Poiman Karadu Kalki | Kalki Times
அத்தியாயம் 3:
செம்பவளவல்லி
செங்கோடக் கவுண்டன் சினிமாவைப் பற்றித் தன் கொள்கையை வெளியிட்டதும் செம்பவளவல்லியின் முகம் சுருங்கிற்று. சற்றுத் தலையைக் குனிந்துகொண்டு சும்மா இருந்தாள்.
பிறகு, “கவுண்டா! ஊரிலே எல்லாரும் உன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.
“ஊரிலே இருக்கிறவர்கள் என்ன பேசிக்கொண்டால் எனக்கு என்ன? நான் எதற்காக அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ள வேண்டும்?” என்றான் செங்கோடன்.
“அப்படியில்லை, கவுண்டா! நாலுபேர் பேசுவது உனக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்!”
“அப்படியானால் நீதான் சொல்லேன், நாலு பேர் பேசுவது உனக்குத் தெரியும் போல் இருக்கிறதே!”
“தெரியாமல் என்ன? ஊரெல்லாம் பேசிக்கொள்வது என் காதில் விழாமல் இருக்குமா? நீ இங்கே கேணிக் கரையில் வந்து தனியாகக் குடிசை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதனால் உன் காதில் விழவில்லை. “
“என்னதான் ஊரில் பேசிக்கொள்கிறார்கள், சொல்லி விடேன்! இவ்வளவு தூரம் ஏன் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறாய்?”
“எனக்குச் சொல்லவே தயக்கமாயிருக்கிறது. வாய் கூசுகிறது. நீ கருமியாய்! பணத்தாசை பிடித்தவனாம், விநாயகருக்குக் கலியாணம் ஆ கிறபோதுதான் உனக்கும் கலியாணமாம். யாராவது ஒருத்தியைக் கட்டிக் கொண்டால் அவளுக்குச் சோறு போட்டுத் தொலைக்க வேணுமே என்பதற்காக நீ கலியாணம் பண்ணிக்கொள்ளாமல் தானே பொங்கித் தின்று கொண்டிருக்கிறாயாம்! நீ பணத்தைச் சேர்த்து புதைத்து வைத்திருக்கிறாயாம். புதையலைப் பூதம் காக்குமாம். ஒரு நாளைக்கு அந்தப் பூதம் உன்னையும் அடித்துக் கொன்றுவிடுமாம். நீ இரத்தம் கக்கிச் சாவாயாம்! போதுமா? இப்படியெல்லாம் கண்டபடி ஜ னங்கள் பேசுகிறார்கள்; எனக்குக் கேட்கச் சகிக்கவில்லை” என்று சொல்லி விட்டுச் செம்பவளவல்லி விம்மத் தொடங்கினாள். அவளுடைய கண்களிலிருந்து முத்து முத்தாகக் கண்ணீர் வடிந்தது. “சேச்சே! ஊரிலே எந்த நாயாவது ஏதாவது குரைத்தால், அதற்காக நீ ஏன் அழ வேண்டும்? அழாதே, செம்பா!” என்றான் செங்கோடன். செம்பாவின் கண்ணீர் செங்கோடனுடைய பணத்தாசை பிடித்த மனத்தைக் கூடக் கொஞ்சம் கரைத்துவிட்டது. அவளுடைய கண்ணீரைத் துடைக்கலாமா, வேண்டாமா என்று தயங்கித் தயங்கிக் கையை நீட்டினான். காட்டினாள்.
செம்பாவின் விம்மல் சிறிது குறைந்தது. “கவுண்டா! நாங்கள் பார்த்த சினிமாவில் மோகனாங்கி கண்ணீர் விட்டபோது மதனசுந்தரன் என்ன செய்தான் தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டே செம்பா செங்கோடனுடைய கைகளைப் பிடித்து இழுத்து சினிமாவில் கதாநாயகன் செய்தது போல் செய்து காட்டினாள்.
“சீச்சீ! அவர்களுக்கெல்லாம் வெட்கம், மானம் ஒன்றும் இராதுபோல் இருக்கிறது. மிருக சென்மங்கள் போல் இருக்கிறது. ஆயிரம் பேர் பார்த்துக் கொண்டிருக்கையில் இப்படியா செய்வார்கள்?” என்றான் செங்கோடன்.
“நிஜமாக இல்லையே? திரையிலே தானே?” என்றாள் செம்பா.
“திரையிலே என்றாலும் ஆயிரம் பேர் பார்க்கிறார்கள் இல்லையா?”
“ஆயிரம் பேர் என்ன? லட்சம் பேர் பார்க்கிறார்கள். உன்னைத் தவிர எல்லாரும் சினிமா பார்க்கிறார்கள். அது கிடக்கட்டும், தள்ளு!…. . கவுண்டா! ஊரார் பேசுகிறதெல்லாம் பொய்தானே? உன் பேரிலே பொறாமையினால்தானே அவர்கள் அப்படியெல்லாம் பேசுகிறார்கள்?”
“எதைப்பற்றிச் சொல்கிறாய்?”
“பெண்டாட்டிக்குச் சோறுபோடப் பயந்துகொண்டு நீ கலியாணம் பண்ணிக்கொள்ளாமல் இருக்கிறாய் என்கிறார்களே! அதுதான்…. “
“முட்டாப் பயல்களுக்குப் பிறந்த பயல்கள்தான் அப்படிச் சொல்வார்கள்! நான் உன்னைக் கட்டிக்கொண்டால், அதனால் எனக்கு லாபமா, நஷ்டமா? இன்றைக்கெல்லாம் உன் சாப்பாட்டுக்காக மாதம் ஏழு, எட்டு ரூபாய் ஆ கலாம். நீ செய்கிற வேலையினால் எனக்கு இருபது ரூபாய் மிச்சமாகுமே? இந்தக் கணக்குத் தெரியாத சோம்பேறிப் பயல்கள் ஏதாவது உளறினால் அதை நீ ஏன் காது கொடுத்துக் கேட்க வேண்டும்? அதற்காக ஏன் வருத்தப்பட வேண்டும்?” என்று செங்கோடன் ஆத்திரமாகப் பேசினான்.
“எங்கே அந்தக் கணக்கு உனக்கும் தெரியவில்லையோ என்று பார்த்தேன். அத்தனை பெரிய குடும்பத்தில் இரவும் பகலும் உழைத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு என்று சொந்தக் குடித்தனம் ஏற்பட்டுவிட்டால் இன்னும் எப்படி உழைப்பேன்? என்னால் உனக்கு ஒரு நஷ்டமும் இராது. ஓர் எருமை வாங்கி கட்டிக்கொண்டால் அதிலே மட்டும் மாதம் இருபது ரூபாய்க்கு மேலே செட்டுப் பிடிக்கலாம். என்னால் உனக்கு லாபமே தவிர நஷ்டம் ஒன்றும் ஏற்படாது” என்றாள் செம்பவளவல்லி.
“அதெல்லாம் நான் யோசனை செய்துதான் வைத்திருக்கிறேன். செம்பா! வேறொரு காரியத்தை உத்தேசித்துக் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன். என் காட்டைச் சேர்ந்தாற்போல் சேலம் முதலியாருக்கு ஓர் ஏக்கரா நிலம் இருக்கிறது. அது எனக்கு ரொம்ப இடைஞ்ச மடைஞ்சலாயிருக்கிறது. கேணியிலிருந்து என் நிலத்துக்குத் தண்ணீர் இறைக்கச் சுற்றி வளைத்துக்கொண்டு வாய்க்கால் போகிறது. தண்ணீர் ரொம்ப வீணாகிறது. அந்த ஓர் ஏக்கரா நிலத்தை வாங்கிவிட்டேனானால் அப்புறம் கவலை இல்லை. பிறகு நம்முடைய கலியாணத்துக்குத் தேதி வைக்க வேண்டியதுதான். “
“அதற்காக ரொம்ப நாள் தள்ளிப் போடுவது நல்லதல்ல. நீ கலியாணப் பேச்சை எடுக்க மாட்டாய் என்று சொல்லி, அப்பா எனக்கு வேறு இடம் பார்க்க ஆரம்பித்து விட்டார்…. . “
“நான் ஒருவன் இருக்கிறபோது, வேறு எந்தப் பயல் மகன் வந்து உன்னைக் கட்டிக்கொண்டு போய்விடுவான்? யாராவது உன் கிட்ட வந்தால் அரிவாளால் ஒரே வெட்டாய் வெட்டிப் போட்டுவிட மாட்டேனா? அந்த எண்ணத்தை மட்டும் உன் அப்பன் அடியோடு விட்டு விடட்டும்” என்றான் செங்கோடக் கவுண்டன்.
செம்பவளவல்லியின் முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. “உன்னுடைய மனசு எனக்குத் தெரிந்திருக்கிறபடியால் தான் நானும் பொறுமையாயிருக்கிறேன். வேறு மாப்பிள்ளை தேடும் பேச்சே உதவாது என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கவுண்டா! காலையிலேயிருந்து நீ பசியோடுதானே வேலை செய்துகொண்டிருந்தாய்? இந்தா, இந்தக் கஞ்சியில் கொஞ்சம் குடி” என்று பரிவுடன் சொன்னாள். “உங்கள் வீட்டுக் கஞ்சி எனக்கு வேண்டாம். உன் அப்பன் உன்னைச் சண்டை பிடிப்பான். “
“அதெல்லாம் யாருக்கும் தெரியாது. அப்படித் தெரிந்து கேட்டால் கஞ்சி சாய்ந்து கொட்டிவிட்டது என்று சொல்லி விடுகிறேன். “
“இதோ பார், செம்பா! இப்போதான் எனக்கும் நினைவு வந்தது; நம்ம தென்னையிலிருந்து ஓர் இளநீர் பிடுங்கிக் கொண்டு வந்து உனக்கு வெட்டித் தருகிறேன்” என்று செங்கோடன் கையில் அரிவாளுடன் எழுந்தான்.
“நன்றாயிருக்கிறது! யாராவது இளநீரைப் பிடுங்குவார்களா? இளநீர் முற்றித் தேங்காய் ஆனால், சந்தையில் ஆறு அணாவுக்கு விலை போகுமே?” என்றாள் செம்பா.
“ஆறு அணாவைத் தள்ளு குப்பையில்! நமக்காகப் பணமா, பணத்துக்காக நாமா?” என்று சொல்லிக் கொண்டு செங்கோடன் சென்று கையெட்டுகிற தூரத்தில் காய்த்துத் தொங்கிய இளந் தென்னையிலிருந்து ஓர் இளநீர் அறுத்துக் கொண்டுவந்து தன் காதலிக்குக் கொடுத்தான். அதை அவன் தனக்காகச் செய்த ஒரு மகத்தான தியாகம் என்றே செம்பவளம் கருதி இறுமாந்து மகிழ்ந்தாள்.