Kalki Short StoriesKalki TimesStory

Pongumaangadal Kalki | Kalki Times

அத்தியாயம் 2: நரைத்த ரோமம்

தலையில் தும்பைப் பூவையொத்த, நரைத்த ரோமம் அடர்ந்து, குறுக்குக் கோடுகள் மிகுந்த விசாலமான நெற்றியுடனும், அறிவொளி வீசிய ஆழ்ந்த கண்களுடனும் கூரிய வளைந்த மூக்குடனும் செந்நிற மேனியுடனும் விளங்கிய அக்கிழவர் கூறினார்:

முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் நான் முதன் முதலில் இந்தக் குற்றாலத்துக்கு வந்தேன். அதாவது 1911 ஆம் வருஷம், மே மாதம். அதற்கு முன் மூன்று மாதம் திருநெல்வேலி ஜில்லாவிலும், திருவனந்தபுரம் சமஸ்தானத்திலும் சுற்றி அலைந்தேன். எந்த நோக்கத்துடன் வந்தேனோ, அது ஒன்றும் நிறைவேறவில்லை. வந்தபோது இருந்த உற்சாகம் ரொம்பவும் குறைந்து போயிருந்தது. ‘குற்றால நாதரே துணை’ என்று கடைசியாக இங்கு வந்து சேர்ந்தேன். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இராமபத்திர சர்மா என்பவர் அப்போது இங்கே ஒரு பங்களாவில் குடியிருந்தார். அவரைச் சந்தித்துச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததில் கொஞ்சம் உபயோகம் ஏற்பட்டதாகத் தோன்றியது.

இந்த செண்பகாதேவி அருவியின் அழகைப் பற்றியும் அந்த இராமபத்திர சர்மாதான் சொன்னார். தெரியாத ஜனங்கள் ‘செண்பகாதேவி’ என்று சொல்வதாகவும், உண்மையில் இது ‘செண்பகாடவி’ என்றும் சொன்னார். “இங்கே அம்மன் கோயில் ஒன்று இருப்பது உண்மைதானே?” என்று கேட்டேன். “ஆம்; இருக்கிறது. அதனால் என்ன? செண்பகாடவியைச் செண்பகாதேவி என்று சொல்லிக் கடைசியில் ஒரு கோயிலும் கட்டி விட்டார்கள்” என்றார்.

இராமபத்திராசர்மா ஒரு மிதவாதி. அப்படியென்றால் தெரியுமா? கோபாலகிருஷ்ண கோகலே, ராஷ் விஹாரி கோஷ் கும்பலைச் சேர்ந்தவர். வெள்ளைக்காரர்களை அண்டிக் காலில் விழுந்து கெஞ்சி சுயராஜ்ஜியம் வாங்கி விடலாம் என்று நம்பியவர். இந்தப் பிரதேசத்தில் இப்போதெல்லாம் இரத்தக் கொதிப்புள்ள சில வாலிபர்கள் இருந்தார்கள். அவர்கள் “பாலகங்காதரதிலகருக்காகப் பழி வாங்குவோம்”, “வ.உ.சிதம்பரம் பிள்ளைக்காகப் பழிவாங்குவோம்” “வெள்ளைக்காரர்களைப் பூண்டோ டு அழித்துக் கூண்டோ டு யமலோகம் அனுப்புவோம்” என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மிதவாத இதோபதேசம் செய்வது இந்த ராமபத்திர சர்மாவின் வேலை. எனக்கோ அந்த மானமுள்ள வீர இளைஞர்கள் யாரையாவது சந்திக்க வேண்டுமென்று ஒரே துடிப்பாயிருந்தது. நான் இந்தப் பிரதேசத்துக்கு வந்த காரணமே அதுதான். அந்த இளைஞர்களைப் பற்றி சர்மா அடிக்கடி பேசுவதுண்டு. ஆனால் அவர்களில் யாரையாவது பற்றிச் சர்மாவிடம் தகவல் தெரிந்து கொள்ளலாமென்றால் அது ஒன்றும் தனக்குத் தெரியாது என்று அவர் கையை விரித்துவிட்டார். திடீரென்று ஒரு நாள் புறப்பட்டு ஊருக்குப் போய்விட்டார். ஏதோ குற்றாலத்துக்கு வந்தது தான் வந்தோம், செண்பகாதேவி அருவியிலாவது ஒரு தடவை தலையைக் கொடுத்து விட்டுப் போவோம் என்று ஒரு நாள் காலை சுமார் ஒன்பது மணிக்கு மலை மேல் ஏற ஆரம்பித்தேன்.

கொஞ்ச தூரம் விரைவாகவே நடந்து போனேன். நீர்தான் பார்த்திருப்பீரே? மலைப் பாதைகளே எப்போதும் திரும்பித் திரும்பி வளைந்து வளைந்து போகும். முன்னால் போகிறவர்கள் பின்னால் வருகிறவர்களின் தலைக்கு மேலே சில இடங்களில் நடந்து போகும்படி நேரிடும். ஆசாமிகள், கண்ணுக்குத் தெரியமாட்டார்கள். ஆனால் மேலே போகிறவர்களின் பேச்சு கீழே வருகிறவர்களுக்கும் கீழே வருகிறவர்களின் பேச்சு மேலே நடப்பவர்களுக்கும் நன்றாய்க் காது கேட்கும்.

ஓரிடத்தில் என் தலைக்கு மேலே போகிறவர்களின் பேச்சு என் காதில் விழுந்தது. அவர்களில் ஒருத்தி இளம் வயதுப் பெண்ணாயிருக்க வேண்டும். அவளுடைய குரல் சொல்லிற்று: “நான் உலகமறியாப் பெண்ணாயிருந்த போதும் என்னை எங்க சின்னாயியும் சித்தப்பனும் இவருக்குக் கட்டிக் கொடுத்தாக! இவகளும் அப்போவெல்லாம் என்னிடம் எத்தனையோ அன்பும் ஆசையுமாய்த்தானிருந்தாக! ஒரு காணி நிலம் எங்களுக்குப் பூர்வீகச் சொத்து. அதிலே வருசாந்தரத்துக்கு வேண்டிய நெல்லு கிடைத்து விடும். சாரற் காலத்திலே பெரிய பிரபுக்கள் குற்றாலத்து அருவியிலே குளிக்க வருவாக. நாங்க இருவருமாய் யாராவது ஒரு வீட்டிலே வேலை செய்வோம். நல்ல மனுஷாள் என்று தெரிந்து கொண்டு தான் போவோம். நல்லாச் சாப்பிடுவோம். இருபது முப்பது பணமும் மிச்சம் பிடிப்போம். வேனிற் காலத்திலே எங்களுக்கு வேலையிராது. தேர் திருவிழா, திருச்செந்தூர் உற்சவம் எல்லாம் பார்க்கப் போவோம். இப்படி எவ்வளவோ கண்யமாகத்தான் இருந்து வந்தோம்…”

‘ஆகா! இந்தத் திருநெல்வேலி ஜில்லாவில் குடியானவர்களும் குடியானவப் பெண்களும் கூட எவ்வளவு அழகான செந்தமிழ் பேசுகிறார்கள்’ என்று எண்ணி நான் ஆச்சரியமடைந்தேன். ஆனால் அடுத்தபடியாக அந்தப் பெண் சொன்னது என்னைத் தூக்கிவாரிப் போட்டு, அவளுடைய செந்தமிழ் நடையை மறக்கும்படி செய்துவிட்டது.

“இந்தச் சுதேசிக்கார ஆளுக வந்தாலும் வந்தாக, குடும்பம் பாழாய்ப் போச்சு. இவக வேலை வெட்டி ஒன்றும் பார்க்கறதில்லை. தூத்துக்குடி எங்கே, திருநெல்வேலி எங்கே, எட்டயபுரம் எங்கே, ஆலப்புழை எங்கே என்று அலைகிறதே இவர்களுக்குத் தொழிலாய்ப் போச்சு! அதுவும் போனாப் போகிறதென்று ஏதோ என் சாமர்த்தியத்தினாலே குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தேன். ஆனால் இந்த ஆறுமாதமா இவக நடத்தை எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. யார் யாரோ திருடங்க மாதிரி இராத்திரிக்கி இராத்திரி வந்து கூட்டிக்கிட்டுப் போறாக, பொழுது விடிஞ்ச பிறகு கொண்டு விடுறாக, நெத்தியிலே பெரிய குங்குமப் பொட்டைப் போட்டுகறாக, கண்ணைப் பார்த்தாக் கோவைப்பழம் மாதிரி செவந்து கெடக்கு. பேச்சைக் கேட்டா, ஒரு மாதிரியாயிருக்கு. பலி என்கிறாக; இரத்தம் என்கிறாக! மலையாள மாந்திரிகம் என்று சொல்றாகளே, அதிலே ஏதாவது இவக அகப்பட்டுக்கிட்டாகளோ என்று எனக்குப் பயமாயிருக்கு. ஐயா! செண்பகாதேவி அம்மனைத்தான் நான் நம்பியிருக்கேன்; வெள்ளிக்கு வெள்ளி பூசை போடறேன். செண்பகாதேவி அம்மாதான் என் புருஷனை எனக்கு காப்பாத்திக் கொடுக்க வேணும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *