Pongumaangadal Kalki | Kalki Times
அத்தியாயம் 7: தும்பைப் பூ
தும்பைப் பூப் போல் நரைத்த தலைமயிரையுடைய கிழவர் மேற்கண்டவாறு கதையைச் சொல்லி நிறுத்தினார். ஆனால் கதை பூர்த்தியாகி விட்டதாக எனக்குத் தோன்றவில்லை.
“அப்புறம் என்ன்?”
“அப்புறம் என்ன? எல்லாருக்கும் தெரிந்த விஷயந்தானே? மறுநாள் மணியாச்சி ஜங்ஷனில் கலெக்டர் ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் சுட்டுக் கொன்று விட்டுத் தானும் சுட்டுக் கொண்டு செத்தார். நீலகண்ட பிரம்மச்சாரி முதலிய பதினாலு ஆட்கள் மீது சதியாலோசனைக் குற்றம் சாட்டி வழக்கு நடத்தினார்கள் – தண்டனையும் கொடுத்தார்கள்!”
“அவர்களில் முருகையன் மட்டும் இல்லை போலிருக்கிறது.”
“இல்லை; ஏனென்றால் அவன் பெயர் போலீஸுக்கு முதலில் போன ஜாபிதாவில் இல்லை. அவன் அதிர்ஷ்டக்காரன்; பொன்னியும் அதிர்ஷ்டக்காரி.”
“ஆமாம்; முருகையனும் அவன் மனைவியும் உங்களை ஏன் அப்படிப் பொங்குமாங்கடலில் தள்ளி வதைத்தார்கள்! என்ன காரணம்?” என்று கேட்டேன்.
“அந்த முட்டாள்கள் நான் துரோகி என்றும், போலீஸுக்கு எழுதியது நான் தான் என்றும் எண்ணினார்கள். அதற்காக என்னை அப்படி தண்டித்தார்கள்.”
“எப்பேர்ப்பட்ட முட்டாள்கள்? அதற்குத்தான் படிப்பு அவசியம் வேண்டும் என்று சொல்கிறது.”
“ஆம்; ஆம்; இதற்குத்தான் படிப்பு வேண்டும் என்கிறது. இதில் ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், படிப்பில்லாத அந்த முட்டாள்களுக்கு எப்படியோ உண்மை தெரிந்துவிட்டது.”
“என்ன? அப்படியானால் தாங்கள்தான்…”
“இல்லாவிட்டால் ஏன் இத்தனை வருஷமாக இப்படி அமைதியின்றி அலைகிறேன்.”
“கடிதங்கள் – வாஞ்சி ஐயரின் கையெழுத்து?”
“ஓ! கதை ஆசிரியரே! இன்னும் உமக்குப் புரியவில்லையா? நீர் என்ன கதை எழுதப் போகிறீர்? ‘போர்ஜரி’ கேஸில் ஏழு வருஷம் சிட்சைப் பெற்றவனாயிற்றே நான்! சிதம்பரம் பிள்ளை கையெழுத்தினையும் போர்ஜரி செய்தேன். வாஞ்சி ஐயர் கையெழுத்தையும் போர்ஜரி செய்தேன். எதற்காக என்று கேட்கிறீரா? நீர் எதற்காக கதை எழுதுகிறீர்! யாருக்கு எந்தக் கலை மேல் பிரியமோ அந்தக் கலையில் ஈடுபடுவது இயல்புதானே? அதோடு சர்க்காரிடமிருந்து ஒரு பெரிய சன்மானம் பெறலாம் என்ற ஆசையும் கொஞ்சம் இருந்தது…”
இப்படி அந்த மனிதர் சொல்லிக் கொண்டிருந்த போது, கலகலவென்று குழந்தைகள் சிரிக்கும் சத்தம் கேட்டது. செண்பகாதேவி கோயில் முடுக்கைத் தாண்டி ஐந்தாறு குழந்தைகள், ஒரு யௌவன புருஷன், ஓர் இளம் பெண், ஒரு கிழவன், கிழவி இவ்வளவு பேரும் வந்து கொண்டிருந்தார்கள். உடனே திரும்பிப் பார்த்தேன். எதிரேயிருந்த கிழவனைக் காணோம்; மாயமாய் மறைந்துவிட்டார். அவர் வைத்திருந்த தாடியும், சடையும் தண்ணீரில் கீழே போய்க் கொண்டிருந்தன.
வந்தவர்களில் கிழவி என்னிடம் வந்து, “ஏன், இங்கே இப்போது இன்னோர் ஆள் உட்கார்ந்திருந்தார் அல்லவா?” என்றாள்.
“இல்லையே, அம்மா! நான் மட்டுந்தான் உட்கார்ந்திருந்தேன்” என்று ஒரு கற்பனையைச் சொல்லி, “உன்பெயர் என்ன பாட்டியம்மா?” என்று கேட்டேன்.
“என் பெயர் பொன்னியம்மா!” என்றேன்.
“கிழவனாரின் பெயர்?”
“நான் சொல்லலாமா? சுப்பிரமணிய சுவாமியின் இன்னொரு பெயர்.”
“முருகையனா?”
“ஆமாம்.”
“குழந்தைகள் உங்கள் பேரன் பேத்திகளா?”
“ஆம் ஐயா! குழந்தைகள் நல்லாயிருக்க வேணுமென்று அம்மனை வேண்டிக்குங்க…”
“அப்படியே, தாயே!” என்றேன்.
அருவியில் அரைமணி நேரம் நின்று குளித்து விட்டுக் கீழே இறங்கத் தொடங்கினேன்.
பலாத்கார பயங்கரங்கள் எல்லாம் இல்லாமல் அஹிம்சா முறையில் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மாவை வாழ்த்திக் கொண்டே இறங்கினேன். அதனால்தானே தமிழ்நாட்டுக் குழந்தைகள் இவ்வளவு சந்தோஷமாகச் சிரித்து விளையாடிக் கொம்மாளம் அடிக்க முடிகிறது.
இத்துடன்
அமரர் கல்கியின் பொங்குமாங்கடல்
இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.
Pongumaangadal Kalki Tag
kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,pongumaangadal Audiboook,pongumaangadal,pongumaangadal Kalki,Kalki pongumaangadal,