வேளை நிஜமாயிருக்கலாமோ என்று கருதுவதற்கு இடங் கொடுத்தது.
அந்த வீட்டை என் சினேகிதருக்குப் பார்ப்பதில் பயனில்லையென்று தீர்மானித்து வேறு ஒரு சின்ன வீடு நாற்பது ரூபாய் வாடகையில் அமர்த்திவிட்டுத் திரும்பிச் சென்றோம்.
எனினும், அந்தப் பாழடைந்த பங்களாவின் ஞாபகம் மட்டும் என் மனத்திலிருந்து போகவில்லை. சுருங்கச் சொன்னால், அந்தப் பங்களாவில் நான் குடியேறுவதற்குப் பதில், பங்களா என் உள்ளத்தில் குடியேறிவிட்டது. ஏதாவது தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கையில், திடீரென்று கற்பகம் கையில் சூரிக்கத்தியுடன் ஓடி வந்து தந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் செங்கமலத்தைக் குத்தப்போகும் காட்சி என் மனக்கண் முன் தோன்றும். அப்புறம் வேலை ஒன்றும் கொஞ்ச நேரத்துக்கு ஓடாது.
இதனுடைய நிஜம், பொய்யைக் கண்டு பிடித்து நிச்சயம் பெறாவிட்டால், என் வாழ்க்கையே துன்பமயமாகிவிடுமென்று பயப்படலானேன்.
பல்லாவரத்தில் நான் அமர்த்தியிருந்த ஜாகைக்கு என் நண்பர் குடி வந்து சில தினங்களுக்குப் பிறகு அவரை ஒரு முறை பார்த்து வருவதற்குச் சென்றேன். க்ஷயரோகம், கொசுக்கடி, தமிழ் நாடகமேடை, முதல் நாள் நடந்த கோர பஸ் விபத்து முதலிய உற்சாகமான விஷயங்களைப் பற்றிப் பேசியான பிறகு, என் நண்பர், “அதெல்லாம் இருக்கட்டும்; பேய்களைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று பரபரப்புடன் கேட்டார்.
“பேய்களைப் பற்றியா?” என்று, என் காதுகளை நம்பமுடியாமல் திரும்பக் கேட்டேன்.
“ஆமாம்; பேய்களைப் பற்றித்தான்.”
“பேய்களைப் பற்றி என் அபிப்பிராயம், அவை சுத்தப் பேய்கள் என்பதே. இருக்கட்டும்; என்னைப் பற்றிப் பேய்களின் அபிப்பிராயம் என்ன என்று நீங்கள் சொல்ல முடியுமா?” என்று கேட்டேன்.
“ஹா ஹா ஹா! நீங்கள் இப்படித்தான் ஏதாவது சொல்வீர்களென்று தெரியும்; பேய்களுக்கு உங்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் என்று தெரிய வேண்டுமானால் இந்தச் சாலையில் உள்ள பத்தாம் நம்பர் பங்களாவுக்குப் பாதி ராத்திரியில் போய் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.
உடனே எனக்குத் துணுக்கென்றது; மாற்றாந் தாயால் குத்திக் கொல்லப்பட்டுக் கோர மரணம் அடைந்த செங்கமலம் என் மனக்கண்முன் வந்தாள். அந்தப் பங்களாவைத்தான் இவர் குறிப்பிடுகிறார் என்று அறிந்து, விவரமாகச் சொல்லும்படி கேட்டேன்.
துபாஷ் வரதராஜ முதலியாரின் கதையை நான் கேட்டிருந்தபடியே அவர் சொல்லி வந்தார். ஆனால் முடிவு மட்டும் வித்தியாசமாயிருந்தது. அந்த வித்தியாசமான முடிவு என் நெஞ்சு பதைபதைக்கும்படி செய்தது. அவ்விவரம் பின் வருமாறு:
பிஞ்சிலே பழுத்தது என்பார்களே, அந்த மாதிரியான பெண் செங்கமலம். தன்னுடைய தாயார் எஜமானியாயிருக்க வேண்டிய வீட்டில் வேறோர் அயலாள் வந்து அதிகாரம் வகிப்பது அவளுக்குப் பிடிக்க வில்லை. நாளுக்கு நாள் அவளுடைய குரோதம் வளர்ந்து வந்தது. முதலியாரின் இளைய மனைவி, செங்கமலத்தின் மீது எவ்வளவோ பிரியம் வைத்து ஆசையுடன் நடத்தியும் பிரயோஜனமில்லாமல் போயிற்று. ஓயாமல் அழுவாள்; எரிந்து விழுவாள்; சண்டை பிடிப்பாள். “என் அம்மாவைக் கொன்றவள் நீ தானே?” என்பாள்; “என்னையும் விஷங் கொடுத்துக் கொன்றுவிடு; உன் மனம் குளிர்ந்து விடும்” என்பாள். கற்பகம் ஒருநாள் இதையெல்லாம் சகிக்க முடியாமல், முதலியாரிடம் சொல்லித் துக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். முதலியார், “அதற்கென்ன செய்யலாம்? அவள் தாயாரைக் கொண்டிருக்கிறாள்; இன்னும் கொஞ்ச நாளில் கலியாணம் பண்ணி அனுப்பிவிடலாம். அதுவரையில் பொறுத்துக் கொண்டிரு” என்று ஆறுதல் கூறினார். இதையெல்லாம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த செங்கமலம் திடீரென்று அவர்கள் முன் வந்து, “நான் இருப்பதுதானே உங்களுக்குக் கஷ்டமாயிருக்கிறது? இதோ என் தாயார் என்னைக் கூப்பிடுகிறாள், போகிறேன்” என்று கூறி முதலியாரும் கற்பகமும் பிரமித்து நின்று கொண்டிருக்க இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை சட்டென்று எடுத்து மார்பில் குத்திக் கொண்டு உயிரற்ற பிணமாய்க் கீழே விழுந்தாள்.
முதலியார் தோட்டக்காரனுடைய உதவியுடன் பிரேதத்தை ஒரு பெட்டியில் போட்டு மூடி, கொல்லையில் குழி தோண்டிப் புதைத்தார். பிறகு, அந்த வீட்டைக் காலி செய்துவிட்டுப் பட்டணத்துக்குக் குடிபோய்விட்டார்.
அதுமுதல் தினந்தோரும் இராத்திரியில் முதலியாருடைய மூத்த சம்சாரத்தின் ஆவி பங்களா வாசல் முகப்பில் வந்து நின்று “செங்கமலம்! செங்கமலம்!” என்று கூப்பிடுகிறதாம். “இதோ வந்துவிட்டேன். அம்மா!” என்று சொல்லிக் கொண்டு செங்கமலத்தின் ஆவி வெளியே வருகிறதாம். இரண்டு ஆவிகளும் இராத்திரியெல்லாம் பங்களாவின் தோட்டத்தைச் சுற்றுகின்றனவாம்.
இந்த வரலாற்றைக் கேட்டதும் எனக்கு என்ன நினைப்பதென்று தெரியவில்லை. அந்தக் குழந்தை செங்கமலத்தின் பரிதாப கதிக்காக நான் காட்டிய அநுதாபம், பட்ட துயரம் எல்லாம் வீண்போல் இருக்கிறதே! உண்மையில் கற்பகம் அல்லவோ நமது அநுதாபத்துக்கெல்லாம் உரியவளாகிறாள்? எது உண்மை? எது பொய்?
என் நண்பரைப் பார்த்து, “ஆமாம், நீங்கள் இவ்வூருக்கு வந்து பத்து நாள் தானே ஆயிற்று? அதற்குள் இந்த விவரமெல்லாம் எப்படித் தெரிந்தது?” என்று கேட்டேன்.
“அந்தப் பங்களாவுக்குப் பக்கத்தில் ஒரு சோடாக்கடை இருக்கிறது. அந்தக் கடைக்காரன் சொன்னான்” என்று என் சிநேகிதர் கூறியதும், எனக்கு ஏற்பட்ட எரிச்சலுக்கு அளவேயில்லை. “அடே! என்னவெல்லாம் கயிறு திரிக்கிறான் அவன்! மறுபடியும் அவனைக் கண்டு இதன் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் விடுவதில்லை” என்று தீர்மானித்தேன்.
“என்ன, அப்பா! சௌக்கியமா?” என்று கேட்டதும், கடைக்காரன் முன் போலவே கையிலிருந்த நாவலை மூடிவிட்டு, “வாருங்க, ஸ்வாமி! ரொம்ப நாளாச்சே பார்த்து, நம்ம மேலே தயவே இல்லையே!” என்றான். பிறகு, “உட்காருங்க; பேஷான ரஸ்தாளி வாழைப்பழம் வந்திருக்குங்க; ரெண்டு பழம் சாப்பிடுங்க” என்று கூறினான்.
நானும் என் சிநேகிதரும் பெஞ்சியில் உட்கார்ந்து ரஸ்தாளிப் பழங்களைக் கையில் வாங்கிக் கொண்டோம். பிறகு நான் “ஏன், அப்பா! நீ எங்களுக்குச் சொன்ன கதையெல்லாம் நீயே கற்பனை செய்ததா, அல்லது கையில் உள்ள நாவலில் இருக்கிறதா?” என்று கேட்டேன்.
“அதென்ன ஸார் அப்படிச் சொல்கிறீர்கள்? பார்த்தீர்களா, இதற்குத்தான் நான் சொல்லமாட்டேன் என்கிறது” என்று கூறி தனக்கு ஏதோ பெரிய அநீதி நாங்கள் செய்து விட்ட தோரணையில் பரிதாபமாய்ப் பார்த்தான்.
“போகட்டும்; செங்கமலம் கொல்லப்பட்டாளா, தற்கொலை செய்து கொண்டாளா? அதை மட்டும் நிஜமாய்ச் சொல்லிவிடு” என்றேன்.
“ஸார்! நீங்கள் ஏன் என் பேரில் அவநம்பிக்கைப் படுகிறீர்களென்று எனக்குத் தெரியும். உங்களிடம் ஒரு விதமாயும், இவரிடம் வேறு விதமாயும் நான் சொன்னேன்; வாஸ்தவந்தான். நான் சொன்ன இரண்டும் நிஜமில்லை தான்; ஆனால் ஏன் அப்படி சொன்னேன் தெரியுமா? நிஜமாக நடந்ததைச் சொன்னால் நீங்கள் ஒருநாளும் நம்ப மாட்டீர்கள். அப்படி ஒருவரும் நம்பமுடியாத விஷயத்தைச் சொல்லி என்ன பிரயோஜனம்? வீண்வாய்ச் சேதந்தானே?” என்றான்.
“அந்த அசல் நிஜத்தையுந்தான் சொல்லிவிடேன்; கேட்டு வைக்கலாம்” என்றேன்.
“ஆஹா! கேட்பதாயிருந்தால், பேஷாய்ச் சொல்கிறேன்; எனக்கென்ன நஷ்டம்? – அடே பையா, வீராசாமி! இரண்டு கிளாஸில் ஐஸ் போடடா!” என்று அதிகாரமாய்க் கூவினான் கடைக்காரன்.
கடையிலே பையன் யாரையும் காணாதிருக்கவே, “யாரை இவன் உத்தரவிடுகிறான்?” என்று ஆச்சரியப்பட்டேன். கடைக்காரன் தானே ஐஸை அலம்பிப் போட்டான். என்னைப் புன்னகையுடன் பார்த்து, “இந்தக் கடையில் நான் தான் எஜமான்; பையனும் நான் தான்!” என்றான். இவன் பெரிய நாவலாசிரியன் மட்டுமல்ல, நகைச்சுவை ஆசிரியனுங்கூட என்று எண்ணிக் கொண்டேன். அவன் இம்முறை சொன்ன விவரம் வருமாறு:
வரதராஜ முதலியார் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டவரையில் முன் சொன்னதெல்லாம் வாஸ்தவந்தான். அதற்குப் பிறகுதான் சம்பவங்கள் மாறுபடுகின்றன.
வீட்டிற்கு மாற்றாந்தாய் வந்ததிலிருந்து செங்கமலத்தின் சுபாவம் மாறுதலடைந்து வந்தது. விளையாட்டு, குதூகலம் எல்லாம் போய், ஓயாமல் எதைப்பற்றியோ சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். தோட்டக்காரனிடம் ஒரு நாள் அவள் பேசியதிலிருந்து உண்மை தெரிய வந்தது. தினந்தோறும் இரவில் தூங்கும்போது இறந்து போன அவளுடைய தாயார் பங்களா வாசலில் வந்து, “செங்கமலம்! செங்கமலம்!” என்று கூப்பிடுவது போலவும், தான் அவளைக் காண்பதற்குச் சென்றதும் தன்னைக் கட்டி அணைத்துக் கொண்டு, “என் கண்ணே! பழிவாங்கு! பழிவாங்கு!” என்று சொல்லிவிட்டு மறைந்து விடுவது போலவும் கனவு கண்டு கொண்டிருந்தாள். கடைசியாக ஒருநாள் இரவு கனவில் செங்கமலத்தின் தாய் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று வெகு நாளாய்ப் பூட்டிக் கிடந்த ஓர் அலமாரியைத் திறந்து, அதற்குள்ளிருந்த சூரிக் கத்தியைச் சுட்டிக் காட்டிவிட்டு மறைந்தாளாம். மறுநாள் செங்கமலம் அந்த அலமாரியைத் திறந்து பார்த்தபோது அதற்குள் ஒரு சூரிக் கத்தி வாஸ்தவமாகவே இருந்ததாம்.
சில தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் முதலியாரிடம் கற்பகம் தன்னுடைய குறைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். செங்கமலத்தை ஏதோ பிசாசு பிடித்திருக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் இப்படி அவள் படுத்த மாட்டாளென்றும் சொல்ல, முதலியார், “என்ன செய்யலாம்? அவள் தாயார் உயிரோடிருக்கும்போதே பிசாசாய்த்தான் இருந்தாள். இப்போது அசல் பிசாசாய் வந்து பெண்ணைப் பிடித்திருக்கிறாள் போல் இருக்கிறது” என்றாராம். இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த செங்கமலம் ஓட்டமாய் ஓடி, அலமாரியில் இருந்த சூரிக் கத்தியை மறைத்து எடுத்துக் கொண்டு வந்து, “ஆமாம், நானும் பிசாசுதான்! என் அம்மாவும் பிசாசுதான்!” என்று கூவிக் கொண்டே சட்டென்று சூரியை எடுத்து கற்பகத்தின் மார்பில் குத்தி விட்டாள்.
“அடி பாவி! சண்டாளி! என்ன செய்துவிட்டாய்?” என்று முதலியார் கதறிக் கொண்டு எழுந்திருப்பதற்குள் செங்கமலம் அதே சூரிக் கத்தியை தன்னுடைய மார்பிலும் குத்திக் கொண்டு பிணமாய் விழுந்தாள். தோட்டக்காரனுடைய ஒத்தாசையினால் அவர்கள் இரண்டு பேருடைய உடல்களையும் தோட்டத்தில் புதைத்த முதலியார் தாமும் சில தினங்களுக்கெல்லாம் சித்தப் பிரமை பிடித்தவராய்த் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்தார்.
அதுமுதல் இரவு நேரங்களில் அந்த நாலு பேருடைய ஆவிகளும் அந்தப் பங்களாத் தோட்டத்தில் அலைந்து கொண்டிருக்கின்றன. தினந்தோறும் இருட்டிக் கொஞ்ச நேரத்திற்கெல்லாம், முதலியாருடைய மூத்த மனைவியின் ஆவி பங்களா வாசலில் வந்து நின்று, “செங்கமலம்! செங்கமலம்!” என்று கூப்பிடுகிறது; உடனே செங்கமலத்தின் ஆவி, “அம்மா! இதோ வந்து விட்டேன்!” என்று கூவிக் கொண்டு ஓடி வருகிறது. பிறகு இரண்டு ஆவிகளும், “பழி வாங்கு! பழி வாங்கு!” என்று அலறிக் கொண்டு தோட்டத்தில் பாய்கின்றன; அங்கே முதலியாருடைய ஆவியும் அவருடைய இளைய மனைவியின் ஆவியும், “அடி பாவி! சண்டாளி! பிசாசே!” என்று கதறிக் கொண்டு கூத்தாடுகின்றன. இவ்வாறு நாலு ஆவிகளும் இரவு முழுதும் அந்த தோட்டத்தில் சுற்றிச் சுற்றி அலைந்து கொண்டிருக்கின்றன.
சோடாக் கடைக்காரன் மேற்படி கதையைச் சொல்லி முடித்த போது எங்கள் தேகத்தில் இருந்த ரோமங்களெல்லாம் குத்திட்டு நின்றன. சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்து விட்டபடியால் பயங்கரம் அதிகமாயிருந்தது. “இவன் சொல்வது பெரும் புளுகு; இப்படியெல்லாம் நிஜமாக நடந்திருக்க முடியாது” என்று என்னுடைய அறிவு அடிக்கடி இடித்துக் கூறி வந்தும், பிரயோஜனமில்லை. அதிலும், அந்தப் பங்களாவின் தோற்றம் மனத்தின் முன் வந்தபோது, “ஒருவேளை நிஜமாய்க் கூட இருக்கலாமோ?” என்று தோன்றிற்று. ஆனால், அவன் கூறிய மூன்று விவரங்களில் எது நிஜம்? எது பொய்? கற்பகம் செங்கமலத்தைக் கொன்றாளா? அல்லது செங்கமலந்தான் கற்பகத்தைக் கொன்றாளா? செங்கமலமும் முதலியாரும் தற்கொலை செய்து கொண்டது உண்மையா? – இப்படியாக என்னுடைய மனத்தைக் குழப்பிவிடும் சக்தி ஒரு மனிதனுக்கு இருக்கும் என்று நான் நினைத்ததேயில்லை.
பல்லாவரவாசிகளில் இன்னும் சிலரை மறுநாள் விசாரித்தேன். அவர்கள் எல்லாரும், “வெகு காலமாய் அந்தப் பங்களா பூட்டிக்கிடக்கிறது. ஒருவரும் குடி வருவதில்லை. அதில் ஏதோ கொலை நடந்ததென்றும், பேய் குடி கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்” என்று பொதுப் படையாகக் கூறினார்களே தவிர, ஒருவராவது திட்டமான விவரம் தெரிவிக்கவில்லை.
என் மனம் அமைதி இழந்தது. அபாரமாய்க் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. இதனுடைய நிஜம், பொய்யைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்று எண்ணிய போதெல்லாம் பற்களை நறநறவென்ரு கடிக்கத் தொடங்கினேன். தூக்கத்தில் என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள் கண்டு விழித்துக் கொள்வேன். உடம்பெல்லாம் வியர்வையினால் நனைந்திருக்கும். எனக்குத்தான் ஏதோ பேய்களின் சேஷ்டை ஏற்பட்டு விட்டதென்பதாக என்னுடைய வீட்டார் பயப்படலாயினர்.
இரண்டு மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் மாலை ஏழு மணிக்கு என் நண்பர் வீட்டுக்கு மறுபடியும் போனேன். அச்சமயம் வீடு பூட்டியிருந்தது. அவர் பட்டணத்துக்குப் போயிருக்கிறாரென்றும் சீக்கிரம் வந்து விடுவாரென்றும் வேலைக்காரன் சொன்னான்.
சற்று நேரம் வாசலிலேயே நின்று கொண்டிருந்தேன். பிறகு பாழடைந்த பங்களாவின் ஞாபகம் வந்தது. இரவு நேரத்தில் அதைப் பார்த்துவிட வேண்டுமென்னும் அவா ஏற்பட்டது. ஒரு பக்கம் பயமாயிருந்தாலும், மற்றொரு பக்கம் அந்த அவாவை அடக்க முடியவில்லை. ஆகவே, அங்கிருந்து கிளம்பிச் சாலையோடு போனேன்.
பாழடைந்த பங்களாவை அடைந்ததும் சாலையில் நின்றபடி எட்டிப் பார்த்தேன். பங்களாவின் வெளித் தாழ்வாரத்தில் மின்சார விளக்கு பளிச்சென்று எரிந்து கொண்டிருந்ததைக் கண்டதும் எனக்கு உண்டான வியப்பைச் சொல்லி முடியாது. வீட்டினுள்ளிருந்தும் மின்சார விளக்கு வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. கடைசியில் யாரோ துணிந்து குடித்தனம் வந்துவிட்டார்கள் போல் இருக்கிறது! அத்தகைய தீரர்கள் யார் என்று தெரிந்து கொள்ள எனக்குப் பேராவல் உண்டாயிற்று. ஒரு வேளை அவர்கள் மூலமாய் இந்தப் பங்களாவைப் பற்றிய உண்மை வெளிப்பட்டாலும் வெளிப்படலாமல்லவா?
எனவே, திறந்திருந்த மதில் கேட்டின் வழியாக நுழைந்தேன். தோட்டம் நன்றாய்ச் சுத்தம் செய்யப் பட்டிருந்தது. புதிய பூந்தொட்டிகள் கூடக் கொண்டு வைத்திருந்தார்கள். நலசம்பங்கியின் வாசனை கம்மென்று வந்து கொண்டிருந்தது. பங்களாவின் வாசற்புறத்தை உற்று நோக்கினேன். புதிதாக வெள்ளையடித்துப் பளிச்சென்று இருந்தது.
சாலைக்கும் பங்களா வாசலுக்கும் நடு மத்தியில் சென்று கொண்டிருந்தபோது, சாலை கேட்டில் ஒரு மோட்டார் வந்து நின்றது போல் சப்தம் கேட்டது. அதே நிமிஷத்தில் பங்களாவின் முகப்புத் தாழ்வாரத்தில் ஒரு ஸ்திரீயின் உருவம் தென்பட்டது. அவள், “செங்கமலம்! செங்கமலம்!” என்று கூவினாள். என் உடம்பு நடுங்கிற்று. அடுத்த கணத்தில் ஒரு சிறு பெண் பங்களாவின் உள்ளிருந்து, “ஏன் அம்மா!” என்று கேட்டுக் கொண்டு வெளியே வந்தாள். அச்சமயம் மூர்ச்சை போய் விழாமல் நான் எப்படித் தைரியமாய் நின்றேனோ, பகவானுக்குத்தான் தெரியும்.
நான் நின்ற இடத்திலேயே சற்று நேரம் திகைத்து நின்றிருக்க வேண்டும். பின்னால் காலடிச் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தேன். அங்கே, தனலக்ஷ்மி பாங்கி ஏஜெண்ட் முருகேச முதலியாரைக் கண்டதும் எனக்கு எப்படி இருந்திருக்குமென நினைக்கிறீர்கள்?
“ஹலோ! நீங்களா! யாராவது திருடனோ என்றல்லவா பயந்து போனேன்?” என்றார் முருகேச முதலியார்.
இவரை எனக்கு மூன்று நான்கு வருஷத்துப் பழக்கம். சங்கீதக் கச்சேரி ஒவ்வொன்றிலும் இவர் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வார். “அது என்ன ராகம்? இது என்ன கீர்த்தனை?” என்று நச்சரித்துப் பிராணனை எடுத்து விடுவார். ஆனாலும் ரொம்ப நல்ல மனுஷர்; ரஸிகர். ஆகையால் அவரிடம் ஒரு மாதிரி எனக்குச் சிநேகம் என்றே சொல்லலாம்.
முதலியார் என் கையை விளையாட்டாகப் பிடித்ததும், என் கை நடுங்குவதை அறிந்திருக்க வேண்டும். “என்ன ஸார், உங்களுக்கு உடம்பு? எங்கே வந்தீர்கள் ஸார் இந்த நேரத்தில்?” என்று மளமளவென்று கேட்க ஆரம்பித்து விட்டார்.
“போய் உட்காருவோம்; எல்லாம் சொல்கிறேன்” என்றேன். நாங்கள் பங்களா வாசலை அடைந்ததும் அங்கே நின்றிருந்த ஸ்திரீ உள்ளே போய்விட்டாள். சிறு பெண் மட்டும் முதலியாரைக் கட்டிக் கொண்டு, “அப்பா! ஏன் இவ்வளவு நேரம் இன்று?” என்று கேட்டாள்.
நாங்கள் உட்கார்ந்து சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர், அந்தப் பெண்ணும் ஸ்திரீயும் நான் ஊகித்தபடியே முதலியாரின் பெண்ணும் மனைவியுந்தான் என்று தெரிந்து கொண்டேன்.
பிறகு, அந்தப் பங்களாவைப் பற்றி நான் கேள்விப்பட்ட வரலாறுகளையெல்லாம் கூறி, அன்று பங்களாவில் நுழைய நேர்ந்த காரணத்தையும் தெரிவித்தேன்.
முதலியார் சிரித்த சிரிப்பில் அந்தப் பழைய பங்களா இடிந்து விழுந்து விடுமோ என்று தோன்றிற்று. சிரிப்பு அடங்கிய பிறகு கூறியதாவது:
“நீங்கள் கேட்ட கதையில் உள்ள கதாபாத்திரங்கள் எல்லாம் நிஜமானவர்கள்தான்; ஆனால் சம்பவங்கள் தான் உண்மையல்ல. வரதராஜ முதலியார் என்பவர் என்னுடைய பாட்டனார். என்னுடைய தாயார் பெயர் செங்கமலம், அவளுடைய பெயரைத்தான் என் பெண்ணுக்கு இட்டிருக்கிறேன். என் தாயாருக்கு மூன்று வயதிருக்கும் போதே என்னுடைய பாட்டி இறந்து விட்டாள். அவள் சாகும் போது, முதலியார் தனியாயிருந்தால் தம் பெண்ணைச் சரியாய் வளர்க்க முடியாதென்றும், ஆகையால் தன்னுடைய தங்கையையே மறுமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்திவிட்டுச் சென்றாள். முதலியார் அப்படியே செய்தார். என் தாயார் தன் சிற்றன்னையைச் சொந்தத் தாய் என்றே நினைத்து வந்தாள். அவ்வளவு அருமையாக அந்த அம்மணியும் அவளை வளர்த்து வந்தாள். ஆனால் துரதிஷ்டவசமாகக் கொஞ்ச காலத்துக்கெல்லாம் அவளும் டைபாய்டு சுரம் வந்து இறந்து போனாள். அதற்கு மேல் தான் என் பாட்டனார் இந்த வீட்டில் இருக்க மனம் கொள்ளாமல் புரசவாக்கத்துக்குக் குடிபோனது. என் தாயாரைக் கலியாணம் பண்ணிக் கொடுத்தவுடனே, அதாவது நான் பிறப்பதற்கு முன்னமேயே அவர் இறந்து போனாராம். அவரும் சரி, சென்ற வருஷத்தில் காலமான என் தாயாரும் சரி, எல்லாரையும் போல் சாதாரணமாய்த்தான் இறந்தார்கள். கொலை, குத்து ஒன்றும் இல்லை. இந்தச் சென்னைப் பட்டணத்திலே தான் மனுஷ்யர்களுடைய பிராணனைக் கொண்டு போவதற்கு எவ்வளவோ வியாதிகள் காத்திருக்கின்றனவே; கொலை, தற்கொலைகூட வேண்டுமா?”
இதைக் கேட்டதும், என் இருதயத்தில் ஏற்றி வைத்திருந்த ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்துவிட்டது போல் இருந்தது. அந்தச் சோடாக் கடைக்காரனுடைய விஷம புத்தியை ஒரு புறத்தில் நான் வெறுத்த போதிலும் அவனுடைய கற்பனைத் திறனை வியக்காமல் இருக்கக் கூடவில்லை.
“எல்லாம் சரிதான்; ஆனால் சென்ற நாற்பது வருஷ காலமாய் இந்தப் பங்களா பூட்டப்பட்டிருந்தது எதனால்? என்று மிஞ்சியிருந்த என்னுடைய சந்தேகத்தையும் கேட்டேன்.
“ஓஹோ? அதுவா? என் பாட்டனார் இருந்தவரையில், தம் இரண்டு மனைவிகளைப் பறிகொடுத்த இந்த ஊருக்குத் திரும்பி வருவதில்லையென்று தீர்மானித்திருந்தார். பங்களாவை வாடகைக்கு விடவும் மனமில்லை. அவர் இறந்தவுடன் அவருடைய சொத்துக்களின் மேல் வியாஜ்யம் ஏற்பட்டது. தாயாதிக்காரர்கள் தங்களுக்குச் சேர வேண்டுமென்றார்கள். என் தாயாருக்குத்தான் எல்லாச் சொத்தும் என்று என் தகப்பனார் வழக்காடினார். உயில், பந்தகம், அடமானம், முன் பாத்தியம், பின் பாத்தியம் – இப்படி என்னவெல்லாமோ ‘கொளறுபடிபிகேஷன்’கள் கிளம்பின; கேஸ், ஜில்லா கோர்ட்டில் ஏழு வருஷமும், ஹைகோர்ட்டில் ஆறு வருஷமும், பிரிவி கௌன்ஸிலில் மூன்று வருஷமும், மறுபடி ஹைகோர்ட்டில் எட்டு வருஷமும் நடந்து கடைசியாக ஆறு மாதத்துக்கு முன்பு தான் தீர்ப்பு ஆயிற்று. சொத்துக்கள் எல்லாம் என்னைச் சேர்ந்தன. வழக்கு நடந்த வரையில் இந்தப் பங்களாவும் மற்ற சொத்துக்களும் ரிஸீவர் வசம் இருந்தன. வீட்டு வாடகை நஷ்டமாகிறதேயென்று ரிஸீவருக்கு என்ன கவலை? போதாதற்கு, அதற்கு முன்னாலேயே ஊரில் பேய் வதந்தி வேறு கிளம்பிவிட்டது போலிருக்கிறது!” என்று முதலியார் முடித்தார்.
இவ்வாறு, அந்தப் பங்களாவில் இத்தனை நாளும் குடியிருந்த பேய், ‘வியாஜ்யம்’ என்னும் பேய்தான் என்று அறிந்து கொண்டவனாய், மனநிம்மதியுடன் முதலியாரிடம் உத்தரவு பெற்றுச் சென்றேன்.
இத்துடன்
அமரர் கல்கியின் பாழடைந்த பங்களா
இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.
Paladaindha Bangala Kalki Tag
kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,paladaindha bangala Audiboook,paladaindha bangala,paladaindha bangala Kalki,Kalki paladaindha bangala,