Kalki Short StoriesKalki TimesStory

Prabala Nakchatiram Kalki | Kalki Times

அத்தியாயம் 5: வீ ழ்ச்சி

பட்சிராஜன் பறந்து போய் ஏறக்குறைய இப்போது ஒன்றரை வருஷமாகிறது. இந்த ஒன்றரை வருஷத்தில் என்னுடைய வாழ்க்கையை நினைத்தாலே எனக்குப் பயங்கரம் உண்டாகிறது; மூளை குழம்புகிறது.
இலங்கை முதலாளிக்கு எழுதிக் கொடுத்த ஒப்பந்தத்தின்படி டாக்கியில் நடித்தேன். இந்த டாக்கி எடுத்து முடிவதற்குள் ஒரு வருஷத்திற்கு மேலாயிற்று. இந்தக் காலத்தில் முதலாளி, டைரக்டர், ஸ்டூடியோ மானேஜர், பிரதான ஆண் நடிகர் எல்லோருமாகச் சேர்ந்து என்னைப் படுத்தி வைத்த பாட்டைச் சொல்ல முடியாது. ஆண் துணையில்லாமல் ஒரு அபலை ஸ்திரீ அகப்பட்டுக் கொண்டால், உலகத்தில் - அதுவும் சினிமா உலகத்தில் - அவளை என்ன பாடுபடுத்தி வைப்பார்கள் என்னும் பாடத்தை நன்றாக அறிந்து கொண்டேன். என்னுடைய பரம விரோதிக்குக் கூட அப்பேர்ப்பட்ட கதி வரவேண்டாமென்று பகவானைப் பிரார்த்திக்கிறேன்.

தொல்லை பொறுக்க முடியாமல், பல தடவை “என்னால் முடியாது” என்று நின்று விடத் தோன்றியது. ஆனாலும், பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்தேன். டாக்கி முடிந்ததும், அட்வான்ஸு தொகை போகப் பாக்கி பணம் வந்துவிடுமல்லவா? அப்புறம் சினிமாவுக்குத் தலை முழுகி விட்டு ‘ராமா கிருஷ்ணா’ என்று பகவானைத் தியானித்துக் கொண்டு காலங் கழிக்கலாம். அந்த எண்ணத்திலேதான் பட்சிராஜன் ரூ.40,000 கொண்டு போனதைப் பற்றிக் கூட நான் அதிகம் கவலைப்படவில்லை.

டாக்கியின் முடிவு நெருங்க, எனக்குச் சேர வேண்டிய பாக்கி பணத்தைச் சரியாகக் கொடுப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு வந்தது. எனவே, டாக்கி முடிவதற்குள் இன்னும் ஒரு பகுதியாவது வாங்கி விட வேண்டுமென்று நினைத்து ஒரு நாள் முதலாளியின் ஆபீஸுக்குப் போய்ப் பணம் வேண்டுமென்று கேட்டேன். அவர் ஒரு பேய்ச் சிரிப்பு சிரித்து விட்டு, “இந்த டாக்கி முடிந்து அடுத்த டாக்கியும் முடியும் வரை பணம் என்ற பேச்சைப் பேசாதே!” என்றார். எனக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. “என் உயிர் போனாலும் நான் இன்னொரு டாக்கியில் நடிக்க மாட்டேன்” என்றேன். “அப்படியானால் ஒப்பந்தப்படிஅட்வான்ஸு தொகை ரூ.40,000த்தையும் கக்கிவிட வேண்டும்!” என்றார். அப்போதுதான் எனக்கு விஷயம் தெரிந்தது. அந்தப் பாதகன் பட்சிராஜன் என்னை எப்பேர்ப்பட்ட படுகுழியில் தள்ளிவிட்டுப் போய்விட்டான் என்று புரிந்தது. ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் ஒரு டாக்கிக்கு அல்ல, நாலு டாக்கிக்கு என்று தெரிந்தது.

இந்த செய்தியினால் திகைத்துப் போய் நான் வீடு திரும்பினேன். முதலில் நான் நம்பவே இல்லை. வீடு திரும்பியதும், ஒப்பந்தத்தை எடுத்து வாசித்துப் பார்த்தேன். அதில் நாலு படங்களுக்கு என்று தான் கண்டிருந்தது. என் கொஞ்சப் பிராணனும் போய் விட்டது. நாலு படங்களில் நடிப்பதா? அதுவும் இந்தப் பாவிகளிடம்? ஒரு நாளும் இல்லை; உயிர் போனாலும் இல்லை.
இன்னொரு நாள் முதலாளியிடம் பேசினேன். நல்ல வார்த்தையாக என்னை ஒப்பந்தத்திலிருந்து விடுதலை செய்து விடும்படி கேட்டேன். அவர் பிடிவாதமாக 'முடியாது' என்றார். மேலும் நான் வற்புறுத்தியபோது, "அட்வான்ஸு தொகை ரூ.40,000த்தையும் கொண்டுவை! விடுதலை செய்கிறேன்" என்றார். அதற்கு "நான் எங்கே போவேன்? பட்சிராஜன் கொண்டுபோய் விட்டாரே?" என்றேன். "எனக்குத் தெரியும், உங்கள் மோசடியெல்லாம்! நீங்கள் இரண்டு பேரும் கலந்து பேசிக் கொண்டு, இப்படித் தகிடுதத்தம் செய்யப் பார்க்கிறீர்கள்!" என்றார்.

அப்போது எனக்கு ஆவேசம் வந்துவிட்டது. அந்த ஆவேசத்தில் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் இரைந்து கத்தினேன். மேலே பேச்சு முற்ற முற்ற என்னவெல்லாமோ சொல்லி விட்டேன். “எல்லோரையும் குத்திக் கொன்று விடுவேன்.” “ஸ்டுடியோவைக் கொளுத்தி விடுவேன்” என்று சொன்னதெல்லாம் சொப்பனத்திலே சொன்னது போல் எனக்குப் பிற்பாடு ஞாபகம் வந்தது. இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

அதுமுதல் நான் ஸ்டூடியோவுக்கு வர மறுத்து விட்டேன். ஒரு நாளைக்கு ஸ்டூடியோ மானேஜர் வந்து என்னை நல்ல வார்த்தை சொல்லி அழைத்துப் போனார். முதலாளியின் ஆபீஸில் போய் நான் உட்கார்ந்ததும் என்னுடைய குரல் அடுத்த அறையிலிருந்து வருவதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன். முன்னொரு நாள் முதலாளியிடம் இதே ஆபீஸில் பேசியதெல்லாம் தெளிவாகக் கேட்டது. “எல்லோரையும் குத்திக் கொன்று விடுவேன்” “ஸ்டூடியோவைக் கொளுத்தி விடுவேன்” என்று நான் கத்தியதெல்லாம், திரும்பக் கேட்டது!

எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் எடுத்து விட்டது. அப்போது அந்த முதலாளி யமன் சொன்னான். 'உனக்கு இருபது வருஷங் கடுங்காவல் தண்டனை விதிப்பதற்கு இதோ சாட்சியம் இருக்கிறது. என்ன சொல்கிறாய்? சொன்னபடி கேட்டுக் கொண்டு நாலு படங்களில் நடிக்கிறாயா? அல்லது இன்றைக்கே அரஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கட்டுமா?
நான் பதில் ஒன்றும் சொல்லாமல் பாதிப் பிராணனுடன் வீடு போய்ச் சேர்ந்தேன். ஆனால், என் மனது மட்டும் இரும்பாயிற்று. அன்று வேண்டுமென்றே எனக்கு ஆத்திரமுண்டாக்கிக் கண்டபடி பேசும்படி செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் ஒலிப்பதிவு செய்ய முன் கூட்டியே ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். தாங்கள் பேசியதையெல்லாம் வெட்டியெறிந்து விட்டு, என் பேச்சை மட்டும் வைத்துக் கொண்டு என்னைப் பலவந்தப் படுத்தப் பார்க்கிறார்கள். என்ன கேவலமான சூழ்ச்சி. என்ன இரக்கமற்ற அக்கிரமம்!

“நமக்காச்சு; இவர்களுக்காச்சு. என்ன ஆனாலும் இனிமேல் படத்தில் மட்டும் நடிப்பதில்லை” என்று உறுதி செய்து கொண்டேன். இதை எப்படிச் சாதிக்கலாம் என்று அன்றிரவெல்லாம் ஒரு விநாடி கூடக் கண்ணை மூடாமல் சிந்தனை செய்தேன். கடைசியில், ஒரு யுக்தியைக் கண்டு பிடித்தேன்!
வேறொன்றுமில்லை. பல கதைகளில் கதாநாயகிகள் கையாண்டிருக்கும் யுக்திதான். ஆனால் அந்த யுக்தி என் விஷயத்தில் என்ன விபரீதமான பலனைக் கொடுத்திருக்கிறது? ஸ்வாமி! பகவானே!
நல்ல வேளையாக, இன்னும் ஒரு மணி நேரந்தான் பாக்கியிருக்கிறது. இந்த ஒரு மணி நேரம் என் அறிவைத் தெளிவாக வைப்பாய், ஸ்வாமி!
யுக்தி இன்னதென்று சொல்லவும் வேண்டுமா! பைத்தியம் மாதிரி நடிக்கும் யுக்திதான். மறுநாளே அதைக் கையாள ஆரம்பித்தேன். சமையற்கார அம்மாளிடம் மட்டும் விஷயத்தை அந்தரங்கமாகச் சொல்லி விட்டு மற்றபடி யார் வந்து கேட்டாலும் “ஆமாம்; பட்சிராஜன் பறந்து போய் விட்டார்” என்று பதில் சொல்ல, ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தேன்.
டாக்கி முதலாளி என்னவெல்லாமோ பிரயத்தனம் செய்தார். யார் யாரோ டாக்டர்களையெல்லாம் பிடித்து அனுப்பினார். எல்லோருக்கும் நான் பல்லவியைப் படித்தேன். ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இவ்விதம் நாள் போய்க் கொண்டிருந்தது. என்னைப் போல் கிட்டத்தட்ட உருவமுள்ள ஒருத்தியைப் பிடித்துப் பாக்கிப் படத்தை எப்படியோ முடித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால், முதலாளி மட்டும் என்னை விடுவதாகக் காணவில்லை. மறுபடியும் மறுபடியும் என் உடம்பு எப்படியிருக்கிறதென்று பார்க்க யாரையாவது அனுப்பிக் கொண்டேயிருந்தார்.
என் உடம்பு நன்றாய்த்தானிருந்தது. ஆனால் நாளாக ஆக, என் அறிவுக்குத் தான் ஏதோ ஏற்பட்டு வந்தது. இரவில் தூக்கம் என்பது அடியோடு போய் விட்டது. திடீரென்று இருள் சூழ்ந்தது போல் அறிவு சூனியமாகி விடும். அப்போது என் வாய் மட்டும் ஏதோ பிதற்றிக் கொண்டிருக்கும். நான் பைத்தியம் என்று நடித்தது போக, உண்மையாகவே எனக்குச் சித்தப் பிரமை ஏற்பட்டு வருகிறது என்பதை உணரலானேன். சமையற்கார அம்மாள் என் விஷயத்தில் காட்டிய கவலையிலிருந்து இதைத் தெளிவாக அறிந்து கொண்டேன்!
ஒரு பெரிய பீதி என்னைப் பிடித்துக் கொண்டது. பைத்தியம் முற்றிய ஸ்திரீகள் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அந்தப் பயங்கர அலங்கோல நிலைமையை நானும் அடைந்து விடுவேனோ? ஒரு நாளும் இல்லை. இப்படிப்பட்ட கதி நேர்வதற்கு முன்னால், அறிவுத் தெளிவு சிறிதேனும் இருக்கும் போதே, என் துயர வாழ்க்கையை முடித்துவிட வேண்டும். இந்த தீர்மானத்துடனே தான் இவ்வூருக்கு வந்து சேர்ந்தேன்.
கதை முடிந்து விட்டது. யாராவது இதைப் பார்ப்பார்களோ? பார்த்து எப்போதாவது பிரசுரிப்பார்களோ, நான் அறியேன். என்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டேன்… இதோ மணி பன்னிரண்டு அடிக்கிறது! கிளம்ப வேண்டியதுதான்.
ஏழு வருஷங்களுக்கு முன்னால் ஓர் அமாவாசை இரவில் இப்படித்தான் இருள் சூழ்ந்திருந்தது! இன்று போலவே தான் அன்றும் மேல் காற்று ‘விர் விர்’ என்று வீசி வீட்டையே கிடுகிடுக்கச் செய்தது. வேகவதி நதியும் அன்று போலவே இன்றும் நொங்கும் நுரையுமாக அலையெறிந்து போய்க் கொண்டிருந்தது.
“மறு உலகம் என்பது உண்டானால், அங்கே என் கணவரை நான் அவசியம் சந்திப்பேன். அவருடைய பாதங்களில் விழுந்து இந்தப் பாவியை மன்னியுங்கள்” என்று கேட்டுக் கொள்வேன். இதுதான் என் வாழ்க்கையில் கடைசி மனோரதம். இதற்காகத்தான் அதே வேகவதியாற்றுக்கு, அதே நள்ளிரவு நேரத்தில் கிளம்பிச் செல்கிறேன்!
வேகவதித் தாயே! இதோ வந்து விட்டேன். மறு ஜன்மத்தில் உன்னிடம் அடைக்கலம் புகுந்து அமைதி பெறுகிறேன்.
முடிவு

கனவிலும் நினையாத காரியம் நடந்துவிட்டது. கதைகளிலே கேட்டறியாத சம்பவம் நடந்துவிட்டது. என் வாழ்க்கை புனிதமாகி விட்டது. நான் புத்துயிர் பெற்றேன். என் குருட்டுத் தனத்தினால், நான் இழந்த பாக்கியத்தை மீண்டும் பெற்றேன்.
வாழ்க்கை சோகமயமாயிருந்தபோது, என் கதையை எழுத வேண்டுமென்று தோன்றிற்று; இப்போது அந்த விருப்பம் கொஞ்சமும் எனக்கு இல்லை. ஆனாலும் அவருடைய வற்புறுத்தலுக்காகவே இதை இப்போது எழுதுகிறேன். மேலே நான் எழுதியிருப்பதையெல்லாம் அவர் படித்தார். "பாக்கியையும் எழுதிவிடு; பெயரையும் ஊரையும் மட்டும் மாற்றிப் பிரசுரித்தால் எவ்வளவோ பேருக்கு உபயோகமாயிருக்கலாம்" என்றார்! உபயோகமோ, இல்லையோ, அவர் சொல்லியதற்காக எழுதி விடுகிறேன்.
அன்றிரவு சரியாகப் பன்னிரண்டாவது மணிக்குப் புறப்பட்டு வாசற் கதவைச் சத்தமின்றித் திறந்து கொண்டு வெளியே வந்தேன். என் மனத்தில் ஓர் அதிசயமான அமைதி அப்போதே ஏற்பட்டு விட்டது. தெருவில் அந்த வேளையில் யாராவது வந்து தொலைக்கப் போகிறார்களே என்று சிறு கவலை மட்டும் இருந்தது; ஆனால் ஒரு பிராணியைக் கூடச் சந்திக்கவில்லை.
நதிக்கரையை அடைந்ததும், பின்னால் காலடிச் சத்தம் கேட்டதுபோல் தோன்ற, நெஞ்சில் துணுக்கம் ஏற்பட்டது. "யாராவது வந்து தடுத்து விட்டால்?" என்று நினைத்ததும் கதிகலங்கிற்று. அவசரமாகவே ஜலத்தில் இறங்கினேன். வெள்ளம் பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது. அவ்வளவு நேரமும் மனத்தில் இருந்த தைரியம், துணிச்சல் எல்லாம் எப்படியோ போய், இன்னதென்று சொல்ல முடியாத பீதி ஏற்பட்டது. குளிரினால் நடுங்கிய உடம்பு, பீதியினால் அதிகம் நடுங்கிற்று. என்னையறியாமல் பற்களை நரநரவென்று கடித்துக் கொண்டேன். இவ்வளவுடன் தண்ணீரில் மேலும் மேலும் இறங்கிக் கொண்டுதானிருந்தேன்! ஜலம் இடுப்பளவுக்கு வந்தது. வெள்ளத்தின் வேகம் இழுக்கத் தொடங்கியது. ஜலம் மார்பளவுக்கு வந்தது. இழுப்பின் வேகம் அதிகமாயிற்று. இனிமேல் நாம் விரும்பினாலும் கரையேற முடியாது என்று தோன்றிய அதே சமயத்தில், பின்னால் யாரோ தண்ணீரில் இறங்குவதுபோல் சலசலவென்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அந்த இருட்டில் ஓர் உருவம் - மனித உருவந்தான் - விரைவாக என்னை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்ததாக மங்கலாகத் தெரிந்தது. என் வாழ்க்கையில் அதுவரையில் அறியாத பயங்கர பீதியை அந்தக் கணத்தில் நான் அடைந்தேன். ஒரே ஒரு கணந்தான். அடுத்த கணத்தில் அந்த உருவம் ஏழு வருஷங்களுக்கு முன்னால் அதே இடத்தில் மூழ்கி மறைந்த என் நாதரின் உருவம் தான் என்பதை அறிந்தேன். "கிறீச்" என்ற ஒரு சத்தம் என் வாயிலிருந்து வந்து, அந்த நதிப் பிரதேசமெல்லாம் எதிரொலிக்கச் செய்தது. அடுத்த கணம் நான் நீரில் மூழ்கினேன். ஒரு நொடிப் பொழுது, என் அறிவில் ஒரு பிரகாசம் ஏற்பட்டது. பின்னர், அறிவைப் பேரந்தகாரம் வந்து சூழ்ந்தது.
மறுபடியும் நான் கண்ணை விழித்தபோது அவருடைய மடியில் என் தலை இருப்பதையும், அளவிலாத பரிவுடனே அவர் என்னைக் குனிந்து நோக்கிக் கொண்டிருப்பதையும் கண்டேன். உலக வாழ்க்கையில் நான் அடையாத பாக்கியத்தை மறு உலகில் அடைந்திருப்பதாக முதலில் எனக்குத் தோன்றியது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம். இது இந்த உலகம் தான் என்று தெரிந்தது. சற்று நேரம் பேச முடியவில்லை. மனம் மட்டும் ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தது.
பேசும் சக்தி வந்ததும், "தாடி மீசையெல்லாம் எப்போது எடுத்தீர்கள்?" என்று கேட்டேன். அவர் ஆச்சரியத்தினால் பிரமித்து, "உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றார். அதற்குப் பதில் சொல்லாமல் "தங்களுடைய புத்திமதியை நான் மறக்கவில்லை. அதை நிறைவேற்றினேன்" என்றேன். மீண்டும் அவர், "உனக்கு எப்படித் தெரிந்தது? எப்போது தெரிந்தது?" என்று கேட்டார்.
"தண்ணீரில் மூழ்கியவுடனே பளிச்சென்று தெரிந்தது. அடுத்த நிமிஷம் நினைவு தப்பி விட்டது" என்றேன்.

ஆம்; கல்கத்தா ஸ்டுடியோவில் என்னைப் பார்த்துப் புத்திமதி சொன்ன பாபு சம்பு பிரஸாத் என்னுடைய கணவர்தான். அப்போது அது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவருடைய கூரிய கண்களின் பார்வை என் மனத்திற்குள்ளேயே பதிந்து கிடந்தது. நாங்கள் இல்லறம் நடத்திய போதெல்லாம், அம்மாதிரி அவர் என்னைப் பார்த்தது கிடையாது. மறுபடியும் அன்றிரவு கழுத்தளவு தண்ணீரில் நான் நின்று தத்தளித்தபோது, நட்சத்திர வெளிச்சத்தில் அதே பார்வையைக் கண்டேன். தண்ணீரில் மூழ்கிய தருணத்தில், "அந்த வங்காளிப் பிரமுகர் உண்மையில் என் கணவர்தான்" என்னும் உள்ளுணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய உள்ளுணர்வு உண்மையை சொல்லிற்று என்பதை அவரே இப்போது உறுதிப்படுத்தினார்.

அவர் வீட்டை விட்டுக் கிளம்பிய போது நதியில் விழுந்து உயிரை விடுகிற எண்ணமே அவருக்கு இருக்கவில்லையாம். எங்கேயாவது கண்காணாத தேசத்துக்குப் போய்விடுவதென்று கிளம்பினாராம். நான் பின்னால் தொடர்ந்து வருவேன் என்று தெரிந்து கொண்டு நதியில் மூழ்கி விட்டதாக என்னை நம்பும்படி செய்துவிட்டால், நான் நிம்மதியாயிருப்பேன் என்றெண்ணி அவ்விதம் ஆற்றில் இறங்கி மூழ்கினாராம். கொஞ்ச தூரம் தண்ணீரிலேயே மூழ்கிச் சென்று பிறகு சத்தம் செய்யாமல் நீந்திக் கரையேறினாராம்.

முன்னாலேயே அவர் உத்தேசித்து வைத்திருந்தபடி, கல்கத்தாவுக்குச் சென்று, மாறு பெயர் வைத்துக் கொண்டு ஆராய்ச்சிகளை நடத்தி வந்த போதிலும், என்னுடைய ஞாபகம் மட்டும் அவருக்குப் போகவேயில்லையாம். சீக்கிரத்தில் நான் ‘பிரபல நட்சத்திர’மாகி விட்டபடியால், என்னுடைய வாழ்க்கையையும் நடவடிக்கைகளையும் அவரால் பத்திரிகைகளின் மூலம் கவனித்து வர முடிந்ததாம்.

கடைசியில், எனக்கு ஏதோ பெரிய சங்கடம் நேர்ந்துவிட்டதென்பதை ஒருவாறு தெரிந்து கொண்டு என்னைத் தேடி இந்த ஊருக்கு வந்து சேர்ந்தாராம். அதே தெருவில் ஒரு வீட்டில் இருந்து கொண்டு, என்னை எப்படிச் சந்திப்பது என்ற தயக்கத்துடன், இரவும் பகலும் எங்கள் வீட்டின் மேலேயே கண்ணாயிருந்தாராம். கடைசியில் சரியான சமயத்தில் என் உயிரையும் காப்பாற்றி, எனக்குப் புது வாழ்வையும் அளிப்பதற்கு வந்து சேர்ந்தார்.

கல்கத்தாவில் வங்காளிப் பெயர் வைத்துக் கொண்டு வேலை பார்த்ததில், அவருக்கு இன்னொரு பெரிய அநுகூலம் ஏற்பட்டதென்று சற்றே குதூகலத்துடன் அவர் சொன்னார். சென்னை மாகானத்தில் இருந்த வரையில், அவருடைய சரித்திர ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றி ஏனென்று கேட்பார் இல்லையாம்! கல்கத்தாவுக்குப் போய் வங்காளிப் பெயருடன் அதே முடிவுகளை வெளியிட்டதும், இந்தியா தேசம் முழுவதும் அவருடைய பெயர் பிரபலமாகி விட்டதாம்! அப்புறம் சென்னைப் பத்திரிகைகள் கூட அவரைப் பற்றிப் பிரமாதமாய் எழுதினவாம்! சென்ற ஏழு வருஷ காலத்தில் இந்த வேடிக்கை ஒன்றுதான் அவருக்கு நினைக்கும் போதெல்லாம் சிரிப்பை உண்டாக்கி வாழ்க்கை கசந்து போகாமல் செய்து வந்ததாம்!

“ஏழு வருஷம் நான் சுதந்திர வாழ்க்கை நடத்தியாயிற்று; நீயும் ஏழு வருஷம் சுதந்திரமாக வாழ்ந்தாய்; சுதந்திர வாழ்க்கை எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது. உனக்கு எப்படி அம்பு?” என்று கேட்டார். அவருடைய குனிந்த முகத்தையும், கனிந்த கண்களையும் ஏறிட்டுப் பார்த்த வண்ணம் நான் சொன்னேன்:

“தங்களுடைய மடியில் தலை வைத்துப் படுக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக நான் ஏழரை வருஷம் நரக வாழ்வு நடத்த வேண்டியிருந்தது! இனிமேல் என்னத்திற்கு?”

இத்துடன்

அமரர் கல்கியின் பிரபல நட்சத்திரம்

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.

Prabala Nakchatiram Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,prabala nakchatiram Audiboook,prabala nakchatiram,prabala nakchatiram Kalki,Kalki prabala nakchatiram,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *