Parthiban Kanavu Audiobook Part1 CH10
Parthiban Kanavu Audiobook Part1 CH10 பார்த்திபன் கனவு Mr and Mrs Tamilan
Parthiban Kanavu Audiobook Part1 CH10 பார்த்திபன் கனவு Mr and Mrs Tamilan
Parthiban Kanavu Audiobook பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.
உறையூரில் அன்று அதிகாலையிலிருந்து அல்லோலகல்லோலமாயிருந்தது. பார்த்திப மகாராஜாவின் பட்டாபிஷேகத்தின் போதும் மகேந்திர வர்ம சக்கரவர்த்தியின் விஜயத்தின் போதும்கூட, உறையூர் வீதிகள் இவ்வளவு அழகாக அலங்கரிக்கப்படவில்லையென்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். வீட்டுக்கு வீடு தென்னங்குருத்துக்களினாலும் மாவிலைகளினாலும் செய்த தோரணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வீடுகளின் திண்ணைப் புறங்களிலெல்லாம், புதிய சுண்ணாம்பும் சிவப்புக் காவியும் மாறிமாறி அடித்திருந்தது. ஸ்திரீகள் அதிகாலையிலேயே எழுந்திருந்து, தெருவாசலைச் சுத்தம் செய்து, அழகான கோலங்கள் போட்டு, வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள். பிறகு, ஆடை ஆபரணங்களினால் நன்கு அலங்கரித்துக் கொண்டு, போருக்குப் படை கிளம்பும் வேடிக்கை பார்ப்பதற்காக வாசல் திண்ணைகளிலோ மேல் மாடிகளின் சாளரங்களின் அருகிலோ வந்து நின்று கொண்டார்கள். விடிய ஒரு சாமம் இருக்கும்போதே, அரண்மனை யிலுள்ள பெரிய ரண பேரிகை முழங்கத் தொடங்கியது. அதனுடன் வேறு சில சத்தங்களும் கலந்து கேட்கத் தொடங்கின. குதிரைகள் கனைக்கும் சத்தம், யுத்த வீரர்கள் ஒருவரையொருவர் கூவி அழைக்கும் குரல், அவர்கள் இடையிடையே எழுப்பிய வீர முழக்கங்களின் ஒலி, வேல்களும் வாள்களும் ஒன்றோடொன்று உராயும் போது உண்டான கண கண ஒலி, போருக்குப் புறப்படும் வீரர்களை அவர்களுடைய தாய்மார்கள் வாழ்த்தி அனுப்பும் குரல், காதலிகள் காதலர்களுக்கு விடை கொடுக்கும் குரல் இவ்வளவுடன், வழக்கத்துக்கு முன்னதாகவே துயில் நீங்கி எழுந்த பறவைகளின் கல கல சத்தமும் சேர்ந்து ஒலித்தது.
சூரிய உதயத்துக்கு முன்னாலிருந்தே அரண்மனை வாசலில் போர் வீரர்கள் வந்து குவியத் தொடங் கினார்கள். படைத் தலைவர்கள் அவர்களை அணிவகுத்து நிற்கச் செய்தார்கள். வரிசை வரிசையாகக் குதிரைப் படைகளும், யானைப் படைகளும், காலாட் படைகளும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. எல்லாப் படைகளுக்கும் முன்னால் சோழர்களின் புலிக்கொடி வானளாவிப் பறந்தது. சங்கு, கொம்பு, தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங்களை முழக்குகிறவர்கள் படைக ளுக்கு இடையிடையே நிறுத்தப்பட்டார்கள். பெரிய பேரிகைகளைச் சுமந்த ரிஷபங்களும் ஆங்காங்கு நின்றன. பட்டத்துப் போர் யானை அழகாக அலங்கரிக்கப்பட்டு அரண்மனை வாசலில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இந்த மாதிரி அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கையில் அடிக்கடி போர் வீரர்கள் “வீரவேல்” “வெற்றிவேல்” என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் அரண்மனை முன் வாசலில் கலகலப்பு ஏற்பட்டது. “மகாராஜா வருகிறார்!” “மகாராஜா வருகிறார்!” என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரண் மனைக் குள்ளேயிருந்து கட்டியக்காரர்கள் இருவர், “சோழ மண்டலாதிபதி பார்த்திப மகாராஜா வருகிறார்! பராக் பராக்!” என்று கூவிக் கொண்டு வெளியே வந்தார்கள். வீதியில் கூடியிருந்த அந்தணர்களும் முதியோர்களும் “ஜய விஜயீபவா!” என்று கோஷித்தார்கள். மகாராஜா அரையில் மஞ்சள் ஆடையும் மார்பில் போர்க்கவசமும், இடையில் உடைவாளும் தரித்தவராய் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து ராணியும் இளவரசரும் வந்தார்கள்.
அரண்மனை வாசலில் மகாராணி தன் கையில் ஏந்தி வந்த ஆத்திமாலையை அவர் கழுத்தில் சூட்டினாள். அருகில் சேடி ஏந்திக் கொண்டு நின்ற மஞ்சள் நீரும் தீபமும் உள்ள தட்டை வாங்கி மகாராஜாவுக்கு முன்னால் மூன்று சுற்றுச் சுற்றிவிட்டு, கையில் ஒரு துளி மஞ்சள் நீர் எடுத்து மகாராஜாவின் நெற்றியில் திலகமிட்டாள். அப்போது மீண்டும் மீண்டும் “ஜய விஜயீ பவ” “வெற்றி வேல்” வீர வேல்” என்னும் முழக்கங்கள் ஆ காயத்தை அளாவி எழுந்து கொண்டிருந்தன. சங்கு, கொம்பு, தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங்கள் காது செவிடுபடும்படி அதிர்ந்தன. மகாராஜா வீதியில் நின்ற கூட்டத்தை ஒரு தடவை தம் கண்களால் அளந்தார். அப்போது ஒரு ஏவலாளன் விரைந்து வந்து, மகாராஜாவின் காலில் விழுந்து எழுந்து கைகட்டி வாய் பொத்தி நின்றான். “என்ன சேதி?” என்று மகாராஜா கேட்கவும் “மாரப்ப பூபதி இன்று காலை கிளம்பும்போது, குதிரை மீதிருந்து தவறிக் கீழே விழுந்து மூர்ச்சையானார். மாளிகைக்குள்ளே கொண்டு போய்ப் படுக்க வைத்தோம். இன்னும் மூர்ச்சை தெளியவில்லை” என்றான். இதைக் கேட்ட மகாராஜாவின் முகத்தில் லேசாகப் புன்னகை பரவிற்று. அந்த ஏவலாளனைப் பார்த்து, “நல்லது, நீ திரும்பிப் போ! பூபதிக்கு மூர்ச்சை தெளிந்ததும், உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன் என்று தெரிவி!” என்றார். மேற்கண்ட சம்பாஷணை மகாராஜாவுக்கு அருகிலிருந்த ஒரு சிலருடைய காதிலேதான் விழுந்தது. ஆனாலும் வெகு சீக்கிரத்தில் “மாரப்ப பூபதிக்கு ஏதோ விபத்தாம்! அவர் போருக்கு வரவில்லையாம்” என்ற செய்தி பரவிவிட்டது.
பிறகு, மகாராஜா அருகில் நின்ற விக்கிரமனை வாரி எடுத்து மார்போடணைத்துக் கொண்டு உச்சி மோந்தார். “குழந்தாய், நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா? மறவாமலிருப்பாயா?” என்றார். “நினைவில் இருக்கிறது. அப்பா! ஒரு நாளும் மறக்க மாட்டேன்” என்றான் விக்கிரமன். பிறகு மகாராஜா மைந்தனின் கையைப் பிடித்து அருள்மொழியினிடம் கொடுத்து, “தேவி! நீ தைரியமாயிருக்க வேண்டும். சோழர் குலச் செல்வத்தையும் புகழையும் உன்னிடம் ஒப்புவிக்கிறேன். வீர பத்தினியாயிருந்து என் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். முகமலர்ச்சியுடன் இப்போது விடை கொடுக்க வேண்டும்” என்றார். அருள்மொழி, கண்களில் நீர் பெருக, நெஞ்சை அடைக்க, “இறைவனுடைய அருளால் தங்கள் மனோரதம் நிறைவேறும்; போய் வாருங்கள்” என்றார். மகாராஜா போர் யானைமீது ஏறிக் கொண்டார். மறுபடியும் போர் முரசுகளும், தாரை தப்பட்டை எக்காளங்களும் ஏககாலத்தில் காது செவிடுபடும்படி முழங்கின உடனே அந்தச் சோழநாட்டு வீரர்களின் படை அங்கிருந்து பிரயாணம் தொடங்கிற்று. புரட்டாசி மாதத்துப் பௌர்ணமி இரவில் வெண்ணாற்றங்கரை மிகவும் கோரமான காட்சியை அளித்தது. வானத்தில் வெண்ணிலவைப் பொழிந்த வண்ணம் பவனி வந்து கொண்டிருந்த பூரணச் சந்திரனும், அந்தக் கொடுங் காட்சியைக் காணச் சகியாதவன் போல், அடிக்கடி வெள்ளி மேகத் திரையிட்டுத் தன்னை மறைத்துக் கொண்டான். பகலெல்லாம் அந்த நதிக்கரையில் நடந்த பயங்கரமான யுத்தத்தில் மடிந்தவர்களின் இரத்தம் வெள்ளத்துடன் கலந்தபடியால், ஆற்றில் அன்றிரவு இரத்த வெள்ளம் ஓடுவதாகவே தோன்றியது.
அந்த வெள்ளத்தில் பிரதிபலித்த பூரணச் சந்திரனின் பிம்பமும் செக்கச் செவேலென்ற இரத்த நிறமடைந்து காணப் பட்டது. நதியின் மேற்குக் கரையில் கண்ணுக்கெட்டிய தூரம், கொடும்போர் நடந்த ரணகளத்தின் கோரமான காட்சி தான். வீர சொர்க்கம் அடைந்த ஆயிரக்கணக்கான போர்வீரர்களின் உடல்கள் அந்த ரணகளமெங்கும் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் அவை கும்பல் கும்பலாகக் கிடந்தன. கால் வேறு, கை வேறாகச் சிதைவுண்டு கிடந்த உடல்கள் எத்தனையோ! மனிதர்களைப் போலவே போரில் மடிந்த குதிரைகளும் ஆங்காங்கே காணப்பட்டன. வெகுதூரத்தில் குன்றுகளைப் போல் சில கறுத்த உருவங்கள் விழுந்து கிடந்தன. அவை போர் யானைகளாகத் தான் இருக்க வேண்டும். அந்த ரணகளத்தில் விருந்துண்ண ஆசைகொண்ட நூற்றுக்கணக்கான கழுகுகளும், பருந்துகளும் நாலா பக்கங்களிலிருந்தும் பறந்து வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் விரிந்த சிறகுகளின் நிழல் பெரிதாகவும் சிறிதாகவும் ரணகளத்தின் மேல் ஆங்காங்கு விழுந்து, அதன் பயங்கரத்தை மிகுதிப்படுத்திக் கொண்டிருந்தன. நதியின் இனிய ‘மர்மர’ சத்தத்தைப் பருந்துகள், கழுகுகளின் கர்ண கடூரமான குரல்கள் அடிக்கடி குலைத்துக் கொண்டிருந்தன. அந்தக் கோரமான ரணகளத்தில், மெல்லிய மேகத் திரைகளினாலும் வட்டமிட்ட பருந்துகளின் நிழலினாலும் மங்கிய நிலவொளியில், ஒரு மனித உருவம் மெல்ல மெல்ல நடந்து போய்க்கொண்டிருந்தது.
அது சுற்றுமுற்றும் உற்றுப் பார்த்துக் கொண்டே போயிற்று. சற்று நெருங்கிப் பார்த்தால், அது ஒரு சிவனடியாரின் உருவம் என்பது தெரியவரும். தலையில் சடை முடியும், நெற்றி நிறையத் திருநீறும், அப்போதுதான் நரை தோன்றிய நீண்ட தாடியும், கழுத்தில் ருத்திராட்ச மாலையும், அரையில் காவி வஸ்திரமும், மார்பில் புலித்தோலுமாக அந்தச் சிவனடியார் விளங்கினார். அவர் கையில் கமண்டலம் இருந்தது. அவருடைய முகத்தில் அபூர்வமான தேஜஸ் திகழ்ந்தது. விசாலமான கண்களில் அறிவொளி வீசிற்று. தோற்றமோ வெகு கம்பீரமாயிருந்தது. நடையிலும் ஒரு பெருமிதம் காணப்பட்டது. இந்த மகான் சிவனடியார் தானோ, அல்லது சிவபெருமானே இத்தகைய உருவம் பூண்டு வந்தாரோ என்று திகைக்கும்படியிருந்தது. இந்தப் பயங்கர ரணகளத்தில் இந்தப் பெரியாருக்கு என்ன வேலை? யாரைத் தேடி அல்லது என்னத்தை தேடி இவர் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு போகிறார்? சிவனடியார் எந்தத் திசையை நோக்கிப் போனாரோ, அதற்கு எதிர்த் திசையில் கொஞ்ச தூரத்தில் கருங்குன்று ஒன்று நகர்ந்து வருவது போல் ஒரு பிரம்மாண்டமான உருவம் அசைந்து வருவது தெரிந்தது. அது சோழ மன்னர்களின் பட்டத்துப் போர் யானைதான். அதைக் கண்டதும் சிவனடியார் சிறிது தயங்கித் தாம் நின்ற இடத்திலேயே நின்றார். யானையின் தேகத்தில் பல இடங்களில் காயம் பட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நடக்க முடியாமல் அது தள்ளாடி நடந்தது என்பது நன்றாய் தெரிந்தது. கீழே கிடந்த போர் வீரர்களின் உயிரற்ற உடல் களை மிதிக்கக் கூடாதென்று அது ஜாக்கிரதையாக அடி எடுத்து வைத்து நடந்தது. துதிக்கையை அப்படியும் இப்படியும் நீட்டி அங்கே கிடந்த உடல்களைத் தடவிப் பார்த்துக் கொண்டே வந்ததைப் பார்த்தால், அந்த யானை எதையோ தேடி வருவதுபோல் தோன்றியது.
சற்று நேரத்துக்கெல்லாம், அந்தப் பட்டத்து யானையானது, உயிரற்ற குவியலாக ஒன்றன்மேல் ஒன்றாகக் கிடந்த ஓர் இடத்துக்கு வந்து நின்றது. அந்த உடல்களை ஒவ்வொன்றாக எடுத்து அப்பால் மெதுவாக வைக்கத் தொடங்கியது. இதைக் கண்டதும் சிவனடியார் இன்னும் சற்று நெருங்கிச் சென்றார். சமீபத்தில் தனித்து நின்ற ஒரு கருவேல மரத்தின் மறைவில் நின்று யானையின் செய்கையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். யானை, அந்த உயிரற்ற உடல்களை ஒவ்வொன்றாய் எடுத்து அப்புறப் படுத்திற்று. எல்லாவற்றுக்கும் அடியில் இருந்த உடலை உற்று நோக்கிற்று. அதைத் துதிக்கையினால் மூன்று தடவை மெதுவாகத் தடவிக் கொடுத்தது. பிறகு அங்கிருந்து நகர்ந்து சற்றுத் தூரத்தில் வெறுமையாயிருந்த இடத்துக்குச் சென்றது. துதிக்கையை வானத்தை நோக்கி உயர்த்திற்று. சொல்ல முடியாத சோகமும் தீனமும் உடைய ஒரு பெரிய பிரலாபக் குரல் அப்போது அந்த யானையின் தொண்டையிலிருந்து கிளம்பி, ரணகளத்தைத் தாண்டி, நதியின் வெள்ளத் தைத் தாண்டி, நெல் வயல்களையெல்லாம் தாண்டி, வான முகடு வரையில் சென்று, எதிரொலி செய்து மறைந்தது. அவ்விதம் பிரலாபித்து விட்டு அந்த யானை குன்று சாய்ந்தது போல் கீழே விழுந்தது. சில வினாடிக்கெல்லாம் பூகம்பத்தின்போது மலை அதிர்வதுபோல் அதன் பேருடல் இரண்டு தடவை அதிர்ந்தது. அப்புறம் ஒன்றுமில்லை! எல்லையற்ற அமைதிதான். சிவனடியார் கருவேல மரத்தின் மறைவிலிருந்து வெளிவந்து, யானை தேடிக் கண்டுபிடித்த உடல் கிடந்த இடத்தை நோக்கி வந்தார். அதன் அருகில் வந்து சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். பார்த்திப மகாராஜாவின் உடல் தான் அது என்பதைக் கண்டார்.
உடனே அவ்விடத்தில் உட்கார்ந்து அவ்வுடலின் நெற்றியையும் மார்பையும் தொட்டுப் பார்த்தார். பிறகு, தலையை எடுத்து தம் மடிமீது வைத்துக் கொண்டார். கமண்டலத்திலிருந்து கொஞ்சம் ஜலம் எடுத்து முகத்தில் தெளித்தார். உயிரற்றுத் தோன்றிய அந்த முகத்தில் சிறிது நேரத்துக்கெல்லாம் ஜீவகளை தளிர்த்தது. மெதுவாகக் கண்கள் திறந்தன. பாதி திறந்த கண்களால் பார்த்திபன் சிவனடியாரை உற்றுப் பார்த்தான். “சுவாமி….தாங்கள் யார்?” என்ற தீனமான வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வந்தன. “அம்பலத்தாடும் பெருமானின் அடியார்க்கு அடியவன் நான் அப்பா! இன்று நடந்த யுத்தத்தில் உன்னுடைய ஆச்சரியமான வீரச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அப்பேர்ப்பட்ட மகாவீரனைத் தரிசிக்க வேண்டுமென்று வந்தேன். பார்த்திபா! உன்னுடைய மாசற்ற சுத்த வீரத்தின் புகழ் என்றென்றும் இவ்வுலகிலிருந்து மறையாது!” என்றார் அப்பெரியார். “யுத்தம் என்னவாய் முடிந்தது, சுவாமி!” என்று பார்த்திபன் ஈனஸ்வரத்தில் கேட்டான். அவனுடைய ஒளி மங்கிய கண்களில் அப்போது அளவிலாத ஆவல் காணப்பட்டது. “அதைப்பற்றிச் சந்தேகம் உனக்கு இருக்கிறதா, பார்த்திபா? அதோ கேள், பல்லவ சைன்யத்தின் ஜய கோலாகலத்தை!” பார்த்திபன் முகம் சிணுங்கிற்று. ” அதை நான் கேட்கவில்லை. சுவாமி! சோழ சைன்யத்திலே யாராவது..” என்று மேலே சொல்லத் தயங்கினான். “இல்லை, இல்லை. சோழ சைன்யத்தில் ஒருவன் கூடத் திரும்பிப் போகவில்லை அப்பா! ஒருவனாவது எதிரியிடம் சரணாகதி அடையவும் இல்லை. அவ்வளவு பேரும் போர்க்களத்திலே மடிந்து வீர சொர்க்கம் அடைந்தார்கள்!” என்றார் சிவனடியார். பார்த்திபனுடைய கண்கள் மகிழ்ச்சியினால் மலர்ந்தன.
“ஆ கா! சோழ நாட்டுக்கு நற்காலம் பிறந்துவிட்டது. சுவாமி! இவ்வளவு சந்தோஷமான செய்தியைச் சொன்னீர்களே? உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?” என்றான். “எனக்கு ஒரு கைம்மாறும் வேண்டாம். பார்த்திபா! உன்னைப் போன்ற சுத்த வீரர்களுக்குத் தொண்டு செய்வதையே தர்மமாகக் கொண்டவன் நான். உன் மனத்தில் ஏதாவது குறை இருந்தால் சொல்லு; பூர்த்தியாகாத மனோரதம் ஏதாவது இருந்தால் தெரிவி; நான் நிறைவேற்றி வைக்கிறேன்” என்றார் சிவனடியார். “மெய்யாகவா? ஆ கா என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். சுவாமி! உண்மைதான். என் மனத்தில் ஒரு குறை இருக்கிறது. சோழநாடு தன் புராதனப் பெருமையை இழந்து இப்படிப் பராதீனமடைந்திருக்கிறதே என்பதுதான் அந்தக் குறை. சோழநாடு முன்னைப்போல் சுதந்திர நாடாக வேண்டும் மகோன்னதமடைய வேண்டும். தூர தூர தேசங்களில் எல்லாம் புலிக்கொடி பறக்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தேன்; என்னுடைய வாழ்க்கையில் அது கனவாகவே முடிந்தது. என்னுடைய மகன் காலத்திலாவது அது நனவாக வேண்டுமென்பதுதான் என் மனோரதம். விக்கிரமன் வீரமகனாய் வளர வேண்டும். சோழ நாட்டின் மேன்மையே அவன் வாழ்க்கையின் இலட்சியமாயிருக்க வேண்டும். உயிர் பெரிதல்ல சுகம் பெரிதல்ல மானமும் வீரமுமே பெரியவை என்று அவனுக்குப் போதிக்க வேண்டும். அன்னியருக்குப் பணிந்து வாழும் வாழ்க்கையை அவன் வெறுக்க வேண்டும். சுவாமி! இந்த வரந்தான் தங்களிடம் கேட்கிறேன். “தருவீர்களா?” என்றான் பார்த்திபன்.
சக்தியற்ற அவனது உடம்பில் இவ்வளவு ஆவேசமாக பேசும் வலிமை அப்போது எப்படித்தான் வந்ததோ, தெரியாது. சிவனடியார் சாந்தமான குரலில் “பார்த்திபா! உன்னுடைய மனோரதத்தை நிறைவேற்றுவேன் நான் உயிரோடிருந்தால்” என்றார். பார்த்திபன் “என் பாக்கியமே பாக்கியம்! இனி எனக்கு ஒரு மனக்குறையுமில்லை. ஆனால், ஆனால் தாங்கள் யார், சுவாமி? நான் அல்லும் பகலும் வழிபட்ட சிவபெருமான் தானோ? ஆ கா! தங்கள் முகத்தில் அபூர்வ தேஜஸ் ஜொலிக்கிறதே! எங்கள் குல தெய்வமான ஸ்ரீரங்கநாதனே தான் ஒருவேளை இந்த உருவெடுத்து..” என்பதற்குள், சிவனடியார், “இல்லை, பார்த்திபா! இல்லை, அப்படியெல்லாம் தெய்வ நிந்தனை செய்யாதே!” என்று அவனை நிறுத்தினார். பிறகு அவர் “நானும் உன்னைப் போல் அற்ப ஆயுளையுடைய மனிதன்தான். நான் யாரென்று உனக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இதோ பார்!” என்று சொல்லி தம் தலை மீதிருந்த ஜடாமுடியையும் முகத்தை மறைத்த தாடி மீசையையும் லேசாகக் கையிலெடுத்தார். கண் கூசும்படியான தேஜஸுடன் விளங்கிய அவருடைய திவ்ய முகத்தைப் பார்த்திபன் கண் கொட்டாமல் பார்த்தான். “ஆ கா தாங்களா?” என்ற மொழிகள் அவன் வாயிலிருந்து குமுறிக் கொண்டு வந்தன. அளவுக்கடங்காத, ஆழங்காண முடியாத ஆச்சரியத்தினால் அவனுடைய ஒளியிழந்த கண்கள் விரிந்தன. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தக் கண்கள் மூடிவிட்டன; பார்த்திபனுடைய ஆன்மா அந்தப் பூத உடலாகிய சிறையிலிருந்து விடுதலையடைந்து சென்றது.
Popular Tags
Parthiban Kanavu ,Audiobook பார்த்திபன் கனவு,#ParthibanKanavu,#ParthibanKanavuAudioBook,parthiban kanavu story in tamil,parthiban kanavu story,parthiban kanavu book story,parthiban kanavu full story in tamil,parthiban kanavu audio book,parthiban kanavu audio book free download,parthiban kanavu book,parthiban kanavu pdf book,kalki novels in tamil,kalki novels list in tamil,kalki novels audio,kalki novels,kalki audiobooks,kalki books,
kalki parthiban kanavu pdf,kalki parthiban kanavu audio book,kalki parthiban kanavu novel pdf,kalki parthiban kanavu,parthiban kanavu kalki tamil novel,parthiban kanavu kalki krishnamurthy pdf,parthiban kanavu kalki audiobook,parthiban kanavu kalki in tamil,parthiban kanavu kalki movie
kalki parthiban kanavu audio book,parthiban kanavu kalki tamil novel,parthiban kanavu by kalki summary in tamil,parthiban kanavu novel by kalki,parthiban kanavu story in tamil,parthiban kanavu audio book,parthian kanavu,parthian kanavu audio,parthian kanavu audiobook,parthiban kanavu part 1,parthiban kanavu part 2,parthiban kanavu part 3,kalkiyin parthiban kanavu in tamil,