BooksKalki TimesStory

Poiman Karadu Kalki | Kalki Times Ch 12 to Ch 21

அத்தியாயம் 19:
கள்ள நோட்டு

மேற்படி கள்ள நோட்டு வழக்கு விஷயமாக இன்னும் இரண்டொரு துப்புகள் துலங்கவேண்டியது பாக்கி இருந்தது. அதற்காகப் போலீஸ்காரர் கொப்பனாம்பட்டிக்குப் போனார். சிவராமலிங்கக் கவுண்டரிடம் அவருடைய மகள் எப்பேர்ப்பட்ட இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதைத் தெரிவித்தார். எப்படியாவது செம்பாவின் பெயர் இந்த வழக்கில் அடிபடாமல் காப்பாற்ற வேண்டுமென்று கவுண்டர் ரொம்பவும் கேட்டுக் கொண்டார்.

செம்பவளவல்லி திக்பிரமை பிடித்தவள் போல் இருந்தாள். அவளுடைய மனத்தில் கேணியும், கேணிக்கரைக் குடிசையும், சோளத் தட்டைக் குவியலும், இரத்தம் தோய்ந்த கத்தியும், சாகும் நாயின் ஓலமும், குழிதோண்டும் மனிதர்களும், பயங்கர ஆயுதம் ஏந்திய போலீஸ்காரரும், சிதறிக் கிடந்த நோட்டுக்களும், கையில் விலங்கு பூட்டிய செங்கோடனும், அவனைப் போலீஸார் கொண்டுபோன போது தன்னைப் பார்த்த பார்வையும், அவன் சொன்ன வார்த்தையும் ஒரே குழப்பமாக வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் அதிகமாக அவள் மனக்கண் முன்னால் ஒரு செப்புக்குடம்-உள்ளே காலியான செப்புக்குடம்-வாயைப் பெரிதாகத் திறந்துகொண்டு காட்சி அளித்தது. அந்த வெறுங்குடம் மனக்கண் முன் தோன்றியபோதெல்லாம் அவளுடைய அடி வயிற்றில் என்னவோ வேதனை செய்தது.

இத்தகைய நிலைமையிலேதான் போலீஸ்காரர் வந்தார். அவரைப் பார்த்ததும் செம்பா பரபரப்புடன், “வாருங்கள்! நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்!” என்றாள்.

“அது எப்படி? எதற்காக?” என்று கேட்டார் போலீஸ்காரர்.

“எதற்காக, எப்படி என்று உங்களுக்கே தெரியும்!” என்றாள் செம்பா.

“ஓகோ! அப்படியா?” “உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்றிருந்தேன் கேட்கட்டுமா?”

“பேஷாய்க் கேட்கலாம். “

“அவர் எதற்காக ‘நான் தான் கொலை செய்தேன்’, ‘நான் தான் கொலை செய்தேன்’ என்று கத்தினார்? என்னைக் காப்பாற்றுவதற்காகத்தானே?”

“ஆமாம். “

“நான் செய்திருப்பேன் என்று அவருக்கு எப்படித் தோன்றியது?”

“நீ குடிசையிலிருந்து வெளியேறியதைச் செங்கோடன் பார்த்துவிட்டான். அதைத் தவிர இன்னொரு காரணமும் உண்டு. அவன் லாந்தரைக் கொளுத்திக் கொண்டு குடிசைக்குள் புகுந்தபோது வாசற்படியில் உடைந்த வளையல் ஒன்று கிடந்தது. அது உன்னுடையதுதான் என்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது… பின்னே தெரியாமல் இருக்குமா?”

செம்பா தன்னுடைய கைகளைப் பார்த்துக் கொண்டாள்.

“உன்னுடைய ஒரு கையில் சிவப்பு வளை இருக்கிறது. இன்னொரு கையில் இல்லை. மற்றவர்கள் கண்ணில் இது பட்டிருந்தால் ஆபத்தாய்ப் போயிருக்கும்!” என்றார் போலீஸ்காரர்.

“அப்புறம்? அந்த வளையல் என்ன ஆயிற்று?” என்று செம்பா ஆவலோடு கேட்டாள்.

“செங்கோடன் அதை ஒருவரும் அறியாமல் சட்டென்று மடியில் எடுத்துக் கொண்டு கேணிக்கரைக்கு ஓடி வந்து மடியை உதறினான். வளையல் கேணியில் விழுந்தது. “

“எவ்வளவு சாமர்த்தியமாகச் செய்திருக்கிறார்! என் பேரில் என்ன கரிசனம்! என்ன அன்பு! அவருக்கு என்னால் இப்படி நேர்ந்துவிட்டதே!” என்று சொல்லிவிட்டுச் செம்பா கண்ணீர் பெருக்கினாள்.

“வேண்டாம், செம்பா! உன் செங்கோடனுக்கு ஆபத்து ஒன்றும் வராது. அவனை விடுதலை செய்து கொண்டு வந்து சேர்க்க நான் இருக்கிறேன். வருத்தப் படாதே!” என்றார் போலீஸ்காரர்.

செம்பா போலீஸ்காரரை ஏறிட்டுப் பார்த்து, “நான் அதற்காக வருத்தப்படவில்லை. அவரை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அப்படி நீங்கள் செய்யாவிட்டால் நான் கோர்ட்டில் வந்து நடந்ததை நடந்தபடி சொல்கிறது என்று தீர்மானித்திருந்தேன். “

போலீஸ்காரர் சிறிது திடுக்கிட்டு, “அதெல்லாம் வேண்டாம். நீ கோர்ட்டுக்கு வந்தால் வீண் சிக்கல் ஏற்படும். செங்கோடனைக் காப்பாற்றுவதற்கு நான் ஆயிற்று!” என்றார்.

“அதற்காக நான் வருத்தப்படவில்லையென்றுதான் சென்னேனே!”

“பின்னே எதற்காக வருத்தம்? எதற்காகக் கண்ணீர்?”

“அப்படி எனக்காகத் தம் உயிரைக் கொடுக்கத் துணிந்தவருக்கு நான் பதில் என்ன சொல்லப் போகிறேன்! திரும்பி வந்ததும் பணக்குடம் எங்கே என்று கேட்பாரே?”

“ஏன், பணக்குடம் எங்கே? பத்திரமாய் வைத்திருக்கிறாய் அல்லவா?”

“குடம் பத்திரமாக ஐயனார் கோயில் குட்டையில் கிடக்கிறது. அதனால் என்ன பிரயோஜ னம்? அந்தக் குடத்தை அவசரமாய்த் தூக்கிக்கொண்டு ஓடினேன் அல்லவா? கொஞ்ச தூரம் போன பிறகுதான் அது கனக்கவே இல்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. உடனே நிலா வெளிச்சத்தில் குடத்துக்குள் பார்த்தேன். குடம் காலியாயிருந்தது! அதைப் பார்த்து என் மூளை குழம்பி விட்டது. நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தேன். ஊர்க்காரர்கள் ஓடி வரும் சத்தம் கேட்டுக் குடத்தைக் குட்டையில் போட்டுவிட்டு அவர்களோடு நானும் சேர்ந்து கொண்டேன். கவுண்டர் விடுதலையாகித் திரும்பி வந்து, ‘குடத்தில் இருந்த பணம் எங்கே?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்? நான் பணத்தை பத்திரமாய் வைத்திருப்பேன் என்ற நம்பிக்கையுடன் அவர் இருப்பாரே! அவருடைய கேஸுக்காகக் காலணா செலவழிக்க வேண்டாம் என்று சொல்லியனுப்பியிருக்கிறாரே! அரும்பாடுபட்டுச் சேர்த்த எண்ணூறு ரூபாயும் போய்விட்டது என்று தெரிந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? என்னிடம் அவருக்குள்ள அன்பெல்லாம் விஷமாய் மாறிவிடுமே!” என்று செம்பா புலம்பினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *